வீட்டை விட்டு வெளியே காலை எடுத்து வைக்க கூட பயமாக இருந்தது ரஞ்சிதாவுக்கு.
பயம் ஒரு பக்கம் என்றால், கூடவே இப்படி நன்றாக உடல் முழுவதும் பெல்ட்டால் அடிகள் வாங்கி அங்கங்கே கன்றி சிவந்து போன நிலையில் வெளியே தலையைக் காட்டவே அவமானமாக இருந்தது அவளுக்கு.
‘இதற்கே அவமானப்பட்டால் எப்படி?
நாளைக்கு ஒருவேளை போலிஸ் அவளை அரெஸ்ட் செய்து கொண்டு போய் விட்டால்?
Advertisement
எப்படி இருக்கும் அப்போது?’
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவளால்.
அதை சொல்லி சொல்லி தானே அடித்தான் ரத்தினமும்!
Advertisement
“உன்கிட்ட படிச்சு படிச்சு அப்பவே சொன்னேன். காசுக்கு ஆசைப்பட்டு அந்த வீட்டில் யாரையும் குடி வைக்க வேண்டாம்!
Advertisement
அது பாட்டுக்கு பூட்டிக் கிடக்கட்டும். யாரும் அங்க வரப் போக இருக்கிறது நல்லது இல்லைன்னு!
எங்க கேட்ட?
முதல்ல.. நாம எதுக்கு அந்த வீட்டை விட்டு பழையபடி இங்கயே வந்திருக்கணும்?
Advertisement
நாம அங்கேயே இருந்திருந்தா, எல்லாமே நம்ம கண்ட்ரோல்ல இருந்திருக்கும்!
எங்க..
நீ தான் அந்த வீட்டில் ஏதோ நடமாட்டம் தெரியுதுன்னு சொல்லி பயந்து போய், இங்க வந்த..
அதோட இல்லாம, அந்த வீட்டுக்கு அந்த நந்தினிய வேற போய் செடிங்கள பார்த்துக்க சொல்லி வச்ச.
அவளை வேற மாடிப் பக்கம் போக விடாம பார்த்துக்க வேண்டியதா இருக்கு!
அத்தோட விட்டியா?
சும்மா சும்மா போய் அந்த ட்ராக்டர் பக்கத்துல போய் போய் நின்னிட்டு இருந்த..
அதனால தான் நானும் வீட்டை மாத்த ஒத்துக்கிட்டேன்.
வீட்டை வாடகைக்கு விட சம்மதிச்சேன்!
அதையாச்சும் ஒழுங்கா செஞ்சியா? வில்லங்கம் இல்லாத ஆளா பார்த்து வச்சியா? அதுவும் இல்லை!
அப்புறம் அந்த டீச்சர்..
அவங்கள குடி வைக்கிறதுக்கு முன்னாடியாவது நல்லா விசாரிச்சியா?
அதுவும் இல்ல.
ஏதோ டீச்சர். கல்யாண வாழ்க்கை சரியில்லன்னு மட்டும் தான் சொன்ன!
தம்பிக்காரன் வக்கீல்ன்னு தெரிஞ்சுகிட்டியா?
இல்ல..
இப்ப பாரு.. வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கின மாதிரி ஆகிடுச்சு!
அந்த பையன் இப்ப தேரை இழுத்து தெருவில் விட்டுட்டான்.
இதுல எத்தனை பேருக்கு பிரச்சினை தெரியுமா?
மாட்டினா எல்லாரும் மாட்டுவாங்க தான்!
ஆனா அவங்க எல்லாம் தப்பிச்சுக்குவாங்க.
மாட்டிக்க போறது என்னமோ நீ தான்!
ஏன்னா.. நேரிடையா சம்பந்தப்பட்டவ நீ தானே?
நீ தான் மாட்டுவ!
நான் என்ன பண்ணட்டும்?
என்கிட்ட காசு எல்லாம் இல்ல. கேசு நடத்த!
உன் தம்பி, இப்படின்னு தெரிஞ்சா, அவனும் பணம் தர மாட்டான்!
எல்லாம் போச்சு! எல்லாம் உன்னோட அல்ப புத்தியால! பணத்தாசையால!”” விடாமல் திட்டிக் கொண்டு இருந்தான் ரத்தினம்.
“சும்மா பணத்தாசை.. பணத்தாசைன்னு என்னை மட்டுமே சொல்லாதீங்க.
நடந்த எல்லாத்துக்கும் உங்களோட பணத்தாசையும் தான் காரணம்! ஆரம்ப புள்ளியே உங்க பணத்தாசை தானே!
அது மட்டுமா.. அன்னிக்கு அந்த மீனுக் குட்டிய போய் அப்படி விரல் பதியுற அளவு அடிச்சீங்க!
அதுவும் அந்த வீட்டில் வச்சு.
அப்ப பார்த்து அந்த வீட்டில் டீச்சரோட நந்தினியும் வேற இருந்து தொலைச்சுட்டா.
போதையில் போய் அங்க போயிட்டு அவன் பங்குக்கு அவன் வேற ஏழரைய கூட்டிட்டான்!
நீ மட்டும் மீனுவை அந்த டீச்சரோட தங்க அனுப்பலைன்னா, இது எதுவுமே நடந்திருக்காது! அதுலயும் சொதப்பி வச்சுருக்க உன்னோட சோம்பேறித்தனத்தால!
ஏற்கனவே எதிர்வீட்டுக்காரியோட பகை!
அவ கேட்ட கமிசனை அன்னிக்கே கொடுத்து தொலைச்சுருந்தா வீணா அவ பகை நமக்கு வந்திருக்காது!
அல்பம்..அல்பம்.. உன்னோட அல்ப புத்தியால எல்லாம் சொதப்பிடுச்சு! எவ்வளவு நல்லா எல்லோரையும் நம்ப வச்சுருந்தேன்.
இப்ப எல்லாம் போச்சு!”
“எல்லாமே சரியா இருந்திருந்தாலும் கூட அந்த பொய்யை நம்மால் ரொம்ப நாளைக்கு சொல்லிட்டு இருந்திருக்க முடியாது!
ஏன்னா.. அந்த வடிவேலு வேற ஜோடி போட்டுக்கிட்டு திரும்பி வந்துட்டான்”
எல்லாம் நம்ம நேரம்!” என்றாள் ரஞ்சிதா!
“நம்ம நேரம் இல்லை. உன்னோட நேரம்னு சொல்லு” என்றான் ரத்தினம் இளக்காரமாய்!
ரஞ்சிதாவுக்குள் மீண்டும் பயப் பந்து நுழைந்தது.
ரத்தினம் யாரையோ பார்த்து வருவதாக சொல்லி வெளியே சென்றிருக்க, ரஞ்சிதாவால் வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை!
வெளியேவும் போக முடியவில்லை.
இங்குமங்கும் உலாத்தி கொண்டிருந்தவள், பின் ஏதோ யோசனையாய், பீரோ சாவியை எடுத்து பீரோவைத் திறந்து, அதன் கால் பகுதியில் இருந்த ரகசிய லாக்கரை திறந்தாள்.
அதில் இருந்தது சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மஞ்சள் பை!
அதில் இருந்த ஒரு கனமான தாலிக் கொடி!
ஒரு ஜோடி தினப்படி போட்டுக் கொள்ளும் சாதாரண டிசைன் வளையல்கள்!
ஜிமிக்கிகள்!
அவை மஞ்சுவின் நகைகள்!
————–
கவினின் சீனியரின் சகலை அருண்குமார் போட்ட மனுவின் படி மஞ்சுவைத் தேடும் பணி தீவிரமாக்கப் பட்டது!
இதற்கு முன் இருந்த எஸ்.ஐக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அவர் ராஜா முகம்மது.
நடந்தவற்றை கேட்டு அறிந்து கொண்டவர், ரகுவிடம் ஏன் முன்பே புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளை எல்லாம் தவிர்த்து விட்டு, முதலில் மஞ்சுவின் போனை வடிவேலிடம் இருந்து வாங்கினார்.
அதை உயிர்ப்பித்து, கடைசியாக அவள் யார் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருந்தாள். எவ்வளவு நேரம் பேசியிருந்தாள் என்ற விவரங்களை சேகரித்தார்.
அவளின் வாட்ஸ்அப் சாட்களை ஆராய்ந்தார். சோசியல் மீடியா பக்கங்களையும் பார்வையிட்டார்.
அதில் எதிலும் அவளுக்கு வடிவேல் இல்லாமல் வேறு யாருடனும் சேர்த்து சந்தேகிக்கும் வகையில் யாதொரு தவறான செய்திகளும் குறிப்புகளும் இல்லவே இல்லை.
மாறாக அவளுக்கும் ரகுவுக்கும் இடையே இருந்த அன்பும் அழகான குடித்தனம் நடத்திய பாங்கும் தான் தெரிந்தது!
மஞ்சு காணாமல் போன தினத்திற்கு இரண்டு தினங்கள் முன்பு தான் புதியதாக ஒரு லைப் இன்சூரன்ஸ் கூட எடுத்து இருந்தாள். ரகுவை நாமினியாக போட்டு.
அப்புறம் அவர்கள் மூவருக்கும் சேர்த்து ஹெல்த் இன்சூரன்ஸ் ஒன்றும்.
கேரளா டூர் போக மூவர் பெயரிலும் ரயில் டிக்கெட் ரொம்ப முன்னதாகவே முன்பதிவு கூட செய்திருந்தாள். அந்த டிக்கெட் டவுன்லோகி இருந்தது.
சுகன்யா சம்ரிதி ஸ்கீமில் மீனு பேரில் பணம் போட்டு வந்திருக்கிறாள்.
அது மட்டுமில்லாமல் நிறைய ஆர்டிக்கள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள்.. எல்லாமே ரகுவையும் மீனுவையும் நாமினியாக கொண்டு!
மீனுவுக்கு கொடுப்பதற்கு என்று ட்ரை ஃப்ருட்ஸ், மக்கானா இவற்றை ஒரு ஆர்கானிக் ஸ்டோரில் ஆன்லைனில் ரெக்கரிங் ஆர்டராக போட்டிருந்தாள்.
எல்லாவற்றையும் பார்த்த பின்னே, மஞ்சுவிற்கு தன் வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வேறு யாரோடும் ஓடிப் போகும் காரணிகள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட ராஜா, தன் பார்வையை மஞ்சுவை யாரெல்லாம் தொல்லையாக நினைத்தார்கள் என்ற பட்டியலில் செலுத்தினார்.
அதில் இருந்த உள்ளூர் சுய உதவி குழு லோன் கட்ட முடியாமல் ஓடி ஒளிந்து விட்டு, பின் மஞ்சுவால் காட்டிக் கொடுக்கப்பட்ட பெண்களை முதலில் லிஸ்ட்டில் இருந்து எடுத்தார்.
அவர்களுக்கு மஞ்சுவின் மேல் கோபம் இருந்தாலும் கடத்தி வைக்கும் அளவுக்கோ அல்லது கொல்லும் அளவுக்கோ துணிய மாட்டார்கள்.
அவர்களுக்கு அந்த அளவு வசதி வாய்ப்புகளும் இல்லை!
‘இவங்களால் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது! அப்படியே பண்ணி இருந்தாலும் கூட வெளியே சொல்லாமல் இத்தனை நாள் இருந்திருக்க முடியாது” என்று ஒரு முடிவுக்கு வந்தவர், பின் தன் பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பினார்.
அவரது லிஸ்ட்டில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர்கள்.
ஒருவர் மணல் காண்ட்ராக்டர்.
அவர் லிமிட் தாண்டி மணல் அள்ளுகிறார் என்று மஞ்சு அவரை எதிர்த்து போராடி இருக்கிறாள்.
அடுத்து, அநியாய விலைக்கு அடி மாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி அவள் ஊர் விவசாயிகளை ஏமாற்றிய அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி.
அதன் முதலாளி பூமி நாதன் மற்றும் அவரின் ஏஜென்ட் குரு மூர்த்தி!
கடைசியாக பண்ணையார் பரமசிவம்.
இதில் பரமசிவத்தை விசாரித்த போது குடும்ப கவுரவத்தை எண்ணியே வடிவேல் அஸ்வினி காதல் விவகாரத்தை மறைத்து விட்டதாக சொல்லிய அவர், மஞ்சுவின் மேல் கோபம் இருந்தது உண்மை தான்! ஆனால் ஆளைக் கொல்லுகிற அளவு தனக்கு தைரியமில்லை என்று சொல்லி சாதித்தார்.
மேலும், “கோபத்தில் வெட்டுவேன். குத்துவேன் என்று சொல்வேனே தவிர நான் அவ்வளவு எல்லாம் துணிய மாட்டேன். ப்ளீஸ். நம்புங்க. என்கிட்ட இப்படி போலிஸ் வந்து விசாரிப்பதையே கூட நான் கவுரவ குறைச்சலாக நினைக்கிற ஆள்!
நான் போய் எங்கே? நீ நினைக்கிற அளவு எல்லாம் இல்லை சார்” என்ற அவரின் மேல் ராஜாவுக்கும் பெரிதாக சந்தேகம் இல்லை.
இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல், “நாங்க எப்போ வந்து விசாரிச்சாலும் எங்களுக்கு கோ ஆப்ரேட் பண்ணனும்” என்கிற எச்சரிக்கையோடு அவர் அடுத்து விசாரிக்க போனது, மணல் காண்ட்ராக்டரை.
அங்கு போனால், “சார். மஞ்சுவோட அப்பா எனக்கு சொந்தக்காரர் தான்! மஞ்சு என் பிசினெஸ்க்கு தொல்லைக் கொடுத்தது என்னமோ உண்மை தான்!
நான் கோபப்பட்டு அவளைத் திட்டியதும் கூட உண்மை தான்!
இதே அவங்கப்பா உயிரோட இருந்திருந்தா, அவர் கிட்ட பேசி, அவளை அடக்கி இருப்பேன். அவர் இல்லாததால நானே சண்டை போடுகிற மாதிரி ஆகிட்டுது.
ஆனா நான் சின்ன காண்ட்ராக்டர் சார். பெரிய மாஃபியா எல்லாம் இல்லை. எனக்கு ஆளைத் தூக்குற அளவு எல்லாம் ஆள் பலம் இல்லை!
தைரியமும் இல்லை.
நானே இந்த பிஸினசை இத்தோட தலை முழுகிடலாம்னு இருக்கேன்”. என்று அவரும் சலித்துக் கொண்டார்.
“ச்சே.. இவர் டம்மி பீசு தான் போல” என்று முடிவுக்கு வந்த ராஜா, அடுத்து பூமி நாதனை சந்திக்க முயன்றார்.
அவரோ வெளிநாட்டுக்குப் போய் இருப்பதாக அவர் ஆபிஸில் சொல்லி விட்டார்கள்.
அப்படி என்றால் அந்த ஏஜென்ட் குரு மூர்த்தியை விசாரிப்போம் என்றால், அவரோ கையில் சிக்கவில்லை சாமான்யத்தில்!
சதா ரவுண்டில் இருக்கும் அவருக்கும் ஒரு சிறிய ஆபிஸ் இருந்தது.
எப்போது போனாலும் சார் இல்லை என்றே அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் சொல்லிக் கொண்டிருந்தது!
போனில் பேசினால் எப்போ பார்த்தாலும் “நாகர் கோவிலில் இருக்கிறேன். நார்த்தாமலையில் இருக்கிறேன்” என்று ஏதாவது வெளியூர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த குரு மூர்த்தியை விசாரித்தால் தான் கொஞ்சம் க்ளாரிட்டி கிடைக்கும்.
ராஜாவுக்கு கால அவகாசம் மிகவும் குறைவு.
ராஜாவைப் பொறுத்தவரை அவரின் உள்ளுணர்வு ஏனோ மஞ்சு இப்போது உயிருடன் இல்லை என்பது போல தான் சொல்லிக் கொண்டிருந்தது.
அடைத்தே வைத்திருந்தால் கூட இத்தனை மாதங்கள் அப்படி வைத்து காவல் காப்பது சாத்தியமா? என்பதே அவரின் கேள்வி!
அப்போது நந்தினி ஒரு தகவல் சொன்னாள் அவருக்கு.
“சார்.. அந்த ரஞ்சிதாவையும் அவ புருசனை கொஞ்சம் விசாரிங்க சார். ரஞ்சிதாவைக் கூட ஒரு வகையில் சேர்த்துக்கலாம். கொஞ்சம் பழி பாவத்துக்கு பயப்படும்!
ஆனா அவ புருஷன் எல்லாத்துக்கும் துணிஞ்சவன்.
அவனே கூட அந்த ரியல் எஸ்டேட் ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பான். காசு கொடுத்தா என்ன வேணுமின்னாலும் செய்வான்.
மஞ்சுவுக்கு அவனைக் கண்டால் பிடிக்காது. ரஞ்சிதா முகத்துக்காக தான் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்தாள்.
இப்ப கூட பாருங்க. இந்த வீட்டு மாடிக்கு பெரிய பூட்டா போட்டு வச்சுட்டு சாவிய அவன் கையில் எடுத்துட்டு போய்ட்டான்.
யாரையும் மாடிக்கு போக விட மாட்டேங்கிறான்.
ரகு அண்ணன் மூலம் சாவியைக் கேட்டதுக்கு கூட அங்க வச்சுருக்கேன். இங்க வச்சுருக்கேன்னு சொல்றானே தவிர இன்னமும் சாவியைக் கொடுக்க மாட்டேங்கிறான். நீங்க அவனையும் கொஞ்சம் உங்க ஸ்டைல்ல விசாரிங்க” என்றாள் ஆத்திரமாக.
அவளுள் இப்போதும் விரல்கள் பதிந்த மீனு குட்டியின் முதுகு நினைவுக்கு வந்து ஆத்திரத்தை உண்டு பண்ணியது!
“அத்தோட இல்ல. எங்கிருந்தோ ஒரு இத்துப் போன ட்ராக்டர கொண்டு வந்து இந்த வீட்டு முன்னாடி நிப்பாட்டி வச்சுருக்கான் அசிங்கமா.
அது நிக்கிற இடத்தில் எனக்கு ஒரு ரூம் கட்டித் தந்து என்னை இந்த காம்பவுண்ட் குள்ளேயே இருக்க வைக்க நினைச்சா மஞ்சு.
சொல்லப் போனா, என்னையும் அவங்களோட தான் ஒண்ணா தங்கிக்க சொன்னா.
ஆனா நான் ஒத்துக்கல அதுக்கு.
அதனால நீ என்கூடவே இருந்திடு. நீ இல்லைனா நான் ஒண்டியா எப்படி இந்த தோட்டத்தை பராமரிக்க முடியும் அப்படின்னு சொல்லிக் கிட்டே இருப்பா!
எனக்காக ஒரு அவுட் ஹவுஸ் மாதிரி ஒரு ரூம் எடுக்க தான் அந்த இடத்தில் அஸ்திவாரம் தோண்டினாங்க. நல்ல வாஸ்து நாளா பார்த்து தான்!
அடுத்த நாள் யாருமே எதிர்பார்க்காத அளவு மழை!
சரி. மழை நின்னப் பிறகு அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி தான் அப்படியே விட்டு விட்டது!
அதன் பிறகு ரெண்டு நாள் கழிச்சு தான் மஞ்சு காணாமல் போனதே!
நீங்க மாடிக்குப் போய் பாருங்க சார். அப்படி அங்க என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சா தான் மேற்கொண்டு உங்களுக்கு உதவியா இருக்கும்” என்று எடுத்துக் கொடுத்தாள்.
அவள் சொன்னவற்றை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்ட ராஜா, ரகுவிடம் சொல்லி மாடிப்படி கேட்டின் பூட்டை உடைக்க சொன்னார்.