Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 15

ஜமுனா சொல்லியிருந்தபடி அடுத்த அரைமணிநேரத்தில் பாண்டி நலமுடன் மருத்துவமனைக்குள் நோயாளிகள் செல்லும் வழியில் சென்று அட்மின் பிளாக் முன்னால் நின்றான்.

 

ஜனனி தன் வேலையை முடித்துக் கொண்டு, அட்மின் அறைக்கதவை மூடிவிட்டு திரும்ப எதிரில் ஒருவன் கருத்த உருவத்தில் தடிமனாக நின்றிருப்பதை பார்த்து பயந்தே விட்டாள். “யார் நீ? எதுக்கு இங்கே நிக்கிறே?” என்று கேட்டாள்.

 



Advertisement

“காலையில் இங்கே நர்ஸ் வேலைக்கு வந்த என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலை. இன்னும் அவ என்ன பண்ணிட்டு இருக்கா இங்கே? அவளை அனுப்புங்க முதல்ல” என்றான் பாண்டியன், போதையில் அவன் நாக்கு குழறியது, கண்கள் சிவந்திருந்தது.

 

அவன் மேல் வந்த சாராயத்தின் நெடியை தாங்க முடியாமல் மூக்கில் கைவைத்தபடி “அதுக்கு ஏன் இங்கே வந்து கேட்கறீங்க, விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ணுங்க, போன் செய்யுங்க வருவாங்க. எதாவது அறுவை சிகிச்சை டியூட்டில இருக்காங்களோ என்னமோ” என்றாள் ஜனனி.

Advertisement

 

Advertisement

“அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ என் பொண்டாட்டி இங்கே வந்தே ஆகணும். அவ வராமல் இங்கிருந்து போக மாட்டேன்” என்றான் பாண்டி ஆக்ரோஷமான குரலில்.

 

அப்போது தான் கிளம்புவது போல அந்த பக்கமாக வந்த ஜமுனா, “என்ன ஜனனி, இன்னும் கிளம்பலையா நீ?” என்றாள்.

Advertisement

 

“இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு சிஸ்டர். இந்த ஆளு வேறே கிளம்பற நேரத்துல வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு” என்றாள் ஜனனி கடுப்புடன்.

 

“ஏன் என்னவாம்?” என்று அப்போது தான் பாண்டியை பார்ப்பது போல அந்நியப்பார்வை பார்த்தாள் ஜமுனா.

 

“இவர் மனைவி இங்கே வேலை செய்யறாங்களாம். அவங்களை இப்பவே கூப்பிடனுமாம். இவர் மனைவி யாருனு தெரியலை. அவங்க டியூட்டி முடிச்சுட்டு இன்னும் கிளம்பலைனா எதாவது எமெர்ஜென்சி டியூட்டி போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ அவங்க யாருனு பார்த்து, அவங்களுக்கு பதிலா நான் வேறே நர்ஸை கன்வின்ஸ் பண்ணி டியுட்டி பார்க்க சொல்லணும். ஏற்கனவே இன்னைக்கு ரொம்ப வேலை சிஸ். டயர்டா இருக்கு” என்றாள் ஜனனி சோர்வாக.

 

“ஜனனி உன்னை பார்த்தாலே ரொம்ப டல்லா தெரியறயே. நான் வேணும்னா இவர் மனைவிக்கு பதிலா இன்னைக்கு டியூட்டி பார்க்கிறேன். ஆளை பார்த்தால் குடிச்சுட்டு வந்திருப்பான் போலிருக்கு. அவங்களை கூப்பிட்டு இவரோட அனுப்பிடு.” என்றாள் ஜமுனா.

 

“ரொம்ப நன்றி சிஸ்” என்றவள் பாண்டியிடம் திரும்பி, “சரி உங்க மனைவி யாருனு சொல்லுங்க கூப்பிடுறேன்” என்றாள் அலட்சியமாக தன் கைப்பையில் இருந்த அவளின் கைப்பேசியை எடுத்தபடி.

 

“என் மனைவி பெயர் நேத்ரா” என்றான் பாண்டி

 

ஜனனி அதிர்ச்சியுடன் திரும்பி ஜமுனாவை பார்க்க, அவளும் அதிர்ச்சியான முகபாவத்தை முயன்று வரவழைத்திருந்தாள். “ஹலோ மிஸ்டர்! இங்கே நேத்ராங்கிற பேர்ல ஒரே பெண் தான் வேலை செய்யறாங்க. அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க ஏதோ இடம் மாறி வந்திருக்கீங்க” என்றாள் ஜனனி.

 

“நான் கரெக்டா தான் வந்திருக்கேன்” என்றவன் தன் மொபைலில் அவனுடன் மணக்கோலத்தில் நின்றிருந்த நேத்ராவின் போட்டோவை எடுத்து ஜனனியின் முன்னால் நீட்டி, “நீங்க சொல்ற நேத்ரா இவங்களா பாருங்க” என்றான்.

 

அப்போது அந்த பக்கமாக நடமாடிக் கொண்டிருந்த ஊழியர்கள் நோயாளிகள் என அனைவருமே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

 

ஜனனியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, “ஜமுனா சிஸ்டர், இந்த நேத்ராவை பார்த்தீங்களா? கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லி வேலைக்கு வந்து சேர்ந்திருக்காள்?” என்றாள் வாயை பிளந்து.

 

“யாரை நம்பறதுனே தெரியலையே ஜனனி. இவ்வளவு பெரிய பொய்யை சொல்லிட்டு உறுத்தலே இல்லாமல் வேலை செய்யறாளே! முதல்ல அவளை கூப்பிட்டு என்ன ஏதுனு விசாரணை செய். நான் போய் நம்ம டாக்டருக்கு விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வர்றேன்” என்றாள் ஜமுனா.

 

“சரிங்க சிஸ்டர், அவர் அவளை நல்லவள்னு நினைச்சு நிறைய சலுகை கொடுத்திட்டு இருக்காரு. நீங்க அவரை கூப்பிடுங்க. நான் அந்த நேத்ராவை விசாரிக்கிறேன்” என்றாள் ஜனனி.

 

ஜமுனா பாண்டியிடம் கண்களால் ‘நீ நடத்து’ என்பது போல சைகை செய்து விட்டு சித்தார்த் அபிமன்யுவை தேடி அவன் அறைக்கு சென்றாள். அவன் அறையில் இல்லை, லேப்டாப் மட்டும் மேஜை மேல் இருக்கவும், அவன் மருத்துவமனையில் தான் இருக்கிறான் என்று அவனை தேடிச் சென்றாள் ஜமுனா.

 

****** 

 

அப்போது தான் நேத்ரா தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று முகம் கழுவி தளர்வான சுடிதாரை அணிந்தாள். அதற்குள் ஜனனியிடமிருந்து அழைப்பு வரவும், “சொல்லுங்க ஜனனி” என்றாள்.

 

“நேத்ரா அஞ்சு நிமிஷத்தில அட்மின் பிளாக்கிற்கு வாங்க சீக்கிரம்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் ஜனனி.

 

இந்த நேரத்தில் ஜனனி எதற்கு அழைக்கிறாள்? அதுவும் அவசரமாக வரச்சொல்கிறாளே என்ற யோசனையோடு, தன் உடையைப்பற்றி கவலைபடாமல் மேலாடையை போர்த்திக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் நேத்ரா.

 

ஏதாவது அவசர சிகிச்சைக்காக வரச் சொல்கிறாளோ என்னவோ என்று தன் சீருடையை கையில் எடுத்துக் கொண்டு அட்மினை நோக்கி அவசரமாக ஓடினாள்.

 

மூச்சிறைக்க வந்த நேத்ரா, அங்கே கைகளை கட்டியபடி நின்றிருந்த ஜனனியை நெருங்கி அவளை கேள்வியாக பார்க்க, அவளோ தன் எதிரே இருந்த பாண்டியை கண்களால் காட்டினாள். ஒன்றும் புரியாமல் பின்னால் திரும்பி பார்த்த நேத்ராவின் கண்களில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியை ஜனனி கவனிக்க தவறவில்லை.

 

“என்ன நேத்ரா இதெல்லாம்? இவர் நீங்க தான் அவரோட மனைவினு சொல்றாரு. எதுக்கு கல்யாணம் ஆனதை மறைச்சீங்க? நாங்க யாரும் பேச்சிலர்க்கு தான் இங்கே வேலைனு சொல்லலையே?” என்றாள் ஜனனி குற்றம் சாட்டும் குரலில்.

 

“என்ன? நான் அவனோட மனைவியா? இல்லை அவன் பொய் சொல்றான்!” என்று அலறிவிட்டாள் நேத்ரா.

 

“ஏண்டி, புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வர்றது சகஜம் தான் அதுக்காக நான் உன் புருஷன் இல்லனு ஆயிடுமா? என் கூட கிளம்புடி முதல்ல” என்று அதட்டினான் பாண்டி.

 

“ஓ நேத்து ராத்திரி உன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு தான், காலையில் பெட்டி படுக்கையோட மருத்துவமனை விடுதியிலேயே தங்கிக்கிறேன்னு சொன்னியா? கல்யாணம் ஆனவ, எதுக்காக கல்யாணம் ஆகலைனு பொய் சொன்னே?” என்றாள் ஜனனி.

 

“அய்யோ ஜனனி, அவன் பேச்சை நம்பாதீங்க. அவன் என்னவோ குடிச்சுட்டு உளர்றான். அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல” என்றவள், பாண்டியிடம் திரும்பி, “ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லைனா போலீசை கூப்பிடுவேன்” என்றாள் கோபமாக.

 

“போலீசை கூப்பிடுவியா? கூப்பிடு, என் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வையுங்கனு அவங்க கிட்டயே நியாயம் கேட்கிறேன்” என்றான் பாண்டி.

 

பாண்டி தன்னை பெண்டாட்டி என்று அத்தனை பேர் முன்பு சொல்லவும், நேத்ராவிற்கு கட்டுகடங்காமல் ஆத்திரம் பொங்கிவிட, “யாருக்கு யாருடா பொண்டாட்டி?” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனனி. கொஞ்சநேரத்தில் இங்கே கைகலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி, அவசரமாக செக்யூரிட்டிகளை போன் செய்து வரச் சொன்னாள். அதுவரை அசட்டையாக அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் கூட்டமாக கூடி நின்று சுவாரசியமாக வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர்.

 

நேத்ரா இவ்வளவு தைரியமாக எல்லார் முன்னாடியும் தன் கன்னத்தில் அறைவாள் என்று பாண்டி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் அறைந்த கன்னத்தில் தன் கையை வைத்து தேய்த்தபடி அவளை எரித்துவிடுவது போல கோபமாக பார்த்தான்.

 

*******

 

அதே நேரம் அறுவை சிகிக்சை முடித்துவிட்டு, தன் மேலங்கியை கழட்டிக் கொண்டிருந்த சித்தார்த்தை நோக்கி வேகமாக வந்தாள் ஜமுனா, “டாக்டர், டாக்டர்” என்று தன்னெதிரே மூச்சிரைக்க வந்து நின்றவளை பார்த்து, “என்னாச்சு சிஸ்டர்? எதுக்கு இவ்வளவு பதட்டமா வர்றீங்க” என்றான்.

 

“டாக்டர், இந்த நேத்ரா ஒரு பிராடு. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லி இங்கே வேலைக்கு சேர்ந்திக்கா தெரியுமா? அது தெரிஞ்சால் நீங்களே அவள் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவீங்க” என்றாள் ஜமுனா பரபரப்புடன் மூச்சு வாங்கியபடி.

 

ஜமுனாவின் பேச்சில் சித்தார்த்தின் நரம்புகள் கோபத்தில் முறுக்கேற, “என்ன விஷயம்னு நேரடியா சொல்லுங்க. அதைவிட்டு தேவையில்லாமல் யாரையும் பிராடுனு எல்லாம் சொல்லிட்டு இருக்காதீங்க” என்றான் கோபமாக.

 

“சாரி டாக்டர், இங்கே நடக்கிறதை பார்த்த அதிர்ச்சியில் அப்படி பேசிட்டேன். இந்த நேத்ராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம். இங்கே கல்யாணம் ஆகலைனு சொல்லி வேலைக்கு சேர்ந்திருக்கா” என்றாள் ஜமுனா அவசரமாக.

 

சித்தார்த் “அப்படியா? இருந்துட்டு போகட்டுமே. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று நிதானமாக கேட்கவும் சப்பென்று ஆகிவிட்டது ஜமுனாவிற்கு.

 

இந்த விஷயத்தை சொன்னாலே சித்தார்த்திற்கு கோபம் வந்து நேத்ராவை வெளியே அனுப்பி விடுவான் என்று பார்த்தால் அவன் சாதாரணமாக பேசவும் என்ன செய்வதென்றே புரியவில்லை ஜமுனாவிற்கு

 

“எனக்கெதுவும் பிரச்சனை இல்லை டாக்டர். ஆனால் அவளோட புருஷன் தான் வந்து ஆஸ்பிட்டல் முன்னாடி நின்னுட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு” என்றாள் இறங்கிய குரலில்

 

தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்ளும் பொருட்டு “என்ன சொன்னீங்க? யாரோட புருஷன் வந்து பிரச்சனை பண்றது?” என்றான் அவசரமாக

 

“நேத்ராவோட புருஷன் பாண்டி” என்று ஜமுனா சொல்லி முடிக்கும் முன் ஆக்ரோஷத்துடன் அங்கிருந்த ஸ்டாண்டை காலால் எட்டி உதைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டையினை முழங்கைவரை மடித்து விட்டுக் கொண்டு அங்கிருந்து கோபமாக சென்றான் சித்தார்த்.

 

நேத்ராவிற்கு திருமணம் ஆனதை சொன்னதற்கு எந்த எதிர்வினையும் காட்டாதவன், இப்போது அவள் கணவன் பாண்டி பிரச்சனை செய்கிறான் என்று சொன்னதற்கு ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடன் செல்கிறான் என்று யோசித்தபடி, சித்தார்த்தின் பின்னால் ஓடினாள் ஜமுனா. அவன் சென்ற வேகத்திற்கு ஈடாக அவளால் நடக்க முடியாமல் மூச்சு வாங்க ஒடிக் கொண்டிருந்தாள்.

 

********

 

கன்னத்தில் கைவைத்தபடி நின்று நேத்ராவை வெறித்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்த பாண்டியின் கண்களில் அவளின் இலகுவான சுடிதாரின் வழியே தாலிக்கயிறு கொஞ்சமாக தெரிந்தது.

 

அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் எட்டி, அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பற்றி இழுத்தான். நேத்ரா அதிர்ந்து போய் அவன் கையில் இருந்த தாலியைப் பற்றிக் கொண்டு “மரியாதையா கையை எடு” என்றாள்.

 

“யாருக்கு யாருடா பொண்டாட்டினு கேட்டே இல்ல? அப்போ நான் கட்டின தாலியை கழட்டி என்கிட்ட கொடுத்திடு. இல்லைனா மரியாதையா என்கூட வந்திடு” என்று மிரட்டினான்.

 

நேத்ரா பாண்டியின் கையில் சிக்கயிருந்த தாலியை எப்படியாவது காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்க, அங்கே ஜனனி, செக்யூரிட்டி, ஊழியர்கள் என அனைவரும் நேத்ராவின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ந்து போய் பேச்சற்று நின்றனர்.

 

அங்கிருந்த ஏதோ ஒரு வயதான பெண்மணி, “ஏம்மா, குடும்ப சண்டை எல்லாம் வீட்டுக்குள்ள வச்சுக்கணும். இப்போ பாரு, இந்தாளு தாலியை கழட்ட வர்றான். பேசாமல் புருஷன் கூட போய் வாழற வழியை பாரும்மா” என்று அறிவுரை சொன்னார்.

 

“அய்யோ இவன் என்னோட புருஷனே இல்ல? இந்த தாலி அவன் கட்டினது இல்ல? நான் எப்படி அவன் கூட போக முடியும்?” என்று உச்சப்பட்ச கோபத்தில் கத்தினாள் நேத்ரா. கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கன்னங்கள் தான்டி ஓடிக் கொண்டிருந்தது. 

 

“அப்போ யாரு கட்டினது?” என்று அந்த பெண்மணி மீண்டும் கேள்வி கேட்க, நேத்ரா அங்கிருந்த அனைவரையும் பார்த்து பேச்சற்று போய் தலைகுனிந்து நின்றாள்.

 

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாண்டி, மீண்டும் அவளருகே சென்று, அவள் தாலியை கையில் ஏந்தி. “இப்போ தெரியுதா? அவளால பதில் சொல்ல முடியாது, ஏன்னா இந்த தாலியை நான் தான் கட்டினேன்” என்றான் பாண்டி.

 

“தாலியை யாரு கட்டினது?” என்று மீண்டும் ஒரு ஆண் குரல் தன் பின்னால் அழுத்தமாக கேள்வி கேட்கவும்,

 

பாண்டி திரும்பி தன் பின்னால் நின்றிருந்தவனிடம் சலிப்புடன் “அட எத்தனை முறை தான் சொல்றது, நான் தான்…” என்று சொல்லி முடிக்கும் முன்  “அய்யோ அம்மா” என்று கத்தியபடி கீழே விழுந்திருந்தான்.

 

சித்தார்த் அபிமன்யு தன் ஓங்கிய காலை கீழிறக்கவும் தான் அவன் தான் பாண்டியை உதைத்திருக்கிறான் என்றே அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது.

 

கீழே விழுந்தவனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து எழுப்பி நிறுத்தினான் சித்தார்த். “இப்போ சொல்லு! அவ கழுத்தில தாலி கட்டினது யாரு?” என்றான் மீண்டும்.

 

“நான்” என்று பாண்டி சொல்லி முடிக்கும் முன்பே அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்துக் கொண்டே இருந்தான் சித்தார்த் அபிமன்யு.

 

அங்கிருந்தவர்கள் அனைவரும் இமைக்கவும் மறந்து உறைந்து போய் நின்றிருந்தனர். சித்தார்த்தின் நடவடிக்கையை பார்க்கும் போது ஜமுனாவிற்கு காரணம் புரியாமல் தலை கிறுகிறுத்தது. அவன் நிறுத்தாமல் பாண்டியின் கன்னத்தில் மாறி மாறி அடித்துவிட்டு இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிடித்து பலமாக முறுக்கியபடி, “சொல்லு, அவ கழுத்தில தாலிகட்டியது யாரு?” என்றான் கர்ஜனையாக.

 

சாந்த சொரூபியாக வலம் வந்து கொண்டிருந்த சித்தார்த் ஒரு வெறிபிடித்த அரக்கனை போல பாண்டியை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்த நேத்ராவிற்கே அவனை பார்த்து பயத்தில் உடல் நடுங்கியது.

 

அதற்கு மேல் தன்னால் அடிவாங்க முடியாது என்று முடிவு செய்த பாண்டி, “அய்யோ என்னை விட்டுடுங்க. நான் அவ புருஷனும் இல்லை. அவள் கழுத்துல நான் தாலி கட்டவும் இல்லை. இனி அவ இருக்கிற பக்கமே வரமாட்டேன். என்னை தயவு செய்து விட்டுடுங்க” என்று அலறினான்.

 

அங்கிருந்த அனைவரும் வாயில் கைவைத்துக் கொண்டனர். இவ்வளவு நேரம் அவன் தான் புருஷன் என்று ஆட்டம் போட்டதென்ன? இப்போது அடிவாங்கிய பின்பு மாற்றி பேசுவதென்ன? ஆனால் நேத்ராவிற்கு தாலிக் கட்டியது பாண்டி இல்லை என்பது சித்தார்த்துக்கு எப்படி தெரியும்? என்று அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாக அவனையே விழி நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருக்க,

 

சித்தார்த்தின் பார்வையோ நேத்ராவின் மேல் பதிந்திருந்தது. “இப்போ கூட உண்மையை சொல்ல போறதா உத்தேசம் இல்லையா?” என்றான் கோபமாக.

 

நேத்ராவின் தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டிருக்க திகைத்து விழித்தாள். அவளிடமிருந்து பதில் வராததால் மேலும் கோபத்தோடு தன் கைகளில் நெளிந்துக் கொண்டிருந்த பாண்டியை உதைத்து தள்ளிவிட்டு நேத்ராவின் அருகில் வந்தான் சித்தார்த். 

 

அனைவரும் ஒரு வித பதட்டத்தோடு சித்தார்த் என்ன செய்ய போகிறான் என்று பார்த்திருக்க, நேத்ரா அதிர்ச்சியுடன் விழிவிரித்து நடுக்கத்துடன் அவனை பார்த்தாள்.

 

சித்தார்த் அபிமன்யு நேத்ரநயனியின் நயனங்களை ஆழ்ந்து பார்த்தபடி, அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை தூக்கி அனைவருக்கும் தெரியும்படி காட்டி, “இந்த தாலியை கட்டினது நான் தான்” என்றான். 

 

ஜமுனாவின் கண்கள் அதிர்ச்சியில் தெறித்து விடுவது போல ஆனது,  திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கனவிலும் அவள் நினைத்துக்கூட பார்க்காத காட்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது.

 

சித்தார்த் அடித்த அடியில் கீழே விழுந்திருந்த பாண்டிக்கு, அவன் பேச்சில் மொத்த போதையும் இறங்கி விட, தலையை நிமிர்த்தி சித்தார்த்தை நன்றாக பார்த்தான். நேத்ராவிற்காக அவள் கணவன் வரமாட்டான் என்று நினைத்தது எவ்வளவு பெரியமுட்டாள்தனம் என்று எண்ணிக் கொண்டான்.

 

சித்தார்த் இப்போது மேலும் நேத்ராவை நெருங்கி நின்று அவள் தோளில் கைப்போட்டு, “இந்த நேத்ரநயனி நான் தாலி கட்டிய என்னோட மனைவி. இதுல யாருக்காச்சும் இன்னும் சந்தேகம் இருக்கா?” என்று கூறி அங்கிருந்த ஒவ்வொருவரையும் அழுத்தமாக பார்த்தான்.

 

நேத்ராவோ தன் கணவனின் அதிரடி செயலிலும் பேச்சிலும் உறைந்து சிலையென நின்றிருந்தாள். ஆனால் அவளின் பார்வை மட்டும் தன்னவனை விட்டு விலகவே இல்லை.

 

சித்தார்த் ஒவ்வொருவராக நிதானமாக பார்க்கவும், அனைவருமே தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று மெளனமாக தங்களை அறியாமலே தலையசைத்தனர். கடைசியாக சித்தார்த்தின் பார்வை ஜமுனாவின் மேல் நிலைத்தது.

 

ஜமுனா பயத்தில் எச்சிலை விழுங்கியபடி சித்தார்த்தை பார்க்க, அவன் ஒற்றை விரலை அசைத்து தன்னருகே வரும்படி கூறினான்.

 

உள்ளுக்குள் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, ஜமுனா சித்தார்த்தின் முன்னால் வந்து நின்றாள். அவன் தன் சுட்டுவிரலால் அனைவரையும் காட்டி, “இங்கே இப்படி ஒரு பிரச்சனை வர்றதுக்கு நீதானே காரணம்?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்.

 

“இஇல்லை டாக்டர், எனக்கெதுவும் தெரியாது” என்றாள் ஜமுனா திக்கி திணறி.

 

“5,30 மணிக்கு கிளம்பி கேட் வரைக்கும் போன நீ, எதுக்கு மறுபடியும் 6 மணிக்கு இங்கே வந்தே?” என்றான் கர்ஜனையான குரலில்

 

“அது வந்து” என்று ஜமுனா யோசிக்கும் போதே பேசவேண்டாம் என்று கைக்காட்டினான்.

 

“நீ எப்போ என்னை தேடிவந்து நேத்ராவுக்கு பிரச்சனைனு சொன்னியோ, அப்பவே எனக்கு தெரியும். அதுக்கு காரணம் நீதான்னு. வரும் போதே என் போனில் இருக்கிற சிசிடிவி பதிவை பார்த்துட்டே தான் வந்தேன்” என்றான்

 

ஜமுனா தலைகுனிந்து கொள்ளவும். “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உனக்கு ஏற்கனவே ஒரு முறை எச்சரிக்கை செய்தும் மறுபடியும் நேத்ராவை பழிவாங்க இவ்வளவு கேவலமான வேலை செய்திருக்க! இந்த பாண்டி உன்னோட தூண்டுதலால தான் வந்திருப்பான்னு எனக்கு தெரியும். 

 

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது உன் விஷயத்துல நல்லாவே பொருந்துது! ஆணுக்கு பெண் சமம்னு பேசறது போய் பெண்ணுக்கு பெண் சமம்னு வாதாட வச்சிடுவீங்க போல இருக்கே? நீங்களே உங்க வர்க்கத்தை உங்க காலுக்கு கீழே போட்டு மிதிக்க தானே பார்க்கறீங்க. உங்களை அழிக்க வெளியே இருந்து எந்த ஆணும் தேவையில்லை. பெண்குலத்தை அழிச்சுக்க உங்களை மாதிரி பெண்களே போதும். 

 

இந்த நேத்ரா இதுவரைக்கும் எதாவது கெடுதல் பண்ணியிருக்காளா உனக்கு? “ என்று கேட்டான் அழுத்தமான குரலில்.

 

ஜமுனா இல்லை என்று தலையாட்டவும், “அப்புறம் எதுக்கு இவ்வளவு வன்மம்?” என்றான்.

 

பதில் சொல்லமுடியாமல் ஜமுனா தலை குனிந்துக் கொள்ளவும், ஜனனியிடம் திரும்பி, “இந்த பொம்பளையோட சம்பள பாக்கி எவ்வளவு இருக்குனு பார்த்து இப்பவே செட்டில் பண்ணி அனுப்பிடு. இனி இவங்க என் கண்ணுலயே படக்கூடாது” என்றான் 

 

ஜனனி சரி என்பது போல தலையசைக்கவும், “இனி இந்த மாதிரி யாரையாவது டார்கெட் பண்ணி தனிப்பட்ட முறையில் தாக்கினால் இங்கே வேலை செய்யற எல்லாருக்கும் இது தான் முடிவு. உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன் ஜனனி” என்றான் சித்தார்த் அழுத்தமாக

 

ஜனனி அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, “முன்னெச்சரிக்கைக்காக சொல்றேன், வேற எதுவும் இல்ல” என்றான்.

 

செக்யூரிட்டிகளிடம் பாண்டியை கண்களால் காட்டி, “இவனை போலீஸ்ல ஒப்படைங்க. நாளைக்கு நானே ஸ்டேஷன் வந்து கம்ளெய்ண்ட் கொடுக்கறதா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுங்க” என்று கூறி அவர்களை அனுப்பினான்.

 

பின்பு தன் கைகளில் கோழிக்குஞ்சாய் உறைந்து நின்றவளை திரும்பி பார்த்து, “கிளம்பு போகலாம்” என்றான்.

 

“எங்கே” என்றாள் மெல்லிய குரலில்

 

“நம்ம வீட்டுக்கு” என்றான் அவன் அழுத்தமாக

 

“இல்ல, நான் இங்கே விடுதியிலே…” என்று அவள் முடிக்கும் முன் அடிக்க கை ஓங்கி விட்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.

 

அவனின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றிருக்க, கண்களில் கோபம் கொப்பளித்தது.

 

“அன்னைக்கே உன் கன்னத்தில் ஒன்னு ஓங்கி கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தேன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. காலையில் கூட வேறு எதுவும் பிரச்சனை இருக்கான்னு உன்கிட்டே கேட்டேன் தானே? சொன்னியாடி நீ? என்கிட்ட உனக்கென்னடி அவ்வளவு ஈகோ?” என்றவனை படபடக்கும் இமைகளோடு பயத்தோடு பார்த்தாள் நயனி.

 

“இனி உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால விட முடியாது. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம். உன்னோட பொருட்கள் எல்லாம் எடுத்திட்டு மரியாதையா என்னோட கிளம்பி வா” என்றான் கோபமாக.

 

அவள் அப்படியே நின்றிருக்கவும், “சொல்றது காதுல விழலையா?” என்று கத்தினான்.

 

கணவனின் புதிய அவதாரத்தில் சற்றே நடுக்கத்துடன் இருந்த நேத்ரநயனி அவள் தோள் மீது அழுத்தி பிடித்திருந்த சித்தார்த்தின் கைககளை பார்த்தாள், அவன் கைகளை எடுத்தால் தானே அவளால் நகரவே முடியும்? எப்படி எடுக்க சொல்வது என்று தெரியாமல் அவன் பிடியில் நெளிந்துக் கொண்டிருந்தாள்.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!