Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-20 (2)

கிருஷ்ணா கிளம்பும் வரை அவனில் மட்டுமே கவனத்தை வைத்திருந்த ஜெயவர்மர் மீண்டும் தன் சிந்தனைகளில் உழல ஆரம்பித்தார்.

அவரின் எண்ணங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு சென்றது. அன்று உமையாள் இவரிடம் வழக்கம் பேச பேச, தீவிர சிந்தனையில் இருந்த தன் மகனின் முகமே கண் முன் தெரிய, இவரால் தான் அவளுடன் சரியாக உரையாட முடியவில்லை.

இவரின் கவனம் இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்ட உமையாளும் சீக்கிரமே விடைபெற்று கிளம்ப, இவர் அவரின் மகனை நாடி கிளம்பினார்.

முதலில் வீட்டுக்குள் வந்து இருப்பான் என விசாரிக்க, இன்னும் வரவில்லை என்ற தகவலில் அவன் அமர்ந்து இருந்த நீச்சல் குளத்தை நோக்கி நடந்தார் ஜெயவர்மர்.



Advertisement

கிட்ட நெருங்கும் போதே கிருஷ்ணாவுடன், உமையாள் அமர்ந்து இருப்பது தெரிய, யோசனையுடன் இவர் திரும்ப போகும் நேரம் அவரின் செவிகளை தீண்டியது கிருஷ்ணாவின் “அம்மா” எனும் வார்த்தைகள்.

சுற்றிலும் இருந்த பேரமைதியில் கிருஷ்ணாவின் பேச்சு இவரின் காதில் தெளிவாக விழ, அங்கிருந்த செல்ல ஏதோ தடுக்க, ஓட்டுகேட்பது தவறு என்று தெரிந்தும், அவரின் கால்கள் அங்கேயே வேரோடு, செவிகளில் கிருஷ்ணாவின் வார்த்தைகள் வந்து மோதின.

அவன் பேச பேச, இவர் எப்படி உணர்ந்தார் என்று இவருக்கு புரியவே இல்லை. கிருஷ்ணாவுக்கு காதல், கல்யாணத்தில் ஏனோ விருப்பம் இல்லை என அவர் நினைத்து இருக்க, அவனோ இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து காதலை வெறுத்து இருக்கிறான் என்று புரிய நொந்து விட்டார் அவர்.

Advertisement

மனது எல்லாம் பிசைய ஆரம்பிக்க, தட்டுத்தடுமாறி தனது அறைக்கு வந்த ஜெயவர்மர், தனது மனைவியின் புகைப்படத்தை பார்த்து கொண்டே அமர்ந்தார்.

Advertisement

“நான் என் மனைவியை புரிந்து கொள்ளவில்லையா, என்னை பற்றிய புரிதலையும் அவளுக்கு நான் கொடுக்க வில்லையா, அவளின் பயம் தான் அவளின் உடல்நல குறைவுக்கு காரணமா???, என் மகன், மனைவிக்கு நேரம் செலவழிக்காமல், எதை தேடி ஓடி கொண்டிருந்தேன் நான், கணவன், மனைவி சண்டைகளை தவிர்க்க முடியாது தான், ஆனால் குறைந்தபட்சம் அதை எங்கள் குழந்தையின் முன் தவிர்த்து இருக்க வேண்டுமோ, ஒரு குழந்தை வளருவதற்கு அமைதியான சூழ்நிலையை கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை அல்லவா, என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்” என்று சுய அலசலில் இறங்கினார் ஜெயவர்மர்.

 

[the_ad id=”6605″]

Advertisement

 

கிருஷ்ணா கேட்ட கேள்விகள், அவருக்கு சொல்லவென்னா துயரத்தை தர அதிலும், அவன் கடைசியாக சொல்லிய,

“நாளைக்கு நானும் கல்யாணம் பண்ணி என்னோட அப்பா, அம்மா மாதிரி குழந்தையை கவனிக்காம விட்டு, அது இன்னொரு கிருஷ்ணாவா, ஜடம் மாதிரி எதுக்கு வாழறோம்னு தெரியாம ஒரு வாழ்க்கை வாழனும்”

என்ற வார்த்தைகள் இன்னும் அவரின் காதில் ரீங்காரம் இட்டு கொண்டே இருந்தது.

எந்த அளவு துன்பப்பட்டு இருந்தால், எந்த அளவு வெறுப்பு இருந்தால், வாழ்க்கையே வெறுத்த பாவம் அவனின் குரலில் வந்து இருக்கும் என்று நினைக்க நினைக்க அவருக்கு மனது தாங்கவே இல்லை.

என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறோம், என்ன மாதிரியான ஒரு வாழ்க்கை தன் மகனுக்கு பரிசளித்து இருக்கிறோம் என்று யோசிக்க, யோசிக்க அவருக்கு நெஞ்சின் ஓரம் ஒரு வலி சுருக்கென தைத்தது.

அந்த வலி அவரின் மகனை பற்றிய பயத்தை ஆழமாக விதைக்க, அவனின் எதிர்காலமும், இவரின் இறந்தகாலமும் சேர்ந்து மிரட்ட அவருக்கு ஒரு வாரமாக தூக்கமே இல்லை.

அதோடு மகனின் முகத்தில் முழிக்கவே ஒரு அவமான உணர்வு வேறு. அதனால் அவனை பார்ப்பதை தவிர்க்க, இன்று அவனை தேடி வந்த மகனின் பாசத்தில் கரைந்து தான் போனார் மனிதர்.

அதிகம் பேசவிட்டாலும் பாசக்காரன் கிருஷ்ணா. இப்படிப்பட்ட பாசமான பிள்ளைக்கு தான் செய்தது எல்லாம் அநியாயமாகவே பட, அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டார் தான், ஆனால் மனமோ அவனின் பாசத்தில் இன்னும் அதிகமா தவிக்க ஆரம்பித்தது.

மீண்டும் ஒரு வலி நெஞ்சின் ஓரம் சுருக்கென தைக்க, மனமோ மகனின் நினைவுகளிலே மூழ்கி இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பிய கிருஷ்ணாவோ, நேராக அவனின் தந்தையின் அலுவலகம் தான் சென்றான்.

ஷர்மாவுடனான சந்திப்புக்கு தேவையானவற்றை தொகுத்து, தயாராகி, அவரை சந்தித்து, அதை வெற்றி கரமாக முடித்தவன், வீட்டிற்கு செல்லும் முன் ஒரு முக்கிய கோப்பை எடுக்க வேண்டி, தங்கள் அலுவலகத்திற்கு சென்றான்.

இடையில் மருதுவுக்கு அழைத்து தன் தந்தையின் நலத்தை உறுதி செய்து கொள்ளவும் தவறவில்லை அவன்.

கிருஷ்ணா அலுவலகத்தில் தன்னுடைய அறைக்கு செல்ல, உமையாளும் பாலாவும் அங்கு தான் இருந்தனர்.

வசீகரன் எங்கோ வெளியே சென்று இருப்பதால், அவனுக்காக உண்ணாமல் காத்துகொண்டு இருந்தனர்.

தன் அறையின் உள்ளே சென்ற கிருஷ்ணா, இவருக்கும் பொதுவான தலையசைப்புடன் சென்றவன், அவன் தேடி வந்த கோப்பை எடுத்து கொண்டிருந்தான்.

பாலா, உமையாள், இருவரும் பேசிக்கொண்டு இருந்தது இவனின் அனுமதி இல்லாமல் இவனின் செவிகளில் விழுந்து, இவனை திகைக்கவும் வைத்தது.

பாலா, உமையாளிடம், “நீ இன்னும் எத்தனை நாள் இங்க இருப்ப” என கேட்க, அவளோ,

“கிட்டதட்ட ஒரு மாசம் இருக்கலாம்” என இலகுவான குரலில் சொல்ல, பாலாவோ,

“அப்போ ஒரு மாசத்துல ஊருக்கு கிளம்பிடுவியா உமா” சோகம் அப்பிய குரலில் கேட்க, அவளோ,

“பின்ன எவ்ளோ நாள் இங்கயே இருக்க முடியும், இப்போவே அப்பா என்ன ரொம்ப மிஸ் பண்றாங்க அண்ணா” என்று சற்று இறங்கிய குரலில் சொல்ல, இதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவும் கிருஷ்ணாவின் காதுகளில் விழவேயில்லை.

அவனின் காதல் கொண்ட மனமோ,”உமையாள் போய் விடுவாளா”, என்று அதிர்ந்து போய் இருக்க, மூளையோ, “பின்ன அவள் இங்கேயே இருப்பாள் என நினைத்தாயா” என்று அவனை எள்ளிநகையாடியது.

இவனின் சிந்தனை இப்படி பயணிக்க, அங்கு பாலாவோ, உமையாளிடம்,

“திரும்பி எப்போ வருவ உமா” என்று கேட்க, உமையாளோ ஒரு சிரிப்புடன்,

“அது உங்க பிரின்ட் கையில் தான் இருக்கு, அவன் பேசி மேரேஜ் பிக்ஸ் பன்னதும், நான் பறந்து வந்துடுவேன்” என்று சொல்ல இருவருமே சிரித்து கொண்டு இருந்தனர்.

அந்நேரம் கிருஷ்ணாவின் கைப்பேசி தன் இருப்பை உணர்த்த, கிருஷ்ணாவோ எதையும் உணராமல், “உமையாள் போய் விடுவாளா” என்பதிலே உழன்று கொண்டு இருந்தான்.

கிருஷ்ணாவின் கைபேசியின் ஒலியில் கலைந்த இருவரும், கிருஷ்ணாவை பார்க்க, அவனின் கவனம் எங்கோ இருப்பதை உணர்ந்த உமையாள்,

“கிருஷ்ணா” என்று சற்று சத்தமாக அழைக்க, அவளின் அழைப்பில் தன் எண்ணங்களில் இருந்து வெளிவந்த கிருஷ்ணா, அவளை ஒரு புரியாத பார்வை பார்த்துவைக்க, உமையாளே மீண்டும்,

“உங்க போன் அடிக்குது பாருங்க” என்று சுட்டிக்காட்ட, இப்போது முழுதும் தெளிந்த கிருஷ்ணா கைப்பேசியை பார்க்க, அழைப்பு அடித்து முடிந்திருந்தது.

கிருஷ்ணா கைபேசியை பார்க்கும் போதே மீண்டும் அழைப்பு வர, அதுவும் வீட்டில் இருந்து என்றதும், தந்தையின் நினைவில் பதற்றம் வர, அழைப்பை ஏற்றவன்,

“ஹலோ கிருஷ்ணா ஹியர்”

“………………..”

“எந்த ஹாஸ்பிட்டல்”

“…………….”

எதுவுமே சொல்லாமல் அழைப்பை துண்டித்தவன் முகத்தில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாத பாலா, அவனின் “ஹாஸ்பிட்டல்” என்ற வார்த்தையில் பதறி,

“யாருக்கு என்ன ஆச்சுடா” என்று கேட்க, கிருஷ்ணாவோ,

 

[the_ad id=”6605″]

 

“அப்பாக்கு நெஞ்சு வலியாம், மயங்கிட்டாராம், ஹாஸ்பிட்டல் அஹ சேர்த்து இருக்கங்களாம்” என்று உணர்வற்ற குரலில் சொன்னான்.

அவனின் குரலே அவனின் மனநிலையை எடுத்துக்காட்ட, விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட பாலா,

“நீ டிரைவ் பண்ண வேண்டாம், நான் வண்டியை எடுக்கிறேன், வாடா கிளம்பலாம்” என்று அவனை அழைத்துவிட்டு முன்னே செல்ல, கிருஷ்ணாவோ இன்னும் உறைந்த நிலையிலே நிற்க, அவனை நெருங்கிய உமையாள்,

“அங்கிள்கு ஒன்னும் ஆகாது கிருஷ்ணா” என்று சொல்ல, அவளை நிமிர்ந்து பார்த்தவன், எதுவுமே சொல்லாமல் வெளியே செல்ல, இந்த நிலையில் அவனை தனியே விட மனமில்லாமல் உமையாளும் அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

கிருஷ்ணாவிடம் எந்த மருத்துவமனை என்று கேட்டு பாலா விரைய, உமையாள் வசீகரனுக்கு அழைத்து தகவல் சொன்னாள்.

மூவரும் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து, விசாரித்து விட்டு நேராக அவரை அனுமதித்து இருந்த அவசர சிகிச்சை பிரிவை நெருங்க, அப்போது தான் ஜெயவர்மரின் நிலையை அறிய தேவையான ஆரம்பபக்கட்ட பரிசோதனைகள் முடிவுற்று இருக்க, அதன் முடிவுகளை அலசி ஆராய்ந்து அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை முடிவு செய்த மருத்துவர், அந்த பிரிவில் இருந்து வெளியே வந்தார்.

மூவரும் அவரை நெருங்க கிருஷ்ணாவை அடையாளம் தெரிந்து கொண்ட, அவர்களின் குடும்ப மருத்துவரான அவரோ, சுற்றி வளைக்காமல் நேராகவே,

“அப்பாக்கு ஹார்ட் அட்டாக் கிருஷ்ணா, மேஜர் ஆர்டரில பிளாக், அதும் சிவியர் கண்டிஷன், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ஆப்பேரட் பண்ணனும், இப்போதைக்கு பஸ்ட் ஏய்ட் மட்டும் பண்ணி இருக்கேன், அப்பா உன்கிட்ட பேசணும்னு சொல்றாரு, என்னனு போய் பாரு, நான் போய் ஆப்பேரஷன்கு எல்லாத்தையும் ரெடி பண்றேன்” என்று அவசரமாக உரைக்க, அவரின் அவசரமே பதட்டத்தை கூட்ட , அவசரமாக செல்ல முயன்ற அவரை தடுத்த கிருஷ்ணா,

“அப்பா…….,  அப்பாக்கு ஒன்னும் ஆகாது இல்ல டாக்டர்” என குரலில் விரவிய பயத்துடன் கேட்க,அவனின் நிலையை புரிந்து கொண்ட மருத்துவரும்,

“நம்பிக்கையோடு இரு கிருஷ்ணா, நம்மால் முடிந்த வரை எல்லா முயற்சியும் பண்ணுவோம்” என்று அவனிடம் உரைத்து விட்டு, நொடி கூட தாமதிக்க விரும்பாமல், சென்றுவிட்டார்.

அவசர சிகிச்சைக்கு பிரிவாக இருந்தாலும் தனி அறையில் ஜெயவர்மர் இருக்க,பாலாவும், உமையாளும் பின் தொடர உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா.

இவர்கள் உள்ளே நுழைந்த அதே நேரத்தில், எதோ மருந்து வாங்க போய் இருந்த மருதுவும், உடன் யாரோ ஒருவரும் வர, அவர்களை பின் தொடர்ந்து கிருஷ்ணாவின் மாமாவும், சரண்யாவும் உள்ளே வந்தனர்.

யாரையும் கவனிக்காத கிருஷ்ணா, அங்கு மருத்தவ உபகரணங்கள் சூழ, சோர்ந்து போய் கண்மூடி இருந்த, தன் தந்தையை நெருங்கி, “அப்பா” என்று அழைக்க, இவனின் அழைப்பில் மெதுவாக கண்களை திறந்து இவனை பார்த்தவர், இவனை அருகில் அழைத்து,

“கல்யாணம் பண்ணிக்கோ கிருஷ்ணா” என்று சொல்ல, அவரின் மனதை தன்னை சார்ந்த கவலை அறிப்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணா,

“சரிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என அவருக்கு ஆறுதலாக நினைத்து சொல்ல, அவரோ மருதுவின் அருகில் நின்றிருந்த அந்த நபரை பார்க்க, இவரின் பார்வையை புரிந்து கொண்ட அவரும், முன்னால் வந்து தன் பையில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து, கிருஷ்ணாவின் கைகளில் கொடுத்தார்.

என்னவோ என்று வாங்கிய கிருஷ்ணா தன் கைகளில் இருந்த பொருளை பார்த்து அதிர்ந்து தந்தையை பார்க்க, சோர்வுடன் இருந்த கண்களில் அப்படி ஒரு தீவிரம், அந்த தீவிரத்துடன் கிருஷ்ணாவை பார்த்த அவர்,

“இப்போவே தாலி கட்டு” என்று உரைத்து கண்களால் அந்த அறையில் இருந்த பெண்ணையும் சுட்டிக்காட்ட, திடுக்கிட்ட கிருஷ்ணா,

“நீங்க சரி ஆகிட்டு வாங்க, நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அவரை சமாளிக்கும் விதமாக, உறுதிமொழி அளிக்க, அவரோ அவனின் வாக்குறுதியில் எந்த மாற்றமும் கொள்ளாமல்,

“அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்ட இல்ல, அதை இப்போவே பண்ணிக்கோ கிருஷ்ணா” என்று இவனிடம் இறைஞ்ச ஆரம்பிக்க, கிருஷ்ணாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவன் அவரை “என்னை புரிந்துகொள்ளுங்களேன்” எனும் பார்வை பார்க்க, அவரோ வெகுவாக பேச சிரமப்பட்டு கொண்டே,

“நான் இந்த நிலையில் இருக்கும் போதே நீ கல்யாணம் பண்ண மாட்டற, நான் சரியா ஆனதுக்கு அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணுவ” என்று கேட்கும் போது, அவரின் இரத்தம் அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்க, அவரை கண்காணிக்கும் கருவி ஒளி எழுப்பி அவரின் அபாய நிலையை சுட்டிக்காட்டியது.

 

[the_ad id=”6605″]

 

அதன் சத்தத்தில் கிருஷ்ணா பதற, செவிலியர், மருத்துவருக்கு தெரிவிக்க, வந்த அவரோ மீண்டும் சில மாத்திரைகளை ஜெயவர்மருக்கு கொடுத்துவிட்டு, கிருஷ்ணாவை பார்த்து,

“என்ன கிருஷ்ணா இது எல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்துல அவருக்கு ஆப்ரேஷன்,அதும் மேஜர் ஆப்பேரஷன், அவர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி கண்டிப்பா உன் கிட்ட பேசியே ஆகணும்னு சொன்னதால் தான், உன்னை அவரை பார்க்கவே சொன்னேன், நீ என்னடானா நிலைமை புரியாம இருக்க,  இப்போ அவரோட பீ.பி ரைஸ் ஆகுறது எவ்ளோ பெரிய பிரோப்ளேம் ஆகும் தெரியுமா, முதல்ல எல்லாரும் வெளியே போங்க, எதுக்கு இங்க இவ்ளோ கூட்டம்” என்று கத்த ஆரம்பித்தார்.

ஓர் அளவுக்கு முயன்று தன்னை திடப்படுத்தி கொண்ட ஜெயவர்மரோ மருத்துவரை அழைத்து, “ஒரு ரெண்டு நிமிஷம் பிலீஸ் டாக்டர்” என்று கேட்க, அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர் வெளியே சென்றார். வெளியே செல்லும் முன் கிருஷ்ணாவை எச்சரிக்கும் பார்வை பார்க்கவும் தவறவில்லை அவர்.

அதே நேரம் செவிலியரையும் அழைத்து அடுத்த ஐந்து நிமிடத்தில் எல்லோரையும் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் தான் சென்றார் அவர்.

கிருஷ்ணாவை பார்த்த ஜெயவர்மர் கெஞ்சும் குரலில், “கல்யாணம் பண்ணிக்கோ கிருஷ்ணா, ஒரு வேளை இந்த ஆப்பேரஷன்ல எனக்கு ஏதாவது ஆனா கூட, உன்னோட கல்யாணத்தை பார்த்த சந்தோஷத்துல போவேன்” என்று சொல்ல, கிருஷ்ணாவோ பதறி போய்,

“இல்லப்பா, உங்களுக்கு ஒன்னும் ஆகாது, நீங்க நல்லபடியா திரும்பி வருவீங்க” என்று சொல்ல, அவரோ அவரின் பிடியில் உறுதியாக இருக்க, மீண்டும் நெஞ்சை இடது கையால் நீவி விட ஆரம்பித்தார்.

தந்தை மகனை தவிர மற்ற அனைவரும் அமைதியாக நடப்பதை பார்த்து கொண்டு பார்வையளராக இருந்தனர். யாருக்கும் என்ன பேசுவது என்று புரியாத நிலை.

மருத்துவரின் கூற்றில் தந்தையின் உடல் நிலையின் தீவிரம் உரைக்க, சற்று முன்பு தான் அவரின் இரத்த அழுத்தம் அதிகமாகி இருக்க, இப்போது அவர் மீண்டும் நெஞ்சை நீவி விட பயந்துபோன கிருஷ்ணா, வேறு வழி இல்லாமல், தந்தையோடு மேலும் தர்க்கம் செய்ய விரும்பாமல், இப்போது தனக்கு இருக்கும் ஒரே உறவான தந்தைக்காக, அவரின் ஆசைப்படியே அவர் சொன்ன பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி புது உறவு ஒன்றை உருவாக்கி கொண்டான்.

காதல் கொள்வோம்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!