Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-17

அத்தியாயம்-17

கடந்த காலம்,பெங்களூருவில்:

மதி மறைந்திருந்த மரத்திற்குப் பின்னால் இருந்து பதற்றத்தோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஆர்வமும் திகிலும் சரிபாதியாக கலந்திருந்தது.



Advertisement

“மதி அக்கா எனக்கு பயமா இருக்கு..?” ஒரு சிறுவனின் மெல்லிய குரல் அவளது இதயத் துடிப்பை மேலும் அதிகரித்தது. இருந்தாலும் அவள்  தைரியமாக வெளியே காட்டிக்கொண்டு அவனை முறைத்தாள்.

“அகில் கொஞ்சம் தைரியமா இருடா… நீ இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கிறதாலதான் அந்த பல்லு(Ballu) உன்னை எப்பப் பாரு புல்லி(bully) பண்ணிட்டே இருக்கான்…”

அந்த எட்டு வயது சிறுவனின் ஈகோ தூண்டப்பட தனது வீரத்தைக் காட்டுவது போலத் தாடையை உயர்த்தி வைத்துக்கொண்டான்.

Advertisement

“ஆனா அக்கா.. என்னைச் சொல்லிட்டு உன்னோட கை ஏன் இப்படி நடுங்குது..? உனக்கும் பயமா இருக்கா?”

Advertisement

அவன் சொன்னதில் இருந்த  உண்மை அவளைச் சற்றுத் திணறடித்தது. இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு,

“டேய் அகில்.. உன்னோட அக்காவையே சந்தேகப்படுறியா? உனக்கு கிண்டர் ஜாய் வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ கிடையாது போ..”

“ஸாரி கா.. நான் இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன்.. இந்த வேர்ல்டுலயே நீ தான் பெஸ்ட் அக்கா..” சாக்லேட்டை விட மனமில்லாமல் அவன் ஐஸ் வைத்தான்.

Advertisement

“தட்ஸ் மை பாய்..” அவன் தலையைக் கோதினாள்.

“முருகா.. டெரர் இல்லாம யாராவது வரணும்.. மனுஷங்கதான் வரணும்னு இல்லை.. ஆடு மாடு வந்தா கூட ஓகே..” என மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.

“அக்கா ஒருவேளை அந்த சவுண்டு சரோஜா  வந்துட்டா..?” அகில் நேரங்காலம் தெரியாமல் கேட்க, அவள் இன்னும் கலவரமடைந்தாள்.

“சும்மா இருடா.. நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற பயமுறுத்தாத…” என்று அவனை அடக்கினாள்.

அது ஒரு சனிக்கிழமை மாலை. எல்லா குழந்தைகளும் தெருவில் கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருக்க மதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தவள், வெளியே கேட்ட ஆரவாரத்தைக்கேட்டு ஆர்வம் தாங்க முடியாமல் தானும் விளையாட்டில் சேர்ந்துகொண்டாள்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் பத்து பன்னிரண்டு வயதுள்ள சிறுவர்கள். குழந்தைகளுக்கு மதியைப் பிடிக்கும், மதியும் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் சாக்கில் அந்த பொண்டு பொடுசுகளிடம் அதிகாரம் செய்து கொண்டு திரிவாள்.

அன்று அவர்கள் ‘டேர்’ (dare) கேம் விளையாடிக்கொண்டிருக்க , தெருவிற்குள் முதலில் நுழையும் நபர் மீது வண்ண நீரை ஊற்ற வேண்டும் என்ற சவால் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒருவேளை அவள் இதில் தோற்றுப்போனால், முழு கூட்டத்திற்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இதைப் பற்றி யோசித்தபோது இதயம் வேகமாகத் துடித்தாலும், சிறிய குழந்தைகளுக்கு முன்னால் எப்படித் தன் பலவீனத்தைக் காட்ட முடியும்? அவள் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவி அல்லவா! அவளுடைய கௌரவம் என்னாவது? எனவே, வீம்புக்கென்று அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டாள்.

அகில் அவளது குட்டிநண்பன், கிரைம் பார்ட்னர். அக்கம் பக்கத்து வீட்டு ரோஜாக்களைத் திருடுவதாக இருக்கட்டும் அல்லது கிரிக்கெட் பந்தை கொடுக்க மறுத்த சீதா ஆன்ட்டியின் (அவர்கள் செல்லமாக அழைக்கும் சவுண்டு சரோஜா) வீட்டு வாசலில் வெடிபட்டாசு வைப்பதாக இருக்கட்டும், அவன் எப்போதும் அவள் கூட இருப்பான்.

“என்ன மதி அக்கா.. பயமா இருக்கா? பேசாம தோல்வியை அக்செப்ட் பண்ணிகிட்டு.. ஐஸ்கிரீம்  வாங்கித் தந்துடுங்க..” தெருவின் மறுபுறத்தில் இருந்து பல்லுவின் குரல் கேட்டது.

மதியை விட தான் பெரிய ஆள் என்று போட்டிப்போடும் பல்லுவின் கிண்டல் பேச்சைக் கேட்டதும், மதிக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வர வண்ண நீர் நிறைந்த பாட்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மறைவிடத்திலிருந்து வெளியே வந்தவள் அப்போது எதிரே வந்தவன் மீது சற்றும் யோசிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில், கையிலிருந்த கலர் தண்ணீரை பீச்சியடித்தாள்.

குழந்தைகள் அனைவரும் “ஹே..” என்று கூச்சலிட்டுச் சிரித்தனர்.

ஆனால், எதிரே நின்றவனைப் பார்த்ததும் மதியின் கை அந்தரத்திலேயே நின்றது. மற்ற குழந்தைகள் அனைவரும் எதுவும் பிரச்சனை ஆவதற்குள் ஓடிவிடுவோம் என்று ஆளுக்கொரு திசையில் சிட்டாகப்பறந்துவிட, அவளால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. எப்படி முடியும்.. அவள் கலர் தன்ணீர் ஊற்றி குளிப்பாட்டியது ஆதி சாரை அல்லவா..!!

மரத்தின் மறைவிலிருந்து அகில் அவளை ஓடுமாறு சைகை செய்தான், ஆனால் அவளிடம் எந்த அசைவும் இல்லாததால் அவனும் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்.

ஆதித்யாவின் வெள்ளைச் சட்டையில் அப்பியிருந்த  சிவப்பு நிறம்  அவளுக்கு ஓர் அபாயக் குறியீடு போலத் தெரிந்தது.

அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யா, திடீரென தன் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டதும் திகைத்துப்போனான். கடும் கோபத்துடன் எதிரே நின்றவளை முறைத்துப் பார்த்தான்.

அவனது சிவந்த முகம், சட்டையில் இருந்த சிவப்பு நிறத்தால் இன்னும் பயங்கரமாகத் தெரிந்தது. அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி வர, மதி பயத்தில் மெல்லப் பின்வாங்கினாள். அவனது கண்கள் கோபத்தில் ஜொலித்தன.

இரண்டடி வைத்ததும் மரத்தின் தண்டு அவளது முதுகில் இடித்தது. அதற்குள் அவன் மிக அருகில் வந்துவிட்டவே அவளுக்குத் தப்பிக்க வழியில்லாமல் போனது.

இருவருக்குமிடையே சில அங்குல தூரமே இருக்க, அவள் அடுத்தது என்ன நடக்கும் என்று யோசிப்பதற்குள், அவன் அவள் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி, மீதமிருந்த தண்ணீரை அவளது தலையிலேயே ஊற்றிவிட்டு ஒரு விஷமப்புன்னகையுடன்

“டிட் ஃபார் டாட்..” என்றான்.

அவனிடமிருந்து எத்தனையோ விபரீதங்களை அவள் எதிர்பார்த்தாள், ஆனால் இது முற்றிலும் எதிர்பாராதது. அவன் புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட அவள் சில நொடிகள் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

“கடவுளே…  நிஜமாவே ஆதி சார்  சிரிச்சாரா…!!!”

அவனது முறைப்பை விட அவனது சிரிப்பு அவளுக்கு அதிக ஆபத்தானதாகத் தெரிந்தது. அவளது இதயம் வெடித்துவிடும்போல துடித்தது.. இப்போதெல்லாம் அவன் அடிக்கடி சிரிக்கிறான்.

“அவரு ஏன் என்னை அப்படிப் பார்த்தாரு? ஒரு வேளை அப்பாக்கிட்ட சொல்லிக் குடுத்துடுவாரோ? ஐயோ சார்..” அவனைச் சமாதானப்படுத்த அவன் பின்னால் ஓடினாள்.

மறுநாள் ஆதி டியூஷன் எடுக்க வந்தபோது, மதி ஒரு பார்சலை அவனிடம் நீட்டினாள்.

அவன் புருவத்தை உயர்த்தி ‘என்ன?’ என்பது போலக் கேட்டான்.

“உங்களுக்காக ஒரு ஷர்ட் வாங்கினேன்..”

“எதுக்கு?”

“நேத்து உங்க ஷர்ட்ல கலர் ஊத்திட்டேன்ல, அதுக்கு காம்பென்சேஷன்.. நிஜமாவே ஸாரி.. ப்ளீஸ் இதை வாங்கிக்கோங்க…” என்று அவள் கெஞ்சலாகக் கேட்க, அவனால் மறுக்க முடியவில்லை.

அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவன் முகம்சுளித்தது. அதில் இருந்தது பிராண்டட் ஷர்ட், அதுவும் அவனது சட்டை அளவு எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதன் நிறத்தைப் பார்த்ததும் தான் “அய்யோ” என்றிருந்தது.அது ஒரு பேபி பிங்க் (Baby Pink) கலர் ஷர்ட்.

தன்னைப் போன்ற ஒரு ‘ஆல்ஃபா மேல்’ எப்படி இந்த நிறத்தை அணிவது என்று அவன் ஈகோ இடித்தது.

“இவளும் இவளோட கலர் செலக்ஷனும்…” என்று மனதிற்குள் நினைக்க,

மறுபக்கம் அவனது முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு அதில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

“உனக்கு இந்த மாதிரி கலர்லாம் எங்க இருந்து கிடைக்குது மதி..?” என்று ஆச்சரியம் போல் கேட்டான்.

அவள் முகம் சட்டென்று பிரகாசமானது.

“நல்லா இருக்குல சார்…? எனக்குத் தெரியும் இந்த கலர் உங்களுக்குப் பிடிக்கும்னு..”

‘கடவுளே, இவளுக்கு நான் கிண்டல் பண்றது கூட புரியல..’ என்று தலையில் அடித்துக்கொண்டான் ஆதி..

“சார்.. இது லிமிடெட் எடிஷன் ஷர்ட்..” என்றாள் வெகு பெருமையாக

“ஷர்ட் மட்டும் இல்லை.. நீயும் தான்…” என்று அவன் முணுமுணுத்தான்.

“என்ன சார்..?”

“வெரி நைஸ்னு சொன்னேன்…” என்றான் சிரித்தபடி.

 நிகழ்காலம்..

சென்னையில்:

ஆதித்யா வழக்கம்போல் காலை உடற்பயிற்சி முடித்துவிட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது ஃபோன் அடித்தது. ஸ்கிரீனில் ‘ஶ்ரீநிதி’ என்ற பெயரைப் பார்த்ததும் புருவம் யோசனையில் நெறிந்தது.

“ஹலோ ஶ்ரீ, சொல்லுங்க..”

“ஹலோ ஆதி.. குட் மார்னிங்.. எர்லி  மார்னிங் உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு ஸாரி..”

“பரவாயில்லை, என்ன விஷயம்?”

“இன்னைக்கு மதிக்கு பர்த்டே. கான்பரன்ஸ் ரூமில் ஒரு சின்ன செலிப்ரேஷன் பண்ணலாம்னு இருக்கோம். உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?”

“அதுக்கென்ன,தாராளமா பண்ணுங்க. ஆனா யாருக்கும் தொல்லை இல்லாம பார்த்துக்கோங்க…”

“தேங்க்ஸ் ஆதி.. நீங்களும் வந்தா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்..”

“நிச்சயமா வரேன்..”

“இன்னைக்கு மதிக்கு பர்த்டே..” இந்த வார்த்தைகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. ஒருவித உற்சாகம் சட்டென்று அவனைப் பற்றிக்கொள்ள, மீண்டும்  பதின்மவயதிற்கே சென்றதுபோல பரபரத்தான்.

“மதி பர்த்டேக்கு.. நான் ஏதாவது கிஃப்ட் பண்ணனுமா?”

“அவளுக்கு நான் என்ன கிஃப்ட் கொடுக்கிறது? இதுவரைக்கும் கூட வேலை பார்க்கிற யாருக்கும் எதுவும் கிஃப்ட் செஞ்சது இல்லையே.. மதி மட்டும் என்ன அவ்வளவு ஸ்பெஷல்? ஏன் திடீர்னு இந்த மாதிரி முட்டாள்தனமான எண்ணங்கள் எல்லாம் வருது?”

இல்லை, மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கும் என் வாழ்க்கைமுறையை யாரும் வந்து சிதைக்க நான் விடமாட்டேன்.

அவன் அந்த எண்ணங்களைத் தலையை உலுக்கி உதறித் தள்ளிவிட்டு தன் அன்றாட வேலைகளைத் தொடரச் சென்றான்.

குளித்து முடித்த பிறகு, தனது வார்ட்ரோப் (Wardrobe) முன்னால் நின்றவனுக்கு மற்ற நாட்களைப் போலல்லாமல், அலுவலகத்திற்கு என்ன அணிவது என்பதில் இன்று ஏகப்பட்ட குழப்பம்.

அலமாரியில் பாதியைக் காலி செய்து, உடைகளை மெத்தையில் பரப்பி வெவ்வேறு காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்தான். எதுவுமே அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இந்த முடிவில்லாத் தேடல் படலத்தினால் அலுவலகத்திற்கு நேரமாவதை எண்ணி அவனுக்கு எரிச்சலாக வந்தது.

ஒரு கட்டத்தில் சலித்துப் போய், கடைசியாக ஒருமுறை அலமாரியை மேய்ந்தான். அப்போது அவனது பார்வை அலமாரியின் ஒரு மூலையில் நிலைத்தது. அந்தச் சட்டையை வெளியே எடுத்தான். அதை அவன் எப்போது வாங்கினான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை; அது அவனது ரசனையும் கிடையாது. “பெண்களுக்குரிய பிங்க் நிறம்”  தான் இதை வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றினாலும், இன்று ஏனோ அவனுக்கு அந்தச் சட்டையை அணிய வேண்டும் போல தோன்றியது.

சட்டையைப் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான். அது அவனுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. பார்ப்பதற்கு ஒரு மாதிரி விசித்திரமாகத் தெரிந்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் அவனுக்கு அது பிடித்திருந்தது.

அந்தச் சட்டையின் மேல் ஒரு சாம்பல் நிற (Grey) ஓவர் கோட் அணிந்து, அதற்குப் பொருத்தமான பேண்ட் அணிந்து டை கட்டிக்கொண்டான்.

காலை உணவை முடித்துவிட்டு, அலுவலகத்திற்குப் புறப்படத் தயாரானவன், தனது கார் சாவியை எடுத்தான்.

“அம்மா… இன்னைக்கு நீங்க எங்கயாவது வெளிய போறீங்களா?”

“இல்லைப்பா. ஏன் கேட்குற?”

“இல்லைம்மா, இன்னைக்கு வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு… அதான் ஆபீஸ்க்கு கார்ல போலாம்னு இருக்கேன்,” என்று அவன் இயல்பாக கூற, மாலா ஆன்ட்டியும் அங்கிளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“என்னப்பா சொல்ற?” முத்துகுமார் அங்கிள் ஆச்சரியத்துடன் வினவ,

“ஆமாப்பா… நான் திரும்பவும் கார் ஓட்ட ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்,” என்று அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னான் ஆதி.

“ரொம்ப சந்தோஷம்பா…” பொங்கி வந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கண்களில் நீர் மல்க அவர் இவ்வளவுதான் சொன்னார்.

மாலா ஆன்ட்டியோ மேலே பார்த்துத் தனது இஷ்ட தெய்வத்திற்கு மானசீகமாக நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அலுவலகம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கிக்கொண்டது. சிக்னல் எப்போது பச்சையாக மாறும் என்று அவன் பொறுமையின்றி காத்துக் கொண்டிருந்தபோது, காரின் ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

ஒரு சிறுமி கூடை நிறைய ரோஜாக்களை வைத்துக்கொண்டு, ஒரு ரோஜாவையாவது வாங்குமாறு அவனிடம் கெஞ்சினாள்.

“அண்ணா… அண்ணா…ரோஸ் வாங்கிக்கோங்கண்ணா…”

முதலில் அவளைப் தவிர்க்க நினைத்தவன், கடைசி நிமிடத்தில் தன் மனதை மாற்றிக்கொண்டு கண்ணாடியைக் கீழே இறக்கி, அவளது கூடையிலிருந்து ஒரு மஞ்சள் நிற ரோஜா மொட்டை எடுத்தான். தனது பர்ஸைத் திறந்து கையில் கிடைத்த முதல் நோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு சிக்னல் விழுந்ததும், மீதி சில்லறையைக் கூட வாங்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஆதி மனதில் ஊற்றெடுத்த புதிய உற்சாகத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். தனது கோட் பையினுள் மறைத்து வைத்திருந்த அந்த ரோஜாப்பூ காம்பு அடிவயிற்றின் இடதுபுறம் உரசிக் தன் இருப்பை அவனுக்கு  உணர்த்திக் கொண்டேயிருந்தது. யாராவது தன் ரகசியத்தைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பதற்றம், அங்கிருந்த அனைவரும் தன்னையே சந்தேகமாக உற்றுப் பார்ப்பது போன்ற மாயை எல்லாம் சேர்ந்து அவனுக்கு வியர்க்கத் தொடங்கியது.

“ஆதி, நீ என்னடா பண்ணிட்டு இருக்க? ஏதோ திருடன் மாதிரி நடந்துக்கற!!! திடீர்னு உனக்கு ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கு?”

“இதோ பாருடா ஆதி, நேரா கான்பரன்ஸ் ரூமுக்கு போற, தண்மதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ற, இந்த ரோஜாவைக் குடுத்துட்டு அப்படியே திரும்ப வர்ற.. அவ்வளவுதான்!”

தனது மனதைத் தயார் படுத்திக்கொண்டு, கான்பரன்ஸ் ரூம் நோக்கி நடந்தான். கதவின் கைப்பிடியில் கை வைக்கும் முன், உள்ளே எட்டிப் பார்த்தபோது அங்கே கண்ட காட்சி அவனது கையை அப்படியே உறையச் செய்தது.

அறையின் நடுவில் தண்மதி அழகான பிங்க் நிற அனார்கலி உடையில், பேரழகியாய், தன் முழுப் பொலிவோடும் புன்னகைத்துக் கொண்டிருக்க அவளுக்கு முன்னால் ஒற்றைக்காலில் முழங்காலிட்டு அமர்ந்திருந்த விக்கி, அவளிடம் ஒரு பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருந்தான்.

அவள் அந்தப் பூக்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதைக் கண்ட ஆதித்யாவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. அவள் அந்தப் பூங்கொத்தால் அவனைச் செல்லமாக அடிப்பதைப் பார்த்தபோது, அங்கே தனக்கு இனி இடமில்லை என்று அவனுக்குத் தோன்றிவிட மெல்லத் திரும்பி, தோல்வி அடைந்த முகத்துடன் தனது கேபினுக்குத் திரும்பினான்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!