Skip to content
Post Views: 99
கண்ணாமூச்சி 17
மழையின் வேகம் அதிகரித்துக்கொண்டிருக்க, அந்தத் திறந்தவெளி மொட்டை மாடியில் காலம் அப்படியே உறைந்து நின்றது. பறந்துபோன தாள்களைப் பற்றிய கவலையின்றி, விஷ்வாவின் காந்தக் கண்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் நெஞ்சுக்குள், இன்று காலையில் அவளது வீட்டில் நடந்த காபி நேர உரையாடல் சட்டென்று மனதிற்கு வந்து போனது.
அன்று காலை, வீட்டில் ரங்கநாதனும் தங்கம்மாவும் ஃபில்டர் காபி குடித்துக்கொண்டே ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அதில், விஷ்வா-நயனிகா திருமணத்தைப் பற்றிய செய்திகளும் அது உண்மையா வதந்தியா என்பதைப் பற்றிய விவாதங்களும் உலகிற்கு மிக முக்கியமான விஷயங்கள் போல பாவிக்கப்பட்டு பேசப்பட்டுக் கொண்டிருந்தன.
செய்தியைப் பார்த்த ரங்கநாதன் தன் காபி கப்பை வைத்துவிட்டுச் சலிப்புடன், “என்னவோ போ… என்னத்தை சொல்ல, உலகத்துல வேற பிரச்சனைகளே இல்லையா? திரையில நடிக்குற நடிகனோட அந்தரங்க வாழ்க்கைதான் இப்படி காலங்கார்த்தால விவாதிக்குற முக்கிய விஷயமா? அதுவும் ஊர்ஜிதமா தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி எப்படி பேசுறாங்க பாரு…” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
Advertisement
அங்கே ஹாலில் சற்று தள்ளியிருந்த டைனிங் டேபிளில் உட்கார்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலை பார்ஹ்த்துக் கொண்டிருந்த நிலாவின் காதிலும் இது விழுந்தது.
“இந்த சினிமாக்காரங்க வாழ்க்கையே ஒரு போலி வெளிச்சம்தான். எப்பப் பார்த்தாலும் கேமராவுக்கும் மீடியாவுக்கும் முன்னாலதான் இருக்கணும், நம்ம ஜனங்களும் இவங்களைப் பத்தின சின்ன சின்ன விஷயங்களையும் பெரிசு பண்றாங்க, அது உண்மையா பொய்யான்னு கூட பிரிச்சுப் பார்க்காம அவங்க பின்னாடி அலையுறாங்க. இவங்களுக்குன்னு ஏதாச்சும் தனிப்பட்ட வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கா பாரு? நிம்மதியே இல்லாத நரக வாழ்க்கை!” என்றார்.
தங்கம்மாள் அதை ஆமோதித்து, “ஆமாங்க, வாழ்க்கையில நிம்மதியும் அமைதியும்தான் முக்கியம். எவ்வளவு பணம் இருந்து என்ன… நாம இருந்தோமா, நம்ம வாழ்க்கையை வாழ்ந்தோமான்னு இல்லாம, இந்த மாதிரி யாரு வேணும்னாலும் நம்மைப் பத்தி என்ன வேண்டும்னாலும் பேசலாம்னு எப்படி ஒருத்தர் வாழ முடியும், இதெல்லாம் எதிரிக்கு கூட நடக்கக் கூடாது.” கணவரின் எண்ணத்தை ஆமோதித்தார் தங்கம்.
Advertisement
தன பெற்றோர் விஷ்வா பற்றி என்னதான் சொல்கிறார்கள் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் நிலா.
Advertisement
“இந்த சினிமா ஸ்டார்ஸ் எல்லாம் வெறும் ஸ்கிரீன்ல பார்க்குறதுக்கு மட்டும்தான் லாயக்கு, நிஜ வாழ்க்கைக்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க, இவங்களை எல்லாம் கல்யாணம் பண்றவங்களுக்கு ரொம்ப மன தைரியம் வேணுங்க, இது மாதிரி எப்பவும் யாராவது புரளி பேசிக்கிட்டேதான் இருப்பாங்க,” என்று முடித்தார் தங்கம்.
“சினிமாக்காரங்களுக்கு, சினிமாக்காரங்கதான் சரியா இருப்பாங்க. ஆனா எதுவா இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தின்னு வாழனும், அந்த ஒழுக்கம் இல்லைன்னா, அப்பறம் என்ன இருந்து என்ன, வாழ்க்கையே வேஸ்ட்தான்,” ரங்கநாதனின் வார்த்தைகளில் ஏதோ ஒருவித வெறுப்பு தொனித்தது.
Advertisement
டேபிளில் லேப்டாப்பை மூடி வைத்துக் கொண்டிருந்த நிலாவிற்கு, பெற்றோரின் அந்த வார்த்தைகள் சம்மட்டி அடியாக விழுந்தன. சோல்மேட் செயலியின் விர்ச்சுவல் மாயையில் இருந்து தான் வெளியே வந்தது எவ்வளவு நல்லது என்று அவள் உள்ளூர நிம்மதி அடைந்தாள். ஒருவேளை, தன் மெய்நிகர் உலகக் காதல் விஷயம் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் எப்படித் துடிதுடித்துப் போவார்கள் என்ற பயம் அவளது உடம்பை நடுங்க வைத்தது.
அந்த எதார்த்த உலகத்து நடுக்கம், இப்போது மழையில் நனைந்தபடி தன் முன்னால் நிற்கும் விஷ்வாவைப் பார்த்ததும் அவளுக்குள் மீண்டும் உண்டானது.
விஷ்வா அவளது விர்ச்சுவல் அலைவரிசையையும், அவளது உணர்வுகளையும் சோல்மேட் செயலி மூலம் அச்சு அசலாக அணு அணுவாக அனுபவித்திருக்கிறான் என்ற உண்மை நிலாவிற்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரை, அது தன் பக்கத்திலிருந்து ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்ததால் உருவான வெறும் ஒருதலைப்பட்ச மென்பொருள் மாயை மட்டுமே!
கண்களில் பொங்கிய அந்தத் தீவிரமான ஈர்ப்பை, பெற்றோரின் வார்த்தைகளை நினைத்து அடுத்த கணமே வலுக்கட்டாயமாகத் தன் தொண்டைக்குள் விழுங்கினாள் நிலா. விஷ்வா அவளை நோக்கி நெருங்கி வந்து, “நிலா…” என்று தன் காதலை விவரிக்க முயன்ற அந்தப் பரவசமான தருணத்தில், அவள் தன் முகத்தை தனக்குப் பிடித்த நடிகனை நேரில் பார்க்கும் ஒரு ரசிகையின் பரவச நிலைக்கு மாற்றிக் கொண்டாள் நிலா.
மனதில் குமிழிகளாய் இருந்த உணர்வுகளைத் தடுத்து, இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஹீரோவாக மட்டுமே அவனைப் பார்ப்பது போல ஒரு பாவனையைத் தன் முகத்தில் வரவழைத்தாள்.
“வாவ்! விஸ்வநாத் சார்… நீங்க… உங்களை இங்கே இப்படி… இவ்ளோ பக்கத்துல பார்ப்பேன்னு நான் கற்பனை பண்ணி கூட பார்த்ததில்லை.” வியப்புடன் எதிர்கொண்டாள் அவனை.
“என் பேரு வெண்ணிலா, நான் உங்களோட பெரிய்ய ரசிகை. உங்களோட படம் எல்லாத்தையும் ஒரு பத்து தடவையாவது பார்த்துடுவேன்… என் முன்னாடி, என்னோட சூப்பர்ஸ்டார் ஹீரோ விஸ்வநாத் நிக்குறாரா? என்னால நம்பவே முடியல!” என்று ஒரு தீவிர ரசிகையைப் போல கைகளைக் தட்டி ஆச்சரியப்படுவது போல நடித்தாள்.
விஷ்வா அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, நிலா தன் நனைந்த பேக்கிலிருந்து ஒரு சிறிய டைரியையும் பேனாவையும் எடுத்து அவனிடம் நீட்டினாள். “சார், நான் உங்களோட மிகப்பெரிய ஃபேன். ப்ளீஸ்… எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் தர்றீங்களா?”அவளது இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான். அவனுக்கு பேசவே அவகாசம் கொடுக்காமல், நிலாவே பேசிக்கொண்டிருந்தாள்.
“ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” அவள் வேண்டுமென்று கேட்டால் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவனிடம் ஒரு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டாள் நிலா.
அவளது நெஞ்சு உள்ளூர அவனைக் கட்டியணைத்துக் காதல் சொல்லத் துடித்தாலும், அவளது வார்த்தைகள் ஒரு ரசிகை என்ற எல்லையைத் தாண்டவில்லை.
விஷ்வா செய்வதறியாது இயந்திரத்தனமாக அவள் நீட்டிய அந்த டைரியில் தனது ஆட்டோகிராஃபை வழங்கினான். நிலா நடுக்கத்துடன் அவனருகே நின்று ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு, “தேங்க்யூ சோ மச் சார்! மழை பெய்யுது பாருங்க, ரொம்ப நேரம் நனையாதீங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
விஷ்வா அவளது கையைப் பற்றத் துடித்து, “நிலா, நில்லு… என்று அவளைத் தடுக்க முற்பட்டான்.
ஆனால், நிலா சட்டென்று அவனது கையை உதறிவிட்டு விறுவிறுவென்று மாடிப் படிக்கட்டுகளை நோக்கி ஓடி மறைந்தாள்.
அவளது அந்த பரிச்சயமில்லாதது போன்ற நடத்தை, எதார்த்தமான விலகல் விஷ்வாவிற்குள் ஒரு மாபெரும் அதிர்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு விவரிக்க முடியாத புதிய சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. தன் வாழ்நாளில் தன்னை இப்படி உணரவைத்த முதல் பெண் அவள்தான்!
மாடிக்குச் செல்லும் பாதையின் கண்ணாடித் தடுப்பிற்குப் பின்னால் நின்று, நெஞ்சு படபடக்க இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பிரவீனும் அனன்யாவும் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டனர்.
இன்று காலையில்தான் அவர்கள் இருவரும் சோல்மேட் செயலியின் தொழில்நுட்பக் கோளாறுகளைப் பற்றி தீவிரமாக விவாதித்திருந்தனர். “பிரவீன், இப்போதைக்கு ரெண்டு பேரோட பீட்டா டெஸ்டிங் மாடல்ல மட்டும்தான் இந்த விசித்திரமான நியூரல் மிக்ஸப் நடந்திருக்கு. இது டெக்னாலஜி ரீதியா பெரிய பிராப்ளம் இல்லை. கோடிங்கில் சில மாற்றங்களைச் செஞ்சு இந்த மென்பொருள் பிழையை அடியோடு சரி பண்ணிடலாம். இனிமே இப்படி நடக்காம தடுத்திடலாம்,” என்று அனன்யா சொல்லியிருந்தாள்.
அதற்குப் பிரவீனும், “ஆமா அனன்யா… இதை நாம சரி பண்ணியே ஆகணும். இல்லைனா, “எந்தவொரு பந்தமும் இல்லாமல், கமிட்மென்ட் இல்லாமல் ஒரு விர்ச்சுவல் காதலனை/காதலியை உருவாக்குவது” அப்படிங்குற நம்ம சோல்மேட் செயலியோட முதன்மை நோக்கமே தோத்துப்போயிடும். இந்த மாடல் அல்காரிதம் எல்லை மீறி, இரு நிஜ மனிதர்களின் உணர்வுகளை ஒண்ணா இணைச்சு ஒரு ரியல்-டைம் டேட்டிங் ஆப் மாதிரி வேலை செஞ்சிருக்கு,” என்று கவலைப்பட்டிருந்தான்.
இப்போது, நிலாவின் புத்திசாலித்தனமான விலகலால் அந்த ரகசியம் தற்காலிகமாகக் காக்கப்பட்டதை நினைத்து அவர்கள் நிம்மதியடைந்தனர்.
மாடியில் மழையில் நனைந்து, முற்றிலும் திகைத்துப் போய் நின்றிருந்த விஷ்வாவை, பிரவீன் விரைந்து சென்று கையைப் பிடித்து இழுத்துத் தன் பிரத்யேக ஏசி கேபினுக்குள் அழைத்து வந்தான்.
டவல்களால் விஷ்வாவின் நனைந்த தலைமுடியைத் துடைக்க உதவிக் கொண்டே, “விஷ்வா… என்னடா டக்குன்னு போய் அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சுட்டே… அவ ஒன்னும் சொல்லாம சைலண்டா போயிட்டா, சரி, அப்படி இல்லாம, நீ கையைப் பிடிச்சு இழுத்துட்டேன்னு சத்தம் போட்டு ஊரைக் கூட்டியிருந்தா என்னடா பண்ணியிருப்ப? இருக்குற பிரச்சனை போதாதா உனக்கு.” நண்பனை லேசாகக் கடிந்துகொண்டான் பிரவீன்.
அவன் பேசிய எதுவும் விஷ்வாவின் காதில் விழவில்லை. நிலாவை நேருக்கு நேராகச் சந்தித்த இன்ப அதிர்ச்சியில் இருந்தே அவன் மீளவில்லை… மீள விரும்பவில்லை.
“டேய் பிரவீன், நிலாடா… என்னோட நிலாடா… நான் அன்னைக்கே சொன்னேன்ல இங்கதான் இருக்கான்னு…” என்றான் கண்களில் மயக்கத்துடன்.
பிரவீன் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, அவ கைகளைப் பிடித்துக் கொண்டான், “சரிடா, அந்தப் பொண்ணு பேரு நிலாதான், ஆனா அவ உன்னோட விர்ச்சுவல் அனுபவத்துல பார்த்த நிலா இல்லடா… புரிஞ்சுக்கோ. அது வெறும் நிழல்தான், அதுக்கும் இந்தப் பொண்ணுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” விளக்க முயன்றான் பிரவீன்.
செவிடன் காதில் வாசித்த ஆர்க்கெஸ்ட்ராவானது அனைத்தும், “நீ சும்மா சொல்லாத, நிலா… நிலா, அப்படியே இருக்காடா… அவ கண்ணு, மூக்கு, நெத்தி, உதடு, ஏன் இதோ இங்க ஒரு மச்சம் இருக்கே…” என்று நிலாவுக்குப் இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “அந்த மச்சம் கூட அப்படியே இருக்கு… அவ ஹைட் கூட… இதோ என் தோளுக்கு தான் வருவா… அது கூட மாறலை… இவதான் என் நிலா, நான் கண்டுபிடிச்சிட்டேன்…” பரவச நிலையில் இருந்தான் விஷ்வா.
“விஷ்வா… கொஞ்சம் எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோ. நிலாவுக்கு உன் மேல எந்த ஈர்ப்பும் இல்லை. அவளுக்கு உன்னை வெறும் நடிகனா மட்டும்தான் தெரியும். அதனால அவளோட ஃபீலிங்ஸை நீ கட்டாயப்படுத்த முடியாது. இதை இதோட விட்டுடு விஷ்வா, இல்லைன்னா, இது ஒரு பெரிய்ய பிரச்சனையா வந்து முடியும், இப்போ இருக்குற சிக்கல் போதாதா உனக்கு?” என்று பிரவீன் அவனுக்குப் புரிய வைக்க முயன்றான்.
ஆனால், விஷ்வாவின் முகத்திலோ ஒரு விசித்திரமான, பிடிவாதமான புன்னகை நிலவியது. அவன் தன் நனைந்த முடிகளைக் பின்னோக்கிக் கோதிவிட்டு, கண்களில் ஒரு தீவிரமான காதலோடு பிரவீனைப் பார்த்தான்.
“இல்லை பிரவீன்… நீ சொல்றது சரியா இருக்கலாம், இப்போ அவளுக்கு என் மேல காதல் இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு காதல் இருக்கே நிலா மேல… அதை நான் அவகிட்ட சொல்லணும்டா, என் மனசுல இருக்கறதை எல்லாம் நிலாகிட்ட சொல்லணும்… அவ என்னோட காதலை ஏத்துப்பா…” கண்களில் அபரிமிதமான நம்பிக்கையுடன் காதலில் உருகினான் விஷ்வா.
அலுவலகத்தின் காரிடாரில் விறுவிறுவென்று நடந்து வந்த நிலாவின் கால்கள், அவளது கேபினுக்குள் நுழைந்ததும் அப்படியே பலவீனமடைந்து நடுங்கத் தொடங்கின. தன் இருக்கையில் அமர்ந்தவள், மேஜை மீது தன் இரு கைகளையும் ஊன்றி, தலையைக் கவிழ்த்துக் கொண்டு மூச்சிரைத்தாள். அவளது நெஞ்சுக்குள் ஒரு மாபெரும் போர்க்களமே நடந்து முடிந்திருந்தது.
அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருக்க, மெதுவாகத் தன் நனைந்த பையிலிருந்து அந்தச் சிறிய டைரியை வெளியே எடுத்தாள். அதில் விஷ்வாவின் அந்தப் பிரசித்தி பெற்ற, ஸ்டைலான கையெழுத்து மழையின் ஈரத்தோடு லேசாகப் படர்ந்திருந்தது.
“அவர் என் கண் முன்னாடி நின்னார்… அந்த விர்ச்சுவல் உலகத்துல நான் பார்த்த அதே கண்கள், அதே குரல். என்னை நிலானு கூப்பிட்ட அந்த ஒரு நொடியில என் ஒட்டுமொத்த உலகமும் சுழன்ற மாதிரி இருந்துச்சு… ஆனா என்னோட பேரு அவருக்கு எப்படித் தெரியும்?” நிலாவின் மனம் கேள்வி கேட்டுக் குழப்பியது.
“எப்படித் தெரியும்… ஒருவேளை அனன்யா கூப்பிட்டதைக் கேட்டிருப்பாரோ? கையைப் பிடிச்சு ஏதோ சொல்ல வந்தாரே… என்னன்னு கேட்டிருக்கலாமோ?” மனம் முன்னும் பின்னும் முரண்டியது. இன்னும் கொஞ்ச நேரம் அவன் அருகாமையில் திளைத்திருக்கலாமோ என்று பேராசையால் பிதற்றியது.
ஆனால், அடுத்த கணமே அவளது எதார்த்த புத்தி அவளை எச்சரித்தது. ‘இல்லை நிலா, நீ பண்ணதுதான் சரி. விர்ச்சுவல் உலகத்துல நீ பார்த்தது விஷ்வா மாதிரி இருந்த ஒரு ஏஐ பிம்பத்தை… உன் முன்னாடி இன்னிக்கு நின்னது உனக்கு எட்டாத உயரத்துல வானத்துல இருக்குற நட்சத்திரத்தை… அதை அண்ணாந்து பார்க்க மட்டும்தான் முடியும், கை நீட்டிப் பிடிக்க முயற்சி பண்ணக் கூடாது, நீ ஒரு ரசிகை, ரசிகையா மட்டும் இரு போதும்,” என்று தன் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டாள்.
அவள் அவசரமாகத் தன் மொபைலை எடுத்து, மாடியில் எடுத்த அந்தச் செல்ஃபி புகைப்படத்தையும், அந்த டைரிப் பக்கத்தையும் பார்த்தாள். பின்பு, ஒரு ஆழமான பெருமூச்சுடன் அந்தச் செல்ஃபி புகைப்படத்தை மொபைலின் மறைக்கப்பட்ட ஃபோல்டருக்குள் மாற்றிப் பூட்டினாள். அதோடு தன் காதலையும் சேர்த்துப் பூட்டுவதைப் போல!
மறுபுறம், பிரவீனின் ஏசி கேபினுக்குள் விஷ்வா ஒரு புதிய மனிதனாக அமர்ந்திருந்தான். அவனது நனைந்த உடைகள் காய்ந்திருக்க, அவனது மேலாளர் அரவிந்த் பதற்றத்துடன் அவனுக்கு ஒரு சூடான காபியைக் கொண்டு வந்து கொடுத்தான்.
“விஷ்வா… நீங்க சொல்றது எனக்குப் புரியல. அந்தப் பொண்ணு உங்களை ஒரு சாதாரண ரசிகை மாதிரி பார்த்துட்டுப் போயிருக்கு. நீங்க என்னடான்னா அவதான் என் உலகம்கிறீங்க. அதுவும் இல்லாம, வெளிய நயனிகா பண்ற அலப்பறைக்கு நாம பதில் சொல்லியே ஆகணும், இந்த நேரத்துல இப்படி இன்னொரு விஷயம் லீக் ஆச்சுன்னா தாங்காது விஷ்வா” என்று அரவிந்த் தலையைப் பிடித்துக் கொண்டான்.
விஷ்வா காபி கப்பை உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்று, ஒரு மடக்கு குடித்துவிட்டு மேஜை மீது வைத்தான். அவனது கண்கள் லேபில் இருந்த பெரிய மானிட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தன, அங்கு சோல்மேட் செயலியின் கோடிங்குகள் ஓடிக் கொண்டிருந்தன.
“அரவிந்த், நயனிகா பண்றது வெறும் போலி நாடகம். அதை நான் சீக்கிரமே உடைச்சு அவளோட போலி வேஷத்தை நானே கலைப்பேன். ஆனா… நிலா தான் எனக்கு எல்லாம், அவ இல்லாம நான் இல்லை. அவ என் வாழ்க்கையோட உண்மைக் காதல், ஒரே காதல், இதுக்கு முன்னாடி என் மனசு ஒரு பொண்ணை விரும்பினது இல்லை, இனிமேல் வேற ஒரு பொண்ணை என் மனசு விரும்பப் போறதும் இல்லை, இந்த நயனிகா மாதிரி ஆளுங்கல்லாம் ஒரு விஷயமே இல்லை… பிரவீன்!” விஷ்வா தன் பார்வையைத் திருப்பினான்.
பக்கத்தில் கணினியில் மும்முரமாக வேலை செய்வது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த பிரவீன் நிமிர்ந்தான். “சொல்லு விஷ்வா.”
“எனக்கு நிலா பத்தின விவரம் எல்லாம் வேணும், எப்படியாவது எடுத்துக் குடு. இப்போ என்னை ஒரு நடிகனா மட்டும் தான் பார்க்கிற நிலாவை என் நிஜக் காதலியா மாத்துறது எப்படினு எனக்குத் தெரியும்,” என்றான் விஷ்வா தீர்க்கமாக.
பிரவீன் கவலையுடன், “விஷ்வா, சினிமா சூப்பர் ஸ்டார் விஸ்வநாத் நிலாவைக் காதலிக்கிறான்ங்குற விஷயம் வெளிய தெரிஞ்சா, மீடியா அவளை நிம்மதியா வாழவே விடாது விஷ்வா. அவ ரொம்பவும் அப்பாவியான பொண்ணு,” என்று எச்சரித்தான்.
விஷ்வா எழுந்து நின்று தன் கறுப்பு ஜாக்கெட்டை மாட்டிக் கொண்டான். “அவளைப் பாதுகாக்கிற பொறுப்பு இனிமே என்னோடது பிரவீன். படத்தோட அடுத்த ஷெட்யூல் சென்னையில தான் நடக்குது. நான் இங்கதான் இருக்கப் போறேன்… அவளுக்குப் பக்கத்துலயே!” என்று கூறிவிட்டு கேபினை விட்டு வெளியேறினான்.
அன்று மாலை, படப்பிடிப்புத் தளத்தின் கேரவானில் தீபக் தன் மொபைலில் சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். நயனிகா லீக் செய்த வீடியோவிற்கு விஷ்வா இன்னும் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காததால், நெட்டிசன்கள் பலரும் விஷ்வா-நயனிகா காதலை உண்மை என்றே நம்பத் தொடங்கியிருந்தனர்.
நயனிகா தன் கேரவனில் இருந்து இறங்கி வந்து, “என்ன தீபக், விஷ்வா தரப்புல இருந்து ஏதாச்சும் ரியாக்ஷன் இருக்கா?” என்று கேட்டாள்.
தீபக் சிரித்துக் கொண்டே, “எந்த ரியாக்ஷனும் இல்லை நயனிகா. அவன் இன்னைக்கு மதியம் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு யாருக்கும் தெரியாம எங்கேயோ வெளிய போயிட்டு இப்போதான் திரும்ப வந்திருக்கான். ஆனா, அவனோட முகத்துல இப்போ எந்தக் கோபமும் இல்லை. ஏதோ ஒரு புது உற்சாகம் தெரியுது. ஒருவேளை… நம்ம பிளானுக்கு விழுந்துட்டான் போல!” என்றான் தந்திரமாக.
“அவன் பயந்தா நமக்கு நல்லது தான் தீபக். கூடிய சீக்கிரம் இந்த படத்தோட பிரஸ் மீட் வரப்போகுது. அன்னைக்கு மீடியா முன்னாடி அவன் என் கையைப் பிடிச்சு இந்த ரிலேஷன்ஷிப்பை ஒத்துக்கிற மாதிரி நான் பண்ணல… என் பேரு நயனிகா இல்லை!” என்று சவால் விட்டாள் அகம்பாவத்துடன்.
இரவு 8 மணி.
டி.நகரின் தன் வீட்டிற்குள் நுழைந்த நிலா, ஹாலில் இருந்த தன் பெற்றோரைப் பார்க்க பயந்து நேராகத் தன் அறைக்குள் செல்ல முயன்றாள். ஆனால், தங்குமம்மாள் அவளைக் கூப்பிட்டாள்.
“நிலா, இங்க வாம்மா… இன்னைக்கு ஆபீஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்தியா? முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு?” என்று கேட்டபடி அவளது நெற்றியில் கை வைத்தாள்.
“இல்லைம்மா… மழை பெய்ததுல லேசா நனைஞ்சுட்டேன், அதான்,” நிலா சமாளித்தாள்.
ரங்கநாதன் தன் நியூஸ்பேப்பரைப் படித்துக் கொண்டே, “பாத்தியா தங்கம்… இந்த சினிமா நடிகன் விஸ்வநாத் நயனிகாவை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு இன்னைக்கு சாயந்திரம் நியூஸ்ல அதிகாரப்பூர்வமா சொல்லிட்டாங்க. அந்தப் பொண்ணோட மேனேஜரே பிரஸ்ஸைக் கூப்பிட்டு கன்பார்ம் பண்ணிட்டான். இந்த சினிமாக்காரங்க வாழ்க்கையே இவ்வளவுதான்,” என்றார்.
நிலாவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. சோஷியல் மீடியாவில் வந்த வதந்திகள், இப்போது அதிகாரப்பூர்வமான செய்தியாக மாறிவிட்டதா?
அவள் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். கட்டிலில் அமர்ந்து தன் மொபைலை ஆன் செய்தவள், அந்த ‘ஹைடு ஃபோல்டரில்’ இருந்த விஷ்வாவின் செல்ஃபி புகைப்படத்தைப் பார்த்தாள்.
‘நீங்க நயனிகாவோட உலகத்துக்கே போயிடுங்க விஷ்வா… இந்த நிலாவுக்கு விர்ச்சுவல் உலகத்துல நீங்க கொடுத்த அந்தப் போலி நினைவுகள் மட்டுமே போதும். நிஜ உலகத்துல உங்களை நான் இனிமே தேட மாட்டேன்’ என்று அழுதுகொண்டே கண்களை மூடினாள் நிலா.
ஆனால், அவளது லேப்டாப்பில் இருந்த சோல்மேட் ஏஐ சர்வரின் அலைவரிசையைத் தாண்டி, விதி ஒரு புதிய அலைவரிசையை உருவாக்கத் தொடங்கியிருந்தது! விஷ்வா தன் அடுத்த ரகசிய வேட்டையைத் தொடங்கத் தயாராகிவிட்டான்.
error: Content is protected !!