Skip to content
Post Views: 25
மரகதம் இல்லாத அந்த வெற்று அறையில், கீழே கூனிக் குறுகிப் படுத்திருக்கும் மதுராவைக் காண நெஞ்சமெல்லாம் அடித்துக்கொண்டது.
தட்டில் இரண்டு இட்லிகளை எடுத்துக்கொண்டு அவள் அருகே வந்த ரம்யா, “மது…” எனத் தட்டி எழுப்ப, கண்களைத் திறக்க முடியாமல் திறந்து எழுந்தாள் மதுரா.
“காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடல! வந்து சாப்பிடுமா.”
மதுராவின் கண்கள் கட்டிலை நோக்கிச் சென்றன. நேற்று இந்நேரம் தாய் அவளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால், இன்று காற்றாக மாறிவிட்டாரே என்று நினைக்க நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
Advertisement
“அண்ணி! அம்மா…” எனச் சிறு குழந்தையைப் போல அந்த வெற்று இடத்தைக் காட்டி அழ, ரம்யாவின் மனமோ கனத்துப் போனது.
“அம்மா…” என அவள் மீது சாய்ந்து அழ, ரம்யாவிற்கும் அழுகை வந்தது.
“மது! அம்மா எங்கேயும் போகல, உன்னோட… நம்மளோடதான் இருக்காங்க. உனக்கு இது பெரிய இழப்புதான் மது, எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பத்தாது. ஆனா, நிதர்சனத்தை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்டி! அவங்க தெய்வத்தோட தெய்வமா கலந்து, உன் கூடவேதான் இருக்காங்க.”
Advertisement
“முடியல அக்கா! ஏத்துக்க முடியல. ரொம்ப வருஷமா அம்மாவும் நானும் மட்டும்தான் இருந்தோம். இந்த வீடுதான் எங்க தனி உலகம். அதுல நானும் எங்க அம்மாவும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்! எதுக்காக அந்த சந்தோஷத்தைக் கெடுக்க இந்த நோய் வந்தது? எதுக்காக என் அம்மாவின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தது? இப்போ மொத்தமா என் அம்மாகிட்ட இருந்து என்னை ஏன் பிரிச்சது? இப்போ என்னை அனாதையா தவிக்கவிட்டுட்டு ஏன் போனாங்க? நான் இனி என் அம்மாவை எப்படிப் பார்ப்பேன்? அவங்களோட எப்படிப் பேசுவேன், எப்படிச் சிரிப்பேன், எப்படிச் சாப்பிடுவேன்? பேசாம நானும் அவங்களோடவே போயிடுறேன் அண்ணி! என் அம்மா இல்லாம என்னால இருக்க முடியல, நானும் அவங்களோடவே போயிடுறேன் அண்ணி!” எனப் பிதற்ற ஆரம்பிக்க, ரம்யாவோ பயந்து போனாள்.
Advertisement
“மது! என்ன பேச்சு இது? நீ இப்படிப் பேசினா கடவுளா இருக்கிற உன் அம்மா கூட இதைத் தாங்கிக்க மாட்டாங்க! அவங்க ஆத்மா நிம்மதியா சாந்தியடையணும்னா, நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுட்டு வாழறதுலதான் இருக்கு. நீயும் இப்படிப் பேசினா, அவங்க ஆத்மா துடிச்சுப் போயிடாதா? உனக்காகவே வாழ்ந்த அந்த நல்ல ஆத்மாவுக்கு நீ மோட்சம் கொடுக்கணும்னா, அவங்க ஆசைப்பட்டது போல நீ வாழணும்டி, சாகக் கூடாது! இனி உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது, புரிஞ்சதா? இந்தா சாப்பிடு,” என ஊட்டி விட முயன்றாள்.
“வேணாம் அண்ணி!” என்று கையைப் பிடித்துத் தடுத்தாள்.
“கொஞ்சம் சாப்பிடுமா!” எனப் போராடி அவளைச் சாப்பிட வைத்துவிட்டு அவ்விடம் விட்டு வெளியே சென்றாள் ரம்யா.
Advertisement
லட்சுமியின் குடும்பம் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலேயே கிளம்பிச் சென்றது. ரம்யாவும் அவளது கணவன் கதிரும் கூட அவர்களை இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. லட்சுமிதான் ஏதேதோ சாக்குச் சொல்லிச் சென்றுவிட, இவர்களும் கசப்பான புன்னகையை உதிர்த்தனர்.
அவர்களும் சென்றுவிட, அந்தப் பெரிய வீட்டில் மூவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
“ரம்யா, நீ கூடவே இரு. எதுனாலும் என்னைக் கூப்பிடு, நான் வர்றேன். அவளுக்குத் துணையா இரு,” என்று ரம்யாவை இருக்கச் சொல்லிவிட்டு கதிரும் கிளம்பினான்.
இரவில் ரம்யா அவளோடு படுக்க வர, “நீங்களும் போங்க அண்ணி, நான் தனியா இருந்துப்பேன். இனி அப்படி இருக்கப் பழகிக்கணும்ல…” என்றாள் மதுரா.
“அதென்னவோ உண்மைதான், ஆனா அதுவும் நிரந்தரம் இல்லை. உனக்குன்னு ஒரு வாழ்க்கைத்துணை வந்தா நிச்சயம் அந்தத் தனிமையும் இல்லாமல் போயிடும்,” என்று ரம்யா சொன்னதும், ஏனோ அழையா விருந்தாளியாக மதியூரனின் நினைவு வந்து போனது. சட்டெனத் தன் மனதுடன் கோபித்துக்கொண்டாள் மதுரா.
‘அவன் ஒரு துரோகி! அவனைப் போய் மீண்டும் மீண்டும் ஏன் நினைக்கிறாய்?’ எனக் கடிந்துகொண்டாள்.
இரவு முழுதும் தூங்காமல் பிதற்றிக்கொண்டே இருந்தாள் மதுரா. “அம்மா! அம்மா!” எனப் பதறிப் பதறி எழுந்தவளுக்கு ரம்யாதான் தண்ணீர் கொடுத்துத் தேற்றிப் படுக்க வைத்தாள்.
மறுநாள் விடிந்தும் மதுரா தூங்கிக்கொண்டிருக்க, ரம்யா அவளை எழுப்பவில்லை. தன் வீட்டிற்குச் சென்று காலை வேலைகளை முடித்து, சமைத்துக் கதிரை வேலைக்கு அனுப்பிவிட்டுத் திரும்பியபோது, மதுரா எழுந்து அமர்ந்து தாயின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை எழுப்பி காலைக் கடமைகளை முடிக்க அனுப்பி வைத்தாள் ரம்யா. பின் தேநீரை வம்படியாகக் குடிக்கக் கொடுத்துவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
தேநீரைப் பருகிவிட்டு மதுராவும் ரம்யாவுக்கு உதவினாள். கடைசியாகத் தாய் உபயோகித்த பொருட்களை எல்லாம் தனியாக மூட்டை கட்டி வைத்தாள்; அவ்விடத்தைச் சுத்தம் செய்தாள்.
விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்தனர். இறந்த விஷயத்தை வீட்டிற்குக் கொண்டு வராததைக் கேட்டுச் சற்று கடிந்துகொண்டாலும், ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றனர்.
தூய்மைப் பணியாளர்களிடம் தாய் உபயோகித்த பொருட்களைக் கொடுத்து அப்புறப்படுத்தினர்.
இரவில் கதிரும் அவர்களோடு இணைந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னான். இரவு உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கதிர் செல்ல, மதுரா ரம்யாவையும் போகச் சொன்னாள். ஆனால் ரம்யா அதைக் கேட்காமல், அன்று இரவும் அவளுடனேயே தங்கினாள். இவ்வாறு பத்து நாட்களும் ரம்யாவும் கதிரும்தான் அவளுக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருந்தனர். இடையில் லட்சுமி கடமைக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார்.
அதன்பின் ரம்யாவை வம்படியாகக் கதிருடன் அனுப்பிவைத்துவிட்டு, இவள் தனியாக இருக்கப் பழகிக்கொள்ள முயன்றாள். முதலில் அது மிகக் கடினமாக இருந்தது; தாய் அமர்ந்திருப்பது போலவும், அழைப்பது போலவும் தோன்றியது. அந்த இரவுகளைக் கடக்கவே வெகு சிரமப்பட்டாள். எனினும், அதையும் மெல்லப் பழக ஆரம்பித்தாள். டப்பிங் பேசக் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தாள். இடையில் கதை வாசிக்கும் வாய்ப்பு வர, அதைச் செய்து கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் நினைவுகளிலிருந்து மீண்டு, நிதர்சனத்திற்கு வர முயன்றாள்.
ஒரு பிரபல சீரியல் டப்பிங் ஸ்டூடியோவின் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் மதியூரன். அங்கே அவனுக்காக அந்த நாடகத்தின் இயக்குநரும் மேனேஜரும் காத்திருந்தனர்.
“வாங்க மதியூரன்!” என்று மேனேஜர் சிரிப்புடன் வரவேற்க, இயக்குநரோ அவனை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இவர் புதுசா வரப்போற சீரியலோட இயக்குநர்,” என்று மேனேஜர் அறிமுகம் செய்து வைக்க,
“வ… வ… வணக்கம் சார்,” என்றான் மதியூரன்.
அவன் திக்குவதைக் கண்டு அதிர்ந்து பார்த்த இயக்குநர், “யோவ், என்னய்யா இது?” என்பது போல மேனேஜரைப் பார்த்தார்.
“சார்! இவர் தான் மதியூரன். நீங்க ‘இந்த வாய்ஸ்தான் வேணும்’னு அடம் பிடிச்சீங்களே, அந்த வாய்ஸ்க்குச் சொந்தக்காரரே இவர்தான்! பேசும்போது இவருக்குத் திக்கும்; ஆனா வாசிக்க ஆரம்பிச்சா, இவர் திக்கிப் பேசுவார்னு யாருமே நம்ப மாட்டாங்க! செம்ம வாய்ஸ் சார். கொஞ்சக் காலத்துலேயே ரொம்ப பாப்புலர்!” என்று பெருமை பேச, இவனோ சங்கடமாக நெளிந்தான்.
“ஓகே! நான் கொடுத்த டயலாக்கை பேசச் சொல்லுங்க சார், டெஸ்ட் பண்ணிடலாம்,” என்று வசனங்கள் அடங்கிய பேப்பரை இயக்குநர் எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டான் மதியூரன்.
ஒருமுறை வாசித்துப் பார்த்தவன், பின் “ரெடி சார்” என்றபடி டப்பிங் அறைக்குள் நுழைந்தான். கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. முதன்முறையாக ஒரு மெகா தொடருக்கு டப்பிங் செய்யப் போகிறான். சட்டென அவனுக்கு மதுராவின் அணைப்புதான் நினைவிற்கு வந்தது. முன்பு வாய்ப்புக் கிடைத்தும் தன் குறைபாட்டால் சொதப்பி வைத்தவனுக்காக, மீண்டும் கெஞ்சிக் கேட்டு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கட்டி அணைத்து ஆறுதலோடு நம்பிக்கை கொடுத்துப் பேச வைத்திருந்தாள் மதுரா. அன்று தொடங்கிய பயணம்தான், இன்று சின்னத்திரையில் கதாநாயகனுக்கு டப்பிங் கொடுக்கும் அளவுக்கு அவனை முன்னேற்றியிருக்கிறது. அதற்கு அவள்… அவள் மட்டுமே காரணம்!
அவளை எண்ணிக் கண்களை மூடிக்கொண்டவன், “டேக் ஒன்” என்றதும் திரையில் ஓடிய காட்சிக்கு ஏற்பத் தன் கம்பீரமான குரலைக் கொடுத்தான்.
“எக்ஸலெண்ட்! சூப்பர்ப் மதியூரன்!” என்று இயக்குநர் கைதட்டிப் பாராட்டினார். மதியூரனின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.
“இவரையே டப்பிங் கொடுக்கச் சொல்லிடலாம். இந்த நாடகத்தோட கதாநாயகன் தெலுங்குக்காரர், தமிழ் சுட்டுப்போட்டாலும் வராது. மதியூரன் குரல் நிச்சயம் அவருக்குப் பொருத்தமா இருக்கும். இவரையே பிக்ஸ் பண்ணிடலாம்.”
“சரிங்க சார், அக்ரிமெண்ட் போட்டுடலாம்…”
“மதுரா எப்போ வர்றேன்னு சொன்னாங்க?” எனக் இயக்குநர் கேட்க, ‘மதுரா’ என்ற பெயரைக் கேட்டதும் மதியூரன் சட்டென நிமிர்ந்து அவரை நோக்கினான்.
“ஒன் வீக் டைம் கேட்டிருக்காங்க சார்,” என்றார் மேனேஜர்.
“ம… ம… மதுராவும் இ… இ… இந்த சீ… சீரியலுக்கு ட… ட… டப்பிங் கொடுக்கிறாங்களா?” என்று திக்கிக் கேட்டான் மதியூரன்.
“ஆமாப்பா! ஹீரோயினுக்கு அவங்கதான் டப் கொடுக்குறாங்க. கொஞ்சம் பெர்சனல் இஸ்யூன்னு சொன்னாங்க,” என்றிட, ‘பெர்சனல் இஸ்யூவா? என்னவாக இருக்கும்?’ என்ற யோசனையோடு அங்கிருந்து கிளம்பினான் மதியூரன்.
நாட்கள் செல்ல, அர்ச்சனாவின் கல்யாண நாளும் நெருங்கியது. அர்ச்சனாவின் தாயார் மதுராவைத் திருமணத்திற்கு அழைப்பதற்காக அலைபேசியில் அழைத்திருந்தார்.
மதுராவும் அழைப்பை ஏற்றாள். “சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க?”
“ம்ம்… இருக்கேன்மா,” என்றாள்; அவளது குரல் மிகவும் தாழ்ந்திருந்தது.
“என்னம்மா உடம்பு சரியில்லையா? குரல் ஒரு மாதிரியா இருக்கே?”
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா! கல்யாண வேலை எப்படிப் போயிட்டு இருக்கு?”
“நல்லா போயிட்டு இருக்கும்மா. அர்ச்சனா சொன்னா, ஹோட்டல்ல பார்த்துப் பத்திரிகை கொடுத்ததா சொன்னா ! இருந்தாலும் உன்னை ஸ்பெஷலா கூப்பிடணும்னுதான் போன் பண்ணினேன், தப்பா நினைச்சுக்காதே! நேர்ல வந்து அழைக்க முடியல. அம்மாகிட்டயும் சொல்லிடு. அம்மா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டதும், மதுராவின் பக்கமிருந்து பதிலே வரவில்லை.
“என்னம்மா, அமைதியாகிட்ட?”
“அம்மா இறந்துட்டாங்க ஆண்டி!” என்று சொல்லும்போதே குரல் தழுதழுக்க, அவரோ அதிர்ந்து போனார்.
“என்னம்மா சொல்ற? எப்போ? என்னாச்சு? ஏன்மா ஒரு வார்த்தை கூட சொல்லல?” என அவர் வருந்த, அவளோ நடந்ததைச் சுருக்கமாகக் கூறினாள்.
“சாரிம்மா! இனி நீதான் தைரியமா இருக்கணும். உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும்,” என்று மேற்கொண்டு ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அர்ச்சனாவின் கல்யாண நாளும் வந்தது. மதியூரனோ சாதாரண விருந்தினரைப் போல கையில் பரிசோடு வந்திருந்தான். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் மேடையைப் பார்த்தான்.
தன் காதலனைக் கைப்பிடிக்கப் போகும் சந்தோஷத்தில் பூரித்துப் போயிருந்த அர்ச்சனா, மணப்பெண் அலங்காரத்தில் கூடுதல் அழகோடு மிளிர்ந்தாள்.
நல்ல முகூர்த்த நேரத்தில், அர்ச்சனாவின் காதலன் அவளுக்கு மூன்று முடிச்சுகள் போட, அவள் அவனது மனைவியானாள். வந்தவர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்லிப் பரிசுகளைக் கொடுத்துவிட்டுச் செல்ல, இவனும் வரிசையில் நின்று அர்ச்சனாவிடம் பரிசைக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டவள், புகைப்படத்திற்குப் புன்னகைத்துவிட்டு, அவனை யாரோ முன்பின் தெரியாதவன் போலத் தவிர்த்தாள். அவனும் “காங்க்ராஜுலேஷன்ஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினான்.
அப்போது அர்ச்சனாவின் தாயார் அவனை வழிமறித்தார். “என்னப்பா, எப்படி இருக்க?”
“இ… இருக்கேன் ஆண்டி, நீ… நீங்க?”
“நல்லா இருக்கேன்பா! நீ இப்போ டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாமே! உன் கனவை நிறைவேத்திக்கிட்டதுல ரொம்ப சந்தோஷம்பா. ஆமா, மதுராவைக் கூட்டிட்டு வரலையா? அவ உன்னோடதான் வருவான்னு நினைச்சேன், வரலையா? இல்ல, வரமாட்டேன்னு சொல்லிட்டாளா? பாவம்ப்பா… இருந்த ஒரே உறவும் இல்லாமப் போயிடுச்சு,” என்று அவர் பெருமூச்சு விட,
“ஆண்டி! இ… இப்போ நீ… நீ.. நீங்க எ… என்ன சொன்னீங்க?” என்றான் மதியூரன் பதற்றத்துடன்.
“அதான்பா… அவளுக்கு ஒரு நல்லது பண்ணாம, இப்படி அவங்க அம்மா இறந்து போவாங்கன்னு அவ நினைச்சுப் பார்த்திருப்பாளா?” என்றார். மதியூரன் அப்படியே அதிர்ந்து போனான்.
“எ…எ… என்ன சொல்றீங்க?!”
“என்னப்பா? உனக்கு விஷயம் தெரியாதா? ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மதுராவோட அம்மா இறந்துட்டாங்கப்பா,” என்றாள்.
“துராவோட அ… அ… அம்மா இ… இ… இறந்துட்டாங்களா?!”
“என்னப்பா இப்படி கேக்குற? உன்கிட்ட கூட அவ சொல்லலையா?” எனக் கேட்டவர், நடந்த அனைத்தையும் சொல்ல, மதியூரனுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
“உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா மதி?”
“இ… இ… இல்ல ஆண்டி! நா… நா… நான் கிளம்புறேன்,” என்றவன், விறுவிறுவெனத் தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் நேராகச் சென்றது மதுராவின் வீட்டிற்குத்தான்.
வண்டியிலிருந்து இறங்கியவனின் கால்கள் தள்ளாடின. உள்ளே செல்லவே குற்றவுணர்வு அவனைக் கொன்றது. அந்தச் சிறு முற்றத்தைக் கடப்பது கூட அவனுக்கு நரகமாகக் தோன்றியது.
கூடத்தில் தாயின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுரா. கால்கள் தள்ளாட அவளுக்கு முன்னால் அவன் வந்து நின்றதைக் கூட உணராமல், அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கன்னங்களில் கண்ணீர்த் தடம் காய்ந்திருந்தது.
வந்தவன் மரகதத்தின் புகைப்படத்தின் முன் மண்டியிட்டுத் தலைசாய்த்துக் கதறி அழுதான். அந்த அரவம் கேட்டு மதுரா தன் பார்வையை அவன் மீது திருப்பினாள்.
தனது உயிராகப் பார்த்தவனை இன்று ஏதோ முன்பின் தெரியாதவனைப் போலப் பார்க்கிறாள். ‘முன்பு இருந்த காதல் அவன் மீது இன்னமும் இருக்கிறதா?’ என்று கேட்டால், அத்தனையும் மொத்தமாக அவளுள் கருகித்தான் போயிருந்தது. மீண்டும் அந்தக் காதல் கொடி உயிர்த்தெழுந்து படர வழியில்லாமல் பட்டுப்போயிருந்தது.
பழகிய அந்தச் சில நாட்களிலும் மரகதம் காட்டிய நேசமும் அன்பும் தாயை மிஞ்சியதாகவே மதியூரனுக்கு இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பைத்தான் அவர் பொழிந்தார். அவர் இப்போது இல்லை என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. மதுராவிற்குத் துணையாக அவர் இருப்பார் என்றுதானே அவன் அவளை விட்டு விலகிப் போனான்? ஆனால், அவளை விட்டு அவர் ஒரேடியாகப் பிரிந்து போவார் என்று அவன் கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. அவளைத் தனியாகத் தவிக்கவிட்டுப் போய்விட்டாரே! அவரது முகத்தைக் கூடக் கடைசி நேரத்தில் பார்க்க விடாமல் செய்துவிட்டாளே என்ற ஆதங்கத்துடன் எழுந்தவன், மதுராவின் முன்னே போய் நின்றான்.
“அ…அ… ம்மா இ… இ… இறந்துட்டாங்கன்ற வி… விஷயத்தை ஏ… ஏ.. ஏன் எ… என்கிட்ட சொல்லல துரா? க.. க.. கடைசியா அ… அ… அவங்க மு… மு… முகத்தைக் கூ கூட பா பா பார்க்க மு மு முடியாம பண்ணிட்டியே! ஏ… ஏ… ஏன் இ.. இப்படி பண்ண துரா?!” என்று கேட்டான்.
“பிஸியா இருக்கிற உங்களை ஏன் தொந்தரவு செய்யணும்னுதான் யூரன்… அம்மா இறந்ததைக் கூடச் சொல்லல,” என்றவளின் பேச்சு, அவனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது.
“துரா…!”
“அம்மா உங்ககிட்ட பேசணும்னு ரெண்டு மூணு வாட்டி ஆசையா கேட்டாங்க. ஆனா நீங்க பேசவே இல்லை; ரொம்ப பிஸியா இருந்தீங்க! அவங்க இறக்கிற அன்னைக்குக் கூட உங்ககிட்ட உதவி கேட்கத்தான் போன் பண்ணினேன். ஆனா அப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்… நீங்க…” என்று நிறுத்தியவள், “நீங்க பழைய யூரன் இல்லைன்னு! அதனாலதான் உங்களை இனி தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விஷயத்தைச் சொல்லல. இப்போ உங்களுக்கு வேற வேலை இல்லையா மதியூரன்? ஏன் இங்க வந்திருக்கீங்க?” என்று மிக அமைதியாகப் பேசினாள். அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனைக் கொன்று கொண்டிருந்தது.
“துரா…! நா.. நான்…” என ஆரம்பித்தவனைத் தன் கையை உயர்த்தித் தடுத்தாள் மதுரா.
“எந்த விளக்கமும் வேண்டாம் மதியூரன்! சீரா போயிட்டு இருக்கிற உங்க வாழ்க்கையில என்னை நினைச்சு நீங்க குழப்பிக்கவும் வேண்டாம், குற்றவுணர்ச்சியோடு இருக்கவும் வேண்டாம். நீங்க உங்க வழியைப் பார்த்துட்டுப் போங்க; நான் என் வழியைப் பார்த்துப் பயணிக்கிறேன். ரெண்டு பேரோட வாழ்க்கையையும் முடிச்சுப் போட நினைச்சதே எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு இப்போ புரிஞ்சுடுச்சு. இனி என் பக்கத்துல இருந்து உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. ப்ளீஸ்… இங்கிருந்து கிளம்புங்க யூரன்,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
எதுவும் சொல்ல முடியாத நிலையில், குற்றவுணர்வுடன் தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினான் மதியூரன். அவளோ தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் தாயின் படத்தின் முன் அமர்ந்தாள்.
வீட்டிற்கு வந்த மதியூரன், கற்பகம் ஏதோ பேச வந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். பின், அப்படியே சரிந்து கதறி அழுதான். முழுக்க முழுக்கக் குற்றவுணர்ச்சியில் நெஞ்சடைக்க, வாய்விட்டு அழக் கூட முடியாமல் ஊமையாக விம்மினான்.
அவன் எடுத்த தவறான முடிவால், ஒரு நல்ல தாயை இழந்துவிட்டான். அவரது அன்பான அழைப்பும், தலையை வருடிக்கொடுக்கும் நேசமும், பாசமான பேச்சும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவனை இன்னும் குற்றவுணர்வுக்குள் ஆழ்த்தியது. மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டதாக உணர்ந்தான். அந்தப் பாவ மூட்டையை இறக்கி வைக்க ஏழு ஜென்மம் எடுத்தாலும் முடியாது. அன்று நாள் முழுதும் அவன் கண்ணீரில்தான் தத்தளித்துக் கொண்டிருந்தான்
error: Content is protected !!