Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லிப் பூக்களும் – 18

“எப்பொருள்”  போட்டியின் நடுவர் ஒரு வார்த்தை எடுத்துக் கொடுக்க,

கொஞ்சமும் திக்காமல் திணறாமல்,

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று திருக்குறளை சொன்னது மீனுக் குட்டி.



Advertisement

டெல்டா மாவட்டங்களின் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு தனியார் தமிழார்வலர்கள் குழு நடத்திய  திருக்குறள் ஒப்பித்தல் போட்டி அது!

க்அந்த போட்டியில் மீனுக்குட்டியின் பெயரையும் கொடுத்து, அவளுக்கு தினமும் மாலையில் பயிற்சியும் அளித்து வந்திருந்தாள் கவிநயா.

நடந்து முடிந்த அத்தனை களேபரங்கள் நடுவிலும் அவள் மீனுவை மட்டும் விட்டு விடவே வில்லை!

Advertisement

மீனுவும் அவளை விட்டு வேறெங்கும் நகராமல் அவளோடே ஒட்டிக் கொண்டு இருந்து விட்டது!

Advertisement

இதோ இப்போது போட்டிக்கும் அழைத்து வந்து விட்டாள்!

அந்த போட்டியில் மீனுக்குட்டியோடு மேலும் பத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் பள்ளியின் சார்பாக.

அவர்களுக்கு துணையாக கவியோடு மேலும் இரண்டு ஆசிரியைகள் போட்டி நடந்து கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு வந்திருந்தார்கள்.

Advertisement

போட்டி திருச்சி நகர மத்தியில் இருந்த ஒரு பெரிய அரசுப் பள்ளியில் நடைப்பெற்றது.

அதில் கலந்து கொள்ளவென்று போட்டி கலந்து கொள்ளும் மாணவர்களை காலை ஏழு மணிக்கே தயாராகி வரும்படி செய்து அவர்கள் கிராமத்தில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தைப் பிடித்து சரியான நேரத்தில் போட்டி நடை பெறும் பள்ளிக்கு வந்து விட்டனர்.

போட்டியில் மீனுக்குட்டிக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது!

அவளோடு மேலும் நான்கு பரிசுகளைத் தட்டி விட்டனர் அவர்கள் பள்ளிக் குழந்தைகள்.

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறிய விழா ஒன்றை நடத்தி பரிசு தரவிருந்தனர் விழா ஏற்பாடு செய்தவர்கள்!

கவிநயாவும் மற்ற இரு ஆசிரியர்களும் மகிழ்ச்சி கலந்த பதட்டத்தோடு இருந்தனர்.

மகிழ்ச்சி சரி. பதட்டம் ஏன்?

ஏனெனில் அவர்கள் ஊருக்குள் செல்லும் பேருந்தைப் பிடிக்க நேரம் குறைவாக இருந்தது.

ஆனால் விழாவில் பேசியவரோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வள வளவென்று பேசிக் கொண்டே போனது தான் அவர்களின் பதட்டத்திற்கு காரணம்!

பொறுத்துப் பார்த்த கவி, ஒரு கட்டத்தில் விழாக் கமிட்டியின் ஒரு தன்னார்வலரைக் கண்டு, விஷயத்தை சொல்ல, அவர் பேசிக் கொண்டிருந்தவருக்கு குறிப்பு அனுப்பி, விரைவாக பேச்சை முடிக்க வைத்தார்.

அதன் பின், முதலில் இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு பரிசுக் கொடுக்கப்பட்டது!

அதை விரைந்து வாங்கிக் கொண்டு விழாக் குழுவிற்கு நன்றி சொல்லி விட்டு சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்தை விரைந்து போய் பிடித்து பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

முன்னால் ஒரு ஆசிரியை, மாணவர்களை இடையில் விட்டு பின்னால் ஒரு ஆசிரியை, கடைசியாக கவியின் கையைப் பிடித்துக் கொண்டு மீனுக் குட்டி என அனைவரும் அவர்கள் ஊருக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்ல நால்வர் நால்வராக சாலையைக் கடந்து கொண்டிருந்தனர்.

கவியோடு வந்த அனைவரும் சாலையைக் கடந்து எதிர்ப்புறமாக சென்று விட்டிருக்க, இப்போது கவியும் மீனுக்குட்டியும் மட்டுமே இந்த பக்கம்!

அப்போது அவர்களின் வலப்பக்கம் இருந்து வெகு அருகே வந்து கொண்டிருந்தது மஞ்சு என்ற பெயரை ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் தாங்கி வந்த லாரி ஒன்று!

அதைக் கண்டு விட்ட மீனுக் குட்டி, அதை வேகமாக  எழுத்துக் கூட்டிப் படித்து விட்டு கவிநயாவிடம் காட்டியது!

“எம் ஏ என் ஜே யூ – மஞ்சு.  டீச்சர், இங்க பாருங்க! அம்மா பேர்ல பெரிய லாரி! ஒரு வேளை அம்மா இதுல இருப்பாங்களா?” என்று வெள்ளந்தியாக கேட்க,

அவள் பேச்சைக் கேட்டு கவிநயாவும் அந்த லாரியை அனிச்சை செயலாக பார்க்க, லாரியோ அவர்களுக்கு வெகு அருகில் வந்து விட்டிருந்தது.

“அட என்ன மீனும்மா, கொஞ்சம் வேகமாக ரோட்டை க்ராஸ் பண்ணியிருந்தா நாமளும் அவங்களோடவே அந்த பக்கம் போய் இருக்கலாம்.

இப்படி வேடிக்கைப் பார்த்து நின்னுட்டு,  இப்ப பாரு நம்மால ரோட்டை க்ராஸ் பண்ண முடியல!

அங்க நம்ம ஊருக்குப் போற டவுன் பஸ்  டிரைவர் ஏறி உட்கார்ந்துட்டார் பாரு. நாம போறதுக்குள்ள எடுக்காம இருக்கணும்”. கவிக்கு கொஞ்சம் டென்சன் ஆகி விட்டது.

அவள் மீனுக் குட்டியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு லாரி கடக்க காத்திருந்தாள்.

ஆனால் அது கடந்து செல்லும் வழியைத் தான் காணோம்!

அதன் டிரைவருக்கும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த  ஒரு தனியார் பேருந்து டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ட்ராபிக் ஆகிக் கொண்டிருந்தது.

பொறுமையை இழந்த கவி, மீனுவின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு சாலையைக் கடந்து, அந்த புறம் செல்வதற்குள் அவர்கள் ஏற வேண்டிய அவர்கள் ஊர் பேருந்தோ , இரு வாசல் கதவுகளையும் சார்த்தி விட்டு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் வேகமாக கிளம்பி விட்டது!

“டிரைவர் அண்ணா, இன்னும் ரெண்டு பேர் ஏறணும்” என்ற கூட வந்த மற்ற இரு ஆசிரியர்கள் சத்தம் போடுவதையும் காதில் வாங்காது வண்டியை விரைந்து எடுத்து விட்டார் அதன் டிரைவர்!

கவி திகைத்துப் போய் பஸ்ஸின் பின்னே  நின்று விட்டிருந்தாள்!

‘என்ன இது? இப்படி ஆகிடுச்சு!

இப்ப எப்படி ஊருக்கு திரும்புவது?’

அடுத்து அவர்கள் ஊருக்கு பஸ் இருக்கிறது என்றாலும், அது அன்றொரு நாள் அவள் வந்து இறங்கிய மொபசல் பஸ்.

ஊர் எல்லையில் இறக்கி விட்டு விட்டு போகும் பஸ்!

‘அங்கிருந்து அவ்வளவு தூரம் மீனுவை எப்படி நடத்திக் கூட்டி செல்வது?

அப்படியே நந்தினியை வரவழைத்துக் கொள்ளலாம் என்றாலும் அவளும் தான் எப்படி வருவாள்?’

அதுவும் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்கிற நிலையில்!

கவி யோசித்துக் கொண்டே,  பஸ்ஸில் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கும் ஆசிரியைக்கு போன் செய்தாள்.

“டீச்சர், நான் நாளைக்கு காலையில் ஸ்கூல் டயத்துக்கு மீனுவைக் கூட்டிக் கொண்டு வந்துடறேன்.

எங்க வீடு திருச்சி தானே. என்கிட்ட ஒரு வீட்டு சாவி இருக்கு. இப்போ நாங்க எங்க வீட்டுக்குப் போய் தங்கிட்டு காலையில் வந்துடறோம். இதுக்கு மேல அடுத்த பஸ்ஸில் வர்றது ரிஸ்க். ஹெச்எம் கிட்ட சொல்லிடுங்க. நானும் சொல்லிடறேன்” என்று  சொல்லி போனை வைத்தாள்.

அடுத்து சொன்னது போல தலைமை ஆசிரியைக்கும் சொல்லி விட்டு, கூடவே நந்தினிக்கும் போன் செய்து விவரம் சொன்னாள்.

கேட்ட நந்தினி ஒன்றுமே சொல்லாமல் இருக்க,

“நந்தினி.. என்ன சைலண்டா ஆகிட்ட? மீனுவோட அப்பா எதாச்சும் சொல்வாருன்னா?”

“இல்ல.. அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார். அவர் உங்க தம்பியோட தான் மஞ்சுவைத் தேடி தேனீ வரை போய் இருக்காங்க.

வடிவேலுவும் போய் இருக்கான். வர்ற நேரம் தான். நான் சொல்லிக்கிறேன். மீனு உங்க கிட்ட பாதுகாப்பா இருக்கான்ற நிம்மதில தான் அண்ணன் வெளியூரே போய் இருக்கு.

அதனால நீங்க ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். காலையில கூட்டிட்டு வாங்க பொறுமையாவே!” என்ற நந்தினிக்கு அப்பாடா என்று தான் இருந்தது உண்மையில்!

காரணம். இங்கு நடக்கப் போகும் சில நிகழ்வுகளை மீனுக் குட்டி காணாமல் இருப்பது நலம்!

அன்று காலையில் தான்,  நந்தினி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்ததாலும், ரத்தினம் ஏன் அவ்வளவு பிடிவாதமாக மாடிக்கு யாரையும் போக விடாமல் செய்திருக்கிறான் என்ற கேள்வி அவருக்கும் எழுந்ததாலும் புதிய போலிஸ் எஸ் ஐ ராஜா, மாடிப்படி கேட்டின் பூட்டை உடைக்க சொல்லி மேலே சென்று ஆய்வு செய்தார்!

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல பெரிதாக அங்கு ஒன்றுமே அவர்களுக்கு கிடைக்கவே இல்லை!

நந்தினியும் கூட சென்று தான் பார்த்தாள்.

அங்கு அந்த ரத்தினம் அடிக்கடி வந்து போன தடயமாக நிறைய பீடித் துண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பாக்குப் பொட்டலங்களின் கிழிந்த கவர்கள்!

ஒன்றும் இல்லை என்று அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டிருந்தனர்.

ஆனால் நந்தினிக்குள் மட்டும் ஏதோ உள்ளுணர்வு இன்னும் தேடு என்று சொல்லிக் கொண்டே இருந்தது!

எனவே அவள் ராஜாவிடம் அனுமதி பெற்று மீண்டும் சென்று மாடியில் தேடினாள். ஒரு துடைப்பத்தை எடுத்து அங்கிருந்த தொட்டிகளை நகர்த்தி நகர்த்தி கூட்டித் தள்ளினாள்.

அப்படிக் கூட்டிக் கொண்டிருக்கும் போது அவள் காலில் ஏதோ ஒன்று நறுக்கென்று குத்தியது.

“அம்மா” என்று லேசாக கத்தியபடி, தன் காலில் குத்தியதை கீழே குனிந்து கையில் எடுத்துப் பார்த்தாள்.

அது ஒரு போன் கேஸின் உடைந்த சில் துண்டு! அதே பூப்போட்ட டிஸைன் கேஸ்!

ஏற்கனவே ஒரு முறை தண்ணீர்க் குழாய் அருகே அவள் கண்ணில் பட்ட அதே மாதிரி இன்னொரு துண்டு.

‘இது என்னோட போனோட கேஸ் மாதிரி இல்ல இருக்கு.. நான் மஞ்சு கிட்ட கடைசியா கொடுத்த போனோட கேஸ்!

அப்ப என்னோட போன் உடைஞ்சே போச்சா? யார் உடைச்சா? எப்போ?’ நந்தினி யோசனையாக அதை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் போது, அங்கு வந்து விட்டிருந்தார் ராஜா மீண்டும்!

“என்னம்மா கையில?”

“அது போனோட உடைஞ்ச கேஸ் சார். என்னோட போனோடது! இத தான் நான் கடைசியா மஞ்சு கிட்ட கொடுத்து சர்வீஸ் பண்ணி வாங்கியார சொல்லி இருந்தேன்.

ஆனா இது இங்க இப்படி உடைஞ்சு போய் கிடக்கு சார்”.

“என்ன சொல்றீங்க? நல்லா பாருங்க அதே போன் தானா? இல்ல ஏதாச்சும் பழைய குப்பையா இருக்க போகுது!”

“இல்லவே இல்ல சார். மஞ்சுவும் சரி. நானும் சரி. இந்த இடத்தை சுத்தமா வச்சுப்போம். அதுவும் மஞ்சு அடிக்கடி இங்க வச்சு தான் ரீல்ஸ் வீடியோ எடுப்பா. அதனால ரொம்ப சுத்தமா இருக்கும்.

அதுவும் இல்லாம, மீனுக் குட்டி காலில் குத்துற மாதிரி இப்படி விட்டு வைக்கவே மாட்டோம்.

எனக்கு இதே மாதிரி இன்னும் ரெண்டு பீசுங்க கூட ஒரு முறை  கீழே தோட்டத்த கூட்டிட்டு இருக்கிறப்போ மழைத்தண்ணீ பைப் இறங்குற இடத்துக் கிட்ட கிடைச்சது. அப்போ கூட நான் அத பெரிசா நினைக்கல.

இப்ப தான் தெரியுது. இது என்னோட போன் தான்! இங்க வச்சு தான் இது உடைஞ்சு போய் இருக்கணும் . இல்ல யாரோ உடைச்சுருக்காங்க! இருங்க சார். இன்னும் நல்லா எல்லா இடத்தையும் கூட்டித் தள்ளிட்டு பார்க்கிறேன்” என்று அவள் கூட்டத் தொடங்க, ராஜா அப்படியே சுற்றிலும் பார்வையை செலுத்த, அங்கிருந்த கான்க்ரீட் பில்லர்கள் அவர் கண்ணில் பட்டன!

மற்ற பில்லர்கள் எல்லாம் சுத்தமாக இருக்க, ஒரு பில்லர் மேல் மட்டும் கொஞ்சம் அழுக்காக ஏதோ அடை போல ஒட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவர் கிட்டே போய் உற்றுப் பார்த்தார். அது நீளமான தலைமுடிக்கற்றை!

மண் புழுதி படிந்து போய் தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டிருந்தது.

“என்னம்மா ரொம்ப சுத்தமா வச்சுப்பீங்கன்னு சொன்னீங்க? இங்க என்ன இப்படி ஒரே முடியா கிடக்குது. அதுவும் மண்ணோடு மண்ணா ஒட்டிக்கிட்டு!” ராஜா யதார்த்தமாக கேட்க,

“தெரியல சார். ரொம்ப நாளா மாடிக்கே தான் வர்றதில்லையே! காத்துல பறந்து வந்திருக்கும்!” என்றவாறு கூட்டிக் கொண்டிருந்தாள் நந்தினி.

பூந்தொட்டிகளின் இடையில் எல்லாம் நிறைய பாக்குப் பொட்டலங்களின் காலி கவர்கள்!

‘அந்த ஆள் எப்படி குப்பையா போட்டு வச்சுருக்கான்’. என்று திட்டிக் கொண்டே வேகமாக அவற்றை தள்ள, அந்த கவர்களில் ஒன்றில் இது வரை பாதுகாப்பாக இருந்து வந்த அந்த மெமரி கார்ட் தெறித்து கொஞ்சம் தள்ளி விழுந்தது!

உடனே அதைக் கையில் எடுத்தாள் நந்தினி.

“என்ன இது? மெமரி கார்டு.. மஞ்சு ஒருவேளை இங்கே மிஸ் பண்ணிட்டா போல!” என்று சொல்லிக் கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்ட ராஜா, என்ன அது? என்று கேட்டார்.

“மெமரி கார்ட் சார்!”

“உங்களோடதா?”

“இல்லை சார். இங்க இப்ப கூட்டும் போது கிடைச்சது”

“உங்க போன் ஏதோ இங்க தான் உடைஞ்சு போய் இருக்கணும்னு சொன்னீங்களே அதில் இருந்ததா?”

“இல்ல சார். நான் மெமரி கார்ட் எல்லாம் போட்டு வைக்கல. இது வேற ஏதோ” என்றாள் நந்தினி.

“சரி. கொண்டாங்க. நான் ஸ்டேசன்ல போய் போட்டுப் பார்க்கிறேன்” என்று வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்.

எல்லாம் இடங்களையும் கூட்டி சுத்தம் பண்ணியும் வேற எதுவும் கிடைக்க வில்லை அவர்களுக்கு.

“ஆமா இது என்ன செடிங்க. பார்க்க வெங்காயத் தாள் மாதிரி இருக்கு. ஆனா மஞ்சள் கலர்ல பூத்திருக்கு!” ராஜா கேட்டார்.

“இது பேர் ரெயின் லில்லி சார். மழை பேஞ்சா பூக்கும். நிறைய கலர்ல இருக்கு. மஞ்சுவுக்கு இந்த மஞ்சள் லில்லி ரொம்ப பிடிக்கும். அதான் மாடி பூராவும் இதே தொட்டிங்களா வச்சுருக்கா”.

“ஓ.. இதே செடிங்க அதோ அந்த ட்ராக்டர் நிக்குதே அது பக்கத்துல கூட பூத்திருக்கு. இங்க இவ்வளவோ அழகா வச்சுருக்காங்க. ஆனா கீழே ஏன் அவ்வளவு அசிங்கமா அப்படி ஒரு ட்ராக்டரை நிறுத்தி வச்சுருக்காங்க?”

“அது மஞ்சு நிப்பாட்டல சார். மஞ்சு காணாம போன பின்னே அந்த ரத்தினம் கொண்டு வந்து நிறுத்தி வச்சுருக்கான்”.

“அந்த இடத்துல செடி ஒண்ணும் வைக்கலையா?”

“இல்ல சார். அங்க எனக்கு ஒரு அவுட் அவுஸ் கட்டலாம்னு அஸ்திவாரம் கூட தோண்டியாச்சு. ஆனா ஆரம்பிக்கிற நேரத்துல தான் மஞ்சு காணாம போய்ட்டா.திறந்து கிடக்கிற அந்த குழிக்குள் மீனு பாப்பா விழுந்திடக் கூடாதுன்னு மூடிட்டதா ரஞ்சு சொன்னுச்சு. அந்த இடத்துல இந்த அசிங்கம் பிடிச்ச ட்ராக்டரை கொண்டு வந்து நிறுத்தி வச்சுருக்கான் அந்த ஆள்!”

மாடிப்படி சுவரோரம் நின்றுகொண்டு தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைக்க முனைந்தார் ராஜா. தீப்பெட்டி இல்லை! தீர்ந்து விட்டிருக்க, கீழே ட்ராக்டர் அருகே நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை பேர் சொல்லி அழைத்தார் ராஜா.

அவரோ யாரிடமோ தீவிரமாக போனில் பேசிக் கொண்டிருக்க, இங்கிருந்து அவரை அழைக்க எண்ணி, மாடியில் தேடினார்.

 நந்தினி சுத்தம் செய்து விட்டபடியால் ஒன்றும் கிடைக்காது, பக்கத்தில் இருந்த ரெயின் லில்லி பூத்தொட்டியில் இருந்து ஒரு செடியைப் பிய்த்து இழுக்க அது அதன் வேரோட வந்தது.

வேரின் அடிப்பாகத்தில் அந்த வேர் ஒரு வெங்காயத்தைப் போல இருக்க அதைக் கொண்டு கீழே நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளை அழைத்தார்.

ரத்தினமும் இது போல தான் செய்வான்.

அடிக்கடி ட்ராக்டர் அருகே சோகமே வடிவாய் போய் நின்று கொண்டு வெறிக்கும் ரஞ்சிதாவை துரத்த!

அவனும் அடிக்கடி மாடிக்கு வந்து எந்த கோணத்திலாவது அங்கு நடந்தவை அக்கம் பக்கம் மாடிகளில் இருந்து பார்த்தால் தெரிந்திருக்க கூடுமோ  என்று மாடிக்கு வந்து நின்று நின்று பார்த்து உறுதிப் படுத்திக் கொள்வான்!

அக்கம் பக்கம் மாடி வீடுகளே இல்லை. அப்படியே இருந்த வீடுகளும் இவர்கள் வீடு அளவு உயரமான மாடியை கொண்டிருக்கவில்லை!

அப்படி அவன் மாடியிலும் ரஞ்சிதா கீழேயும் நின்று கொண்டிருப்பது வாடிக்கை ஆகிற்று.

அப்படி அவள் மேல் அவன் தூக்கிப் போட்ட மஞ்சள் லில்லிப் பூச்செடிகள் தாம் அந்த ட்ராக்டர் அருகே இப்போது பூத்திருந்த்தன!

அந்த மஞ்சள் லில்லிப் பூக்களையே பார்த்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு திடீரென்று ஒன்று தோன்றியது!

“ஏம்மா இங்க வா. நீ எப்போதிருந்து அந்த ட்ராக்டர் அங்க நிக்குதுன்னு சொன்ன?”

“மஞ்சு காணாம போனதில் இருந்து!” நந்தினி சொல்ல, அவருக்குள் ஒரு தீர்மானம்!

உடனே தன் போனை எடுத்து யாருக்கோ பேசினார்.

“அந்த ட்ராக்டரை நகர்த்திட்டு அந்த இடத்தை சுத்தி தோண்ட சொல்லுங்க!”

அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நந்தினி திகைத்தாள்!

‘என்ன சொல்றாரு இவர்?’ நந்தினிக்குள் ஏதோ துக்கம் அடைத்தது!

அழுகை வரப் பார்த்தது!

‘என்ன நினைக்கிறார் இவர்? அய்யோ கடவுளே இவர் சந்தேகப்படும்படி எல்லாம் ஒண்ணும் இருக்க கூடாது!

நம்ம மஞ்சு எங்கியோ பத்திரமா தான் இருக்கணும். அவளைத் தேடித் போய் இருக்கிற ரகு அண்ணனும் வடிவேலும் அவளைக் கையோட கூட்டிட்டு வந்திடனும்!

நல்லவேளை இப்போ மீனுக் குட்டி இங்க இல்லை!

அவ இங்க இருந்திருந்தா, எதுக்கு இங்க தோண்டுறாங்க என்ன எதுன்னு கேள்விக் கேட்டுட்டு இருக்கும்!’ என்று நந்தினி யோசித்துக் கொண்டிருந்த போது தான் கவி அவளுக்கு போன் செய்து மறுநாள் தான் மீனுவை அழைத்துக் கொண்டு வரப்போவதாக சொல்லவும் நிம்மதியானாள் நந்தினி!

ஆனால் பாவம் அவள் நிம்மதிக்கு ஆயுள் மிகவும் குறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!