Skip to content
Post Views: 6,114
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 27
சத்யாவிற்கு ராகா தன்னை விட்டுச் செல்லும் முடிவில் இருப்பாள் என்று தெரிந்திருக்கவில்லை. இதை முன்னரே சிந்தித்திருந்தால், தனது கஷ்டங்கள் குறித்து இப்படி வெளிப்படையாய்ப் பகிர்ந்திருக்க மாட்டான்.
Advertisement
“ஏன் நான் உடனே பேசலை, ஏன் கார்ல இருந்து இறங்காம உட்கார்ந்திருந்தேன். இதுக்கான சரியான காரணங்கள் சொல்ல நினைச்சி தான் என் மனசில இருந்த விஷயத்தைப் பகிர்ந்துகிட்டேன்” என்று பதற்றம் கொண்டவன், ராகாவைத் தொடர்ந்து சொல்ல நினைத்தான்.
ஆனால் ராகாவின் திடமான பேச்சும், அதை விடவும் அவளது அர்த்தமான புன்னகையும், அவனைத் தடுத்துவிட்டிருந்தது. அவள் கூறிய விஷயங்களைப் பற்றி யோசித்து ஒரு முடிவை எட்டாமல் திரும்பவும் அவளைத் தொடர்ந்து போய் மட்டும் என்ன பேசுவது? என்ன சமாதானம் சொல்ல முடியும்?
அதற்கு முதலில் நான் தெளிவாய் முடிவெடுக்க வேண்டும் அல்லவா? மிருதுவுடன் பிரச்சனைகள் அற்ற திருமணமா? அல்லது ராகாவுடன் நிம்மதியான வாழ்வா? எது தேவை என்று நான் தேர்ந்தெடுக்காமல் ராகாவிடம் இனி எப்படிப் பேசுவது? என்ற தயக்கத்தில் அமைதியாகிப் போனான் சத்யா.
Advertisement
அவனது தயக்கத்தின் பெயர் “பயம்” என்று அவன் உள்ளுணர்வுக்கு என்றோ தெரியும். அதைக் கண்ணாடி போலப் படித்து, அவனுக்குப் பாடம் நடத்திவிட்டுச் செல்லும் ராகாவின் மேல் அவன் கொண்டிருந்த பிரேமை அந்த நொடி இன்னமும் அதிகமாகியது.
Advertisement
தன் அக்காவிற்கு அழைத்து நடந்தவற்றை எல்லாமே மறைக்காமல் ஒப்பித்து முடித்தான். அவன் எதிர்பார்த்தது போல ஷரிணி, “அடடா அவ ரொம்ப நல்ல பொண்ணா தெரியறா! அவளைப் போய்ச் சமாதானப்படுத்து சத்யா! அவ ஒண்ணும் உன் பணத்துக்காக உன் பின்னாடி வந்தவ மாதிரி தெரியலை சத்யா! போ போய்ச் சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வா! அப்பாகிட்ட நான் பேசி சம்மதம் வாங்கறேன்” என்று சினிமாத்தனமாக ஒரே நிகழ்வில் மனமாற்றம் கொண்டு பேசிவிடவில்லை.
பொறுமையாக நடந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஹரிணி. “நல்ல பொண்ணு தான். இருந்துட்டு போகட்டும்! நீ மிருது கிட்ட இதைப் பத்திலாம் மூச்சு விடாத! நான் அப்பாகிட்ட பேசிட்டேன், வீட்டளவில இப்போதைக்குப் பாக்கு வெத்தலை மாத்திகலாம்னு சொன்னார். நாளைக்கு நான் 6த் மந்த் ஸ்கேனுக்கு ஹாஸ்பிடல் போறேன். ட்ராவல் பண்ணலாம்னு சொல்லிட்டா, அடுத்த வாரம் டிக்கெட் போட சொல்லறேன். நீ ரொம்பக் குழம்பிக்காத!” எனவும், சத்யாவிற்குச் சப்பென்று ஆகியது.
“என்ன ஹரிணி இப்படிச் சொல்லற? ராகாவை நான் சமாதானப்படுத்த வேணாமா? புரியாம பேசற ஹரிணி!”
Advertisement
“அவ என்ன கோவிச்சுட்டா போனா? நீ சொல்லறதை வச்சுப் பார்த்தா தெளிவா பேசிட்டு தான் போயிருக்கா! அவளை என்ன நீ சமாதானம் பண்ணறது? தானாவே போயிட்டாளேன்னு நினைச்சு எனக்கு அப்பாடான்னு இருக்கு. அவ வந்ததில இருந்து எவளோ பாடு படற நீ, பாவம்? எப்படியும் அடுத்த வாரத்தில நான் வந்திடறேண்டா. நீ டென்ஷன் ஆகாத” என்று ஹரிணி கூறியதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
மேலே எதுவும் வாதாடாமல் அப்போதைக்குக் கைப்பேசியை அணைத்துவிட்டான். திரும்பவும் ராகாவைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று பேராவல் தோன்றியது. ஆனால் என்ன பேசுவது என்ற கேள்வி விஸ்வரூபமெடுக்க, சத்யா அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்.
இந்தத் தடுமாற்றமெல்லா சத்யாவிற்கு மட்டும் தான். ராகா அடுத்தடுத்து செய்ய வேண்டியவை பற்றி மிகவும் தெளிவாக யோசித்தாள். என்னவோ ஒரு விடுதலை உணர்வு அவள் மனதை சிறகடிக்க வைத்தது.
வனிஷாவைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. மைக்கிலின் பார்வைகள் என்ன நினைக்கின்றன என்று யோசிக்கத் தேவையில்லை. மிருதுளாவைச் சந்திக்கையில் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. அடுத்தத் தினமே பெட்டியைக் கட்டிக் கொண்டு பெங்களூர் புறப்பட்டாள்.
“ஏ, எதும் பிரச்சனையில்லையே! அன்னைக்குச் சத்யாவைப் பார்த்துட்டு வந்ததும் ரொம்ப ஃப்ரீயா சுத்திட்டு இருக்க? ஆர் யூ ரியலி ஆல்ரைட் மாலி?” என்று வினவிய ரேணுவை இறுகக் கட்டிக் கொண்டவள்,
“என் லைஃப்ல லவ் ஃபெயில்யர் இல்லையேன்னு நான் வருத்தப்படவோ, நான் சோகப்பாட்டு பாடுனதே இல்லைன்னு ஃபீல் பண்ணவோ அவசியமிருக்காது” என்று கண்களைச் சிமிட்டிக் கொண்டாள்.
“ஏ! நான் சீரியஸா கேட்கறேன். உடனே ஊருக்கு போணுமா மாலி? அங்க நெக்ஸ்ட் வீக் சத்யாவோட என்கேஜ்மெண்ட்டுக்கு நீ வேலை பார்க்கற மாதிரி ஆகிடும். பெட்டர் என்கேஜ்மெண்ட் முடிஞ்சு போவேன். உனக்கு இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் ஆகும்”
“அதைப் பத்தி நான் யோசிக்காம இருப்பேன்னு நினைச்சியா ரேணு? கொஞ்சமே கொஞ்சம் ஹர்டிங்கா தான் இருக்கு ரேணு. ஆனா சரியாகிடுவேன். இந்த, ஒரு மாதிரி மனசு பாரமா, அதே நேரம் விடுதலை அடைஞ்ச மாதிரியான உணர்வு, நல்லா இருக்கு. எல்லாமே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி தானே!” என்றவள் அடுத்த வாரம் நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயாரானாள்.
அலுவலகம் சென்ற தினம், நேரே நடாஷாவைச் சந்தித்துப் பட்டும்படாமல் நடந்த விஷயத்தின் சாராம்சத்தை மட்டும் உரைத்தாள். நடாஷா மும்பை, லண்டன் என்று பயின்றவள், உலகம் சுற்றியவள். அதனால் இந்தச் சிறிய ஈர்ப்பை ஒரு பெரும் பிரச்சனையாகக் கையாள மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது ராகாவிற்கு.
ராகா தன் மீதான தவறை எந்த வெளிச்சாயமும் பூசாமல் அப்படியே ஒப்புக் கொண்டாள். “நட்ஸ், ஐ நோ திஸ் இஸ் நாட் எதிகல். அவன் பேசினது பழகினது எல்லாமே பிடிச்சிருந்தது. முதல்ல ஜஸ்ட் ஹார்ம்லெஸ் ஃப்ளர்ட்னு தான் நானும் பேசினேன். பட், வீ ஹேட் ஃபீலிங்க்ஸ் ஃபார் ஈச் அதர்” என்று அதிராமல் செய்தி போலவே கூறினாள்.
ராகா எதிர்பார்த்ததைப் போலவே நடாஷா தாம்தூமென்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ராகா கூறிய விஷயம் என்ன தான் ஷ்ருஷ்டீஸை பாதிக்கும் என்ற போதும் , அது அவர்களது பர்சனல் என்று ஏற்றுக்கொள்ளும் நாகரீகம் வாய்த்தவள்.
“சோ, வாட் ஹேவ் யூ டிசைடட். நெக்ஸ்ட் வீக் அவங்க என்கேஜ்மெண்ட். வீட்டளவில சின்னதா, வெரி க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் வச்சு தான் ஃப்ங்ஷன். பட், நாம தானே ஹேண்டில பண்ண போறோம். கேன் யூ மேனேஜ் இட்?” என்று புருவம் உயர்த்தி வினவினாள். ராகாவிற்கு உடனே அவன் நிச்சயதார்த்தம் குறித்தது போல நடைபெறும் என்ற செய்தி மனதை வாட்டியது தான். ஆனால் அவனுக்காகத் தன் வேலையை உதர முடியுமா என்ன?
“ஐ திங் ஐ கேன் ஹேண்டில்” என்று செய்வதறியாது சற்றே கலக்கத்துடன் நடாஷாவிடம் சொல்ல, நடாஷா தன் குதிரைவால் முடியை அழகாய் இருபக்கமும் பலமாக ஆட்டினாள்.
“நோ! ஐ டோண்ட் வாண்ட் டு ரிஸ்க் இட். உன்னையும் நீ ரொம்பக் கஷ்டப்படுத்திக்குவ. சுத்தி இருக்கறவங்க கண்ணுக்குத் தப்பா படும். அண்ட், வனிஷா,மைக்கிலுக்கு ஏற்கனவே இதெல்லாம் தெரியும்னு சொல்லற! சோ, அவங்க எதவாது பேசி உன்னை ட்ரிகர் செய்ய வாய்ப்பிருக்கு” என்று உண்மை நிலவரத்தைப் பேசினாள்.
“ஐ வில் டூ ஒன் திங். நீ இந்த என்கேஜ்மெண்ட் ப்ரிபரேஷன்ல கலந்துக்க வேண்டாம். உனக்குப் பதிலா, நான் பார்த்துக்கறேன். நீ அந்தச் சீரியல் ஆக்டர் ஷமீலாவோட பேபி ஷவர் ஈவெண்ட்டுக்கு ப்ரொடெக்ஷன் வர்க் பாரு.” என்று தக்க தருணத்தில் கைகொடுத்திருந்தாள்.
“தேங்க்யூ சோ மச் நட்ஸ். தேங்க்யூ” என்று மனதார நன்றி தெரிவித்த ராகா, வனிஷாவிடமும், மைக்கிடமும் நடந்தவற்றை ஓரளவு பகிர்ந்து கொண்டாள். வனிஷாவிற்கு இனி ராகா பற்றிக் குத்தலாய் பேச முடியாத என்ற சின்ன ஏக்கம் இருந்திருக்க வேண்டும். பலமாய்த் தலையைத் தலையை ஆட்டி ராகா கூறியவற்றைக் கேட்டுக் கொண்டாள்.
மைக்கில் மட்டும், ராகா தனியாக இருந்த நேரம், “ஆர் யூ ரியலி ஒ.கே ராகா? இல்ல, சும்மா வெளிய சிரிச்சுட்டு உள்ளூர ஏங்கறியா?” என்று வினவினான். அவனைப் பார்த்து அர்த்தமான புன்னகையைச் சிந்திய ராகா, “வருத்தம் இருக்கு. பட். இட்ஸ் ஒ.கே. கொஞ்ச நாள்ல சரியாகிடுவேன். அப்படியே உயிருக்கு உயிரா ரெண்டு பேரும் நேசிச்சோம்ங்கற மாதிரியான லவ் இல்லையே இது. ஒரு நல்ல கம்பானியன்ஷிப் இருந்துக்சு. சோ, லைஃப் இப்படி இருந்தா நல்லா இருக்குமேங்கற எண்ணம். அது கிடைக்கலையேங்கற டிஸப்பாயீண்மெண்ட். தட்ஸ் ஆல்”
“நீ உன்னை ஹேண்டில் பண்ணிக்கறது இஸ் டூ குட். சமாதானப்படுத்த அவசியமே இல்லாம, நீ ரியாலிட்டியை புரிஞ்சுக்கற. சிட்யுவேஷனுக்கு எதிரா யோசிக்கறப்போ தான் நாம டென்ஷன் ஆகி, கோவப்பட்டு வருத்தப்படுவோம். சூழ்நிலையைப் புரிஞ்சு, அதை மாத்த முடியாதுன்னு அக்சப்ட் பண்ணிகறது மாதிரியான ஒரு புத்திசாலித்தனம் வேற எதுவும் இல்லை. இஃப் யூ நீட் எனிதிங் ஜஸ்ட் ஆஸ்க். ஒ.கே.” என்று ராகாவின் தோளை இதமாய் அழுத்திவிட்டுச் சென்றான் மைக்கில்.
முதல் இரு தினங்களும் மிருதுளாவின் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் பற்றி விவாதிக்க, வனிஷா, மைக்கிலுடன் நடாஷா சென்றிருந்தாள். “ராகா ஏன் வரவில்லை?” என்று மிருதுளா இரண்டு மூன்று முறை கேட்டதாகவும், “ஷி இஸ் பிஸி வித் அனதர் வர்க்” என்று கூறிய நடாஷாவிடம்,
“நாளை கண்டிப்பாக ராகாவையும் அழைத்து வர வேண்டும்” என்று மிருதுளா கேட்டுக் கொண்டதாகவும் வனிஷா மூலமாக ராகா தெரிந்து கொண்டாள். திரும்பத் திரும்ப இதே விஷயத்தைப் பேசினால் நடாஷா ஆத்திரம் கொள்ளக் கூடும் என்று தெரிந்து, ராகா, தானாகவே மிருதுளாவைத் தொடர்பு கொண்டு பேசினாள்.
அவள் தந்தையின் உடல் நிலை குறித்த சம்பிரதாயமான விசாரனைகளை முடித்துக் கொண்ட ராகா, “நான் உங்க என்கேஜ்மெண்ட் வேலையைப் பார்க்க வரலைன்னு நீங்க வருத்தப்பட்டதா நட்ஸ் சொன்னாங்க. எனக்குக் கொஞ்சம் ஹெல்த் இஸ்ஷூஸ் இருக்கு மிருது. அல்சர் இருக்கறதால டயமுக்கு சாப்பிடணும்னு டாக்டர் ஸ்டிரிக்ட் ஆடர். அதான் வெளிய அலையற வேலை இருந்தா என்னால சரியான டைமுக்கு சாப்பிட முடியறதில்லை. சோ, ஒன் மன்ந்க்கு டெஸ்க்ல உட்கார்ந்து பார்க்கற வேலைய நடாஷாகிட்ட கேட்டு வாங்கியிருக்கேன்” என்று நம்பும் படிக்கே ஏற்ற இறக்கத்துடன் கூறினாள் ராகா.
உடல் நலம் குறைகிறது என்று சொல்லிவிட்டதால் அதற்கு மேல் மிருதுளா பதில் சொல்ல எதுவும் இல்லாமல் போனது. “டே கேர். மேரேஜ்குள்ள உங்க ஹெல்தை கேர் பண்ணிகிட்டு வந்துடணும்.” என்று அன்பான கட்டளை பிறப்பித்தாள்.
மிருதுவுடன் பேசி முடித்த பின்பு தான் ஒரு முழு வட்டமும் செய்தி சொல்லிமுடித்த திருப்தி உண்டாயிற்று ராகாவிற்கு. திரும்பச் சத்யா தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பான் என்று ராகா கொஞ்சமும் கருதவில்லை. ஏனென்றால் அவள் கேட்ட எந்தக் கேள்விக்குமே அவனிடம் பதில் இல்லை.
மிருதுளா – சத்யசாய்ராமின் நிச்சயத்திற்கு, சத்யாவின் அமெரிக்க அக்கா, வரப்போவதாகவும், அவள் வந்த அடுத்தத் தினம் நிச்சயதார்த்தம் என்றும் முடிவு செய்திருப்பதாய் வனிஷா, மற்றும் மைக்கில் மூலம் தெரிந்து கொண்டாள் ராகா.
அவ்வபோது இவளைச் சீண்ட வேண்டும் என்றே வனிஷா “சத்யா சார் வீட்டில தான் நிச்சயதார்த்தம். ரெண்டு ஃப்ளோர் இருக்கப் பெரிய வீடு அது. அங்க தான் ஃபன்ஷன். அவளோ பெரிய ஹால் தெரியுமா? தாமரை பூ அண்ட் மைல்ட் க்ரீன் தீம் சூஸ் பண்ணியிருக்காங்க. மிருது லெஹங்கா கொஞ்சம் டார்க் ஷேட் தாமரை கலர். அதே கலர்ல மேட்சிங் ஷர்வானி சத்யா சாருக்கு எடுத்திருக்காங்க.”
“அப்பறம்! வைர நெக்லஸ், ஆரம், வளையல், கம்மல்னு ஒரு ஒன்னரை கோடிக்கு நிச்சயதார்த்ததுக்கு மிருதுளாவுக்குக் கிஃப்ட் பண்ண போறாங்களாம்” என்று ராகா எதுவுமே கேட்காவிடினும், அங்கே நடக்கும் விஷயங்களைச் சொல்லியே தீருவது என்ற முனைப்பில் பேசுவாள்.
மைக்கில் இருந்தால் அவன் வனிஷாவை கடிந்து கொள்வான். ராகா எதுவும் கண்டு கொள்ளாமல் கதை கேட்பாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் பெரிதாய் காட்டிக் கொள்ளாது “ம்ம் மேல சொல்லு” என்பது போலவே சட்டை செய்யாமல் அமர்ந்திருப்பது வனிஷாவை வெறுப்பேற்றும். ஆனாலும் அதில் ஒரு அல்ப சந்தோஷம்.
இப்படியாக, ராகா பெங்களூர் வந்து சேர்ந்த இரண்டு வாரத்தில், சிறிய அளவில் என்ற போதும், மிருதுளா – சத்யசாய்ராமின் நிச்சயதார்த்தம் விமரிசையாகவே நடந்தேறியது.
நடந்த வைபவத்தில் சத்யாவின் மன நிலை தான் தவிப்பாக இருந்தது. ராகாவைச் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் தான் எடுக்கப் போவதில்லை என்பதையும், தான் என்ன செய்தாலும் ராகா அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டிருந்தான் சத்யா. அதனால் ஹரிணி வந்த உடனே அவளிடம் இதைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தான்.
“நீ சொல்லறதே புரியலை எனக்கு! அந்தப் பொண்ணை நீ எதுவும் ஏமாத்தலை. உன் நிலவரம் சொன்ன, அவளே தானே போயிட்டா. அதுவுமில்லாம, அன்னைக்கு ரெஸ்டரெண்டிலையும் அவ உன்னைவிட்டு பிரிஞ்சு போற ஐடியால தானே இருந்திருக்கா. அப்பறம் என்னடா?”
“ஹரிணி! எனக்கு உறுத்தலாவே இருக்கு. ஒரு மாதிரி முழுசா சமாதானமே ஆகலை எனக்கு. மிருதுகூட என்னோட லைஃபை இமேஜின் பண்ணிப் பார்க்கவே முடியலை. எனக்கு ராகா தான் பெஸ்ட்னு தோணிட்டே இருக்கு!” என்று சத்யா சொல்லி முடிக்கும் முன்னர், அவன் தோளில் பட்டென்று ஒன்று வைத்திருந்தாள் ஹரிணி.
“அறிவிருக்கா உனக்கு? ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம் முடியப்போகுது. இன்னமும் ராகா தான் பெஸ்ட்னு பாட்டு பாடின அப்பறம் விபரீதமா போயிடும் பார்த்துக்கோ! மரியாதையா மிருதுவை கல்யாணம் பண்ணிகிட்டு ஒழுங்கா பிசினஸ் பார்க்கற வழியை மட்டும் யோசி”
“இல்ல, ஹரிணி உனக்குப் புரியலை. மிருது கூட எனக்கு எந்தக் கெமிஸ்ட்டிரியும் இல்ல. அன்னைக்கு ஷாப்பிங் மால்ல, ட்ரெஸ் பர்சேஸ் முடிச்சுட்டு என்னைக் கட்டி பிடிச்சா, பட், எனக்குத் திரும்பக் கட்டிக்கணும்னு கூடத் தோணலை.அது கூட பரவாயில்ல, அவ கையில இருந்து மெதுவா பிரிஞ்சு வரத் தோணிச்சு ஹரிணி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்று பரிதவிப்பாய் சொன்னவனைச் சற்றே ஆயற்சியாகத் தான் பார்த்தாள் ஹரிணி.
“சத்யா! நீயா கெமிஸ்டிரி இல்ல, வர்க அவுட் ஆகாதுன்னு நினைச்சுக்கற. உண்மையிலையே மிருது ரொம்ப நல்ல பொண்ணுடா. அதுவுமில்லாம, நீ சொல்லறியே அந்தப் பொண்ணு ராகா, உனக்காக வெயிட் பண்ணறான்னா கூட நீ அவளுக்காக யோசிக்கறதும், ஃபீல் பண்ணறதும் சரி. ஆனா அவ உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டாளே! அப்பறமும் ஏண்டா இப்படி நடந்துக்கற?”
“ஹரிணி அவ பிடிக்கலைன்னு சொன்னது என்னோட காதலை இல்ல. முடிவை நீ எடுன்னு அவ முன்னாடி நான் கொண்டு போய் நீட்டினதை பிடிக்கலைன்னு சொன்னா! உனக்கு என்ன தேவையோ அதை நீயே முடிவெடுன்னு சொல்லிட்டுப் போனா!”
“அப்படியே நீ சொன்ன மாதிரியே இருக்கட்டும். இப்ப ஒரு பேச்சுக்கு நான் கேட்கறேன். நீ இந்தக் கல்யாணத்தை ராகாவுக்காக நிறுத்திட்டன்னே வச்சுக்கோ! அதனால அந்தப் பொண்ணு ராகா உன்கிட்ட திரும்ப வந்துடுவாளா? நீங்க சேர்ந்துருவீங்களா சொல்லு?”
“அது, அது தெரியலை ஹரிணி. ராகா என்கிட்ட திரும்பி வந்துடுவாளான்னுலாம் தெரியலை. ஆனா எங்களுக்குள்ள இருந்த அண்டர்ஸ்டான்டிங், கம்ஃபர்ட் எதுவுமே எனக்கு மிருதுகிட்ட இல்ல.”
“அதெல்லாம் போகப் போகத் தான் வரும். ஒரே நாள்ல நீ ராகா கூட ஃப்ரெண்டாகிட்டியா? இல்லை தானே! மிருதுவும் நல்ல பொண்ணு. அவ கூடவும் பேசி, பழகினா உனக்கு மிருதுவையும் பிடிக்கும். முன்ன, இந்த ராகாகூடப் பழகறதுக்கு முன்ன, மிருது மேல நீ எந்தக் கம்பிளைண்ட்ஸுமே சொல்லலை. அதனால தான் சொல்லறேன். நீயா தப்பு தப்பா யோசிக்காத. மிருதுவோட அப்பா ஹெல்த் இப்போ தா கொஞ்சம் பெட்டர் ஆகுது. அதைக் கெடுத்துடாத!”
“ஏ, அவங்க அப்பா ஹெல்த்துக்காக நான் என் நிம்மதியை இழக்கணும்னு சொல்லறியா”
“அடடா, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நல்லா பேசறடா. இதெல்லாம் யாரு அந்த ராகாகிட்ட இருந்து கத்துகிட்டியா?” என்று எங்கே குத்தினால் வலிக்குமோ அங்கே நயமாகக் கத்தி சொருகினாள் ஹரிணி. ராகாவின் மீது அவதூராகத் தன் தமக்கை பேசியது அன்று ராகா சொன்னதை மீண்டும் நினைவூட்டியது.
“உங்க அக்கா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க! உங்க அப்பா ஒத்துக்குவாரா?” என்றெல்லாம் இதை வைத்துத் தான் ராகா சொல்லியிருப்பாள் என்று புரிந்தது.
அதன் பின்னர் ராகாவைப் பற்றிய பேச்சை ஹரிணியிடம் எடுக்கவேயில்லை சத்யா. நிச்சயதார்த்தம் குறித்த எந்த விதாதத்திலும் ராகாவின் தலையீடு இருக்கவில்லை. நடாஷாவே தன் மேற்பார்வையில் அனைத்து வேலைகளையும் செய்திருந்தாள்.
நிச்சயதார்த்த நாள் அன்று கூட, சத்யாவின் கண்கள் கூட்டத்தில் ராகா எங்கேணும் தென்படுகிறாளா என்று தேடியது. ஆனால் அவன் ராகா அவன் வாழ்வை விட்டு முற்றிலும் விலகிவிட்டிருந்தாள்.
*******
ஆறு மாதங்கள் கழித்து.
சத்யா அந்தச் சைக்கேர்ட்டிஸ்ட் டாக்டரின் க்ளினிக்கில் இருந்து ஒரு சிறிய துள்ளலுடன் இறங்கி தன் காரில் ஏறினான். கையில் பிடித்திருந்த அந்த அழகிய திருமண அழைப்பிதழ்களைக் காரின் பக்கவாட்டு இருக்கையில் வைத்துவிட்டு, காரினை உயிர்ப்பித்தான்.
ஆம், ராகாவைப் பிரிந்த விஷயத்தையும், தன் குழப்ப மனநிலையை மாற்றிக் கொள்ளவும் அவன் கடந்த ஆறு மாதமாகக் கவுன்சிலிங் செல்கிறான். அதன் பலனாக, அவன் மருத்துவர் பரிந்துரைத்தது போல, “வாழ்வின் அதே அத்தியாயத்தில் தேங்கிக் கிடப்பதும், முடிந்து போன பக்கங்களைத் திரும்பிப் பார்த்துப் பார்த்து ஏங்குவதும் இத்தகைய குழப்பான மனநிலையை உண்டாக்கும்” என்று தெளிவு கிடைத்திருந்தது.
அவன் மருத்துவர், மும்மது ஆரிஃப், அவன் மனதை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த விதமான அறிவுரைகளை வழங்கியிருந்தார். அவன் நண்பன் ரிஷியின் பரிந்துரையின் படி வேண்ட வெறுப்பாகத் தான் அவன் க்ளீனிக் வருவான்.
அதுவும் வந்த புதிதில், “ஏ, லவ் ஃபெயில்யிருக்குலாம் எதுக்குடா கவுன்சிலிங். நான் என்ன டெண்ட் படிக்கற பையனா? இந்த வயசில என்னை எதுக்குடா “ஒரு செடியில ஒரு பூ தான் பூக்கணும் அவசியம் இல்ல. ஒரு நாள் நமக்குப் புடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கை மாறும்னு” டயலாக் கேட்க வைக்கற?” என்ற கடுப்புடன் தான் வருவான்.
ஆனால், போகப் போக, அவனுக்குத் தன் மனதின் பாரம் பெருமளவு குறைவது மட்டுமல்லாது, ராகா பிரித்துச் சென்ற போது அவள் மனது எப்படி யோசித்திருக்கும் என்ற கண்ணோட்டத்தையும் காட்டிக் கொடுத்தது.
“நீங்க முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதின்னு உங்களைக் காட்சிபடுத்தியிருக்கும். ஆனா, நீங்க எல்லா விஷயத்திலேயும் அப்படி இல்லைன்னு நீங்க மற்ற விஷயங்கள் பேசறதை வச்சு கண்டு கொள்ளலாம் மிஸ்டர். சத்யா. புக்ச், ஸ்போர்ட்ஸ், ஃபேவரட் திங்க்ஸ் இப்படி உங்களுக்குத் தேவையான விஷயத்தில நீங்க திடமா தான் இருக்கீங்க. ஆனா, இந்த விஷயத்தில உங்க மனசே ரெண்டா தான் இருந்திருக்கு ஆரம்பம் முதலே”
“இதுக்கு சைக்காலஜிக்கல் ரீசன் உங்க அம்மாவோட டெத் தான். அவங்க உயிரோட இருந்தா இப்போ எப்படி இருக்கும், அப்படியிருக்குமா, என்ன சொல்லியிருப்பாங்க. எப்படி நடந்துகிட்டிருப்பாங்கன்னு இறந்து போன அவங்களை உயிரோட இருந்தா என்ன பண்ணியிருப்பாங்கங்கற வளையத்துள்ள கொண்டு வரப் பார்க்கறீங்க. அக்சப்ட் ஹர் டெத். அந்த வலியை ஏத்துகிட்டு வாழப் பழகிக்கணும்”
“மே பீ, நீங்க, உங்க ஃபியான்சி கூட மேரேஜ் பிக்ஸ் ஆகறதுக்கு முன்னாடி உங்க லவர் ராகாவை மீட் பண்ணியிருந்தா அப்போ நீங்க இவளோ தயங்கியிருக்க மாட்டீங்க. ஏன்னா இது ரைட் ராங் இரண்டுக்கும் மத்தியில் துடிக்கற மனநிலை. “
“நீங்க பண்ணறது மாரலா தவறுன்னு உங்களுக்குத் தெரியுது. ஆனா, உங்க மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது.” என்று அழகாய் பேசி அவனது மனதை அவனுக்கே புரியவைத்திருந்தார் டாக்டர். ஆரிஃப்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவன் அந்த அந்தத் தினத்தை மட்டுமே எதிர்நோக்கும் படிக்கு மனதைத் தயார் படுத்தியிருந்தான். “டேக் ஒன் டே அட் எ டைம். நாலு மாசம், நாலு வாரம், ஏன் நாலு நாளைக்குப் பின்னாடி கூட நீங்க யோசிக்கக் கூடாது. இன்றைய ஒரு நாள். இந்த ஒரு நாள் தான் உங்க டார்கெட். இதைப் பத்தி மட்டும் நல்ல விதமா யோசிங்க. உங்க இந்த நாளோட கடமைகளை மட்டும் சரிவரச் செய்து முடிக்கணும்னு முயற்சி பண்ணுங்க. போதும்” என்று தேற்றியிருந்தார்.
அதன் படிக்கே நடந்து கொண்ட சத்யாவின் மனதில் இந்த ஆறு மாத காலத்தில் பெரும் நிம்மதி உண்டாகியிருந்தது. அதிகமாக மனதை நாளை என்ன என்ற கவலை கடித்துத் திங்காமல், அன்றைய ஒரு தினத்தை உபயோகமாகக் கழிக்கப் பழகியிருந்தான்.
ராகா பற்றிய நினைப்புகள் சுத்தமாக எழவேயில்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவள் நினைவு வரும் போதெல்லாம், “அவள் உன் வாழ்வில் இருக்க வேண்டும் என்றிருந்தால் அது நிறைவேறும். அன்றைய தினத்தில அவள் நினைவு வரும் போது, இதை மட்டும் எண்ணிக் கொள்” என்று மருத்துவர் கூறிய ஆலோசனையை அப்படியே கடைபிடிப்பான். நாளடைவில் அது பழக்கமாகவே போயிற்று.
அடுத்து வந்த மூன்று மாதத்தில் ஹரிணிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்க, அந்த மகிழ்ச்சியில் நாட்கள் விரைவாய் கழிந்தன. குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இரு வீட்டினரும் சேர்ந்து முடிவெடுத்து திருமண நாளை குறித்திருந்தனர். அதன் பின்னர் வந்த மூன்று மாதங்களும் சடுதியில் கழிந்திருக்க, இதோ இன்னும் நான்கு தினங்களில் திருமணம் என்னும் அளவிற்கு நாட்கள் வேகமாக ஓடியிருந்தன.
அன்று, தன் மருத்துவருக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்கத் தான் சத்யா வந்திருந்தான். அழைப்பிதழை நீட்டிவிட்டு, “கல்யாணம், மால்தீவ்ஸ்ல டாக்டர். நீங்க கண்டிப்பா வரணும். அப்படி முடியலைன்னாலும், இங்க பெங்களூர்ல நெக்ஸ்ட் வீட் ரிசப்ஷன் பார்ட்டி இருக்கு. அதுல கலந்துக்கணும்” என்று அன்பாய் வேண்டுகோள் விடுத்தான் சத்யா.
“ஹோப் யு ஆர் குட் மிஸ்டர். சத்யா. உங்க கல்யாணத்தை நீங்க இவளோ தூரம் ஹேப்பியா எதிர்பார்க்கறது எனக்குச் சந்தோஷமா இருக்கு.”
“ஆமா, டாக்டர். எனக்குமே ஆச்சர்யமா தான் இருக்கு. அதுக்காக ராகாவோட நினைப்பு வராம இல்ல, பட் அவளைப் பத்தி நினைக்கறப்போ நீங்க சொல்லிக் குடுத்த மாதிரி ரொம்பக் கவலைப்படாம, அந்த ஒரு நாளை மட்டும் கடக்க எண்ணிக்குவேன். அப்படியே பழக்கமாகிருச்சு. எனிவேஸ். நீங்க கண்டிப்பா ரிஷப்ஷனுக்கு வரணும்” என்று முறுவலுடன் தான் கூறியிருந்தான்.
******
ராகாவிற்கும் அந்த ஆறு மாதங்கள் சடுதியில் கடந்திருந்தன. நடாஷா மும்பையில் இருக்கும் மற்றொரு அலுவலகத்தின் பொறுப்பைப் பார்க்க அடிக்கடி ராகாவை அனுப்பிக் கொண்டிருந்தாள். அது பலவகையில் ராகாவிற்கு அனுகூலமாக இருந்தது. வேலையிலும் மும்பையின் பரபரப்பிலும் தன்னைத் தொலைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.
மிருதுளா – சத்யாவின் திருமணம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறுகிறது என்று ராகாவிற்குத் தெரியும். நடாஷா, வனிஷா, மைக்கில் மற்றும் குழுவினர் மாலத்தீவு செல்ல டிக்கெட் பதிந்திருந்த விஷயம் பற்றி வனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் கேள்விப்பட்டிருந்தாள்.
நடாஷா மாலத்தீவு கிளம்பும் போது, “ஒ.கே சீ யூ சூன். இங்க எல்லாம் பார்த்துக்கோ ராகா! யூ ஆர் இன்சார்ஜ்” என்று மும்பை அலுவலகத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தாள்.
இரவு நெடு நேரம் கண்விழித்து வேலை பார்த்துவிட்டு, நடுசாமத்தில் அவளது ஃப்ளாட்டிற்கு வந்த ராகா, ஆழ்ந்த தூக்கத்தில் தன்னைத் தொலைக்கத் துவங்க, விடிந்தும் விடியாத அந்த மூன்று மணி நள்ளிரவில் அவளது கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.
******
error: Content is protected !!