Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-18

அத்தியாயம்-18

கான்பரன்ஸ் ரூமுக்குள்…

“ ஹே விக்கி என்ன இது? முதல்ல எழுந்திரு..” திடீரென அவன் மண்டியிட்டதைப் பார்த்து மதி சங்கடப்பட்டுப்போனாள்.



Advertisement

“ஓ மை ஸ்வீட் ஹார்ட், என்னோட இந்த அன்பின் அடையாளத்தை ஏத்துக்கோ..” அவன் நாடகபாணியில் பூக்களை நீட்ட, அது அவளுக்குப் புன்னகையை வரவழைத்தது.

“ஷோ ஆஃப் (Show off)… நிறுத்து விக்கி! யாராவது பார்த்தா நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்றன்னு நினைப்பாங்க..”

“நான் உனக்கு ப்ரொபோஸ் தான் பண்றேன் மதி.. சத்தியமா!” என்று தன் தொண்டையைத் தொட்டுச் சத்தியம் செய்தான்.

Advertisement

மதி சலிப்புடன் கண்களை உருட்டினாலும், முகத்தில் புன்னகை மாறவில்லை,

Advertisement

“சும்மா கதையளக்காத… யாராவது பிளவர் வாஸ்ல (Flower vase) இருந்த பூவைத் திருடி ப்ரொபோஸ் பண்ணுவாங்களா? இதெல்லாம் விக்கியால மட்டும்தான் முடியும்..”

அவனிடமிருந்து அந்தப் பூக்களைப் பறித்து அவனைச் செல்லமாக அடித்தாள். (இந்தக் காட்சியைத்தான் ஆதி பார்த்தான்).

விக்கி எழுந்து நின்றான்.

Advertisement

“என்ன கொடுமை இது! ஏன்  நான் ப்ரொபோஸ் பண்ற எந்தப் பொண்ணும்  என்னை சீரியஸாவே எடுத்துக்கமாட்றாங்க..?”

“பார்க்கிற எல்லாப் பொண்ணுக்கும் ப்ரொபோஸ் பண்ணிட்டு இருந்தா, எந்த பொண்ணுதான் உன் ஃபீலிங்க்ஸ் உண்மையின்னு நம்புவா?” என்றாள் பூக்களை மீண்டும் ஜாடியில் அடுக்கி வைத்தவாறே..

“நீ சொல்றதுல ஒரு பாயிண்ட் இருக்கு மதி.. பொண்ணுங்கதான் என்னோட ஃபீலிங்சை மதிக்க மாட்டேங்குறாங்க.. பேசாம பசங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணிடலாமன்னு பாக்குறேன்..?”

விக்கி சீரியஸான முகத்துடன் கேட்டாலும், அவன் கண்களில் குறும்பு மின்னியது. .

“இதோ நம்ம நவீன்கிட்ட இருந்தே ஆரம்பிச்சா என்ன? அவனும் பார்க்க க்யூட்டா தான இருக்கான்?” என்று நவீனை நோக்கிச் சென்று அவன் கன்னத்தைப் பிடித்து இழுத்தான்.

நவீன் அவன் கையைத் தட்டிவிட்டுவிட்டு முகம் சுளிக்க, நவீனின் முகம் போனபோக்கைப் பார்த்து ஶ்ரீயும் மதியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“சும்மா விளையாடினேன் நண்பா.. கூல்!” என்று நவீனைப் பார்த்து கண்ணடித்தான் விக்கி.

“மதி.. உன் நல்லதுக்குதான் சொல்றேன்.. கேக் கட் பண்றதுக்கு முன்னாடி முதல்ல இவன் ஃப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணு,” என்று எரிச்சலுடன் சொன்னான் நவீன்.

“அவன் கிடக்குறான் விடுங்க நவீன்,  அவன் அப்படிதான்.. ஆனா ஆதி சார் இன்னும் வரலையே?” என்று வாடிய முகத்துடன் கேட்டாள் மதி.

“இரு நான் அவனுக்கு கால் பண்றேன்..” நவீன் ஆதியின் எண்ணிற்கு அழைத்தான்.

“ஆதி, நாங்க கான்பரன்ஸ் ரூம்ல வெயிட் பண்றோம், நீ எப்போ வர்ற?”

“என்னது மீட்டிங்கா? ஒரு 5 நிமிஷம் வர முடியாதா? சரி சரி… பை.”

“ஆதிக்கு ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்காம், அதனால வர முடியாதுன்னு சொல்லிட்டான். நம்மள  கண்டினியூ பண்ணச் சொல்றான்,” என்று நவீன் சொல்ல

மதியின் முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.

“சிடுமூஞ்சி… ஹிட்லர்… பர்த்டே விஷ் பண்ணக் கூட வர மாட்டாரா அந்த கடூஸ்!” என்று மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

ஆனாலும் மற்ற நண்பர்களுக்காக ஒரு போலியான புன்னகையை பூசிக்கொண்டு கேக் வெட்டும் படலத்தை முடித்தாள். பார்ட்டி முடிந்த அடுத்த கணமே, ஆத்திரத்துடன் அவனது அறை நோக்கி விறுவிறுவென்று நடந்தாள்.

ஆதித்யாவின் கேபின்:

தன் சிறிய அறைக்குள் அங்குமிங்கும் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் ஆதி.

விக்கி, தண்மதியின் முன்னால் மண்டியிட்டுப் பூக்களைக் கொடுத்துக் கொண்டிருந்ததும், மதி அதைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டதும் அவன் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து போனது.

“அவன் பூ குடுத்தா இவ வாங்கிடுவாளா..?” அவன் மண்டை காய்ந்தது.

மதி மீது தனக்கு இருப்பது என்ன உணர்வு என்று அவனுக்குத் தெரியவில்லை என்றாலும், அவள் வேறொருவனிடம் சிரித்துப்பேசுவதை  அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உள்ளுக்குள் எரியும் நெருப்பைக் கட்டுப்படுத்த வேலையில் கவனத்தைத் திருப்ப முயன்றான். ஆனால் டைப் செய்த மெயிலில் ஒரு வரியில் நான்கு தவறு செய்யுமளவிற்கு அவனது கவனம் சிதறியிருந்தது. அறைக்குள் அவனுக்கு மூச்சு முட்டுவது போலிருக்க, டையைத் தளர்த்திவிட்டு தன் ஓவர்கோட்டைக் கழற்றினான்.

மேஜை மீது கவனிக்கப்படாமல் கிடந்த அந்த ரோஜாவைப் பார்த்தான்.

“நீயும் நானும் ஒன்னுதான். ரெண்டு பேருமே இலக்கு தெரியாமத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்.”

சலிப்புடன் ஒரு பெருமூச்சு விட்டான்.

அவனது இந்த மனப்போராட்டங்கள் எதையும் அறியாத மதி கோபத்தின் உச்சியில் அவனது அறையை அடைந்தாள்.

கதவைத் தட்டும் நாகரீகத்தைக் கூட மறந்து, படாரென்று உள்ளே நுழைந்தாள்.

திடீர் சத்தம் கேட்டுத் திரும்பிய ஆதி, இந்த நேரத்தில் மதியை அவன் எதிர்பார்க்கவில்லை,

அவள் கண்ணில் படுவதற்கு முன், அவசரமாக மேஜையில் இருந்த ரோஜாவை ஒரு ஃபைலுக்கு அடியில் மறைத்தான்.

அவனது வழக்கமான சிட்ரஸ் வாசனை திரவியத்தைத் தாண்டி, ஏதோ ஒரு பூவின் மணம் வீசுவதை அவள் உணர்ந்தாள். அவள் எதையும் கண்டுபிடிப்பதற்குள் அவன் பேசத்தொடங்கினான்.

“என்ன விஷயம் மதி?” என்றான் அதிகாரத் தோரணையில்

“கொரங்கு… சிடுமூஞ்சி… முதல்ல எனக்குப் பர்த்டே விஷ் கூட சொல்லல, அது போதாதுன்னு இப்போ என்கிட்ட ஆட்டிடியூட் வேற காட்டுறான். கல்நெஞ்சக்காரன்!..” என்று உள்ளுக்குள் கறுவினாள்.

“சார், நீங்க ரொம்ப பிஸியா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு வாழ்த்து சொல்லக்கூட உங்களுக்கு நேரம் இல்லை. அதான் நானே வெட்கமில்லாம உங்ககிட்ட விஷ் வாங்கிக்கலாம்னு வந்தேன்.”

அவள் நக்கலாகப் பேசினாலும், அந்த வார்த்தைகளில் இருந்த வேதனை அவனை உறுத்தியது.

“ஸாரி… திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு, அதான் வர முடியல,”  அவள் பார்வையைத் தவிர்த்தான்.

“இப்பவும் விஷ் பண்றானா பாரு! திமிருபுடிச்சவன்..” என்று முணுமுணுத்தாள்.

“பரவாயில்லை சார், நான் தான் ரொம்ப அதிகமா எதிர்பார்த்துட்டேன்..”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் எதை எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்தாலும், வார்த்தைகளுக்கு கடிவாளமிட்டது போல் அவை தொண்டையை விட்டு வெளிவர மறுத்தன. அவளுக்கு அது வெறும் வாழ்த்தாக இருக்கலாம், ஆனால் அவனுக்கு அது அப்படி இல்லையே.

“சரி, நீ வந்ததுதான் வந்த, உன்னோட வேலையை ஒருமுறை செக் பண்ணிடுறேன். இங்க வா…”

லேப்டாப்பைத் திறந்து மதி எழுதிய ப்ரோகிராமை ஓடவிட்டான். அவனது அருகில் அமர்ந்து உள்ளுக்குள் புகைந்து கொண்டே அவன் சொன்ன திருத்தங்களைக் குறித்துக் கொண்டாள்.

எதேர்ச்சையாக அவளது பார்வை, ஃபைலுக்கு அடியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பச்சை நிறக் காம்பு மீது விழுந்தது.

“இது ரோஜாச் செடியோட காம்பு மாதிரி இருக்கே..” என்று யோசித்தவள், மெல்ல அவன் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள்.

“அடக் கடவுளே… இந்தச் சட்டை… நான் குடுத்த அதே சட்டையைத்தான் இவரு இன்னைக்குப் போட்டிருக்காரு!” அவளது இதயம் ஒரு கணம் நின்று பின் வேகமாகத் துடித்தது. “இவ்வளவு நேரம்  இதை எப்படிக் கவனிக்காம விட்டேன்?”

அவளது சிறு சந்தேகம்கூட அந்தப் பாக்கெட்டில் இருந்த சிறிய ‘TM”  என்ற எம்ப்ராய்டரி டிசைனைப் பார்த்ததும் உறுதியானது. அந்த ‘TM’ எழுத்துக்காகத்தானே அவள் அந்தச் சட்டையையே வாங்கினாள்.

சட்டையின் புதிது போன்ற பளபளப்பைப் பார்த்தால், அவன் அதை முதல்முறை அணிந்திருப்பது தெரிந்தது. அதுவும் சரியாக அவளது பிறந்தநாள் அன்று! இது வெறும் தற்செயலா அல்லது அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியதா?

எது எப்படியோ, அவனது கடந்த காலம் ஏதோ ஒரு வகையில் அவளோடு பிணைக்கப்பட்டிருப்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

அவன் அந்தச் சட்டையை அணிந்ததையே தனது பிறந்தநாள் பரிசாக அவள் எடுத்துக்கொண்டாள். அவளது அத்தனை கோபமும் பனியாக கரைந்து மறைந்தது.

அவன் திருத்தங்களைச் சொல்லி முடித்ததும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனது அறையை விட்டு வெளியேறினாள்.

ஆதித்யா, மதியின் உணர்வுகளை மதிக்காமல்  அலட்சியப்படுத்தியதற்காக தன்னைத்தானே திட்டித் தீர்த்துக் கொண்டான்.

“உன் தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கேவலமா நடந்துக்கற?”

‘ஹேப்பி பர்த்டே மதி’ன்னு ஒரே ஒரு சின்ன வாக்கியம்…அதைச் சொன்னா உன் கிரீடம் இறங்கிடுமா? இன்னைக்கு நீ செஞ்ச இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது…” அவனது மனசாட்சி அவனை வாட்டி வதைத்தது.

மதிய உணவு இடைவேளையின் போது, அவன் மெதுவாக அவளது இருக்கைக்கு (Cubicle) அருகில் சென்றான். கோட் பையில் மறைத்து வைத்திருந்த அந்த ரோஜாவை அவளது மேஜை மீது வைத்துவிட்டு, சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

மதிய உணவை முடித்துவிட்டுத் திரும்பிய மதி, தனது மேஜை மீது இருந்த ஒற்றை ரோஜாவைக்  கண்டு வியந்தாள்.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தாள். உணவு இடைவேளை முடிந்து யாரும் இன்னும் திரும்பாததால் அந்த இடமே காலியாக இருந்தது.

“இதை யாரு இங்க வச்சிருப்பாங்க?”

திடீரென, ஆதியின் அறையில் ஒரு ரோஜாவின் காம்பைப் பார்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“ரோஜா, அந்தச் சட்டை…”  யோசிக்க யோசிக்க, புதைந்து கிடந்த பல பொக்கிஷங்கள் அவளுக்குக் கிடைப்பது போல இருந்தது.

அவனது நியாபங்கள் மறைந்து போயிருக்கலாம், ஆனால் அவளது நினைவுகளால் நிரப்பப்பட்ட அவனது ஆழ்மனதை யாராலும் அழிக்க முடியாது.

அவளது முகம் பிரகாசமாகப் புன்னகைத்தது.

தன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் அவன் என்றுமே கெட்டிக்காரன் கிடையாது. ஒவ்வொரு முறையும் அவனது செயல்கள்தான் அவன் மனதைப் பேசும். நல்லவேளையாக, அவளால் அந்தச் செய்கைகளின் அர்த்தங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கையில் இருந்த அந்த மஞ்சள் ரோஜாவைப் பார்த்தாள்.

“ம்ம்ம்… மஞ்சள் ரோஜா… இது நட்பின் அடையாளம்!புதிய ஆரம்பம்!”

“அப்போ, அவருக்கு என்கூட ஃப்ரண்டா இருக்கணும்னு ஆசையா…” உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் மதி.

“எல்லாவற்றையும் நான் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை.என் ஆதி சாராக உங்களை மீட்டெடுக்க நான் தயார்.!”

புதிய உற்சாகத்துள்ளலுடன் வரப்போகும் சவால்களை எதிர்கொள்ள தயாரானாள் தண்மதி.

ஆனால், விதி அவளுக்காக வைத்திருக்கும் விளையாட்டை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை..

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!