Skip to content
Post Views: 1,670
யுகத்தின் தலைவன் அத்தியாயம் 2
சிவராமன் தீபாவளி டைம் ஆனால் ரீடுகளுடன் பழைய இரும்புகளையும் எடுத்து விற்பது வழக்கம்.
அப்படி விற்று கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியில் சிறிய மொபட்,பிள்ளைகளுக்கு பட்டாசு துணிமணி வாங்க திட்டமிட்டிருந்தார்.
இரும்பை பிரித்து எடுக்க இரவு நேரம் ஆகும் என்பதால் பிள்ளைகளை லட்சுமியின் வீட்டில் விட முடிவு செய்தனர்.
Advertisement
இரு சித்திகளுக்கும் திருமணம் முடிந்து அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டதால் கங்காவிற்கு அங்கு செல்ல பிடிக்கவில்லை.அதனால் அப்பாவோடு வருகிறேன் என கடைக்கு சென்று விட்டாள்.
இரவு பத்து மணி இரண்டு உதவியாளர்களுடன் சிவராமனும் லட்சுமியும் இரும்பை தரம் பார்த்து பிரித்து ஒரு வெள்ளை சாக்கில் கட்டி வைத்தனர்.
லாரி வந்தவுடன் உதவிக்கு வந்த இருவர்கள் இரும்பு மூட்டையை லாரியில் சற்று சிரமப்பட்டு ஏற்றினர்.
Advertisement
ஒன்றிரண்டு மூட்டைகளை ஏற்றி இருப்பர் அதற்குள்ளாக சிவராமன் அவர்களை நகர சொல்லி ஒற்றை ஆளாக மீதமிருந்த அனைத்து மூட்டைகளையும் வண்டியில் ஏற்றிவிட்டார்.
Advertisement
எங்களுக்கு இரண்டு மூட்டை ஏத்துறதுக்குல்ல மூச்சு வாங்குது நீங்க எப்படி இவ்வளவு மூட்டைகளையும் ஒற்றையாளாக ஏற்றி விட்டீர்கள்? என கேட்க,ஆறு வயசுல இருந்து உழைக்கறே இதெல்லா எனக்கு சாதாரணம். இதைவிட பெரிய மூட்டையெல்லாம் ஏற்றி இறக்கி இருக்கிறேன் என்றார்.
கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்ல கங்கா சைக்கிளின் முன்புறமும் லட்சுமி பின்புறமும் அமர்ந்து கொண்டார்கள்.
“அப்பா தீபாவளிக்கு எனக்கு பட்டுபாவடையும், நெத்திசூட்டியும் வேணும்” என்றாள் கங்கா.
Advertisement
சரி வாங்கிக்கலாம்.
தன் பங்கிற்கு “என்னால இப்ப வீட்டுல போய் எல்லாம் சமைக்க முடியாது கடைலே ஏதாச்சி வாங்கிட்டு போலாம்” என்றார் லட்சுமி.
எப்போதும் வாங்கும் அவர்களின் பிரதான கடையில் வெங்காய தோசையும், கங்காவுக்கு சில்லியும் வாங்கிக் கொண்டனர்.
மீனை பார்த்தவுடன் கெளசி ஞாபகம் வர அதையும் வாங்கினார் சிவராமன்.
“அவளே எங்க அம்மா வீட்டுல இருக்கா இப்ப இதை வாங்கி கங்காவுக்கு கொடுத்து மறுபடியும் தொண்டையிலே முள் மாட்டுனா அவ்வளவுதான்….
மணி ஏற்கனவே பதினொன்னு எல்லா கடையும் சாத்தி இருப்பாங்க… வீட்டுலையும் பழம் இல்லை’ என்றார் லட்சுமி முன்னெச்சரிக்கையாக.
மீன் கெளசிக்குதான் உங்க அம்மா வீட்டுக்கு போய் கூப்பிடுட்டு போலாம் என்றார் சிவராமன்.
“இந்த நைட்லே அங்கே போய் கதவு தட்டுனா அவங்க என்னமோ ஏதோனு பயந்துக்குவாங்க, அதுமட்டுமில்லாம கெளசியும் தூங்கிருப்பா நாம நம்ம வீட்டுக்கே போலாம்” என்றார் லட்சுமி.
நீ சொல்லி நா கேட்பனா? என நேரே சைக்கிளை லட்சுமியின் வீட்டிற்கு விட்டார்.
கதவை தட்ட எல்லோரும் எழுந்து கொண்டனர். கூட்டுக் குடும்பம் என்பதால் அனைவரும் திண்ணையில் தூங்குவது வழக்கம்
சிவராமனின் மாமியார், மாமானர்,அவரின் அண்ணன், தம்பி அவர்களின் மனைவி என அனைவரும் சிவராமனை உபசரித்தனர். இருக்காதா பின்னே அவர்தான் நல்லவனுக்கு நல்லவன் நல்லவர் அல்லாதாருக்கு பொல்லதாவன் ஆயிற்றே, மாப்பிள்ளையின் குணம் அறிந்தவர்கள் சட்டென எழுந்து,
ஒரு வீட்டில் இருந்து குடிக்க தண்ணீர்,ஒரு வீட்டில் காபி ,மற்றொரு வீட்டில் சாப்பிட அழைப்பு என வீடு கொஞ்சம் கலகலப்பானது.
சிவராமன் செம்பு தண்ணீரை வாங்கி கொஞ்சம் கீழே ஊற்றி விட்டு குடித்தார். காபியையும் உணவையும் மறுக்க ,லட்சுமி பிறந்த வீட்டாரை சங்கடப்படுத்த கூடாது என காப்பியை வாங்கி குடித்தார்.
கங்கா தங்கையை அழைக்க உள்ளே சென்றாள்.ஒரே ஆச்சரியம்! கெளசி தூங்காமல் விழித்து இருந்தாள். அக்காவை கண்டதும் “எனக்கு தெரியும் நீங்க மூனு பேரும் என்னை வந்து கூப்பிடுவீங்கனு அதா தூங்காம இருந்தே” என்றாள்.
அதற்குள் லட்சுமியின் பெரியப்பா மகன் ரவி வந்து சிவராமனிடம் “வா மாப்பிள்ளை” என்ன இந்த நேரம்? என நலம் விசாரிக்க, இருவரும் சிறிது நேரம் அரசியல் பற்றி விவாதித்தனர். மற்ற அனைவரும் தூங்காமல் திண்ணையில் அமர்ந்து இவர்களை பார்த்திருந்தனர்.
லட்சுமி அவர்களை பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டபடி,மெல்ல
பழைய நினைவுகளை அசை போட்டார்.
இரண்டு அண்ணன்களுக்கு பிறகு முதலில் பிறந்த பெண் குழந்தை. அவளுக்கு அடுத்தடுத்து இரண்டு தங்கை தம்பி பிறந்ததனால் அவர்களை வளர்க்க இவளது படிப்பு தடைபட்டது.
லட்சுமிக்கு படிக்க நிறைய ஆசை. இருதங்கைகளையும் குளிப்பாட்டி சோறு ஊட்டி திண்ணையில் அமர வைத்து தம்பியை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மஞ்சள் பையை எடுத்து படிக்க சென்று விடுவார்.
சிறிது நேரத்தில் தம்பி அழுது ஊரை கூட்ட, தங்கைகள் எவ்வளவு முயன்றும் அவனை சமாதான படுத்த முடியவில்லை.
விளைவு அவரின் தாய் பழனியம்மாள் லட்சுமியின் படிப்புக்கு தடை போட்டார்.
ஆறு பிள்ளைகள் உழைத்தால் தானே உண்ண முடியும், லட்சுமி வீட்டில் இருந்து மூன்றையும் பார்க்க மற்ற நால்வரும் வேலைக்கு சென்றால்தான் சமாளிக்க முடியும் எனவே அவளது படிப்புக்கு முழுக்கு விழுந்தது.
கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பெண்களுக்கே இருந்த தாய்மை உணர்வு தங்கைகளையும் தம்பியையும் தாய் ஸ்தானத்தில் இருந்து வளர்த்தாள்.
நல்ல சமையல் செய்வதிலும் வீட்டை சுத்தமாக வைப்பதிலும் கெட்டிக்காரி.
அவர்களது குடும்பத்தில்தான் பெண் எடுத்து பெண் கொடுப்பது வழக்கமே,
பெரியப்பா ,சிற்றப்பா மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் ஆக இவளுக்கும் கொஞ்சம் தூரத்து வரன் வந்தது.
அவிநாசியப்பனுக்கு மனமில்லை. காரணம்
சிவராமனின் தந்தை அருணாசலமும் அவரின் பெரியம்மா
சங்கரம்மாளும்தான்…
அந்த காலத்தில் சாப்பிட அரிசி கிடைப்பதில் தட்டுப்பாடு சரியான வேலை இல்லாத காரணத்தால் கொஞ்சம் கஷ்டம்.
அப்போது கரம் கொடுத்தவர்தான் உறவினர் சங்கரம்மாள்
ஊட்டியில் தேயிலை பறிக்கும் வேலைக்கு அவிநாசியப்பன் உடன்பிறப்புகளை இருவர் இருவராக வேலைக்கு அழைத்துச் சென்று,
ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் கீழே அரிசியையும், மேலே தேயிலையையும் பரப்பி மலையில் இருந்து கீழே அனுப்பி வைப்பார். ஏனெனில் அப்போது அரிசி எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம்.
அவிநாசியப்பன் சிவராமனின் தந்தையிடம்தான் வேலை பழகினார்.
சாந்தமான முகம் ஆனால் நிறைய அழுத்தம். தேயிலையை ஒருவருக்கு கொடுக்க ஒப்பந்தம் பேசினால் அவருக்கு மட்டுமே தருவார்.வேறு யாராவது அதிக பணம் தருவதாக கூறினால் கூட மறுத்துவிடுவார் .
அந்தளவிற்கு நாணயமானவர்.
என்ன செய்ய விதி இருவரையும் அழைத்துக் கொண்டது.அவர்களது இறப்புக்கு பிறகு அந்த வீட்டு ஆட்கள் இங்கே வருவதும் போவதும் குறைந்து விட்டது. எல்லோருக்கும் அன்னமிட்ட ,அந்த வீட்டு சொந்தம் விட்டு போகக் கூடாது என எண்ணினார்.
அவரது எண்ணம் விதிக்கு கேட்டுவிட்டது போல, அடுத்த மாதமே லட்சுயின் கடைசி சித்தப்பாவான கணேசனுக்கும்,அவளின் அத்தை மகளான ஜெய மணிக்கும் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது.
சங்கரம்மாள் மறைவுக்கு பின் அந்த வீட்டில் இருக்க சிவராமனுக்கு ஏதோ போல் இருந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் பாசமாக இருந்தனர்.
அவரது இறப்பு ஒருபுறம் வாட்ட, தங்கையின் திருமண செலவுக்காக வீட்டின் பின்பகுதியை விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சிவராமனுக்கு வீட்டை விற்க உடன்பாடு இல்லை.இருந்தும் நகை,கல்யாண செலவு என அனைத்தும் கண்முன்னே வர வேண்டாவெறுப்பாக கையெழுத்திட்டு மலைக்கு சென்று விட்டார்.
ஊட்டி கூடலூரில் உள்ள தேவர்சோலை என்னுமிடத்தில் தன் அண்ணன் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
விதி அவரையும் லட்சுமியையும் திருமண பந்ததில் இணைக்க முடிவு செய்து விட்டது.
அதுவரை ஊருக்கே வராத சிவராமனை இந்த திருமணம் வரவழைத்தது.
ஆனால் சிவராமன் வந்தது இந்த திருமணத்திற்காக அல்ல. அவரது முக்கிய நோக்கம் கோயமுத்தூரில் உள்ள தன் அக்கா மகளை பார்த்து பேசி தங்கள் திருமணத்தை முடிவு செய்ய…
இன்னார்க்கு இன்னார்தான் என்று எப்போதோ எழுதப்பட்டு விட்டதே அதற்கு முன் எத்தனையோ பேர் வாழ்க்கையில் வந்து போகலாம் ஒருவரை மற்றொருவர் உருகி காதலிக்கலாம்.
ஏன் நீ இல்லாமல் நான் இல்லை என்பதை போன்ற எத்தனை சத்திய வார்த்தைகளை கூட உபயோகித்து இருக்கலாம்.ஆனால் விதியை மாற்ற இயலாதே…
சிவராமன் திருமணத்திற்கு வர லட்சுமிக்கு அவரை பார்த்ததும் பிடித்து விட்டது.
சிவராமன் நல்ல நிறம் கலையான முகம் ஒல்லியான தேகம் கருமையான கேசம் கொண்டவர்.
பொதுவாக பெண்களுக்குதான் மீன் போன்ற விழிகள் இருக்கும். அவர்களின் விழிகளை பொய்த்து போக வைக்கும் அளவிற்கு மீன் போன்ற கண்களுக்கு சொந்தகாரர்.
மஞ்சள் நிற சட்டை, மெரூன் பேண்ட் நேர்த்தியாக சீவப்பட்ட கேசம்,கையில் பட்டைவார் வாட்ச், பேரகான் செருப்பு என வந்து நின்றவர் மீது லட்சுமியின் பார்வை நிலைத்து நின்றது.
கணேசன் ஜெயமணி திருமணம் முடிந்த உடன்,தன் அத்தையிடம் சென்று, “அத்தே எங்க அண்ணதான் (லட்சுமியின் குடும்பத்தில் அப்பாவை அண்ணன் என அழைப்பது வழக்கம்) அவங்க வீட்டு சொந்தம் விட்டு போக கூடாதுனு சொல்லுச்சு இல்ல. எனக்கு அவங்கள பிடிச்சு இருக்கு,அவங்களைவே கல்யாணம் பண்ணிக்கறேன்” என்றாள்.
எவங்க வீட்டு சொந்தம்?, எவங்கள கட்டிக்கறே? என்றார் லட்சுமியின் அத்தை. திக்கி திணறி சிவராமன் என்றாள்.
நம்ம வூட்டுல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதுதான் வழக்கம். அந்த வூட்டுல இருந்து எந்த பொண்ணையும் நம்ம எடுக்கல இருந்தாலும் உங்க அப்பன் அந்த வூட்டு சொந்தம் வுட்டுபோக கூடாதுனு நிக்கறான்.
உன் மனசுக்கும் அந்த பையனை பிடிச்சுருச்சு அசலா இருந்தா கூட யோசிக்கலாம். சங்கரா அக்கா இந்த வூட்டுக்கு எத்தனை செஞ்சி இருப்பா? அவ போனதுக்கு அப்பறோம் அந்த வூடு ஒன்னுமில்லாம போச்சேனு நா கவலபடாத நாளே இல்லை.
நானே உங்க அப்பன் கிட்ட பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வெக்கிறேன் என மருமகளுக்காக அண்ணன்மார்களிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.
சிவராமன் வீட்டிற்கு சம்பந்தம் பேச சென்றனர்.ஆனால் சிவராமனோ தன் அக்கா மகளை பார்த்து ,திருமணம் முடிவு செய்ய சென்று விட்டார்.
கோயமுத்தூரில் உள்ள அவரது அக்கா வீட்டில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
ஏன் இப்போ எல்லா எந்த கடுதாசியும் வரதில்லே? என்ற கேள்விக்கு இனிமே வராது. நான் எங்க அப்பா அம்மா பார்த்து வெச்சிருக்கற மாப்பிள்ளையைதான் கட்டிக்க போறேன் என்றாள் அக்கா மகள்.
சிவராமன் அமைதியாக அக்கா விடம் வந்து,” எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்கறதாதானே பேச்சு அப்பறோம் ஏன் வெளிலே பாத்தீங்க?” என கேட்க, “ஆமா இப்ப உங்க கிட்ட என்ன இருக்கு? வீட்டையும் பாதி வித்துட்டீங்க உங்க அண்ணனுக்கு இருக்கற கொஞ்ச இடத்துல பங்கு கொடுத்தா? எதுவும் தேறாது அதுனால வெளிலே நல்ல வசதியா,படிச்ச மாப்பிள்ளையா பாத்துட்டோம்” என்றார்.
“மாமா நம்ம ரெண்டு பேருனா கூட பரவா இல்ல உங்க அம்மாவையும் பாத்துக்கனு,அதுக்கு வாயும் பேச வராது காதும் கேட்காது அதுக்கும் சேர்த்து ஆக்கி கொட்ட என்னாலே முடியாது” என்றாள் அக்கா மகள்.
மேலும் “நீயும் எனக்கு நிறைய துணிமணியும்,கேட்டது எல்லா வாங்கி கொடுத்து நல்லாதா பாத்துக்கிட்ட,ரெண்டு பேரும் மாறி மாறி கடுதாசிலே நம்ம காதலை வளர்த்துகிட்டோம் இல்லைனு சொல்லுலே,ஆன நிதர்சனத்தை புரிஞ்சுக்க என்னாலே உங்க அம்மாவை பார்த்துக்க முடியாது.
இதையும் மீறி என்னையை கட்டிக்கனும்னு நீ நெனச்சா உங்க அம்மாவை உங்க அண்ணன் கிட்ட விட்டுட்டு உனக்கு சேர வேண்டிய பங்கை வாங்கிட்டு இங்கே வா நாம் வாழலாம் என்றாள்.
அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சிவராமனுக்கு கோபம் தலைக்கேறியது.
“யார்கிட்ட வந்து நீ உங்க அம்மாவை விட்டுட்டு வானு சொல்லிட்டு இருக்கே,யார் கிட்ட பேசறேனு தெரிஞ்சுதா பேசுறியா?
எங்க அம்மாவை எங்க அப்பன் என் கண்ணு முன்னாலே அடிச்ச காரணத்துக்காக எங்க அப்பனைவே வெங்கச்ச கல்லாலே அடிச்சவன் நானு,நீ என்னை பார்த்து எங்க அம்மாவ விட்டுட்டு வானு சொல்லறையா…
உனக்கு சொத்து வேணுமா கேளு பிச்சை போட்ட மாறி நெனச்சு போட்டுட்டு போறே எங்க அம்மாவை விட்டுட்டு வர சொன்ன உன்ன கண்டந்துண்டமா வெட்டி எறிய ஒரு நிமிஷம் ஆகாது எனக்கு,இந்த பேச்செல்லா என்கிட்ட வெச்சுக்க கூடாது.
நீ உங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி நல்லா இரு,எங்க அம்மாவை விட்டுட்டு எல்லாம் என்னாலே வரமுடியாது” என்று கிளம்பி விட்டார்.
அதற்குமேல் யாரும் வாயை திறந்து பேசவில்லை . வீடே ருத்ர தாண்டவத்தை பார்த்தது போல் மயான அமைதியாக இருந்தது.
— தலைவன் வருவான்.
error: Content is protected !!