ஆதித்யா சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, தனது நீண்ட கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனது கால்கள் மிக நீளமாக இருந்ததால், அவை சோஃபாவையும் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தான். அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு… வாரக்கடைசி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது.
Advertisement
“ஹுர்ரே.. நாளைக்கு லீவு..!”
என்று பள்ளிச் சிறுவனைப் போல துள்ளி குதிக்கவேண்டும் போல் இருந்தது .
அவன் வெறும் இன்டர்ன் (intern) ஆக இருந்தபோதிலும், அவனது பயிற்சியாளர் அவனுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லாமல் வேலைகளையும் அசைன்மென்ட்களையும் குவித்து வைத்திருந்தார்.
Advertisement
தனது சொந்த வேலைகளைக் கூட இவன் தலையிலேயே கட்டியிருந்தார். வேலைப்பளுவைப் பற்றி அவனுக்கு எந்த புகாரும் இல்லை, மாறாக அதை ஒரு கற்றல் அனுபவமாகவே பார்த்தான்.
Advertisement
இந்தப்பயிற்சியை தனது எதிர்கால வெற்றிக்கு ஒரு அடித்தளமாகத்தான் நினைத்தான்.
தனது பேட்ச்சிலேயே முதல் மாணவனான ஆதி, வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவுக்காக, தனக்கு கேம்பஸ்சில் வந்த பல கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகளை கூட மறுத்திருந்தான். அமெரிக்க யுனிவர்சிட்டியில் அவனது ஸ்காலர்ஷிப் உறுதி செய்யப்படுவதற்காகக் காத்திருந்தான். அதுவரை தற்காலிகமாகத்தான் இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
அதே சமயம், தற்காலிக வேலைதானே என்று அவன் அதை அலட்சியமாக நினைக்கவும் இல்லை. தனக்குக் கொடுக்கப்படும் வேலையில் 200% உழைப்பைக் கொடுத்து வந்தான். இருப்பினும், சீனியர் தன்னைச் சுரண்டுவது போன்ற உணர்வு அவனுக்கு எரிச்சலைத் தந்தது. எனவே, அடுத்த வாரக் கடின உழைப்பிற்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள இந்த ஓய்வு அவனுக்குத் தேவைப்பட்டது.
Advertisement
இலக்கில்லாமல் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு கார்ட்டூன் சேனலில் நின்றான்… இதே போல சோஃபாவில் படுத்துக்கொண்டு, கார்ட்டூனை மிகவும் ஆர்வமாகப் பார்த்து,கெக்கே பெக்கே என்று மதி சிரித்துக் கொண்டிருந்த காட்சி அவனது கண்முன் வந்து சென்றது. அவனது இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
“ஹுச்சி(லூசு)..” என்று முணுமுணுத்தான்.
‘லூசுதான், ஆனால் க்யூட்டான லூசு’ என்று அவனது இதயத்தின் மற்றொரு பகுதி அவளுக்கு ஆதரவாக வாதாடியது.
திடீரென்று அவளது முகம் ஏன் அவனுக்கு நினைவுக்கு வந்தது என்று அவன் ஆச்சரியப்பட்டான். அவளைப் பற்றி அவன் நினைப்பது இது முதல் முறையல்ல. சமீபகாலமாக, அவளது விதவிதமான முகபாவனைகள் – சிரிப்பு, கோபம், சிணுங்கல், உதட்டைப் பிதுக்குவது, ஆச்சரியத்தில் கண்களை விரிப்பது- என அனைத்தும் அடிக்கடி அவன் நினைவில் வந்து போயின. அவன் எப்போதும் அவளையே நினைத்துக் கொண்டிருந்தான் என்று இல்லை, ஆனால் வேலையில் மூழ்கி இருக்கும் போதோ, தூங்கும் போதோ அல்லது ஏதேனும் முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போதோ, திடீரென அவளது முகம் அவன் மனதில் தோன்றும். அவளோடு தொடர்புடைய எதைப் பார்த்தாலும் அவளது நினைவு வரும். நேற்று ஒரு தெருவோர வியாபாரி ரோஜாப் பூக்களை விற்பதைப் பார்த்தபோது, பூக்கள் மீது மதி வைத்திருக்கும் அந்தப் பைத்தியக்காரத்தனமான அன்பு அவனுக்கு நினைவு வந்தது. இன்று இந்த கார்ட்டூன் அவளை நினைவூட்டியது. இப்படி சமீபத்தில் பல சம்பவங்கள் நடந்தன.
ஆதித்யா ஒற்றைப்பிள்ளையாக வளர்ந்ததாலும், அதிகமாக மற்றவர்களுடன் பழகாததாலும், அவனுக்குப் பெண்களின் உலகம் தெரியாது; அதில் அவனுக்கு ஆர்வமும் இல்லை. அறிவும் அழகும் ஒருங்கே கொண்ட அவனை நோக்கி கல்லூரியில் பல பெண்களின் பார்வை திரும்பியது. ஆனால், படிப்பில் உயர வேண்டும் என்ற தனது லட்சியத்திலிருந்து அவன் கவனத்தைத் திசைதிருப்பியதில்லை. கல்லூரியில் அவன் ஒரு புத்தகப் புழுவாகவே இருந்தான். பெண்கள் பின்னே சுத்துவது, அவர்களைக் கவர மெனக்கெடுவதுபோன்ற செயல்களில் அவனுக்கு மனம்சென்றதில்லை. அவனது வயதொத்தவர்கள் பார்ட்டிகளிலும் பப்களிலும் (Pubs) ஆட்டம் போட்டபோது, அவன் கூடுதல் வகுப்புகளுக்குச் செல்லவே விரும்பினான்.
மதி ஒருத்திதான் அவனது கவனத்தை ஈர்த்த முதல் பெண். பெண்களின் உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவனுக்குள் தூண்டியவளும், எப்போதும் சீரியஸான அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தவளும் அவள் மட்டுமே.
இப்போது அவளது ஒவ்வொரு துருதுருப்பான செய்கையும் அவனுக்குப் பழகிவிட்டது. அவளது குறும்புத்தனத்தை ரசிக்கத் தொடங்கியிருந்தான். நாள் முழுவதுமான சோர்வை அவளது மலர்ந்த முகத்தில் தொலைக்க முடிந்தது. உண்மையில், ஒவ்வொரு நாளும் மாலைநேர டியூஷன் வகுப்பை அவன் ஆவலோடு எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான்.
ஆனால் இன்று அவளுக்குப் பள்ளியில் விளையாட்டு விழா (Sports day) என்பதால் டியூஷன் வகுப்பு இல்லை.
அவளைப் பார்க்க முடியாது என்ற எண்ணமே அவனது மகிழ்ச்சியைப் பாதியாகக்குறைக்க நீண்ட பெருமூச்சு விட்டான்.
நேற்றிரவு அவள் பேசியது அவன் மனதில் ஒரு திரைப்படம் போல ஓடியது.
“சார், நாளைக்கு டியூஷன் கிளாஸ்க்கு லீவு விட முடியுமா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
“ஏன்?”
“எங்க ஸ்கூல்ல ஆனுவல் ஸ்போர்ட்ஸ் மீட் சார்..” அவள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள்.
“நீ ஏதாவது ஈவென்ட்ல பார்டிசிபேட் பண்றியா?”
“ஐயோ இல்லை.. நான் எதுலயும் கலந்துக்கல. சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போறேன்,”
“அதுக்கு எதுக்கு இவ்வளவு எக்சைட் ஆகுற?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அவள் வழக்கம்போல அவனை அசரவைப்பது போல ஒரு விளக்கத்தைக் கொடுத்தாள்.
“எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே-க்கு நிறைய பேர் வருவாங்க.. பேரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்.. ஏன் பக்கத்து காலேஜ் பசங்க கூட வருவாங்க.. பொண்ணுங்களை சைட் அடிக்க..” என்று சொல்லிவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
ஆனால் கோபத்தில் அவன் கை முஷ்டியாக இறுகியது.
‘அந்தப் பசங்களைப் பார்த்து ரசிக்கத்தான் இவள் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாளா?’ என்று நினைத்ததும் அவனது ரத்தம் கொதித்தது. அருவருப்பாக உணர்ந்தான்.
ஆனால் இவனது முகமாறுதல் எதையும் கவனியாமல்
“இவ்வளவு பேர் வர்றதால நிறைய ஃபுட் ஸ்டால் போடுவாங்க.. சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சாட், ஃபாஸ்ர்ட் ஃபூட், எல்லாமே இருக்கும். நானும் என் ஃப்ரண்ட்ஸும் இப்பவே பிளான் பண்ணிட்டோம் என்னென்ன சாப்பிடறதுன்னு.. ஃபர்ஸ்ட் பிட்சா, பொட்டேடோ ரிங்ஸ்,அப்புறம் தஹி பூரி,அத்தோ, மோமோஸ், நக்கெட்ஸ், ப்ரௌனி வித் ஐஸ்கிரீம்.” என்று ஒரு பட்டியலையே வாசித்தாள்.
சட்டென்று அவனது விரைத்த உடல் தளர்வடைந்தது.
“இவளைப் போய் எப்படி என்னால் தவறாக நினைக்க முடிந்தது?”என்று உள்ளூர தன்னையே நொந்துகொண்டான்.
அவளது நீண்ட பட்டியலைக் கேட்டு அவன் கண்களை உருட்டி,
“மதி.. இதையெல்லாம் ஸ்டோர் பண்ண உன் வயித்துல ஏதாவது ஸ்டோர் ரூம் இருக்கா?” என்றான் கிண்டலாக,
அவனது கிண்டலுக்கு அவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டது இன்னும் அவன் கண்முன்னே நிழலாடியது. அந்த நினைவே அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. சமீபகாலமாக அவன் அடிக்கடி சிரிப்பதை அவனது மனம் அவனுக்குச் சுட்டிக்காட்டியது.
அவளது மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல், டியூஷனுக்கு வரச் சொல்லி வற்புறுத்தாமல் அவளுக்கு லீவு கொடுத்துவிட்டான்.
இப்போது அவள் தனக்குப் பிடித்த உணவுகளை வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்ற நினைவு தோன்றும் போதே. தண்மதி மின்னும் கண்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சி அவன் கற்பனையில் விரிந்தது.
அவள் அந்த பிங்க் நிற கோன் ஐஸ்கிரீமை ரசித்துசுவைத்தபடி இருப்பதை இவன் அருகிலிருந்து இமைத்தட்டாது ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
எதேர்ச்சையாக விழியுயர்த்திப் பார்த்த மதி,கண்கள் பளபளபக்க இவனைப் பார்த்து ஐஸ்கிரீம் வேண்டுமா என்று கேட்பது போல் அந்த கோனை அவனிடம் காட்டிக்கேட்கிறாள். அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தவன், மெதுவாக அவளை நெருங்கி ,ஐஸ்கிரீம் வைத்திருக்கும் அவளது கையைப் பிடித்தான்.
அவனது பார்வை அவளது உதட்டின் மேல் லேசாக ஒட்டியிருந்த ஒரு துளி ஐஸ்கிரீம் மீது விழுகிறது,காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புபோல் அவன் அவள் முகம் நோக்கிக்குனிந்து இதழோரம் ஒட்டியிருந்த பனிக்கூழை தன் இதழ்களால் சுவைத்தான்.
வேகமாகத் தலையை உலுக்கிக்கொண்டு நிஜ உலகிற்கு வந்தவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
“எப்படி என்னால் இவ்வளவு கீழ்த்தரமாகக் கற்பனை செய்ய முடிந்தது?”
“இல்லை, இது தப்பு.. ரொம்பத் தப்பு.. கடவுளே, அவள் இன்னும் ஒரு குழந்தை. நான் இப்படி நினைப்பது தெரிந்தால் அவளது எதிர்காலமே பாழாகிவிடும். அவளது வெள்ளந்தியான குணத்தை என் தரம் தாழ்ந்த எண்ணங்களால் சிதைத்துவிடக்கூடாது.
அவளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், ஒரு ஆசிரியர்-மாணவி என்ற உறவை மட்டுமே பேண வேண்டும் என்றும் முடிவு செய்தான்.
அதற்கு புறம்பான வேறு எண்ணங்களை தன் சிந்தையிலிருந்து துடைத்தெறிய எண்ணி,. முகத்தில் தண்ணீரை வேகமாக அடித்து தன் மனத்திரையில் தோன்றிய காட்சியைக் கழுவ முயன்றான்.
அப்போது அழைப்பு மணி ஒலித்தது.
இந்த நேரத்தில் யார் என்று புருவம் சுருக்கி யோசித்தான். மாலா அம்மாவும் பெரியப்பாவும் கோயிலுக்குப் போயிருக்கிறார்கள், நாளைதான் வருவார்கள். பின் யார் இது?
கதவைத் திறந்தான். அங்கே மதியின் அம்மா ரேணுகா ஆன்ட்டி பதற்றமான முகத்துடன் நின்றிருந்தார்.
“ஆதி தம்பி.. அக்கா வந்துட்டாங்களா?” என்று கவலையுடன் கேட்டார்.
“இல்லை ஆன்ட்டி, பெரியம்மா நாளைக்குக் காலையில்தான் வருவாங்க. என்ன ஆன்ட்டி ஏதாச்சும் பிரச்சனையா?”
“மதிக்குத்தான் பா..”
அவள் பெயரைக் கேட்டதும் அவனது இதயம் ஒருகணம் நின்றது. பயத்தில் வயிறு கலங்கியது
“மதிக்கு என்னாச்சு?”
“வயித்து வலியில துடிக்கிறாப்பா.. ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகணும். அவங்க அப்பாவும் ஊர்ல இல்லை. அதான் அக்காவை உதவிக்குக் கூப்பிடலாம்னு வந்தேன். தம்பி.. ஆட்டோ ஸ்டாண்டுக்கு போய் ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வர முடியுமாப்பா?” என்று கெஞ்சலாகக் கேட்டார்.
“ஆட்டோவா? கார் இருக்கும்போது எதுக்கு ஆட்டோ?”
“எனக்கு கார் ஓட்டத் தெரியாதுப்பா..”
“நான் டிரைவ் பண்றேன்.. நீங்க போய் மதியை ரெடி பண்ணுங்க.. வீட்டை பூட்டிட்டு வரேன்.” வேகமாக வீட்டைப் பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு ஓடினான்.
அங்கே அவன் பார்த்த காட்சியை வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைத்தான். (ஆனால் மறந்துவிட்டானே)
மதி சோஃபாவில் சுருண்டு படுத்து, தன் வயிற்றைக் கட்டிக்கொண்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வாடிய பூவைப்போல அவள் அங்கே கிடப்பதைக் கண்டு அவனது இதயம் நொறுங்கியது. மறுயோசனை இன்றி ஓடிச் சென்று அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
திடீரென அவன் தூக்கியதும் அவள் திடுக்கிட்டாள், ஆனால் அவன் முகத்தைப் பார்த்ததும் மறுகணம் நிம்மதி அடைந்தவள் அவனது சட்டையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவனது அணைப்பு அவளது வலியைக் குறைக்கும் என்று அவள் நம்புவது போலத் தெரிந்தது. அவனது சட்டையைப் பிடித்திருந்த அழுத்தம் அவள் எவ்வளவு வலியை அனுபவிக்கிறாள் என்பதைக் காட்ட, அவளது வலியைத் தன் வலியாக உணர்ந்தவன், “நான் இருக்கிறேன், கவலைப்படாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொல்வது போல அவளை இன்னும் நெருக்கமாக தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவள் சற்று அமைதியானாள். காரை நோக்கி விரைந்தான்.
பின் இருக்கையில் அவளது அம்மாவோடு அவளை அமர வைத்துவிட்டு, ஒரு பைத்தியக்காரனைப் போல காரை ஓட்டினான். டிராஃபிக் விதிகளைப் பற்றி அவன் கவலைப்படவில்லை; அவளுக்கு அந்த வலி குறைய வேண்டும், அது ஒன்றே அவனது இலக்காக இருந்தது.
மதி கடுமையான வலியில் இருந்தபோதிலும், ஆதித்யாவின் முன்னால் அலறாமல் தன்னை அடக்கிக் கொண்டாள். அவளது அம்மா மட்டும் இருந்திருந்தால் அங்கே ஒரு புயலையே கிளப்பியிருப்பாள்.
“வலி குறைஞ்சிருக்கா மதி?” அவள் அலறுவது நின்றதைப்பார்த்து அவள் அம்மா கேட்டார்.
“இன்னும் அப்படியேதாம்மா இருக்கு..” என்று பற்களைக் கடித்தபடி முனகினாள்.
அவளது குரலில் இருந்த வலி ஆதித்யாவை தூண்ட, அவன் காரின் வேகத்தை இன்னும் அதிகரித்தான்.
மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கையறு நிலையில் காத்திருந்தான் ஆதித்யா. மறுபுறம் மதியின் அம்மாவோ பரிதாபமான நிலையில் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறித் தேற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்கு இருந்தது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டாக்டர் வெளியே வந்து நல்ல செய்தியைச் சொன்னார்.
“அவள் இப்போது நலமாக இருக்கிறாள். அலர்ஜி அல்லது கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டது. வயிற்றைச் சுத்தம் செய்துவிட்டோம் (Stomach wash). நல்லவேளை சரியான நேரத்திற்குக் கூட்டிட்டு வந்தீங்க. இல்லையென்றால் விஷம் ரத்தத்தில் கலந்திருக்கும், அது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. 24 மணி நேரம் கண்காணிப்பில் இருக்கட்டும். நாளை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம்.” என்றார்.
“பார்க்கலாம், ஆனா அவங்க இப்போ தூக்க மருந்தின் வீரியத்தில் தூங்கிட்டு இருக்காங்க. இன்னும் இரண்டு மணி நேரத்தில் கான்ஷியஸ் வந்துடும்.” என்று கூறி சென்றார்.
ஆதித்யாவும் ரேணு ஆன்ட்டியும் அறைக்குள் சென்றனர். கட்டிலில் சோர்ந்து போய்க் கிடந்த தன் மகளைப் பார்த்து ரேணுகா தாங்கமுடியாமல் விம்மி அழுதார்.
ஆதித்யா தன் இதயத்தை வலுப்படுத்திக் கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினான்.
“ஆன்ட்டி அழாதீங்க.. டாக்டர் தான் சொன்னாங்கல்ல, பயப்பட ஒன்னும் இல்லைன்னு.”
“இல்லை தம்பி.. அவங்க அப்பா ஊர்ல இல்லை. இவளுக்கு எதாச்சும் ஆகியிருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன் சொல்லு? மதி அப்பா பார்க்கத்தான் கண்டிப்பா, கோவமா இருக்கிற மாதிரி தெரிவார்… உண்மையில மதிதான் அவரோட உயிரு. இவளுக்கு எதாவதுன்னா என்னை விட அவர்தான் துடிச்சுப் போவாரு. நீ பண்ணது டைம்லி ஹெல்ப் பா.. மறக்கவே முடியாது.. ரொம்ப தேங்க்ஸ் தம்பி…”
“தம்பின்னு சொல்லிட்டு தேங்க்ஸ்னு சொல்றீங்க… இது சரியா?” என்று பொய்யான கோபத்துடன் ஆதி கேட்க, அவர் சிரித்தார்.
“ஆன்ட்டி மதிக்கு என்ன ஆச்சு? அப்படி என்ன சாப்பிட்டா அவ?”
பதில் சொல்லும் முன் அவர் முகம் சற்று கன்றியது.
“அவளுக்கு எப்பவுமே சாப்பிடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு ஸ்கூல்ல ஃபுட் ஸ்டால் போட்டிருக்காங்கன்னு.. பாக்கெட் மணியை எல்லாம் வழிச்சி எடுத்துட்டு போய் ஃபுல்லா காலி பண்ணிட்டா போல.. பிட்சா, பர்கர், சில்லி கோபி, பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், பிரெஞ்சு பிரைஸ்னு வகை தொகை இல்லாம சாப்பிட்டிருக்கா. வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்துல வயிறு வலின்னு கத்த ஆரம்பிச்சிட்டா…”
ஆதித்யா திகைப்பில் கண்களை உருட்டினான்.
‘இப்படியாடி மொரட்டு தீனி திங்குறது..?‘ என்று மனதிற்குள் அவளைக் கடிந்தான்.
“ஆன்ட்டி அங்கிளுக்கு சொல்லிட்டீங்களா?”
அவர் நெற்றியில் அடித்துக் கொண்டு,
“சொல்லணும்பா.. இந்த டென்ஷன்ல அதை மறந்துட்டேன். நான் வெளிய போய் பேசிட்டு வரேன்,” என்று சென்றார்.
அவர் சென்றதும், ஆதி, மதியின் அருகில் வந்தான். அவள் வெளிறிப் போய் வாட்டமாகத் தெரிந்தாள். அருகில் அமர்ந்து அவளது கூந்தலை அன்பாக வருடினான்.
“தண்மி.. ப்ளீஸ்.. உன்னை நீயே இப்படி ஆபத்தில் தள்ளிக்காத.. அது உன்னை விட எனக்குத்தான் அதிகமா வலிக்குது..” அவனை அறியாமல் அவனது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
தூக்கத்திலேயே மதியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
“சிரிக்காதடி எனக்கு இங்க உயிரே போயிடுச்சி.. இனிமே ஜங்க் ஃபூட்ல கை வச்சிப்பாரு அப்ப இருக்குடி உனக்கு.. ஷின்சான்..” என்று மனதிற்குள் அவளுடன் உரிமையோடு உரையாடியபடி நீண்டநேரம் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், கதவருகே சத்தம் கேட்டதும் சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டான்.