தமிழ்ச்செல்வன் ஒரு பக்கம் படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ் வாங்கச் சேலம் பயணித்திருக்க, சரத்சந்திரன் விநியோகஸ்தர் ஒருவரைப் பிடித்துப் பழைய உதவிகளை நினைவூட்டிப் பெரும்பாடு பட்டுச் சம்மதிக்க வைத்தார்.
படத்திற்கான வேலை பரபரப்பாக அனைத்துத் திசைகளிலும் நடந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் படக்குழுவினர் விளம்பரம் செய்ய, மற்றொரு பக்கம் படத்தின் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்த்ததை விடப் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றது. விநியோகஸ்தர் கிடைக்க அந்த ட்ரைலர் கூட ஒரு அழுத்தமான காரணமாக அமைந்தது. படக்குழுவினர் அனைவரும் கொண்டாட்டத்தோடு சுற்றி வர, படம் வரச் சரியாக ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலை.
நிமலனை எல்லாம் கையிலே பிடிக்க முடியவில்லை; காற்றில்தான் பறந்தான்.
“இந்தத் படத்துல நானும் ஒரு எடி-ன்னு சொன்னதுக்கே செல்ஃபி எடுக்குறானுங்க, இன்னும் படம் வந்தா நம்ம நிலைமை யோசிச்சியா மச்சான்?” சுசிகரனிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
Advertisement
“உன் தொல்லை தாங்க முடியலடா,” அவனை ஒரு எத்து விட்டு, “ஒன்னு சொல்லவா? எனக்கு ஒரு டைரக்ஷன் சான்ஸ் வர வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்,” சசிகரன் கூற, மொத்தக் கூட்டமும் அவனைச் சூழ்ந்து கதை கேட்கத் துவங்கியது.
இப்படி அங்கு ஒரே சிரிப்பலைதான்; மகிழ்ச்சிக்குப்பஞ்சமில்லாமல் இருந்தது. முன்பே தமிழுக்கு விஷயம் தெரிந்திருக்க, உண்மையாக மகிழ்ந்து அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு, இப்பொழுது ஒரு ஓரமாக அமர்ந்து எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த தமிழைத் தூரத்திலிருந்து கவனித்தான் நிமலன்.
“நமக்கே இப்படின்னா தலைக்கு சொல்லவும் வேணுமா? ஏற்கனவே பெரிய படம் ஒன்னு இருக்கு. சொல்ல முடியாது அடுத்த அஞ்சு பத்து வருஷம், கல்யாணம் பண்ணியும் புள்ள கூடப் பெத்துக்க முடியாத அளவு படம் புக் ஆகப்போகுது.”
Advertisement
கையிலிருந்த பேனாவைத் தூக்கிக் காட்டி எச்சரிக்கை செய்ய, “பாத்தியா தலைக்கு, கல்யாணம் பண்றதுக்கே அவருக்கு இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்ங்கிறதை மறந்து புள்ள குட்டி வரப்போயி என் மேல வேற கோவப்படுறார்” இப்படி அவர்கள் அலும்பல் வளர்ந்துகொண்டே போக, மகிழ்ச்சிக்கு அங்குப் பஞ்சமும் இருக்குமா என்ன?
Advertisement
மீண்டும் கதையில் மூழ்கிய தமிழின் சிந்தனையெல்லாம் ஒரு சந்தேகம் நிரம்பி இருந்தது. ‘அவ்வளவுதானா சக்தியின் வீட்டினரின் பிடிவாதம்?’ இருக்காதே, எந்தவொரு நிம்மதியையும் அவனால் முழுதாய் அனுபவிக்க இயலவில்லை.
சக்தியின் வீட்டினர் பங்கு இன்னும் ஏதோ தன்னிடம் பாக்கி இருப்பது போன்ற எண்ணம் அவனுக்கு. அவன் எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அடுத்த நாளே ஒரு பெரிய இடியை அவன் தலையில் இறக்கினர்.
தமிழ்ச்செல்வன் புத்திசாலித்தனமாகத் தன்னுடைய நெகட்டிவ் ரைட்ஸைப் போராடிப் பெற்றுவிட, வேலுவுக்கு அதனை அத்தனை எளிதாய் விட்டுக்கொடுக்க முடியவில்லை. அவன் கையில் ரைட்ஸைக் கொடுத்துவிட்டு, அந்தப் படத்தின் ஆன்மாவையே சிதைக்கத் திட்டம் ஒன்றைத்திறம்படத் தீட்டினார். இதை அறியாமல் உறக்கத்தில் நிம்மதியாக இருந்த தமிழை உலுக்கி எழுப்பிய பேரழகன், “தமிழு, நம்ம படத்தோட கிளைமாக்ஸை யாரோ YouTube-ல போட்டுட்டாங்கடா!” என்றார் அழுகை பொங்க.
Advertisement
திடுக்கிட்டு விழி விரித்த தமிழ் அதிர்ச்சியில் படுத்தபடியே விழிக்க, அவர் முகத்தின் கலக்கம்தான் கேட்டது உண்மைதான் என உரக்கக் கூறியது. விட்டத்தைப் பார்த்தபடியே சில நொடிகள் படுத்திருந்தவனுக்கு, அந்த வெண்மை நிற விட்டம் போல் எதிர்காலமும் வண்ணமிழந்து காட்சியளித்தது.
சற்று நேரத்தில் அடுத்த பதிவாக ஒரு உணர்ச்சிகரமான பாடலும் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவியது. எங்கும் இது பற்றிய பேச்சுகள்தான். தமிழ்ச்செல்வனுக்கு மாறி மாறி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது. எதையும் பார்க்கும் நிலையில் கூட அவன் இல்லை. சிந்தனையில் மொத்தமும் மூழ்கிப்போனான். என்ன யோசித்தும் விடையோ வேறு வழியோ கண்டபாடில்லை.
சினிமாவில் சஸ்பென்ஸ்தான் எல்லாமே; அதிலும் ஒரு படத்தின் முடிவே தெரிந்துவிட்டால்? யார் திரையரங்கில் வந்து பார்ப்பார்கள்? எவருக்குத்தான் பிறகு படம் பார்க்க விருப்பமிருக்கும்? இதை வைத்து எப்படி வாழ்வில் பிறகு ஜெயிப்பது? எப்படி முன்னேற்றம் காண்பது? தன்னை நம்பி வந்த பல நூறு குடும்பங்களையும் தன்னுடைய சொந்த வாழ்க்கை காவு வாங்கியதா?
இத்தனையும் தான் யோசித்திருக்க, வேலு வயதில், அனுபவத்தில் மூத்தவர்; அவர் யோசித்திருக்க மாட்டாரா? இல்லை, தெரிந்தேதான் செய்திருக்கிறார். அதனால்தானே தமிழ்ச்செல்வனிடம் படத்தைக் கொடுக்கும் முன்பே அவர் படத்தை ஒரு காப்பி எடுத்து வைத்து, அதை ஒரு அனானிமஸ் அக்கவுண்ட் மூலம் சூட்சுமமாகக் கசியவிட்டுள்ளார்.
தமிழுக்குக் கோபம் எல்லையைக் கடந்தது; பொறுத்துக்கொண்டான். அதே போல் எப்பொழுதடா காரணம் கிடைக்குமெனக் காத்திருந்தவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொண்டனர். விநியோகஸ்தர்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். படத்தின் கருவே சிதைந்து போன நிலையில், ‘இனி யார் பார்க்க வருவார், ஆள் இல்லாத இடத்தில் நான் படத்தை ஓட்டுவதா?’ என மொத்தமாகப் பின்வாங்கினர்.
“டேய் படமே செத்துருச்சுடா,” அவனைத் துச்சமாய் அவர் நடத்தியது கூட அத்தனை வேதனை தரவில்லை அவனுக்கு; அவன் படத்தில் உயிர் இல்லை எனக் கூறியது அப்படி நெஞ்சைத் தாக்கியது.
அவர் சட்டையைப் பிடித்து, ‘அதைச் சொல்ல நீ யார்?’ எனக் கேட்க அதிக நேரம் ஆகிவிடாது அவனுக்கு. அடக்கிக்கொண்டான், அவன் நிலை அப்படித் தாழ்வாக உள்ளதே.
இவன் நிலை கண்டு பலர் ஆறுதல் கூறினர், பலர் அனுதாபப்பட்டனர்; பலர் மகிழ்ந்தனர். தனக்குப் பின்னால் கொக்கரித்துச் சிரிப்பது அவனுக்குத் தெரியாதா என்ன? “பாத்துக்கலாம்டா,” ஆறுதல் கொடுத்த சரத்சந்திரன் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்து வந்தார், எல்லாம் வீண் எனத் தெரிந்தும்.
தமிழ்ச்செல்வனோ ஒரு மூலையில் முடங்கிப்போனான். அவனுடைய உழைப்பு கண் முன்னே கருகிப்போனது போல் வலி அவனுள். கைகள் நடுக்கம் காட்டத் துவங்கியது. கற்பனைக் கோட்டையில் இவன் படத்தைப் பார்த்துத் திரையரங்கத்தில் கத்திக் கூப்பாடு போட்ட கூட்டம் மறைந்து, மயான அமைதியோடு வெறும் இருளாகத் தென்பட்டது. அவ்வளவுதானா என்னும் விரக்தி அவனுள், ‘கதை எழுதுறப்போ எல்லாம் ஜெயிக்கிற மாதிரிதானே கற்பனை பண்ணேன், ஆனா நிஜம் இவ்ளோ கொடூரமா இருக்குமா? ஒருத்தரோட உழைப்பைத் திருடுறது இவ்வளவு ஈஸியா?’
தனக்குள் பேசியவன் முதல் முதலாய் தோல்வியை ஒப்புக்கொண்டு சேலம் நோக்கிப் பயணித்தான். அவனை அடித்த வேலுவின் மேல் கோவத்தைக் காட்ட அல்ல; அதைக் காட்டக் கூட அவனிடம் கோபம் இல்லை, வலி மட்டுமே உடல் முழுவதும் இருந்தது. இப்பொழுது அவனுக்கு ஆறுதல் தேவைப்பட்டது, அதைத் தேடியே செல்கிறான்.
அவன் தேடிய ஆறுதலான அவளோ நெஞ்செல்லாம் படபடப்பாக இருந்தாள். அவள் பயமெல்லாம் தமிழின் நிலை எண்ணி மட்டுமே. இணையத்தின் தொடர்பு இல்லாமல் அவன் படும் வேதனையைச் சற்று முன்புதான் அன்பரசி மூலம் அறிந்திருந்தாள். “நீங்க கூட என்கிட்ட சொல்லல அண்ணி, என் வீட்டு ஆளுங்க பண்ண தப்புக்கு நான் ஒரு ஆறுதல் கூட சொல்லாம இருந்துருக்கேன். என்ன மனுஷி அண்ணி நான்?” மனம் தாளவில்லை அவளுக்கு.
ஆண்கள் அனைவரும் வரக் காத்திருந்தவள், அவர்கள் அனைவரும் உணவுண்ணச் சிரிப்போடு அமர்ந்த நிமிடம் அதற்குமேல் தாமதிக்கவில்லை. படிகளில் இறங்கி வரும் வரை கூட அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “நிஜமா உங்களுக்கெல்லாம் ஒரு நிமிஷம் கூட மனசு உறுத்தலையா?” உடைந்த குரலில் அவள் கேட்ட தோரணையில் அவர்கள் நடை அப்படியே நின்றது.
அவள் கண்ணீரும், சிவந்த கண்களும் விஷயத்தை அறிந்துகொண்டாள் என்பதை உணர்த்த, “எங்களுக்கு ஏன்ம்மா உறுத்தணும்? நாங்க எங்களை நம்பி இருக்க நம்ம வீட்டு ஆளுங்களை ஏமாத்தலையே,” குத்தலாக வீரா கேட்டான்.
வலித்ததுதான், சகோதரன் கூறும் உண்மை ஆழமாகச் சுட்டதுதான்; அதற்காகப் பேசாமலும் இருக்க முடியவில்லை. அவள் இவர்களுக்குத் துரோகம் செய்திருக்கலாம், அவன் எதற்கு இதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்?
“உங்க யாருக்கும் நீங்க பண்ணது தப்புன்னு குத்தவே இல்லையா? அதை மறைக்க மாத்தி மாத்தி அடுத்தவன் மேலதான் கை வைப்பீங்களா?”
“அடி கழுத்தை, என்ன வாய் கூடப் போச்சா? யாரைப் பாத்து என்ன பேசுறோம்னு கூடத் தெளிவில்லாம இருக்கியா? உழைச்சுக் களைச்சு வந்தவங்க சாப்பாடு தொண்டையில நிம்மதியா இரண்டு வாய் இறங்கக் கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கியா?” அவள் அன்னை மரகதவல்லி கடுமையாக மகளைக் குற்றம் சாட்டினார்.
சக்தி இதழில் கசந்த புன்னகை, “நல்லா சம்பாதிச்சாச்சு, தேவைக்கு அதிகமா சொத்து சேர்த்து வச்சாச்சு, இந்த ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியலைன்னா அடுத்த வேளை நமக்கு விருந்து சாப்பாடுதான். ஆனா செல்வாக்கு?” அன்னையைப் பார்த்துக் கேள்வி கேட்டவள், அமைதியாக இருக்கும் பெரியம்மா மற்றும் பாட்டியைப் பார்த்து, “அவனை விடுங்க, இந்தப் படத்தை நம்பி எத்தனை குடும்பம் இருக்கும்? அவங்க எல்லாரோட சாப்பாட்டுலயும் மண்ணை அள்ளிப்போட்டுட்டு நம்ம நிம்மதியா சாப்பிட்டாலும் செரிக்குமா பெரியம்மா?”
கண்களில் பெண்ணுக்கு நிற்காமல் நீர் வழிந்தது. கண் முன்னே அத்தனை பேரின் உழைப்பைப் பார்த்தவளுக்கு, அவர்கள் உழைப்பு வீணானது தன்னுடைய வலியாகத் தெரிந்தது. “இவ்ளோ வஞ்சம் எதுக்கு பாட்டி, நான் உங்க பேச்சைக் கேட்காததுனாலயா? தண்டனை அப்போ எனக்குக் கொடுத்திருக்கலாமே! அவனுக்கும் அவனை நம்பி இருந்தவங்களுக்கும் எதுக்கு இவ்ளோ பெரிய அடி?” கண்ணீர் மல்கக் கேட்க, அவன் தந்தை கோவமாக, “அவன் உன்னை எப்படி மயக்கி வச்சிருக்கான் பாரு!” முகத்தை அசூசையாக வைத்துக்கர்ஜித்தார்.
“போதும் நிறுத்துங்கப்பா! அவனோட காதலுக்காக அதைப்புரிஞ்சுட்டு நானாத்தான் இந்தத் கல்யாணத்தை நிறுத்தினேன். என்னை மயக்க அவன் ஒன்னும் மந்திரமோ சூனியமோ பண்ணல; அதுக்கு மயங்க நானும் குழந்தை இல்லை. தப்பு யார் செஞ்சாலும் அது தப்புதான்.”
வேலு குறுக்கிட்டு, “அப்போ நாங்கதான் எங்க பொண்ணைச் சரியா சொல்லி வளர்க்கல, அப்படித்தானே?” பேத்தியிடம் கேட்டார். சக்தி அசரவில்லை; அவர் அவளைப் பலவீனமாக்க முயற்சிக்கிறார் எனப் புரிந்தது. “கண்டிப்பா இல்லையே, என் வீட்டு ஆளுங்க என்னை ரொம்பவே நல்லாத்தான் வளர்த்திருக்காங்க. அதுனாலதான் என்னோட விருப்பத்தைக் கூடச் சம்பந்தப்பட்டவன்கிட்ட சொல்லாம என் வீட்டு ஆளுங்ககிட்டயே சொன்னேன், அவங்கள் என் மனசைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பி.” சகோதரன் வீராந்தகனைப் பார்த்தாள்.
குற்றம் சாட்டும் அவள் பார்வையைத் தாங்க முடியாமல் தடுமாறினான் வீரா. “இந்தப்போதனை எல்லாம் ஊருக்கு மட்டும்தான்; நம்ம விருப்பத்துக்கு, கௌரவத்துக்கு மாறா ஒரு விஷயம் நடந்தா அதை என்ன வேணாலும் பண்ணி நமக்குச் சாதகமா சூழ்நிலையை மாத்திக்கலாம்னு ஒரு புதுப் பாடத்தை என் குடும்பம் சொல்லிருக்காங்க.”
வேலு முன்பு வந்து நின்றவள், “என் அப்பாவை விட உங்க மேல மதிப்பு மரியாதை அதிகமா வச்சிருந்தேன், அதை எல்லாம் ஒரே நாள்ல சுக்குநூறாக்கிட்டீங்கல்ல. நான் உங்க மேல வச்சிருந்த நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணிட்டீங்க தாத்தா! இந்த மாதிரி ஒரு விஷயத்தை உங்ககிட்ட இருந்து நான் கொஞ்சமும் எதிர்பாக்கல.” குடும்பத்திடமிருந்து வந்த ஏமாற்றத்தின் விளைவாக வலியானது கண்ணீராய் வெளிப்பட்டது.
“அவனைப் பத்தி உனக்குத் தெரியாது சக்தி, அவன்…” வேலு மீண்டும் தமிழைப் பற்றியே அவதூறு கூற வர, அவரை வேகமாக நிறுத்தினாள். தலையை பலமாக அசைத்து, “நிச்சயம் எனக்கு அவனைப் பற்றி உங்களை விடப் பல மடங்கு அதிகமா நல்லாவே தெரியும். உங்க யாருக்கும் தான் அவனைப் பத்தி எதுவுமே தெரியல, அவன் குணமும் தெரியல.”
“உங்களால எவ்வளவுதான் அடி பட்டிருந்தாலும் அதை என்கிட்ட கூடக் காட்டாம சிரிச்ச முகத்தோட வந்து நிப்பான், வலியை வெளியவே காட்டிக்காத்த ஒரு வைராக்கியக்காரன். உங்ககிட்ட கூட அந்தக்கோபத்தைக் காட்டாத ஒரு நல்லவன் அவன். அவனோட வளர்ச்சியை அழிச்ச நீங்க இன்னும் எத்தனை நாள் இதுக்குச் சந்தோஷப்படப் போறீங்க? அவன் கண்டிப்பா ஜெயிப்பான். ஆனா ஒரு சின்னப் பையனோட குணத்துக்கு முன்னாடி நீங்க எல்லாரும்தான் தோத்துட்டீங்க,” அங்கிருந்த அனைவரையும் பார்த்துக் கூறினாள்.
“என்ன பண்ணீங்க வீரா?” சம்பூரணம் பேரனைப் பார்த்துக் கேட்க, அவன் பார்வை தாத்தாவை நோக்கித் திரும்பியது. அவருக்குப் புரிந்துபோனது இது அனைத்தும் கணவன் செயல்; அவர் வழிகாட்டுதலில் தான் அத்தனையும் நிகழ்ந்துள்ளதென. “வீரா,” சம்பூரணம் மீண்டும் குரல் கொடுக்க, “டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வச்சுப் படத்தை பிளாக் பண்ணோம், அது முடியலன்னு அவன் படத்தை நாங்க வாங்குனோம்,” அதற்கு மேல் கூறாமல் நிறுத்தினான் வீரா.
அவனின் தயக்கத்தை உணர்ந்தவர் பேரனை அழுத்தமாகப் பார்க்க, “அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் சீன லீக் பண்ணிட்டோம்.”
அந்த வயதான பெண்மணிக்குப்புரியவில்லை; பேத்தியிடம் விளக்கம் கேட்டவர், அதனால் வரும் பாதிப்பைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, இவர்கள் செயலின் வீரியத்தை நம்ப முடியவில்லை. “அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னது நம்ம வீட்டுப் பொண்ணு, ஆனா தண்டனை மட்டும் அங்கயா? என்னங்க இது? இதுதான் உங்களோட உண்மையான குணமா? இதையா என்னோட பெற்ற புள்ளைங்ககிட்ட சொல்லிச் சொல்லி வளர்த்தேன்?” ஆற்றாமையைக் கணவனிடம் கேள்விக் கேட்டு நின்றார்.
“சம்பூரணம், நீ இதுல தலையிடாத,” வேலு முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்த்தார்.
“தலையிடுவேன்ங்க. புருஷனே ஆனாலும் தப்புன்னா அதைத் தட்டிக் கேட்கிறதுதான் நல்ல பொண்டாட்டிக்கு அழகு; அப்போதான் குடும்பம் உருப்படும்,” என்றார் விடாமல். வேலு, “உனக்கு அவனைப் பத்தித் தெரியலம்மா, அவனோட படத்தை வாங்க நம்ம துணி பிராண்ட் பேரை குப்பைத் தொட்டிக்கு வைக்கப்போறேன்னு என்னையே மிரட்டிருக்கான்,” என்றார்.
சக்தி வேகமாக குறுக்கிட்டு, “மிரட்டிருக்கானா? அவன் படத்தை வாங்கி அதைப்பெட்டிக்குள்ளேயே பூட்டி வைக்க நீங்க நினைச்சிருக்கீங்க, அதை மீட்க அவன் போராடிருக்கான்,” என்றாள். பேத்தியை முறைத்தவர் மனைவியிடம், “பாத்தியா, இதுக்கு நம்ம பொண்ணும் உடந்தையா இருந்துருக்கா,” என்றுவிட்டார் வேலு, பல நாள் உள்ளுக்குள் அரித்ததை.
மௌனமாக நின்ற பெண்ணுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாகப் போனது. சக்திக்குத் துணை போனதற்குத் தனக்கு இப்படி ஒரு பலிச்சொல்லா? அதுவும் தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்தே? ‘துரோகம்’ எனக் கூறிவிட்டாரே! தாங்க முடியவில்லை. “தா… தாத்தா, நான் நம்ம குடும்பத்துக்குத் துரோகம் பண்ணேனா? என்னோட வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்ததால நான் உங்களுக்கு இவ்ளோ தூரம் வேண்டாதவளா போயிட்டேன்ல?” அவள் கால்கள் நடுங்கியது.
கைகள் இறுக்கமான பற்றுக்கோலைத் தேடிப் பிடிக்கக் கெஞ்சியது; அதன் நடுக்கம் அப்படி. சக்திக்கு ஒரு சக்தி தேவைப்பட்டதென நினைத்தாளோ என்னவோ, அன்பரசி முதல் முறை அடுப்படியை விட்டு வேகமாகத் தன்னவளுக்குத் துணையாய் அவள் கை பற்றி வந்து நின்றாள். அதோடு நில்லாமல் அவளுக்கு ஆதரவாய், “அண்ணியை நீங்க இவ்ளோ தூரம் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது தாத்தா,” எனப் குரலும் கொடுத்தாள்.
சக்தியின் வீட்டினர், அதாவது அவளை வளர்த்து ஆளாக்கிய குடும்பம், தாங்கள் கொடுக்க வேண்டிய குரலை, ஆதரவைக் கொடுக்காமல் யாரோ போல் நின்று பார்த்ததைக் கவனித்த சக்திக்கு இன்னும் இன்னும் வேதனைதான். “என் தங்கச்சி அப்படி இல்ல, நம்ம விருப்பத்துக்கு எதிரா வேணா அவ இருக்கலாம்; நமக்கே எதிரா ஒரு நாளும் இருக்க மாட்டா,” வீராவும் ஆணித்தரமாய் உறுதி கொடுத்துச் சகோதரிக்குப்பக்கபலமாய் நின்றான்.
“அப்போ ஏன்டா உன் தாத்தா புத்தியை உனக்கு மாத்தத் தோணல?” சம்பூரணம் கேட்ட கேள்வியில் வீராவால் பதில் கூற முடியவில்லை. மேலும் தொடர்ந்த சம்பூரணம், “ஏன்பா, நீங்களும் உங்க அப்பா என்ன சொன்னாலும் சரின்னு தலை ஆட்டுற மாடா மாறிட்டீங்களா?” மகன்களையும் விட்டு வைக்காமல் கேள்விகளைத் தொடுத்தார். எவருக்கும் பதில் கூற மனம் இல்லை; அவர் கூறியதைச் செய்தாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் தமிழ்ச்செல்வன் மேல் அதே ஆத்திரம் உள்ளதுதானே.
“உங்களுக்கு அவன் உங்களை மிஞ்சி அவனுக்குத் தேவையானதை எடுத்தான்னு கோவம். உங்களோட அகங்காரத்தைத் தொட்டுட்டான்னு இவ்வளவும் பண்றீங்க, அப்படித்தானே?” வேலுவால் மனைவியின் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை. “இதுல நம்ம வீட்டுப் பொண்ணு மேல பழியை வேற போடுறீங்க.”
மேலும் விடாமல், “நம்ப முடியலைங்க நீங்கதானா இப்படின்னு. இனிமேல் இந்த வீட்டுல இருக்குற யாரும் அந்தப் பையன் விஷயத்துல தலையிடக் கூடாது. மீறி ஏதாவது பண்ணீங்க, அப்புறம் நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்!” மகன்கள், மருமகள்கள் உடனே அவரைத் தடுக்க வர, “பேசாதீங்க யாரும். நம்மளால நாலு பேர் வாழ்ந்தாத்தான் சரித்திரம் இருக்கணும். சக்தி சொன்ன மாதிரி உங்களால பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லுவீங்க?” அனைவரையும் முறைத்தவர், உணவைக் கூடப் புறக்கணித்து அறைக்குச் சென்றுவிட்டார். செல்லும் பொழுது மருமகள்கள் இருவர் மேலும் அவர் கோவப்பார்வை வீசாமல் செல்லவில்லை; கணித்திருந்தார் இதெல்லாம் ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் தெரியும் என்பதை. அத்தனை அதிருப்தி வீட்டினர் மேல் அவருக்கு.
சக்தி தமிழுக்குத் தகவல் தெரிந்ததிலிருந்து அழைத்து ஓய்ந்துபோனாள். நிலையின் தீவிரம் உணர்ந்து நிமலன் மூலம் தமிழ்ச்செல்வன் சேலம் வந்திருப்பதை அறிந்தவள், சில நிமிட யோசனைக்குப்பிறகு உடனே வீட்டிலிருந்து கிளம்பினாள். தங்கை கிளம்புவதைப் பார்த்த வீராந்தகன் தடுக்கப் பார்க்க, அவன் கை பற்றித் தடுத்துவிட்டாள் அன்பரசி. மனைவியைக் வீரா தீயாய் முறைத்து, கையை விடக் கூற, அவளோ அசராமல் அவனை இன்னும் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாள்.