Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்- 28 (1)

கிருஷ்ணாவுக்கோ நடப்பது எல்லாம் கனவு போலவே இருந்தது. எத்தனை, எத்தனையோ தடைகள் என நேற்று வரை சோர்ந்திருக்க, ஒரே நாளில் யாரோ மந்திர கோலை சுழற்றியது போல எல்லாமே இன்ப மாயமாய் மாறிய உணர்வு அவனுக்கு.

அன்று உமையாள் அவளின் அப்பாவிடம் பேசிய பிறகு, மறுநாள் ஜெயவர்மரிடமும் பேசி, ஒரு நல்ல நாளை வரவேற்பிற்கு குறித்தனர்.

ஜெயந்தி அம்மாள் தான் உமையாளின் மீது கோவத்தில் இருந்தார். வசீகரன், உமையாள் இருவருமே, அவருடைய பிள்ளைகள் தான்.

எப்போதும் இருவருக்கும் இடையில் எந்த ஒரு வேறுபாட்டையும் அவர் பார்த்தது இல்லை. இப்போதும் ஒரு தாயாக, அவரால் தான் இப்படி அவசர, அவசரமாக நடந்த திருமணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.



Advertisement

காரணங்கள் ஆயிரம் இருந்த போதும், ஜாதக பொருத்தம் பார்க்காமல், நல்ல நாள் குறிக்காமல், சொந்த பந்தம் கூட அடுத்த கட்டம், தாங்களே இல்லாமல் நடந்த கல்யாணம், அவருக்கு உவப்பாகவே இல்லை.

அவரின் மனதை புரிந்து கொண்ட உமையாள் தான், கெஞ்சி, கொஞ்சி அவரை சமாதானப் படுத்தி கொண்டிருந்தாள்.

ஜெயந்தி அம்மா, அவரின் திருப்திக்காக இருவரின் ஜாதகத்தையும் பார்த்து, வரவேற்பு மற்றும் சடங்குக்கு நல்ல நாள் குறிக்க, சிரியவர்கள் இதில் எல்லாம் தலையிடவில்லை. பெரியவரின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர்.

Advertisement

வசீகரனின் அப்பாவோ, தன் தங்கை போல, உமையாள் ஒரு வெள்ளையனை விரும்பாமல், கிருஷ்ணாவை மணந்ததில், அவருக்கு ஏக திருப்தி.

Advertisement

பாலாவும், வசீகரனும் பெரியவர்களை தொந்தரவு செய்யாமல், நிகழ்விற்கான அனைத்து பொறுப்புகளையும் தாங்களே ஏற்று கொண்டனர்.

கிருஷ்ணாவும், உமையாளும், வரவேற்பிற்காக தங்களை தயார் படுத்துவது, உடை தேர்வு என, அவர்களுக்கான வேலையில் ஆழ்ந்து விட, கணவன், மனைவி மனம் விட்டு பேச மட்டும், தனிமை வாய்க்க வில்லை.

வம்சி கிருஷ்ணா, உமையாள் வரவேற்பிற்கான நாளும், ஆர்ப்பாட்டமாக விடிந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நட்சத்திர விடுதியில், அவர்களின் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

கிருஷ்ணாவின் தொழில் முறை நண்பர்கள், ஜெயவர்மரின் சொந்தங்கள், உமையாளின் தாய் வழி உறவுகள் என ஒருவரையும் விடாமல், எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பாலாவும், வசீகரனும் வரவேற்பு நடக்கும் கூடத்தை, அசரவை போலவே அலங்கரிக்க சொல்லி இருந்தனர்.

மணமக்கள் அமரும் இருக்கை முதற்கொண்டு, திரைசீலைகள் வரை, அந்த கூட்டத்தில் இருந்த அத்தனை பொருட்களும், மன்னர் காலத்தை பிரதிபளிக்கும் வைகையில், மிக நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன.

விருந்தினர்கள் அனைவருக்கும், ஏதோ கால இயந்திரத்தில் ஏறி, மன்னர் காலத்துக்குள் நுழைந்துவிட்ட உணர்வு.

கிருஷ்ணாவும், உமையாளும் கூடத்தின் அலங்காரத்திற்கு ஏற்ற வகையில், தாங்கள் தேர்ந்தெடுத்திருந்த உடையில், மகுடம் தரிக்கா மன்னவன், அவனின் மாதரசி என கம்பீரமாக மேடை ஏறினர்.

பெற்றவர்கள், தம் மக்களின் முகத்தில் இருந்த நிறைவான புன்னையில், மனம் குளிர்ந்து நிற்க, விருந்தினர்களோ அவர்களின் ஜோடி பொருத்தில் வியந்து நின்றனர்.

உமையாள் அவளின் தந்தையிடம் சொல்லியபடி இருவரும் காதலித்ததாகவும், ஜெயவர்மரின் உடல் நிலை காரணமாக, முக்கிய சொந்தகளுடன் மட்டும் திருமணம் நிகழ்ந்ததாகவும், இப்போது அவரின் உடல்நிலை தேறியதால் வரவேற்பு என்றே விருந்தினர்களுக்குள் தகவல் பரப்பப்பட்டது.

ஆம் தகவல் கிருஷ்ணாவின் ஆட்களால் பரப்ப தான் பட்டது. யாரும் நேரடியாக கேள்விகள் கேட்க வில்லை என்றாலும், திடீர் வரவேற்பு, பலவிதமான பேச்சுகளுக்கு வித்திடும் என்பதால் கிருஷ்ணாவின் ஏற்பாடு தான் அது.

என்னதான் இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், திருமணம் நடந்த விதத்தை யாரும் அறிவதிலோ, தங்களின் காதல் விவாத பொருளாவதிலோ, கிருஷ்ணாவுக்கு துளியும் விருப்பம் இல்லை.

விருந்தினர்கள் எல்லாம் ஒவ்வொருவராக மேடையேறி மணமக்களை வாழ்த்த, கிருஷ்ணா வழக்கம் போல அமைதியே உருவாய், இருப்பது போல தான் மற்றவருக்கு தெரிந்தது.

ஆனால் அவனை அறிந்த அவனின் நண்பர்களுக்கும், உமையாளுக்கும் கிருஷ்ணாவின் அமைதியிலும், அவனின் மலர்ந்த முகம், அவனின் மகிழ்ச்சியை தெள்ள தெளிவாய் பறைசாற்றி கொண்டிருந்தது.

ஒரு வழியாக விருந்தினர்கள் எல்லாம் விடைபெற்று செல்ல, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

கிருஷ்ணாவும், உமையாளும், மேடையை விட்டு இறங்கி, சற்று ஓய்வாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது உமையளிடம் விடைப்பெற ஒருவர் வர, அந்த நபரின் கவனத்தை கவராமல், கண்களால் பாலாவை தங்களின் அருகே அழைத்த உமையாள், தான் பேசி கொண்டிருந்த நபரிடம்,

“இது என்னோட அண்ணா பாலா, ரொம்ப நல்லவரு, எந்த அளவுக்குனா, ஒரு பொண்ணு மூனு வருஷமா பார்த்தது கூட தெரியாத அளவுக்கு”

என்று நீட்டி முழக்கி அறிமுகப்படுத்த, பாலாவோ “இதை எல்லாம் அந்த பொண்ணு இப்போ உன்கிட்ட கேட்டுச்சா” எனும் விதமாக உமையாளை முறைத்து பார்த்தான்.

அதே நேரம் உமையாள் அறிமுகபடுத்திய, அந்த பெண்ணை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பையும் பாலா உதிர்த்து வைக்க, உமையாளோ அந்த பெண்ணிடம்,

“எனக்கு என்னமோ அண்ணனை நம்புனா உனக்கு நேரா அறுபதாவது கல்யாணம் தான் நடக்கும்னு தோணுது, என்னோட அண்ணன் தான், ஆனாலும் கேட்கிறேன் ஒழுங்கா சொல்லு, உனக்கு கண்டிப்பா இந்த பெட்டர்மாஸ் லை…ட்…டே.. தான் வேணுமா”

என்று அந்த பெண்ணின் காதை கடிக்க, லேசாக முகம் சிவந்த அப்பெண்ணோ, மெல்லிய குரலில்,

“எனக்கு அவங்க இன்னசென்ஸ் தான் பிடிச்சி இருக்கு அண்ணி, நான் என்ன பண்ண”

என்று சொல்ல, அவளை “எல்லாம் விதி, ஒன்னும் பண்ண முடியாது” என்ற பார்வை பார்த்த உமையாள், பாலாவுக்கு கேட்கும் விதமாக சத்தமாகவே அப்பெண்ணிடம்,

“என் கண்ணையே உன் கிட்ட, ஒப்படைக்கிறேன், அதுல ஆனந்த கண்ணீர் கூட வரமா, நீ தான்மா பார்த்துக்கணும்”

என்று நடிகர் திலகம் அளவுக்கு பேச, உமையாளின் பேச்சில், முழுதாக சிவந்த அப்பெண்ணோ,

“பச் போங்க, அண்ணி” என்ற சிணுங்கிவிட்டு, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், அங்கிருந்து விரைய, பாலாவோ “பே” என முழித்து கொண்டிருந்தான்.

அவனின் பார்வையில் மானசீகமாக தலையில் அடித்து கொண்ட உமையாள், பாலாவிடம்,

“ஊரே நீங்க ரெமோனு நினைச்சி கிட்டு இருக்கு, ஆனா நீங்க அம்பியை விட மோசம் அண்ணா”

என சலிப்புடன் சொல்ல, இப்போதும் பாலா அவளை புரியாமல் பார்க்க, உமையாள்,

“அவதான் பிரியா, கட்டுனா உங்களை தான் கட்டுவேனு, ஒத்த காலில் நிற்கும் ஜீவன்” என்று சொல்ல, பாலாவோ,

“நிஜமாவா உமா” என்று ஒரு பரபரப்புடன் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“இந்நேரம் பறந்து அவ கிட்ட போய் இருக்க வேண்டாம், இன்னும் நின்னு என்னோட முகத்தை பார்த்து கிட்டு இருக்கீங்க, நீங்க இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க அண்ணா”

என்று கடுப்புடன் மொழிய, அடுத்த நிமிடம் பாலா ஏன் அங்கு நிற்க போகிறான். தன் காதல் தேவதையை தேடி, அவள் சென்ற வழியில் ஓடி இருந்தான்.

பாலாவின் செய்கையில், ஒரு சிரிப்புடன் திரும்பிய உமையாள், தன் அருகில் தன்னையே பார்த்து கொண்டிருந்த, தன்னவனின் பார்வையில் சிவப்பது இப்போது அவளின் முறையானது.

அன்று வரவேற்பு முடிந்து வீட்டுக்கு செல்லவே, இரவு நடுநிசி தாண்டி விட, அனைவரும் அலுப்பில் அவரவர் அறையில் முடங்கி விட்டனர்.

அடுத்த நாளும் சோம்பலுடன் விடிய, இன்று தான் ஜெயந்தி அம்மா, புது மண தம்பதியருக்கான சடங்குக்கு நாள் குறித்து இருந்தார்.

அன்று இரவு, மென்மையான வெண்பட்டில், கண்ணை உறுத்தாத மிதமான அலங்காரத்துடன், உமையாள் கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தாள்.

என்ன தான் மனம் விரும்பிய மணவாளன் என்றாலும், உள்ளே நுழைந்த நொடி, ஒரு படபடப்பு சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொண்டது அவளை.

அறையின் உள்ளே வந்த உமையாள் கிருஷ்ணாவை கண்களால் தேட, அந்த அறையின் நடுவில் நின்று, ஒரு சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணா,

“போ உமை, உன்னோட ட்ரெஸ் எல்லாம் அந்த கபோர்ட்ல இருக்கு, போய் உனக்கு கம்பர்டபிள் அஹ இருக்க ட்ரெஸ் அஹ சேன்ஜ் பண்ணிட்டு வா”

என்று உரைக்க, இன்னும் சிறு பதட்டத்துடனே இருந்தவள், ஒன்றும் பேசாமல், அவனை பார்த்து தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள்.

அவள் உடைமாற்றி வருவதற்குள், தானும் இலகுவான உடைக்கு மாறிய கிருஷ்ணா, தன்னவளின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

தயங்கி, தயங்கி உமையாள் வந்ததும், அவளை அழைத்து, கட்டிலில் தன் அருகில் அமர்த்தி கொண்டவன், அவளின் கண்களை பார்த்து,

“சொல்லு உமை”

என்று சொல்ல, “என்ன சொல்லனும்” எனும் விதமாக அவள் விழி உயர்த்தி அவனை பார்க்க, கிருஷ்ணாவோ,

“இத்தனை வருஷமா, எனக்காக பொக்கிஷமா, உன் மனசுல நிறைத்து வைத்து இருக்கிற, உன்னோட காதலை பத்தி சொல்லு உமை”

என்று கேட்க, அவன் சொல்லியதை கேட்ட உமையாள், தன் தயக்கங்கள் மறந்து, ஒரு ஆர்வத்துடன் அவனை பார்த்து,

“ஆமா, இது உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அவனோ,

“நீ முதல்ல சொல்லு, அப்புறமா நான் சொல்றேன்” என்று சொல்ல, இத்தனை வருட காதல் நெஞ்சமெல்லாம் நிரம்பி வழிய, இன்று அனைத்தையும், தன்னவனிடம் சொல்ல விழைந்த அக்காரிகை,

“சின்ன வயசுல இருந்தே, உங்ககிட்ட நேரே பேசனது இல்லைனாலும், கரன் பேசும் போது எல்லாம் உங்களை பத்தி பேசி, நீங்க ரெண்டு பேரும் இருக்கிற போட்டோஸ் பார்த்து, பார்த்து, நீங்க எனக்கு அந்நியமா தோணுததே இல்லை”

என்ற சொல்லியவள், ஒரு சிரிப்புடன் அவனை பார்த்து,

“ஆனா உங்களை முதல் முதலில் நான் ரசிக்க ஆரம்பிச்சது, நீங்க காலேஜ் பைனல் இயர் படிக்கும் போது தான்”

என்றவள், அவனின் கண்களை பார்க்காமல், தன் விரல்களை பார்த்தவாறு,

“அப்போ நான் லீவுக்கு இங்க வந்த இருந்தேன், எதோ ப்ரொஜெக்ட் விஷயமா கரன் அவசரமா கிளம்பி போய்ட்டான், அப்புறம் என்னை கால் பண்ணி ஒரு மாலுக்கு வர சொன்னான், அங்கு அவனை தேடி வரும் போது, ஒரு பொண்ணு, அவ பிரின்ட் கிட்ட, ஒரு பையனை வருணிச்சிக்கிட்டு இருந்தா”

ஒரு சிறு இடைவெளி விட்டவள், இன்னும் விரல்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே,

“அவங்க பேசுனதுல நானும் இம்ப்ரெஸ் ஆகி, யாரு தான்டா அந்த ஆணழகன் அப்படினு, அந்த பொண்ணு சொன்ன இடத்தில் பார்த்தா, என் கண்ணுக்கு அப்படி ஒருத்தரும் தெரில”

என்று சொல்லியவள், இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து உதடு பிதுக்க, அவளின் பாவனையில் கவரப்பட்டு கிருஷ்ணா, அவளை இமைக்காமல் பார்க்க, அவளோ அவனின் பார்வையில் நெளிந்தவாறே,

“நீங்க இப்படி எல்லாம் பார்த்தா, நான் எப்படி சொல்றது”

என சிணுங்க, அவளின் சிணுங்கலில் சில்லு சில்லாய் சிதறியவன், அவளின் காதலை அறிய வேண்டி, முயன்று தன் பார்வையை மாற்றி அவளிடம்,

“சரி சரி சொல்லு”

என்று கேட்க, அவன் பார்வையின் மாற்றத்தில், தன்னை மீட்டு கொண்ட அவளும்,

“என்ன மாதிரியே அந்த பொண்ணு பிரின்ட்கும் தெரில போல, அதனால் அந்த பொண்ணு, ட்ரெஸ் கலர் வயிட்னு அவளோடு பிரின்ட்கு சொல்ல, நானும் யாருடானு பார்த்தா, நீங்க தான் அங்க வயிட் கலர் ஷர்ட்ல நீங்க தான்”

என்றவள், இப்போது சற்றே கிண்டலுடன்,

“என்னடா நமக்கு தெரிஞ்ச பயபுள்ளயாச்சே, இந்த பொண்ணுங்க சைட் அடிக்கிற அளவுக்கு, அம்புட்டு அழகாவா இருக்குனு பார்த்தா…., பார்த்தா….. என்னா கண்ணு மேன் உனக்கு, அதுலயே நான் டோட்டல் பிளாட்”

என்ன தான் குறும்புடன் சொல்ல முயன்றாலும், அவளின் குரலில் அவனுக்கான காதல் அப்பட்டமாய் தெரிய, அவளை வாரியணைக்க துடித்த கைகளை கட்டுப்படுத்தி கொள்ள கிருஷ்ணா தான் தவித்து கொண்டிருந்தான்.

அவனின் நிலை அறியாத உமையாளோ, தொடர்ந்து,

“இதுல ஹைலைட் என்னன்னா, அந்த பொண்ணு வர்ணிக்க, வர்ணிக்க எனக்கு அது எல்லாமே உங்களை சொன்ன மாதிரி, உங்களுக்கு தான் பொருந்தி இருக்கிற மாதிரி தோணுச்சி, உங்களை தவிர வேற யாருமே கண்ணுக்கு தெரில, உங்க பக்கத்துல இருந்த கரன் கூட”

என்று பாவனையாக சொல்ல, தன் சின்ன சின்ன , முக பாவனைகளில், அவனை மொத்தமாக வீழ்த்தி கொண்டிருக்கிறோம் என்று உணராத பெண்ணவளோ, தொடர்ந்து,

“அந்த பொண்ணோட பிரின்ட் என்னை மாதிரி வேற வயிட் கலர் ட்ரெஸ் போட்ட யாரையோ பார்த்து இருக்கும் போல, தன்னோட பிரின்ட் கிட்ட, நீ சொல்ற அளவுக்கு எல்லாம் அந்த பையன் இல்லையேனு சொல்ல, இந்த பொண்ணு ட்ரெஸ் கலர் அஹ இன்னும் குறிப்பிட்டு சொல்ல, அப்போ தான் எனக்கு, அந்த பொண்ணு சொன்னது நம்ப கரனைனு புரிஞ்சது, அதோட நான் ரசிச்சிக்கிட்டு இருந்தது உங்களைனும் புரிஞ்சது”

ஏற்ற இறக்கத்தோடு சொல்ல, கிருஷ்ணா இப்போது வாய் திறந்து,

“அப்போ அந்த பொண்ணுங்க பேசுறதை கேட்காம இருந்து இருந்தா, நீ என்னை வேற கண்ணோட்டதில் பார்த்திருக்க மாட்ட இல்லை”

என்று யோசனையுடன் கேட்க, அதை மறுத்த உமையாளோ,

“அப்படி சொல்ல முடியாது, அந்த பொண்ணு பேசுறதை கேட்கலைனா கூட, பின்னாடி எப்போவாது நடந்து இருக்கும்னு தான் எனக்கு தோணுது”

என்று அவனை மாதிரியே யோசனையுடன் சொன்னவள், தொடர்ந்து,

“ஏனா அங்கு இன்னும் எத்தனை பேரு வெள்ளை சட்டையில் இருந்தாங்களோ தெரில, அவ பிரின்ட் கூட வேற யாரையோ பார்த்தா இல்ல, ஆனா என் கண்ணுக்கு நீங்க தான், அங்க இருந்தவங்களில் அழகா தெரிஞ்சி இருக்கீங்க, என்னை இந்த கண்ணை வச்சி மெஸ்மரஸை பண்ணி இருக்கீங்க”

என்று உணர்ந்து சொல்ல, கிருஷ்ணாவின் பார்வை, மீண்டும் காதலோடு அவளை வருட, அவனின் பார்வையில் சிலிர்த்த உள்ளத்தை மறைத்து கொண்டு, உமையாள் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து கதையை தொடர்ந்தவள்,

“அப்போ எனக்கு அது லவ்னு தோணலை, ஒரு ஈர்ப்பு அப்படினு தான் நினைச்சேன், ஆனா ஊருக்கு போனதுக்கு அப்புறம் கூட, இந்த கண்ணு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சி”

என்று அவனின் கண்களை தன் விரல் கொண்டு சுட்டிக்காட்டியவள், தன்னை மறந்து அந்த கண்களில் மூழ்கியவள், சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு,

“அதுல இருந்து தப்பிக்க, அந்த கண்களை வரைய ஆரம்பிச்சேன், அப்போ தான் ஒரு நாள் இந்த கண் காதலோடு என்னை பார்த்தா எப்படி இருக்கும்னு தோணுச்சி, அப்போ தான், எனக்கு உங்க மேல இருக்கிற உணர்வுக்கு என்ன பேருனு புரிஞ்சது”

என்று சொல்லியவள், லேசாக சிவக்க ஆரம்பித்த முகத்தை குனிந்து மறைக்க, அவளின் முகத்தை நிமிர்த்தி தன் கண்களை பார்க்க வைத்த கிருஷ்ணா, மெல்லிய குரலில்,

“அந்த உணர்வுக்கு என்ன பேரு உமை” என்று கேட்க, அவனின் குரலில் கவரப்பட்ட உமையாள், தான் காண பேராவல் கொண்ட காதலை, தன்னவனின் கண்களின் கண்டவள், அதில் தன்னை தொலைத்து,

“காதல், காதல், காதல்”

ஒரே வார்த்தை தான். ஆனால் ஒவ்வொரு முறையும், வெவ்வேறு உணர்வுகளில் மூழ்கி வெளிவர, ஒரு காலத்தில் கசந்து வழிந்த, அந்த வார்த்தை, இன்று தன்னவளின் வாய் மொழியில், அவனுக்குள் தித்திப்பாய் இறங்கியது.

தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை, தலைவன் தலைவிக்கு, உணர்த்த விழைந்ததின் விளைவு, இப்போது தலைவனின் அதரங்களும் தித்தித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!