Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-2

பிறப்பால் மட்டுமே சில விஷயங்கள் மறுக்கப்படுவது எவ்வளவு கொடியதோ, அதே அளவு கொடியது, பிறப்பால் மட்டுமே திணிக்கப்படும் விஷயங்களும்.

வசீகரன் பரம்பரை பணக்கார குடும்பத்தின் ஏகவாரிசாக பிறந்த ஒரே காரணத்தினால், குடும்ப தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது தான் திறமை என்ற எண்ணம் கொண்ட வசீகரனின் தந்தை, அவனை குடும்ப தொழிலை ஏற்று நடத்தமாறு, அவனின் படிப்பு முடிந்த கையோடு வற்புறுத்த தொடங்கினார்.

வசீகரனின் எண்ணமோ, முன்னோர்கள் எழுப்பிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதில் என்ன பெருமை இருக்க முடியும், புதிதாக ஒன்றை உருவாக்கி, அந்த ஒன்றில் இமயம் தொட்டு, தனக்கென ஒரு அடையாளத்தை, அதும் தன்னை ஈர்த்த துறையில் உருவாக்குவது அல்லவோ திறமை.

இவ்வெண்ணதால், வசீகரன் அவனின் தந்தையிடம் போராடி, முழுதாக ஐந்து வருடங்களை, தனக்கான அடையாளத்தை உருவாக்க தருமாறும், அந்த காலகட்டத்திற்கு பிறகு குடும்ப தொழிலை ஏற்பதாக உறுதி அளித்தும், அவரின் சம்மதத்தை பெற்று இருந்தான்.



Advertisement

[the_ad id=”6605″]

தன்னை போலவே ஒத்த எண்ணம் கொண்ட திறமைசாலிகளான, தன் இரு நண்பர்களை உடன் கொண்டு, “மைக்ரோ லெபாரர்டரி” என்னும் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி இருக்க, கடந்த மூன்று வருடங்களில் நண்பர்களின் கடும் உழைப்பால் இவர்களின் தொழில் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்து இருந்தது.

மும்மூர்த்திகளில் ஒருவன் வசீகரன், மற்றொருவன் பள்ளிப்பருவத்தில் இருந்து அவனுடன் பயிலும் அவனின் உற்ற நண்பனான கிருஷ்ணா.

Advertisement

கிருஷ்ணா, ஒரு ஜமீன் குடும்பத்தின் ஒரே வாரிசு, வசீகரனை போல அவனின் தந்தையிடம் கிருஷ்ணா, அனுமதி எல்லாம் வாங்கவில்லை, வெறும் தகவல் தெரிவித்ததோடு சரி.

Advertisement

வசீகரனை போல இத்தொழிலில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபடாமல், அவர்களின் குடும்ப தொழிலும் கவனம் செலுத்துபவன்.

கிருஷ்ணாவின், அங்கீகாரம் இல்லாமல், அவர்களின் குடும்ப தொழிலில், அவனின் தந்தை எந்த முடிவுகளும் எடுப்பதில்லை. ஆனால் குடும்ப தொழிலை காட்டிலும் அதிக கவனமும், நேரமும் செலுத்துவது, நண்பர்கள் தொடங்கிய தொழிலில் தான்.

யாரிடமும் அவ்வளவு எளிதில் ஒட்டாத சுபாவம், ஏனோ வசீகரனிடம் மட்டும் ஆழ்ந்த நட்பு கொண்டவன்.

Advertisement

அவனின் கண், அந்த பார்வை மற்றவரை உறைய வைக்க வல்லது.

குறிஞ்சி பூவை விட அறியது இவன் உதடுகள் பூக்கும் ஒரு புன்னகை.

தோள் வரை வளர்ந்த சிகையை, இக்கால யுவதிகளை போல முன் நெற்றியில் இருந்து முடிகளை எடுத்து அப்படியே சுருட்டி, அக்கால முனிகளை போல உட்சியில் ஒரு விதமான கொண்டை போட்டு, மீதிமுடியைய் அப்படியே விட்டு அவன் நடந்து வருகையில், அப்பா நிச்சயம் இவனிடம் எட்டியே நிற்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை உணர்வை நம்மை அறியாமல் நம்முள் விதைக்கவல்ல முரட்டு தோற்றம்.

கிருஷ்ணா மற்றும் வசீகரன், இவர்கள் இருவரின் கல்லூரி தோழனான பாலாவோ, பணக்கார வீட்டின் கடைக்குட்டி.

அவனின் குடும்ப தொழில்களை அவனின் தந்தையும், அண்ணனும் பார்த்துகொள்ள, குடும்ப தொழில்களை பார்க்காவிட்டாலும், இவன் நண்பர்களுடன், பொறுப்பாக தொழில் செய்வதே, அவனின் வீட்டினருக்கு மிக்க மகிழ்ச்சி.

விளையாட்டு தனமும், திறமையும் ஒருங்கே கொண்டு, முப்பொழுதும் உதட்டிலே உறைந்து இருக்கும் புன்னகை, துரு துருவென கண்கள், எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொண்டு, வாய் ஓயாமல் பேசும் ரகம், என அப்படியே கிருஷ்ணாவிற்கு நேர் எதிர்பதம்.

[the_ad id=”6605″]

நண்பர்கள் மூவரும், வாரா வாரம் சனிக்கிழமை இரவு, வசீகரனின் வீட்டில் கூடி, தொழிற்சாலையின் செயற்பாடுகள், மாற்றம் தேவைப்படும் பிரிவுகள், கவனம் செலுத்தப்பட வேண்டிய இடங்கள், என அனைத்தையும் பற்றி ஆலோசிப்பது வழக்கம்.

அப்படியான ஒரு சனிக்கிழமை இரவு, நேரம் நள்ளிரவை நெருங்கும் சமயம், நண்பர்கள் மூவரும் வசீகரனின் வீட்டில், வரவேற்பரையில் உள்ள சோபாவில் வசதியாய் அமர்ந்து, ஆளு ஆளுக்கு ஒரு மடிக்கணிணியுடன் ஆழ்ந்து விவாதித்து கொண்டு இருந்தனர்.

அப்போது, அலைபேசி, தொல்லை பேசியாகி அவர்களின் விவாதத்திற்கு தற்காலிக தடை விதிக்க, சற்று எரிச்சலுடனே அழைப்பை ஏற்றான் வசீகரன், வாசலில் இருந்து அவனின் வாயிற்காவலர் தான் அழைத்து இருக்க,

“ம், சொல்லுங்க”

“பொண்ணா???”

“யாரா இருந்தாலும் இந்த நேரத்தில் பார்க்க முடியாது, நாளைக்கு மார்னிங் ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லுங்க” என்று அவரின் பதிலுக்கு காத்திருக்காமல், முடித்துவிட்டான்.

தங்களின் பேச்சு வார்த்தை தடைப்பட்ட எரிச்சலில், தன்னை தேடி ஒரு பெண், அதுவும் இந்த நேரத்தில் வர வேண்டிய அவசியமே இல்லை என்ற அதீத நம்பிக்கையில், வந்தவர் யார், என்ன பெயர் என்று கூட விசாரிக்காமல், விசாரிக்க தோன்றாமல் அழைப்பை துண்டித்தான், அதன் பின்விளைவுகளை பற்றி அறியாமல்,

“என்ன மச்சான், இந்த நேரத்துல உன்னை தேடி..…. ஒரு பொண்ணு….. அதுவும் வீட்டுக்கே………” என பாலா ஒரு மார்க்கமாக இழுக்க, அவனின் இழுவையில் கடுப்பான வசீகரன், பதில் சொல்ல எத்தனிக்க, பாலாவோ,

“இரு,இரு, நீ ஏதும் சொல்லாத, நானே என்னோட ஏழாம் அறிவை வச்சி கண்டுபிடிக்கிறேன்” என இரண்டு வினாடி மோட்டுவளையை பார்த்து யோசிப்பது போல பாவனை செய்தான்.

வசீகரன், “பாலா” என மீண்டும் ஆரம்பிக்கவும், பாலா தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து,

“யுரேகா, யுரேகா ” என ஆர்க்கிமிடிஸ்கு பிறகு அதே போல, அதீத உற்சாக மிகுதியில் கத்தவும், சரியாக இருந்தது.

வசீகரனோ அவனை திட்ட நினைத்து வாயை திறக்க போனவன், அவனின் கூச்சலில், தான் ஆற்ற இருந்த அரும்பெரும் பணியை (அதான்பா பாலாவை திட்டுறது) அப்படியே விட்டு விட்டு, அதிமுக்கிய சந்தேகமாக,

“அது யாரு மச்சான் ரேகா” என்று கேட்டு வைக்க, அவனை திரும்பி பார்த்த பாலா,

“எருமை மாடு, அது ரேகா இல்ல, யுரேகா, அப்படின்னா, கண்டு பிடிச்சிட்டேன்னு அர்த்தம், இது கூட தெரில உன்னை எல்லாம்” என கண்களாலே அவனை காறித்துப்ப, வசீகரனோ,

“எல்லாருக்கும், எல்லாம் தெரிஞ்சி இருக்கணும்னு அவசியம் இல்ல மச்சான், நீ என்ன கண்டுபிடிச்ச அதை சொல்லு, கேட்போம்” என தான் வாங்கிய மொக்கையை மிக அழகாக சமாளித்து, ஒரு தத்துவத்தையும் சொல்லி, அவனை திறமையாக திசை திருப்பி விட்டான்.

[the_ad id=”6605″]

வசீகரனின் கேள்வியில் பாலாவும், தன் அற்புத கண்டுபிடிப்பை, விளக்க கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பை விட விரும்பாமல்,

“நீயும் அந்த பொண்ணும் லவ் பண்றிங்க, அந்த பொண்ணு வீட்டுல தெரிஞ்சி பெரிய பிரச்சனை ஆகிடுச்சு, அந்த பொண்ணோட அப்பா, அவரோட பொண்ணுக்கு, அதான் உன் காதலிக்கு வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவும்,அந்த பொண்ணு காதலிச்ச உன்னை தேடி அர்த்தசாமத்துல வீட்டை விட்டு ஓடி வந்துடுச்சு, நீ என்ன மச்சான், யாருன்னு கூட கேட்காம போக சொல்லிட்ட, அந்த பொண்ணு எங்க போகும், அதுக்கு உன்னைவிட்டா யாரை தெரியும், நீ பஸ்ட் வாட்சமேன்கு போன் பண்ணு, ,” என பாலா மூச்சுவிடாமல் பேச,

இன்னும் வசீகரனே, அவன் காதலை உணராத காலகட்டம் அது.

அவனின் நிலா பெண்ணின் மீதான அவன் காதலை உணந்த பின்பு, பல எதிர்ப்புகளை அவன் சமாளிக்க வேண்டி இருக்கும் என்பதோ, அந்தஸ்து பார்க்கும் இவன் தந்தை தான் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதோ அறியாமல் பாலா கொஞ்சம் மாற்றி ஒரு கதையை சொல்லிவைத்தான்.

(பாலா நீ ஒரு தீர்க்கதரிசிடா, உன்னோட மதிப்பு இந்த பசங்களுக்கு தான் தெரில, என்னவோ போடா)

வசீகரனோ, அவன் பேச ஆரம்பிக்கவும், முதலில் எந்த பெண்ணை பற்றி பேசுகிறான் என பேய் முழி முழித்தான்.

பின்பு தான், தான் பேசிய ஒரே வார்த்தையை வைத்து ஒரு முழு திரைகதையை எழுதி, கற்பனையிலேயே ஒரு காதலியையும், கோவக்கார மாமனாரையும் உருவாக்கி உலவவிட்ட தன் நண்பனை, திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டு இருந்தவன், அவன் பேசி முடிக்கவும் தான், தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டான்,

தான் அமர்ந்து இருந்த சோபாவில் இருந்த தலையனையை தூக்கி பாலாவின் மீது வீசினான்.

பாலாவோ, ஒரு இலவம் பஞ்சு தலையணைக்கு, 50 கிலோ அரிசிமூட்டையை தூக்கி போட்டது போல, “ஐயோ, அம்மா ” என ஏகத்துக்கும் அலறினான்.

வசீகரனோ ஒரே எட்டில் அவனை அடைந்து அவனின் வாயை தன் கையால் மூடி, தலையில் கொட்டி கொண்டே “இனிமே யோசிக்கிறேனு வாயை திறந்த மகனே, பேச வாய் இருக்காது” என அடி வெளுக்க ஆரம்பித்தான்.

பாலாவோ “பயபுள்ள டென்ஷன் ஆகிட்டான் போலவே” என நினைத்து கொண்டவன்,
வாங்கிய அடியை எல்லாம் தூசு போல தட்டி விட்டுக்கொண்டே,

“அப்ப நான் சொன்னது எல்லாம் உண்மை இல்லையா, அந்த பொண்ணு உன்னோட லவ்வர் இல்லையா” என அப்பாவியாய் கண்களை விரிக்க,

வசீகரனோ “அடேய், உன்னை” என கத்தியவறே தலையணைக்கு பதில், தானே பாலாவின் மேல் பாய தயாரானான்.

அப்போது தான் தங்கள் இருவரையும் முறைத்து கொண்டு அமர்ந்து இருந்த கிருஷ்ணாவை பார்த்ததும், “வாம்மா மின்னல்” போல கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய இருக்கைக்கு வந்த வசீகரன்,

“ஏன் பாலா, இப்படி பொறுப்பே இல்லாம இருக்க, பார்க்க வேண்டிய வேலையே தலைக்கு மேல இருக்கு, நீ என்னடானா விளையாடிக்கிட்டு இருக்க” என நடந்ததுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல பேச,

பாலாவோ அவன் பேசியதை எல்லாம் காதிலே வாங்காமல், இவ்வளவு நேரம் தன் அருகில் அமர்ந்து இருந்தவன் எப்பொழுது கிருஷ்ணாவின் பக்கத்தில் போனான், என யோசித்தபடி நிமிர்ந்தான்.

நிமிர்ந்தவன் அப்போது தான் கிருஷ்ணாவை பார்க்க, அவனின் முறைப்பில்,

“ஆத்தி, இவனை மறந்துட்டோமே, இவனை பார்த்து தான் அந்த பயபுள்ள பம்புச்சா, சமாளி பாலா, சமாளி பாலா” என மனதிற்குள் பேசியவன்,

கிருஷ்ணாவை பார்த்து, “இப்படி உத்து பார்க்காத மச்சான் வெட்கமா இருக்கு”, என்று வெட்கபடுவதை போல அந்த முழு ஆண்மகன் நாணி, கோனினான்.

அவனின் செய்கையில் வசீகரன் அடக்கமாட்டாமல் சிரித்துவைக்க, கிருஷ்ணா அவனை திட்ட வாய் திறக்கவும், வாசலில் ஏதோ சத்தம் கேட்கவும், எல்லார் கவனமும் அங்கு திரும்பியது.

வாசலிலே ஒரு மாது, பார்த்ததும் மனதுக்கு சொல்லவென்னா இதம் தரும், வானத்து மதியை போல தோற்றத்துடன், அனால் சற்று களைத்த தோற்றத்தில் நிற்க கண்டனர் நண்பர்கள்.

வசீகரனோ, “தான் காண்பது கனவோ, இல்லை தன் கற்பனையோ” என கண்களை கசக்கிவிட்டு பார்க்கலானான்.

[the_ad id=”6605″]

அவள் பிம்பம் மறையாமல் இருக்கவும் தான், இவன் வீட்டில், அவள் விஜயம் உண்மை என்ற தகவல் மூளைக்கு சென்று சேர்ந்த நொடி , முற்று முழுதாய் தலை முதல் கால் வரை, உடல் முழுதும் ஒரு மகிழ்ச்சி மின்னல் தெறிக்க, நொடி கூட தாமதிக்காமல், எல்லையில்லா மகிழ்ச்சியில் “பாப்பு” என்ற சந்தோஷ கூவலோடு, அவளை நோக்கி விரைந்தவன், அவளை தோளோடு அணைத்து இருந்தான்.

பாலாவோ தன் அருகில் நின்று இருந்த கிருஷ்ணாவிடம்,

“யாரு மச்சா இந்த பொண்ணு” என்று கேட்டவன்,

அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “அவன் தங்கச்சியா இருக்குமோ” என அவனுக்கு அவனே சாதகமான பதிலை சொல்லி கொண்டு,

“பாருடா இப்படி அழகான தங்கச்சியை இவ்ளோ நாளா கண்ணுல காட்டாம மறைச்சிவச்சி இருக்கான், இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, அந்த பொண்ண கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி அவனை உண்மையாவே மச்சானா ஆக்கியிருப்பேன், ஹ்ம்” என பெருமூச்சு விட்டான்.

பாலா, அழகான பெண்களை பார்த்ததும், தான் வழக்கமாக சொல்லும் வசனத்தை சற்று மாற்றி, அவள் யார், என்ன என்று கூட தெரியாமல் சொல்லிவைத்தான்.

கிருஷ்ணாவோ, அந்த காரிகையின் மேல் இருந்து பார்வையை விலக்காமல்,

“அவள் உனக்கு தங்கச்சி முறை தான் வருவா” என இன்னதென்று பொருள்விளங்கா குரலில் சொல்ல, பொங்கி எழுந்த பாலாவோ,

“உனக்கு என்னப்பா, சரண்யா இருக்கா, எனக்கு அப்படியா, இந்த பொண்ணு கரனுக்கு தங்கச்சின்னா, எனக்கு கனவு பன்னி, ச்சீ கன்னி” என கனவு கன்னியை, கூட சொல்ல தெரியாமல், பன்னி என்று சொல்லி சொதப்பி வைத்தான் அந்த காதல் மன்னன்.

அங்கு வசீகரனோ அதற்குள் அந்த பெண்ணை வீட்டின் உள்ளே தன் அணைப்பிலே அழைத்து வந்தவன், தன் நண்பர்களை பார்க்கவும் தான் அவர்கள் இருப்பதை உணர்ந்தவன் போல, ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.

பாலாவோ ,மேட்டுக்குடி படத்தில், கவுண்டர் மணி கார்த்திகிடம் கொடுப்பதை போல ஒரு ரொமான்டிக் லுக்கை அந்த யுவதியை நோக்கி வீசியவாறே,

“மச்சான் யாருடா இவங்க” என அவளை பற்றி அறியும் ஆவலில் கேட்க, வசீகரனோ,

“இவளை நான் எதிர்பார்க்கவே இல்லடா, அதான் ஷாக்ல ஒன்னுமே புரில, மச்சான் இது பாப்பு, ச்ச சாரி, இது உமையாள் ” என இவனிடம் சொல்லிவிட்டு, அவனின் பாப்புவிடம் திரும்பி,

“இது பாலா” என அறிமுகப்படுத்த ஆரம்பிக்க, அவனை இடைவெட்டிய அவனின் பாப்பு,

“ஆவின் பாலா, இல்லை ஆரோக்கியா பாலா” என இமைத்தட்டி அப்பாவியாய் கேட்டுவைக்க, அவளின் குறும்பு புரிந்த வசீகரன் சிரிக்க, பாலாவோ கடுப்புடன்,

“ஹான் அமலாபால்” என,

“எப்படி, எந்த சைடுல இருந்து பார்த்தாலும், அமலாபால் மாதிரி தெரியலையே” என அசராமல் உமையாள் அடித்து விளையாட, கடுப்பான பாலாவோ,

“வேணாம் மச்சான், உன் தங்கச்சிகிட்ட சொல்லி வை, என்னை ரொம்ப கலாய்க்கிறா, அப்புறம் நானும் பேசுவேன்” என சொல்ல,

உமையாளும், வசீகரனும் ஒருவரை ஒருவர் பார்த்து அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தனர். ஒருவாறு சிரித்து முடித்த வசீகரன்,இவர்களின் சிரிப்பை பார்த்து குழம்பி நின்ற பாலாவை நோக்கி, சிரிப்பின் மிச்சங்களுடன்,

“அடேய், அவ என் தங்கச்சி இல்லடா, என் அத்தை பொண்ணு” என்று அறிவிக்க, பாலாவோ,

“எது அத்தை பொண்ணா, (எக்கோ எபெக்ட் எல்லாம் கேட்க) இவனுங்களுக்கு மட்டும் எப்படி தான் இவ்ளோ அழகா அத்தை பொண்ணுங்க இருக்காங்களோ, நம்ப முறைபொண்ணு எல்லாம் ஒன்னு ஸ்கூலுக்கு போகுதுங்க, இல்ல ஸ்கூலுக்கு போற பசங்களோட இருக்குதுங்க, ஹுக்கும்” என மனதிற்குள் சலித்துக்கொள்ள, இவனின் முகத்தை பார்த்த உமையாள், விளையாட்டு பேச்சை கைவிட்டு,

“பாலா அண்ணா, தப்பா எடுத்துக்காதீங்க, உங்களை பத்தி எப்பவுமே கரன் சொல்லி, சொல்லி, எனக்கு உங்களை புதுசா பார்க்குற பீல் இல்ல, அதான் கொஞ்சமே, கொஞ்சமே கலாச்சிட்டேன்” என காதுகளை பிடித்து, மன்னிப்பு கேட்கும் பாவனையில் சொல்ல,

அவளின் கிண்டலை கூட பொறுத்துக்கொண்டு பாலாவால், “அண்ணா” என்ற அழைப்பை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,

“அம்மா தாயே, நீ நாயே, பேயேனு கூட கூப்பிடு, ஆனா அண்ணானு மட்டும் கூப்பிடாத, என்னோட சின்ன இதயம் தாங்காது” என நெஞ்சில் கைவைத்து சொல்ல, உமையாளோ சிரிப்புடன்,

“நீங்க கரன் அஹ மச்சானு கூப்பிடுறீங்க, நான் அவனுக்கு அத்தை பொண்ணு, அப்போ நீங்க எனக்கு அண்ணா முறை தானே” என விம்பார் போட்டு விளக்க, பாலாவோ,

“என்னோட வாயால தான் நான் கெட்டனா, அந்த பரதேசிக்கு இப்படி ஒரு அழகான அத்தை பொண்ணு இருக்கிறது தெரிஞ்சு இருந்தா, நான் ஏன் அவனை மச்சானு கூப்பிடிருக்க போறேன், அந்த எருமையை, என் அருமை அண்ணானா தத்து எடுக்க தவறியதால், உன்னை தங்கச்சியா தத்து எடுத்துகிறேன், வேற வழி” என பாலா விளையாட்டு போலவே அவளை தங்கையாய் அங்கீகரித்தான்.

[the_ad id=”6605″]

இது தான் பாலா, எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அப்படியே வாழ்க்கையயை அதன் போக்கில் வாழ்பவன். ஒரு அழகான பெண், என ஆர்வம் கொண்டு பேச விழைய, அவளோ அண்ணா என்று அழைக்க, அடுத்தகனமே சிறு சுணக்கம் கூட இல்லாமல் தங்கை என்று ஏற்று கொள்ளும் அளவு நல்லவன்.

இவர்களின் இவ்வளவு அட்டகசத்துக்கும், ஒரு வார்த்தை, குறைந்தபட்சம் ஒரு இளநகை கூட உதிர்க்காமல், வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான் கிருஷ்ணா.

கிருஷ்ணாவை பார்த்த பாலா, அவனின் பார்வைக்கான அர்த்தத்தை அறியமுடியாமல், மனதிற்குள்,

“அடேய், யாராவது இவனோட பார்வைக்கு ஒரு சப்-டைட்டில் போடுங்கடா, ஒரு மண்ணும் புரிய மாட்டுது” என மண்டையை பிய்த்துக்கொண்டான்.

அப்போது தான் கிருஷ்ணாவை பார்த்த உமையாளும், அவனின் சில்லிட வைக்கும் பார்வையில் உறைந்து நின்றாள்.

காதல் கொள்வோம்………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!