Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 30

அத்தியாயம் 30:

திரும்ப சீட்டில் வந்து அமர்ந்து வேலை பாத்தவர்களிடம் சத்யன் வந்தான்.

ஊர்வசியிடம் “என்ன ஊர்வசி. பொங்கல்லாம் எப்படி போ” என்று கேட்டவனை முடிக்க விடாமல் மது “ஐய்யோ அண்ணா. அந்த கேள்வியை மட்டும் அவள பார்த்து கேட்றாதீங்கண்ணா”

“ஏன் குட்டி பிசாசு. நீ மட்டும் பொங்கல பாஸோட ஜாம் ஜாம்னு கொண்டாடுன இல்ல. அவ என்ன பண்ணான்னு  கேக்க வேண்டாமா. உன்ன மாதிரியா அது. நல்ல புள்ள”



Advertisement

“அண்ணா… புள்ள பூச்சிக்கு கொடுக்கு மொளைச்சுட்டுண்ணா. நம்மள விட்டு பறந்து போக பாக்குது”

“புரியலையேடா மது. நீ இவ்ளோ பீல் பண்றன்னா, என்னமோ இருக்கு. ஊர்வசி நடந்தது என்ன”

“அங்க ஏண்ணா கேக்கறீங்க. என்னட்ட கேளுங்க. அவங்க அத்தை பையன் அவள்”என்றவளின் வாயை பொத்தினாள் ஊர்வசி.

Advertisement

இவ்வளவு நேரம் அவர்களை கண்டு கொள்ளாமல் வேலை பார்த்து கொண்டிருந்தவள் மது ஏதாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் “ஒன்னுல்ல சத்யன். அவர் என்னட்ட ஐ லவ் யூ சொன்னார்” என்று அவசரமாக சொன்னாள்.

Advertisement

சத்யன் நெஞ்சை பிடித்து கொண்டான்.

“அண்ணா இதுக்கு எதுக்கு பீல் பண்றீங்க”

“எதுக்கா? ஆஸ்திரேலியா வந்து ஆறு மாசம்தான் ஆகுது. ஒரு தங்கச்சி அத்தை பையன கரெக்ட் பண்ணிட்டா. ஒருத்தி பாஸையே கரெக்ட் பண்ணிட்டா. நா இங்க வந்து ஆறு வருஷம் ஆகுது….”

Advertisement

“அண்ணா புலம்பாதிங்கண்ணா. BP அதிகமாய்ட போகுது”

“ஆமா. ஏற்கனவே ஒன்னும் செட் ஆகல. நீ சுகர் இருக்கு, BP இருக்குனு கிளப்பி விடு” என்று புலம்பி கொண்டே கிளம்பி போனான்.

இப்படியாக அன்று மாலை மூன்று மணியானது. மதுவின் மொபைலுக்கு அவள் அப்பாவின் நம்பரிலிருந்து கால் வந்தது. ஆச்சரியமாக அட்டண்ட் செய்து “ஹலோ அப்பா” என்றாள்.

“பாப்பா, ஆஃபீஸ்ல இருக்கியாடா”

“ஆமாப்பா. என்ன இந்த டைம்ல கால் பண்ணிருக்கீங்க. அம்மா நல்லாருக்காங்களா”

“அம்மா நல்லாருக்கா பாப்பா. நா பார்த்தி வீட்ல இருக்கேன். அவன் என்னமோ சொல்றான். ஆஸ்திரேலியாகாரன் ஒருத்தன் உன் பின்னாடி வர்றானாம்ல. எதுக்கு பிரச்சனை  நீ வேணுன்னா ஊருக்கு வந்துடறியா”

முதலில் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியான மது, பிறகு தெளிவான குரலில்

“அப்பா….. , அவன் பேரு ஹேரி ரிச்சர்ட். அவனுக்கு மட்டும் இல்லப்பா. எனக்கும் அவன ரொம்ப பிடிச்சிருக்கு” என்று தெளிவாக சொன்னாள்.

அவ்வளவுதான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மது அப்பா அப்பா என்று அழைத்து கொண்டிருக்கும் போதே கட் பண்ணி விட்டார்.

மது திரும்ப திரும்ப அழைத்தாள். செல்லதுரை எடுக்கவே இல்லை.

ஊர்வசி வந்து “என்ன மது” என்று கேட்டாள். மது அமைதியாக இருந்தாள். ஆனால் பயந்து போய் இருந்தாள்.

பார்த்திபனிடம் இருந்து கால் வந்தது. அவசரமாக எடுத்தவளிடம் “என்ன மது சொன்ன. அப்பா கோவமா ஒன்னும் சொல்லாம போய்ட்டார்”

“முதல்ல அங்க என்னண்ணா நடந்தது”

“அப்பா உன் ஜாதகம் பார்க்க போனாராம். அங்க உனக்கு லவ் மேரேஜ் தான் நடக்கும். வெளிநாட்டுலதான் வாழ்வன்னு சொல்லிருப்பாங்க போல. திடீர்ன்னு வீட்டுக்கு வந்தவர் மதுக்கு ஏதும் பிரச்சனையா, அவ யார்கூடயாவது அங்க பழகுறாளான்னு கேட்டார். என்னால மறைக்க முடியல மது. ஆனா ஹேரி  மட்டும்தான் உன்ன லவ் பன்றார். நீ முடியாதுன்னு சொல்லிட்டன்னுதான் சொன்னேன்”

“நானும் அவனை லவ் பண்றதா அப்பாட்ட சொல்லிட்டண்ணா. அவனை தவிர வேற யாரையும் இன்னுமே மனசுல நினைக்க முடியாதுண்ணா. எனக்கு அவன ரொம்ப பிடிச்சுருக்கு” என்று விசும்பினாள்.

மதுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஊர்வசி அவள் தோளில் கை போட்டு அமைதி படுத்தினாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த பார்த்தி “அழாத . எதிர்பாத்ததுதான். ஆனா இவ்வளவு சீக்கிரம் சொல்வேன்னு எதிர்பாக்கல. இந்த கஷ்டம்லாம் வேண்டாம்ன்னுதான் ஆரம்பத்துலயே உன்ன தடுத்தேன். ம் எங்க, விதி. அதை விட இந்த ஹேரியோட காதல்…. அப்பாட்ட கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம் மது. அவருக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துருக்கும்”

“நானே இப்படி சொல்வேன்னு எதிர் பாக்கல அண்ணா. அப்பா கேக்கும் போது என்னால மறைக்க முடியல”

“சரி விடு. சொல்லிட்டல்ல. பொறுமையா இருப்போம். நீ வீட்டுக்கு பத்திரமா போ. ஏதும் யோசிச்சு குழப்பிக்காத”  என்றவன் வைத்து விட்டான்.

சிறிது நேரத்தில் ஹேரியிடம் இருந்து கால் வந்தது.

“என்ன பேபி. என்ன பிரச்சனை. அழறியா என்ன”

அவன் கேட்டவுடன் நிமிர்ந்து கேமராவை பார்த்தவள், நடந்ததை கூறினாள்.

“பார்த்தி சொன்ன மாதிரி, வெயிட் பண்ணுவோம் பேபி. நா வரவா அங்க”

“இல்ல ஹேரி. நா வீட்டுக்கு கிளம்புறேன். அம்மாட்ட வீடியோ கால் பேசி பாக்கறேன்”

“ஓகே பேபி. தைரியமா இருக்கணும். நா இருக்கேன் உனக்கு. வீட்டுக்கு போயிட்டு பேசு” என்று அவன் வைத்தவுடன் ஊர்வசியிடம் சத்யனிடம் சொல்லுமாறு கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டாள் மது.

வீட்டிற்கு போய் சிறிது நேரத்தில் மீனாட்சியிடம் இருந்து கால் வந்தது.

“அம்மா”

அந்த பக்கம் பதிலே இல்லை

“எதாவது பேசும்மா”

“உங்க அப்பா என்னமோ சொல்றாரே. உண்மையா மது”

“ஆமாம்மா. அவனை எனக்குமே ரொம்ப பிடிச்சுருக்கு”

“ஓ. அப்ப என்ன முடிவெடுத்துருக்க”

“நா என்னம்மா முடிவெடுக்கறது. எனக்கு பிடிச்சுருக்கு. அதுக்கு அப்புறம் நீங்கதான் சொல்லணும்”

“எங்க முடிவெல்லாம் உனக்கு முக்கியமா மது”

“என்னம்மா இப்படி கேக்குற. நா என்ன பிளான் போட்டா  பண்ணேன். மனசுக்கு புடிக்கிறத என்னம்மா பண்றது”

“சின்ன வயசுல ஆரம்பிச்சு இப்ப ஆஸ்திரேலியா போற வரை உனக்கு சப்போர்ட் பண்ணுன மனுஷனுக்கு நல்ல கைம்மாறு பண்ணிட்ட மது நீ. உங்கப்பா இடிஞ்சு போய் உக்காந்துருக்காரு” என்று போனை வைத்து விட்டார் மீனாட்சி.

அதற்கு பிறகு மது திரும்ப திரும்ப கால் பண்ணியும் அவள் அம்மா அப்பா இருவரும் எடுக்கவே இல்லை.

அழுது கொண்டே அமர்ந்திருந்தவள் ஹேரிக்கு கால் செய்தாள். காலை அட்டண்ட் பண்ணியவன் “கதவ திற பேபி. வாசல்லதான் நிக்கிறேன்” என்றவுடன் ஓடிபோய் கதவை திறந்தாள். உள்ளே வந்தவனை பார்த்ததும் அழுகை பொங்கியது மதுவிற்கு.

ஓடி போய் கட்டி கொண்டு நெஞ்சில் சாய்ந்து அழுதாள். சிறிது நேரம் அழ விட்டவன் “போதும் பேபி. என்னாச்சுன்னு சொல்லு” என்றவனுக்கு அவள் தாய் பேசியதை கூறினாள்.

“அம்மாவாது பேசிட்டாங்க கண்ணா. அப்பா பேசவே இல்ல. அம்மா சொன்ன மாதிரி இங்க வரதுக்கு அப்பாதான் புல் சப்போர்ட் பண்ணினார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“டோன்ட் க்ரை பேபி. இப்ப விஷயம் தெரிஞ்ச அதிர்ச்சில அவங்க பேசறதெல்லாம் நீ மனசுல எடுத்துக்காத. பொறுமையா ரெண்டு நாள் கழிச்சி பேசு. அவங்க கோவம் குறைஞ்சு யோசிக்க ஆரம்பிச்சுருப்பாங்க” என்று சமாதான படுத்தினான்.

அவளும் அழுகை குறைந்து அவனை பார்த்தாள். பார்மல் உடையில், டயர்டாக தெரிந்தான்.

“பாக்டரில இருந்து வரேன் பேபி. கேபி இன்னைக்கு வரல. அதான் எனக்கு ஒர்க் அதிகம் இன்னைக்கு”

“சாரி கண்ணா. பசிக்குதா. ஏதாவது சாப்பிடறியா”

“மதியமும் சாப்பிடல பேபி. உங்க ஊர் புட் வேண்டாம். ஹெவியா இருக்கும்” என்றவனுக்கு எக் ஆம்ப்லட்டும், பிரெஷ் மாதுளை ஜூஸ்ஸும் போட்டு கொடுத்தாள்.

“நீயும் சாப்பிடு பேபி”

“வேண்டாம் கண்ணா” என்று சோர்வாக சொல்லியவளிடம் “சாப்பிடாம இருந்தா எந்த பிரச்னையும் தீராது பேபி. சாப்பிட்டாதான் ஒழுங்கா யோசிக்கவே முடியும்” என்றான்.

சரி என்று வேண்டா வெறுப்பாக இரண்டு தோசையை  ஊத்தி சாப்பிட்டாள்.

“நீ கிளம்பு கண்ணா. அம்மாவோ அப்பாவோ கால் பண்ணாங்கன்னா, நீ வீட்ல இருந்தா நல்லாருக்காது”

“சரி பேபி. அழக்கூடாது. எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும் ஓகே வா”  என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே மதுவின் மொபைலுக்கு மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஓடி போய் எடுத்தாள் மது.

“இப்ப உனக்கு சந்தோசமாடி. அப்பாவை ஹாஸ்பிடல் கொண்டு வந்து படுக்க வச்சிட்டியே” என்று அழுதார்.

“அம்மா என்னம்மா சொல்ற. அப்பாவுக்கு என்ன”

“பேசாமலே இருந்தவர் வேர்வை அதிகமாகி மயங்கி விழுந்துட்டார் மது.  தஞ்சாவூர் ஹாஸ்பிடல்ல வந்து சேத்துருக்கோம். டாக்டர் இன்னும் பதில் சொல்லல. எல்லாம் உன்னாலதாண்டி. நீ குடுத்த அதிர்ச்சி தாங்காமல் தான் இப்படி ஆயிட்டாரு. போடி உன்னட்ட போய் சொல்றேன் பாரு” என்று போனை வைத்து விட்டார்.

மது அதிர்ச்சியில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். ஹேரிதான் தான் அவளை உலுக்கினான்.

“கண்ணா அப்பாக்கு உடம்பு முடியலையாம். ஹாஸ்பிடல்ல சேத்துருக்கங்களாம்” என்றவள் கதறி அழுதவாறே அமர்ந்து விட்டாள். ஹேரி யோசித்தவன் பார்த்திக்கு கால் பண்ணினான்.

லையனில் வந்தவனிடம் விவரத்தை கூறியதும், தான் போய் பார்த்துவிட்டு பதில் சொல்வதாக வைத்தான் பார்த்தி.

அழுகையை நிறுத்திய மது, “நா ஊருக்கு போறேன் கண்ணா” என்றாள்.

“நானும் வரேன் பேபி “

“ம்ஹும் உன்ன பாத்தா அதிர்ச்சிதான் ஆவாங்க”

“நா உங்க அம்மா அப்பாவை வந்து பாக்கல ஹனி. வெளில தங்கிக்கறேன். ஆனா இந்த சிச்சுவேஷன்ல உன்ன எப்படி தனியா அனுப்பறது”

“இல்ல கண்ணா. அது நல்லாருக்காது. இவ்வளவு நடந்தும் உன்ன கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்னு வெறுப்புதான் அதிகம் ஆகும். நா கிளம்புறேன்” என்று எழுந்து பரபரப்பாக ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்தாள். இங்கும் அங்கும் அலைந்தாள்.

அவளை பிடித்து அமர வைத்தவன் “ஊருக்குத்தான போகணும். இரு. முதல்ல பிளைட் டிக்கட் செக் பண்றேன் என்றவன், இன்னும் இரண்டு  மணி நேரத்தில் பிளைட் டிக்கட் இருப்பதை பார்த்தவன், சத்யனுக்கு கால் செய்தான்.

நிலைமையை கூறி மதுவுடன் துணைக்கு போக முடியுமா என்று கேட்டான். சத்யனும் யோசிக்காமல் ஒத்துக்கொண்டான்.

அவனுக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்தவன் மது கிளம்புவதற்கு உதவி செய்தான். சத்யனை ஏர்போர்ட்டுக்கே நேரடியாக வர சொல்லி விட்டான்.

இடையில் பார்த்தி போன் செய்து “BP அதிகமாயிடுச்சி அப்பாவுக்கு. நல்ல வேளை கரெக்டான டைம்ல ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேத்ததனால ஒன்னும் ஆகல. இன்னும் அப்சர்வேசன்ல தான் வச்சிருக்காங்க. இங்க நா பாத்துக்கிறேன் மது. நீ ஏன் இப்ப அலையிற” என்று பார்த்தி சொன்னவுடன் சற்று நிம்மதியானாள் மது. பிறகு பார்த்தியிடம் “இல்லண்ணா. நா கிளம்பிட்டேன். அம்மா அப்பா ரெண்டு பேரையும்  நேர்ல பாத்தாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்று வைத்துவிட்டாள்.

ஹேரியும், மதுவும் ஏர்போர்ட் வந்தவர்கள், சத்யனும் ஏர்போர்ட்டில் ரெடியாக இருந்ததால் உடனடியாக செக்கின் செய்து உள்ளே செல்ல போனார்கள்.ஹேரியை பார்த்து கண்கள் கலங்க தலையாட்டிவிட்டு, கிளம்ப போன  மதுவை நிறுத்தியவன், அவளை இறுக்கி கட்டி அணைத்தான்.

“என்னாலதான உனக்கு கஷ்டம் பேபி”

“என்னால உன்னாலன்னு பிரிச்சு  பேசாத கண்ணா. இது நம்ம கஷ்டம்” என்றவளுக்கு தலையில் ஒரு முத்தம் வைத்து விடை கொடுத்தான். சத்யன் அவர்களுக்கு தனிமை கொடுத்து முன்னேயே உள்ளே சென்று விட்டான்.

முதலில் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை, அங்கிருந்து திருச்சி வரை பிளைட்டில் சென்று, திருச்சியிலிருந்து காரில் சென்றார்கள். சத்யன் மதுவை முடிந்தவரை தொந்திரவு செய்யாமல் அவனே எல்லாவற்றையும் பார்த்து கொண்டான்.

இடையில் டிரான்சிட்டில் இருக்கும் போது மட்டும் ஹேரி கால் பண்ணி மதுவிடம் விசாரித்து கொண்டான். காரில் நேராக ஹாஸ்பிடலுக்கே சென்று விட்டாள் மது.

அவள் சென்று சேரும்போது மறுநாள் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. மது வருவது தெரிந்து வாசலிலேயே நின்ற பார்த்தி அவள் இறங்கியவுடன் “அப்பா நல்லாருக்கார் மது. வேர்க்க ஆரம்பிச்ச உடனே நல்ல வேளையா அம்மா உன் பெரியப்பா பையன் தினேஷ்ன்னு இருக்கானே. அவனை கூப்டு காரை எடுக்க சொல்லி சீக்கிரம் ஹாஸ்பிடல் வந்துட்டாங்க. லேட்டாயிருந்தா  அட்டாக் வந்துருக்கும்ன்னு டாக்டர் சொன்னார். நீ எதுவும் அவர டென்ஷன் பண்ணிடாத மது” என்றான்.

அவனுக்கு சோர்வாக தலையாட்டிய படி உள்ளே சென்றாள் மது. சத்யன் பார்த்தியோடு வெளியிலேயே நின்று விட்டான்.

செல்லத்துரை கண் மூடி படுத்திருக்க பக்கத்தில் சேரில் கண் மூடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார் மீனாட்சி.

“அம்மா” என்று மது அழைத்ததும் மீனாட்சி கண் விழித்து மகளை பார்த்தவர், அவசரமாக எழுந்து வந்து மகளை கட்டி கொண்டார். மதுவிற்கு கண்ணில் நீர் வழிந்தது.

“அப்பாவ பாத்தியாடா. ஒரு தலைவலி, காச்சல்ன்னு படுக்காதவர். இப்படி வந்து படுத்துருக்கார்” என்று அழுதார் மீனாட்சி. மது நிமிர்ந்து தன் அப்பாவை பார்த்தாள்.

செல்லத்துரை, மது அம்மா என்று அழைக்கும் போதே கண் விழித்து விட்டார். மது நிமிர்ந்து பார்த்ததும் கண்களை மூடி கொண்டார். மெதுவாக அவர் பக்கத்தில் சென்றவள், அவர் கைகளை பிடித்து கொண்டு “சாரிப்பா” என்று சொல்லிவிட்டு அவர் கட்டிலிலேயே அமர்ந்து விட்டாள்.

மீனாட்சி அவரை எழுப்ப போனார். மது “வேண்டாம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவள் எழுந்து வாசலில் சத்யன் எங்கே என்று பார்ப்பதற்காக கிளம்பினாள்.

அவள் திரும்பியவுடன் செல்லத்துரை மீனாட்சியிடம் “அவகிட்ட வருண கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம் கேளு மீனாட்சி” என்றார்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!