Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை -10

“தம்பி… பாப்பா கிளம்பிடுச்சுப்பா நா எவ்ளவோ சொல்லியும்  கேக்காம கார் புடிச்சு போய்டுச்சு” என்ற பாண்டியம்மாவின்  அலைபேசி அழைப்பில் ஒரு நொடி என்ன செய்ய என்றே அவனுக்குப் புரியவில்லை.

“இவளை…” என்று பல்லைக்கடித்தவன் அப்பொழுதே வீட்டிற்கு புறப்பட்டான், காலை அவன் எழுந்துவந்தபோது அவள் அறை மூடியே இருந்தது, சிறிதுநேரம் நடந்துவிட்டு வந்தவன் குளித்து சாப்பிட வந்து அமர்ந்தபோதும் அவள் வெளியில் வரவில்லை.

அவன் பார்வையை உணர்ந்த பாண்டியம்மா “இன்னும் எழுந்துக்கல தம்பி நல்லா தூங்குது பாவம்” என்றார்.

‘அவளா பாவம்’  என்று நினைத்துக்கொண்டவன் “அவ எழுந்ததும் எனக்குப்போன் போடுங்க அப்படியே நீங்களும் ஒரு ரெண்டு நாள் பயணம் போகத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோங்க, அவளை அவ வீட்டில விட்டுட்டு நீங்க வந்துடுங்க” என்றான்.



Advertisement

அவன் சொல்வதை மீறி எதுவும் பேசிப் பழக்கமில்லை அதனால் “சரித்தம்பி” என்று சம்மதம் கூறிவிட்டார்.

இரவெல்லாம் உறக்கமே வரவில்லை அவளுக்கு, தேடி தேடி சென்றதால் தானே அவனுக்கு இத்தனை இளக்காரமாகிவிட்டேன், என் காதலும் புரியவில்லை வலியும் புரியவில்லை.

போகிறேன் என்றவளையும் விடாமல் பிடித்துவைத்து எதற்க்காக இப்படி செய்ய வேண்டும் என்று மனம் ஓயாமல் புலம்பியது, அவன் தோட்டத்திற்கு செல்லும் வரை சும்மாவே விழிகள் மூடிக் கிடந்தவள் அதன் பிறகு வேகமாகத் தயாராகி வெளியில் வந்தாள்.

Advertisement

“வாம்மா எங்க கிளம்பிட்ட தம்பி கொஞ்சநேரம் முன்னாடி தான் போச்சு, வா வந்து சாப்பிடு” என்று அவர் தட்டை எடுத்துவைக்க.

Advertisement

“வேண்டாம் பசிக்கல” என்றவள் “உங்க போன் கொஞ்சம் குடுங்க என்கிட்டே போன் இல்ல” என்றாள்.

“நீ எழுந்திருச்சதும் போன் போடச் சொல்லுச்சு சேனா தம்பி, என்னையும் உன்கூட ஊருக்கு அனுப்புது போல” என்றவர் அலைப்பேசியை எடுத்தார் அவனை அழைக்க.

சட்டென்று அவர் கையில் இருந்த அலைப்பேசியை வாங்கிக்கொண்டாள், அவர் அதிர்ச்சியாகப் பார்க்க.

Advertisement

“சாரி இப்போ அவர்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்ல, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு அது முடிஞ்சதும் நானே சொல்லிடுறேன், எனக்குப் போன் பண்ணனும் பேசிட்டு தரேன்” என்றவள் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

ஒருமணிநேரமாகப் போனில் எதையோ தேடுவதும் அழைப்பதுமாக இருந்தாள், திடீரென்று உள்ளே வந்து தன்னுடைய பையை எடுத்துக்கொண்டவள் பாண்டியம்மாவிடம் போனை கொடுத்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் என்னை நல்லா பாத்துக்கிட்டதுக்கு, உங்கள எப்போவும் மறக்கமாட்டேன், அவருக்குத் தொல்லை குடுக்க விரும்பல நானே போய்ப்பேன் அவர் வந்ததும் சொல்லுங்க” என்றவள் பாண்டியம்மாவை அனைத்து விடுவித்தாள்.

காரின் ஹார்ன் ஒலி கேட்டதும் இருவரும் வெளியில்  வந்து பார்க்க கேட்டின் வெளியே ஒரு கருப்புநிற கார் நின்றது.

“வண்டி வந்துடுசு போய்ட்டுவரேன்” என்றவள் வண்டியை நோக்கி நடந்தாள்.

“அம்மாடி நில்லு எங்கப்போற… ஐயோ! இப்படி சட்டுன்னு தனியா போறேன்னு சொல்ற தம்பிக்குத் தெரிஞ்சா அவ்ளோதான், அது கோபம் உனக்குத் தெரியல அதுமில்லாம முன்ன பின்னத் தெரியாதவங்ககூட அவ்ளோ நேரம் எதுக்கு போகணும்” என்று அவள் பின்னேயே வந்தார்.

அவள் ஒன்றும் கூறாமல் காரில் ஏறி அமர “சரி இரு நானும் வரேன் தனியா போக வேண்டாம் வீட்டைப் பூட்டிட்டு வரேன் சேனா தம்பிக்குப் போனும் போகமாட்டிங்குது என்றவர் வீட்டை நோக்கி நடக்க.

“அம்மா இங்க பாருங்க பயப்பட ஒண்ணுமில்ல, இவங்க எங்கவூர் பக்கம்தான் போறாங்க அப்படியே என்னையும் விட்டுருவாங்க, இப்போ பகல் தானே என்ன பயப்பட இருக்கு நீங்கப் பதட்டப்படாம இருங்க அவர் போன் பண்ணும்போது சொல்லுங்க போதும்” என்றவள் “போலாம்” என்க அந்தக் கருப்புநிற சபாரி மெல்ல ஓடித்தொடங்கியது.

பாண்டியம்மாவின் கையில் சாம்சங் போன் உள்ளது மகள் மற்றும் மகனின் பிள்ளைகளை வீடியோ காலில் பார்த்துப் பேசச் சேனா வாங்கி கொடுத்தது, போன் பேசத்தெரியும் வரும் அழைப்புகளை எடுக்கத் தெரியும் அதற்குமேல் அந்தப் போனில் இருப்பது எதுவும் அவருக்குத் தெரியாது.

வேகமாகச் சேனாவின் எண்ணிற்கு அழைத்தார் பாண்டியம்மா, தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்றே வந்துகொண்டிருந்தது அரைமணி நேர முயற்சிக்குப் பின் அவனுக்கு அழைப்பு சென்றது.

ஒரே மூச்சில் விஷயத்தைச் சொல்லிவிட்டார், நேரில் வந்து என்ன சொல்லுவானோ என்ற பயம் ஒருபக்கம் தனியே போய்விட்டாள் என்ற கவலை ஒருபக்கம் என்று தவித்து நின்றார் அவர்.

ஜீப்பின் கதவை அடித்துச் சாற்றிய விதமே அவனின் கோபத்தின் அளவை எடுத்துக்கூறியது “எப்படிப்போனா… யார் வந்தது… அவ கிட்ட போன் இல்லையே” என்று வரிசையாகக் கேள்விகளை வைத்தான்.

“எனக்குத் தெரியலப்பா போன் வேணும்னு கேட்டுச்சு நானும் குடுத்தேன், கொஞ்சநேரம் சென்று எனக்கு வண்டிவரும் நா ஊருக்குப் போறேன்னு கிளம்பிடுச்சு” என்றார் அவர்.

“என்ன வண்டி நம்பர் பாத்தீங்களா” என்றான் அவன்.

“அது ஒரு கருப்பு கலர் கார், நம்பர் எதுவும் பாக்கலையே” என்றார் பாண்டியம்மா.

அவரைத் தவறு சொல்ல முடியாதே அந்த நேர பதட்டத்தில் அவருக்கு அந்த யோசனை எல்லாம் எப்படி போகும்.

அவரிடமிருந்து அலைபேசியை வாங்கியவன் இறுதியாக அழைத்த எண்ணைப் பார்த்தான் எப்படி வண்டியைப் பதிவு செய்திருப்பாள் என்ற யோசனையில் போனை குடைய கண்ணில் பட்டது பிளா பிளா ஆப்.

இது வாடகைக்கு கார் ஓட்டுபவர்கள் செயலி அல்ல, காரின் உரிமையாளர்கள் இதில் பதிவுசெய்திருப்பர் அவர் பயணம் செய்யும் வழித்தடத்தை இதில் பதிவிடுவார்கள், நாமும் அந்த வழியே பயணம் மேற்கொள்கிறோம் என்றால் அவர்களிடம் பேசி இணைத்துக்கொள்ளலாம்.

மிகக் குறைந்த தொகை மட்டும் வசூலிக்கப்படும் அதில்தான் பயணம் சென்றிருக்கிறாள் ‘சுஜித்’ என்ற நபருடைய கருப்புநிற சபாரி வண்டி, அதன் என்னையும் குறித்துக்கொண்டான் கார் இப்பொழுது சென்றுகொண்டிருக்கும் இடமும் அந்தச் செயலியில் காண்பித்தது.

‘பாதுக்காப்பாக இருக்கிறாள்’ என்று தெரிந்தால் போதும் என்ற எண்ணமே முதலில் சேனாபதிக்கு, சுஜித்தின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹலோ சுஜித் தானே?” என்ற கணீர் குரலில் “ஆமாம்” என்றான் யோசனையாக அவன்.

“நான் சேனாபதி பாண்டியன் பேசுறேன் உங்க கார்ல திலோ இருப்பா அவகிட்ட பேசணும் கொஞ்சம் குடுங்க” என்றான் நல்ல விதமாகவே.

ரியர்வியூ மிரரில் பார்வையை பதித்தான் சுஜித், காரில் ஏறியதிலிருந்து விழிகள் மூடிச் சாய்ந்திருந்தாள் திலோத்தமா இடையிடையே விழிகளைத் துடைத்துக்கொண்டிருந்தாள் தன்னை சுற்றி நடப்பது எதுவும் அவள் கவனத்திலே இல்லை.

அவளைப் பார்த்தவுடனே சபலப்பட தொடங்கிவிட்டது மனது, முற்றும் துறந்து முக்தியை தேடும் முனிவர்கள் வாழும் இதே மண்ணில்தான் பெண்களைத் துகிலுரிக்கும் கயவர்களும் வாழ்கிறார்கள்.

செலவு செய்யப் பணமும் செல்வாக்கும் இருந்துவிட்டால் போதுமே எந்தத் தவறையும் செய்துவிட்டு உத்தமனைப் போலச் சுற்றுவார்கள்.

இதில் அவன் கவனித்த விஷயங்கள் மூன்று, ஒன்று அவள் தனியாக வருகிறாள், இரண்டு அவளிடம் அலைபேசியில்லை மூன்று வீட்டில் ஏதோ பிரச்சனை அதில் மனவருத்தத்தில் இருக்கிறாள்.

ஆசைக்கு உபயோகப்படுத்திவிட்டு எறிந்துவிட்டு செல்லலாம் யாரும் கேள்விகேட்க முடியாது என்ற தைரியம் வந்திருந்தது அவனுக்கு, இப்பொழுது ‘திலோத்தமாவிடம் போன் கொடு’ என்று உரிமையாகச் சொல்லுகிறான் இவன்தான் அந்தப் பெண்மணி சொன்ன தம்பியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.

“அவங்க அப்போவே இறங்கிட்டாங்களே” என்றான் சுஜித்.

“இறங்கிட்டாளா! எங்க எப்போ” என்றான் சேனாபதி.

“ஏறின பத்தாவது நிமிஷம் குன்னூர் பஸ்டாண்ட்ல இறங்கிட்டாங்க நான் கூடக் கேட்டேன் நான் வேற யாரையாவது கூப்பிட்டுருப்பேன் இப்படி பாதியிலே இறங்குறீங்கன்னு, சாரி சொல்லிட்டு போய்ட்டாங்க” என்றான் சாமர்த்தியமாக.

“எங்குச் சென்றிருப்பாள்?” என்ற யோசனை ஓடியபோதும் இவன் கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஓடியது.

‘எப்படி தெரிந்துகொள்வது’ அவனுக்கு மண்டை வெடித்தது, அதே நொடி சேனாபதியுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சாலையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டான் சுஜித், வளைவில் சீறி வந்த பைக்கை இடிக்காமல் இருக்க வண்டியை வலப்பக்கம் வேகமாகத் திருப்பினான்.

அந்த அதிர்வில் சிந்தனை கலைந்தவள் “அம்மா…” என்று அலறினாள் அந்தக் குரல் சரியாகச் சேனாவின் செவிகளை நிறைத்தது.

“திலோ…” என்று ஒருமுறை அழைத்தவன் பாண்டியம்மாவிடம் திரும்பி “அந்தக் கார்ல வேற யாரவது இருந்தாங்களா” என்க.

“இல்லத்தம்பி ஒரு பையன் மட்டும்தான் இருந்தான் பாப்பா பின்னாடி எரிகிச்சு” என்றார் அவர்.

அவன் கை முஷ்டிகள் இறுகியது “ராஸ்கல்” என்றவன், மீண்டும் அந்தச் செயலியில் பார்க்க ஹுலிகள் வியூ பாயிண்ட் கடந்திருந்தது, இன்னும் கொஞ்ச நேரத்தில் கட்டபெட்டுவை கடந்துவிடுவான்.

அவனைப் பிடிக்க வேண்டும் அவன் தேனாடுகம்பையை தொட்டுவிட்டால் அங்கிருந்து வேறு வழியில் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது, மீண்டும் சுஜித்தின் எண்ணிற்கு அழைக்க அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

செயலியையும் அனைத்துவிட்டான் எங்குச் செல்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை யோசிப்பதற்கு நேரம் இல்லை, குன்னூரில் இருக்கும் அவன் ஜிம்மில் பணிபுரியும் பிள்ளைகள் இருவரை அழைத்தவன் உடனே வரச் சொன்னான்.

அதோடு தோட்டத்தில் பணிபுரியும் சில இளைஞர்களையும் அழைத்தவன் வண்டியின் எண் இப்பொழுது இருக்கும் இடம் அனைத்தையும் கூறி “தேனாடுகம்பையை தாண்டக் கூடாது அதுக்கு முன்னாடி எங்க கிடைச்சாலும் பிடிங்க, உள்ள இருக்குற பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது நா வந்துட்டே இருக்கேன்” என்க.

“நீ வாண்ணா நாங்க பாத்துக்குறோம்” என்றவர்கள் பைக்கில் ஆளுக்கு ஒரு திக்கில் பறந்தனர்.

இங்கே நிறைய எஸ்டேட் பங்களா தனி வீடுகள் பாழடைந்த இடங்கள் இப்படி நிறைய உண்டு நன்றாக வழி தெரிந்தவர்கள் என்றால் எங்குவேண்டுமானாலும் சென்று ஒளிந்துகொள்ளலாம்.

தாமதிக்கும் நொடிகள் அனைத்தும் அபாயமானது சின்னப் பிள்ளைகளுக்கே பாதுகாப்பில்லையே இப்பொழுது… முதன்முறையாகச் சேனாபதிக்கு பயம் வந்தது பதட்டம் சூழ்ந்தது.

“வந்துருடி பத்திரமா… ராட்சசி என் உயிரை எடுக்கவே வந்துருக்கா” என்று சினம் கொண்டவன் ஆழ்ந்த மூச்சுக்கள் விட்டுத் தன்னை சமன் செய்துகொண்டு ஜீப்பை பறக்கவிட்டான்.

“என்னாச்சு?” என்றாள் திலோத்தமா இருக்கையை இறுக பற்றிக்கொண்டு.

“சாரி வண்டி வந்ததை கவனிக்கல உங்களுக்கு ஒன்னும் அடிபடலயே” என்றவனிடம் “இல்லை” என்று தலை ஆட்டினாள்.
“எங்க இருக்கோம்” என்றவளை பார்த்தவன் “கட்டபெட்டு தாண்டிட்டோம்” என்க.

“அது எங்க இருக்கு” என்றாள் அவள்.

“அடிதூள் வழியே தெரியாதா இவளுக்கு நல்லதா போச்சு” என்று சந்தோஷப்பட்டவன் “கொஞ்சநேரத்துல குன்னூரை தாண்டிடுவோம், நான் காலைல சாப்பிடல வழில தெரிஞ்ச ஹோட்டல் இருக்கு சாப்பிட்டு போலாமா” என்றான்.

சாப்பிட கேட்பவனிடம் எப்படி வேண்டாம் என்று மறுக்க அதுவும் அவனுடைய காரில் சகப்பயணியாகப் பயணம் போகையில் “சரி” என்று சம்மதம் கூறிவிட்டாள்.

திடீரென்று மனதில் ‘வந்தது தவறோ’ என்ற எண்ணம் தோன்றியது, ஏதோ இனம் புரியா ஒரு பயவுணர்வு, தன்னை சுற்றியிருந்த பாதுகாப்பு வளையத்தை அறுத்தெறிந்து ஏதோ மீளாச் சுழலில் மாட்டிக்கொண்ட உணர்வு மனதை அடைத்தது.

அவனிடம் சொல்லாமல் வந்தது தவறு ஒருமுறை அழைத்துப் பேசினால் என்ன என்று தோன்றியது ‘கத்துவாரு திட்டுற திட்டுல காது ஜவ்வு கிழிஞ்சிடும், அப்படிலாம் இருக்காது போய்ட்டியா ரொம்ப சந்தோசம் போய்த்தொலை திரும்ப வராதுன்னு சொல்லுவார்’.

‘ஐயோ ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது இப்போ என்ன பண்றது’ என்று யோசித்தவள் “உங்க போன் தரீங்களா ஒரு கால் பண்ணனும்” என்றாள் அவனிடம்.

அலைபேசியை சைலென்டில் போட்டிருந்தவன் “அச்சோ போன் ஒர்க் ஆகலங்க ஹோட்டல்ல போய்ப் பேசலாமே” என்றான்.

அவன் குரலிலும் பார்வையிலும் வந்த மாற்றத்தில் ‘இறங்கிவிடு திலோ வேண்டாம் இந்தப் பயணம்’ என்று மீண்டும் எச்சரிக்கை செய்தது மனது.

‘எங்க இருக்கீங்க வாங்களேன்’ என்றாள் மானசீகமாகச் சேனாவிடம், அவன் அடித்தால் கூட வாங்கிக்கொள்ள தயாராக இருந்தாள் அவனிடம் சென்றுவிட்டாள் போதும் என்று அடம்பிடித்தது உள்ளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!