Skip to content
Post Views: 32
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் தனியாக இருக்கப் பழகிக் கொண்டாள் மதுரா! தாயின் இறப்பு, மதியூரனின் துரோகம் என இரண்டு பெரிய சவாலான வலிகளிலிருந்து வெளியே வரப் போராடிக் கொண்டிருக்கிறாள். தன்னைச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், பெரும் ரணத்துடன்தான் வாழ்கிறாள். உள்ளுக்குள் பல போராட்டங்கள் இருந்தாலும், வெளியே அமைதியான ஆழ்கடலைப் போல இருக்கிறாள். அவளை மேலும் காயப்படுத்த அடுத்த விஷயம் நடந்தது.
இரவில் அவள் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ஒரு நபர், அவள் வீட்டில் அத்துமீறி நுழைவதை இருமுறை உணர்ந்தாள்.
நன்றாகப் பூட்டிய கதவை யாரோ திறக்க முயற்சி செய்வது போல இருந்தது. இரண்டு முறை இவ்வாறு நடக்க, “யாரது? ஒழுங்காக இங்கிருந்து போறீங்களா இல்லை போலீஸுக்கும் போன் பண்ணட்டுமா?” என்றதும் சத்தம் நின்றுவிட்டது. இதுபோல மூன்று முறை நடக்க, அதோடு அலைபேசியிலும் யாரோ அவளுக்கு அழைத்துத் தவறான எண்ணத்தோடு பேச, பொறுத்துக் கொள்ள முடியாமல் தனக்குத் துணையாக இருக்கும் ரம்யா, கதிரிடம் இதைச் சொன்னாள். அதைக் கேட்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
“எனக்கென்னவோ இந்தத் தெருவில இருக்கிற எவனோதான் வீட்டுல நீ மட்டும் இருக்கிற விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு உன்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்றான்னு நினைக்கிறேன். நீ பயப்படாத! இன்னைக்கு அவன் யாருன்னு கண்டுபிடிச்சு அடிக்கிற அடியில, எந்தப் பொண்ணுங்ககிட்டயும் அவன் சீண்டக் கூடாது,” என்றவன், சொன்னது போலவே இரவில் ரம்யாவையும் மதுராவையும் வீட்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, அவனும் மறைவாக மாடியில் நின்றுகொண்டு பின்பக்கமும் முன்பக்கமும் யார் வருகிறார்கள் என்று நோட்டம் விட்டான் கதிர்.
Advertisement
சரியாக ஒரு உருவம் உள்ளே நுழைவதைக் கண்டான். மீண்டும் பின்பக்கக் கதவைத் திறக்க முயற்சி செய்ய, அது திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்றவன் கூடத்திற்கு வந்தான். இருட்டாக இருந்த இடத்தில் சட்டென வெளிச்சம் பரவியது! பயந்து அதிர்ந்து ஓடப் பார்த்தவனை, பின்பக்க வழியாக வந்த கதிர் பிடித்துக்கொண்டான். உடல் மேல் போர்வை போர்த்தி, முகத்தைத் துணியால் மறைத்தபடி வந்தவனைப் பின்னாலிருந்து பிடித்துக்கொண்டு முகத்தைப் பார்க்க முயன்றான். அவனோ முகத்தை மறைத்துக்கொண்டு அவனது கையிலிருந்து தப்பிக்கப் போராட, கடைசியாக அவன் யாரென்று பார்த்துவிட, மூவரும் அதிர்ந்து போனார்கள்!
உள்ளே வந்த ஆள், அவர்கள் தெருவில் ஐந்தாவது வீட்டில் வசிக்கும் ரவீந்தர்தான் அவர்.
“நீங்களா?” என மூவரும் அதிர்ந்தனர்.
Advertisement
ரவீந்தர், கார்ப்பரேஷன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசுப் பணியாளர். அவளது தாய் இறந்தபோது அவர்தான் இறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருந்தார்.
Advertisement
அவருக்கு ஒரே ஒரு பெண்; திருமணம் செய்து கொடுத்துவிட்டார். வீட்டில் அவரும் அவரது மனைவியும்தான். மனைவி சங்கீதா மாத்திரை போட்டுக்கொண்டு படுத்துவிட்டால், என்ன நடந்ததென்றே தெரியாத அளவுக்கு உறக்கம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுதான், இரவில் யாரும் அறியாமல் தனியாக இருக்கும் இவளது வீட்டிற்குத் தினமும் வர ஆரம்பித்தார்.
அவளுக்கு உதவி செய்ததை வைத்தும், ‘இனி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன், அவளுக்காக நான் இருக்கிறேன்’ என்றும் அவளது நிறத்தை வைத்துத் தாழ்வு மனப்பான்மை உண்டாக்கி, அவளிடம் பேசிப் பேசி மனதைக் கரைத்துத் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ள நினைத்துத்தான் தினமும் இரவில் வீட்டிற்குள் வர முயற்சி செய்து இன்று மாட்டிக்கொண்டார்.
ரவீந்தர் மதுராவைத் தவறாகக் கணித்துவிட்டார். யாருமில்லாத நிலையில் அவளை என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணத்திலும், பணத்தைக் காட்டி அவளை மயக்கி வலையில் வீழ்த்திவிடலாம் என்றும் எண்ணிவிட்டார்.
Advertisement
ஆனால் மதுரா தைரியமான பெண் என்பதை அறியாது போனார். எந்த நிலையிலும் கீழ்த்தரமான செயலைச் செய்யக் கூடாது என்று சிறு வயதிலிருந்தே தனது சொந்த முயற்சியில் முன்னேறி வந்தவள், பணத்தைக் காட்டி வளைக்க நினைத்தால் முடியுமா என்ன? அவளோ தன்னைச் சுற்றியும் தனக்குள்ளும் ஓர் இரும்பு வளையத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, யாரையும் நெருங்க விடாமல், யாருக்கும் தன்னை வளைத்துக் கொடுக்காமல் வாழ்பவள்! அவளிடம் அவரது பருப்பு வேகுமா என்ன? இதோ மாட்டிக்கொண்டு தலைகுனிந்து நின்றார்.
“எதுக்காக இப்படித் தினமும் ராத்திரியில கதவைத் தட்டித் தொந்தரவு பண்றீங்க? உங்களுக்கு என்ன வேணும் என்கிட்ட?”
அவரோ மாட்டியதில் அவமானமாகத் தலைகுனிந்து நின்றார்.
“சொல்லுங்க!”
“வேற எதுக்கு வரப்போறார் மது?!” எனப் பல்லைக் கடித்துக் கோபமாக அறைய முற்பட்ட ரம்யாவைத் தடுத்த மது, “உங்க பொண்ணு இதுபோல தனியா வீட்டுல இருக்கும்போது, உங்க வயசுல இருக்கிற ஒரு ஆள் இதேபோல நுழைஞ்சா உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்களுக்கு இப்படி ஒரு கேவலமான எண்ணம் இருக்குதுன்னா, உங்க பொண்ணையும் அப்படித்தானே பார்த்திருப்பீங்க?” என்றதும் அதைத் தாங்க முடியாதவர்,
“ஐயோ! அப்படிலாம் சொல்லாதம்மா! ஏதோ புத்தி கெட்டுத் தப்பு பண்ணிட்டேன். நீ கேட்ட கேள்வி என்னை உயிரோடயே கொன்னுடுச்சும்மா! பெத்த மகள் வயசுல இருக்கிற உன்னை இப்படி நினைச்சது தப்புத்தாம்மா, என்னை மன்னிச்சிடும்மா! இனிமே இந்தத் தப்பைச் செய்யவே மாட்டேன். என்னை விட்டுடச் சொல்லும்மா, வெளியே தெரிஞ்சா அசிங்கமாப் போயிடும். என் மானம், என் வேலை எல்லாம் போயிடும். என் பொண்டாட்டி தற்கொலை பண்ணிப்பா! என் பொண்ணு என்னை மனுஷனாகக் கூட மதிக்க மாட்டா! நானும் சாக வேண்டியதுதான்… இப்படி நடந்துக்கிட்டே வாழ்நாள் முழுதும் ஆயுள் கைதியா குற்ற உணர்வோட இருப்பேன். இதுல எல்லாரையும் இழந்து என்னை அனாதையாக்கிடாதம்மா,” என்று அவள் காலில் விழுந்து கதறினார்.
“மதும்மா! இவன் கதறினாலும் பாவம் பார்க்காதே! இவன் சொல்றதை நம்பாதே, போலீஸ்ல ஒப்படைச்சிடலாம். அப்போதான் உன்னை நெருங்க எந்த ஆம்பளையும் தயங்குவான். நான் இப்போவே போலீஸுக்குப் போன் பண்றேன்,” என்றாள் ரம்யா.
“ஐயோ வேணாம்னு சொல்லு மது! போலீஸ் போனா என் குடும்பத்தை இழந்து நான் அனாதையாகத் தவிக்கணும். ஏதோ புத்தி கெட்டுப் பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடு! இனி கனவுல கூட எந்தப் பொண்ணையும் தப்பா நினைக்க மாட்டேன். ப்ளீஸ் மதும்மா…” எனக் கதறி அழுபவரை அவளால் பார்க்க முடியவில்லை.
“அண்ணா! அவரை விட்டிருங்க! இவர் பண்ண காரியத்துக்கு இவர் மட்டுமா தண்டனை அனுபவிக்கப் போறார்? இவரோட குடும்பமும் சேர்ந்துதான் அனுபவிக்கும். ஒரு தப்பும் பண்ணாத அவங்க என்ன பண்ணாங்க? ஒரு தடவை மன்னிச்சு விடலாம். இனி இந்தத் தப்பைத் தொடர மாட்டார்னு நான் நம்புறேன்! இவரை அனுப்பிடுங்க,” என்றாள் எங்கோ வெறித்துப் பார்த்தபடி.
“ரொம்ப நன்றியம்மா! நிச்சயமா இனி தப்பான எண்ணத்தோடு எந்தப் பொண்ணுங்களையும் பார்க்க மாட்டேன். எல்லாரையும் என் மகள் போலவே பார்ப்பேம்மா, ரொம்ப நன்றியம்மா,” என்று அங்கிருந்து ஓடியே விட்டார்.
“இந்த மாதிரி பொறுக்கி நாயையெல்லாம் ஏன் சும்மா விட்ட மது? செருப்பைக் கழட்டி அடிச்சிருக்க வேண்டாமா?” எனப் பல்லைக் கடித்துப் பேசினாள் ரம்யா.
“நானும் அப்படித்தான் அண்ணி நினைச்சேன். ஆனா கால்ல விழுந்து கதறினதுல ஒரு மாதிரி ஆயிடுச்சு! இவரைப் பார்த்தால் தப்பு பண்றவர் போலத் தெரியலை. யாரோ கூட வேலை பார்க்கிறவன் பண்ற தப்பு இவரைத் தூண்டிவிட்டு இந்தளவு வர வச்சிருக்கு! இல்லைன்னா இவங்கெல்லாம் கால்ல விழுகிற ரகம் இல்லையே!”
“இருந்தாலும் எனக்கு ஆத்திரம் அடங்கலை மது,” என்றாள் ரம்யா.
அவளோ விரக்தியாகச் சிரித்தாள், “விடுங்க அண்ணி, போய் தூங்குங்க! எனக்கு உதவி பண்ணப் போய் நீங்க ரொம்ப நேரம் கண் முழிச்சிட்டீங்க! போங்க போய் தூங்குங்க.”
“ரம்யா, நீயும் மதுவும் உள்ள போய் தூங்குங்க! நான் வெளிய ஹால்ல படுத்துக்கிறேன்,” என்றான் கதிர்.
“எதுக்கு அண்ணா? அதான் யாருன்னு தெரிஞ்சு போச்சே! இனி யாரும் வர மாட்டாங்க, நீங்க போய் தூங்குங்க! நாளைக்கு நீங்க வேலைக்கு போகணும்ல.”
“அதெல்லாம் இல்லைம்மா! இன்னைக்கு நாங்க இங்கேயே தூங்குறோம், எங்களுக்கு ஒன்னுமில்லை நீங்க போய் படுங்க,” என்றதும் இருவரும் உள்ளே செல்ல எத்தனிக்க,
“மது!” என்று அழைத்தான் கதிர்.
“என்ன அண்ணா?”
“சொல்றேன் தப்பா எடுத்துக்காத! நீ இனி தனியா இருக்கிறது நல்லது இல்லை. இன்னைக்கு ஒருத்தன் வந்தான், சொல்ல முடியாது நாளைக்கு இன்னொருத்தன் கூட வருவான். எங்களால் முடியும் தான் உன்னைப்பாதுகாக்க, ஆனா உனக்குன்னு ஒரு துணை வேணும்மா. நீ சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்…” என்றதும் அவள் அமைதியாக இருந்தாள்.
“இல்லைன்னா இன்னொரு ஐடியா சொல்றேன்… வீடு வாடகைக்குன்னு போர்டு போடு! பிஜி போல பெண்கள் மட்டும்னு எழுதி வை, ஆன்லைன்ல ஆட் கொடு! வந்தா உனக்குத் தற்காலிக துணையாகவும் இருக்கும், உனக்கு ஒரு சம்பாத்தியமும் இருக்கும். என்ன சொல்ற?”
அவளோ யோசனையில் மூழ்கியவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து, “நீங்க இரண்டாவது சொன்னது நல்ல ஐடியா! நாளைக்கே போர்டு மாட்டுறேன். நீங்க முதலாவதா சொன்னதுக்கு என்கிட்ட பதில் இல்லை அண்ணா, காலம்தான் அதுக்கு முடிவு பண்ணும்,” என்று விரக்தியாகப் பேசிவிட்டு உள்ளே செல்ல, கதிரும் ரம்யாவும் தலை அசைத்துவிட்டு உறங்கச் சென்றனர்.
வழக்கமாகச் சீக்கிரமாக இல்லம் வருபவன், அதீத வலியிலும் குற்ற உணர்விலும் கடற்கரையில் நேரம் காலம் அறியாமல் அமர்ந்து அழுது கரைந்தான். தனது அலட்சியத்தால் ஓர் உயிரை இழந்துவிட்டதைக் குறித்துத் தனக்குள்ளே கூனிக் குறுகிப் போனான்.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இதற்கு மன்னிப்பே இல்லையே! காற்றோடு கரைந்து போன மரகதத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கதறினான். அவள் தன்னிடம் பேசத் துடித்ததைக் கேட்டதுமே உடைந்து போனான். பெற்ற மகளுக்கு ஈடாக அன்பு பொழிந்தார் அவர். தந்தைக்குப் பின் தன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் வைத்த ஜீவன்களில் அவரும் ஒருவர்! அதையும் இழந்து வாழ்கிறான். தனது ராசியை நினைத்து நொந்து போனான். தன் மீது அன்பு வைத்தவர்கள் எல்லாம் தன்னோடு நிலைத்திருப்பதே இல்லையே, அதற்குச் சான்று அவனது தந்தையும் மரகதமும்தான். மீதமுள்ள மதுராவிடமும் வெறுப்பை அல்லவா சம்பாதித்து வைத்திருக்கிறான்!
அவளிடம் என்ன விளக்கம் சொன்னாலும், அவளே மன்னித்தாலும் இந்த குற்ற உணர்வு வாழ்நாள் முழுக்க ஊசியைக் குத்தி நினைவூட்டிக்கொண்டே இருக்கும்…
வெகுநேரம் அங்கே அமர்ந்திருந்தவன் தாமதமாக இல்லம் வந்தான். உறங்காமல் அவனுக்காக இருவரும் காத்திருந்தனர். பாசத்தினாலோ அக்கறையினாலோ இல்லை, தனக்கு வேண்டிய காரியம் நடக்கவே இருவரும் விழித்துக்கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால் இந்நேரத்தில் இருவரும் சொர்க்கத்திற்கல்லவா சென்றிருப்பார்கள்!
“ஏன் இவ்வளவு லேட்? வேலை அதிகமா?” எனக் கேட்ட தாயிடம் பதில் சொல்லவில்லை. குற்ற உணர்வில் தவித்தவனுக்கு அவரது கேள்வி பெரிதாகத் தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
“சாப்பிட்டியா? அங்க சாப்பாடு இருக்கு, போட்டுச் சாப்பிடு,” என்றார்.
“எ…எ… எனக்கு ப… ப… பசிக்கலை, நா.. நா… நான் தூங்கப் போறேன்,” என்றான். இழுத்து உட்கார வைத்து வம்படியாக ஊட்டிவிட்டு அனுப்பும் தாய் அவரல்லவே! மகனை நினைத்துக் கவலை கொள்ளாமல் தயக்கமாக அவன் முன் நின்றார்.
“எ… எ… என்ன வே… வேணும்?”
“அது… வதனி காதலிக்கிற பையன் வீட்டுல அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அந்தப் பையனுக்குக் கல்யாண யோகம் கூடியிருக்காம். அந்தத் தம்பியும் காதலிக்கிற விஷயத்தை வீட்டுல சொல்லிச் சம்மதம் வாங்கிட்டானாம்… எப்போ பொண்ணு பார்க்க வரக் கேட்கிறாங்க? எப்ப வரச் சொல்லட்டும்?” எனக் கேட்டவரை ஆச்சரியமாகப் பார்த்தான் மதியூரன்.
“என்ன பார்க்கிற? வீட்டுக்கு மூத்த ஆம்பள நீதானே, தங்கச்சி கல்யாணத்துல முன்ன நின்னு பார்க்கணும்… எப்ப வரச் சொல்ல?”
“எ… என்ன பே பே பேசுறீங்க நீங்க! அ… அ… அவ இ… இ… இப்போதான் செ செகண்ட் இயர் போ போ போகப்போறா! அ அ அவளுக்குக் கல்யாணமா? ப… ப… படிச்சு மு… முடிச்சுட்டு இருபத்தொரு வயசுல க.. க… கல்யாணம் ப… பண்ணி வைக்கலாம், அ… அ… அவங்களை பொ.. பொ…பொறுமையாக இருக்கச் சொல்லுங்க.”
“எப்படிப் பொறுமையா இருப்பாங்க? அந்தப் பையனுக்கு வயசு போயிட்டே இருக்காதா? கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க வைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க! படிக்கட்டும் அப்படி! நல்ல வரனை ஏன் வேணாம்னு சொல்லணும்…”
“ஆ… ஆனா வ… வதனிக்கு ப… படிப்புதான் ரொ… ரொம்ப முக்கியம்… க… கல்யாணம், பு… புருஷன், கு… குழந்தைன்னு அ… அவ சந்தோஷத்தை, நி… நிம்மதியை, ஃப்ரீடத்தை எ… எ… எல்லாத்தையும் வி… விட்டுட்டுக் க… கல்யாணம் ப…பண்ணிக்கப் போ…போறா. பி… பின்னாடி அ அவ தான் கஷ்டப்படுவா! ப.. படிப்பு கை…கையில் இ… இருந்தால் அ… அவளால் எ… எல்லாத்தையும் ச.. சமாளிக்க முடியும். ப… படிப்பு முக்கியம்மா,” என்றான்.
“எனக்கு படிப்பை விட அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுதான் முக்கியம்!” என்று ஒரு போடு போட்டாள் வதனி. அதற்கு மேல் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை, அங்கிருந்து நகர்ந்தான்.
“ச…சரி, உ… உங்க இஷ்டம்… வ… வரச் சொல்லுங்க,” என்று உள்ளே சென்றுவிட்டான்.
ஒரு வாரம் சென்ற நிலையில், மதுராவின் முன் தனது உடைமைகளுடன் நின்றிருந்தான் மதியூரன். அவனை ஆச்சரியத்துடனும் கேள்வியுடனும் பார்த்தபடி, கைகளைக் கட்டிக்கொண்டு வாசலை மறைத்தபடி நின்றிருந்தாள் மதுரா!
“வீ…வீட்டு வாடகை, அ…அப்புறம் தண்ணீர், க…கரண்ட்னு மா… மாசம் மாசம் எ…எவ்வளவுன்னு சொன்னா அ… அதையும் சே சேர்த்துக்கொடுத்திடுவேன் மேடம்…”
“ஹலோ! கண்ணு தெரியுதுதானே? ‘ஒன்லி லேடீஸ்’னு போட்டு இருக்கேனே, வாசிக்கலையா மிஸ்டர்?” எனக் கேலியாக இதழை வளைத்தாள்.
“வா…வாசிச்சேன் மே மே… மேடம். ஆ…ஆனாலும் வீட்டை விட்டு, கு… குடும்பத்தை விட்டு வ…வந்த இ… இந்த அ… அநாதைக்கு அ…அடைக்கலம் கொடுப்பீங்கன்ற ந.. ந… நம்பிக்கையில்தான் கே… கே… கேட்கிறேன் மே மேடம். நா…நானே வா வாடகைக்குக் கு… குடி இருக்கேன் மேடம். நா… நான் ரொம்ப ந… நல்ல பை… பையன்தான் மேடம். உ… உ… உங்களுக்கு எ… என்னால எ… எந்தத் தொ தொந்தரவும் இ… இருக்காது. இ… இந்த அ… அநாதைக்கு இ.. இரக்கம் கா…காட்டுங்க மேடம்,” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் மதுரா!
error: Content is protected !!