Skip to content
Post Views: 5,059
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 16
மிருதுவின் குறுஞ்செய்தினைப் பிடித்தம் இல்லாமல் தான் திறந்தாள் ராகா. ஆனால் அந்த நான்கைந்து வார்த்தைகள் கொண்ட செய்தியினைப் படிக்கவும் ராகாவின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் நொடியில் பூத்துவிட்டன. உதட்டின் மேல் படிந்த வியர்வையை புரங்கையால் துடைத்துக் கொண்டாள்.
Advertisement
“டிட் யூ டாக் வித் சத்யா?”
அவ்வளவு தான் மிருதுவின் செய்தி. இதைப் படிப்பதற்குள் ராகாவின் இதயம் தொண்டையில் வந்து அடைத்துக் கொண்டு, திகைக்க வைத்து, திடுமெனக் கட்டிலில் எழுந்து அமர வைத்திருந்தது.
“சத்யாவுடன் நடந்தது சென்றது மிருதுவுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? எங்கேணும் இருவரையும் பார்த்திருப்பாளோ? யாரேணும் ரோட்டில் சத்யாவை அடையாளம் கண்டுகொண்டு மிருதுவிடம் சொல்லியிருப்பார்களோ! இப்போது என்ன செய்ய? சத்யாவிடம் சொல்ல வேண்டுமா?
Advertisement
“மிருதுவுக்கு நானும் நீங்களும் ஒன்றாக நடந்து சென்றது தெரிந்துவிட்டது என்று சொன்னால் அவன் பதில் மொழி என்னவாக இருக்கும்?
Advertisement
“ஒண்ணா ரோட்டில நடந்து தானே போனோம். இதுக்கு ஏன் டென்ஷன் ஆகற?” என்று கேட்பானோ? மேலோட்டமாகப் பார்த்தால் வெறுமனே நடந்து சென்றது மட்டும் தான். ஆனால், என் மனம் அவனுடன் இருந்த நேரங்களை இனிமையானவையாகவும் அழகானவையாவும் காணத் துவங்குகிறதே! அவன் அருகாமைக்காக ஏங்குகிறதே! மனதில் இந்தக் குறுகுறுப்பை வைத்துக் கொண்டு வெளியே நண்பர்கள் போல நாடகமாட இயலுமா?”
ஆனால் இதே போன்ற சின்ன சலனம் கூட எனக்கு ஏற்படவில்லை என்று அவன் சொல்லிவிட்டால்? ஒரு வேளை இயல்பாகத் தான் அவன் நடந்து கொள்கிறானோ? நானாகத் தான் விஷயங்களை பெரிது படுத்துகிறேனோ?
சத்யாவிடம் மிருதுவின் செய்தியைச் சொல்லிவிடலாமா என்ற எண்ணம் தோன்றும் போதே, அவன் அலட்சியத்தையும், தனது சிறுபிள்ளைத்தனமான போக்கைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கும் அல்லவா?
Advertisement
“அதனால என்ன இப்போ பிரச்சனை? சாதாரணமா தானே நடந்தோம்? இதுக்கு ஏன் இவளோ டென்ஷன்? இவளோ சீன்?” என்று தர்க்கம் செய்து, அவளைச் சமாதானப்படுத்த முயல்வானா? அல்லது அவள் போலவே குற்ற உணர்வு கொண்டு, “ஐயோ இப்போ எப்படி சமாளிக்கறது? மிருதுவுக்கு என்ன பதில் சொல்லறது?” என்று கைகளைப் பிசைவானா?
“குற்ற உணர்வு” என்ற வார்த்தை மனதில் பெரிய எழுத்துக்களாக, அடிக்கோடிட்டு தோன்றவுமே ராகாவின் மனம் அவமானத்தில் குறுகியது. “இது தவறு தானே ராகா! என்ன தான் எந்த விபரீதமான பேச்சோ செயலோ இல்லாவிடினும், மிருதுவுக்குத் தெரியாமல் இருவரும் வெளியே சென்றது தவறு தான்” அவன் அழைத்தான் என்றால் உனக்கு எங்கே சென்றது புத்தி? மிருதுவுக்குத் தெரிந்தால் என்னவாகும்? அவள் இதை எப்படி எடுத்துக் கொள்வாள்? என்று ஒரு நிமிடம் கூட நீ ஏன் நினைக்கவில்லை ராகா!
அவனுடன் சிரிப்பதும், பேசுவதும் இயல்பாக இருக்கட்டுமே, நிம்மதி கொடுக்கக் கூடியதாக இருக்கட்டுமே! அவன் இன்னொரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டவன் என்ற விஷயத்தை நீ மறந்திருக்கக் கூடாது.
அலுவலக ரீதியாக, திருமண வேலை தொடர்பாக ஏதேனும் விவாதித்திருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் அந்த விஷயத்தையே மறந்து விட்டவர்கள் போலவும், “அதைப் பற்றி பேசுவதில்லை” என்று தீர்மானித்தவர்கள் போலவும் அல்லவா நடந்து கொண்டீர்கள்! இதோ இப்போது கேள்வி கேட்கிறாள். பதில் சொல் ராகா!
அவனுடன் லஸ்ஸி குடித்த போது இனித்ததல்லவா? அதே இனிப்புடன் மிருதுளாவின் கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல இயலுமா? இதனை யோசிக்க யோசிக்க, வாயினுள் அமிலம் சுரந்தது அவளுக்கு.
இத்தனைக்கும் ஓரடி இடைவெளியில் தானே நடந்து சென்றேன்! ஆனால் பார்ப்பவர் கண்களுக்கு எப்படியிருந்திருக்கும்? அதுவும் சத்யாவைத் தெரிந்தவர்களாக இருப்பின், அவன் காரில் செல்லாது ரோட்டில் சாதாரணமாய் நடந்து போவதே மிகையாக பார்க்கத் தூண்டியிருக்கும் அல்லவா?
அதிலும் அவனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற விஷயம் அறிந்தவர்களாக இருந்து, மிருதுவையும் தெரிந்தவர்களாக இருந்தால்? “சத்யாகூட நடக்கறது மிருது இல்லையே! என்னடா இன்னொரு பொண்ணு கூட நைட்ல வாக்கிங் போயிட்டு இருக்கான்?” என்று தானே எண்ணுவர். அவர்கள் கண்களுக்கு இருவரும் காதலர்கள் போலத் தென்பட்டிருக்குமோ?
“காதலர்கள்!” என்ற வார்த்தையைக் கேட்டதும் மிக லேசாக, “ஐ லவ்வர்ஸா? நாங்களா?” என்று குதுகலத்துடன் எட்டிப்பார்த்த மனதை தட்டி, “ப்ளீஸ் வெளிய வராத! உள்ளையே இரு” என்று நிமிர்த்தினாள்.
“இப்போ மிருதுக்கு என்ன பதில் சொல்ல? என்ன செய்யவென சத்யாவிடம் கேட்டு விடலாமா? மிருது இப்படி செய்து அனுப்பியிருக்கிறாள், என்ன செய்யவென்று கேட்டால் என்ன சொல்லுவான்? அதெல்லாம் உன் பிரச்சனை நீயே கையாண்டு கொள் என்று சொல்லிவிட்டால்?” என்று திக்கி திணறி மீண்டுமாய் குறுஞ்செய்தியினை வாசிக்கவும், தன் மீது தான் அதீதமாக கோபம் வந்தது. தன் பதட்டத்தை எண்ணி அயற்சியான சிரிப்பு எழுந்தது.
அது “வாக்” இல்லை “டாக்” என்று அவள் மரமண்டையில் உரைத்தது.
“டிட் யூ டாக் வித் சத்யா?” என்று தான் செய்தி சொல்லிற்று.
“சத்யாவிடம் பேசினாயா?” என்று தான் கேட்டிருக்கிறாள். பயத்தில் பதட்டத்தில் சத்யாவுடன் நடந்தாயா என்று தவறாகப் படித்தது தான் தான் என்று புரிய, பெருமூச்சுகள் எடுத்துக் கொண்டு தன் மதியீனத்தை எண்ணி முறுவலித்தாள்.
“சே! அதுக்குள்ள எவளோ டென்ஷன் ஆகிட்டேன். பின்ன, குத்தமுள்ள நெஞ்சு தானே உன்னோடது! அதான் குறுகுறுத்திருக்கு. நீ செஞ்சது தப்புன்னு உனக்கே தெரியுது. அதான் பயப்படற!” என்று தன் மனதை சாடினாள்.
மிருதுவின் குறுஞ்செய்திக்கு, பதில் மொழியாக, “இன்னும் பேசவில்லை.” என்று அனுப்ப, மிருது உடனே பதிலளித்தாள்.
“இஸ் ஹி ஆங்கிரி ஆன் மீ? (என் மீது கோபமாக இருக்கிறானா) என்று கேட்டிருந்தாள். “ஆமா, செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, மாரியாத்தா மாதிரி வேப்பிலை பிடிச்சு ஆடிட்டு இப்போ வந்து எங்கிட்ட கேளு”
சரி, அவள் கவலை அவளுக்கு. தன் பிடித்தம் மட்டுமே பிரதானம் என்று சிறு வயது முதலே வளர்ந்து விட்டிருந்தவள். தன் காரியம் நடந்தால் போதும் என்று பிடிவாதம் பிடித்ததால் வந்த வினை என்று சொல்ல முடியாத ராகா, “எனக்கு சத்யா சார் கோபமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் வனிஷாவிடம் சொல்லிப் பேசிப் பார்க்கிறேன்” என்று பதிலளித்தாள்.
“நான் ரெண்டு தடவை அவன் ஃபோனுக்கு கால் பண்ணிட்டேன். எடுக்கலை.” என்ற மிருதுவின் செய்தியைப் படிக்கவும் ராகாவிற்கு சங்கடமாகவே இருந்தது.
“எப்போ கால் பண்ணீங்க?” என்று அனுப்பினாள் ராகா. அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சத்யா அவளுடன் இருந்த போது சில அழைப்புகள் வரத்தான் செய்தன. அதில் ஒன்றிரண்டை எடுத்துப் பேசினான்.மற்றதைத் தவிர்த்திருந்தான். அதில் மிருதுவின் அழைப்பும் ஒன்றோ? அவளது அழைப்பைத் தவிர்த்து விட்டுத் தன்னிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறானா என்று தெரிந்து கொள்வதில் ஒரு வித பெருமை வந்து மனதினுள் சேர்ந்து கொண்டது.
“இப்போ தான் ஒரு டென் மினிட்ஸ் முன்னாடி” என்றாள் மிருதுளா. “பத்து நிமிஷம் தானே ஆகியிருக்கு மிருது மேம். ப்ளீஸ் டோண்ட் பேனிக். எதாவது பிசியா இருப்பாங்க. கண்டிப்பா உங்க கால் பார்த்துட்டு திரும்ப கூப்பிடுவாங்க” என்று மற்ற நேரமானால் மிருதுவிடம் சொல்லியிருப்பாள் தான். ஆனால் ஏனோ இப்போது மிருதுவை சமாதானம் செய்யத் தோன்றவில்லை.
“பத்து நிமிஷத்தில கூப்படலைன்னா, உடனே அடுத்தவங்களைக் கூப்பிட்டு தொந்தரவு பண்ணனுமா? ஒரு அரை மணி நேரம் கூட வெயிட் பண்ண முடியாதா?” காரணமில்லாமல் என்று ஒரேயடியாய் சொல்ல இயலாவிட்டாலும் சிறியதொரு பொறாமையால் கோபம் கொண்டது அவள் மனது. அந்த அர்த்தமற்ற குரோதம் நினைத்து தன் மீதே எரிச்சலும் கொண்டாள்.
“நீங்க மைக்கிட்ட சொல்லுங்க. அவன் சத்யா சாருக்குத் திரும்ப கால் பண்ணிப் பார்க்கட்டும்” என்று சுரத்தில்லாத குரலில் பதிலளித்தாள். எதற்கு முதல் மெசேஜே எனக்குப் பண்ணனும்? என்று தோன்றியது. ஆனாலும், மைக்கும் மெசேஜ் அனுப்பியிருப்பாங்க தான். அவன் ரிப்ளை பண்ணாம போகவும் உடனே எனக்கு அனுப்பியிருக்காங்க” என்ற ஞான உதயம் ஏற்படப் பெற்றாள்.
“ம்ம் பண்ணேன் ராகா! ஃபர்ஸ்ட் அவருக்கு தான் கால் பண்ணேன். பட் அவர் பிக் பண்ணலை”
“மணி பதினொன்னுக்கு மேலே ஆச்சு இல்லையா! தூங்கியிருப்பான் மேம்” என்றாள் சலிப்புடன். ராகாவின் குரலில் மிருது என்ன கண்டு கொண்டாளோ, சட்டென தன் தொனியை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருந்தாள்.
“சாரி, உங்க தூங்கத்தையும் நான் டிஸ்டர்ப் செய்யறேன் இல்ல!” என்று கம்மிய குரலில் மிருது கேட்க, ராகாவால் அதற்கு மேல் மிருதுவின் மீது தன் கோபத்தைக் காட்ட இயலவில்லை.
“அய்யோ! அதெல்லாம் இல்ல மேம். ஏன் டிஸ்டர்பென்ஸ்னுலாம் நினைக்கறீங்க.”
“ப்ளீஸ் கால் மீ மிருது. மேம்லாம் வேண்டாம்.” என்ற மிருதுவின் மீது ராகாவால் எப்படிக் கோபம் கொள்ள இயலும். அவள் பார்த்த வரையில் மிருது நல்ல மனம் கொண்டவளாகவே தோன்றினாள். கொஞ்சம் சிறுபிள்ளைகளிடம் காணப்படும் அடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சுத்த அராத்து அடங்காதவள் போன்று தென்படவில்லை.
சகஜமாக கையைப் பிடித்துப் பேசுவதும், இலகுவாகச் சிரிப்பதும் என மிருது கொஞ்சம் வளர்ந்துவிட்ட சின்னபிள்ளைப் போலவே தோன்றியது.
“ஒ.கேங்க. இனிமே மிருதுன்னே கூப்படறேன்” என்றவள், “மைக் எப்பவும் சீக்கரம் தூங்கிடுவான். நேத்தும் கண் முழிச்சு வேலை பார்த்ததுனால டையர்டா இருக்கும்”
“ம்ம் ஒ.கே ராகா. என் மிஸ்டேக் தான், நேரங்காலம் யோசிக்காம டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”
“ப்ளீஸ் எந்த டிஸ்டர்பென்சும் இல்லை. நான் நாளைக்கு சத்யா சாருக்கு கூப்பிட்டு பேசறேன்” என்றவள், “என்ன பேசணும் மிருது? அதை நீங்க சொல்லலையே” என்றாள் சிரிப்புடன்.
“அதானே! என்ன பேசணும்?” என்று மிருது திரும்ப ராகாவிடமே வினவினாள். அவள் கேள்வி கேட்ட தொனி பாவமாக இருந்தது.
“அதை நீங்க தானே சொல்லணும் மிருது! உங்க மனசில என்ன நினைக்கறீங்கன்னு நீங்க தானே கன்வே பண்ண முடியும்”
“நீங்க சொல்லறது கரெக்ட் தான். சத்யா இப்படி திடும்னு நிச்சயதார்த்தம் தள்ளிப் போடணும்னு சொன்னதும் நான் ரொம்ப டென்ஸ்ட் ஆகிட்டேன். நான் ரொம்ப ப்ளான் பண்ணிட்டேனா அதனால சட்டுனு வேணாம்னு சொல்லவும் ரியாக்ட் பண்ணிட்டேன்.”
“மிருது எனக்கு புரியுதுங்க. பட் நான் அவர் சைட் எடுத்துப் பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! உங்க ஆசையை விட அவரோட எண்ணம் நியாயமானது தானேங்க. தன்னோட சிஸ்டர் நிச்சயத்துக்கு வரணும்னு எதிர்பார்க்கறது தப்பான விஷயம் இல்லையே! மோர் ஓவர், அவங்க அம்மாவும் ….” என்று ராகா இழுவையாகக் கூற,
“புரியுது.” என்று மட்டுமாக பதிலளித்தாள் மிருது. என்னதான் “என்னை மிருது என்று கூப்பிடு! மேம்லாம் வேணாம்” என்று அவள் சொல்லியிருந்தாலும் தன்னுடைய இடத்தில் நின்று கொள்ள வேண்டும் என்று அறிவு சொல்லிற்று.
“ஆமா, இதெல்லாம் தெளிவா கோடு போட்டுக்கோ! லைன் கூட வரையக் கூடாத இடத்தில ரோடு போட முடியுதான்னு பாரு” என்று சத்யாவுடன் தான் அளவாக பழகுவதில்லை என்பதையும் சாடியது மனம். அதை ஓரமாய் புரம் தள்ளிவிட்டு,
“ஆஸ் எ தேர்ட் பர்சன் என்னோட கன்சர்ன் இது. மத்தபடி நீங்க என்ன டிசைட் பண்ணாலும் ஒ.கே” என்று மிருதுவிடம் முடிவை ஒப்படைத்துவிட்டாள் ராகா. “அப்பாடா நம்ம ஃப்ரெஃபெஷனல் வேலையை சரியா பண்ணிட்டோம்” என்று நிம்மதியும் கொண்டாள்.
மிருது பதில் மொழி ஏதும் சொல்லாமல் பெருவிரல் மட்டுமாய் உயர்த்தி தம்ஸ் அப் எமோஜியினை அனுப்பியிருந்தாள். இதற்கு மேல் தான் சொல்ல எதுவும் இல்லை என்று பாவித்த ராகா, கைப்பேசியை பெருமூச்சுடன் அணைத்தாள்.
கட்டிலில் விழுகவும் சத்யாவின் நினைப்பை மீறிக் கொண்டு நித்ராதேவியின் நினைப்பு ஆட்கொண்டது. உடல் அசதியில் தன்னையும் மறந்து உறங்கிப் போனாள்.
*****
அங்கே சத்யா தனது அறையில் அமர்ந்து கணினியை நோண்டிக் கொண்டிருந்தான். “இந்த ஒரு மெயில் மட்டும் அனுப்பிட்டு, ராகா ஆன்லைன்ல இருக்காளான்னு பார்க்கணும்” என்ற எண்ணம் அவன் மனதின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்தது. ஏனென்றால் அன்றைய தினத்தின் கடுப்பும் கோபமும் இந்த இரண்டு மணி நேரத்திற்குள் இல்லாமல் போகச் செய்திருந்தாள் ராகா.
“மந்திரக்காரியா இருப்பளோ! ராட்சஸி” என்ற எண்ணமே திரும்பத் திரும்ப தோன்றியது அவனுக்கு. மாலையில் மிருதுவின் வீட்டில் இருந்து அவன் வெளியேறிய மன நிலைக்கு நிச்சயம், தன் தந்தையிடம் பேசி இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்ற அளவில் தான் வீடு வந்திருந்தான்.
“ஆஃப்டர் ஆல் ஒரு கல்யாண டிரஸ். அதுக்கு இவளோ ஆர்ப்பாட்டமா? என் அக்கா ஃபன்ஷனுக்கு வரணும்னு எதிர்பார்க்கறது என்னவோ கொலை குத்தம் மாதிரி எப்படி ஒரு ரியாக்ஷன். காட் ஐ காண்ட் டாலரேட்!” என்று சலித்துக் கொண்டு, ஆத்திரமாகத் தான் வீட்டிற்கு வந்தான்.
அவனது தந்தை நடராஜன் கம்பெனி விஷயமாக பம்பாய் வரை சென்றிருக்க, உடனடியாக அவரிடம் பேசும் வாய்ப்பு அமையப் பெறவில்லை. தந்தைக்கு அடுத்தபடியாக அவனது அக்கா ஹரிணியின் எண்ணிற்குத் தான் அழைத்தான். அவன் குரலின் தொனியில் இருந்தே என்னவோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள் ஹரிணி. சத்யா தன் மனதின் பாரத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ளத் சற்றே தயங்கினான் தான்.
“சொல்லுடா என்ன விஷயம்! இத்தனை தடவை கேட்கறேன்ல.” என்று ஹரிணி அதட்டலாய் கேட்ட போது கூட,
“இல்லக்கா. கொஞ்சம் லோன்லியா ஃபீல் ஆச்சு. அதான்.. வேற ஒண்ணும் இல்ல. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டனா”
“சாரி கீரின்னு வாயைத் திறந்த அடிச்சு முகரையைப் பேத்துருவேன். உன் கல்யாண நேரத்தில பக்கத்தில நான் இல்லையேன்னு அதுவே எனக்கு ஏக்கமா இருக்கு. நீ இப்படியாச்சும் ஃபோன் பண்ணி பேசறதே எவளோ ஹேப்பினஸ் குடுக்குது தெரியுமா” என்று ஹரிணியும் கண்ணைக் கசக்கினாள். அக்காவிடம் தன் மனதைத் திறந்து ஒரு நொடியில் கொட்டிவிடலாம். புரிந்து கொள்வாள். தந்தையிடம் உதவி கூடச் செய்வாள்.
ஆனால், வாயும் வயிறுமாக இருப்பவளிடம் தன் பிரச்சனைகளைக் காட்டி அவளையும் சேர்த்து பதற்றப்பட வைக்க மனம் ஒப்பவில்லை. அதுவுமில்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தூக்கி எறியும்காரியமும் இதுவல்ல என்று புரிந்தது. அக்காவிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தவனுக்கு, அவனையும் அறியாமல் ராகாவின் முகம் மனதிரையில் மின்னியது.
“ராகா என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இல்ல. என் கூட படிச்சவ இல்ல. என் ரிலேட்டிவ்வும் இல்ல. ரெண்டு மூணு தடவை தானே பார்த்து பழகியிருக்கேன். ஆனா, புலம்பனும்னு நினைக்கறப்போ அவ முகம் ஏன் வந்து போகுது. இன்ஃபாக்ட் என் உயிர் நண்பன் ரிஷி நியாபகம் கூட ஏன் வரலை?” என்று யோசித்தவனுக்கு, தன் மனதின் பாரம் போக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே தோன்றியது அக்கனம்.
ஒரு மனம், ராகாவை அழைக்காதே. அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பாதே என்று எச்சரிக்கை மணி ஒலிக்க விட, அவளைத் தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தான் கைப்பேசியை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவன் குழப்பத்தை தெளிவிக்கும் பொருட்டு, அடுத்த நிமிடம், ராகாவிடமிருந்தே “ஆல். ஒ.கே?” என்ற செய்தி வரவும், அதற்கு மேல் துடிக்கின்ற இதயத்தை தடுக்க அவனால் இயலவில்லை. ஏதோ ஒரு ஊந்துதலில் பேரில் சற்றும் யோசிக்காமல் தான் “ஆல் ஒ.கே?” என்று ராகா அனுப்பிய குறுஞ்செய்தியை சாக்காக வைத்து, அங்கிருந்து பேச்சை வளர்த்து அவளை வெளியே சாப்பிட அழைத்திருந்தான்.
திரும்ப வீடு வந்து சேர்ந்ததும் மனம் அவன் எதிர்பார்த்த நிம்மதியை எட்டியிருந்தது. இத்தனைக்கும் அவன் பிரச்சனைகள் எதையுமே அவளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி பேசவில்லை. விவாதிக்கவில்லை. அவள் சமாதானப்படுத்தவும், பிரச்சனைக்கு தீர்வு சொல்லவும் இல்லை. ஆனாலும் மனம் அடைந்திருந்த நிம்மதி அளவில்லாதது.
இந்த மகிழ்ச்சியின் மத்தியில் சத்யா தன்னைத் தொலைத்திருக்க, திடுமென மிருதுவின் அழைப்பு வரவும் உண்மையில் தடுமாறிப்போனான். மனம் குன்றிப் போயிற்று. “சே! என்ன செய்து கொண்டிருக்கிறேன்! இது எவ்வளவு பிசகு! இரண்டு பெண்களுக்குமே துரோகம் விளைவிப்பது போல அல்லாவா ஆகிறது!” என்று குடைந்தெடுத்த மனதைச் சமாளிக்கும் வழி தெரியாமல், இந்த கனத்த சூழலில் கைப்பேசியையும் எடுக்கப் பிடிக்காமல் மெளனம் காத்தான்.
இரு முறை அழைப்பு வந்தும் சத்யா எடுக்கவில்லை. “தூங்கிட்டேன்னு நினைச்சுக்கட்டும். எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்” என்று மிருதுவுடன் பேசுவதை ஒத்தி வைத்தான்.
அடுத்த தினம் காலையில் அவன் எழுந்த போதே மிருதுவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “நான் அப்படி கல்யாணம் வேணாங்கற அளவுக்கு இந்த விஷயத்தை பெருசு பண்ணியிருக்கக் கூடாது. ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி சத்யா. நீங்க சொன்ன மாதிரியே நிச்சயதார்த்தம் ஃபன்ஷனை உங்க அக்கா எப்போ வராங்களோ அப்போ வச்சுக்கலாம். ஐம் சாரி அகெயின்” என்று செய்தி அனுப்பியிருந்தாள்.
ஒரு முறைக்கு இரண்டு முறை குறுஞ்செய்தியைப் படித்த பின்பும் சத்யாவிற்கு மிருதுவின் மனமாற்றம் குறித்து மகிழ்ச்சி அடைவதா வருத்தம் கொள்வதா என்று தெரிந்த பாடில்லை. குழப்பமான மன நிலையுடனேயே அன்றைய தினத்தைக் கழித்தவன், மாலை வரையிலும் பொறுத்துப் பார்த்து, தன் மனதை அடக்க பல வழிகளை ஆலோசித்துத் தோற்றுப் போய், இறுதியாக அவன் நிம்மதியைத் தேடி ராகாவின் எண்ணைத் தொடர்பு கொண்டான்.
error: Content is protected !!