Skip to content
Post Views: 5,224
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 12
அன்றைய புகைப்படபிடிப்பு முடிவுற விடியக்காலை மூன்று மணி ஆகிவிட்டிருந்தது. மணமக்கள் இருவரும் தத்தமது காரில் கிளம்ப ஆயத்தமாயினர்.
விடைபெற்றுச் செல்லும் தருவாயில், மிருது, “தேங்க்யூ கைஸ். நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் உங்களுக்கு. நெக்ஸ் டே இந்த பிக்ஸ்ல எதை மேகஜீனுக்கு குடுக்கலாம்னு டிஸ்கஸ் பண்ண நான் ஆபீஸ் வந்துடறேன். பை மைக். சோ ஸ்வீட் ஆஃப் யூ!” என்று மறவாமல் ஒரு குண்டைத் தூக்கி அலேக்காய் வீசிவிட்டுக் கிளம்பினாள்.
Advertisement
“நானா? ஸ்வீட் தான்.. ஸ்வீட் தான்.. ஊர்ல கூட அப்படித்தான் சொல்லுவாங்க.” என்று முணுமுணுத்த மைக்கில், மிருது அப்பால் நகர்ந்தவுடன், “என்னை எப்படியாவது காப்பத்து கர்த்தரே! இந்த பிரைட்ஜில்லாவை (Bridezilla) சமாளிக்கறது ரொம்ப குஷ்டமா இருக்கே! எதுலையும் திருப்தியே பட மாட்டேங்குது!” என்று சிலுவை போட்டுக் கொண்டு கூறினான் மைக்கில்.
“பிரைட்ஜில்லாவா? அப்படின்னா?” என்று வினவினாள் வனிஷா.
“அது ஒரு இங்கிலீஷ்படம். அதை விடு! இந்த பிரைட்ஜில்லாவைக் கூட நான் சமாளிச்சுருவேன். ஆனா கூட இருக்க ரெண்டு ப்ரெண்ட்ஸ் இருக்கு பாரு! இந்த மிருது மேம் அதுவாவே நிறைய குழப்பிகிட்டு கொஞ்சம் போல இரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கும். கரெக்டா அப்போன்னு பார்த்து அந்த ரெண்டு தீயசக்திகளும் சேர்ந்து வேற மாதிரி தூபம் போடுங்க, இந்த மிருது மனசு மாறிடும்.”
Advertisement
“டேய், டேய், உன் புலம்பலை கொஞ்சம் நிறுத்திட்டு அங்க நடக்கற சீனைக் கொஞ்சம் பாரு.” என்று வனிஷா கைகாட்டிய திசையில் நோட்டம் விட்டான் மைக்கில்.
Advertisement
அங்கே, மிருது அவள் காரில் ஏற்றி அமர்த்திவிட்டு, நிமிர்ந்த சத்யா தென்பட்டான். அவன் காரும் தயாராக அருகில் நின்றிருக்க, ஓட்டுனர் இருக்கையில் இருந்த ரிஷி சத்யாவை உள்ளே அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் சத்யாவோ, அந்த ரெஸ்டொரெண்டின் போர்டிகோ வாயில் ஓரமாய் நின்றிருந்த ராகாவை நோக்கி நகர்ந்தான்.
“சோ, ஷூட் ஒரு வழியா முடிஞ்சது. இனி நெக்ஸ்ட் என்ன?” என்று சட்டையின் கைமடிப்பை தடவிக் கொண்டே சத்யா கூற, ராகா சிரிப்புடன் தலையை மட்டுமாய் அசைத்தாள். அவளுக்கு இரண்டடி தொலைவில் நின்றிருந்த மைக்கிலும், வனிஷாவும் தன்னைத் தான் கவனிக்கின்றனர் என்று தெரிந்திருந்தது.
“இந்நேரம் வனி, மைக்கிட்ட காலையில நடந்த விஷயத்தை சொல்லியிருப்பா! ரெண்டும் சேர்ந்து என்ன ஏதுன்னு நோட்டம் விட்டுட்டு இருக்குக. இப்போ பார்த்து இவன் வேற பேசறதுக்காக இங்க வந்து நிக்கறானே!” என்று நினைத்தவள், சுற்றும் முற்றும் நடாஷா எங்கேணும் தென்படுகிறாளா எனக் கண்களாலேயே துளாவினாள்.
Advertisement
நடாஷா ஹோட்டலின் உள்ளே இருந்து வெளிவரவில்லை. அதனால் சத்யாவின் கேள்விக்கு தான் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்று புலனாயிற்று.
“ஹலோ உங்களைத்தான்! மிஸ் ராகா!” என்று அவள் முகம் முன்னால் சொடுக்கிட்டவனிடம் தயக்கத்துடன் தான் மேலே தொடர்ந்தாள் ராகா.
“நெக்ஸ்ட் ப்ளான் என்னன்னு நீங்களும் மிருதுளா மேமும் தான் சொல்லணும் மிஸ்டர். சத்யா”
“மிஸ்டர் சத்யா இல்ல. ஜஸ்ட் சத்யா” என்று ராகா சொல்வதை கவனிக்காமல், அவள் வார்த்தைகளைத் திருத்திக் கொண்டிருந்தான் அவன். அவன் சொன்னது காதிலேயே விழாதவள் போல, மீண்டும் பேசலானாள் ராகா. “நெக்ஸ் உங்களை இண்டர்வியூ பண்ண மேகஜீன்ல இருந்து ஆளுங்க வருவாங்க. அப்பறம் அவங்க நெக்ஸ்ட் இஷ்ஷுல ஆர்டிகல் வரும். இதுக்கு நடுவுல, நெக்ஸ்ட் மந்த் உங்க எண்கேஜ்மெண்ட் ஃபன்ஷன் இருக்குல, அதுக்கு வென்யூ, தீம், இண்விடேஷன்,டிரஸஸ்னு ப்ளான் போகும். நாங்க மிருது மேம்கிட்ட டச்ல தான் இருப்போம் மிஸ்டர். சத்யா” என்று பணி நிமித்தமாகவே பேசினாள்.
“மிஸ்டர் சத்யா இல்ல. ஜஸ்ட் சத்யா.” என்று மீண்டுமாய் அவன் திருத்த, இம்முறை ராகாவின் இதழ்களின் ஓரம் புன்னகை பூத்தது. மெல்லமாய் தலையை கவிழ்த்து இதழ் பிரிக்காமல் சிரித்தவள்.
“ஒ.கே ஜஸ்ட் சத்யா. இதான் எங்க ப்ளான். வீ வில் டேக் குட் கேர் ஆஃப் யூ.” என்று சொல்ல, அவள் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று ராகாவின் கண்களை சின்னக் குறும்புடன் ஏறிட, நெஞ்சம் தடதடத்த போதும் வெளியே காட்டிக் கொள்லாமல்,
“ஐமீன். வீ வில் டேக் குட் கேட் ஆஃப் யூ போத். உங்க கல்யாணம் நல்ல விதமா முடியற வரைக்கும் நாங்க கூடவே இருப்போம் ஜஸ்ட் சத்யா” என்று வாக்குறுதி போல சின்ன சிரிப்புடன் கூறினாள்.
அவளின் குறும்பு பேச்சு புரிந்து அவனும் சேர்ந்து மையமாய் சிரிக்க, இதற்குள் இரண்டு முறை ரிஷி கார் ஹார்னை அடித்திருந்தான். “ஒ.கே சீ யூ சூன். டேக் கேர்” என்று சொல்லியவன், காரின் அருகே வரை சென்று உள்ளே ஏறுவதற்கு முன் அவள் பக்கமாய் திரும்பி, “தேங்கியூ” என்று அதிகம் சப்திக்காமல் உதட்டை மட்டுமாய் அசைத்தான்.
அவன் நன்றியை ஏற்றுக் கொண்ட விதமாக ராகா தலையசைத்து விடைகொடுக்க, சத்யசாய்ராமின் கார் அந்த ஹோட்டலை விட்டு வெளியே நகர்ந்தது. காரின் லெஃப்ட் ரியர் வியூ மிரர் வழியாக ராகாவின் நண்பர்கள் அவள் அருகே ஓடி வந்து நின்றதை கவனித்துக் கொண்டே சென்றிருந்தான் சத்யா.
கார் சென்றதுமே காத்திருந்தது போல, ஓடி வந்து ராகாவின் இருபுறமும் நின்று கொண்டனர் வனியும், மைக்கும். “ஏ, என்ன எல்லார் முன்னாடியும் அவளோ கடலை வறுத்துட்டு இருக்க! அவர் கல்யாண மாப்பிள்ளை நியாபகம் வச்சுக்க” என்று மைக்கில் கிண்டல் செய்தான்.
“இதுக்கே இப்படிங்கற! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ ராகாவை பார்த்திருக்கணுமே! முகத்தில அவளோ வெட்கம், அப்படி ஒரு சிரிப்புன்னு சத்யா ரூம்ல இருந்து வெளிய வந்தா” என்று சற்றே பலமாக சொல்லியிருந்தாள் வனிஷா.
ராகா அவள் பேசிய வார்த்தைகள் கேட்டு திடுக்கிட்டு, “எங்கே என்ன பேசறதுன்னு உனக்கு விவஸ்தையே கிடையாதா?” என்று அவசர அவசரமாக வனிஷாவின் வாயைப் பொத்தினாள்.
“கொஞ்சம் யோசிச்சு பேசு வனி! யார் காதுலையாவது விழுந்துடப் போகுது! நீ பாட்டில அவங்க ரூம்ல இருந்து நான் வெட்கப்பட்டு சிரிச்சுட்டே வந்தேன்னு உளறிட்டு இருக்காத ப்ளீஸ்” என்று கண்டிப்புடன் ராகா சொன்ன பின்னர் தான் தன் வார்த்தைகளின் முழு அர்த்தம் உணர்ந்து கொண்டாள் வனிஷா.
கொஞ்சம் போல முகத்தில் வருத்தம்காட்டினாலும், உடனே சமாளித்தவள், “சரி, நீ அப்போ சாதாரணமா தான் ரூம்ல இருந்து வெளிய வந்தேன்னே இருக்கட்டும். இப்போ எதுக்கு தனியா இவளோ நேரம் நின்னு பேசிட்டு இருக்க? என்ன பேசினீங்க அப்படி? அதும் நீ தலையெல்லாம் குனிஞ்சு சிரிக்கற அளவுக்கு” என்று கிடுக்கி போட்டு வினவினாள்.
“ஏ, குனிஞ்சும் சிரிக்கலை, நிமிந்தும் சிரிக்கலை. சும்மா இருக்கியா நீ” என்றாள் ராகா.
“சரி சரி, நான் நம்பறேன். அந்த வெட்க கருமத்தையெல்லாம் நீ பட்டிருக்க மாட்ட! ஆனாலும் மாப்பிள்ளை சார்கிட்ட கொஞ்சம் அதிகமா தான் பேசற மாதிரி தோணுது.” என்றான் மைக்கில் கூர்மையாய் ராகாவை பார்த்து.
“ஏ, வனி தான் ஏதோ உளர்றான்னு நீயுமா மைக். ஜஸ்ட் நெக்ஸ்ட் என்ன மாதிரி வேலைகள் இருக்குன்னு கேட்டார். நா சொல்லிட்டு இருந்தேன். அவளோ தான். ஜஸ்ட் ஹார்ம்லெஸ்….” “ஃப்ளர்ட் (flirt)” என்று சொல்ல வந்து அதை மாற்றி, “டாக் (talk)” என்று முடித்தாள் ராகா.
“ஏன் அதை இங்க எங்க முன்னாடியே கேட்டிருக்கலாம்ல. உன்கிட்ட தனியா தான் கேட்கணுமா?” என்று வனிஷா கேட்க, இம்முறை மைக்கிற்கு சற்றே எரிச்சல் தான் உண்டாயிற்று.
“ஏ, அதான் அவ ஒண்ணும் பேசலை. நெக்ஸ்ட் என்ன ப்ளான்னு சொல்லிட்டு இருந்தேன்னு சொல்லறால. அப்பறமும் என்ன நசநசன்னு” என்று நோண்டி நோண்டி கேட்ட வனிஷா அடக்கியவன், “சரி, நீ நெக்ஸ்ட் என்னன்னு சொல்லு. இந்த பிரைட்ஜில்லாவயும், அதோட தீயசக்திகளும் என்னை பாதிக்காம இருக்க, நான் என் வெ – ம் – சூ – சுவை அடமானம் வைக்க நல்ல அடகுகடையா தேடணும்” என்று கழுத்தை சுற்றி சுற்றி உடற்பயிற்சி போல் செய்து முஷ்டி மடக்கிக் காமித்தான் மைக்கில்.
“ம்ம்ம், நெக்ஸ்ட் ரெஸ்ட்.. மத்ததெல்லாம் ஃபோட்டோஸ் கைக்கு வந்ததுக்கு அப்பறமா பேசிக்கலாம். வாங்க நாமளும் வண்டிய கிளப்புவோம்” என்று வனிஷா மேற்கொண்டு வாய்திறக்கும் முன்னர், முந்திக் கொண்டு பேசிய ராகா தன் அன்றைய வேலையை முடிவு பெற்ற மகிழ்ச்சியில் கிளம்பினாள்.
*****
தன் பி.ஜி அறைக்கு வந்து சேர்ந்த போது அத்தனை ஆயாசமாக இருந்தது. பேயிங் கெஸ்டாக இருக்கும் வீடு நல்ல வசதியானது. அதிலும் ராகா தனியான அறையையே எடுத்திருந்தாள். அறைக்க்கு வந்து சேர்ந்த போது காலை எட்டு மணி ஆகிவிட்டிருந்தது.
“நேரங்கெட்ட நேரத்தில நான் வருவேன், தூங்குவேன். அதுக்கெல்லாம் ரூம் மேட் செட்டாகாது” என்று நினைத்துக் கொண்டாள்.
அறைக்கு வந்து குளித்து, உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்த நேரம் அவள் வீட்டினர் நினைவு எழுந்தது. முன் தினம் அன்னையிடம் மட்டுமே பேசியிருந்தாள். அதிலும் வெறும் பத்து நிமிடங்கள் சம்பிரதாய “சாப்பிட்டியா, தூங்குனியா” விசாரிப்புகள் மட்டும் தான்.
“தூங்கறதுக்கு முன்னாடியே வீட்டில பேசிடலாம். இல்லைன்னா தூக்கத்துக்கு நடுவுல கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவாங்க” என்று அக்கறையாக தன் அன்னையின் எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு சென்றதே ஒழிய அலைபேசி எடுக்கப்படவில்லை.
காலையில் இவ்வேளையில் ஆல்டரிச் போல தன் தலையை காலை நாளிதழுக்குள் கொடுத்திருக்கும் தந்தை அழகேசன் கைப்பேசியை எடுக்கமாட்டார். அதனால் அவள் அண்ணன் பிரதீப்பின் எண்ணிற்கு அழைத்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே, முதலில் அண்ணனின் மூன்று வயதான மகன் ரித்விக் தான் கைப்பேசியை எடுத்தான்.
“ஆத்த! ஆத்த!” என்று திரையில் தெரிந்த இவள் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மழலையில் ஏதோ சொல்வதும், அதற்கு வீட்டின் இறைச்சலில் இருந்து “யாருடா ஃபோன்ல?” என்று அண்ணனின் மனைவி ரேணுவின் குரலும் ஒருங்கினைந்து கேட்டது.
இதனைத் தொடர்ந்து, “ஏ, ஹலோ சொல்லுடீ, எப்படியிருக்க” என்று பிரதீப்பின் குரல் காதுகளை நிரைக்க, ரித்விக் பின்னால் இருந்து இன்னமும், “ஆத்த, ஆத்த” என்று கத்திக் கொண்டிருந்தான். ஹாலின் சோஃபாவில் குதித்துக் கொண்டிருப்பானாயிருக்கும்.
தன் வீட்டின் காலை நேர பரபரப்பை நினைக்கும் பொழுது, மனம் கொஞ்சம் ஏக்கம் கொண்டது. “சே, அங்க சென்னையிலையே ஏதாவது வேலை பார்த்துட்டு இருந்திருக்கலாம். பெங்களூர் வந்திருக்கணுமா என்ன?” என்ற கேள்விகள் ஓடத் துவங்க, அவள் எண்ணவோட்டத்தைக் கலைத்தது பிரதீப்பின் கரகர குரல்.
“டீ, மாலி! என்ன பண்ணற? இப்போ தான் வந்தியா பி.ஜிக்கு? நேத்து ஏதோ நைட் ஷூட் இருக்குன்னு அம்மா சொன்னாங்க முடிஞ்சுதா?” என்று வினவினான்.
“ம்ம் முடிஞ்சது டா. நீ ஆபீஸ் கிளம்பிட்டியா? எங்க உன் அருமை பொண்டாட்டி?” என ரேணுவை வம்பிழுத்தாள் ராகா. ரேணு ராகாவின் பள்ளிக்கால தோழி தான். ராகாவைக் காண அடிக்கடி வீட்டிற்கு வந்து போய் கடைசியில், பிரதீப்புடன் காதல் வயப்பட்டு, அவனை கைப்பிடித்திருந்தாள்.
அதனால் ரேணுவை அண்ணி என்றெல்லாம் ராகா ஒரு நாளும் அழைத்ததில்லை. அவளும் அப்படியெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை. “இருக்கேண்டி.. தலை சீவிட்டு இருக்கேன். எனக்கும் டைமாச்சு” என்ற ரேணுவும் பணிக்குச் செல்லும் மங்கை.
“யார் தலைய சீவிட்டு இருக்க? என் அண்ணன் தலையா? எங்க அம்மாவுதா?” என்றாள் ராகா சீண்டலாக.
“ஸ்பீக்கர்ல இருக்கு ஃபோன்” என்று ஜாடையாக அதிகம் பேசித் தொலையாதே என்று எச்சரிக்கை செய்த ரேணு, “உன் ஷூட் எப்படி போச்சு?” என்று சம்பிரதாயமாக வினவினாள்.
ரேணுவுக்கும், ராகாவின் அன்னை முத்துலட்சுமிக்கும் அடிக்கடி வாய்க்கால் தகறாறு ஏற்படுவதுண்டு. எல்லா வீட்டிலும் நடக்கும் மாமியார் மருமகள் சச்சரவு தான் என்ற போதும், ராகா என்றுமே தன் தோழியின் பக்கமாய் தான் சார்ந்து நிற்பாள்.
இதனால் அவ்வப்போது, முத்துலட்சுமியிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்வாள். “அவளுக்கு தான் மாமியார்னு மரியாதை கொஞ்சமும் இல்ல, இவளும் பாருங்க, ஒரு நாத்தனாரா நறுக்குன்னு வெடுக்குனு பேசாம, அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசறதை!” என்று சடைந்து கொள்வார் முத்துலட்சுமி.
“ராகா, எப்போ வந்த பி.ஜிக்கு? இப்போ தான் வந்தியாடீ?” என்ற ரேணு, அலுவலகம் கிளம்பிக் கொண்டே பேசுகிறாள் என்பது அவள் குரல் லேசாய் கேட்பதில் இருந்தே விளங்கியது.
“ம்ம் ஆமா, ஜஸ்ட் நவ் ரீச்ட்” என்று ராகா சொல்லும் போதே, “ஜஸ்ட்” என்ற வார்த்தை, சின்ன முறுவலுடன் வெளிபட்டது. அதையும் ரேணு கண்டு கொண்டு, “எதுக்குடீ இப்போ சம்பந்தமில்லாம சிரிக்கற?” என்று கேட்டாள்.
“அது, அதொன்னுமில்ல. சரி, நான் சாயந்தரம் பேசறேன். தூங்க போறேன்” என்றாள் ராகா.
“ம்ம். சரி, சாப்பிட்டுட்டு தூங்கு. ஈவினிங் பேசறேன். பை டீ” என்ற ரேணுவின் குரலுடன் சேர்ந்து, “பை டீ” என்ற ப்ரதீப்பின் குரலும், “ஆத்த! பை” என்ற ரித்விக்கின் குரலும் சேர்ந்து ஒலிக்க, “குடும்பமா பை சொல்லறீங்களா டா? நல்லா வருவீங்க” என்று நினைத்துக் கொண்டாள்.
ரேணுவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் அன்னையின் கைப்பேசியில் இருந்து விடாமல் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. முத்துலட்சுமி இப்படிதான் தேவையில்லாத விஷயங்களில் நிறைய கவிரவம் பார்ப்பார். மகனின் கைப்பேசியிலேயே தன்னிடம் பேசியிருக்கலாம். ஆனால் பேச மாட்டார்.
நல்ல வேளை ராகா முதலில் அன்னைக்கு அழைத்து, அவராக அதை எடுக்கவில்லை. நேராக ப்ரதீப்பின் எண்ணிற்கோ, அல்லது ரேணுவிற்கோ அழைத்திருந்தால் அதற்கு தனியாக வசைபாட்டு கேட்கவேண்டியிருக்கும், “இந்தம்மா டார்சரு பயந்து தானே நான் தப்பிச்சோம் பிழைச்சோம்னு பெங்களூருக்கு வந்தேன்” என்று எண்ணிக் கொண்டே, தாயின் அழைப்பை ஏற்றாள் ராகா!
“ப்ரதீப்கிட்டயா பேசிட்டு இருக்க? நான் ஃபோன் எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு. இன்னொரு தடவை கூப்பிடலாம்ல” என்று குற்றம்சாட்டும் தோரனையுடன் தான் பேச்சைத் துவங்கினார் முத்துலட்சுமி.
“அதான் லைன் பிசின்னு வருதுல, உடனே திரும்ப திரும்ப கூப்பிட்டுட்டே இருக்கணுமா? பிரதீப் என்ன வேற ஊர்லையா இருக்கான்? ஹால்ல தானே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கான். ஃபோன் வாங்கி பேசறதுக்கு என்ன உனக்கு?” என்று ராகாவுமே திரும்ப குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.
“ம்ம், அதான் நீ, உங்கண்ணன், உங்கண்ணன் பொண்டாட்டின்னு எல்லாரும் கொஞ்சிட்டு இருந்தீங்களே! நடுவுல நான் எதுக்கு நந்தி மாதிரின்னு தான் பேசலை.” என்றார் முத்துலட்சுமி வெடுக்கென்று.
“அய்யோ, அம்மா! ப்ளீஸ். நிறுத்து, நானே இப்போ தான் வேலை முடிச்சு வந்திருக்கேன். நீ வேற கடுப்பேத்தாத!”
“ஆமாடீ நான் பேசினாலே உனக்கு கடுப்பு தான் ஆகும். “ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட” பேசணும்னு நினைச்சா கூட அது தப்பா?”
“ஆரம்பிச்சுட்டிடா? “ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட” டயலாக்க சொல்லாம உன்னால எதையுமே பேச முடியாதுல! எப்பப் பாரு எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணிகிட்டு”
“ப்ளாக்மெயிலா பண்ணறேன் நான்? ஏன்டீ இப்படிலாம் பேசி என்னை சங்கடப்படுத்தற? ஒரு அம்மாகிட்ட பொண்ணு பேசற மாதிரியா பேசற நீ? ரேணு அவ அம்மாகிட்ட எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறா! அவ ஃப்ரெண்டு தானே நீ, நீ மட்டும் ஏன்டீ இப்படி பாசமே இல்லாம பேசற!”
“ஆதான் உன் மருமக ஆசையா பேசறாளே! அவளையே கூப்பிட்டு உன் பக்கத்துல உட்கார வச்சு கொஞ்ச நேரம் பேச சொல்ல வேண்டியது தானே!” என்றாள் ராகா நக்கலாக. முத்துலட்சுமிக்கு என்ன காரணத்தினாலோ ரேணுவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மகனின் ஆசைக்காக மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். அதிலும், ஏற்கனவே ராகாவும், ரேணுவும் தோழிகள் என்பதால், ராகா இலகுவில் ரேணுவுடன் பொருந்திப் போனாள்.
ராகாவின் தந்தை அழகேசனுக்கு பெரியதாய் விருப்பு வெறுப்பு என்றெல்லாம் பாகுபாடு இல்லை. மகனுக்குப் பிடித்திருக்கிறது. ரேணு நல்ல பெண், அனுசரித்துப் போய்விடும் அமைதியான குணம் என்ற மட்டில் அவருக்கும் ரேணு பிடித்தமான மருமகள் தான்.
“ம்ம்மா… ஏன்மா படுத்தற? என்ன இப்போ பாசமில்லாம நான் பேசிட்டேன். உன் கிட்ட பேசணும்னு தானே நான் ஃபோன் பண்ணேன். அதும் முதல்ல அண்ணாக்கோ, ரேணுக்கோ பண்ணா நீ கோவிச்சுக்குவன்னு தெரிஞ்சு தானே உனக்கு ஃபோன் பண்ணேன்.”
“ஓ, இதையும் ஒரு கடமையா தான் பண்ணியிருக்கியா? முதல்ல என் கிட்ட தான் பேசணும்னு நான் என்ன சட்டமா போட்டு வச்சிருக்கேன்?”
“சட்டம் இல்ல தான், ஆனா அப்படி நான் முதல்ல உனக்கு கூப்பிடலைன்னா நீ எப்படியெல்லாம் சீன் க்ரியேட் பண்ணுவன்னு நீயே ஓரமா போய் உட்காந்து கொஞ்சம் யோசி!” என்றாள் சலிப்பாக.
“சீன் க்ரியேட் பண்ணறேனா? நானா? என்னலாம்டீ சொல்லற நீ? “ஒரு பொண்ணு பெத்த அம்மாகிட்ட இப்படியா பேசுவா?” என்று அதே டயலாகை திருப்பிப் போட்டு பேசலானார். ராகாவிற்கு அவள் அம்மாவிடம் பேசுவது எப்போதுமே ரொம்பவும் ஆயாசம் கொடுத்துவிடும்.
சிறு வயதில் இருந்தே அப்படி தான் ராகாவிற்கு பழக்கமாகியிருந்தது. அரசு பள்ளியில் ஆசிரியராய் வேலை செய்த முத்துலட்சுமி, வீட்டிலும் அதே ஆசிரியர் கோலத்தையே பின்பற்றினார். எதிலும் கண்டிப்பும், கறாருமாய் நடந்து கொள்பவரிடம் இருந்து பிள்ளைகள் இருவரும் கொஞ்சம் தள்ளி இருந்து கொள்ள பழகியிருந்தனர்.
இப்போது ரிடையர்ட் ஆகிவிட்ட பின்பு, திடுமென தினமும் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், கொஞ்ச வேண்டுமென்றெல்லாம் எதிர்பார்த்தால் அது எப்படி சட்டென சாத்தியப்படும்?
ஆனால் அன்னையிடம் முழுவதுமாக பேசாமலும் இருக்க முடியாதே! சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் ரத்தின சுருக்கமாக சொல்லிவிடுவாள். உள்ளுக்குள் அன்னையின் மீது அக்கறையும், பாசமும் இருந்த போதிலும், மற்ற தாய்-மக்கள் போல சிரித்து, சண்டையிட்டும் கிண்டல் செய்து அழுது கட்டிக் கொண்டு என்ற பலத்த பாசப்பிணைப்பான உறவுப் பாலமெல்லாம் இருவருக்குள்ளும் இல்லை எனலாம்.
“சரி, அதை விடு, இன்னைக்கு என்ன சமையல் செஞ்ச? ரேணு செஞ்சாளா நீயா?” என முறுக்கிக் கொள்ளும் அன்னையைப் பேசவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாள்.
முத்துலட்சுமியும் மகளின் முயற்சி புரிந்து, பேச்சை மாற்றி, தினப்படி விஷயங்களை சொல்லத் துவங்கினார். இன்னும் சிறிது நேரம் அன்னையிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தாள் ராகா.
அறையின் உள்ளே வெளிச்சம் புகாவண்ணம் திரை சீலைகளை இழுத்துவிட்டு கட்டிலில் கிடக்க, “டொக்” என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி வந்திருந்தற்கான சமிக்கை செய்தது கைப்பேசி! “ஐய்யோ தூங்க போற நேரத்தில யார்ரா இம்சை” என்று ஆர்வமேயின்றி, கைப்பேசியை எடுத்தவளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சத்யாவிடமிருந்து செய்தி வந்திருந்தது!!
error: Content is protected !!