Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!மிளகாய் பழுத்தது

மான்விழி – 06

நேத்ரா யாரோ ஒரு ஆடவன் பின்னால் அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தயங்கியபடி சென்று கொண்டிருக்க, சித்தார்த் கூட்டத்தில் அவளை அழைக்கவும் முடியாமல் வேகமாக அவளருகே செல்லவும் முடியாமல் தத்தளித்தான்.

 

அவசரமாக கூட்டத்தை விலக்கி கொண்டு வேகமாக சென்றவன், “ஹலோ, ஏய், எக்ஸ்கியூஸ்மீ” என்று பல பதங்களில் அழைத்து பார்த்துவிட்டான்.

 



Advertisement

அவள் நினைவெல்லாம் முன்னால் சென்று கொண்டிருப்பவனை எப்படி அழைப்பது என்பதிலேயே இருக்க, சித்தார்த்தின் முயற்சியை அவள் அறிந்திருக்கவில்லை.

 

வேகத்தை குறைத்து நின்றுவிட்டவன் “ப்பூ” என்று இதழ்குவித்து ஊதி தலையை உலுக்கிக் கொண்டு அவளை பார்த்து, “ஏய் சோடாபுட்டி” என்றான் சத்தமாக.

Advertisement

 

Advertisement

சிறு வயதிலிருந்து இந்த வார்த்தையை கேட்டு கேட்டு எரிச்சல் அடைந்தவளாயிற்றே. சட்டென தன்னிச்சையாக திரும்பி பார்த்தாள் நேத்ரா. தன்னை பார்த்து தான் சொல்கிறானா என்று சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்தாள். அவனும் அவளை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். மற்றது எல்லாம் மறந்து விட வேகமாக அவனருகில் வந்து, “யாரை பார்த்து சோடாபுட்டினு சொல்றீங்க” என்றாள் கோபமாக.

 

“உன் பெயர் தெரியலை, வேறெப்படி கூப்பிட முடியும், அதான் கண்ணாடி போட்டு இருந்ததால அப்படி கூப்பிட்டேன் சாரி” என்றான்.

Advertisement

 

“நீங்க ஏன் என்னை கூப்பிடணும்?” என்று கோபம் மாறாமல் கேட்கும் போதே அவளுக்கு ஒன்று உறைத்தது. இவன் குரலும், உயரமும், அணிந்திருக்கும் சட்டையும் சித்தார்த் அபிமன்யூவை நினைவூட்டுகிறதே, அப்படி என்றால் இவன் தான் அவளுடைய கணவனா? 

 

அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள், சிவந்த நிறம், ஆறடிக்கும் அதிகமான உயரத்தில், கட்டுக்கோப்பான உடற்கட்டுடன், கூர்மையான விழிகளும், அழுத்தமான உதடுகளும், கருகரு மீசை, டிரிம் செய்யப்பட்ட தாடி, கலைந்திருந்த கேசமும் என அவன் பார்க்க படு ஸ்மார்ட்டாக திரைப்பட கதாநாயகன் போல இருந்தான். பேண்டில் இரண்டுகைகளையும் வைத்துக் கொண்டு அவன் நின்றிருந்த விதம் எந்த பெண்ணையும் திரும்பி பார்க்க வைக்கும்.

 

ச்சே ச்சே இவன் அவளுடைய கணவனாக இருக்க வாய்ப்பில்லை. இவன் யாராவது பிரபலமாக இருக்க கூடும் என்று நினைத்தவள் திரும்பி அதே நிற சட்டையில் சென்று கொண்டிருக்கும் இன்னொருவனை தவிப்புடன் திரும்பி பார்த்தாள்.

 

அவள் இன்னும் தன்னை இனம் கண்டுகொள்ளவில்லை என்று உணர்ந்தவன், சட்டென அவள் அருகில் வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியை சுட்டிக்காட்டி, “இதை நான் தான் கட்டினேன். இப்போ தெரியுதா நான் யார்னு?” என்றான்.

 

அதிர்ந்து விழித்தவள், மீண்டும் அவனை நன்றாக அளவெடுக்கும் பார்வை பார்த்தாள். “என்னை அப்புறமா பார்க்கலாம், கார்ல தூங்கிட்டு இருந்தவ, எதுக்கு என்னை தேடிட்டு வந்தே, முதல்ல அத சொல்லு” என்று கேட்டான்.

 

அப்போது தான், அவள் அவனை தேடிவந்ததற்கான காரணத்தை நினைவு கூர்ந்தவளாய் நெற்றியை தன் விரல்களால் தேய்த்தபடி, “காரை ஓரமாக நிறுத்த சொன்னாங்க, யாரோ மினிஸ்டர் வராங்களாம்” என்றாள்.

 

“சரி வா போகலாம், வேறே எங்காவது போய் சாப்பிட்டுக்கலாம்” என்றபடி அவசரமாக காரை நோக்கி சென்றான். அவன் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக சென்றவள் அப்போதும் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

 

சித்தார்த் வேகமாக காரை கிளப்பி வெளிப்பக்கமாக ஓட்டினான். நேத்ரா இப்போது தான் எந்த வகையிலும் சித்தார்த்துக்கு பொருத்தமானவள் இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டிருந்தாள். அவன் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவத்தில் முதுகலை படித்தவன், அவளோ வெறும் டிப்ளமா நர்சிங்.

 

நேத்ரா இருந்த ஊரிலேயே பணக்காரர் என்றால் அது மகேந்திரன் தான். அப்படிப் பட்ட பணக்காரரின் மகன், மிகப்பெரிய மருத்துவமனையின் முதலாளிக்கு, வயலில் வேலை செய்யும் கூலிக்காரரின் மகள் எப்படி ஒத்து போவாள்?

 

சரி, அழகாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தனியாக பார்த்தாலே பார்க்க சுமாராக இருப்பாள்., இவ்வளவு அழகாக இருப்பவன் அருகில் நின்றால் அவ்வளவு தான். போதாக்குறைக்கு கண்ணாடி வேறு முகத்தின் அழகை கெடுக்குது. ச்சே, திருமணமாகி முதன் முதலாக அவன் என்னை “சோடாபுட்டி” என்றா அழைக்க வேண்டும்? என்று மனம் சுணங்கியது.

 

“உன் பேர் என்ன?” என்ற சித்தார்த்தின் குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

 

“பேர் தெரியாமலே தாலிக் கட்டி மனைவியாக்கிட்டானேனு பார்க்கிறியா? என்ன பண்றது? கட்டாயத்துல நடந்த கல்யாணம், நானும் குழப்பத்துல இருந்ததால நேத்து நைட் உன்கிட்ட பேரை கேட்க மறந்துட்டேன்” என்றான் சித்தார்த் பாதையில் கவனத்தை வைத்தபடி.

 

“நேத்ரநயனி” என்றாள்

 

“என்ன நேத்ரநயனியா? பேரு ரொம்ப புதுசா இருக்கே?” என்றான் ஆச்சரியமாக

 

“நேத்ரா, நயனி இதுக்கெல்லாம் அழகிய கண்களை உடையவள்னு அர்த்தமாம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் கண்ணாடி வழியே அவன் சிரிப்பை அடக்குவதை கவனித்தாள்.

 

“ஏன் சிரிக்கறீங்க?” என்று கேட்டாள்.

 

“இல்ல அழகான கண்களை உடையவள்னு பேரு வச்சிருக்காங்க, கண்ணாடி போட்டு இருக்கியே அதான் சிரிப்பு வந்துடுச்சு. ஆமா இரண்டு நாளா நீ கண்ணாடி போட்டே நான் பார்க்கலையே, ஏன் அப்போவெல்லாம் கண்ணாடி போடலை?” என்று கேட்டான்.

 

அவனை பொறுத்தவரை சாதாரணமாகத் தான் கேட்டான், அவளுக்கு தான் அவமானமாக தோன்றியது. “கல்யாணத்தில் மணமேடையில் உட்காரும்போது எதுக்கு கண்ணாடி, போட்டோவில் நல்லா இருக்காதுனு சொல்லிட்டாங்க” என்றாள் தன் மனக்குமறலை அடக்கியபடி

 

“சரி கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்த பின்னாடியும் கண்ணாடி போட்ட மாதிரி தெரியலையே” என்றான் அவன்

 

இப்போ இந்த கண்ணாடி தான் இவனுக்கு பிரச்சனையா என்று எரிச்சலாக இருந்தது. “நான் கண்ணாடி போட்டு இருந்தால் மட்டும் உங்களுக்கு தெரிய போகுதா? நீங்க தான் வீட்டுக்குள் நுழைந்ததுமே உங்க அறைக்கு போயிட்டீங்க, அப்புறம் நேத்து ராத்திரியும் கண்ணாடிக்கு அவசியம் இருக்காதுனு சொல்லி அத்தை என்னை கண்ணாடியே போட விடலை” என்றாள்.

 

“ஏன் கண்ணாடிக்கு அவசியமே இருக்காதுனு சொன்னாங்க?” என்று கேட்டான் வேண்டுமென்றே.

 

அவள் பதில் ஏதும் கூறாமல் வெளிப்பக்கமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். மனதின் ஓரத்தில் பாரம் ஏறியது, வெடுக்கென்று தன் முகத்தில் இருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். 

 

கார் கண்ணாடி வழியே அவளின் முகபாவத்தையும் செய்கையும் பார்த்துக் கொண்டு வந்த சித்தார்த் எதுவும் பேசாமல் ஒரு ரெஸ்டாரண்ட் முன்னே காரை நிறுத்தினான்.

 

இருவரும் உள்ளே சென்று எதிரெதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டனர். “என்ன சாப்பிடுறே?” என்று கேட்ட சித்தார்த்தை அவள் நிமிர்ந்தும் பார்க்காமல் பதில் ஏதும் சொல்லாமல் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.

 

முதன் முதலாக ஒரு பெண், அதுவும் மனைவியாக வந்த மறுநாளே தன்னிடம் உதாசீனத்தை காட்டவும் சித்தார்த்தின் முகம் இறுகியது. அவளை அழுத்தமாக பார்த்தபடி உணவுக்கான ஆர்டரை கொடுத்தான். ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்ததும் சித்தார்த்தே அவற்றை அவள் எதிரே நகர்த்தி சாப்பிட சொல்லவும், மறுக்க முடியாமல் தட்டில் இருந்த உணவுகளை வேண்டா வெறுப்பாக கொறித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.

 

அவளின் இறுக்கத்தை குறைத்து எப்படியாவது அவளை இயல்பாக பேச வைக்க வேண்டும் என்று நினைத்தான் சித்தார்த் அபிமன்யூ.

 

“ஏன் மறுபடியும் கண்ணாடி போடாம, கைப்பையில் வச்சிருக்க? பவர் கண்ணாடியா இருந்தால் போடாமல் இருக்காதே, எடுத்து போட்டுக்க” என்று அவன் மருத்துவனாக பேச போக நேத்ராவிற்கு பொறுமை பறந்து விட்டது.

 

“உங்கள மாதிரி எல்லாரும் சின்ன வயசுல இருந்து சோடாபுட்டினு கூப்பிட்டு கூப்பிட்டு தான் கண்ணாடி போடறதை வெறுக்கிறேன். இப்போ என்ன? நான் அந்த கண்ணாடியை போட்டுக்கணும், நீங்க என்னை சோடாபுட்டினு கிண்டல் செய்யணும் அவ்வளவு தானே” என்று வெடித்தவள் தன் கைப்பையில் இருந்த மூக்கு கண்ணாடியை அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்டாள்.

 

சித்தார்த் அபிமன்யூவிடம் இதுவரை யாருமே இப்படி எடுத்தெறிந்து பேசியதே இல்லை. அவள் பெயர் தெரியாததால் தானே அப்படி கூப்பிட்டான், அவன் என்னவோ அவளை வேண்டுமென்றே கிண்டல் செய்தது போல அவனிடம் கோபப்படுகிறாளே?

 

அவன் யார்? பிரபல மருத்துவமனையின் சேர்மன். அனைத்து ஊழியர்களும் அவனை பார்த்து நடுங்குவார்கள். விருப்பமில்லாத திருமணம் தான் என்றாலும் ஏதோ அவன் தந்தையுடைய நண்பரின் மகள், அதுமட்டுமில்லாமல் தந்தையின் தலைமையில் திருமணம் நடந்ததால் அதற்கு மதிப்பு கொடுத்து பேசினால் ரொம்ப துள்ளுறாளே” என்று அவனுக்கும் கோபம் வந்தது.

 

“நீ கண்ணாடி போடு, போடாம இரு, இட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ், நெக்ஸ்ட் என்ன பண்ண போறதா உத்தேசம்?” என்றான் கடுமையான குரலில்.

 

“என்னை எதாவது பெண்கள் விடுதியில் சேர்த்திடுங்கள், நாளையிலிருந்து நான் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றாள் நேத்ரா சற்றும் யோசிக்காமல்

 

“என் மனைவினு சொல்லிக்கிட்டு நீ விடுதியில் தங்குவ, என் மருத்துவமனைக்கே நர்ஸ் வேலைக்கு வருவியா? அது எனக்கு தான் அவமானம், வேறே சொல்லு” என்றான் அழுத்தமான குரலில்.

 

சற்று நேரம் யோசித்தவளுக்கு வேறு எந்த யோசனையும் வராததால், “நான் உங்க மனைவினு சொன்னால் தானே உங்களுக்கு அவமானம். நான் யார்கிட்டயும் உங்க மனைவினு சொல்ல மாட்டேன். மற்ற நர்ஸ் கூட வேலை செய்துட்டு என் வழியில் போய்க்கிறேன். நீங்க பரஸ்பர விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துட்டு, அதில் எப்போ கையெழுத்து போட சொன்னாலும் நான் போட தயார்” என்றாள் நேத்ரா தீர்மானமாக.

 

நேத்ராவை கூர்மையாக பார்த்தான் சித்தார்த். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு அவளின் தந்தையின் நிலையை பற்றி சற்றும் யோசிக்காமல் இத்தனை தீர்மானமாக விவாகரத்துக்கு சம்மதம் என்று அவளே சொல்லும் போது, அவன் என்ன அவளிடம் கெஞ்ச வேண்டுமா? அப்படி கெஞ்சி அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள இது ஒன்றும் விருப்பப்பட்டு நடந்த திருமணம் இல்லையே?

 

தோள்களை குலுக்கிக் கொண்டான். “உன் விருப்பம். இவ்வளவு தெளிவா பேசற உனக்கு மகளிர் விடுதியை பார்த்துக் கொள்ள தெரியாதா என்ன?

நாளைக்கு நீ வந்து ஆஸ்பிட்டல்ல ஜாய்ன் ஆகிக்கலாம். நீ கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லுவியாே? கல்யாணம் ஆகலைனு சொல்லுவியோ, அது உன் விருப்பம், ஆனால் என் மனைவினு மட்டும் சொல்லாதே” என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டிலிருந்து சில ரூபாய் நோட்டுக்களை டேபிளின் மீது வைத்து விட்டு அங்கிருந்து அவன் மட்டும் கிளம்பி சென்றான்.

 

அவள் சொன்ன வார்த்தைகளையே தான் அவனும் திருப்பி சொன்னான். அவள் சொன்ன போது அந்த வார்த்தைகளின் வீரியம் உணராதவள், இப்போது அவன் சொன்ன போது இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது.

 

இப்படி அவளை தனியே விட்டுச் செல்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னிச்சையாக கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கவும் மறந்து அப்படியே சிலையென அசையாமல் அமர்ந்திருந்தாள்.

 

கோபமாக வெளியேறிய சித்தார்த், தன் காரில் அமர்ந்து தன் கோபத்தை காரின் வேகத்தில் காட்டினான்.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!