Skip to content
Post Views: 880
கண்ணாடியில் தன் நிறத்தை வெறித்தபடி நின்றிருந்தாள் மதுரா!
வழக்கம் போலத்தான், அவளது நிறத்துக்கும் சேர்த்து கூடுதலாக இரண்டு பவுன் நகை கேட்ட மாப்பிள்ளை வீட்டினரை நினைத்து அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டது.
இன்றைய காலத்திலும் ‘நிறம் பொருட்டல்ல’ என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். நிறத்தைத்தான் இப்போதும் பெரிதாகப் பார்க்கிறார்கள்; இதில் பெண்களும் அடக்கம்! ஏதோ ஒரு சிலர் மட்டுமே கட்டாயத்தின் பேரிலும், மாப்பிள்ளையின் பின்புலத்தைக் கண்டும் நிறம் பார்க்காமல் மணக்கிறார்கள். இன்றளவும் நிறம் பார்த்துத் துணை தேடும் வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
Advertisement
இன்று பெண் பார்க்க வந்தவர்களும், ‘பெண்ணின் நிறம் ஒரு பொருட்டல்ல’ என்பது போலப் பேசிவிட்டு, முதலில் பேசின பவுனை விட இரண்டு பவுன் அதிகம் கேட்டனர். அருகே இருந்த தன் சித்தியை எரிச்சலோடு பார்த்தாள் மதுரா.
Advertisement
Advertisement
‘அது பெரிய விஷயம் இல்லை, செஞ்சிடலாம்’ என்பது போல வழிந்துகொண்டே ‘சரி’ என்று பேசினார் அவர்.
Advertisement
அவரது கடமை வரன் அமைத்துத் தருவது மட்டுமே! மற்ற திருமணச் செலவுகளை எல்லாம் மதுராவே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. ஒரு பைசா கூட அவரிடம் எதிர்பார்க்க முடியாது. மேற்கொண்டு அந்த இரண்டு பவுனுக்கும் அவள் தான் உழைக்க வேண்டும். இவளது நிலையை உணராமல், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் நகையைப் போட்டுவிடுவதாகத் தலையசைத்தவரை உள்ளுக்குள் அர்ச்சித்தாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணோட அம்மாவை என்ன பண்ணப் போறீங்க?” என மாப்பிள்ளையின் பெரியம்மா கேட்க, சித்தியின் முகம் மாறியது. அவர் பதற்றத்தோடு மதுராவைப் பார்த்து ‘பேசாதே’ என்ற ரீதியில் ஜாடை காட்ட, அவளோ நக்கலாகப் பார்த்தவள், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று வாயைத் திறந்தாள்.
“பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும், நான் இப்படிப் பேசுறதைத் தப்பா நினைக்கக் கூடாது. நீங்க சொன்னது போலவே நகை, ரொக்கம், கல்யாணச் செலவுல பாதினு எல்லாவற்றையும் நானே செய்யத் தயார். ஆனா என் பக்கமும் ஒரு கண்டிஷன் இருக்கு. உங்களுக்குச் சரின்னா மேற்கொண்டு பேசலாம்…” என்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவளை, மனதிற்குள் வறுத்தெடுத்தார் லட்சுமி!
மாப்பிள்ளை வீட்டார் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “என்ன கண்டிஷன் மா?”
“எங்க அம்மா சாகுற வரைக்கும் என்னோடதான் இருப்பாங்க. அதுவும் இந்த வீட்லதான் இருப்பாங்க! அதனால கல்யாணமானதும் நானும் உங்க பிள்ளையும் இந்த வீட்லதான் வாழ்வோம். உங்களுக்கு இந்த கண்டிஷன் ஓகேன்னா சொல்லுங்க, மேற்கொண்டு பேசலாம்,” என அசட்டையாக அறையின் வாசலில் சாய்ந்தபடி சொன்னாள்.
மாப்பிள்ளையின் முகம் வெளிறிப் போனது. தரகர் மதுராவைப் பற்றிச் சொல்லும்போதே மாப்பிள்ளை வீட்டினர் கணக்குப் போட்டுவிட்டனர்.
பெண்ணும் , வீடும் அவர்களுக்குத்தான் என்று. மாப்பிள்ளை ஏதோ தியாகம் செய்வது போலவும், அதற்கு ஈடாக வீடும் அவளது சம்பாத்தியமும் தங்களுக்கு வந்துவிடும் என்றும் கற்பனை செய்திருந்தனர்.
நோயாளி தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இவள் மட்டும் வரட்டும் என்று அவர்கள் பேசி முடிவெடுத்திருப்பார்கள் போல! ஆனால், மதுராவின் நிபந்தனையைக் கேட்டதும் அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“நீ வாழ வேண்டிய பொண்ணு மா! உங்க அம்மாவையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி குடும்பம் நடத்த முடியும்?” எனப் பெரியவர் ஒருவர் கேட்டார்.
“உங்களுக்கு இந்த நிலைமை வந்து, உங்க பையன் இதே போல உங்ககிட்ட கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?” என்றதும் அவரது வாய் கப்சிப் என்று மூடிக்கொண்டது.
“எங்க அம்மா என் கூடத்தான் இருப்பாங்க… நான் அவங்களைப் பக்கத்துல இருந்து பார்த்துப்பேன். உங்களுக்கு இதுல சம்மதம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்… இல்லைன்னா…” என அதற்கு மேல் பேசாமல் அமைதியாக அவர்கள் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
அவர்களுக்கு இந்த வரனை விட மனமில்லை. வீட்டைப் பார்த்ததுமே பெண்ணின் நிறம் அங்கே பொருட்டில்லாமல் போனது. வயது ஏறிக்கொண்டே போகும் மகனுக்கு வரன் எதுவும் அமையாத நிலையில், ஏதோ கடவுளாகப் பார்த்து அனுப்பிய அதிர்ஷ்ட வரனாக மதுரா தெரிந்தாள்.
கருப்பு நிறம் மட்டுமே அவளிடம் குறையாம்! மற்றபடி, இவ்வளவு பெரிய வீட்டின் சொந்தக்காரி தன் மகனுக்கு மனைவியாக வந்தால் எந்தத் தாய் தான் விடுவார்? அதுவும் போக, அந்த வீட்டைப் பங்கு போட உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. நோயாளி தாயார் மட்டுமே. அவரை ஏதேனும் இல்லத்தில் சேர்த்துவிடலாம், அந்த வீட்டின் வசதிகளைத் தன் குடும்பம் அனுபவிக்கலாம் என்ற பேராசையுடன் தான் வந்திருந்தனர்.
எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த வேளையில், மதுரா போட்ட நிபந்தனையால் அவர்களது திட்டம் ஆட்டம் கண்டது.
இந்த வரனை இழக்கவும் மனமில்லை, அதே சமயம் மகனை இந்த வீட்டிற்கு அனுப்பவும் விருப்பமில்லை. என்ன சொல்லி இவளின் எண்ணத்தை மாற்றுவது என்ற யோசனையில் இருந்தார் மாப்பிள்ளையின் தாயார்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா, சின்னஞ்சிறுசுங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துல அம்மாவைக் கவனிச்சுட்டு இருந்தா நல்லா இருக்காதே மா! அம்மாவை நல்ல ஹோம்ல சேர்த்துப் பார்த்துக்கச் சொல்லலாம்… எங்களுக்குத் தெரிஞ்ச ஹோம் நிறைய இருக்கு,” எனத் தேன் தடவியபடி பேசினார் அவர்.
யோசனை செய்வது போலப் பாவனை செய்தவள், “ம்ம்… சரிங்க, நீங்க சொல்றபடியே எங்க அம்மாவை ஹோம்ல சேர்த்துறேன்…” என்றாள். மாப்பிள்ளை தாயாரின் முகம் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் பிரகாசித்தது.
“அதே போல உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல ஹோம்ல நீங்களும் உங்க புருஷனும் போய் சேர்ந்திடுங்க; ஏன்னா நாங்க சின்னஞ்சிறுசுங்க, எங்களுக்கு இடைஞ்சலா நீங்க எதுக்கு?” எனத் திமிராகக் கேட்டாள்.
உடனே அவரின் முகம் மாறியது.
“நாங்க எதுக்கு மா ஹோம் போகணும்? என்ன மா நியாயம் இது? நீ உன் புருஷனோட வாழ எங்களை வீட்டை விட்டுத் துரத்தச் சொல்றியா?”
“அதேதான் நானும் கேட்கிறேன். நாங்க புதுசா கல்யாணமானவங்க அப்படி இப்படி இருப்போம்ன்றதுக்காக என் அம்மாவை ஹோம்ல சேர்க்க முடியுமா?”
“உங்க அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லையே மா. அதான் ஹோம்ல சேர்த்துப் பார்த்துக்கலாம்னு சொன்னேன்.”
“சரி, நீங்க சொல்றபடி பார்த்தாலும், இப்போ நீங்க திடகாத்திரமாத்தான் இருக்கீங்க. எப்பவும் இப்படியே இருப்பீங்களா? உங்களுக்கு நோய் நொடி வராதா? அப்போ உங்க பிள்ளை உங்களைப் பார்த்துக்கணும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கும் தானே? அப்பவும் நீ வாழ வேண்டிய பிள்ளைப்பா, உன் பொண்டாட்டியோட வாழு, நானும் அப்பாவும் ஹோம்க்குப் போறோம்னு சொல்லுவீங்களா?” எனக் கேட்டதுமே அவரிடம் பதில் இல்லாமல் போனது.
“உயிர் இருக்கிற வரைக்கும் என் அம்மாவை நான் என் பக்கத்துல வச்சுப் பார்த்துப்பேன். இதுக்குச் சம்மதம்னா பேசலாம். இல்லைன்னா…” என்று வாசலைக் காட்ட, அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்பிவிட்டனர்.
அவளும் சலிப்புடன் தலையசைத்துவிட்டு, தேநீர் குடித்த குவளைகளை எடுத்தபடி சமையலறைக்குள் நுழைய, அவளைத் தடுத்தார் லட்சுமி.
“நில்லுடி! எத்தனை நாளைக்குத்தான் வர்ற மாப்பிள்ளையை எல்லாம் தட்டிக்கழிச்சுட்டே இருக்கப் போற?”
“என் கண்டிஷனுக்கு ஒத்துப்போற மாப்பிள்ளை கிடைக்கிற வரைக்கும்!”
“ம்ம்… உன்னையும் உன் அம்மாவையும் பார்த்துக்க ஒருத்தன் வருவான்… நீயும் கனவு கண்டு வயசைத் தொலைச்சுட்டு நில்லு!”
“நான் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா என் அம்மாவை யாரு சித்தி பார்த்துப்பாங்க? நீங்க உங்க வீட்ல வச்சுப் பார்த்துக்கிறீங்களா?” எனக் கேட்டதும் அவர் திணறிப்போனார்.
“முடியாதுல்ல! நீங்க ஏன் சித்தி இதெல்லாம் பண்றீங்க? எதுக்கு பண்றீங்க? நான் தான் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேணாம்னு சொல்லிட்டேனே! அதையும் மீறி உங்க கடமையை முடிக்க எவனுக்காவது தள்ளி விடணும்னு நினைக்கிறீங்களே! ஏன் சித்தி? எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா, ப்ளீஸ் என் கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க,” என்று கையெடுத்துக் கும்பிட, முகத்தை வெட்டிக்கொண்டு வெளியேறிவிட்டார் அவர்.
அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தைச் சூடான மூச்சாக வெளியேற்றினாள் மதுரா.
கதவைத் தாளிட்டு, அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தவள், தாய்க்கு மாத்திரை கொடுக்க அடுத்த அறைக்குள் நுழைந்தாள். அவர்கள் பேசுவதையெல்லாம் கண்ணீர் விட்டபடி கேட்டுக் கொண்டிருந்தார் மரகதம். மகள் உள்ளே நுழைந்ததும் துடைத்துக்கொண்டார்.
தாயின் முகம் பாராமல் மாத்திரை எடுத்து அவரிடம் கொடுக்க, நீரோடு சேர்த்து மாத்திரையை விழுங்கினார் அவர்.
“நல்ல வரன் போல இருந்ததே மா! ஏன் மறுத்த?”
அவளுக்கு அவரது பேச்சும் ஆயாசமாக இருந்தது. “நீயுமா? எது நல்ல வரன்? உன்னை ஹோம்ல சேர்க்கச் சொல்றதா? நிறத்தைப் பார்த்து, நகையில இரண்டு பவுன் கூட கேட்கிறதா? தனியா நிக்கிற பொண்ணுகிட்ட இவ்வளவு வரதட்சணை கேட்கிறதா? போம்மா!” என்றாள் விரக்தியோடு. அவரோ மெல்லப் புன்னகைத்தார்.
“என்னைத் பார்த்துக்கிட்டே காலத்தைக் கழிக்கப் போறியா?”
“அப்படியே இருந்திடுறேன் மா! ஆனா உன்னைப் பார்த்துக்கக் கூடாதுன்னு சொல்ற வரன் எனக்கு வேணாம்,” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.
“நோயால முடங்கி உன்னையும் ஒத்தக்கட்டையா இருக்க வச்சுடுவேன் போல இருக்கு! ஒரு சாவு கூட வரமாட்டேங்குதே எனக்கு?” எனப் புலம்பினார் அவர்.
“எனக்காக வாழணும்ன்ற எண்ணம் இல்லையா உனக்கு?”
“நான் வாழ்றதால உனக்கு ஒரு பயனும் இல்லையே மா! உன்னைக் கருப்பா பெத்து வாழ்நாள் சாபத்தைக் கொடுத்தது இல்லாம, உனக்கு ஒரு நல்லது நடக்க விடாம நோய் நொடியுமா கிடக்கேன்! என்னால உனக்கு என்ன நல்லது நடந்திடப் போகுது? நான் இல்லாம இருந்தா கூட உனக்குக் கல்யாணம் காட்சி ஒன்னு நடக்கும்.. நான் இருந்தும் அதுக்குத் தடையா இருக்கேன்,” என்று பெருமூச்சுடன் சொன்னவருக்குக் கண்களில் உயிர்ப்பு இல்லை.
“அப்படிலாம் சொல்லாதே! உன்னை எப்பவும் நான் தடையா நினைச்சது இல்லை. உன்னை வச்சுதான் நல்ல மனுஷங்க யாரு, சுயநலவாதிகள் யாருன்னு கண்டறியிறேன். உன் தங்கச்சி முதற்கொண்டு இப்போ வந்தவங்க வரைக்கும் சுயநலவாதிகள். என்னால என்ன ஆதாயம் கிடைக்கும்னு பார்க்கிற கூட்டங்கள்… உன்னைச் சேர்ந்து அரவணைக்கிற குடும்பம் வந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன். அப்படிப்பட்ட மனுஷங்களையும் நான் பார்ப்பேன்! எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே போல நான் கருப்பா பொறந்தது சாபம் இல்ல, வரம்… இந்த நிறம் என்னை எல்லா விதத்திலும் காப்பாத்துது. முக்கியமா காதல்ன்ற தொந்தரவு, ஆண்களோட தேவையற்ற பார்வையிலிருந்து என்னை விலக்கி வைக்குது. சொல்லப்போனா இதைப் பாதுகாப்பா உணர்றேன் நான்,” என்று புன்னகையோடு சொல்ல,
“கல்லூரி செல்லும் நாட்களில், கருப்பாகப் பெற்றெடுத்ததற்காகத் திட்டிய மகள் தான் இன்று இவ்வாறு பேசுகிறாளா? ” என வியப்பாகப் பார்த்தார் மரகதம்.
“காலம் எல்லாத்தையும் மாத்திடும் போல மா” என்றவள்,
“எனக்கு வேலை இருக்கு மா, நீ ரெஸ்ட் எடு,” என்று சொல்லிவிட்டு இன்னொரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் அதிக நேரம் செலவிடும் அறை அது. அவளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் அறை… அவளது ஸ்டுடியோ!
குயில் போலவே கருமை நிறம் கொண்டவளுக்கு, நல்ல குரல் வளத்தைக் கொடுத்திருந்தார் கடவுள்.
ஒலிப்புத்தகத்தில், அவள் வாசிக்கும் சிறு கதைகளும் குறுநாவல்களும் நம்மை அக்கதைக்குள்ளே இழுத்துச் சென்றுவிடும்.
கதை படிக்காதவர்களைக் கூட விரும்பித் கேட்க வைக்கும் குரல். சிறு அளவில் எழுத்தாளர்களுக்கு ஒலிப்புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தவள், இன்று சின்னத்திரை நடிகைகளுக்கு டப்பிங் செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறாள்.
பல விளம்பரங்களிலும் அவளது குரலைக் கேட்கலாம். அவளது தாயும் அந்த அறையும் மட்டுமே அவளது உலகமாக இன்று வரை இருக்கிறது.
பன்னிரண்டாம் படிக்கும் போது தந்தையை இழந்தவளுக்குத் தாய் தான் எல்லாம். கல்லூரி முடித்தவளுக்கு மேற்கொண்டு படிக்க வசதி இல்லை. அந்த ஒற்றை வீடு மட்டுமே அவர்களுக்குச் சொந்தம். தாய் வீட்டு வேலை செய்துதான் அவளைப் படிக்க வைத்தார்.
மேற்கொண்டு படிக்கச் சொன்னபோது மறுத்துவிட்ட மதுரா, துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். அவளுக்குப் புத்தகங்கள் வாசிப்பதில் அதீத ஆர்வம் உண்டு.
முகநூலில் வாசகர் குழு ஒன்றில், எழுத்து வடிவிலுள்ள கதைகளை ஒலிப்புத்தகமாக மாற்ற நல்ல தமிழ் உச்சரிப்பு கொண்டவர்கள் தேவை என்ற பதிவைப் பார்த்து, தன் குரலை அனுப்பி வைத்தாள். அவளது தமிழ் உச்சரிப்பும் குரலும் பிடித்துப் போகவே வாய்ப்பு கிடைத்தது. இன்று சின்னத்திரை வரை பயணம் செய்து கொண்டிருக்கிறாள்.
சம்பாதிக்க ஆரம்பித்ததும் தாயை வேலையிலிருந்து நிறுத்திவிட்டாள். ஓய்வு எடுக்கத் தொடங்கியபோதுதான் மரகதத்தின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. சோதனையில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. முதுகுத் தண்டுவடத்திலிருந்து நுரையீரல் வரை அது பாதித்திருந்தது.
தற்போது ‘கீமோ’ சிகிச்சை மூலமாகத் தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் மரகதம். முடி கொட்டி, உடல் தளர்ந்து மெத்தையில் சிறு பிள்ளை போலக் கிடக்கிறார். அவரை எப்படியாவது குணப்படுத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர மதுரா நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறாள். வெற்றியடைவாளா? அவளுக்கு ஏற்ற வரன் அமையுமா? விடை காலத்தின் கையில்.
error: Content is protected !!