மன்னவன் மஞ்சத்தில் 1
1.
மன்னவன் மஞ்சத்தில் யாரோ?
மஞ்சம் – 1
நடுங்கும் கரங்களில் புடவையை கையில் எடுத்தாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. கடவுளிடம் தனக்காக வேண்டிக் கொண்டாள். இன்று நடக்க போகும் செயல் மட்டும் சத்தியமாக நடக்கவே கூடாது என்று.
உடலில் இருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போவது போல் இருந்தது.
Advertisement
இதற்கு தான் சாவதே மேல் என்று எண்ணினாள். ஆனால் சாவதற்கு கூட இவளிடம் தைரியம் இல்லையே.
அந்த புடவையை கட்டும் போதே உடல் நடுங்க, வேர்த்து கொட்டியது அவளுக்கு.
இந்த திருமணத்தில் ஒரு துளி கூட விருப்பம் இல்லை என்பதை அவள் கண்ணீரே கூறியது. ஆனால் அவள் விருப்பத்தை தாண்டி இந்த திருமணம் நடக்கிறது. பயம் ஆலகால விஷம் போல் ஆட்டிப்படைத்தது இவளை.
அழுது, அழுது கண்கள் சிவந்து, முகம் வீங்கி போய் கட்டிய புடவையோடு மெதுவாக வெளியே வந்தாள்.
Advertisement
அம்மன் கோவில் வாசலில் வைத்து தான் திருமணம். அந்த இடம் முழுவதும் மயான அமைதி.
திருமணம் நடைபெறுவதற்கான சிறு தடையும் கிடையாது. சில வெள்ளை வேட்டிகள், சில பெண்கள் மட்டும் நின்று இருந்தனர். பெண்கள் அனைவரும் வீட்டில் கட்டியிருக்கும் சாதாரண புடவையில் நடப்பதை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
அழுது, வந்தங்கி வரும் நிவேதிதா வை தான் அனைவரும் இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவள் தான் மணப்பெண் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். கலைந்த கூந்தலோடு ஒரு காட்டன் புடவையில் கழுத்து, கை, முகம் என அனைத்தும் வெறுமையாக வந்து நின்றாள்.
வேறொரு திசை நோக்கி ஒருவர் கண்ணசைக்க கம்பீரமாக ஆறடி உயரத்தில் நம் தமிழ் மகனாக நடந்து வந்து அவள் முன்பு நின்றான் அக்னீஸ்வரன்.
Advertisement
கிராமத்து இளைஞன். கட்டுக்கோப்பாக படிக்கட்டு தேகம் இல்லை என்றாலும் மண்வெட்டி பிடித்து விவசாயம் செய்து திடகாத்திரமாக இருந்தான்.
முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. பல்லை கடித்து இறுக்கமாக நின்று இருந்தான். தன் முன்பு அழுது கொண்டு நின்று இருந்தவள் முகத்தை கூட பார்க்க வில்லை அவன். ஆனால் அவன் பார்வை முழுவதும் அவள் வயிற்றில் தான் இருந்தது.
வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் வெள்ளி பிரேஸ்லெட், கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டு நிமிர்வாக நின்று இருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் தான் கெஞ்சல்.
‘இந்த கல்யாணம் வேண்டாம். நிறுத்திடு.’ கெஞ்சினாள் கண்ணீரோடு.
அவன் தான் அவள் முகத்தையே பார்க்கவில்லையே. அப்புறம் எப்படி அவள் கெஞ்சுவது தெரியும். கை முட்டி இறுக, மார்பு புடைக்க வெறி கொண்ட சிங்கமாக நின்று இருந்தவனை நெருங்கவே அனைவருக்கும் பயம்.
“அக்னி… இந்த தாலியை அந்த பிள்ளை கழுத்தில் கட்டு.” ஒரு பெண் குரல் கேட்க,
தாலியையும், தாலியை நீட்டியவரையும் வெறித்து பார்த்தான்.
“இந்த கல்யாணம் வேண்டாம். அதுவும் இப்படி ஒருத்தி வேண்டாம்.” அவரிடம் மெதுவாக கூறினான். அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.
வெயில் வெளுத்து வாங்க.. அனைவருக்கும் வியர்த்து வழிய, தன் வியர்வையை துடைத்தவர் “என் பொண்ணுக்கும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் உன்னை விட்டால் வேறு யாரும் பாதுகாப்பு கிடையாது அக்னி. கட்டு.” என்றார் உறுதியான குரலில்.
மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கு தான் கட்டப்பட்டு இருந்தது. பொன் தாலி கூட வாங்கவில்லை. வாங்கவும் நேரம் இல்லை.
“சீக்கிரம் கட்டு மாறா.” பதட்டமும், பயமுமாஃபா கெஞ்சினார்.
நிவேதிதா பின்னோக்கி நகர, தாலியை அவர் கையில் இருந்து பறித்தவன் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தவள் கழுத்தில் இரும்பு மனிதன் போல் எக்கி கட்டினான். ஏதோ மரத்துக்கு கயிறு கட்டுவது போல் இருந்தது அவன் செயல்.
தன் கழுத்தில் நொடியில் ஏறிய தாலியை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள். கதறி அழ வேண்டும் போல் இருந்தது.
மாலை இல்லை, மங்கள வாத்தியங்கள் இல்லை. ஊரார் ஆசிர்வாதம் இல்லை. உறவினர்கள் அன்பும் இல்லை. சுட்டெரிக்கும் சூரியனை சாட்சியாக வைத்து அம்மன் கோவில் வாசலில், உருவான வாழ்க்கை.
இந்த வாழ்க்கை பசுமையாக தோன்றவில்லை இவளுக்கு. பாலைவனம் போல், கட்டாந்தரை போல காட்சியளித்தது. வேண்டாத திருமணம். விரும்பாத நிமிடம்.
ஓடி போக சொல்லி கால்கள் சொல்ல, திரும்பியவள் முன்பு ஆக்ரோஷமாக வந்து நின்றார் இவன் அம்மா சூடாமணி.
“அக்னி என்ன காரியம் பண்ணி இருக்க? அசிங்கமா இல்லையா உனக்கு? இவள் கழுத்தில் இந்த தாலி இருக்க கூடாது.” என்று அவள் கழுத்தில் கிடந்த தாலியை அறுக்க தொட, தன்னை சுற்றி நடப்பதை உணரும் முன்பே நிவேதிதா மயங்கி சரிய, கீழே விழு போனவள் தாலி சூடாமணி கையில் சிக்கி அவளை விழாமல் பிடித்து இருந்தது.
அதற்குள் அக்னி மனைவியை பிடித்துக் கொண்டவன் தாய் இறுக்கி பிடித்து இருந்த தாலியை அவர் கையில் இருந்து பறித்துக் கொண்டவன்,
“நீங்க என்ன நினைத்தாலும் எனக்கு கவலை கிடையாது. நடக்க வேண்டிய எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு. எனக்கு இந்த குழந்தை வேண்டும். இந்த குழந்தைக்காக தான் இந்த கல்யாணம். எனக்கு குழந்தை வேணும். என்னால குழந்தையை விட முடியாது. இவள் கூட குடும்பம் நடத்த நான் கல்யாணம் பண்ணிக்கல. இவள் வயிற்றில் வளர்வது நம்ம குடும்பத்து வாரிசு. இனி இந்த மாதிரி நடந்துக்காதீங்க.” தாய் முகத்தை பார்க்காமல் அவர் செயலை கண்டித்தவன் மனைவியை இரு கைகளில் ஏந்தி கொண்டான்.
“அப்படி என்ன டா உனக்கு இந்த குழந்தை அவசியம்? இது நம்ம குடும்பத்து வாரிசு கிடையாது. உனக்கு பொருத்தமான ஒருத்தியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா பத்து குழந்தை கூட பெத்துக்க முடியும். அதுவும் உன்னுடைய குழந்தையை. வேற ஒருத்தன் குழந்தையை நம்ம குடும்ப வாரிசுன்னு சொல்லாத. கேட்கவே அருவருப்பா இருக்கு.” சூடாமணி கத்தி கலவரம் பண்ண அதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் பொம்மையை தூக்கி செல்வது போல் தூக்கி கொண்டு சென்றான்.
தன் மகனிடம் காட்ட முடியாத கோபத்தை அங்கு அழுது கொண்டே நின்று இருந்த வைதேகி இடம் காட்டினார்.
“உன் வேலை தானா எல்லாம்? என் குடும்பத்தை நாசம் பண்ணவே வந்தியா டி. பெத்த வயிறு பத்தி எரியுது. நீ நல்லாவே இருக்க மாட்ட.” சாபம் விட்டவர் ஆத்திரம் அப்போதும் அடங்காமல் வைதேகி கன்னத்தில் ஓங்கி “பளார்!” என அறைந்தார்.
அறை வாங்கி வைதேகி அமைதியாக நிற்க,
“அம்மா.” என அழுகையோடு ஓடி வந்தாள் அவரின் இளைய மகள். ஆதினி.
தன் அம்மா செய்த செயல் அவளுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை தான். தாய் மீது பயங்கர கோபத்தில் இருக்காள். ஆனால் இப்படி அனைவர் முன்பும் அறை வாங்கி நிற்கும் தாயை விட்டு கொடுக்க முடியவில்லை.
“என் அம்மாவை மட்டும் எதுக்கு அடிக்கிறீங்க? உங்க புருஷனையும் அடிங்க. என் அக்காவுக்கும், உங்க மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சது அவர் தான்.” ஆக்ரோஷமாக கேட்ட அவள் குரலில்,
சூடாமணி ஒதுங்கி நிற்கும் கணவரை முறைத்து பார்த்தவள் “என் மகனை எச்சில் சோறு திங்க வைக்க பாக்குறியா? நான் இருக்க வரைக்கும் நடக்காது டி. உங்க வாசனை கூட என் வீட்டுல பட கூடாதுன்னு தானே ஒதுக்கி வைத்தேன். இன்னைக்கு நான் ஊருக்கு போன நேரத்தை பயன்படுத்தி எல்லாரும் நீங்க நெனச்சதை சாதிச்சிட்டிங்க.
உன் பொண்ணை எப்படி என் வீட்டை விட்டு துரத்தனும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
உன் மகள் கூட வாழுறதுக்கு என் மகன் செத்து போகலாம். பாக்குறேன் நானா? இல்லை உன் மகளான்னு.”
புடவை முகப்பை உதறி இடுப்பில் சொருகி கொண்டவர் நெஞ்சம் எரிய தன் கணவரை கண்களால் எரித்து பஸ்பமாக்கி கொண்டு சென்றார்.
வைதேகி தன் அண்ணனை கண்ணீரோடு பார்க்க, அவரோ கண்களால் தங்கைக்கு ஆறுதல் கூறினார்.
செய்த தவறை சரி செய்ய முடியாமல் திணறிய உறவுகளுக்கு இதை விட்டால் வேறு வழி கிடைக்கவில்லை.
தென்பாண்டி தங்கை அருகில் வந்தவர் “வைதேகி நீ கவலை படாத. சூடாமணி கோபம் நமக்கு தெரிந்தது தான். ஆனால் மாறன் நம்ம நிவேதிதா வை ரொம்ப நல்லா பார்த்துப்பான். என் மகன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றவர் வேற எதுவும் சொல்ல முடியாமல் தலையை தொங்க போட்டு கொண்டு சென்றார்.
மாறன் நண்பன் காரில் மனைவியை கிடத்தி தூக்கி வந்தவன் “டேய் வெளியவே நிறுத்து. நானே இவளை தூக்கிட்டு போறேன்.” என மனைவியை தூக்க போக, நண்பன் கை பிடித்து தடுத்தவன்,
“மாறா நிவேதா வை இப்படியே விட்டுட்டு நான் அழைச்சிட்டு போறேன். உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனால் உன் அம்மா கொன்னுடும். அவசரம், அவசரமா எல்லாத்தையும் பண்ணி, பண்ணி தான் இந்த பிள்ளை இன்னைக்கு இப்படி கிடக்கு. மிக பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து வந்து கொஞ்ச நாள் கூட நிம்மதியா இல்லை. அதுக்குள்ள இது வாழ்க்கையை அவசரப்பட்டு அவுங்க அம்மா கெடுத்துச்சு. சொன்னா புரிஞ்சுக்கோ. உங்க குடும்ப சண்டைக்கு இது வாழ்க்கையை நாசம் பண்ணாதீங்க டா.” நண்பனிடம் கெஞ்சினான்.
மாறன் தன் நண்பனை பார்வையால் அடக்கியவன் “எதை பண்ணனும் எதை பண்ண கூடாதுன்னு எனக்கு தெரியும். எனக்கு நீ சொல்லி தராத. உன் வேலையை மட்டும் பாரு. கிளம்பு. இனி முகத்தில் கூட முழிக்காத.” பல வருட நட்பை நொடியில் முறித்து கொண்டான்.
முத்தமிழன் அதிர்ந்து, “சரி டா இனி உன் முகத்தில் கூட நான் முழிக்கல. ஆனா உன்னை நம்ப முடியல. நிவேதாவை விட்டுடு. அது வயிற்றில் வளரும் குழந்தையும் உனக்கு வேண்டாம். நான் பாத்துக்கிறேன்.” என்றவன் கழுத்தை நெரித்து பிடித்தவன்,
“என்னடா அக்கறை பொங்குது? இனி நான் நினைத்தது மட்டும் தான் நடக்கணும். நடக்கும். யாரை எப்படி ஆட்டி வைக்கணும்னு எனக்கு தெரியும். இத்தனை காலம் அவுங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க. இனி அழட்டும். நான் அழ வைப்பேன். வெளியே போ டா.” என நண்பனை கழுத்தை பிடித்து கீழே தள்ளி விட்டு அவளை தூக்கி கொண்டு உள்ளே செல்ல, அவன் பாட்டி தன் பேரனை வலியோடு பார்த்தார்.
மாறனை பற்றி மற்றவரை விட அவருக்கு தான் அதிகமாக தெரியும். அதனால் தான் அவர் பார்வை கடுமையாக மாறியது.
“மாறா…” அவர் கடுமையான குரலில் அழைக்க,
“பாட்டி பசிக்குது. சோறு எடுத்து வை.” என்றவன் அவன் அறைக்குள் அவளை படுக்க வைத்து விட்டு வந்தான்.
முத்தமிழ் தன் சட்டையை சரி செய்தபடி இருமி கொண்டு எழுத்தவன் கண்கள் கலங்கி இருந்தது.
“மாறா நீ கோபத்தில் அறிவை இழந்துட்ட. நிவேதா பாவம். நீ என்னை திட்டியதில் கூட எனக்கு கோபம் வரலையா. நீ என் நண்பன். ஆனா அந்த பிள்ளைக்கு நீங்க பண்ற அநியாயம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.” என்றவன் கோபம் முழுவதும் நிவேதா அம்மா மேல் திரும்பியது.
தொடரும்……..
