மறப்பதில்லை மதிமுகம்-33
அத்தியாயம்-33
அந்தத் தனியார் சொகுசுப் பேருந்து சேலத்தை நோக்கித் தன் உச்சக்கட்ட வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனால், ஆதித்யாவுக்கோ அது நத்தை வேகத்தில் செல்வது போலத் தோன்றியது. அவனது தவித்த மனது தன் காதலியைப் பார்க்க அத்தனை அவசரம் காட்டியது. உண்மையில் அவர்கள் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது என்றாலும், அவனுக்கு அது ஒரு யுகம் போலத் தோன்றியது. அவளது முகத்தை ஒரு நொடி பார்த்துவிட மாட்டோமா என்று அவனது உயிர் ஏங்கியது.
அவளை எப்படி எதிர்கொள்வது என்று அவனது இதயத்தின் ஒரு பகுதி பயந்தாலும், மறுபகுதியோ அவளது மனதை மீண்டும் ஒருமுறை தன்வசப்படுத்திவிடலாம் என்ற புதிய நம்பிக்கையோடு இருந்தது.
Advertisement
என்ன நடந்தாலும் சரி, நான் அவளைக் கண்டிப்பா சமாதானப்படுத்திடுவேன்.. அவ என் மேல செம்ம கடுப்புல இருப்பா, அதுல எந்தச் சந்தேகமும் இல்லை.. அவ என்னைத் திட்டுறது, ஏன்… அடிச்சா கூட அதை வாங்கிக்க தயாரா இருக்கேன். நான் அவளுக்குக் கொடுத்த வலிக்கு இதெல்லாம் ரொம்பக் கம்மிதான்..
மதி, கொஞ்சம் வெயிட் பண்ணுடி கண்ணம்மா… இதோ நான் உன்கிட்ட வந்துட்டே இருக்கேன்…’
அதே நேரத்தில், அவனது சிந்தனைகள் இன்று காலையில் தர்ஷாவுடன் நடந்த அந்தச் சந்திப்பை நோக்கிப் பின்னோக்கிச் சென்றன.
Advertisement
“என்ன ஆதி.. ஆபீஸுக்கு வராம என்னை இங்க வர சொல்லியிருக்க?” ஆபீஸுக்கு அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டில் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி தர்ஷா கேட்டாள்.
Advertisement
“நான் இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் ஆனா உன்கிட்ட ஒரு அர்ஜென்ட்டான விஷயம் பேசணும், அதான் இங்க வர சொன்னேன்..”
“அதை போன்லயே சொல்லியிருக்கலாமே?”
” நான் பேசப் போற விஷயம் போன்ல சொல்லக் கூடியது இல்லை.. அதுமட்டும் இல்லாம, இதை உன்கிட்ட நேடியா சொல்றதுதான் கரெக்ட்டா இருக்கும்னு நினைச்சேன்..”
Advertisement
“என்ன பில்டப்லாம் பலமா இருக்கு.. அப்படி என்ன சொல்லப் போற ஆதி?” வெளியில் அவள் சாதாரணமாக இருப்பது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவளது இதயம் பலமாக அடித்துக் கொண்டது.
“தர்ஷா.. ஐ அம் சாரி..” அவன் அவளது முகத்தை தீர்க்கமாகப் பார்த்துச் சொன்னான்.
“எதுக்கு?” அவளது குரல் ஒரு மெல்லிய முணுமுணுப்பாகத்தான் வந்தது, அவளது வயிறு பயத்தில் சுருண்டது.
“தர்ஷா, நாம இதோட இதை முடிச்சுக்கலாம்…” அவன் இந்த முறை ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திச் சொன்னான்.
“நீ நிஜமாதான் சொல்றியா?..” தனக்குள் எழுந்த வலியை விழுங்கிக் கொண்டு, எந்த உணர்ச்சியுமற்ற முகத்தோடு கேட்டாள். இந்த முறை அவள் ‘ஏன்?’ என்று அவனிடம் கேட்கவில்லை, ஏனென்றால் அவளது கற்பனைக் காதல் கதையின் முடிவு இதுதான் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
“என்னால இதுக்கு மேல இதைத் தொடர முடியாது..”
“அப்போ நீ நான் சொன்னத நம்பல… இல்லையா..? நிஜமாவே நாம ரெண்டு பேரும் பாஸ்ட்ல லவ் பண்ணினோம் ஆதி, ப்ளீஸ் என்னை நம்பு…” அவள் தவிப்புடன் அவனை நம்ப வைக்கப் போராடினாள்.
“இங்க விஷயம் நான் உன்னை நம்புறேனா இல்லையான்றது இல்லை தர்ஷா…கடந்த காலத்துல நான் யாரைக் காதலிச்சேன்றது இப்போ எனக்கு முக்கியம் இல்லை… அதுக்கு என் லைஃப்ல எந்த அர்த்தமும் இல்லை..”
“ஏன் திடீர்னு இப்படி சொல்ற .. நாம ஏன் இதைப் புதுசா ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடாது..?” அவளது கண்கள் உடைந்து, கண்ணீர் தாரை தாரையாகக் கொட்ட, கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அவன் ஆறுதலாக அவளது கையைத்பற்றினான்…
“திடீர்ன்னுலாம் இல்ல தர்ஷா, என்னால உன்னைக் காதலிக்க முடியாதுன்றது எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும்.. ஆனா அதை உன்கிட்ட ரொம்ப லேட்டா சொல்றதுக்கு சாரி..”
“ஏன் உன்னால என்னைக் காதலிக்க முடியாது ஆதி?”
“ஏன்னா என் மனசுல ஏற்கனவே ஒருத்தி சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கா.. அங்க வேற யாருக்கும் இடம் இல்லை..”
“ஓ…” அவளது இதயம் துயரத்தில் கனத்தது.
“ஐ அம் சாரி..”
“இட்ஸ் ஓகே ஆதி.. இது நடக்கும்னு எனக்குத் தெரியும்.. ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.. அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.. எனிவேஸ், கங்கிராட்ஸ்..”
“தர்ஷா, இப்பவும் நீ என்னோட ஃப்ரண்ட்தான்.., ஓகேவா?நீ மனசு கஷ்டப்படாத.. ப்ளீஸ் தர்ஷா…” அவனது குரலில் இருந்த அந்த உண்மையான பாசம் அவளை இன்னும் அதிக குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியது. எந்தத் தப்பும் செய்யாமல் அவன் இவ்வளவு தூரம் கவலைப்படுகிறானே என்று அவள் கூசினாள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன் ஆதி.. என்னைப்பத்தி நீ ரொம்ப கவலைப்படாத.. நீ ஃபீல் பண்ற அளவுக்கு நான் அவ்வளவு நல்லவ கிடையாது.. நீ உன்னோட லைஃபைப் பாரு.. நான் வர்றேன்..”
“தர்ஷா..ஏன் இப்படி பேசுற என் மேல கோபமா இருக்கியா ஐ யம் சாரி தர்ஷா..”
“ஐயோ ஆதி என்கிட்டஏண்டா சாரி கேக்குற..நான் அதுக்கு தகுதியானவளே கிடையாது…” என்று அழுகையில் வெடித்தவள், சற்று தயங்கி..
“நிஜத்துல உன் கடந்த காலக் காதலி நான் இல்லை… நான் பொய் சொன்னேன்.. உன்னை என்கூடவே வச்சுக்கணும்ன்ற பேராசையில பொய் சொல்லிட்டேன்.. சோ, இனிமேல் உன் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சியை தூக்கிப் போட்டுடு..”
அவளது அந்த ஒப்புதலுக்குப் பிறகு அவனது இதயத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய பாரம் அப்படியே இறங்கியது போல இருந்தது.
“நான் உண்மையைச் சொன்னதுக்கு அப்புறமும், நாம எப்பவும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்னு நீ சொன்ன வார்த்தை இன்னும் அப்படியேதான் இருக்கா?” நம்பிக்கையிழந்த கண்களோடு நடுங்கும் குரலில் கேட்டாள்.
அவன் தன் தலையை லேசாக அசைத்து ‘ஆமாம்’ என்று உறுதியாகச் சொன்னான். அவளது அந்தத் தவிப்பை அவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
தன் சொந்தப் பாவங்களே தன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க, தான் செய்த தவறுகளுக்குத் மன்னிப்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது, அவனால் தர்ஷாவின் மேல் எப்படிக் கோபப்பட முடியும்?
“என்ன நடந்தாலும் சரி.. நீ எப்பவுமே என்னோட ஒரு நல்ல ஃப்ரண்ட்தான் தர்ஷா..” அவளைப் பார்த்து மனதார புன்னகைத்தான்.
“என்னை மாதிரி ஒரு துரோகி கிட்ட இவ்வளவு நல்லவனா இருக்காத ஆதி.. அது என்னை இன்னும் கேவலமா உணர வைக்குது..”
“நீ என் ஃப்ரண்டு.. உன்னை எப்படி என்னால விட்டுக்கொடுக்க முடியும்…”
அவள் சில நொடிகள் அவனை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டாள்.
“தண்மதி தானே?”
“ஆமா…”
அதற்குமேல் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் கனத்த இதயத்தோடு அவள் கிளம்பிச் சென்றாள். இந்த வலியில் இருந்து அவள் மீண்டு வருவது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும்.ஆனால், காலம் எல்லா காயங்களையும் குணப்படுத்தும் என்று அவன் நம்பினான்.
‘சேலம் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற அந்தப் பெரிய போர்டை பார்த்ததும் , தன்னுடைய மதி இருக்கும் அதே ஊரில் இருப்பதை எண்ணி ஆதிக்கு பூரிப்பில் மெய்சிலிர்த்தது.
அவளது முகவரியைக் கண்டுபிடிப்பது அவனுக்கு ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை, ஏற்கனவே நவீனிடமிருந்து அவளது அட்ரஸை வாங்கியிருந்தான்.ஆனால் அதற்குமுன் அவனை ஓட்டித்தள்ளிவிட்டுதான் முகவரியைக் கொடுத்தான் நவீன்.
தண்மதியின் வீட்டு வாசலில் நின்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு, தன் புதிய வாழ்க்கையின் கதவு எப்போது திறக்கும் என்ற படபடப்போடும் தன்னவளின் பிறைமுகத்தைப் பார்க்கப்போகும் பரவசத்தோடும் காத்திருக்கத் தொடங்கினான் ஆதி.
“மதி.. யாரோ பெல் அடிக்கிறாங்க, யாருன்னு பாருமா…” அவளது அப்பா உள்ளிருந்து குரல் கொடுத்தார்.
“நந்துவாதான் இருக்கும்பா…” மதி விடை பகர்ந்தபடியே கதவை நோக்கி நடந்தாள். தன் தம்பி முறையுடைய நந்துதான் வந்திருப்பான் என்று சாதாரணமாக நினைத்துக் கதவைத் திறந்தவள், அப்படியே உறைந்து போனாள். அங்கே ஆதித்யா தன் பல்வரிசை தெரிய பெரிதாக சிரித்தபடி நின்றிருந்தான்.
ஒரு நொடி அவளது அத்தனை புலன்களும் செயலற்றுப் போயின; பேயை நேரில் கண்டவளைப் போல தன் கண்களைப் பெரிதாக விரித்து, வாயை ‘ஓ’வெனத் திறந்து அவனையே வெறித்துப் பார்த்தாள்.
ஆதி அவளிடமிருந்து ஏதேனும் எதிர்வினை வரும் என்று சில நொடிகள் காத்திருந்தான்.ஆனால் அவளிடம் எந்தச் சலனமும் இல்லாததால், அவளது முகத்திற்கு நேரே தன் கைகளை ஆட்டினான்.
“ஹலோஓஓ…”
சட்டென்று சுதாரித்தவள்.
“நீங்க… நீங்க… எப்படி இங்க…” என்று திணறினாள்.
அதற்குள், வாசலில் யார் வந்திருப்பது என்று பார்ப்பதற்காக அவளது அப்பாவும் அங்கே வந்து சேர்ந்தார்.
“யாருமா…?”
ஆதித்யாவை அங்கே கண்டதும் புருவம் சுருக்கி யோசித்தவர், அவனை அடையாளம் கண்டுகொண்டதும் முகம் கொள்ளா சிரிப்புடன் ,
“ஆதி தம்பி…!!! வாங்க வாங்க.. உள்ள வாங்க.. என்னால நம்பவே முடியலப்பா! ஏய் ரேணு.. யாரு வந்திருக்கா பாரு…” தன் மனைவியைக் கூப்பிட்டபடியே அவர் உள்ளே நடந்தார்.
ஆதி உள்ளே செல்ல ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்தான், ஆனால் மதி அவனைக் கோபமாக முறைத்துக்கொண்டு அவனது வழியை மறித்தபடி அப்படியே நின்றாள்.
“மதி, கொஞ்சம் தள்ளு.. நான் உள்ள போகணும்..”
ஆனால் மதி அங்கிருந்து நகர மறுத்து, பிடிவாதமாக நின்றாள்.
உள்ளே விட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அவளைப் பார்க்க அவனுக்கு ஒரு சின்னக் குழந்தைப் பிடிவாதம் பிடிப்பது போல கியூட்டாக இருந்தது. அவளது சிவந்த, உப்பிய கன்னங்களைக் கிள்ள வேண்டும் போல தோன்றியது. ஒரு விஷமப் புன்னகையோடு அவன் சற்றே முன்னோக்கிக் குனிந்து, அவளது கன்னங்களைப் பிடித்து கிள்ளுவதுபோல கைகளை உயர்த்த, தற்காப்பு உணர்ச்சியில் அவள் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தாள். அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கச்சிதமாக வீட்டிற்குள் நுழைந்து அவளைப் பார்த்து கண்சிமிட்டி குறும்பாக சிரித்தான் ஆதி.
மதி தன் பற்களைக் கடித்து, ஆத்திரத்தில் தன் கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டாள்.
‘இவன் எதுக்காக இப்போ இங்க வந்தான்?’
அவள் அவனை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்று தீவிரமாக இருக்க, அவளது பெற்றோரோ அவன் தான் தங்கள் வருங்கால மருமகன் என்பது போல அவனுக்குப் பணிவிடைகள் செய்து உருகிக் கொண்டிருந்தனர்.
அந்த எண்ணம் மனதில் தோன்றிய அடுத்த கணமே, மதி அத்தகைய முட்டாள்தனமான யோசனைக்காகத் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.
லூசு மாதிரி என்னென்னமோ திங்க் பண்றேன்.. ச்சே…’
சாப்பாட்டு மேஜையில் தன் அம்மா அவனுக்கு அன்பாக பார்த்துப்பார்த்து பரிமாற,
“சாப்பிடுங்க தம்பி.. ஸ்பெஷலா எதுவும் இல்லை.. வெறும் இட்லியும் சட்னியும்தான்… நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நல்லா விருந்து சாப்பாடே அரேஞ்ச் பண்ணியிருக்கலாம்…” அப்பா சற்றே வருத்தமான குரலில் சொன்னார்.
“அய்யோ.. பரவாயில்லை அங்கிள், இதுவே போதும்.. இந்த இட்லியைப் பார்க்கும்போதே உடனே சாப்பிடணும் போல இருக்கு…” அவன் ‘ஐஸ்’ வைக்க அவனது இந்த ஓவர் பில்டப்பைப் பார்த்து அவள் தன் உதட்டைச் சுளித்தாள்.
“மாலா அக்கா எப்படி இருக்காங்க தம்பி..? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…” அம்மா தன் வழக்கமான உபசரிப்புப் பேச்சைத் தொடங்கினாள்.
“ரொம்ப நல்லா இருக்காங்க ஆன்ட்டி..”
அடுத்ததாகத் தன் அம்மா என்ன கேட்கப் போகிறாள் என்பது தெரிந்ததால் மதிக்கு சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது.மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டாம் என்று தன் கண்களாலேயே அம்மாவுக்கு அவசரமாகச் சைகை காட்டினாள். ஆனால் அம்மாவோ அவளை பார்க்கவே இல்லை.
“உங்க அப்பா அம்மா நல்லா இருக்காங்களாப்பா..?” அம்மா சாதாரணமாகக் கேட்டாள்.
அவ்வளவுதான், சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனது கை அப்படியே நின்றது. அவனது பார்வை நேராக மதியின் பக்கம் திரும்பியது. அவளும் தன் கண்களை விரித்து, ஒரு மெல்லிய கவலையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஒரு கணம் தன் கண்களை மூடி அமைதியானான்.
“அவங்க இப்போ இல்லை ஆன்ட்டி. ஒரு ஆக்சிடென்ட்ல தவறிட்டாங்க…” என்று நிதானமாகக்கூற,
அந்த அறையில் ஒரு கனத்த அமைதி நிலவியது, அம்மாவின் முகம் சுருங்கியது.
“ஓஹ்… ரொம்ப ஸாரிப்பா, தெரியாம கேட்டுட்டேன்…”
“பரவாயில்லை ஆன்ட்டி, அதனாலதான் மாலா அம்மாவும், பெரியப்பாவும் என்கூட வந்து சென்னைலயே தங்கிட்டாங்க..”
“நல்ல காலம், அவங்க இருந்தாங்க உங்களைப் பார்த்துக்க…” அப்பா அவனுக்கு ஆறுதல் சொன்னார்.
“ஆமா அங்கிள், அவங்க இல்லைன்னா நான் இப்போ இல்லை…” அவன் சற்றே உணர்ச்சிவசப்பட்டான்.
அப்பா அவனது முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார்.
“சரி தம்பி.. சேலத்துக்கு என்ன விஷயமா வந்தீங்க? எங்க அட்ரஸ் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”
அவன் மீண்டும் மதியை ஒரு பார்வை பார்த்தான், ‘நீ இவங்ககிட்ட எதையும் சொல்லலையா?’ என்று கேட்பது போல இருந்தது அந்தப் பார்வை.
அவள் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல், தன் பதற்றமான பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.
“என்ன மதி.. நீ உங்க வீட்ல ஒண்ணுமே சொல்லலையா?” அவன் புருவம் உயர்த்தி அத்தனை ஆச்சரியம் கலந்த குரலில் கேட்க,
பதிலளிக்கமுடியாமல் மதி திணறிப்போனாள்.
தொடரும்..

