Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்- 20 (1)

கிருஷ்ணா உமையாளிடம் மனம் விட்டு, தன் தயக்கங்ளையும்,காயங்களையும் பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ அன்று இரவும், அதற்பிறகான நாட்களிலிலும், அலைபுறுதல் இல்லாத நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்க பெற்றது கிருஷ்ணாவுக்கு.

அந்த நீண்ட உரையாடலுக்கு பிறகு, கிருஷ்ணாவின் மனம், முன் எப்பொழுதையும் விட, உமையாளை அவனுக்கு இன்னும் நெருக்கமாக நினைக்க ஆரம்பித்து இருந்தது.

அலுவலகத்திலோ புதிதாக கிடைத்த அந்த வெளிநாட்டு ஒப்பந்தத்தின் காரணமாக, வேலைகள் முன்னைவிட முனைப்புடன் நடக்க ஆரம்பித்து இருந்தன.

தினமும் நடைபெறும் வேலைகளோடு, புதிய வேலைகளும் சேர்ந்து கொள்ள, அனைவருமே அதில் மூழ்கி, நிற்க நேரம் இல்லாமல் சுற்றி கொண்டு இருந்தனர்.



Advertisement

அன்று உமையாளிடம் பேசி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருந்த நிலையில், கிருஷ்ணாவுக்கு அவனின் காதல் மனதை உமையாளிடம் திறப்பதற்கு உகந்த நேரமோ, தனிமை வாய்க்கவேவில்லை.

அவன் காதல், கல்யாணம் இவற்றை தவிர்க்க நினைத்த காரணங்களில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்த போதிலும், உமையாளின் பேச்சு அவனுக்குள் உருவம் இல்லா நம்பிக்கையை விதைத்து இருந்தது.

மனதில் இருந்த சஞ்சலங்கள், குழப்பங்கள் பெருமளவு குறைந்து இருக்க, எல்லாவற்றையும் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் பிறந்து, வேரூன்றி இருந்தது.

Advertisement

காலையில் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்த கிருஷ்ணாவின் நினைவு முழுவதையும் அவனின் தந்தையையே ஆக்கிரமித்து இருந்தார்.

Advertisement

ஒருவாரமாக மனிதர் அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறார். இந்த வாரம் முழுக்க கிருஷ்ணா அவரை பார்க்கவேயில்லை.

முதலில் அலுவலக வேலையில் அவசரவசரமாக ஓடி கொண்டு இருந்த கிருஷ்ணா இதை உணரவில்லை.

தந்தையை பார்த்து மூன்று நாட்களுக்கு மேல் ஆன நிலையில், சரி அவரை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என இவன் வரவேற்பறையில் அலுவலக வேலை பார்க்கும் சாக்கில் மடிக்கணிணியோடு காத்திருந்தான்.

Advertisement

ஒரு மணி நேரம், இவன் காத்துகொண்டு இருந்த போதும், அவர் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, அலுவலத்தில் இருந்து வேறு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, அன்று அலுவலகம் கிளம்பி விட்டான் கிருஷ்ணா.

அன்று அலுவலகம் சென்றவன், வீட்டிற்கு அழைத்து தந்தை எப்போது அலுவலகம் சென்றார் என கேட்க, இவன் கிளம்பிய பத்து நிமிடத்தில் அவரும் கிளம்பியதாக தகவல் வர, முதலில் இவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாளும் இதே தொடர் கதையாக, இவன் யோசிக்கலானான்.

 

[the_ad id=”6605″]

 

பார்த்து கொண்டாலும் தந்தையும், மகனும் பெரிதாக பேசிக்கொள்ள போவதில்லை தான், ஆனால் ஒரே வீட்டில் இருந்து கொண்டு பார்க்காமல் இருப்பது கிருஷ்ணாவுக்கு, ஏதோ குறைவது போலவே இருந்ததால் தான் அவருக்காக காத்திருந்தது.

வழக்கமாக கிருஷ்ணா ஏதாவது வேலையில், அவரை பார்க்காமல் காலையில் சீக்கிரம் அலுவலகம் சென்றால் கூட, இரவு எத்தனை மணி ஆனாலும் இவன் வரும் வரை காத்திருந்து, இவனுடன் உணவு உண்ணும் சாக்கில் சற்று நேரம் செலவழித்த பின்பே உறங்க செல்பவர் அவர்.

ஆனால் இந்த ஒருவாரமாக அவருக்கு என்ன ஆனதென்று தான் கிருஷ்ணாவுக்கு புரியவேயில்லை.

காலையில் கவனமாக இவன் அலுவலகம் கிளப்பி சென்ற பின் அறையை விட்டு வெளியே வருபவர், இரவு இவன் வருவதற்கு முன்பே உண்டு, உறங்கி விடுகிறார்.

முதலில் ஏதோ வேலை அல்லது இன்னபிற காரணங்கள் என்று நினைத்த கிருஷ்ணாவுக்குமே, அவரின் செய்கையில் இப்போது பலத்த சந்தேகம் வர ஆரம்பித்து இருந்தது.

அவரின் அலுவலகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை என்று இவனுக்கு தெரியும். ஏன் என்றால் இவனும் தானே அவற்றை பார்த்து கொள்கிறேன், வேறு என்ன என்று தான் அவனின் சிந்தனை நீண்டது.

“ஒரு வேலை வேறு எதாவாது பிரச்சினையா” என்ற எண்ணம் சிந்தையில் உதித்த பிறகு, சிறிதும் தாமதிக்க கிருஷ்ணா விரும்பவில்லை.

அலுவலகம் செல்ல தயாரானவன், இன்று அவரை பார்க்காமல் அலுவலகம் செல்வது இல்லை என்ற முடிவுடன், வரவேற்பரையில் அவனின் தந்தையின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

இந்த ஒரு வார வழக்கம் போல, அரை மணி நேரம் சென்ற பிறகும் அவனின் தந்தை வந்த பாடாக இல்லை.

தான் அலுவலகம் கிளம்பி செல்லாமல் அவர் கீழே இறங்கி வர மாட்டார் என்பது புரிய, என்றும் இல்லாத வழக்கமாக அவரின் அறையை நாடி சென்றான் கிருஷ்ணா.

தந்தை மகன் என்ற போதும், கிருஷ்ணா அவனின் தந்தையின் அறைக்கு, இதுவரை ஒன்றிரண்டு முறை தான் சென்று இருப்பான்.

இன்று அறையை தட்டிவிட்டு அவரின் அனுமதிக்காக காத்திருந்து, அவரின் அனுமதி பெற்றே உள்ளே சென்றான் கிருஷ்ணா.

உள்ளே நுழைந்த கிருஷ்ணாவை, எதிர் பார்க்கவில்லை என்பது தன் தந்தையின் முக குறிப்பிலே புரிய, அவரை இன்னும் கூர்ந்து நோக்கினான் கிருஷ்ணா.

முதலில் தன்னை பார்த்ததும் ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள், பின்பு ஒரு தவிப்புடனும், வாஞ்சையுடனும் தன்னை தழுவ அந்த பார்வைக்கான காரணம் தான் புரியவில்லை இவனுக்கு.

“இந்த ஒரு வாரமாக தன்னை தவிர்த்தவர், எதற்காக இத்தனை வாஞ்சையுடன் பார்க்க வேண்டும்” என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

அதே நேரம் அவரை தன் கூரிய விழிகளால் அளவிட்டபடியே தான், அவரை நோக்கி நடந்தான் கிருஷ்ணா.

அலுவலகம் செல்ல கிளம்பாமல், இரவு உடையுடனே படுக்கையை விட்டு எழும் எண்ணம் கூட இல்லாமல், தீவிர சிந்தனையுடன் அமர்ந்து இருந்தார் ஜெயவர்மர். அவரின் அருகில், படுக்கையில் இவனின் தாயின் புகைப்படம் வேறு.

சரியான உறக்கம் இல்லாமல் கண்களில் கீழே கருவளையம், சரியாக உண்ணாமல் ஓய்ந்து போன தோற்றம் என ஒரே வாரத்தில் இளைத்து, கறுத்து இருந்தார் அவனின் தந்தை.

அவரை பார்த்ததும் கிருஷ்ணாவுக்கு முதலில் தோன்றியது, “உடல் நலம் சரியில்லையோ” என்று தான்.

ஆனால் அப்படி இருந்தால், அதற்கும் தன்னை தவிர்ப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றும் புரியாமல் போக, அவரின் நடவடிக்கைகள் முன்னுக்கு பின் முரணாகவே பட்டது கிருஷ்ணாவுக்கு.

சிந்தனை பலவிதமாக இருந்த போதிலும், நடையில் வேகத்தை கூட்டி, அவரை நெருங்கியவன், இமைக்காமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த அவரின் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து,

 

[the_ad id=”6605″]

 

“என்ன ஆச்சுப்பா” தன் வழக்கமான குரலில், கொஞ்சமே கொஞ்சம் வாஞ்சையுடன் கேட்க, இப்போதும் அவரின் பார்வையில் மாற்றம் இல்லாமல் போக கிருஷ்ணாவே மீண்டும்,

“உடம்பு ஏதாவது பண்ணுதா, டாக்டர் அஹ வர சொல்லவா” என்று கேட்க, இப்போது வாய் திறந்து ஜெயவர்மர்,

“உடம்புக்கு ஒன்னும் இல்லப்பா, மனசு தான்” என்று ஆரம்பித்தவர், சொல்லாமல் அப்படியே நிறுத்தினார். கிருஷ்ணா கேள்வியாய் அவரை பார்க்க, அவரே மீண்டும்,

“எனக்கு ஒன்னும் இல்ல கிருஷ்ணா, நான் நல்லா தான் இருக்கேன், நீ ஆபிஸ் கிளம்புடா” என்று தன்னை சமாளித்து கொண்டு புன்னகையுடன் சொல்ல முயன்றார்.

ஜீவன் இல்லா அவரின் புன்னகையை பார்த்த கிருஷ்ணாவுக்கு, “ஏதோ சரியில்லை” என்ற எண்ணம் வலுக்க, அவரையே அவன் தீர்க்கமாக பார்க்க, அவனின் பார்வையில் அவரே,

“கொஞ்சம் சரியா தூக்கம் இல்ல கிருஷ்ணா, அதோட வயசு வேற ஆகுது இல்ல, கொஞ்சம் டையர்ட் அஹ இருக்கு, வேற ஒன்னும் இல்ல” என்று விளக்கினார்.

அவரின் விளக்கத்தில் நம்பிக்கை இல்லாத போதும், இதற்கு மேல் என்ன கேட்பது என்று புரியாமல் போக, ஒரு பெருமூச்சுடன் அவரை பார்த்த கிருஷ்ணா,

“இன்னைக்கு வீட்டுல ரெஸ்ட் எடுங்க, ஆபிஸ் போக வேண்டாம்” என்று உறுதியான குரலில் சொல்ல, அவரோ,

“இல்லை கிருஷ்ணா, இன்னைக்கு பத்து மணிக்கு ஷர்மா கூட மீட்டிங் இருக்கு, மிஸ் பண்ண முடியாது” என்று சொல்ல, கிருஷ்ணா யோசிக்க ஆரம்பித்தான்.

இவனுக்கும் தெரியும் அந்த ஷர்மாவை அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாது, இதுவே இவர்கள் முயன்று வாங்கிய நேரம். வேறு யாரையும் அனுப்பவும் முடியாது என்று புரிய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்,

“சரி நான் போறேன் அந்த மீட்டிங்கு, நீங்க ரெஸ்ட் எடுங்க, மதியம் வரேன்” என்று கூறியவன், அவர் சம்மதமாக தலையசைத்ததும், அவரிடம் இருந்து விடைப்பெற்றான்.

கிருஷ்ணா அறையின் கதவின் அருகில் செல்லவும், அவனை அழைத்தார் ஜெயவர்மர்,
அவரின் அழைப்பில் கிருஷ்ணா அவரை திரும்பி பார்க்க,

“அப்பாவை மன்னிச்சிடுப்பா” ஜெயவர்மரின் குரலில் இருந்த தழுதழுப்பில் கிருஷ்ணாவுக்கு என்னவோ போல் ஆக, மீண்டும் அவரை நெருங்கியவன், ஆதரவாக அவரின் கைகளை பிடித்து கொண்டு,

“என்னப்பா” என்று கேட்க, ஜெயவர்மர் அவனை தான் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தார். அவனின் இந்த ஸ்பரிசம், அவனை குழந்தையாக முதல் முதலில் கைகளில் தாங்கிய அந்த நொடிகளை நினைவு படுத்த, உடல் முழுவதும் ஒரு பரவசநடுக்கம் அவருக்கு.

அந்த நடுக்கம் குரலிலும் தெரிய, “ஒன்னும் இல்லப்பா, நீ கிளம்பு” என்று சொல்ல, கிருஷ்ணாவோ,

“அந்த அப்பாய்ண்ட்மெண்ட் அஹ கேன்சல் பண்ண சொல்றேன், நானும் இன்னைக்கு ஆபிஸ் போகல” என்று சொல்ல, ஏற்கனவே மதியம் வருகிறேன் என்று சொல்லியவன், இப்போது முழுநாளும் அலுவலகம் செல்லவில்லை என்று சொல்லியதும், அவனின் பாசத்தில் இவருக்கு தான் கண்களை கரித்து கொண்டு வந்தது.

 

[the_ad id=”6605″]

 

முயன்று தன்னை சமாளித்து கொண்டவர்,
“கிருஷ்ணா இது முக்கியமான மீட்டிங் அது உனக்கே தெரியும், நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு ஒன்னும் இல்ல, அதும் இல்லாம வீட்டுல தான இருக்கேன், நீ போய் மீட்டிங் அஹ முடிச்சிட்டு வா” என்றார்.

கிருஷ்ணா அப்போதும் யோசிக்க, ஜெயவர்மர் தான் பேசி ஒரு வழியாக அவனை அனுப்பி வைத்தார்.

அலுவலகம் கிளம்பும் முன், மருதுவை அழைத்து, அவனின் தந்தைக்கு உணவு, பழச்சாறு எல்லாம் கொடுக்க சொல்லிவிட்டு, இவரை அவரின் உதவிக்கு அங்கேயே இருக்குமாறு உரைத்துவிட்டு தான் கிளம்பினான் கிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!