Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-11

கனவின் தாக்கமும், அது தந்த உணர்வின் தாக்கமும், ஆழி பேரலையாய் கிருஷ்ணாவை சுருட்டி தனக்குள் இழுக்க, தவியாய் தவிக்க ஆரம்பித்தான்.

நான்…….
நான் போய்…..
எப்படி……
எப்படி……
அதும் உமையாளை….
என யோசிக்க,யோசிக்க மனதில் அழுத்தம் தான் அதிகரித்தது கிருஷ்ணாவுக்கு.

ஒரு கட்டத்தில் இந்த போராட்டித்தில் மனம் துவள ஆரம்பிக்க, தனியல்பாய் அருகில் இருந்த மேசையின் மீது இருந்த தண்ணீர் குவளையை எடுத்து கொஞ்சம் நீரை பருகினான்.

மனம் கொஞ்சம் கொஞ்சமாக சமன்பட, ஆரம்பகட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவன், நேரத்தை பார்க்க அதுவோ அதிகாலை மணி நான்கு என காட்ட,உமையாளை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.



Advertisement

தனக்கு அவளின் மீது காதலா??????

உமையாளை நினைக்கும் போதே உள்ளே பரவிய அந்த இதம், அந்த இனிமை எல்லாம் அந்த உணர்விற்கு காதல் என்று பெயர் சூட்டுகையில் காணாமல் போன உணர்வு கிருஷ்ணாவுக்கு.

காதல்!!!!!!!!!

Advertisement

உச்சரிக்கும் போதே, உள்நாக்கு வரை திதிக்க வேண்டிய வார்த்தை, அவனுக்கு வேப்பங்காயாக கசந்து வழிந்தது.

Advertisement

காதல்!!!!!!!!!

கிருஷ்ணாவின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

இதே வார்த்தை அவனின் வாழ்க்கையில் இருந்து அநேக சந்தோஷங்களை அவனிடம் இருந்து பறித்து இருக்கிறது.

Advertisement

அந்த வார்த்தை பரிசளித்த காயங்கள் ஆயிரம் அவனுக்கு. காதல், கல்யாணத்திற்கு எல்லாம் அவன் வாழ்க்கையில் இடம் இல்லை.

இதுவரை அதில் உறுதியாக இருந்தவன் தான், ஆனால் உமையாள் அவனை அசைத்து பார்க்கிறாள். ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு நெருக்கமாய் அவளை உணரவைக்கிறாள்.

அவள் மட்டுமே அறிமுக படுத்திய அந்த மென்னுணர்வுகள், அப்படியே உடல் முழுதும் வியாபிக்க, அவனால் அந்த உணர்வுகளை புறந்தள்ளி, புறக்கணிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இவனின் உணர்வுகள், எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு உமையாளின் உணர்வுகளும் முக்கியம் அல்லவா…

தான் காதல் என்று போய் அவளின் முன் நின்றால், அவளின் பிரதிபலிப்பு எப்படியாக இருக்கும், அவளுக்கும் தன்னை பிடிக்குமா???? இப்படியாக கிருஷ்ணாவின் எண்ணம் பயணித்தது.

ஒருவேளை, இருவரும் காதலித்து, அவளை மணந்தால் கூட தன்னால் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியுமா????

மில்லியன் டாலர் கேள்வி அவனின் முன்பு.

அவன் வாழ்வின் சிறுவயது முதல் இளமைக்காலம் வரையிலான பற்பல காட்சிகள் கண் முன்னே விரிய, அந்த காட்சிகளின் கணம் தாங்காமல் அப்படியே கண்களை மூடினான்.

மூடிய கண்களுக்குள் வந்து சிரித்தான் அவனின் ஆருயிர் நண்பன் வசீகரன். “இவனை எப்படி மறந்தேன் நான்” என தன் தலையில் தானே குட்டிக்கொண்டான் கிருஷ்ணா.

கிட்டத்தட்ட பதினேழு வருட நட்பு, உமையாளை பற்றிய தன்னுடைய எண்ணத்தை வசீகரன் அறிய நேர்ந்தால், தன்னால் எப்படி தன் நண்பனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியும்.

அதும் அவனுக்கு எல்லா விதத்திலும் உரிமைப்பட்டு, உடமையாக தகுதியான உமையாளின் மீது, தன் இத்தகைய எண்ணம் எத்தனை பெரிய அவமானம்.

பல எண்ணங்கள் மனதில் ஊர்வலம் போக, அப்படியே அமர்ந்து விட்டான் கிருஷ்ணா. அவனுக்கு காதல் வந்ததையே அவனால் நம்பமுடியவில்லை, இதில் அந்த காதலின் எதிர்காலம் வேறு அவனை பெரிதாக மிரட்டியது.

தான் உற்ற காதலை உரியவளிடமும் சொல்லி ஆராதிக்க முடியாது, இதை உற்ற நண்பனிடமும் சொல்லி ஆறுதல் தேடவும் முடியாது, என்று எண்ணுகையிலே விரக்தி புன்னகை ஒன்று உதயமானது.

“காதல்” ஒரு வேளை இந்த வார்த்தைக்கும் தனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தானோ….

இந்த காதலால் நிகழ போவது எல்லாம் அனர்த்தங்கள் மட்டுமே. இதற்கு இக்காதல் என்றும் என்னோடு ,நான் மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்துவிட்டு போகட்டுமே என்று தான் கிருஷ்ணாவால் யோசிக்க முடிந்தது.

அந்நிலையிலும் அவனால் அந்த காதலை வேண்டாம் என்று தூக்கி எறியமுடியவில்லை. தூக்கி ஏறியவேண்டும், என்ற எண்ணம் கூட உதிக்கவில்லை அவனுக்கு.

கிருஷ்ணா அறியாமலே, அவன் மனதின் பொக்கிஷ அறையில் உமையாள் பத்திரமாக ஆராதிக்கப்படுவதை அவன் அறிந்திருக்கவில்லை. இது ஏற்படுத்த போகும் விளைவுகளையும் அவன் அறியவில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவன், பெருமூச்சோடு நிமிர கிழக்கு வெளுக்க தொடங்கி இருந்தது. தன் அறையில் இருந்த பால்கேனியின் வந்து நின்றவன், இமைக்காமல் ஆதவனையே பார்த்திருந்தான்.

ஒரு சிறு பொறியாக பற்றிய காதல், கூடிய விரைவில் கொழுந்துவிட்டு எறியும் என்றோ, தனக்குள்ளே மறைத்துவைக்க நினைக்கும் அந்த காதலின் தழல் தன்னையே எரிக்கும் என்றோ, அவன் அறியவில்லை.

உண்மையில் காதலின் பால பாடம் கூட அறியாத அப்பாவி தான் போலும் கிருஷ்ணா. தன் காதலை தனுக்குளே புதைக்க நினைக்க, இவனுக்கு இனி நித்தமும் போராட்டம் தான்.

இதை எல்லாம் அறியாமல், ஆதவனை பார்க்க பார்க்க, ஏதோ ஒரு விதத்தில், தான் எடுத்த முடிவு இன்னும் வலுப்பெற, தன் காதல் தன்னோடு மட்டும் தான், என மந்திரம் போல ஜெபித்தவன், சிறுது நேரத்திற்கு பிறகு குளியலறை நோக்கி சென்றான்.

மணி ஒன்பது என கடிகாரம் ஒன்பது முறை மணி அடித்து அறிவிக்க, அதிசயத்திலும் அதிசயமாக உமையாளும் குளித்து முடித்து, உணவு மேசையில் வசீகரனுக்காக காத்திருந்தாள்.

அப்போது தான் தன் அறையில் இருந்து வந்த வசீகரன், உமையாளை வியப்பாய் பார்க்க, உமையாளோ,

“சீக்கிரம் வா கரன், பசிக்குது, உனக்காக தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என, அவளின் பசி அறிந்து சாப்பிட அமர, இருவரும் பேச்சுகள் இன்றி அமைதியாக உண்டு எழுந்தனர்.

வசீகரனுக்கு, உமையாள் எதையோ பேச நினைக்கிறாள் என்பது புரிய, அமைதியாக சோபாவில் அவளின் அருகில் அமர, அதேநேரம் பாலாவும் வந்து சேர்ந்தான்.

பாலாவை வரவேற்று அவனை சாப்பிட சொல்ல, அவன் தான் காலை உணவை முடித்துவிட்டு தான் வந்தாக சொல்ல, அவனும் அவர்களுடனே அமர்ந்தான்.

சிறு தயக்கத்துக்கு பிறகு உமையாள்,

“கரன்…………” என இழுக்க, அவளின் முக குறிப்பிலேயே அவள் ஏதோ கேட்க போகிறாள் என அறிந்திருந்த வசீகரன், அவளின் இழுவையில் அது உறுதியாகிவிட,

“என்ன பாப்பு” அவளின் தயக்கத்தை தகர்க்கும் வாஞ்சையோடு கேட்க, இவர்கள் இருவரையும் பாலா சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க, அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத உமையாள்,

“நான் ஒன்னு கேட்பேன், நீ முடியாதுன்னு சொல்ல கூடாது” என பீடிகைபோட, வசீகரனோ,

“அப்படி எண்ணத்தை கேட்க போற, கேளு பாப்பு”

“நானும் உன்கூட நாளைல இருந்து ஆபிஸ் வரட்டுமா” என, வசீகரனோ முகம் மலர்ந்தவனாக,

“அதனால் என்னடா தளாரமா வா” என, அவன் முகம் மலர்ந்த விதத்திலும், அவன் அவளை அழைத்த விதத்திலும், வசீகரன் தான் கேட்டதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை சரியாக புரிந்துகொண்ட உமையாள், அவனுக்கு விளக்கிடும் விதமாக,

“நான் ஆபீஸ் அஹ விசிட் பண்ண வரட்டுமானு கேட்கலை, ஒர்க் பண்ண வரட்டுமானு கேட்டேன் கரன்” என, உமையாளோடு சேர்ந்து பாலாவும் இப்போது ஆர்வமாக வசீகனின் முகத்தை பார்த்தான் அவனின் பதிலுக்காக.

வசீகரனோ தீவிர சிந்தனையின் வசம். அவனின் பாப்புக்கு அலுவலகம் வருவது, வேலை பார்ப்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை தான்.

அதுபோக அங்கே எப்போதும் பரபரப்பாக இருந்தபவள், எவ்வளவு நாள் வீட்டுக்குள் இருப்பாள் என்பதும் அவனுக்கு யோசனையாகவே தான் இருந்தது, அதும் வீட்டில் அவளின் செல்ல அத்தையும் இல்லாத போது.

ஒருவேளை இவனின் தாயார் இருக்கும் பட்சத்தில் அவளுக்கு வீட்டில் பொழுது இனிமையவே செல்ல கூடும். அவளை அலுவலகம் அழைத்து செல்ல இவனும் விரும்பி இருக்க மாட்டான்.

ஆனால் இப்போது, அவள் தன்னை முழுக்க எதிலாவது ஈடுப்படுத்தி கொள்வது தான் நல்லது. ஆனால் இதற்கு இவள் இப்படி யோசிக்கவோ தயங்கவோ வேண்டிய அவசியம் இல்லையே, இதில் இன்னும் ஏதோ இருக்கிறது என்று யூகித்தவன்,

“சரி வா பாப்பு, நீயும் வந்தா எனக்கும் ஒர்க் கொஞ்சம் குறையும்” என தன்னுடன் தான் அவள் வேலை அமையும் என சொல்லாமல் சொல்ல, உமையாளோ,

“நான் பேக்டரில ஒர்க் பண்ணனும் கரன்” என்று அவள் சொல்லவும், இப்போது பாலாவின் முகத்திலும் கொஞ்சம் அதிருப்பதியே, வசீகரனே தொடர்ந்து,

“அங்க நிறைய பேரு அங்க வேலை செய்றாங்க, அது அவ்ளோ பாதுகாப்பானது இல்லை பாப்பு” என விளக்க, அவளோ அடம்பிடிக்கும் குழந்தையின் குரலில்,

“அங்க தான் அந்த தாய்கிழவி அவ்ளோ ரூல்ஸ் போடும், இப்போ நீயும் அப்படி தான் பண்ற, ஏன் உன்னோட ஆபீஸ்ல லேடீஸ் யாருமே வேலை செய்யலையா, இல்ல அவங்களுக்கு எல்லாம் போதிய பாதுகாப்பு இல்லாம தான் இருக்கா” என பொறிந்தாள்.

வசீகரனுக்கு இப்போது தான் அவளின் மனம்போகும் போக்கு புரிந்தது. அங்கு அவளின் தந்தை வழி பாட்டியின் கட்டுப்பாட்டில், அவள் யாரோடும் சட்டென உரையாட முடியாது.

அதனால் தான் இங்கு, சாதாரணமாக எல்லோரிடமும் பழக விரும்புகிறாள், அதன் பாதிப்பு தான் நேற்றைய கண்ணாமூச்சு ஆட்டமும், இன்றைய கோரிக்கையும் என்பது புரிய, வசீகரனும் யோசிக்கலானான்.

அவர்களின் அலுவலகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு குறைவும் இருக்காது. அதுப்போக பாப்பு இவனின் உறவு என்பது தெரிந்தாலே போதும், அதைவிட பெரிய பாதுகாப்பு தேவையில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவனாக,

“சரி பாப்பு, பட் ஒன் கண்டிஷன்” என ஒரு “க்” வைத்து நிறுத்த, உமையாள் என்ன சொல்ல போகிறேன் என்ன யோசனையுடனே,

“என்ன கரன்” என்று கேட்க,

“ஆபீஸ்கு என் கூட கார்ல தான் வரணும், போகணும், என்ன ஓகே வா” என, அவளின் முகம் சுனங்க,

“இப்படி உன்னோட கார்ல போய் இறங்குனா, அதுவே எல்லாருக்கும் சொல்லிடாதா நான் உன்னோட ரிலேஷன்னு, அப்புறம் எப்படி எல்லாரும் என் கூட சஜமாக பேசுவாங்க” என பதில் கேள்விகேட்க, வசீகரனோ

“சரி அப்படினா, நீ மைக் கூட போ, பட் கண்டிப்பா கார் தான் யூஸ் பண்ணி ஆகணும்” என கொஞ்சம் இறுக்கமாகவே சொன்னான்.

அந்த இறுக்கம் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நீ அலுவலகம் வருவது சாத்தியம் இல்லை என்று மறைமுக எச்சரிக்கை தர, இந்த அளவு இவன் ஒப்புக்கொண்டதே பெரிது என்பதால், மேற்கொண்டு எதும் வாதம் செய்யாமல், உமையாள் நல்ல பிள்ளையாக,

“ஹ்ம்ம் சரி கரன்” என்றிருந்தாள். பாலா ஏதோ சொல்ல வர, அவனை முந்திக்கொண்ட உமையாள், தான் அலுவலகம் செல்லுவதை உறுதி செய்யும் விதமாக,

“எப்போ ஜாயின் பண்ணட்டும், பேசாம நாளைக்கே வரவா” என ஆர்பரிக்க, வசீகரனோ,

“நாளைக்கே கூட ஜாயின் பண்ணிக்கோ” என சம்மதம் அளிக்க, உமையாள்,

“ஆமா மீதி ரெண்டு பார்ட்னர்ஸ் கிட்ட கேட்க வேண்டாமா” என பாலாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்க, வசீகரனோ கொஞ்சமும் யோசிக்காமல்,,

“எப்படியும் பாலா ஒன்னும் சொல்ல மாட்டான், கிருஷ்ணா கிட்ட தான் பேசணும், நான் பேசிக்கிறேன்” என்று முடித்துவிட்டான்.

வசீகரன் சொல்லியதை உறுதி செய்யும் விதமாகவே பாலா உமையாளிடம்,

“எந்த டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்ண போற உமா”, என்று கேட்க, உமையாளோ கொஞ்சம் கூட யோசிக்காமல்,

“நமக்கு நம்மள யாரும் கேள்விகேட்டா பிடிக்காது, நான் தான் எல்லாரையும் கேள்வி கேட்கணும், சோ ஆபியஸா கியூ.ஏ (Q.A) தான்” என அறிவிக்க, வசீகரனும், பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பினுடே பாலா உமையாளை பார்த்து,

“கண்டிப்பா, பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா”, என கேட்க, அவன் வேலையை பற்றி கேட்கிறான் என்று நினைத்து,

“ஆமாம், ஆமாம்” என உமையாள் வேகமாக தலையாட்ட, அவர்கள் இன்னுமே சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் சிரிப்புக்கான காரணம் புரியாமல் உமையாள்,

“என்ன ஆச்சு, எதுக்கு ரெண்டு பேரும் பல்ல பல்ல காட்டுரீங்க” என சற்று கோவம் தொனிக்கும் குரலில் கேட்க, இன்னும் சிரித்து முடிக்காத பாலா,

“ஆமா நீ ஊருல இருந்து வரும் போது, கிருஷ்ணாவை வம்புக்கு இழுக்கணும்னு வேண்டுதலோடு தான் வந்தியா” என கேட்க, அதை சரியாக காதில் வாங்காத உமையாள்,

“எது கையை பிடிச்சி இழுக்கவா” என கேட்டு வைக்க, இன்னும் சத்தமாக சிரித்த பாலா,

“நீ செஞ்சாலும் செய்வ உமா” என்று சிரிப்புடன் சொல்லியவன், அவள் அதுக்கு பதில் அளிக்கும் முன், அவளுக்கு தன் கேள்வியை விலக்கிடும் வண்ணம்,

“கியூ.ஏ (Q.A) டிபார்ட்மெண்ட் கிருஷ்ணாவோட பொறுப்பு, நீ அந்த டிபார்ட்மெண்ட்ல இருந்தா கிருஷ்ணாக்கு தான் ரிப்போர்ட் பண்ற மாதிரி இருக்கும்” என உமையாளோ,

“எது அங்கிரி பர்ட் கிட்டயா” என சற்றே வாயை பிளக்க, அவளின் வாயை தன் கை கொண்டு வசீகரன் மூட, பாலாவோ,

“நீ ஏன் ஜெர்க் ஆகுற உமா, எனக்கு கிருஷ்ணாவை நினைச்சா தான் பாவமா இருக்கு” என அவளை வெறுப்பேற்ற, உமையாளோ,

“அய்யோ, அவரு பச்சை பிள்ளை பாருங்க”, என நீட்டிமுழக்க, கொஞ்ச நேரம் அங்கே இல்லாத கிருஷ்ணாவை கிண்டல் செய்தே அவர்கள் ஓய, வசீகரன்,

“சரி எல்லாரும் எங்கேயாவது வெளியே போகலாமா” என கேட்க, உற்சாகமாக இருவரும் தயாராக, கிருஷ்ணாவையும் அழைக்க வசீகரன் அவனுக்கு கைபேசியில் அழைப்பெடுத்தான், அவன் அந்த புறம் அழைப்பு எடுத்ததும்,

“சொல்லு கரன்”

“கிருஷ்ணா என்னடா பண்ற, எதாவாது முக்கியமான ஒர்க் இருக்கா”

“ஒன்னும் இல்லடா, சொல்லு”

“சரி அப்போ வரியா மால் போய்ட்டு, மூவி பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு வரலாம்” என கேட்க, கிருஷ்ணா யோசனையில் ஆழ்ந்தான்.

இவன் வெளியே போக கேட்பான் என முன்னரே அறிந்து இருந்தால், ஏதேனும் முக்கிய வேலை இருப்பதாக சொல்லி இருப்பான், இப்போது என்ன சொல்வது இவனிடம்.

சரி என சொன்னாலும், உமையாள் நிச்சயம் உடன் வருவாள், காதல் என உணரும் முன்னரே அவளை படாதபாடு படுத்துவாள், இப்போது என்ன நடக்குமோ என கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.

இவன் யோசனையிலே அமைதியாய் இருக்க, அந்த பக்கம் வசீகரனோ,

“என்னடா ஒன்னுமே சொல்லாம இருக்க, நாம ஒண்ணா வெளியே போய் ரொம்ப நாள் ஆகுது, வாடா சும்மா போய்ட்டு வரலாம்” என கொஞ்சம் கெஞ்சலோடு கேட்க, அடுத்தநொடி வேறு ஏதும் யோசிக்காமல்,

“சரிடா” என்றிருந்தான் கிருஷ்ணா. எப்படியும் உமையாள் இங்கு இருக்கும் வரை அவளை நேருக்கு நேர் பார்த்து தானே ஆக வேண்டும், எல்லா நேரமும் தவிர்க்க இயலாது என்ற நிதர்சனம் புரிய ஒரு பெரு மூச்சோடு அதையும் சமாளிக்க தயாரானான் கிருஷ்ணா.

எல்லாரும் ஒரே காரில் செல்வது என முடிவாக, மைக் காரை எடுக்க அவரின் அருகில் கிருஷ்ணா அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் பாலா, வசீகரன்,உமையாள் என அமர, பக்கத்தில் இருக்கும் அந்த மிகப்பெரிய மாலுக்கு கிளம்பினர்.

இளம்பச்சை நிறத்தில் அடர் ரோஜாப்பூ பாடர் கொண்ட நீள பாவாடை அணிந்து, அதற்கு தோதாக ரோஜாப்பூ நிற குர்தா அணிந்து, கழுத்தை சுற்றி ஒரு ஸ்டோல் அணிந்து, வசீகரன் மற்றும் பாலாவுடன் உரையாடிபடி அமர்ந்திருந்தாள் உமையாள்.

தன் காதலை உணர்ந்த பிறகு முதல் முறையாக உமையாளை பார்க்கிறான். அவளை கண்களில் நிரப்ப காதல் கொண்ட உள்ளம் துடிக்க, அது முறையில்லை என மூளை இடித்துரைக்க, உள்ளுக்குள் நடக்கும் போராட்டம் எதையும் காட்டாமால், வெளியில் வெகு அமைதியாக அமர்ந்து இருந்தான் கிருஷ்ணா.

ஒரு வழியாக மாலுக்கு வந்து சேர, வசீகரன் ஏற்கனவே இவர்களுக்கு படத்துக்கு இணையதளம் மூலமாக இருக்கைகள் முன்பதிவு செய்து இருக்க, நண்பர்கள் அனைவரும் நேராக திரையரங்குக்கு சென்றனர்.

கடைசி நேரத்தில் இருக்கைகள் பதிவு செய்ததால், இடம் கிடைத்த இடத்தில் பதிவு செய்து இருக்க, இவர்களின் நான்கு இருக்கைகள் நடுவில் மாட்டிக்கொள்ள, இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்கள் அமர்ந்து இருந்தனர்.

இரு பக்கமும் ஆண்கள் அமர்ந்து இருக்க, ஒரு பக்கம் அவர்களின் அருகில் சென்று கிருஷ்ணா அமர்ந்து கொள்ள, மறுபக்கம் பாலா சென்று அமர்ந்து கொள்ள, பாலாவின் அருகில் உமையாள் அவளின் அருகில் வசீகரன் என அமர்ந்து கொண்டனர்.

படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்க, நிரம்பாமல் இருந்த இருக்கைகள் வேகமாக நிரம்ப ஆரம்பிக்க, உமையாளுக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்த நபர் அநியாயத்திற்கு உயரமாக இருக்க, அவளுக்கு திரையே தெரியவில்லை.

கடுப்பான உமையாள் நெடும் வருடங்கள் கழித்து படம் பார்க்க திரையரங்கம் வந்து இருக்க, திரை பாதி தெரியாத கடுப்பில் வசீகரனை தன்னுடைய இடத்திற்கு மாற சொல்லிவிட்டு, அவள் அவனின் இருக்கைக்கு மாறினாள்.

இப்போதும் அவள் வசீகரனின் அருகில் தான், அவளின் மற்றொரு புறம் இருந்த நபர் தான் பாலாக்கு பதில் கிருஷ்ணா.

உமையாள் இருக்கை மாறியதும், முகத்தில் எதுமே காட்டிக்கொள்ள வில்லை என்றாலும், எங்கோ ஓர் ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சி, அதேநேரம் இது தவறு என நொடிக்கொரு முறை அறிவுறுத்தும் மூளை, நிறையவே போராட்டம் தான் கிருஷ்ணாவுக்கு.

ஒருவழியாக படம் ஆரம்பிக்க, உமையாள் இவ்வளவு அருகில் அமர்ந்திருக்க, அந்த இதத்தை அனுபவிக்க துடிக்கும் மனதையும், ஓயாது தவறு என அறிவுறுத்தும் மூளையையும் ஒருசேர திசைதிருப்ப படத்தில் கவனத்தை பதிக்க முயற்சி செய்தான்.

ஆம் வெறும் முயற்சி மட்டும் தான், உமையாள் படம் ஆரம்பித்ததில் இருந்து வசீகரனிடம், இது ஏன் இப்படி, அப்படி என ஆயிரத்தெட்டு சந்தேகம் கேட்க, திரையரங்கின் அவ்வளவு சத்ததிலும் உமையாள் கேட்கும் கேள்விகள் தெளிவாக இவனின் காதில் விழ, அவளின் குரலை உன்னிப்பாக உள்வாங்கும் செவிகளை சபித்தவாறே அமர்ந்து இருந்தான்.

உமையாள் கேள்வி கேட்பதை நிறுத்தும் வழியை காணோம், சரி வசீகரனாவது அவளை அமைதியாய் இருக்க சொல்லுவான் என பார்த்தால், அவனும் சலிக்காமல் அவளின் கேள்விக்கு பதில் அளித்தபடியே இருக்க நிறையவே கடுப்பாகி விட்டான் கிருஷ்ணா.

ஒரு கட்டத்தில் உமையாளின் பக்கம் சரிந்த கிருஷ்ணா,

“இந்த படத்தில் லாஜிக் எல்லாம் எதிர் பார்க்காதே, மாஸ் ஹீரோ மூவினா இப்படி தான் இருக்கும், ஜஸ்ட் மூவியை என்ஜாய் மட்டும் பண்ணு” என அவளின் இவ்வளவு நேர கேள்விக்கு மொத்தமாக விடை பகர்ந்தான்.

இவனின் பதிலில் திரும்பி இவனை பார்த்த உமையாள் மென்மையாக தலையசைக்க, கிருஷ்ணாவின் பதிலில் வசீகரனோ ஒரு சிரிப்புடன் திரையில் கவனத்தை திருப்பினான்.

உமையாளை படத்தை பார்க்க சொன்னவன், படம் முழுவதுமே வெறுமெனே திரையை வெறித்தவாறே அமர்ந்திருந்தான்.

ஒருவழியாக படமும் முடிய, நண்பர்கள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது உமையாள், தனக்கு அருகில் வந்த வசீகரனை ஓங்கி ஒரு அடி அடித்தவள்,

“படமாடா அது பக்கி, எவ்ளோ வருஷம் கழித்து படம் பார்க்கிறேன், இப்படி ஒரு படத்துக்கு கூட்டிகிட்டு வந்து இருக்க, ஒரே ஒரு விஷயமாது லாஜிக் அஹ இருக்கா அதுல” என பொறிய, பொங்கிய பாலா,

“ஓய் என்ன,படத்துக்கு என்ன குறைச்சல், தலைவரு என்னமா நடிச்சி இருக்காரு” என சிலாகிக்க, கடுப்பான உமையாளோ,

“ஆமா, ஆமா, படிக்கட்டு மேல இருந்து கிழே ஓடச்சிக்கிட்டு வந்து சண்டை போட்டா கூட பரவாயில்லை, இங்க என்னடான்னா உங்க தலைவர் படிக்கட்டை அடியில் இருந்து உடைச்சிக்கிட்டு மேல வந்து சண்டை போடுறாரு” என, அவள் சொன்ன விதத்தில் மூவருமே சிரித்து விட்டனர்.

கிருஷ்ணா எப்போதுமே அமைதி என்பதால் நண்பர்கள் இருவருக்குமே வித்தியாசமாக தெரியவில்லை. இவர்கள் பேசியபடியே ஒரு கடையின் அருகில் வந்து இருந்தனர்.

தனக்கு கொஞ்சம் உடைகள் வாங்க வேண்டும் என வசீகரன் சொல்ல, ஆண், பெண் இருபாலர் உடைகளும் இருக்கும் அந்த கடைக்குள் நுழைந்தனர் நால்வரும்.

கிருஷ்ணா நேராக ஆண்கள் பிரிவிற்கு செல்ல, வசீகரனோ உமையாளின் கை பிடித்து பெண்கள் பிரிவுக்கு அழைத்து சென்றவன், அவளுக்கு அலுவலகத்திற்கு அணியும் விதமாக உடைகளை தேர்வு செய்ய சொன்னவன், தானும் அவளுக்கு உதவ தொடங்கினான்.

பாலாவோ பெண்களின் பிரிவில், அங்கும் இங்கும் இருந்த பெண்களை ஓர கண்ணால் சைட் அடித்தவாறே, இவர்களோடு பேசிக்கொண்டு இருந்தான்.

அப்போது சாதாரணமாக உமையாள் நிமிர்ந்து பார்க்க, ஒரு பெண் இவர்களையே இமைசிமிட்டாமல், பொது இடம் என்பதையும் மறந்து, அப்பட்டமாய் கண்களில் காதல் வழிய பார்த்திருந்தாள்.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!