Skip to content
Post Views: 107

அத்தியாயம் 13
நிகழ்காலம்:
நெக்சஸ் சிஸ்டம்ஸ்:
Advertisement
“போங்க நவீன் நீங்க ரொம்ப மோசம்..” என்று மதி சிணுங்கினாள்.
“ஐயோ தண்மதி, இப்படி பொதுவா சொன்னா கேட்கிறவங்க என்னை தப்பா நினைச்சுக்க போறாங்க. என்ன விஷயம்னு தெளிவா சொல்லுங்க,” என்று நவீன் பயந்தது போல நடித்தான்.
மதி, ஶ்ரீநிதி மற்றும் நவீன் மூவரும் கஃபெட்டீரியாவில் (Cafeteria) பிரேக் டைமில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் மதி இப்படித் தொடங்கினாள்.
Advertisement
“பேச்சை மாத்தாதீங்க நவீன். நீங்க பண்றது உங்களுக்கே நியாயமா இருக்கா?”
Advertisement
“நான் என்ன பண்றேன்? ஐயோ நான் காஃபி தான்ங்க குடிக்கிறேன்.. நீங்க வேணா ஸ்மெல் பண்ணிப் பாருங்க?”
“ஆஹா.. பயங்கரமான ஜோக்.. இதுக்கு இந்த அளவுக்கு சிரிச்சா போதுமா.. ஈஈஈ?” என்று பற்களைக் காட்டினாள்.
“அப்பா.. செம கடுப்புல இருக்கீங்க போல. என்ன விஷயம்னு சொல்லுங்க மதி..”
Advertisement
“உங்க ஃப்ரண்ட் இப்படி இருக்காரேன்னு கொஞ்சமாவது உங்களுக்கு அக்கறை இருக்கா?” என்று குற்றச்சாட்டாகக் கேட்டாள்.
“என் ஃப்ரண்டா யாரு? ஆதியா ?” என்று நவீன் குழப்பத்துடன் கேட்டான்.
மதி கோபத்தில் மூச்சிரைத்து,
“உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? ஆதி சாரதான் சொல்றேன்..” என்றாள் எரிச்சலுடன்.
“ஆதிக்கு என்ன? ஹேண்ட்சம் ஹங்க்.. நெக்சஸோட ஹார்ட் த்ரோப். சொல்லப்போனா என்கிட்டயே நிறைய பொண்ணுங்க வந்து ஆதித்யாவோட ஃபோன் நம்பர் கேட்குறாங்க.. நானே காண்டுல இருக்கேன் நீங்க வேற மதி..”
மதி அதிர்ச்சியில் கண்களை விரித்து,
“ஐயோ நவீன்.. அப்படி கண்டவங்க வந்து சாரோட ஃபோன் நம்பர் கேட்டா குடுத்து தொலைச்சிடாதீங்க. அப்புறம் உங்க வயிற்றெரிச்சலை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க. இப்போ சாரோட உண்மையான பிரச்சனையைப் பத்தி பேசலாமா?”
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க மதி?” நவீனின் பார்வையிலும் குரலிலும் கூர்மைக் கூடியிருந்தது.
அவன் குரலில் இருந்த கண்டிப்பு அவனுக்கு இந்தப் பேச்சில் விருப்பமில்லை என்பதைக் காட்டியது.
அவர்களது நட்பைக் கண்டு மதி உள்ளுக்குள் பெருமையாக உணர்ந்தாள். வெளியில் கேலியாகப் பேசினாலும், நவீன் ஒரு நல்ல நண்பன்.
“ஆக்சிடெண்ட்ல அவரோட அப்பாம்மாவ இழந்த பிறகு அவர் அனுபவிக்கும் மன அழுத்தத்தைப் (Depression) பற்றிதான் சொல்றேன்..” என்று மதி சீரியஸாகச் சொல்ல
நவீன் அதிர்ச்சியடைந்து அவளைக் கடுமையாகப் பார்த்தான்.
“மதி, நான் உங்ககிட்ட நட்பா பழகுறதால எதை வேண்டுமானாலும் பேசலாம்ன்னு அர்த்தமில்லை. எதையும் அரைகுறையாகத் தெரிஞ்சிட்டு வந்து வதந்தியைப் பரப்பாதீங்க.”
“ஹே மதி, என்னடி என்னென்னமோ பேசுற?” என்று ஶ்ரீநிதியும் கடிந்து கொண்டாள்.
“சாரி நவீன், என்னைத் தப்பா நினைக்காதீங்க. சாரைப் பத்தி எல்லாமே எனக்குத் தெரியும்.”
“தண்மதி, இந்தப் பேச்சை இத்தோட விட்ருவோம். ஆதித்யாவோட பெர்சனல் லைஃப் பத்தி நான் யார்கிட்டயும் விவாதிக்க விரும்பல,” என்று உறுதியாகச் சொன்னான் நவீன்.
“ஆனா நவீன்.. அவர் கடந்த காலத்திலேயே மூழ்கி இருக்கறத நாம் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. அவர் அதிலிருந்து வெளியே வரணும். ஃப்ரண்ட்ஸ்சா அவருக்கு ஹெல்ப் பண்றது நம்ம பொறுப்பு இல்லையா..,” என்று மதி வாதிட்டாள்.
“மதி அவன் ஒன்னும் குழந்தை இல்லை, அவனுக்கு அவனைப் பார்த்துக்கறேன் தெரியும்.. அப்றம் அவன் டிப்ரஷன்ல இருக்கிறதா உன்கிட்ட யார் சொன்னது? அவன் இப்போ நல்லாதான் இருக்கான்.உனக்கு சம்மந்தம் இல்லாத விஷயத்துல தலையிடவேண்டாம்,” என்று எரிச்சலுடன் சொன்னான்.
“வெளியே பாக்கறது எல்லாம் உண்மை கிடையாது நவீன்…”
“போதும் நிறுத்துறியா மதி.. பிரேக் முடிஞ்சது. ரெண்டு பேரும் போய் வேலையைப் பாருங்க,” என்று கத்தினான் நவீன்.
“சரிங்க.. நான் எல்லாத்தையும் விட்டுடுறேன் எதுவும் கேக்கல.. ஆனா அதுக்கு முன்னால ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. வீட்டுல கார் இருந்தும், ஆதிசார் ஏன் மழையானாலும் வெயிலானலும் பரவால்லைன்னு எப்பவுமே பைக்ல வர்றாரு?”
நவீன் ஒருகணம் திகைத்து வாயடைத்துபோனான்.
“மதி நீ யாரு? உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? இந்த ஆபீஸ்லயே அவனோட கடந்த காலத்தைப் பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான். நான் யார்கிட்டயும் மூச்சு கூட விட்டதில்லை. உனக்கு யார் சொன்னது? ஆதியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“நவீன்.. ஆதி சார் தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை பேசுவார்னு நீங்க நினைக்கிறீங்களா?”
“அப்புறம் வேற யாரு?”
“மாலா ஆன்ட்டி..”
“ஆதியோட பெரியம்மாவா?”
“ஆமாம். பெங்களூருல நாங்க அவங்க வீட்டுப் பக்கத்துலதான் குடி இருந்தோம். போன வாரம் நான் அவங்களை ஒரு கோயில்ல பார்த்தேன், அவங்கதான் சாரைப் பத்தி எல்லாமே சொன்னாங்க.”
“நெக்சஸ்ல சேர்றதுக்கு முன்னாடியே உனக்கு ஆதித்யாவை தெரியுமா?” ஶ்ரீநிதி வியப்புடன் கேட்டாள்.
“ஆமாம்.. ஆனா மாலா ஆன்ட்டி மூலமாதான் அவரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன், அவர் போட்டோவை அவங்க வீட்ல பார்த்திருக்கேன்.”
அவனுக்குத் தன்னை நேரில் நன்றாகத் தெரியும் என்ற உண்மையை அவள் இப்போதைக்குச் சொல்ல விரும்பவில்லை. தேவைப்படும் அளவுக்கு மட்டும் தகவலைச் சொன்னாள்.
“இப்போ என்ன பண்ணனும்னு சொல்லு மதி..” நவீன் இப்போது அவள் பேச்சில் நம்பிக்கை வைத்துக்கேட்டான்.
“அவருடைய பயங்கரமான நினைவுகளிலிருந்து அவரை வெளியே கொண்டு வரணும். அதுல ஒன்னு கார் ஓட்டுறது பற்றிய பயம். தான் கவனக்குறைவா கார் ஓட்டியதாலதான் அவரோட பேரண்ட்ஸ் இறந்துபோயிட்டதா அவர் நினைக்கிறார். அதனால்தான் அவர் கார் பக்கமே போறதில்லை.”
“ஆனா இதெல்லாம் அவர்கிட்ட யாரு சொல்றது? அவர் நம்ம பேச்சைக் கேட்பார்னு நினைக்கிறியா?” என்றாள் ஶ்ரீ.நக்கலாக,
“நான் எப்போ அவருக்குப் பாடம் எடுக்கப்போறோம்னு சொன்னேன்?” என்று அதே கிண்டலுடன் மதி கேட்டாள்.
“அப்புறம்?”
“நாம அவருக்குச் செயல்கள் மூலம் புரிய வைக்கனும். கார் ஓட்டுறதைத் தவிர வேறு வழியே இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவரைக் கொண்டு நிறுத்தனும்.”
“அது என்ன மாதிரி சூழ்நிலை?”
“நவீன் என்கிட்ட ஒரு பிளான் இருக்கு.. கவனமாக் கேளுங்க..” என்று அவள் தன் திட்டத்தைச் சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன் மற்றும் ஶ்ரீநிதியின் முகம் ‘இது என்ன முட்டாள்தனமான திட்டம்’ என்பது போல மாறியது.
மதி அவர்களை முறைத்துப் பார்த்து,
“இது ரொம்ப நல்ல பிளான், கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணா மட்டும் போதும்,” என்றாள் அதிகாரத்துடன்.
“ஶ்ரீ.. இங்கே யாருக்கோ யார் மேலயோ ஓவர் அக்கறை இருக்குற மாதிரி தெரியல? ஏதோ இடிக்குதே?” என்று நவீன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“ஆமா நவீன்.. சம்திங் சம்திங்..,” என்று ஶ்ரீநிதியும் கேலியில் சேர்ந்து கொண்டாள்.
தன் வெட்கத்தைக் கட்டுப்படுத்த முயன்ற மதியின் முகம் சிவந்தது. கோபத்தால் அதை மறைக்க முயன்றாள்.
“பாவம் மாலா ஆண்ட்டி ரொம்ப ஃபீல் பண்றாங்களேன்னு கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு பிளான் சொன்னா இப்படியா கிண்டல் பண்ணுவீங்க?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“மாலா ஆன்ட்டிக்காகவா? நாங்க நம்பிட்டோம்,” என்று இருவரும் சிரித்தனர்.
“அப்புறம் இதுதான் நீ கஷ்டப்பட்டு மூளையை கசக்கி கண்டுபிடிச்ச பிளானா? கடவுளே.. இப்படிலாம் காமெடி பண்ணாத மதி.. என்னால சிரிக்கக்கூட முடியல,” என்று ஶ்ரீநிதி கேலி செய்தாள்.
“சரி ஓகே ஜோக்ஸ் அப்பார்ட்.. இந்த பிளான்ல எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க தானே?” என்று சீரியஸாகக் கேட்டாள்.
“ஓகே” என்று அனைவரும் கைகோர்த்தனர்.
வரவேற்பு அறைக்கு அருகில் உள்ள தாழ்வாரத்தில் மதி நின்றிருந்தாள். நெஞ்சு படபடக்க,கண்களில் பதற்றத்துடன் லிஃப்ட் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஶ்ரீநிதியும் அதே பதற்றத்துடன் அருகில் நின்றிருந்தாள்.
“மதி இதெல்லாம் சரியா வருமா?” என்று கவலையுடன் கேட்டாள்.
மதி அவளை முறைத்தாள்.
“நானே இங்க டென்ஷன்ல இருக்கேன், நீ வேற டென்ஷன் பண்ணாத ஶ்ரீ.”
“இல்லைடி ஏதாவது சொதப்பிட்டா பிரச்சனையாகிடும்ல..”
“ஒன்னும் சொதப்பாது.. நீ நவீனுக்கு கால் பண்ணி எல்லாம் ஓகேவான்னு கேளு.”
ஶ்ரீ, நவீனுக்கு கால் செய்தாள்.
“நவீன் ரெடியா? ம்ம் சரி.”
“அவங்க லிஃப்ட்ல ஏறப்போறாங்களாம்..”
“ஓகே ஶ்ரீ, இப்போ ஆக்சன் டைம்..” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.
மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு, கண்களை மூடி மெதுவாகத் தரையில் சரிந்தாள். லிஃப்ட் கதவு திறப்பதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மயக்கமடைந்தது போல நடித்தாள்.
திட்டம் இதுதான்: மதி மயங்கி விழுவாள், நவீன் அந்த நேரத்தில் சரியாக தற்செயலாக வருவது போல ஆதித்யாவை அங்கே கூட்டி வருவான். ஶ்ரீநிதி உதவிக்குக் கத்துவாள். அதைப் பார்த்து ஆதி, மதியை தூக்கிக் கொண்டு நவீனின் காரை நோக்கி ஓடுவான் அப்போது நவீன் தனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாகச் சொல்லி நழுவிவிடவேண்டும். வேறு வழியில்லாமல் ஆதி காரை ஓட்ட வேண்டியிருக்கும். இதில் பல குளறுபடிகள் இருந்தாலும், சரியாக செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று மதி முழுதாக நம்பினாள்.
திட்டப்படி தண்மதி மயங்கி விழுந்ததும், ஶ்ரீநிதி கத்தினாள்.
“ஐயோ.. மதி.. மதி.. என்னாச்சு.. ஹெல்ப்.. யாராவது ஹெல்ப் பண்ணுங்க..”
வேகமான சில காலடிச் சத்தங்கள் வருவதை மதி கேட்டாள். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, ஆதி சார் தன்னைத் தூக்கும் அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தாள்.
இறுதியாக அந்தத் தருணமும் வந்தது.
இரண்டு வலிமையான கரங்கள் தன்னைத் தூக்குவதை அவள் உணர்ந்தாள். அவளது திட்டம் பலிக்கத் தொடங்கியதால் இதயம் சிறகடித்துப் பறந்தது.
அந்த உற்சாகத்தில், ஶ்ரீநிதியின் சத்தம் நின்றதைக் கூட அவள் கவனிக்கவில்லை.
அவன் தன்னை வெளியே தூக்கிக் கொண்டு ஓடுவதை உணர்ந்தாள். அவளது மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. கண்களை மூடியிருக்க முயன்றாலும், ஆர்வம் மேலிட மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.
அடுத்த நிமிடம் அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்தன.
அவள் ஆதித்யாவின் கைகளில் இல்லை!
யாரோ ஒரு முன்பின் தெரியாத அந்நியன் தன்னைத் தூக்கிக் கொண்டு போவதைக் கண்டு தண்மதி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
தொடரும்..
error: Content is protected !!