Skip to content
Post Views: 80

அத்தியாயம்-4
ஐந்து வருடங்களுக்கு முன் பெங்களூரில்..
“இன்டகரல்(integral) Sin(x) dx
Advertisement
என்ன வரும்?”
கணக்கு புத்தகத்தை கையில் பிடித்தபடி, திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த மதியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து சற்று அதட்டலாகக் கேட்டான் ஆதித்யா.
அவள் மூளையைப் கசக்கிப் பிழிந்து யோசித்துப் பார்த்தாள், ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை. ஒரு பரிதாபமான ‘பப்பி ஃபேஸ்‘ஸை வைத்தபடி அவனைப் பார்த்தாள்.
Advertisement
எரிச்சலில் மூச்சைவேகமாக உள்ளிழுத்தபடி,
Advertisement
“இந்தச் சாதாரண ஃபார்முலா கூட உனக்குத் தெரியாதா” என்றான்.
“இது சாதாரண ஃபார்முலாவா..?!! உங்களுக்கு வேணா இது சிம்பிளா இருக்கலாம், ஆனா எனக்கு ரொம்பக் கஷ்டம்!”
“நான்தான் ஒருநாள் முழுக்கப் படிக்க டைம் கொடுத்தேன்ல? அப்புறம் ஏன் சொல்ல மாட்டேங்க்ற?”
Advertisement
“நேத்து முழுக்க நான் என்ன இதையேவா படிச்சிட்டு இருந்தேன்? காலையில 6 மணிக்கு பிசிக்ஸ் டியூஷன், 7 மணிக்கு கெமிஸ்ட்ரி டியூஷன், அப்புறம் 8:30-ல இருந்து ஸ்கூல்.. ஈவினிங் 5:30-க்கு ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமா 6 மணிக்கே நீங்க வந்து நிக்கிறீங்க. உங்க டியூஷன் 2 மணி நேரம் முடிச்சுட்டு, ஸ்கூல் ஹோம்வொர்க் எல்லாம் பண்ணிட்டு நைட்டு நான் தூங்க 10 மணி ஆயிடுது. அதுக்கப்புறம் நான் எங்க நீங்க கொடுக்கிற ஃபார்முலாவைப் படிக்கிறது?” ஒரே மூச்சில் படபடவெனப் பேசி முடித்தாள்.
“சோம்பேறிங்கதான் இப்படிச் சாக்குப்போக்கு சொல்லுவாங்க..” அவளுடைய சமாதானங்களை அவன் ஏற்பதாக இல்லை.
“அது என்ன 12-வது படிக்கிற பொண்ணு 10 மணிக்கே தூங்கிடுவியா? ஏன், நைட்டு இன்னும் கொஞ்ச நேரம் கண் முழிச்சுப் படிச்சா குடி முழுகிடுமா? நான்லாம் ட்வெல்த் படிக்கும்போது ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரத்துக்கு மேல தூங்கவே மாட்டேன் தெரியுமா?”
அவள் வாயைத் தன் கைகளால் பொத்திக்கொண்டு ‘கெக்கபிக்கே’ எனச் சிரித்தாள். அது அவனை இன்னும் கோபப்படுத்தியது.
“என்ன சிரிப்பு?” என்று எரிச்சலோடு கேட்டான்.
“இல்ல… நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த காலத்துல நாங்கல்லாம்ன்னு என் பாட்டி புலம்புற மாதிரியே இருக்கு..” என்று மீண்டும் சிரித்தாள்.
“உனக்குப் போய் அட்வைஸ் பண்ணினேன் பாரு, என்னைச் சொல்லணும்…” என்று எரிச்சலானான் அவன்.
அவள் முகம் சட்டென வாடியது.
“ஒரு பேசிக் ஃபார்முலா… இது கூடத் தெரியாம நீ என்னதான் மேத்ஸ் படிக்கிறியோ? இந்த லட்சணத்துல இப்பல்லாம் பன்னண்டாவது போர்ஷனை பதினொன்னாவதுலயே எடுக்க ஆரம்பிச்சுடுறாங்க. உன்னை மாதிரி ஒரு வடிகட்டின முட்டாளை நான் பார்த்ததே இல்லை. லைஃப்ல கொஞ்சமாவது சீரியஸ்னஸ் வேணும். செடிகளோட அரட்டை அடிக்கவும், கார்ட்டூன் பார்க்கவும் உனக்கு டைம் இருக்கு… ஆனா பாடம் படிக்க மட்டும் டைம் இல்ல, அப்படித்தானே..?”
மதியின் கண்களில் கண்ணீர் முட்டியது. உதடுகள் நடுங்க.. மூக்கு சிவந்து விடைத்தது.. தன் கண்ணீரை அவனிடம் காட்டக் கூடாது என்பதற்காகத் தலையைக் குனிந்து கொண்டாள். ஆனாலும், இரண்டு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களில் இருந்து தப்பித்து, கன்னங்களில் தடம் பதித்து அவளது கைகளில் பட்டுத்தெறித்தது. உடனே தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள்.. விம்மலை அடக்க முயன்ற அவளது உடல் மெலிதாக அதிர்ந்தது.
அவளுடைய நிலையைப் பார்த்ததும் அவன் ஸ்தம்பித்துவிட்டான். தன் கோபத்தைக் கட்டுப்படுத்த கண்களை மூடி ஆழ்ந்த மூச்சைவெளியேறினான்.
சிறு வயதிலிருந்தே அவனுக்குக் கோபம் மூக்கிற்கு மேல் வரும். என்ன முயன்றும் இந்த முன் கோபத்தை மட்டும் அவனால் விடமுடியவில்லை.
எல்லாம் அவன் நினைத்தபடியே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அப்படி நடக்காத போது கோபம் பொத்துக்கொண்டு வரும். மதி இப்படி சீரியஸ்னஸ் புரியாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதைப்பார்த்து பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவளைக் கத்திவிட்டான். ஆனால் இப்போது அவள் அழுவதைப் பார்த்ததும் அவனால் தாங்கமுடியவில்லை.
அவளுடைய சின்னத் தவறுக்காக இப்படி கத்தியிருக்கக் கூடாது என்பது உறைக்க அவன் மனம் வருந்தினான்.
அவளுக்கு அருகிலேயே, மொட்டை மாடி கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி கால்களை மடக்கி சாய்ந்து அமர்ந்தான்.
அவளது அழகான மதி முகத்தை மறைத்துக் கொண்டிருந்த கைகளை மெதுவாக விலக்கினான். விடாமல் அழுததில் அந்த முகம் கண்ணீரில் நனைந்து களையிழந்து போயிருந்தது.
தன் கைக்குட்டையை அவளிடம் கொடுத்து, முகத்தைத் துடைத்துக் கொள்ளச் சொன்னான்.
அவள் மறுபேச்சு பேசாமல், அதை வாங்கிக் கொண்டு, அவன் சொன்னது போலவே செய்தாள். கண்ணீர் தடங்களைத் துடைத்து, மூக்கைச் சிந்திவிட்டு, அந்தக் கைக்குட்டையை நீட்டாக மடித்து அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
அவன் ஒருகணம் அருவருப்பாக உணர்ந்தாலும், அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அமைதியாக வாங்கித் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
அவள் லேசாக மூக்கை உறிஞ்சினாள். அந்தச் சின்னப் பெண்ணைக் காயப்படுத்தியதற்காக கழிவிரக்கம்கொண்டான்.
“இவளைப் போய் எதுக்கு இப்படி கத்தணும்? இவ இன்னும் ஒரு குழந்தை தான்.. உனக்குப் பொறுமை இல்லைன்னா அப்புறம் எதுக்கு அவளுக்கு டீச்சரா இருக்க சம்மதிச்ச?” என்று அவன் மனசாட்சி அவனை சாடியது.
“ஐ அம் சாரி…” என்று தயக்கத்துடன் சொன்னான். ஏனென்றால், அந்த வார்த்தையை அவன் அவ்வளவு எளிதில் யாரிடமும் பயன்படுத்த அவனது ஈகோ இடம் கொடுத்துவிடாது.
அவள் அவனை விழி விரிய ஏறிட்டுப்பார்த்தாள்.
“நான் உன்கிட்ட அவ்வளவு கோபமாக பேசியிருக்கக் கூடாது..” அவன் குரலில் வருத்தம் தெரிந்தது.
“பாரு தண்மி… இந்த உலகத்துல முடியாததுன்னு எதுவுமே இல்லை.. மேத்ஸ் ஒன்னும் பெரிய கஷ்டம்லாம் இல்லை.. அது ஒரு சிம்பிள் லாஜிக்தான்.. அதைப் புரிஞ்சிகிட்டா.. நீயும் கணக்குல புலி ஆகிடலாம்.. எனக்குச் சின்ன வயசுல இருந்தே மேத்ஸ்னா ஒரு ஃபேண்டஸி (Fantasy), நம்பர்ஸோட விளையாடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கு மேத்ஸ் நல்லா வருதுன்னா அதுக்குக் காரணம்.. எனக்கு அதுபுடிச்சிருக்கு. நீயும் கணக்கைக் கஷ்டப்பட்டுப் போடாம, இஷ்டப்பட்டுப் போடு.. மேத்ஸ் எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட்னு உனக்கே புரியும். ஒவ்வொரு முறையும் ஒரு ஈக்வேஷனையோ (Equation) இல்ல டெரிவேஷனையோ (Derivation) சால்வ் பண்ணும்போது, அது எனக்கு ஒரு பெரிய சாதனை பண்ணின திருப்தி கிடைக்கும்.
அதை அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும். சீக்கிரமே நீயும் அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுவ பாரேன்.. இட்ஸ் மை ப்ராமிஸ்.. நீ கவலைப்படாத, நான் உனக்குப் பொறுமையாச் சொல்லித்தரேன்.. மேத்ஸை ஈஸியா கத்துக்கலாம், ஓகேவா?”
தன்னுடைய நீண்ட அட்வைஸுக்கு அவளிடம் இருந்து ஏதாவது ஒரு பாசிட்டிவ் ரியாக்ஷன் வரும் என்று அவன் எதிர்பார்த்துக் காத்திருக்க. ஆனால், வழக்கம்போல அவள் அவனை அதிர வைப்பதுபோல ஒரு கேள்வியைக் கேட்டாள்..
“சார்… நீங்க இவ்ளோ பேசுவீங்களா?”
அவன் தலையிலடித்துக் கொண்டு. ‘இவள திருத்த முடியாது..” என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அவனுக்கு இப்போது கோபம் வரவில்லை. மாறாக அவளுடைய வெகுளித்தனமான பேச்சால் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“சரி, இன்னைக்கு ரிலாக்ஸ் பண்ணு.. நாளைக்கு ஃபார்முலா படிச்சிட்டு வா, நான் கேட்கிறேன்.. ஓகேவா?”
“சார் என்னோட முழுப்பேர் தண்மதி..” என்றாள் மெல்லிய குரலில்,
“அது எனக்கு தெரியாதா..?அதான் உன் புக்ல கொட்டை எழுத்துல எழுதியிருக்கியே..”
“நீங்க தண்மின்னு கூப்டீங்க..?”
“ஏன் கூப்பிடக்கூடாதா?உங்க அப்பா மாதிரி பாப்புன்னு தான் கூப்பிடனுமா?இல்ல ஷின்ச்சான்ன்னு கூப்பிடவா?” என்று குறும்பாக அவன் கேட்க..
அவள் இதயம் உள்ளுக்குள் சம்மர்சால்ட் அடித்தது.
மறுநாள் ஆதித்யா தன் அலுவலகத்தில், புராஜெக்டிற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது இண்டர்காம் ஒலித்தது..ஃபைல்களிலிருந்து பார்வையைத் திருப்பி ஃபோனை எடுத்தான்.
“ஹலோ.”
“ஹலோ ஆதித்யா..” மறுமுனையில் ரிசப்ஷனிஸ்ட் பேசினார்.
“யெஸ்..”
“உங்களைப் பார்க்க ஒரு விசிட்டர் வந்திருக்காங்க.”
“யாருன்னு சொன்னாங்களா?”
“அந்தப்பொண்ணு பேர் எதுவும் சொல்லலை, உங்களைப் பார்க்கணும்னு மட்டும் சொல்றாங்க..”
‘பெண் விசிட்டரா..?‘ அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
“சரி, அவங்களை வெயிட் பண்ணச் சொல்லுங்க, நான் ஒரு நிமிஷத்துல வர்றேன்.”
யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கீழே இறங்கி வந்தான். அவனது எல்லா கணிப்புகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவது போல, அங்கே சோபாவின் மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்தாள் மதி.
பள்ளிச் சீருடையுடன், தோளில் ஸ்கூல் பேக் தொங்க,கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்திருப்பது மதியாக இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
“கடவுளே.. இவ இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?” அவசர அவசரமாக அவளை நெருங்கினான்.
“மதி..?”
அவன் குரலைக் கேட்டதும் சட்டென எழுந்து நின்றாள்.
“இங்க என்ன பண்ற?”
அவள் பதில் சொல்லாமல், கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள்.
அவளது இந்த எதிர்வினையைப் பார்த்து அவன் மிரண்டு போனான். அனிச்சையாக யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்வை சுழன்றது,
லிஃப்ட் அருகில் நின்றுகொண்டிருந்த சிலர், இந்தக் காட்சியை ஆவலாக வேடிக்கைப்பார்க்க,
ஆதித்யாவுக்கு தர்மசங்கடமாகிப்போனது..
“ஷ்ஷ்.. மதி அழாத, எல்லாரும் பார்க்குறாங்க பாரு, நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?” அடிக்குரலில் அவளை அடக்க முயன்றான்.
ஆனால் மதி சொல் பேச்சைக் கேட்பவளா என்ன? இன்னும் சத்தமாக விம்மினாள்.
எங்கே கோபத்தில் கத்திவிடுவோமோ என்ற பயத்தில் அவன் ஆழ்ந்து பெருமூச்சுவிட்டான்.
பேசாமல் அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அலுவலக வளாகத்திற்கு வெளியே வந்தான்.
“இப்ப சொல்லு என்ன ஆச்சு?” பொறுமையிழந்து சீறினான்.
அவள் அவன் பொறுமையை மேலும் சோதித்தபடி தன் பையிலிருந்து ஒரு பேப்பரை நத்தை வேகத்தில் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவன் வாங்காமல், “என்ன இது?” என்றான் எரிச்சலாக
“மன்த்லி டெஸ்ட்… மேத்ஸ் பேப்பர்…”
“அதுக்கு?”
அவள் மௌனமாக இருந்தாள். அவளிடம் இருந்து பதில் வராமல் போக, அந்தப் பேப்பரைப் பிடுங்கிப் பிரித்துப் பார்த்தான்.
அதில் 100 க்கு 12 என்று மார்க் போடப்பட்டிருந்தது.
அதிர்ச்சியில் அவன் கண்கள்விரிந்தன. அவனது முகபாவனையைப் பார்த்து வெட்கத்தில் அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“இந்த சூப்பர் மார்க்கை காட்டத்தான் இவ்வளவு அவசரமா வீட்டுக்குக் கூட போகாம இங்க வந்தியா?” என்றான் ஏளனமாக,
அவள் எச்சிலை விழுங்கி தயங்கியபடி.
“வீட்டுக்குப் போக பயமா இருக்கு.. அப்பா இந்த மார்க்கைப் பார்த்தா கொன்னே போட்டுடுவாரு. போன வாட்டி நான் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்னு சொன்னேன். அதை நம்பி அவர் எனக்கு ஐ போன்XR வாங்கித் கொடுத்தாரு. இப்போ நான் ஃபெயில் ஆனது தெரிஞ்சா அதைப்பிடுங்கி வச்சிடுவாரு..” மிகுந்த சோகத்துடன் சொன்னாள்.
அவளுக்கு மார்க்கை விட ஐஃபோன் மீதுதான் அதிக கவலைப் போலிருந்தது.
அவன் நம்பிக்கையற்றுத் தலையாட்டினான். ‘இவ ஒரு யுனீக் பீஸ்.. இவளை மாதிரி இன்னொன்னு க்ளோனிங்ல கூட பண்ணமுடியாது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“அதுக்கும் நீ இங்க வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?”
“ப்ளீஸ் சார், நீங்க வந்து எங்க அப்பாகிட்ட பேசி அவரைச் சமாதானப்படுத்தணும்.. நீங்க சொன்னாத்தான் அவர் கேப்பாரு…” என்று எதிர்பார்ப்புடன் கெஞ்சினாள்.
அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளை அசட்டையாகப் பார்த்தான். ‘வர முடியாது’ என்பதை அவனது பார்வை தெளிவாகச் சொன்னது.
அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“நான் அடுத்த வாட்டி கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். காட் பிராமிஸ் (God promise)..” தலையில் கை வைத்துச் சத்தியம் செய்தாள்.
அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தது.
“எது உங்கப்பாவுக்குப் பண்ணியே அதே காட் ப்ராமிஸ்ஸா?” என்று
அவளது பொய் சத்தியத்தைக் நக்கலடித்தான்..
“ப்ளீஸ் சார்… ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நீங்கதான் என்னைக்காப்பாத்தணும்.. இல்லாட்டி எங்க அப்பா.. டிவி, ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாத்தையும் கட் பண்ணிடுவாரு.. ஏன், தீபாவளிக்கு புது டிரஸ் கூட வாங்கித் தர மாட்டாரு..” கண்ணீர் விட்டு அழுதுகொண்டே கெஞ்சினாள்.
ஆனால் அவன் எதற்கும் அசராமல் நின்றான். அவளது அழுகையும் அவனைப் பாதிக்கவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவள், தன் யுக்தியை மாற்றினாள். அவனது பரிதாபத்தைத் தூண்ட முயன்றாள்.
“அது மட்டும் இல்லை சார், இந்த வாட்டி பாஸ் பண்ணலைன்னா என்னை ஹாஸ்டல்ல சேர்த்துடுவேன்னு சொல்றாரு. அப்புறம் உங்க டியூஷன் கூட கட் ஆகிடும்.. அது உங்களுக்கும் கஷ்டமா இருக்கும் தானே? ஹாஸ்டல் சாப்பாடு நல்லாவே இருக்காது.. எங்க அம்மா சமையல் எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா.. அதை எப்படி சார் மிஸ் பண்றது? அது மட்டும் இல்ல, என்னோட ரோஜா செடி எல்லாம் என்னைப் பார்க்காம சாப்பிடாம வாடிபோயிடும்.. தெரியுமா?”
வாய்க்கு வந்ததையெல்லாம் யோசிக்காமல் உளறிக் கொண்டே போனாள். ஒரு கட்டத்தில் அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கென்று சிரித்துவிட்டான்.
மதியின் பேச்சு பாதியிலே நின்றுவிட பிளந்த வாய் மூடாமல் அவனைப்பார்த்தாள்.
எப்போதும் ஸ்கேல் வைத்து அளப்பதுப்போல் மில்லி மீட்டர் அளவு மட்டுமே சிரிப்பவன் இப்படி தங்கு தடையின்றி வாய்விட்டு சிரிப்பதைப்பார்த்து பிரம்மித்தாள்.
சில சமயம் ‘ஒருவேளை பல்லு கோணையா இருக்குமோ அதான் சிரிக்கமாட்டேன் என்கிறானோ’ என்று கூட அவள் நினைத்ததுண்டு,
ஆனால் இப்போது பளிச்சிடும் அவன் வெண் பற்களைப் பார்க்கையில் அவன் பற்பசை விளப்பரத்திலேயே நடிக்கலாம் என்று தோன்றியது.
மெதுவாக சிரிப்பதை நிறுத்தியவன்,
“சரி சரி வா கூட்டிட்டுப்போறேன்.. ஆனா இதுதான் லாஸ்ட் டைம் ஓகே வா? என்றான் கராராக,
“டபுள் ஓகே சார்..” என்றாள் நன்றியுடன்.
“இங்கயே வெயிட் பண்ணு நான் பர்மிஷன் சொல்லிட்டு வரேன்..” என்றவன் உள்ளே சென்றுவிட.
மதி பத்து நிமிடங்களாக அங்கேயே காத்திருந்தாள். கனமான புத்தகப்பை ஒரு பக்கத் தோளை அழுத்த, அதை இடம் மாற்றி போட்டபடி, நேரத்தைப் போக்குவதற்காகக் கண்களை அங்கும் இங்கும் ஓடவிட்டாள்.
அப்போது சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவளை வெறித்து பார்த்து, தங்களுக்குள் ஏதோ பேசி உரக்க சிரிப்பதைக் கவனித்தாள். அவளுக்கு மிகுந்த அருவருப்பாக இருந்தது. ஆதி சீக்கிரம் வந்துவிடக் கூடாதா என்று தவித்தபடி முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
“என்ன பாப்பா… தனியா நிக்கிற? வீட்ல சொல்லாம வந்துட்டியா..?”
திடீரெனக் கேட்ட அந்தச் சத்தத்தில் அவள் திடுக்கிட்டுப் போனாள். ரவுடிகளைப் போல இருந்த அந்த இருவரும் இப்போது அவளுக்கு மிக அருகில் வந்திருந்தனர். மதி அனிச்சையாக இரண்டடி தள்ளி நின்று அவர்களை முற்றிலும் புறக்கணித்துத் முகத்தைத் திரும்பிக் கொண்டாள்.
அவள் ஆதித்யாவிடம் அழுது கெஞ்சியதைப் பார்த்திருந்தனர் இருவரும்,
“பிரச்சனை பெருசாயிடுச்சா? அப்பாகிட்ட சொல்லப் பயமா இருக்கா?” என்று ஒருவன் கோணல் சிரிப்புடன் கேட்டான்.
“அந்தப் பையன் உன்னை கழட்டிவிட்டுட்டானா? நீ கவலைப்படாத பாப்பா.. எங்க போகணும்னு சொல்லு, நாங்க டிராப் பண்றோம்..” என்றான் மற்றொருவன்.
“போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகணும், வர்றியா?”
என்ற அதிகாரத் தொனி காற்றைக் கிழித்துக்கொண்டு அவர்கள் காதில் அதிர்ந்தது.
திடுக்கிட்டுத் திரும்பிய அந்த ரவுடிகளை ஆதித்யாவின் கனல் கக்கும் பார்வை எதிர்கொண்டது.
அவன் உடல் இரும்புத் தூணைப் போல இறுகி இருந்தது. அவர்களைவிட உயத்திலும் பலத்திலும் மேலாக இருந்த அவனது தோற்றம் தங்களை அச்சுறுத்த அடுத்த நொடியே இருவரும் அங்கிருந்து சிதறி ஓடினர்.
அவன் மதியின் கையை பலமாகப் பற்றிக் கொண்டு, ஒருவித ஆவேசத்தோடு அவளைத் தன் பைக்கை நோக்கி இழுத்துச் சென்றான். அவன் பிடியில் கை வலித்ததால் அவள் விடுபட முயன்றாள், ஆனால் அவனது பிடி இரும்பாக இருந்தது. பைக்கை அடைந்ததும்தான் அவள் கையை விடுவித்தான்.
கோபத்தால் சிவந்து போயிருந்த அவனது முகத்தைப் பார்த்த மதிக்கு பயத்தில் உயிர் போய்விட்டது.
“சார்…” என்றாள் மெதுவாக,
“வாயை மூடு.. ஒரு வார்த்தை பேசாத! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முன்னப் பின்னத் தெரியாத இடத்துக்குத் தனியா வர்றது சேஃப் இல்லைன்னு கூடத் தெரியாதா?” என்று பற்களைக் கடித்தபடி சீறினான்.
அந்தப் பொறுக்கிகள் மதியை இழிவான பார்வையால் பார்த்ததைக் கண்டதும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. அவர்களை அங்கேயே போட்டு மிதிக்க வேண்டும் என்று அவன் கைகள் துடித்தது. ஆனால் தேவையில்லாமல் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
பைக்கில் ‘செல்ஃப் ஸ்டார்ட்’ இருந்தும், தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஓங்கி ‘கிக்’ அடித்து ஸ்டார்ட் செய்தான். அந்த எஞ்சினின் கர்ஜனை அவனது கோபத்திற்கு பின்னணி பாடியது.
“உன்னை உட்காரச் சொல்லி தனியா இன்விடேஷன் வைக்கணுமா?” என்று கோபமாக எரிந்து விழுந்தான்.
மதி எச்சிலை விழுங்கியபடி, பேசாமல் பின்னால் ஏறி அமர்ந்தாள். ஆனால் மறுகணம்
“ஐயோ..” என்று அலறினாள்.
“என்ன ஆச்சு?” என்றான் பதறிப்போய்,
“இந்த பைக்ல பிடிச்சுக்க இடமே இல்லையே..” என்று அப்பாவியாகச் சொன்னாள்.
“அதான் இவ்வளவு பெரிய உருவம் முன்னாடி இருக்கேன்ல, என்னைப் பிடிச்சுக்கோ..” என்றவனின் முகத்தில் லேசாகப் புன்னகை அரும்பியிருந்தது.
அவளது வெகுளித்தனமான பேச்சைக் கேட்டதும், அவனின் புடைத்த நரம்புகள் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தான்.
மதி சரியென்று தலையசைக்க,
“என்ன சத்தத்தையே காணோம்?”
“நான் தான் சரின்னு தலை ஆட்டுனேனே..”
“அது எனக்கு எப்படித் தெரியும்? என் கண்ணு என்ன பின்னாடியா இருக்கு?”
இம்முறை அவன் முழுமையாகச் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.
“சரி போலாமா?”
“ம்ம்..”
“நல்லா… பிடிச்சுக்கோ..”
அவளது கை மென்மையாக அவன் தோளைத் தொட்டவுடன் பைக் வேகமெடுத்து சீறிப்பாய்ந்தது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க மதி அவனது தோளை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள்.
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?”
“என்ன?”
“அந்த ரவுடிங்களுக்கு எப்படித் தெரியும் நான் அப்பாகிட்ட சொல்லப் பயப்படுறேன்னு?” என்று மிக அப்பாவியாகக் கேட்டாள்.
அவன் தோள்களைப் பற்றியிருந்த அவளது உள்ளங்கைகள் பதிந்திருந்த இடமெல்லாம் சட்டென இறுகுவதை உணர்ந்தாள்.
“பேசாம வர்றியா?” என்று அவன் கர்ஜித்தான்.
‘சிடுமூஞ்சி.. கடுவண் பூனை, உராங்குட்டான்,ஹிட்லர்.’ என்று வாய்க்கு வந்த பெயர்களில் அவனை மனதில் அர்ச்சித்தபடி உதட்டைச்சுளித்தாள்.
அவளுடைய வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்தினான். அவள் விருப்பமில்லாமல் மெதுவாகக் கீழே இறங்கினாள். அவளை உள்ளே போகச் சொல்லி அவன் கண்ணாலேயே சைகை காட்ட,
“சார்… நீங்க வரல..?”
“என்ன விளையாடுறியா? பேசாம உள்ள போ..”
“ப்ளீஸ் சார்..”
“நோ..” என்றான் உறுதியாக,
“இது உன்னோட பிராப்ளம், நீதான் ஃபேஸ் பண்ணணும். என் பின்னாடி ஒளிஞ்சுக்காத..”
“அப்போ நீங்க உள்ள வரமாட்டீங்களா?”
“இவ்வளவு நேரம் நான் அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன். ஏன், தமிழ் புரியாதா…?” என்று நக்கலாக தொடங்கியவன் அவளது வாடிய முகத்தைப் பார்த்ததும் தன் கேலியை நிறுத்திக்கொண்டான்.
“மதி.. உன் பிரச்சனைய பார்த்து பயந்து ஓடாத.. அதை தைரியமா எதிர்த்து நில்லு, ஈஸியா கடந்து வந்துடலாம். உங்க அப்பாவை தைரியமா ஃபேஸ் பண்ணு.. நீ நினைக்கிற அளவுக்கு மோசமா ஒன்னும் நடக்காது.. சரியா? தைரியமா போ..”
அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மென்மையான அதே சமயம் உறுதியான குரலில் அவன் கூறினான். வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்த மதி, அவன் கட்டிக்கொடுத்த சிறு தைரிய பொட்டலத்தோடு தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
தொடரும்..
error: Content is protected !!