Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 07

நேத்ரா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. அவளுடைய கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

 

இரண்டு முறை அடித்து ஓய்ந்த பின்னும் மீண்டும் அது விடாமல் ஒலிக்கவும் அதை எடுத்து பார்த்தாள். அவள் தந்தை சிவக்குமார் தான் போன் செய்திருந்தார்.

 



Advertisement

“நேத்ரா எப்படிம்மா இருக்கே? வீடு போய் சேர்ந்துட்டீங்களா? மகி வீடு அரண்மனை மாதிரி இருக்குமே… என் பொண்ணு அதில் மகாராணி மாதிரி வாழப்போறாள்னு நினைக்கும் போதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உனக்கு வீடு பிடிச்சிருக்கா? நீயும் மாப்பிள்ளையும் சாப்டீங்களா? மாப்பிள்ளை எங்கே? அவர் பக்கத்தில் இருந்தா கொஞ்சம் போனை கொடு” என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக நேத்ராவின் கண்களில் கண்ணீர் மேலும் ஊற்றெடுத்தது. பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.

 

“நேத்ரா, ஏன்டா பேச மாட்டேங்கிற? அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று சிவக்குமார் அந்த பக்கம் பதறவும், வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு, அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

Advertisement

 

Advertisement

“சசாப்பிட்டுட்டு இருந்தேன்பா, அதான் பேச முடியலை. இப்போ தான் ஓட்டல்ல சாப்பிட்டோம், இனிமேல் தான் வீட்டுக்கு போகணும்பா. அவர் சாப்பிட்டுட்டு இருக்கார், போனை கொடுக்கட்டுமா?” என்றாள் தன்னை சமாளித்துக் கொண்டு.

 

“வேணாம் டா, அவர் சாப்பிடட்டும், நான் அப்புறமா பேசிக்கிறேன். வீட்டுக்கு போனதும், நல்லா ஓய்வெடு. மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்துக்கோ” என்றார் சிவக்குமார்.

Advertisement

 

“சரிப்பா, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்

 

“சொல்லுடா” என்றார் சிவா

 

“நானும் அவரோட ஆஸ்பிட்டலுக்கு போய் நர்ஸ் வேலை பார்க்கலாம்னு இருக்கேன். அவர் டாக்டர் என்பதால அதிகமாக விடுமுறை எடுக்க முடியாது. நாளையிலிருந்தே ஆஸ்பிட்டலுக்கு போகணும்னு சொல்றாரு. நான் மட்டும் வீட்டில் தனியா இருக்கிறதை விட, அவர் கூடவே போய் நர்ஸ் வேலை பார்க்கலாம்னு இருக்கேன்” என்றாள் நேத்ரா. பின்னாளில் தந்தைக்கு விஷயம் தெரியவந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி கூறினாள்.

 

“அவர் கூட மருத்துவமனைக்கு போறதெல்லாம் சரிதான்டா, முதலாளியா இருக்க வேண்டியவ, மத்தவங்க மாதிரி ஒரு நர்ஸ் ஆ இருக்க போறேன்னு சொல்றியே, அதுதான் என்னவோ போல இருக்கு” என்றார் சிவக்குமார் யோசனையோடு.

 

“அப்பா இடையில் இந்த கல்யாணத்தால நமக்கு கிடைச்ச முதலாளிங்கிற அந்தஸ்து தேவையா? நர்ஸ் வேலை ஒண்ணும் கீழானது இல்லையே” என்ற மகளை எண்ணி பூரித்தார் சிவக்குமார்.

 

“அப்படி சொல்ல வரலை நேத்ரா. சரி உனக்கு எது சரினு படுதோ செய். மாப்பிள்ளை கூடவே இருக்கணும்னு நீ பிரியப்படுறது எனக்கும் புரியுது. நீ அங்கே போய்ட்டு சும்மா இருக்காம அவருக்கு உதவியா இருக்கிறதும் நல்லது தானே” என்றார் சிவக்குமார்.

 

“சரிப்பா உடம்பை பார்த்துக்கோங்க, உங்களை பார்க்கணும்னா நானே வந்து பார்க்கிறேன். நீங்க வெயில்ல அலைய வேண்டாம்” என்று சொல்லி போனை வைத்தாள்.

 

இப்போது சற்று தெளிந்தவள், அந்த ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஊழியரிடம் அங்கே எதாவது பெண்கள் விடுதி அருகில் இருக்கிறதா என்று விசாரித்தாள். அவர்கள் ஏதோ ஒரு விலாசம் கொடுக்கவும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு டாக்சி வரவழைத்து அங்கிருந்து சென்றாள்.

 

சித்தார்த் காரில் கோபத்துடன் நீண்ட தூரம் வந்து விட்டவன், அங்கே  கடற்கரையை பார்த்ததும் காரை நிறுத்தி அலைகளை நோக்கி சென்றான். அவன் மனதில் இருந்த சீற்றத்தை போல அந்த அலைகளும் சீற்றமாய் அவனை நோக்கி சீறிக் கொண்டு வந்தன. 

 

அவ்வளவு ஆக்ரோஷமாய் வந்த அலைகள், வந்த வேகத்தில் அப்படியே தலைவணங்கி மீண்டும் பின்னோக்கி அந்த கடலிடமே சென்று தஞ்சம் புகுந்து கொண்டன. சற்று நேரம் தன் கோபத்தோடு அலைகளின் சீற்றத்தை ஒப்பிட்டு பார்த்தான் சித்தார்த்.  

 

அலைகளை போல பொங்கி வந்த கோபமும் குறைந்து அவனின் சமுத்திரமான நேத்ரநயனியின் நினைவில் பின்னோக்கி சென்றது. அவளை தனியாக விட்டுட்டு வந்துட்டேனே என்று தலையில் கைவத்துக் கொண்டு, மீண்டும் அந்த ரெஸ்டாரண்டை நோக்கி வேகமாக காரைச் செலுத்தினான்.

 

அவசரமாக ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தவன் அவளை சுற்றும் முற்றும் தேடினான், அவள் எங்கேயும் இல்லை. அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்தற்கு அவள் பெண்கள் விடுதியின் விலாசத்தை கேட்டு தெரிந்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறினார்கள்.

 

சற்றே மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் துளிர் விட்டது. “எவ்வளவு திமிர் அவளுக்கு. எனக்கு சற்றும் பொருத்தமில்லாதவளாக இருந்தாலும் தாலி கட்டியாயிற்று, இனி அவளை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் என்று நான் நினைத்திருந்தால் முதல் நாள் இரவே விவாகரத்தை பற்றி பேசுகிறாள். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள்னு நினைச்சிருந்தா, சென்னை வந்தும் அப்படியே பேசுறா. இதோ இப்போ தனியா ஹாஸ்டலை தேடி போயிருக்கா என்றால் அவள் எதுவும் சும்மா பேசல. அவளோட உள் மனசுல விவாகரத்து என்ற முடிவுல தான் இருக்கா போலிருக்கு. அவள் என்ன என்னை வேண்டாம் என்பது, எனக்கு அவள் வேண்டாம்” என்று மனதிற்குள் கறுவியபடி, இறுகிய முகத்துடன் மீண்டும் காரில் ஏறி தன் வீட்டிற்கு சென்றான்.

 

அதிர்ஷ்டவசமாக நேத்ராவிற்கு அவள் தேடிச் சென்ற ஹாஸ்டலில் தங்குவதற்கு அறை கிடைத்து விட்டது. விலையும் அவளுக்கு ஏற்றபடி இருந்தது, ஆனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு தான் அங்கே தங்க அனுமதி என்ற அறிவிப்பு பலகை இருக்கவும், அவசரமாக தன் தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்.பணத்தை கட்டிவிட்டு தனக்கான அறைக்கு சென்றாள். அந்த அறையில் தங்கி இருக்கும் மற்ற மூன்று பெண்கள் வேலைக்கு சென்றிருப்பதால் அவள் மட்டும் தனியாக இருந்தாள்.

 

சற்றுநேரம் தன் நிலையை நினைத்து கண்கலங்கியபடி இருந்தாள், அதற்குள் மற்ற பெண்கள் வந்து விடவும் அவர்களுக்கு தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தன் வேலையை பற்றியும் கூறினாள்.

 

அந்த பெண்களில் ஒருத்தி சுதா, “நலமுடன் மருத்துவமனையில் வேலை கிடைப்பதே கஷ்டம் ஆச்சே, நான் பிஎஸ்சி முடிச்சிருக்கேன், ரொம்ப டிரை பண்ணேன். வேலையே கிடைக்கலை. நீ டிப்ளமா தான் படிச்சிருக்கே, எப்படி வேலை கிடைச்சது?” என்றாள்.

 

அதற்கு மற்றொருத்தி, “சிபாரிசாக இருக்கும்” என்றாள்.

 

“நோ சான்ஸ், அந்த மருத்துவமனையில் சித்தார்த்னு ஒரு ஹான்டஸ்சம் டாக்டர் இருக்கார். அவருக்கு சிபாரிசுனாலே பிடிக்காது. நான் ஆல்ரெடி டிரை பண்ணிட்டேன். எனிவே வாழ்த்துக்கள் நேத்ரா” என்றாள் சுதா.

 

சித்தார்த்தின் பெயர் கேட்டதும் நேத்ராவின் முகத்தில் புன்னகை மறைந்து இருள் சூழ்ந்துக் கொண்டது.

 

அடுத்த நாள் காலை நேத்ரநயனி அந்த பெரிய ஹாஸ்பிட்டலின் கேட்டருகே நின்று அதிர்ச்சியுடன் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள்.

பெரிய மருத்துவமனை என்று தெரியும், ஆனால் இத்தனை பெரிய பிரம்மாண்டமான கட்டிடங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

வெளி நோயாளிகளை கவனிக்க என்று ஒரு பெரிய கட்டிடம், குழந்தை பேறு, விபத்துக்கான நோயாளிகள், மற்ற நோய்களான இதயநோய்கள், கேன்சர், சிறுநீரக கோளாறு, எலும்பு மற்றும் நரம்பு என அனைத்துக்குமே தனித்தனி கட்டிடங்கள் ஒரு பக்கம் இருக்க, நோயாளிகளுக்கான உணவகம், மற்றவர்களுக்கு தனியாக கேண்டீன், மருந்தகம் என ஒரு குட்டி நகரமே அங்கே இருந்தது. ஷிப்ட் முடிந்து ஆண்களும் பெண்களும் வெளியே வந்துக் கொண்டிருக்க, அடுத்த ஷிப்டிற்கான ஆட்கள் தங்கள் வேலையை பார்க்க உள்ளே சென்று கொண்டிருந்தனர்.

 

பரப்பரப்புடன் இயங்கி கொண்டிருந்த அந்த மருத்துவமனையில் எங்கு யாரை சென்று பார்ப்பது என்பதே தெரியாமல் மலைப்பாக இருந்தது. அங்கே ஆட்களை அப்புறபடுத்திக்கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் தன் வேலைக்கான ஆர்டரை நீட்டி, எங்கு சென்று யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டாள்.

 

அவளை அந்த செக்யூரிட்டி மேலிருந்து கீழாக பார்த்தான். தொள தொள வென்று லூசாக இருந்த ஒரு காலர்வைத்த பழைய சுடிதாரை மாட்டிக் கொண்டு, பழைய கலர் போன மூக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு நெற்றியில் ஒரு சின்ன ஸ்டிக்கரை தவிர வேறெந்த அலங்காரமும் இல்லாமல் பார்க்க படு சுமாராக இருந்தவளை ஏளனமாக பார்த்தான் அவன்.

 

இங்கே வர்ற நோயாளி கூட கொஞ்சம் அழகா வருவாங்க, இந்த பொண்ணு என்ன பஞ்சத்துல அடிப்பட்ட போல இருக்கு என்று நினைத்தவன், அவளை சந்தேகமாக பார்த்து, “உண்மையை சொல்லு, இது உனக்கு வந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரா? இல்லை யாருடையதாவது எடுத்துக்கினு வந்துட்டியா?” என்றான் சந்தேகமாக

 

“என்னோடது தான்” என்று ரோஷமாக உரைத்தவள், தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து காண்பித்தாள். 

 

“சரி சரி, அந்த பக்கமாக அட்மின் பிளாக் இருக்கு, அங்கே ஜனனினு ஒரு மேடம் இருப்பாங்க, அவங்க கிட்ட இந்த லெட்டரையும் அடையாள அட்டையையும் காட்டுங்க” என்று சொன்னான்.

 

நேத்ராவும் அவன் சொன்னபடி சென்று ஜனனியை சந்தித்தாள். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சித்தார்த் சார்கிட்ட ஒரு முறை கன்பார்ம் பண்ணிக்கிட்டு எந்த டிபார்மென்டில் விடணும்னு கேட்டுக்கிறேன்” என்ற ஜனனி, சற்று தயங்கி, “நீங்க மிஸ் ஆர் மிஸஸ்?” என்று கேட்டாள்.

 

ஒரு கணம் யோசித்து பின்பு திடமான குரலில், “மிஸ்.நேத்ரநயனி” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஓகே” என்று விட்டு ஜனனி சித்தார்த்க்கு அழைத்து பேசினாள்.

 

அவன் என்ன சொன்னானோ, “என்கூட வாங்க மிஸ்.நேத்ரா” என்று முன்னால் சென்றாள் ஜனனி.

 

படபடக்கும் இதயத்தோடு ஜனனியை தொடர்ந்தாள் நேத்ரநயனி. எவ்வளவு கட்டுப்படுத்தியும் இதயதுடிப்பின் வேகம் பந்தய குதிரையின் வேகத்தை விட அதிகமாகி கொண்டே போனது.

 

அந்த பகுதியில் நடுநாயகமாக இருந்த பெரிய அறைக்கதவின் வாசலில் நின்றபடி ஜனனி போன் செய்து உள்ளே வருவதற்கான உத்தரவிற்காக காத்திருந்தாள். அந்த அறைக் கதவில் சித்தார்த் அபிமன்யூ சேர்மன் என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கபட்டிருந்த பெயர் பலகையில் அவன் பெயருக்கு பின்னால் MBBS, MS, MD, MBA என்ற பல பட்டங்கள் அவனின் படிப்பை பறைச்சாற்றின. 

 

அவனுக்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது, தான் எடுத்த முடிவு சரியே என்று தோன்றியது நேத்ராவுக்கு. ஜனனி இப்போது அறைக்குள் செல்லவும், நேத்ராவும் அவளை பின் தொடர்ந்தாள். அந்த மருத்துவமனை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது தான் என்றாலும், அவன் இருந்த அறைக்குள் சென்ற போது ஏதோ சுவிசர்லாந்திற்குள் நுழைந்தது போல இருந்தது. அந்த அளவிற்கு ஏசியின் குளுமை அதிகமாக இருந்தது.

 

சுழற்நாற்காலியில் அமர்ந்தபடி, மேஜையில் இருந்த தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ வேலையில் இருந்தான் சித்தார்த் அபிமன்யூ.

 

அவனின் வெண்ணிற தேகத்திற்கு அவன் அணிந்திருந்த வெண்ணிற சட்டை மிகவும் அழகாக இருந்தது. மேல் சட்டையில் போடாமல் விட்டிருந்த இரண்டு பட்டன்களின் வழியே தெரிந்த நெஞ்சத்து கரு நிற கேசங்களும், முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்ததால் முழங்கையில் இருந்த முடிகளும் அவன் வெண்ணிறத்துக்கு போட்டியாக தங்கள் இருப்பை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தன.

 

அலையலையாய் இருந்த கேசத்தை ஒற்றை கையால் கோதிவிட்டபடி லேப்டாப்பில் பார்வையை பதித்திருந்தான். அவன் மீசையும் தாடியும் கூட அவன் அழகை கூட்டி இருந்தது. அவன் கவனிக்காததால் நேத்ரா தன் கணவனை நிறுத்தி நிதானமாக ரசித்து பார்த்து தன் கண்களில் நிரப்பிக் கொண்டாள். 

 

சற்று நேரம் பொறுமையாக காத்திருந்த ஜனனி தனக்கு நேரமாவதால், “டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்

 

“யெஸ்” என்ற படி நிமிர்ந்து தன் சாய்வு நாற்காலியில் தன் இருகைகளையும் கோர்த்துக் கொண்டு கைகளின் மேல் தலையை சாய்த்தபடி சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த் அபிமன்யூ

 

“சொல்லுங்க ஜனனி” என்றவனின் பார்வை அவள் பின்னால் நின்றிருந்த நேத்ரநயனியின் மேல் நிலைத்திருந்தது.

 

அவளை அப்போது தான் பார்ப்பது போல மேலிருந்து கீழாக ஆராய்ச்சி பார்வை பார்த்தான். நேத்ரா சட்டென்று பார்வையை தழைத்துக் கொண்டாள்.

 

“சார் இவங்க மிஸ்.நேத்ரநயனி, நீங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்க சொன்னீங்களே, இப்போ வேலையில் ஜாயின்ட் பண்ணிக்க வந்திருக்காங்க, எந்த டிபார்ட்மென்ட்ல இவங்களை விடுறது?” என்று கேட்டாள் ஜனனி.

 

மற்றதையெல்லாம் பின்னுக்கு தள்ளி, ஒற்றை புருவத்தை உயர்த்தி, “மிஸ்.நேத்ரநயனி?” என்றான் கேள்வியாக.

 

“எஸ் சார்” என்றாள் ஜனனி. 

 

அவனோ ஜனனியை பார்க்காமல் நேத்ராவை அழுத்தமாக பார்த்து, “அப்படியா?” என்றான் ஆச்சரியமாக கேட்பது போல, ஆனால் அவன் குரலில் ஒளிந்திருந்த நக்கல் நேத்ராவுக்கு மட்டுமே புரிந்தது.

 

ஆனாலும் முதலாளியாக அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும் என்று மேலும் கீழுமாக ஆமாம் என்பது தலையை ஆட்டினாள்.

 

“ஓகே, மிஸ். எந்த துறையில உங்களுக்கு அனுபவம் இருக்கு” என்றான், ஆனால் அந்த மிஸ்ஸில் மட்டும் அதிக அழுத்தத்தை கூட்டியிருந்தான்.

 

“எஎந்த அனுபவமும் இல்லை டாக்டர்” என்றாள் தடுமாறிய குரலில்.

 

இப்போது ஜனனியிடம் திரும்பி, “வெளி நோயாளிகளை பார்க்கும் பகுதியில் இருக்கும் முதன்மை நர்சை என் அறைக்கு வரச்சொல்லுங்க ஜனனி” என்று அவளை அனுப்பினான் சித்தார்த்.

 

அவள் சென்றதும், “சொல்லுங்க மிஸ், நயனி” என்றான் நக்கலான குரலில்.

 

இரண்டாவது முறை அழைத்திருக்கிறான், ஆனால் எல்லாரையும் போல நேத்ரா என்றழைக்காமல் நயனி என்றிருக்கிறான். உள்ளுக்குள் ஒரு பக்கம் குளிர்ந்தாலும் அவனின் குற்றம் சாட்டும் பார்வையில் அனலாகவும் இருந்தது.

 

“என்ன பேச்சையே காணோம், நேத்து படபட பட்டாசாக வெடிச்சீங்க, நீங்களே தனியா போய் ஹாஸ்டல்ல தங்கிட்டிங்க போலிருக்கு? இன்னைக்கு என்ன ஆச்சு?” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்து “என்ன டிரஸ் இது? சோள காட்டு பொம்மைக்கு மாட்டிவிட்டா மாதிரி?” என்றான்.

 

இப்போது நிமிர்ந்து அவனை கோபத்துடன் பார்த்தவள் சற்றே தான் இருக்கும் இடத்தையும்,. அவன் நிலையையும் உணர்ந்தவளாக குரலை தழைத்து, “என்கிட்ட இருக்கிறதை தான் உடுத்த முடியும் சார்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஆனால் இந்த மருத்துவமனையில் வேலை செய்யறதுக்கு ஒரு டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கணும். மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸே பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளி போல இருந்தால், இங்கே வர்றவங்க இந்த மருத்துவமனையை பத்தி என்ன நினைப்பாங்க. அதனால உங்க டிரஸ்ஸிங் சென்சை கொஞ்சம் மாத்திக்கோங்க மிஸ்.நயனி” என்றான் அழுத்தமான குரலில்.

 

அப்பவும் விடாமல், “எப்படியும் வேலைக்கு ஜாய்ன் ஆன பின்னாடி யுனிபார்ம் தானே சார் போட போறேன்” என்றாள்

 

“அப்பவும் பெரிய சைஸ் யுனிபார்ம் மாட்டிட்டு சோள காட்டு பொம்மை போல நிக்காதீங்கனு தான் சொல்றேன், புரியுதா?” என்றான் எரிச்சலான குரலில்.

 

அடேங்கப்பா, இவனோட மனைவியாக இருக்கறதை விட நர்ஸ் ஆக வேலைப் பார்ப்பது அதை விட கஷ்டம் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டாள் நேத்ரநயனி.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!