Skip to content
Post Views: 2,871
அத்தியாயம் – 24
வழமையான விடியல் என்றாலும் லட்சு இல்லாதது பெரும் கொடுமையாக இருந்தது சாலாவுக்கு.எத்தனை ஆண்டுகளான உறவு, அதுவும் அத்தனை அருகில் ஒன்றாக வளர்ந்து நின்றும் தோன்றாத பிரியம் கடல் அலை போல் இன்று ஆர்ப்பரித்து நின்றது.
Advertisement
எத்தனை வேற்றுமை கண்டாலும் தன்னைக் கொண்டாடி நிற்கும் லட்சுவின் காதல் இப்போதும் ஆச்சரியம் கலந்த அதிசயம் தான் சாலாவுக்கு.அவன் கொண்ட அன்புக்கு சாலாவிடம் அவ்வப்போது விளக்கம் சொல்லி வைத்தாலும்.மனம் ஏனோ ஏற்க மறுத்து தான் நிற்கிறது.
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு ஆள் தேறி வர, ஒரு வார காலம் பிடித்தது. இதோ இந்த ஓர், இரு நாட்கள் தான் நன்றாக இருக்கிறான்.அதற்குள் வேலை வர மெட்ராஸ் பட்டணம் நோக்கி பயணப்பட்டு விட்டான்.அவனை எண்ணி கொண்டே கை வேலை செய்தவளை கலைத்தது மீனாளின் அழுகை.
Advertisement
Advertisement
‘நான் அவுகளுக்கு என்ன மதனி செஞ்சேன்?’ தீடீரென கேட்ட குரலும் அதனை தொடர்ந்து கேட்ட அழுகையிலும் பதறிய சாலா மசாலாவை பையில் நிரப்பிக் கொண்டு இருந்தவள். கைகளை வேகமாகக் கழுவி கொண்டு அவசரமாகக் கூட்டத்துக்குள் நுழைந்தாள்.
“சொல்லுக மதனி? நான் என்ன செஞ்சேன் அவுகளுக்கு? அவுக உண்ணும் போது மண்ணை அள்ளி கொட்டி வச்சேனா மதனி” மீனாளின் பேச்சில் அத்தனை ஆதங்கமும், கோபமும் இருந்தது அவளது நியாயம் புரிந்தாலும் அவளது உடல்நிலையை கருதி.
Advertisement
“மீனா இதை இன்னும் எதுக்குத் தோளுல வச்சு சுமந்து நிக்கிறீக? விடுக.அவுகளை எண்ணி நீக உடம்புக்கு இழுத்து வச்சுக்கப் போறீக?”
“என் முகத்தை பார்த்து நடக்கிற பிள்ளை மதனி நான் அழுது வச்சா தாங்க மாட்டாக. அதேன் லட்சு இருந்தாகன்னு என் மனசையும், வாய்யையும் அடக்கி வச்சிக்கிட்டு கிடந்தேன் மதனி.இப்பவும் பேசி வைக்கலனா வெடிச்சு சிதறி போவேன் மதினி” என்றவளது உணர்வுகள் பலமாகத் தான் தாக்கியது.
ஒரு பெண்ணாக அதுவும் திருமணம் கொண்டு தனித்து வந்து விட்டால் அவளது போராட்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்.சுயம் பெற்று நின்றவளை இந்தச் சமூகமும், உறவும் தான் எத்தனை குறை பேசி நிற்கிறது.நியாயப்படி மீனாளுக்கு மகுடம் தான் சூட்ட வேண்டும்.
என்னதான் வள்ளியப்பன் துணை நின்றாலும் அவரது உதவியை பாதை வகுக்க மட்டுமே பயன்படுத்தி கொண்டு தனது உழைப்பை மட்டுமே வைத்து முன்னேறி நிற்கும் பேரிளம் பெண் மீனாள் அல்லவா.அது மட்டுமா பிள்ளையைப் பேணி ஒழுக்கம் கொண்டு வளர்த்து அதற்கும் ஒரு உச்சத்தைக் கொடுத்து அழகு பார்த்து நிக்கிறாள்.
இவளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்.பாதுகாத்து நின்ற உறவுக்காகத் தன்னிலை விட்டு இறங்கி வந்து அன்பு,நன்றி,உரிமை,காதல் என்று தேடி அதையும் கண்ணியமாகக் காட்டி நிற்கும் லட்சுவை ரசிக்க வேண்டும்,
ஆனால் இங்கு நடந்தது என்ன? யாரோ செய்த முட்டாள் தனம் அது கொடுத்த தோல்வி என்று இன்றும் பழி, பாவம் சுமந்து நிற்பது தாயும், மகனும் தான். இது எந்த வகையில் நியாயம் என்பது தான் தெரியவில்லை.
இந்த சமூகத்தின் கோட்பாடும் விதிகளும் அதனைக் கொண்டு கணிக்கும் சதவீதமும் அநியாயத்தின் சாயலை கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.தனித்து விடப் பட்ட பெண் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும்.அவர்களுக்காக உடலை உருக்கி நிற்க வேண்டும், நிற்பார்கள் ஏனென்றால் தாய்மை.இவர்கள் சதவீதம் 80% என்று வைத்துக் கொள்ளலாம்.
தனித்து விடப்பட்ட எதிர் பாலினம் பிள்ளைகளை முறையாக வளர்த்து நின்றதா? பிள்ளைகளுக்காக என்று அள்ளும் பகலும் உழைத்து நின்றதா? அதன் சதவீதம் என்ன? இன்னும் கண்ணில் புலப்படவில்லை.
இது தான் நம் சமூகத்தின் கோட்ப்பாடு நல்ல வேளை கடவுளுக்கு கொஞ்சமாக பெண் இனத்தின் மீது கருணை இருந்ததால் லட்சு,வள்ளியப்பன்,சின்னப்பன் போன்ற ஆண்களையும் படைத்து இருப்பதால் ஏதோவென்று சில பெண்கள் வாழ்க்கை பிழைத்து நிற்கிறது.
“மீனா! அவுக இல்லாத நேரம் கண்டதை எண்ணி உடம்பை கெடுத்து வச்சா? யாரு அவுக கிட்ட பதில் பேசி நிக்கிறது?”
“மனசே ஆறல மதனி எப்படி மதனி அந்த வாய் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க வரும்?” இன்னும் அண்ணாமலை பேசிய பேச்சை மறக்க முடியவில்லை, கடக்கவும் முடியவில்லை. சொல் சூடு என்பார்களே அது போல அவர் பேசிய சொல் ஆழமாகச் சுட்டு தான் நின்றது.
“அவுகளுக்கு மனசு அத்தினி குறைவுன்னு எண்ணி வைக்க வேண்டியதேன் மீனா. இதை கொண்டு இனி சங்கடப்பட வேலை இல்லை” என்று மீனாளுக்காகச் சொன்னாலும் அவர் பேசியதை இன்னும் கண்ணாத்தாளுக்கு ஜீரணம் செய்ய முடியவில்லை தான்.
மீனாளும் விடுவதாக இல்லை போலும், “குற்ற உணர்ச்சியில் அவுக மகேன் சொத்தை எழுதி வச்சுப்புட்டாராம் இந்தக் கதையைக் கேட்டிகளா? லட்சு ஐயா கூட சண்டை கட்டுன அன்னைக்கு கோபத்துல கத்தி வச்சு பகளுக்கே பிள்ளைய கூட்டிட்டு வெளில வந்துட்டேன் மதனி. ராவு எட்டு வரைக்கும் சோறு இல்லாம நானும் லட்சுவும் அழுதுகிட்டே கிடந்தோம்.
என்னை விடுக மதனி லட்சுக்கு எத்தினி வயசு அப்போ? அவனைக் கண்டு கூட ஐயோ நம்பப் பிள்ளைன்னு வரல பாருக. இந்த அழகுல அதுவும் இப்போ காலம் போன கடைசில பாசம் வந்து அவுக ஐயா சொத்தை எழுதி வைப்பாரா? என்ன ஒரு எண்ணம் பாருக?
சரி அப்படியே அவுக ஐயா சொத்தை எழுதி வச்சாத்தேன் என்ன? மூச்சுக்கு முந்நூறு தரம் எம்பேரன், எம்பேரன், உரிமை உறவு, அத்தினி நியாயம் பேசுனாக.அப்போ உரிமை உள்ள பேரனுக்குச் சொத்துக் கொடுக்கக் கூடாதா?
இது என்ன வகை நியாயம் மதனி? எனக்கு விளங்கள? இப்போ பேரன் வேணுன்னு ஊர் கூடி தேர் இழுத்து நியாயம் பேச வந்தாகளே சில வருஷ முன்னுக்கு அவுக மகேன் செஞ்சதுக்கு என்ன நியாயம் பேசி வச்சாக?
யாரை கூப்பட்டுச் சபை கூட்டி வச்சாக? என் பொறந்த வூடு, அவுக வூடு ஒன்னு சொன்ன கணக்கா அத்தினி பேரும் புருஷனை தப்ப அனுசரிச்சுத்தேன் நிக்கச் சொன்னாக.யார் மதனி அன்னைக்கு எனக்கு உரக்க பேசி நியாயம் செஞ்சா?”
இவள் கேட்பதும் சரி தானே.அன்று ஏன் அண்ணாமலை நியாயம் பேச ஆட்களைத் தேட வில்லை?.அது சரி அண்ணாமலை போன்ற ஆட்களுக்கு எல்லாம் தனக்கு என்று வந்தால் நியாயத்தைச் சற்று வளைத்து நிற்கலாம் அதில் தப்பில்லை போலும்.
“எனக்குப் பரிஞ்சிக்கிட்டு நியாயம் கேட்காத என் பொறந்த வூட்டையே தள்ளி வச்சவ நான். அன்னைக்குத் தொடங்கி ஆத்தா ஐயா அண்ணன் தங்கச்சின்னு இன்னைக்கு வரை ஒரு நல்லது கெட்டதுக்குக் கூட நான் தலை காட்டி நிக்கல மதனி.
‘எங்க அண்ணே’ வள்ளியப்பனை குறிப்பிட்டு,“அவுக காட்டுன வழிய கெட்டியா பிடிச்சிக்கிட்டு ஆழாமா வேர் ஊனிகிட்டேன்.யாருக்கு நான் பதில் பேசி நிக்கனும்? என் உழைப்பு, என் வருமானம், என் பிள்ளைனு உசரம் கூடி இருந்தும் நான் ஏன் மதனி தனிச்சு நிக்கனும்? “
அத்தனை ஆவேசமாக அனைத்தையும் கொட்டியவள் மனம் கணம் தாங்காமல் தளர்ந்து நின்று, “சுயமா இருந்தும் பேச்சு வாங்கி நிக்கிறேன் பெண் பொறப்பே சாபந்தேன் போல.நல்ல தலையெழுத்து மதனி எனக்கு.போன ஜென்மத்துல யாரு குடிய கெடுத்தேன்னு தெரியல மதனி” என்றதும் கொஞ்சமாக பதறி.
“மீனா என்ன பேச்சு பேசுறீக?” கண்ணாத்தாள் கொஞ்சம் குரலை உயர்த்தித் தான் வைத்தார்.விடாமல் புலம்பும் மீனாவை கண்டு அவளுக்கே பயம் வந்து விட்டது போலும்.
“அயித்த இப்போ என்னத்துக்கு இந்த பேச்சு? நீக புலம்பியே மாஞ்சு போறீக.உங்க மகேன் உள்ளுக்கு வச்சே மருகி போறாக. உங்களைக் கொண்டுதேன் நாக அதை இரண்டு பேருமே எண்ணி வைக்க மாட்டேங்கிறீக அயித்த.அவுக இப்போதேன் ஒரு இரண்டு நாளா ஆள் கொஞ்சம் பேசுறாக.அதுக்கு முன்னுக்கு வரை என்னால அவுகள சமாளிக்க முடியல ” என்றதும் மீனாள் அவளை ஏறிட்டு பார்த்து கையை நீட்டி சாலாவை அழைக்க.
“என்ன அயித்த? எதையும் யோசிக்காதீக அவுக தேறி வைப்பாக அதேன் கூட நீக இருக்கீகளே” பேசி கொண்டே தனது கையை நீட்ட சாலாவின் உள்ளங்கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள் மீனாள். ஓர் நொடி மௌனம் மூவரது உள்ளமும் சிறு நெகிழ்ச்சி கண்டு நின்றது.
பெண்கள் இத்தனை நேரம் பேசி நின்றது அத்தனையும் வள்ளியப்பன் வாசலில் அமர்ந்து கேட்டு கொண்டு தான் இருந்தார்.என்ன சத்தம் காட்டாமல் இருந்து கொண்டார்.இதுவரை மீனாளின் பேச்சை கேட்டு அவளுக்காக வருந்தியவர் இதழில் இப்போது அழகான புன்னகை.
அவர் கணிப்பும் விருப்பமும் சரியாகக் கலந்து நின்றதில் ஏக களிப்பு போலும் முதுமகனுக்கு.
மௌனத்தை கலைக்க எண்ணிய மீனாள் ஒரு பெருமூச்சுடன்,”சாலா சில சங்கதியை விளக்கி சொல்றேன் சரியா கேட்டுக்கோங்க.சத்தியமா சொல்றேன் உங்க மேல லட்சு இத்தினி விருப்பத்தை வச்சுக் கிடந்தது முன்னுக்கே தெரிஞ்சு இருந்தா, அண்ணே கிட்ட அப்பவே உங்களை லட்சுக்கு கொடுக்க சொல்லி கேட்டிருப்பேன்.
உங்களை லட்சுக்கு பேச மனசு இருந்தாலும். எனக்கு என்னைக் கொண்டு தயக்கம் சாலா,புருஷன் இல்லாதவுக,வாழ வெட்டி எடுத்து கட்டி செய்ய யாருமே இல்லாத வூடுன்னு நாந்தேன் பொண்ணு கேட்க மாய்ச்சல் பட்டு போனேன்.வேற எந்தத் தயக்கமும் இல்லை”
“இது என்ன பேச்சு மீனா? லட்சு குணத்துக்கும், படிப்புக்கும் நாங்கதேன் தயக்கம் காட்டி நின்னோம்.இதுல உங்க அண்ணனுக்குத்தேன் ஆசை பிடிவாதம். எங்களுக்கே அவுக விருப்பம் பிடிபடல. லட்சுவ எண்ணி சாலா கூடத் தயங்கிதேன் வச்சாக.
சிறுசுல இருந்தே இவுக கூட முறைச்ச மேனிக்குதேன் இருப்பாக லட்சு.அதை கொண்டு சாலா கணிச்சு கல்யாணத்துக்கு வேணான்னு சொன்னாக.அவுக ஐயாவும், லட்சுவும் பேசுனத்துக்கு அப்புறந்தேன் சாலா சம்மதம் சொன்னாக.
இதுல உங்க அண்ணனும், லட்சுவும் கூட்டு என்னமோ அவுக இரண்டு பேரு உள்ளுக்கும் எதோ சங்கதி கிடக்கு மீனா. சாலாவை சுட்டிக் காட்டி இவுக ஐயா எண்ணம் படிச்சா போதும் லட்சு அதைச் செயல் படுத்தி வைக்கிறாக.இத்தினி வருஷம் கூட இருந்தும் இவுக உறவு கண்ணனுக்குத் தட்டி நிக்கல பாருக”
எனக்கும் இந்த யோசனை உண்டு மதனி.நானும் ஒரு நாள் வாய் விட்டே லட்சு கிட்ட கேட்டேன் சிரிச்சே மழுப்பிட்டாக.சாலாவை அவுக விருப்பப் பட்டு செய்ய என்கிட்ட சொன்ன முதல் காரணம் அண்ணே. அடுத்து நீக, அப்புறம் சாலான்னு கதை படிச்சாக நம்பி வைக்குறது போல தலையாட்டி வச்சேன் ” என்று விட்டு குறும்பாக சாலாவை பார்க்க.அவளும் மீனாள் குறும்பு பார்வை கண்டு அலட்டல் இல்லாமல் புன்னகை கொண்டாள்.
அவளுக்குத் தான் தெரியுமே லட்சுவின் மனம்.லட்சு தனது மீது வைத்துள்ள பிடித்தம்,அன்பு அதையும் தாண்டிய தேடல் காதல் என்று இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.தன்னை அவன் கொண்டாடி நிற்கும் விதம் அவளைப் பொறுத்தவரையில் விந்தையிலும் விந்தை தான்.
விளையாட்டு தோழனே தோள் சாயக் கிடைப்பது எல்லாம் பெரும் வரம் என்று தான் சொல்ல வேண்டும்.ஒருவரை ஒருவர் ஆழமாக நுகர்ந்து தோதாகக் கை பற்றிக் கடப்பது நல் தாம்பத்தியத்தின் தொடக்கம் அல்லவா.அந்த வகையில் சாலா கொடுத்து வைத்தவள்.லட்சுவும் கொடுத்து வைத்தவன்.
கொஞ்சம் பகிர்வு கொண்டதாலோ என்னவோ மீனாளின் மனம் இளகி நின்றது.மெல்ல சாலாவை அழைத்துத் தன்னைப் படுக்க வைக்கச் சொல்ல.கண்ணாத்தாளும் துணை நின்று மீனாளை அறைக்குள் படுக்க வைத்தாள்.
“எதையும் எண்ணி வைக்காம தூங்கு மீனா”
“சரிக மதனி” என்றவள் கண்களை மூடி கொள்ள.கண்ணாத்தாள் மகளிடம் கண்ணை காட்டி விட்டு செல்ல.தாயின் எண்ணத்தை படித்தார் போல் அவளுடனே அங்கையே அமர்ந்து கொண்டாள் சாலா.புரிதல் கொண்ட உறவுகளின் காலம் நீண்டு தான் நிற்கும்.
error: Content is protected !!