மான்விழி – 04
நேத்ராவுக்கு பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் முன்தினம் சரியாக உறங்காததாலும், அன்றைய திருமண களைப்பினாலும் உறக்கம் வந்தது. தன் அலங்காரத்தை மொத்தமாக நீக்கி விட்டு முகம் கழுவி, தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டபடி, அப்படியே உறங்கி போனாள்.
எங்கே இருக்கிறோம்? இது இரவா? இல்லை பகலா? என்றும் தெரியாத அளவிற்கு தன்னை மறந்து தூங்கி கொண்டிருந்தவளின் தூக்கத்தை கலைக்கும் விதமாக வெளியே இருந்து வந்த பேச்சுக்குரல் எங்கேயோ கேட்பது போல இருந்தது.
Advertisement
பழக்கமான ஒரு குரல், அது மகேந்திரனுடையது. மற்றொரு குரல் சற்றே புதியதாய் இருந்தது. ஆனாலும் அந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கிறாள். எங்கே? ஆழ்மனதில் தேடினாள், அது அவனின் குரல் அல்லவா?
திருமாங்கல்யத்தை அவளின் முன்னே நீட்டியபடி, “கட்டலாமா?” என்று கேட்டானே, திடுக்கிட்டு கண் திறந்தாள். வெளியே தந்தை மகன் இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் போல. இப்போது எழுந்து வெளியே சென்றால் நன்றாக இருக்காது என்று எண்ணியவளாக அப்படியே படுத்திருந்தாள்.
Advertisement
Advertisement
“நீங்க சொன்னதை கேட்டு உங்களுக்காக இந்த கல்யாணத்தை நான் செஞ்சுகிட்டேன் தானே, இப்போது நான் சொல்றதை நீங்க கேட்டு தான் ஆகணும். உங்க உடம்பு சரியில்லைனு பவி உங்களை பக்கத்தில் வச்சு கவனிச்சுக்கணும்னு நினைக்கிறாள். இதோ இப்போ ப்ளைட் டிக்கெட் அன்ட் விசா இரண்டும் அனுப்பி வச்சிருக்காள். நீங்க கனடா போய் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துட்டு வாங்க, நான் ஆஸ்பிட்டல்ல பார்த்துக்கிறேன்” என்றான் அவள் கணவன்.
“அதெல்லாம் முடியாது, இப்போ தான் கல்யாணம் நடந்திருக்கு, நான் எப்படி என் மருமகளை விட்டுட்டு போகமுடியும். அவ என்னை பார்த்துக்குவா” என்றார் மகேந்திரன்.
Advertisement
“ஓ அப்போ உங்களை பார்த்துக்க தான் அந்த பெண்ணை எனக்கு கல்யாணம் செய்து வச்சீங்களா?” என்று தந்தையை மடக்கினான் மகன்.
“ஏய், சித்து என்னடா பேசறே? நான் போய் அப்படி செய்வேனா? அந்த பெண்ணுக்கு எல்லாமே புதுசா இருக்கும் டா, சென்னை புதுசு, நம்ம வீடு புதுசு, அவ்வளவு ஏன் உன்னை யாருன்னே அவளுக்கு தெரியாது. எதுவும் பழகாததுக்குள்ளே என் மருமகளை எப்படி தனியா உன்னை நம்பி விட்டுட்டு போக முடியும்?” என்றார் மகேந்திரன் தவிப்புடன்.
“ஓ என்னை நம்பி தனியா விட்டுட்டு போக முடியாதவரு, எதுக்காக எனக்கு கல்யாணம் செய்து வச்சீங்க? என் மேலே அவ்வளவு தான் நம்பிக்கையா? என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க முதல்ல உங்க ஹெல்த்தை கவனியுங்க, கனடாவுக்கு கிளம்புற வழியை பாருங்க” என்றான் சித்தார்த் அபிமன்யூ சுவாதீனமாக, அதன் பின்பு தான் தன்னையும் அறியாமல் தவறுதலாக வந்து விழுந்த அவளின் மீதான உரிமை பேச்சை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டான்.
அதற்குள் அவன் வார்த்தையின் அர்த்தம் புரிந்து, முகம் கொள்ளா பூரிப்புடன் மகனை ஆரத்தழுவி கொண்டார் மகேந்திரன். “சித்து, நான் கூட பயந்துட்டே இருந்தேன்டா, என்னடா கடைசி நிமிஷத்துல கத்திமுனையில நிறுத்தற மாதிரி உன்னை நிறுத்தி கல்யாணம் செய்து வச்சிட்டோமேனு உள்ளுக்குள்ள கவலையா இருந்துச்சுடா. ஆனால் என் பெண்டாட்டியை எனக்கு பார்த்துக்க தெரியும்னு நீ சொன்ன வார்த்தை உன் மேலே எனக்கு பரிபூரண நம்பிக்கையை கொடுத்திருக்கு, ரொம்ப நன்றிடா” என்றார் மகேந்திரன்.
சித்தார்த் அபிமன்யூ பதில் பேசாமல் இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தான்.
“ஆனா நான் அங்கே போறதை விட, பவியை இங்கே வரச்சொல்லு, சென்னையில் எல்லாரையும் அழைச்சு ஒரு ரிசப்ஷன் வச்சிடுவோம். அப்புறமா நான் அவ கூடவே போய் ஒரு ஆறு மாசம் இருந்துட்டு வர்றேன்” என்றார் மகேந்திரன்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஏற்கனவே அட்டாக் வந்த உடம்போட இந்த கல்யாணத்துல அலைஞ்சு இருக்கீங்க. முதல்ல நீங்க கனடா போய் நல்லா ஓய்வெடுத்துட்டு, அப்புறமா பவியையும் மாமாவையும் கையோட அழைச்சிட்டு வாங்க. நாளை உங்களுக்கு பிளைட்” என்றான் சற்றும் இளகாமல்.
அதற்குள் பவிஷ்காவும் போன் செய்து தந்தையை வரச்சொல்லி வற்புறுத்தவும் அரைமனதாக ஒத்துக் கொண்டார்.
ஹாலில் நடந்த இவர்களின் உரையாடல் முன்னறையில் இருந்த நேத்ராவுக்கு தெளிவாக கேட்டது. “என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்ற கணவனின் வார்த்தையில் அவளின் குழம்பியிருந்த மனம் சற்று தெளிந்தது.
ஆனால் இப்போது அவளுக்கு வேறொரு குழப்பம், வெளியே செல்வதா வேண்டாமா? அவனாக அவளை அழைப்பானா? அல்லது இவளாக சென்று அவனுக்கு என்ன தேவை என்று கவனிக்க வேண்டுமா? அவனை எப்படி எதிர்கொள்வது? என்று புரியாமல் தவித்தாள்.
அவளுக்கு சங்கடத்தை தராமல் நேத்ராவின் தந்தை சிவக்குமார் தன் சொந்த பந்தங்களோடு அங்கே வந்திறங்கினார். சத்தமாக ஒலித்த ராணி இல்லையில்லை மேக்கப் ராணியின் குரலிலேயே அவர்களின் வரவை உணர்ந்துக் கொண்டாள் நேத்ரா.
ஆம் ராணி தான் திருமணத்தில் நேத்ராவிற்கு மேக்கப் செய்தவள், அவர்கள் பகுதியில் யாருக்கு திருமணம் என்றாலும் அவர்கள் அழைக்காமலே சென்று விடுவாள். அவளுக்கு மேக்கப் போடுவதில் அலாதி பிரியம். அதனாலேயே அவளை எல்லாரும் மேக்கப் ராணி என்று கிண்டல் செய்வார்கள். நேத்ராவுக்கு மேக்கப்பில் எல்லாம் எப்போதும் நாட்டம் இருப்பது இல்லை. ஆனால் ராணி ஆசையாக வந்து கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை.
“வாடா சிவா வா, என்ன எல்லாரையும் அழைச்சிட்டு வந்திருக்க?” என்று கேட்டார் மகேந்திரன்.
“என்ன மகி தெரியாத மாதிரி கேட்கிறே? இன்னைக்கு ராத்திரி நடக்க வேண்டியது எல்லாம் நடக்கணும் இல்ல? நம்ம வீட்டுல தான் இதை எல்லாம் பார்த்து பார்த்து செய்ய பொம்பளைங்க இல்லயே, அதனால தான் இவங்களை எல்லாம் அழைச்சிட்டு வந்தேன்” என்றார் சிவா.
அதைக் கேட்டதும் சட்டென அறைக்குள் சென்று விட்டான் சித்தார்த் அபிமன்யூ
கேள்வியாக பார்த்த சிவக்குமாரை, “என்ன சிவா, இதெல்லாம் அவன் முன்னாடி சொன்னா வெட்கமாயிருக்காதா, அதான் கால் பிடறில படுற மாதிரி ஓடுறான்” என்று சிரித்தார் மகேந்திரன்.
இப்போது சிவக்குமாரும் சிரித்துக் கொண்டு, “நேத்ராவை தயார் செய்யுங்க, கொண்டுவந்த பூக்களை எல்லாம் மாப்பிள்ளை அறைக்கு எடுத்துட்டு போய் அலங்காரம் செய்யுங்க” என்றார்.
இரண்டு ஆண்கள் அறைக்குள் நுழைவதை கண்டதும், சித்தார்த் பின் பக்க தோட்டத்திற்கு சென்று இலக்கின்றி இங்கும் அங்குமாக நடை பயின்று கொண்டிருந்தான். அவன் முகம் தீவிர யோசனையில் இருந்தது.
மேக்கப் ராணியோ நேத்ரா இருந்த அறைக்குள் வந்தவள், “என்ன நேத்ரா? ராத்திரிக்கு தூங்க முடியாதுனு உன் புருஷன் இப்பவே தூங்கி எழுந்துக்க சொன்னாரா?” என்று கிளுக்கி சிரித்தாள்.
“அய்யோ ராணி, இப்படி எல்லாம் பேசாதே” என்று அதட்டினாலும் நேத்ராவின் முகம் சிவந்து விட்டது.
“என்ன நேத்ரா, அதுக்குள்ள வெட்கம் எல்லாம் படுறே? உன் மாநிறமே இவ்வளவு சிவக்குதுனா? மாப்பிள்ளை என்ன செஞ்சாரு?” என்று புருவம் உயர்த்தினாள் ராணி.
“அய்யோ ராணி, அவர் முகத்தை கூட இன்னும் நான் முழுசா பார்க்கலை, நீ வேற என்னை கலாய்க்காதே” என்று சிணுங்கினாள் நேத்ரா.
“அதான் இன்னிக்கு ராத்திரி மொத்தமா அவரை பார்க்க போறீயே” என்று சொன்ன ராணியின் வாயை அவசரமாக பொத்தினாள் நேத்ரா.
“இதுக்கு மேலே பேசாதே ப்ளீஸ்” என்றாள் நேத்ரா கெஞ்சுதலாக.
“சரிசரி, குளிச்சிட்டு வா, நான் உனக்கு மேக்கப் போடுறேன்” என்றாள் ராணி
“என்ன? ராத்திரில தூங்கறதுக்கு எதுக்கு மேக்கப் அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே ரெடியாகிக்கிறேன் நீ கிளம்பு” என்றாள் நேத்ரா.
“நீ என்ன தூங்கவா போறே?” என்று மேலும் பேச எத்தனித்த ராணியை நோக்கி கை கூப்பியவள், “அம்மா, தாயே, குளிச்சுட்டு வரேன், நீயே மேக்கப் போடு, போதுமா?” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் சென்றாள்.
குளிக்கும் போது என்னவோ புதுவித சிலிர்ப்பாக இருந்தது. என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும் என்றானே, அந்த ஒற்றை வாக்கியம் கொடுத்த நம்பிக்கையில் முகத்தை கூட சரியாக பார்த்திராத தன் கணவனை எண்ணி உடல் சிலிர்த்தாள் நேத்ரா.
நேத்ரா குளித்து முடித்து வந்ததும், ராணி தன் கைவரிசையை காட்ட தொடங்கினாள். அவளின் மேக்கப்பில் நேத்ராவிற்கு ஏனோ திருப்தி இல்லை.
“ராணி எதுக்கு இவ்வளவு அதிகமா மேக்கப் போடுறே? நம்ம ஊருக்கு கூத்து கட்ட வருவாங்களே, அந்த மாதிரி இருக்கு. கொஞ்சம் கம்மியா போடு” என்றாள் நேத்ரா சிணுங்கி கொண்டே.
“என்ன? நம்ம ஊருலயே என்னை விட அழகா மேக்கப் போட ஆள் இருக்காங்களா என்ன? என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே நேத்ரா? ஏய் மாலா நான் போட்ட மேக்கப் நேத்ராவுக்கு நல்லா இல்லையாடி?” என்று அருகில் இருந்தவளை கேட்டாள் ராணி.
இல்லை என்று சொன்னால், தனக்கு அவள் கொடுத்திருக்கும் மேக்கப் அசிஸ்டென்ட் என்ற அந்தஸ்தும், சம்பளமும் கிடைக்காது என்பதால், “அருமையா இருக்கு நேத்ரா. எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நம்ம ராணி அக்கா உன்னை சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு மேக்கப் போட்டிருக்கு. அத போயி குறை சொல்றீயே” என்று ஒரே போடாக போட்டாள் மாலா.
“அப்படி சொல்லு மாலா. இந்த நேத்ராவுக்கு என்னோட அருமை தெரியலை” என்றபடி ராணி தன் வேலையில் மும்மரமாக இருந்தாள்.
சரி இன்று ஒரு நாள் தானே மேக்கப் போட போகிறாள். அதன் பிறகு கணவனோடு சென்னை போய்விட போகிறோம். அவள் ஆசையை கெடுப்பானேன் என்று அமைதியாகி விட்டாள் நேத்ரா.
ஒரு வழியாக நேத்ராவிற்கு மேக்கப்பை முடித்துவிட்டு ராணி ஹாலுக்கு சென்று எல்லாம் தயார் என்று கூறவும், சித்தார்த்தை அழைத்து அறைக்குள் போக சொன்னார் மகேந்திரன்.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அறைக்குள் சென்றவன், அங்கிருந்த கட்டிலில் அவர்கள் பூக்களால் செய்திருந்த அலங்காரத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.
சிவக்குமாரின் சித்தி அத்தை முறை கொண்ட வயதான பெண்மணிகள் நேத்ராவின் காதில் சில புத்திமதிகளை சொல்லி, ஆசிர்வதித்து, அவள் கையில் பால் சொம்பை கொடுத்து, அறைக்குள் போக சொன்னார்கள்.
கணவன் சற்றுமுன் சொன்ன “என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்ற வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையோடு, கண்களில் கனவுகளோடு, அந்த அறைக் கதவை மெல்ல தட்டினாள்.
“கம் இன்” என்ற அழுத்தமான குரல் கேட்டது, அந்த குரலில் தெரிந்த கடினத் தன்மையில் அவள் நெஞ்சுக்குள் திக்கென்று இருந்தது.
ஆபிஸ் அறையை தட்டும் ஊழியருக்கு, உள்ளே வரச்சொல்லி உத்தரவிடும் முதலாளியின் ஆணை போல தோன்றியது.
பின்னால் திரும்பி பார்த்தாள், என்ன என்று கேட்ட அப்பத்தாவிடம், “எனக்கு பயமா இருக்கு, நான் போக மாட்டேன்” என்றாள் பள்ளிக்கு செல்லும் சிறுமி போல.
கிளுக்கி சிரித்தவர்கள், “இப்போ இப்படி தான்டி சொல்லுவ, காலையில எவ்வளவு சீக்கிரமா வர்றேனு நாங்களும் பார்க்கிறோம், போடி உள்ளே” என்று அதட்டினார்கள் அந்த பெண்கள்.
படபடப்புடன் உள்ளே நுழைந்தாள், அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். அவள் பால் செம்பை வைத்து விட்டு, கதவை சாத்தி தாழ் போட்டாள்.
அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து, அவள் அசைவுகளை திரும்பாமலே உணர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக நின்றிருந்தான்.
நேத்ராவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் முதுகையே பார்த்து கொண்டு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவன் திரும்புவது போல அவனிடம் அசைவு தெரியவும், சட்டென்று குனிந்து கொண்டாள்.
குனிந்து இருந்த அவளின் வதனம் முழுமையாக அவனுக்கு தெரியாவிட்டாலும், அவள் போட்டிருந்த அதீத மேக்கப்பை அவனால் பார்க்க முடிந்தது.
முகம் மற்றும் கழுத்துக்கு மட்டும் வெள்ளை அடித்திருக்கிறாளே, முழங்கைகளில் தெரியும் மாநிறத்தை மறைக்காமல் மறந்து விட்டாளோ? என்று ஏளனமாக பார்த்தான் சித்தார்த் அபிமன்யூ.
‘இங்கே நடந்த திடீர் கல்யாணத்துல நான் குழம்பி போய் இருந்தா, இந்த நேரத்திலயும் இவ்வளவு மேக்கப்போட வந்திருக்காளே’ என்று எண்ணியபடி அவளை நெருங்கினான்.
குனிந்திருந்தவளின் கண்களில் அவன் கைகள் தன்னை நோக்கி நீளுவது தெரிந்தது. ஒரு வித படபடப்புடன் கால்விரல்களை தரையில் அழுத்தியபடி, புடவை முந்தானையை முடிச்சிட்டு கொண்டிருந்தவளின் முகம் ரத்தமென சிவந்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் கைகள் தலையணையை அவளை நோக்கி நீட்டியது. யோசனையோடு அதை வாங்கியவள் கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்த போது, அவன் திரும்பி கொண்டான்.
“எனக்கு இந்த கல்யாணத்தில சுத்தமா விருப்பம் இல்லை. என் அப்பாவோட கட்டாயத்துனால தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். எனக்கு நீ பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணல” என்று அவன் மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்து போன நேத்ராவின் காதுகளில் “நீ எனக்கு பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணலை” என்ற வார்த்தைகளுக்கு பிறகு வேறு எந்த வார்த்தைகளும் அவள் காதுகளில் விழவில்லை. அதிர்ச்சியில் மொத்தமாக காது அடைத்துக் கொண்டது போல இருந்தது அவளுக்கு
ஆனால் அந்த வார்த்தைகளுக்கு பிறகு அவன் சொன்ன முக்கியமான வார்த்தைகளை அவளும் சற்றே காது கொடுத்து கேட்டிருக்கலாம்!
(தொடரும்)
