Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 6-2 : எனைச் சுற்றி ஏகாந்தம்

“சொல்லுங்க மாமா”

 

“கயலுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா மாப்ள?”

 



Advertisement

“இல்லையே மாமா, என் கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தா. திடீர்னு பேசலை. அதான் உங்க கிட்ட கேக்குறேன். என்ன சொன்னா மாமா? என் மேல கோபமா இருக்காளா? ஆனா நான் என்ன பண்ணினேன்னு தெரியலையே?”, என்று பரிதவிப்புடன் கேட்டான்.

 

“உங்க கிட்ட பேச மாட்டேன்னு சொல்றா மாப்ள… அது மட்டுமில்லாம….”

Advertisement

 

Advertisement

“என்ன மாமா?”

 

“இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றா….”

Advertisement

 

“என்னது?”

 

“ஆமா மாப்ள”

 

“ஏன்னு கேட்டீங்களா மாமா?”

 

“கேட்டேன் சொல்லலை”

 

“நான் இப்ப நேர்ல வரட்டுமா மாமா?”

 

“இன்னைக்கு வேண்டாம் மாப்ள. ஞாயிறு அன்னைக்கு நாங்க ஒரு பங்ஷன் வீட்டுக்கு போய்ருவோம். அன்னைக்கு வறீங்களா? உங்க கிட்ட கண்டிப்பா மனசு விட்டு பேசுவா. நாங்க இருக்கும் போது நீங்க வந்தீங்கன்னா அவ கிட்ட உங்களால பேச கூட முடியாது”

 

“சரிங்க மாமா”

 

“வேற எதுவும் யோசிக்காதீங்க மாப்ள. அவளுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். அதையும் மீறி இப்படிச் சொன்னா ஏதோ நடந்திருக்கு. என்னன்னு கேட்டு சரி பண்ணுங்க மாப்ள”

 

“சரி மாமா”, என்று சொல்லி போனை வைத்தான்.

 

அதை அப்படியே அவன் சேகரிடம் சொல்ல “நாளைக்கு கயல் ஆபீஸ் வருவா தமிழ். நானும் நாளைக்கு அவ கிட்ட கேட்டுப் பாக்குறேன்”, என்று சொன்னான்.

 

அடுத்த நாள் மதியம் உணவு இடைவேளை முடிந்ததும் இருந்த நேரத்தில் கயலை அவனது அறைக்கு அழைத்தான் சேகர்.

 

“சார்”, என்ற படி உள்ளே வந்தாள்..

 

“உக்காரு கயல்”, என்று சொன்னதும் தடுமாற்றத்துடன் அவன் எதிரே அமர்ந்தாள்.

 

“உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை கயல்”

 

“அண்ணா,,, அது…. நான்…”

 

“என்ன வேணும்னாலும் நடந்துருக்கட்டும். உன்னோட சுயமரியாதையே பாதிக்கப் பட்டிருக்கட்டும். ஆனா நீ இப்படி பண்ணலாமா? ஒரு அப்பாவி ஜீவனை இந்த அளவுக்கு கஷ்டப் படுத்தலாமா? அது மட்டும் இல்லை கல்யாணமும் வேண்டாம்னு சொல்லிருக்க? அவனை ஏன் மா கஷ்டப் படுத்துற?”

 

“அது வந்துண்ணா….”

 

“உன்னை பொறுமைசாலின்னு நம்பி தான் மா உன்னை அவனுக்கு கட்டி வைக்கணும்னு நினைச்சேன். ஆனா அது தப்புன்னு நீ ஒரே நாள்ல எனக்கு புரிய வச்சிட்ட?”

 

“அண்ணா”

 

“உனக்கு தமிழை பிடிக்கலையா மா?”

 

“எனக்கு அவரை மட்டும் தான் அண்ணா பிடிக்கும்”

 

“அப்புறம் ஏன் மா இப்படி பண்ணின? அவன் கிட்ட ஏன் பேசலை? பாக்கவே பரிதாபமா இருக்கு மா. என்ன நடந்துச்சு?”, என்று அவன் கேட்க நடந்த விஷயங்களை அப்படியே சொன்னாள். அதைக் கேட்டு திகைத்து தான் போனான். சரோஜா பேசியது சேகருக்கே அதிர்ச்சி என்றால் இந்த சிறு பெண்ணின் மனது எந்த அளவுக்கு காயப் பட்டிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் அவர்கள் வாழ்க்கை முக்கியம் என்று புரிய அமைதியாக அவளுக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

 

“தனிமை ரொம்ப கொடுமையானது கயல். அதை தமிழ் கொஞ்சம் அதிகமாவே அனுபவிச்சிட்டான். சொந்த வீட்டை பிரிஞ்சு குடும்பத்தை பிரிஞ்சு சொந்த பந்தங்களைப் பிரிஞ்சு அவன் வேலைக்கு போனது எதுக்கு? அவனது அம்மா தங்கச்சிக்களுக்காக தான். ஆனா அது அவங்க அம்மாவுக்கு புரியவே இல்லை. என் மகன் பாரின்ல இருக்கான்னு அவங்க அம்மா பெருமை பேசும் போதெல்லாம் அவன் அங்க என்ன வேலை பாத்தான்னு தெரியுமா? ஹோட்டல்ல கக்கூஸ் கழுவுற வேலை”, என்று சொல்ல அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“இதை உனக்கு தெரிஞ்ச மாதிரி கட்டிக்காத கயல். அவனா சொன்னா அப்படியான்னு கேட்டுக்கோ. உன் கிட்ட மறைக்க அவனுக்கு ஒண்ணும் இல்லை,. கண்டிப்பா இதையும் சொல்லுவான். நான் சொல்றது கூட நீ அவனைப் புரிஞ்சிக்கணும்னு தான். உனக்கும் அவனை பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதனால தான் பேசுறேன். கொஞ்சம் அவனை புரிஞ்சிக்க பாரு மா. அவன் ரொம்ப பாவம்”

 

“ஆனா அவங்க அம்மா….”

 

“அதை சமாளிக்க உனக்கு தெரியாதா? உன் சித்தியையே இத்தனை வருஷம் நீ சமாளிச்ச. இந்த அம்மா பேச்சை எல்லாம் பெருசா எடுக்கணுமா? அது ஏதாவது பேசுச்சுன்னா பதிலுக்கு பேசு. இப்படி முடிவு எடுக்கலாமா?”

 

“இல்லைண்ணா நான் அவருக்கு பொருத்தமே இல்லை. நான் அழகா இல்லையாம்? எந்த சீர்வரிசையும் கொண்டு வர மாட்டேனாம்? தமிழுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க அவங்க காத்திருக்காங்களாம். நான் விலகிக்கனுமாம். எனக்கும் அது சரின்னு படுது. அவருக்கு என்னை விட நல்ல பொண்ணா….”

 

“நீ பைத்தியம் தான் கயல். அது மட்டும் இல்லை. நீ இல்லாம போனா அவன் செத்துருவான்”

 

“அண்ணா”

 

“தமிழோட கண்ணுல இருக்க காதல் உனக்கு புரியவே இல்லையா? நீ அழகா இருக்குறதுனால தான் அவன் உன்னை அந்த அளவுக்கு ரசிக்கிறான்னு உனக்கு ஏன் புரிய மாட்டிக்கு? அழகைக் கூட விடு. அது நாளைக்கு அழிஞ்சு கூட போயிரும். அவன் மனசுல இருக்குற காதலை நீ உதறித் தள்ளலாமா? எல்லா ஆம்பளைக்கும் அவன் குடும்பத்தை சுமக்க கூடிய கடமை இருக்கு தான். அது தமிழுக்கும் இருக்கு. அதுக்கு துணையா நீ இருக்கணுமே தவிர அவனை உதறித் தள்ளக் கூடாது மா. அவங்க அம்மா குணம் தெரிஞ்சு அதை சமாளிச்சு நீ அவனுக்கு சந்தோசத்தைக் கொடுக்கணும். உன்னைப் பாத்த பிறகு தான் ஆயிரம் கனவுகளோட அவன் சுத்திக்கிட்டு இருக்கான். அதைக் கெடுத்துறாத கயல். நான் உனக்காகவும் தான் பேசிட்டு இருக்கேன். அவங்க அம்மாவுக்கு பயந்து கடைசி வரை உன் வீட்லயே அடிமை மாதிரி இருக்க போறியா?”

 

“என்னை மன்னிச்சிருங்க அண்ணா. அவங்க அப்படி பேசவும் அவரோட நல்லதுக்குன்னு நினைச்சு…. இனி கண்டிப்பா அவரை  விட்டுக் கொடுக்க மாட்டேன். அவங்க அம்மா என்ன பேசினாலும் கண்டுக்க மாட்டேன். அவரை இனி நான் நல்லா பாத்துக்குவேன்”, என்று சொல்ல இப்போது சேகருக்கு பெருத்த நிம்மதி. கூடவே சரோஜா மேல் கோபமாக வந்தது.

 

“சரி மா அவனுக்கு பேசு”, என்று சொன்னதும் அவள் எழுந்து சென்றாள். அவள் சென்றதும் உடனே தமிழை அழைத்த சேகர் நடந்ததை அப்படியே சொல்ல தமிழுக்கு கண்கள் கலங்கி விட்டது. அன்னையின் மேல் அளவிட முடியாத வெறுப்பு வந்தது.

 

அவள் முகத்தைக் கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றவன் காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு இப்போது தனிமை தேவைப் பட்டது.

 

யாரும் இல்லாத இடம் வந்ததும் ஒரு மரத்தடியில் கால் நீட்டி அமர்ந்தவனுக்கு அந்த அளவுக்கு வேதனையாக இருந்தது. பெற்ற தாயே தன்னுடைய நிம்மதியை குழி தோண்டி புதைப்பது ஒரு வேதனை என்றால் அவள் பேச்சைக் கேட்டு கயல் தன்னை வேண்டாம் என்று முடிவு எடுத்தது அவனுக்கு அடுத்த பெரிய அடியாக இருந்தது.

 

கயல் செய்கையில் நியாயம் இருக்கிறது என்று அறிவு சொன்னாலும் மனதோ விரக்தி அடைந்தது. அவள் எப்படி என்னை வேண்டாம் என்று சொல்லலாம் என்ற கோபம் அவனை விட்டு போகவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. அடுத்த நாள் அவளிடம் கேட்டால் தான் நிம்மதி வரும் என்று புரிந்து கொண்டான். அப்போது கயலிடம் இருந்து அழைப்பு வர அவன் அதை எடுக்கவே இல்லை. இப்போது பேசினால் நிச்சயம் அவளைக் காயப் படுத்தி விடுவோம் என்று எடுக்காமல் விட்டான். இப்போது அவள் கலங்கினாள். அவனை எப்படி சமாதானப் படுத்த என்று திணறினாள்.

 

மன்னிப்பு கேட்டு மேஸ்ஸேஜ் அனுப்ப அதைப் பார்த்தாலும் தமிழ் பதில் அனுப்ப வில்லை. அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கயல் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் தமிழ்.

 

“எங்க டா போற? இன்னிக்கு லீவ் தானே?”, என்று சரோஜா கேட்க அங்கே அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று கூட எண்ணாமல் கிளம்பினான். மகனின் உதாசீனம் கவலையைக் கொடுப்பதற்கு பதில் எரிச்சலைக் கொடுத்தது சரோஜாவுக்கு.

 

கயலின் ஊருக்கு வண்டியை விடும் போது அவனுக்கு பிரஸில் இருந்து அழைப்பு வந்தது. பத்திரிக்கை தயாராகி விட்டது என்று அழைப்பு வந்ததும் அதை வாங்கச் சென்றவன் கயலின் ஊருக்குச் சென்றான்.

 

தமிழ் வரும் போது கயல் மட்டுமே வீட்டில் இருந்தாள். சமுத்திரம், வேணி, சித்ரா மூவரும் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். காலையிலே அந்த தகவலை சமுத்திரத்திடம் கேட்டிருந்தான். அதனால் தான் தன்னவளுடன் பேச ஆவலாக வந்து விட்டான். கூடவே அவள் மேல் கோபமும் இருந்தது.

 

வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு அழைப்பு மணியை அழுத்த கயல் தான் வந்து கதவைத் திறந்தாள். அவனைக் கண்டு அவள் திகைத்து நின்றாள் என்றால் அவனோ சிலையாக நின்றான்.

 

கருப்பில் வெள்ளைப் பூ போட்ட நைட்டி அணிந்து தலையில் துண்டுடன் நெற்றியில் ஏனோதானோவென்று பூசி இருந்த திருநீருடன் நின்றவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது. அவன் கண்கள் தலை முதல் கால் வரை அளவெடுக்க கோபம் கூட அவனை விட்டுச் சென்றிருந்தது. “நீங்க வறேன்னு சொல்லவே இல்லை”, என்று கேட்டாள் கயல்.

 

அதில் நடப்புக்கு வந்தவன் “பத்திரிக்கை வந்துச்சு, அதான் கொடுக்க வந்தேன். உள்ள கூப்பிட மாட்டியா?”, என்று கேட்டான்.

 

“உள்ள வாங்க”, என்று தடுமாற்றத்துடன் அழைத்து அமர வைத்தாள். அவனது சோர்வு அவளுக்கு தெளிவாக புரிந்தது. அதே நேரம் அவனும் அவளைப் பார்வை இட்டான்.

 

“கல்யாணம் வேண்டாம்னு சொன்னியாம். அடிச்ச பத்திரிக்கையை எல்லாம் என்ன செய்யன்னு கேக்க வந்தேன்”, என்ற பி‌ஏ‌டி‌ஐ பத்திரிக்கையை  நீட்ட அடுத்த நொடி அவன் காலில் விழுந்தவள் “என்னை மன்னிச்சிருங்க. நான் செஞ்சது தப்பு தான்”, என்றாள்.

 

“உன்னை மன்னிக்க நான் யாரு கயல்? நான் எல்லாம் இந்த பூமியில பிறந்திருக்கவே கூடாது. பெத்த அம்மாவுக்கே என்னைப் பிடிக்கலை. பின்ன உனக்கு எல்லாம் பிடிக்குமா? அதான் எண்ணளி ஈசியா தூக்கிப் போட முடிவு பண்ணிட்ட?”, என்று வேதனையாக உரைக்க “நான் செஞ்சது தப்பு தான். எனக்கும் எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?”, என்று கேட்டாள்.

 

“என்ன நடந்தாலும் நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு நம்புனேன் டி. ஆனா நீ என் நம்பிக்கையை அழிச்சிட்ட. என் அம்மா அப்படி தான். ஏற்கனவே உனக்கு தெரியும் தானே? தெரிஞ்சும் நீ அப்படிச் செஞ்சதை என்னால ஏத்துக்க முடியலை. எத்தனை தடவை கால் பண்னினேன். என்னை எப்படி அழ வச்சிட்ட தெரியுமா நீ? எங்க அம்மா என்ன பேசினாலும் என்னோட புருஷனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு ஏன் டி சொல்லலை? அப்படின்னா நான் உன்னை பொண்டாட்டியா நினைச்ச மாதிரி நீ என்னை புருசனா நினைக்கலை தானே? இனி நீயே முடிவு பண்ணு. பத்திரிக்கையை எல்லாம்  கூட எரிச்சிறு. வேற நல்ல பையனா பாத்து கல்யாணம் கூட பண்ணிக்கோ. நான் வரேன்”, என்றவன் இரண்டு அடி எடுத்து வைக்க அடுத்த நொடி பாய்ந்து வந்தவள் அவனை பின் பக்கமாக அணைத்துக் கொண்டாள். அவள் செய்கை அவனுக்கு வியப்பாக இருந்தது.

 

அவனது இடையில் பதிந்திருந்த அவள் கரம் அவனை இறுகப் பற்றி இருக்க அவன் முதுகில் முகம் புதைத்து நின்றாள் அவள். அடுத்து என்ன செய்ய என்று தடுமாறி நின்றான் தமிழ்.

 

தொடரும்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!