Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-1

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னையில், பெரிய பெரிய பங்களாக்கள் எல்லாம் தனி தனி கோட்டைகளாய் அமைந்த அந்த பணக்கார வீதியில், பெரிய நீச்சல் குளம், அலங்கார தோட்டம் என கம்பீரமாய் நின்ற அந்த பங்களாவில், பறவைகள், மனிதர்கள் என எல்லோரும் தங்கள் பணி முடிந்தது, தங்கள் கூடுகளுக்கு திரும்பும் அந்த அந்திமாலை நேரம் அது.

சொல் வேந்தர் சுகிசிவம் அவர்களில் கணீரென குரலில் பூசலார் நாயனார் பற்றிய உரை அந்த திறந்த வெளியில் எதிரொலிக்க, உரைக்கு காதுகளை மட்டும் கொடுத்துவிட்டு, மனமோ அதன் போக்கில் தன்னில் முழுவதும் நீக்கமற நிறைந்து இருக்கும் தன் மன்னவனின் நினைவில், மனதோடு எந்நேரமும், அரிதாக சில நேரம் மட்டுமே தான் பயன்படுத்தும் பிரத்தியேகமான அழைப்பான “வசீ, வசீ” என்ற அவளவனின் நாமத்தை உருபோட்டபடி இருந்த ஒரு காரிகை காண கிடைத்தாள்.

வானத்து நிலவை ஒத்து இருந்த அவளின் முகத்தில், ஆன்மாவின் சாளரமாம் அந்த கண்களில் மட்டும் ஏதோ ஒரு வருத்தத்தின் சாயல், தங்கள் காதலின் உன்னதத்தை தாங்கி இருக்கும் தன் மணிவயிற்றை கைகளால் மெதுவாக வருடியபடி, கர்ப்பிணி பெண்கள் அணியும் இலகுவான முழு நீள உடை அணிந்து, தோள் வரை வெட்டப்பட்ட, பட்டு போன்ற கூந்தலை கட்டாமல், காற்றோடு உறவாட விட்டபடியே, அரிதாரமே சிறிதும் இன்றி அசைந்தாடும் ரதம் போல அந்த அழகிய யுவதி அந்த தோட்டத்தில் நீளம், அகலத்தை அளப்பவள் போல நடை பயிற்சி செய்து கொண்டு இருக்க, அவளின் மீதே கண் வைத்தபடி அங்கு ஒரு கல்லால் ஆன இருக்கையில் அமர்ந்து இருந்தார் ஜெயந்தி.

அப்போது ஒரு கருப்பு நிற பென்ஸ் கார், காரோடும் பாதையில் வழுக்கி கொண்டு வந்து நிற்க, அதில் இருந்து இறங்கினான் வசீகரன்.



Advertisement

ஒரு சிலருக்கு தான் அவர்களின் பெயர் அவர்களுக்கு அப்படியே அம்சமாய் பொருந்தி போகும் , அந்த ஒரு சிலரில் வசீகரனும் ஒருவன், பெயருக்கு ஏற்றாற்போல வசீகரிக்கும் கலையான முகம், திருத்தமாக வெட்டப்பட்ட கேசம், மயக்கும் மாயகண்ணன் புன்னகை, பெண்களையும் தோற்கடிக்கும் மிக, மிக அழகிய நயனங்கள் என பார்த்த முதல் பார்வையிலே பழக “இனிமையானவன்” என்ற இதமான எண்ணம் தரக்கூடிய ஒரு இளம் தொழிலதிபன்.

சிங்கம் ஒரு எல்லையை வகுத்து தன் கூட்டத்தை பாதுகாப்பது போல, அவனை சார்ந்தவர்களை காப்பவன், அவனின் அன்புக்குரியவர்களை நாம் தொடாத வரை நிச்சயம் அவனின் தாண்டவத்தை பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது.

அலுவலகத்தில் இருந்து வந்தவன், வீட்டிற்குள்ளே சென்று உடை கூட மாற்றாமல், யாரை பார்க்க அத்தனை விரைவாக வந்தானோ, யார் அவன் மதியை மொத்தமும் ஆட்சி செய்பவளோ, அவள் இந்நேரம் நடை பயின்று கொண்டு இருப்பாள் என தெரியும் என்பதால், கழுத்து பட்டையை இடது கையால் தளர்த்தியவாறே, தோட்டத்தை நோக்கி நடையை எட்டி போட்டு நடக்க ஆரம்பித்தான்.

Advertisement

“பாப்பு” அந்த குரலில் தான் என்ன ஒரு பாவம்.

Advertisement

அவனின் குரலில், அந்த விளிப்பில் அந்த யுவதியின் முகத்தில், அப்பட்டமாய் ஒரு எதிர்பார்ப்பும், அதே நேரம் அவனின் முகத்தை பார்க்கும் முன்னரே அவனின் குரலை கேட்ட கணமே, ஒரு புன்னகை தன் போலவே அவள் முகத்தில் பூக்க, கலவையான உணர்வுகளுடன் திரும்பி பார்த்தவள், கொஞ்சம் வேகமாவே அவனை நோக்கி வர ஆரம்பித்தாள்.

அவளின் வேகத்தில் இருவரும் பதறி போய் ஏகாலத்தில்,

“ஹே பாப்பு, பார்த்து பார்த்து” என பதற்றமாக வசீகரனும்,

Advertisement

“அடியேய் கொஞ்சம் பொறுமையா தான் வாயேன், வயிற்று பிள்ளைக்காரி இப்படி தான் வேகமா நடக்கிறதா” என ஜெயந்தியும் அந்த காரிகையை கடிந்து கொண்டனர்.

அந்த யுவதியோ, தான் எதிர்பார்த்த செய்தியாய் இருந்தால் வசீகரனே வந்தவுடன் இவளை நெருங்கி சொல்லி இருப்பானே, விநாடியையும் வீணாக்குபவன் அல்லவே அவன், அதும் அவனின் பாப்பு விஷயத்தில், ஆக இவள் எதிர்பார்த்த காய், கனியாக வில்லை என்பது நன்கு புரிந்தது அந்த காரிக்கைக்கு.

தன் எதிர்பார்ப்பு பொய்த்து போனது கண்டு கொஞ்சமே, கொஞ்சம் நெஞ்சம் வருத்தம் கொண்டாலும், நம்பிக்கையை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவர்கள் இருவருக்குமே ஒரு சமாளிப்பான புன்னகையை பதிலாக்கியவள், அவர்களின் சொற்களுக்கு இணங்க தன் நடையின் வேகத்தை குறைத்து, தன் முகத்தில் மலர்ச்சியை ஓட்ட வைக்க விடாது முயன்ற வண்ணமே, அவர்களை நெருங்கினாள்.

ஆனால் அவளின் முகம்காட்டிய எதிர்பார்ப்பு, ஏமாற்றம் பின்பு நம்பிக்கை என அனைத்து பாவனைகளையும் கவனமாக உள்வாங்கிய வசீகரனுக்கும் வருத்தமே.

அவளை, அவளின் வலியை தான் உணர்ந்ததாக ஒரு குறிப்பு காட்ட கூட அவன் சித்தமாக இல்லை. அவளின் வலியை உணர்ந்தாக காட்டினால், அவள் ஆறுதலுக்கு இவன் தோள் சாய்வாள், அவளின் கண்ணீரை பார்க்கும் சக்தி நிச்சயம் எக்காலத்திலும் அவனுக்கு இல்லை என்பது திண்ணம்.

எனவே தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், இயல்பாக இருப்பதாக காட்டிகொள்ள, அவனின் அம்மாவிடம்,

“என்னமா எதுக்கு இப்போ பாப்புவை அதட்டுறீங்க” என வக்காலத்து வாங்க, அவனை திரும்பி ஒரு முறை முறைத்த ஜெயந்தியோ,

“டேய் கரன் வேண்டாம்டா, இப்போ நான் அவளை மிரட்டுனேன்,அதை நீ பார்த்த, நல்ல வந்துரும் என் வாயில, இப்ப தான் ஆஃபீஸ்ல இருந்து வரியேனு பார்க்குறேன், ஆமா என்ன ட்ரெஸ் கூட மாத்தாம இங்க வந்து நிக்கிற, போ போய் பிரேஷ் ஆகிட்டு வா” என்று,

அவனை கடிந்து பேச ஆரம்பித்தவர், கலைத்து வந்து இருக்கும் தன் மகனின் முகத்தை பார்த்து வாஞ்சையுடன், தன் அருகில் அமர்ந்தவனின் தலையை அன்புடன் கோதியவாறே முடிக்கவும், அந்த யுவதி அவன் அருகே வரவும் சரியாக இருந்தது.

“பரவாயில்லைமா, கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்” என அவனின் பாப்புவை பார்த்தவாறே சொல்ல, இதற்கு மேல் சொன்னாலும் கண்டிப்பாக கேட்க மாட்டான் என புரியவும், ஜெயந்தி அவனுக்கு அவனின் பாப்புவை பார்த்து கண் ஜாடை காட்ட, அவனும் கண் மூடி திறந்து தான் பார்த்து கொள்வதாக சைகை காட்டவும்,

“சரிடா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் உங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து அனுப்புறேன்” என பொதுவாக இருவரிடமும் சொல்லியபடி, அவர்கள் பேச தனிமை கொடுத்து செல்லவும், வசீகரனின் பாப்புவும், அவனுக்கு அருகில் அதே கல் இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னடா பாப்பு வாக்கிங் முடிஞ்சதா, இல்லை என்ன பார்த்ததும் இது தான் சான்ஸ்னு ஓப்பி அடிச்சிட்டு பாதியிலே வந்திட்டியா”

“ஹுக்கும், அப்படியே ஓப்பி அடிச்சிட்டாலும், அத்தை இவ்ளோ நேரம் என்ன பண்ணுனாங்கனு நினைக்கிற, நான் எத்தனை ரவுண்ட் நடந்து இருக்கேன்னு தான் கவுண்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க, இன்னைக்கு கோட்டா ஓவர், அதான் ஒன்னும் சொல்லல, இல்லைனா அவ்ளோ தான்” என நீட்டி முழக்க, அவளின் பதிலில் சிரித்தவாறே,

“என்ன சரக்கு அடிக்கிற மாதிரி ரவுண்ட், கோட்டா இப்படி எல்லாம் பேசுற, நீ சரி இல்லையே”, என அவளை மேலும் கீழும் பார்த்தவாறே வேண்டும் என்றே அவளை வம்புக்கு இழுக்க, அவளோ,

“என்ன சார், நினைப்பு எல்லாம் சொம்பு மேலேயே இருக்கு போலவே, அத்தை கிட்ட சொல்லி ஒரு பூசையை போட்டுற வேண்டியது தான்” என நம்பியார் மாதிரி சற்று தலையை சாய்த்து, இரண்டு கைகளையும் பிசைந்தவாறே வில்லி குரலில் சொல்லவும், விளையாட்டாய் வம்பு வளர்க்க நினைத்தவன், அவளின் குரலில், சொன்ன தோரணையில் நிஜமாகவே அரண்டு போய்,

“அம்மா தாயே, இப்படி தான் ஒரு நாள், அம்மா கிட்ட, கரன் சரக்கு அடிச்சிட்டு வந்து இருக்கான் போல அத்தைனு நீ சொன்னதுக்கு, ஸ்கூல் படிக்கிற பொண்ணு உனக்கு எப்படி அதை பத்தி எல்லாம் தெறியும்னு கேட்காம, கிராதகி நீ சொன்னது உண்மையா பொய்யான்னு கூட என்கிட்ட விசாரிக்காம, தோளுக்கு மேல வளர்ந்த பையன் கூட பார்க்காம, என்னை ஏப்படி எல்லாம் துரத்தி துரத்தி அடிச்சாங்க, அப்பா என்னா அடி” என்று,

அந்நாளுக்கே சென்று மீண்டும் அந்த நினைவில் உடம்பை சிலிர்த்து கொள்ள, அவனின் குரலிலும், அவனின் செய்கையிலும் மங்கை அவள் மனம் விட்டு சிரிக்க, அவளின் சிரிப்பை ரசித்தபடியே,

“இப்போவது மாமானு கூப்பிடலாம் இல்ல” ஏனோ அவளை சீண்டவே வேண்டுதல் வைத்தவன் போலவே பேச,

“அது எல்லாம் முடியாது போடா” அவன் எதிர்பார்த்த மாதிரியே சிலிர்த்து கொண்டு, வினாடி கூட தாமதிக்காமல் அவனின் பாப்புவிடம் இருந்து பதில் வந்தது.

அதேநேரம் வேலையாள் தேனீர் எடுத்துவந்து, இவர்களின் அனுமதிபெற்று அங்கு இருந்த மேசையில் வைத்துவிட்டு சென்றார்.

இவனின் பாப்பு, சூடாக பீங்கான் குடுவையில் இருந்ததை கப்பில் இவனுக்கு வார்த்து கொடுக்க நினைத்து தன் பெரிய வயிறை வைத்துக்கொண்டு குனிய போக, அவனோ அவளை தடுத்துவிட்டு தனக்கு வேண்டிய அளவு வார்த்து கொண்டான்.

தேனீரை ஒரு வாய் உள்ளிழுத்தவன், அவனுக்கு பிடித்த விதத்தில், அவனுக்காக பிரத்தேயாகமாக தயாரிக்கப்பட்டு இருந்த அதன் சுவையில், ஒரு முழு நிமிடம் லயித்துவிட்டு, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேச ஆரம்பித்தான்,

“இது எல்லாம் ரொம்ப ஓவர் பாப்பு, கல்யாணமே ஆகிடுச்சி,எங்கேயாவது மரியாதை தரியா நீ” என கோவம் போலவே கேட்க, அவளுக்கா அவனை தெரியாது, “உன்னை நான் அறிவேன்” என்பதான ஒரு புன்னகையுடன்,

“கல்யாணம் ஆனா மரியாதை கொடுக்கனுமா, இது என்னடா புது புரலியா இருக்கு,” என வாயில் கைவைத்து ஏகத்துக்கும் அதிசயிக்க,

“பேச்சிலரா இருந்தா, அவன் எவ்ளோ நல்லவனா இருந்தாலும் வீட்டுக்குள்ள விட யோசிப்பாங்க, அதே கல்யாணம் ஆகி குடும்பஸ்தனா இருந்தா, நல்லவனோ, கெட்டவனோ கொடுக்குற மரியாதையே தனி தானே” என சிலாகிக்க, அவனின் கூற்றில் சிரிப்பு பொங்கி வர, அதை லாவகமாக மறைத்து, தீவிரமான குரலில்,

“இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது, உங்களையே எல்லாமா நினைத்து, உங்க கிட்ட தன் வாழ்க்கையே ஒப்படைத்து, உங்களை மட்டுமே நம்பி வர பெண்களால தான், உங்க ஆண் வம்சத்துக்கு மரியாதையே, அப்படி இருக்குப்போ நான் எதுக்கு உனக்கு மரியாதை கொடுக்கணும் சொல்லு, சொல்லு” என ஒட்டு மொத்த பெண்களின் சார்பாக வீராவாசமாக, விட்டால் கொடி பிடித்து “நியாயம் வேண்டும், நியாயம் வேண்டும்” என மக்கள் மத்தியில் நியாயம் கேட்பவள் போல பேசினாள்.

அவளின் பேச்சில் அவனோ , “இப்போ நான் என்ன கேட்டனு இவ இந்த பேச்சு பேசுறா” என்று புரியாமல் “பே” என விழித்தான்.

அவன் கேட்ட கேள்வியை அப்படியே திருப்பி , பெண்ணியம் பேச ஆரம்பிக்கவும், இதற்கு பதில் அளித்தால், என்ன கருத்து சொன்னால் கூட, இரவு உணவு நிச்சயம் கிடைக்காது என ஏழாம் அறிவு எச்சரிக்கை செய்ய, சற்று சுதாரித்து அவளின் கேள்வியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, சமாதானமாக,

“சரி கல்யாணம் ஆனதால் மரியாதை கொடுக்க வேண்டாம், உன் மாமன் மகன் தானே நானு, அதுக்காகவது மாமானு கூப்பிடலாம் இல்ல”

இன்று அவளிடம் வாங்கி கட்டி கொள்ளாமல் உறக்கம் கொள்வது இல்லை என்ற வீர முழக்கத்தோடு வந்து இருப்பானோ???

“ஆமா இவரு மாமன் மகன் மாணிக்கம், மாமா, கீமானு சொல்லிக்கிட்டு வந்த மகனே, நீ கைமா தான்” என மிகவும் பாசமாக பேசினாள் அந்த காரிகை.

ஏற்கனேவே இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க, விட்டால் இன்னும் என்ன எல்லாம் பேசுவாளோ என்ற பயம் அவசரமாக முளைக்க, இன்னும் ஏதாவது கேவலமாக திட்டும் முன் முந்திகொள்ள வேண்டும் என முதல் முறையாக சரியாக, புத்திசாலி தனமாக யோசித்து, அவளை பற்றி தெரிந்தும், அவளிடம் வாயை கொடுத்த தன்னை நொந்து கொண்டவாறே,

“அம்மா தாயே, அறியா சிறுவன் தெரியாமல் பேசி விட்டேன், மன்னித்துவிடுங்கள்” என தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்டு, வழக்கம் போலவே சரணாகதி ஆக, அவளோ குறும்புடன்,

“மன்னித்தோம் மானிடா” என அம்பாள் மாதிரி ஒரு கையை தூக்கி அவனுக்கு அபயம் அளிக்க, இருவருமே அடக்க மாட்டாமல் சிரித்து விட்டனர்.

அவளின் சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்தவன், மனதிற்குள் ” நீ எப்பவுமே இப்படி சிரிச்சிகிட்டே இருக்கணும் பாப்பு, அதான் நான் இருக்கேன் இல்ல, எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்டா, நானும் என்னால் முடிந்த எல்லாம் முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன், சீக்கிரமே நல்ல செய்தியோடு வரேன், என்னை நம்புடா” என மானசீகமாக அவளிடம் பேசி கொண்டே, அவள் சிரித்து முடித்தவுடன்,

“சரிடா உள்ளே போகலாம், பனி உங்க ரெண்டு பேருக்குமே ஆகாது” என அவளை கை பிடித்து எழுப்பி, பிடித்த கையை விடாமல், அணைவாக அவளை பிடித்தவாறே உள்ளே அழைத்து சென்றான்.

பிறகு நேரம் ரெக்கை கட்டி பறக்க, அனைவரும் இரவு உணவை உண்டு விட்டு உறங்க செல்ல, இவனின் பாப்பு அவனின் அம்மாவுடன் உறங்க சென்றாள்.

பொதுவாக கர்ப்பமான பெண்களுக்கு பிரசவம் நெருங்க, நெருங்க உடல் உபாதைகள் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும், இரவுகளில் நீண்ட நிம்மதியான உறக்கங்கள் இருக்காது, இது அவர்களுக்கு ஒரு வித சோர்வை தர, சில சமயங்களில் ஹார்மோன் விளைவுகளால் கோவம், எரிச்சல் வரும், கணவன்மார்களுக்கு அவர்களை தாங்கும் பொறுமை அரிது என்பதால் தான் பிள்ளைப்பேற்றிற்கு தாய் வீடு செல்வது வழக்கம்.

வசீகரனின் பாப்புக்கு அம்மா இல்லை என்பதால், இவனுடைய அம்மாவே அவளுக்கும் அம்மாவாக, மருத்துவர் பிரசவத்திற்கு குறித்து கொடுத்த நாளுக்கு, இன்னும் இரண்டு வாரமே இருக்க, இவள் இரவு உறங்குவது எல்லாம் இவனின் அம்மா, அவளின் அத்தை ஜெயந்தி அறையில் தான்.

அவனின் பாப்புவுடன் அவனின் பெற்றோரின் அறைக்கு சென்றவன் அவள் உறங்கும் வரை அவளிடம் பேசிகொண்டு இருந்துவிட்டு, அவள் உறங்கியதும் வெளியே தோட்டத்திற்கு வந்தான்.

சீராக பராமரிக்கப்பட்டு இருந்த அந்த புல்வெளியில் தலைக்கு கைகளை கொடுத்தவாறே படுத்தவன், நிமிர்ந்து வானத்தை பார்க்க, வானமோ நிலா இல்லாமல் வெறுமையாய், “உன்னோட நிலா இன்று உன்னோடு இல்லை, ஆனா என்னோட நிலா பெண் என்னோட தானே இருக்கா” என்று நினைக்க, நினைக்க மனம் முழுதும் தன்னவள் மேல் காதலில் கசிந்துருக, அந்த உணர்வில் அப்படியே லயித்து இருந்தான்.

மனமோ தன் வழக்கம் போல இன்று முழுவதும் நடந்தவைகளை அசைபோட, மாலையில் அவனின் பாப்புவுடனான உரையாடலில் மீண்டும் புன்னைகை உதயமாக, முழு புன்னகையுடன் வசீகரன்.

மனமோ அவனின் பாப்பு, ஒன்னரை வருடத்துக்கு முன்பு, இந்த வீட்டுக்கு வந்த தினத்திற்கு செல்ல, அந்த நாள் இன்னும் பசுமையாய் அவன் மனதில், அதுசரி அவனின் பாப்பு சம்பந்தப்பட்ட எதை அவன் மறந்து இருக்கான்.

அந்த நாளை நினைக்கவும் மீண்டும் ஒரு புன்னகை உதடுகளில் நெளிய, மனமோ,

“அன்றைக்கு வரும் போதும் இப்படி தான் மனசு வருத்தத்தோடு வந்தா , இன்றும் அப்படியே இருக்கா, மனிதர்களால் சரி செய்ய கூடியதா இருந்தா எப்பாடு பட்டாவது செய்யலாம், ஆனா இது ” என நினைக்க அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு கிளம்பியது.

மனமோ அதன்போக்கில் அவனின் பாப்பு வருகை, அதன் பிறகு அவர்களின் காதல், கல்யாணம், இடையில் நடந்த பிரச்சனைகள் என எல்லாவற்றையும் முற்று முழுதாய் அசைபோட, எல்லாம் கண்முன்னே காட்சிகளாய் விரிய அப்படியே அந்த நினைவுகளில் முழ்கி திளைத்தான்.

நாமும் வசீகரனோடு கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு சென்று அவன் நினைவுகளோடு சேர்ந்து பயணிப்போம் தோழமைகளே.

காதல் கொள்வோம்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!