Skip to content
Post Views: 3,614
மார்கழி – 15
கூதல் காற்று உடலைத் தழுவிச் செல்ல, போட்டிருந்த உடையின் துப்பட்டாவை இழுத்து தோள் சுற்றி போர்த்திக்கொண்டாள். பார்வை வட்டத்தில் எல்லையின்றி விரிந்திருக்கும் ஆழியின் ஆர்ப்பரிப்பில் விழிகள் நிலையில்லாமல் பதிந்திருந்தது. பார்ப்பவர்களுக்கு நிர்மலமான முகமாய் தெரிந்தாலும் அகத்தினுள் ஆழிக்கு ஈடான இரகசியங்களும் குழப்பங்களும் சொல்லனா வேதனையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து அமிழ்த்திக் கொண்டிருந்தது. அதன் இழுவிசைக்கு எதிராக போராடி மேலெழ முயன்றுகொண்டிருந்தாள்.
தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு இங்குமங்குமாய் சண்டையிட்டு சமாதானமாகி விளையாடும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் இரைச்சல் அவள் செவி எட்டி கருத்தில் பதிய, கழுத்தை உயர்த்தி பார்த்தவளை நோக்கி வேகமாக வந்தது கைப்பந்து. இவள் மேலே படும்முன் ஓடி வந்து அதனை ஒருவன் பிடித்து எடுத்துச்செல்ல, கூட்டம் குறைவாய் இருக்கும் பகுதிக்கு நகர்ந்து சென்று அமர்ந்தாள் இயலணி. குடும்பங்களின் கூட்டம் அருகி காதலர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி போல் தென்பட்டது அவ்விடம். அவரவர் தங்கள் இணையுடன் மூழ்கியிருக்க, கவனித்தவள் எச்சில் கூட்டி விழுங்கி கால்களை கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்தாள்.
நினைக்கக்கூடாது என்று மனதை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த அலையென மேலெழுந்து ஆர்ப்பரித்தது அவன் தொடர்பான எண்ணங்கள். அவனுடனான திருமணம், அதன் பின்னான அவனது கோவப்பார்வைகள், வருந்தச்செய்யும் செயல்கள், இறுதியாக கண் கலங்க தண்டனை வேண்டி நின்ற கோலம் என அனைத்தும் அவளை தவிக்கச் செய்தது. ஈர்ப்பை காதலென எண்ணி இத்தனை தூரம் வரவிட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இல்லை சாட்சி சொல்கிறேன் என்று இழுத்துவிட்டுக்கொண்ட பிரச்சனையின் நீட்சியாய் அடைக்கலமென அவனிடம் சென்றதுதான் பிழையா? சுணக்கம் மேலிட வருந்தி வலித்தது நெஞ்சம்.
Advertisement
‘இதையே யோசிச்சிட்டு இருந்தா காணாம போயிடுவ இயல்.’
‘வேணாம்னு வந்துட்டீல்ல. அடுத்து என்னனு பாரு.’
‘அப்பா அம்மா என்ன பண்றாங்களோ? நேரா போய் பாத்துட்டு வாயேன் உன்னை பார்த்ததும் புடிச்சி அவனோட அனுப்பி வச்சிடுவாங்க. பரவாயில்லையா?’
Advertisement
‘இப்படி யோசிச்சிட்டே இருந்தா யோசிச்சிட்டே நேரத்தை ஓட்ட வேண்டியதுதான்.’
Advertisement
ஒருபுறம் தன் வாழ்வின் கோலம் கண்டு வருந்த, மறுபுறம் அதிலே உழலாதே என்று எச்சரித்தது.
ஒரே நிலையில் அமர்ந்திருந்தது அசவுகரியம் தர, எண்ணங்கள் தடைபட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். வெளிச்சம் மங்க கூட்டம் அதிகரித்தது போல் இருந்தது. வார நாள் என்பதால் வேலை முடித்து மாலை கடற்கரை வருவோர் எண்ணிக்கை சற்று கூடியது. இதற்கு மேல் அமர்ந்து வேண்டாத நினைவுகளுக்கு தூபம் போட்டு நிம்மதி இழக்க வேண்டாம் என்று எண்ணியவள் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். மணலில் கால் புதைய நடந்து சாலைக்கு வந்தவள் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி தங்கியிருக்கும் விடுதி விலாசத்தை கூற, அரைமணி நேரத்தில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர்.
சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த அந்த விடுதியின் பெயரை நிமிர்ந்து பார்த்தவள் பெருமூச்சுடன் உள்ளே நுழைந்து தன் அறைக்கு வந்தவள் பையை கட்டிலில் வீசி பொத்தென்று அமர்ந்தாள். இருவர் தங்குமளவுக்கு இருந்த அவ்வறையில் அவள் மட்டும் இருக்க அவ்விடமும் நிம்மதி கொடுக்கவில்லை. ச்சை… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே அழுது வடிஞ்சி, வருந்திகிட்டே இருக்கிறது என்ற சலிப்புடன் அலைபேசியை எடுத்துப்பார்க்க, அமைதி மார்க்கத்தில் இருந்ததில் பல தவறிய அழைப்புகள்.
Advertisement
எண்ணை பார்த்ததுமே யார் என்று புரிந்து போனது. வேந்தன் தான் அத்தனை முறை அழைத்திருந்தான். நுணுக்கமான தகவல்கள் வேண்டும் என்ற பெயரில் நாக்கை சுழற்றி சரமாரியாக கேள்விகளை வீசிய வழக்கறிஞரின் தந்திரத்தை தனக்கு தெரிந்த தகவல்கள் கொண்டு சமாளித்தவள் அமைச்சர் மகனையும் சேர்த்து ஐந்து பேரை அடையாளம் காட்டியிருந்தாள். பாதிக்கப்பட்ட பெண்ணும் ஐவரை காட்டியிருக்க, குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தான் அவளை வெளியேற அனுமதித்தனர். அவள் காட்டிக்கொடுத்ததில் அமைச்சரின் ஆட்கள் அதிர்ந்து ஆத்திரம் கொண்டாலும் அவர்கள் சரிக்கட்ட வேண்டிய நிறைய சட்டசிக்கல்கள் இருந்தமையால் முறைப்புடன் நிறுத்துக்கொண்டனர்.
“உன் வாக்குமூலம் பதிவாகிடுச்சு. இதுக்கு மேல ஜட்ஜை சரிக்கட்ட பாப்பாங்க. உனக்கு தொல்லை இருக்காது. கோவத்துல ஏதாவது பண்ணலாம் ஆனா அப்படி பண்ணா கெட்ட பேர் வரும்னு அடக்கி வாசிப்பாங்க. எதுக்கும் சுதாரிப்பா இருந்துக்கோமா.” என்று உடன் வந்த காவலர்கள் அறிவுறுத்தலுடன் அவளை வீட்டில் இறக்கிவிட்டனர். முன்வாசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பின்வாசல் வழியே அவளை பத்திரமாக அழைத்துச் சென்றிருக்க, அவள் முன்னர் அமர்ந்திருந்த இடத்தில் அவளுக்காக காத்திருந்த அறிவழகனுக்கு இவள் கிளம்பிவிட்ட விஷயம் தாமதமாகத் தான் தெரிந்தது.
தெரிந்து அவன் வருவதற்குள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவள் அவளின் சேமிப்புப் பணம், அவளது சான்றிதழ்கள், கொஞ்சம் உடைகள் என்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வேறொரு பூட்டைக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டாள். இந்த பிரச்சனைகளுக்கு முன் அவள் உபயோகித்த அலைபேசியை உடன் எடுத்து வந்திருக்க, தன்னை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தெரியும். இருந்தும் வேந்தனிடமிருந்து தாமதமான அழைப்பு தான் இது. யோசனையில் இருக்கும் போதே மீண்டும் அழைப்பு வந்தது. தயக்கம் இருந்தாலும் பெற்றவர்களின் பாதுகாப்பு அவன் கண்காணிப்பில் என்பதால் அழைப்பை ஏற்றாள்.
“அப்பா, அம்மா, தம்பிக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே சார்?” எடுத்ததும் இதைத்தான் கேட்டாள்.
“அவங்க பத்திரமா இருக்காங்க. நீ பண்றது உனக்கே நல்லா இருக்காமா? ஒரு பெரிய பிரச்சனைலேந்து இன்னும் முழுசா வெளில வரல அதுக்குள்ள இப்படி சொல்லாம கொள்ளாம தனியா போறதுக்கு எங்கிருந்து தைரியம் வந்துச்சு? உங்க குடும்பத்தை பாதுகாக்கணும்னு எனக்கு என்ன இருக்கு? ஏதோ மனசு கேக்காம உதவி பண்ணா இப்படி நீ அலட்சியமா இருக்க. உன்னை தேட பத்து பேர் அனுப்பிச்சி ஒரு வாரம் தேடவிட்டிருக்க. எங்களுக்கு வேற வேலை இல்லைனு நினைச்சியா?” காய்ந்துவிட்டான் வேந்தன்.
மூன்றரை மாதங்களாகவே தன்மையாக பேசி ஆதரவாக இருந்து அரவணைத்து சென்றவன் இன்று எரிச்சலாக பேசவும் தூக்கிவாரிப்போட்டது இயலணிக்கு.
“சார்…”
“உனக்கு என்னாச்சோனு இங்க பதறிட்டு இருந்தா உன் போனை ஆஃப் பண்ணி ஆஃபிபண்ணி ஆன் பண்ற. எல்லாரையும் விட்டுட்டு தெரியாத ஊருக்கு போய் எங்களை சுத்தல்ல விட்டிருக்க. அறிவை அனுப்பி வைக்குறேன் ஒழுங்கா கிளம்பி உன் குடும்பத்தோட சேர்ருற வழியைப் பாரு.” என்று அவன் மேலும் கத்த, ஐயம் பின்சென்று அழுத்தம் வந்தது இயலணிக்கு.
“உங்க பிரெண்ட் இங்க வந்தா இந்த போனையும் தூக்கி போட்டுட்டு வேற எங்கேயாவது போய்டுவேன்.” என்று அவள் அழுத்தமாக சொன்னது மிரட்டலாக சென்று சேர்ந்தது வேந்தனுக்கு.
‘இம்சைங்க.’ தலையில் அடித்துக்கொண்டவன், “அவ்வளவு பெரிய அரசியல் பலம் உள்ளவரையே எதிர்த்து ஒரு பெரிய கேஸுல சாட்சி சொன்ன தைரியமான பொண்ணு இப்படி அவ வாழ்க்கையில இருக்கிற பிரச்சனையை பேஸ் பண்ண பயந்து ஓடி ஒளியலாமா?” முயன்று தன்மையாக பேசினான் வேந்தன். இருக்கும் குடைச்சலுக்கும் வேலைப்பளுவுக்கும் இடையே எப்படியோ போ என்று இவளை விட்டுவிடலாம் தான், உதவி என்றதும் ஆதரவுக்கரம் நீட்டிய நண்பனின் வாழ்க்கை இவளுடன் பிணைந்து ஊசலாட அப்படியே விடவும் மனமில்லை. இழுத்துப்பிடித்து அவளை பேச்சில் கரைக்க முயன்றான்.
“பேஸ் பண்ண முடியாம ஓடி ஒளியல சார். ஸ்பேஸ் தேவைப்படுதுனு தள்ளி வந்திருக்கேன்.” யோசித்துதான் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று அவள் நிதானமான பதிலிலேயே புரிந்தது அவனுக்கு. ஆனால் மண்டை காய்ந்தது இந்த பிரச்சனையில்.
“ஸ்பேஸ் வேணும்னா இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வேற ஊருல போய் உக்காந்துக்குவாங்களா?”
“சொல்லிட்டா போக விட ரெடியா இல்லை சார் யாரும்.” என்றாள் அவள்.
“என்னதான்மா உன் பிரச்சனை? அறிவு மேல ஏதோ கோவம் உனக்கு. அவனை தண்டிக்குறேனு தனியா போய் உன்னை நீயே தண்டிச்சிட்டு இருக்க. அவனை ஆசைப்பட்டு தான கட்டிக்கிட்ட, அப்போ உன் விருப்பப்படி அவன் மாறுறதுக்கான அவகாசம் கொடுக்கணும்ல. அதைவிட்டு இப்படி பண்றதெல்லாம் சரியா?”
பிரச்சனை பெரிது என்று புரிந்தாலும் அறிவழகனின் மனைவி அவள் என்ற நிதர்சனம் ஒன்று இருக்கிறதே. பதின்பருவம் போல் கோபித்துக்கொண்டு வேறெங்கோ சென்று அமர்ந்துகொள்வதெல்லாம் பிரச்சனையை சரி செய்யும் வழி அல்லவே, அது இன்னும் சிக்கலைத்தானே இழுத்துவிடும். புரியாது பிடிவாதம் பிடிக்கிறதே இந்த பெண் என்று வருத்தமும் ஆதங்கமும் கொண்டான் வேந்தன். நண்பனின் வாழ்வு இப்படி தடம் மாறிப்போக தானும் ஒரு காரணம் என்ற உறுத்தலும் இயலணியிடம் பொறுமை கடைபிடிக்க வைத்தது.
“என்னமா அமைதியா இருக்க?” இயலணியின் மெளனம் அவனை குழப்பியது. என்ன யோசனையில் இருக்கிறது இந்த பெண் என்று நெற்றி சுருங்கியது.
“உங்க பிரெண்டை நான் விரும்பல சார். அது ஜஸ்ட் க்ரஷ். வாழ்க்கை முழுசுக்கும் அது போதாதே.” சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் இயலணி. நண்பனுக்காக பேசும் காவல்காரனிடம் இத்தனை தூரம் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை விளக்க வேண்டியுள்ளதே என்ற பரிதவிப்பு அவள் நிதானத்தை அசைத்துப் பார்த்தது. வேந்தனின் உதவிக்கு பிரதிஉபகாரமாய் அவன் வார்த்தைகளுக்கு உண்டான மதிப்பை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிட்டாள். அந்தரங்கங்களை மனதிற்குள் புதைத்துக்கொண்டாள். அதை எங்கும் யாருக்கும் தெரியப்படுத்தும் நோக்கமில்லை.
“ஏதே?” அப்பட்டமான ஏமாற்றம் வேந்தனிடம்.
“சார்…”
“உன்னை தெளிவான பொண்ணுன்னு நினைச்சேன். இனி பேசி ஒன்னும் ஆகப்போறதில்லைமா. உங்க விருப்பத்துக்கு பாத்துக்கோங்க. இன்னும் ரெண்டு நாள்ல உன் அப்பா அம்மா உன் வீட்டுக்கு போயிடுவாங்க. நீயும் பத்திரமா இரு, ஏதாச்சுனா கூப்பிடு.” என்று வைத்துவிட்டான்.
இருவரில் ஒருவரிடம் பிடித்தம் இருக்கிறது போகப்போக சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை தூரம் அவர்கள் வாழ்க்கைக்காக இயலணியைத் தேடிப் பிடித்து அவன் பேசியது. இப்போது அவளே க்ரஷ் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவைக்க, இதற்கு மேல் இழுத்துப்பிடித்து என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம் தான். உடனே அறிவழகனுக்கு அழைத்துவிட்டான்.
“சாரிடா. நான் அந்த பொண்ணை உன் வீட்டுக்கு கூட்டிட்டே வந்திருக்க கூடாது. நீயாவது உன் அத்தை பொண்ணோட நிம்மதியா கல்யாண கனவு கண்டுட்டு இருந்திருப்ப.”
“என்னடா அவ எங்க இருக்கானு தெரிஞ்சுதா? பத்திரமா இருக்காளா?” வேந்தனின் வருத்தத்தை கண்டுகொள்ளவே இல்லை, இயலணி பற்றி தான் பதறிக் கேட்டான் அறிவழகன்.
“எல்லாம் பத்திரமா இருக்கா. இப்போ தான் பேசுனேன். இயல் பொண்ணோட சாட்சியை விட பாதிக்கப்பட்ட பொண்ணு அடையாளம் காட்டுனது தான் ஸ்ட்ராங்கா ரெகார்ட் ஆகியிருக்கு. அதனால அமைச்சர் ஆளுங்களால இயலுக்கு இனிமே பிரச்சனை வராது. உனக்கு தான் அவளால பிரச்சனை. உன் அத்தை பொண்ணுகிட்ட நான் வேணும்னா பேசவா…”
“ப்ச்… இயல் அட்ரஸ் கொடு.” தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற பேச்சை கவனியாதது போல் கேட்டான் அறிவழகன்.
“அது எதுக்கு உனக்கு? அந்த பொண்ணு அது வாழ்க்கையை பாத்துக்குதாம். விட்டுத்தள்ளு.”
“அப்படியெல்லாம் விட முடியாது. அவ எங்க இருக்கானு சொல்லு.” பிடிவாதம் அறிவழகனிடம்.
“உன் மேல காதல் இல்லைனு சொல்ற பொண்ணை தேடிப்போய் என்ன பண்ணப் போற?” எரிச்சலாகிவிட்டான் வேந்தன். இவன்தான் விருப்பமின்றி கட்டினான் இப்போது அவளும் விருப்பமில்லை எனும் போது பிரிந்துவிட வேண்டியதுதானே என்ற எண்ணம் வேந்தனிடம்.
“அதே காதல் எனக்கு அவ மேல இல்லாதப்போ சேர்ந்து வாழுனு அட்வைஸ் பண்ண.” திருமணம் முடிந்து மறுநாள் தேடிக்கொண்டு வந்தபோது பேசிய பேச்சுக்களை நினைவு கூர்ந்து அறிவழகன் வாதிட, சலித்துக்கொண்டான் வேந்தன்.
“அட்லீஸ்ட் ஒருத்தருக்காவது விருப்பம் இருக்கு சரியாகிடுவீங்கன்னு நினைச்சேன். இப்போ அதான் ரெண்டு பேருக்கும் புடிக்கலையே. போய் உன் அத்தை பொண்ணை கரெக்ட் பண்ற வழியைப்பாரு.”
“ப்ச்… நிலைமை புரியாம பேசாத. இயல் போன் நம்பரும் அட்ரஸும் கொடு நான் பேசிக்கிறேன்.”
“என்னமோ பண்ணித்தொலைங்க.” கடுப்புடன் அழைப்பை துண்டித்தவன் இயலணியின் அலைபேசி எண்ணையும் தற்சமயம் அவள் தங்கியிருக்கும் விலாசத்தையும் அனுப்பி வைத்தான்.
குறுஞ்செய்தி வந்ததற்கான அறிகுறி வந்ததும் பரபரப்புடன் அதனை திறந்தவன் இயலணி எண்ணை அலைபேசியில் பதிந்து அழைப்பு விடுக்கும் பொத்தானை அழுத்திட, அழைப்புமணி சென்றது.
‘இயல்.’ அழைப்பை ஏற்பாளா என்ற பதட்டத்துடன் அலைபேசியை காதில் வைத்திருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டு ஹலோ என்ற குரல் கேட்கவும் கண்களை மூடி அடிவயிற்றிலிருந்து ஆழ மூச்செடுத்தான். ஒருவாரமாய் அன்னம் தண்ணி இறங்காது பொள்ளாச்சி நகரில் அவளைத் தேடி அலைந்து திரிந்து சோர்ந்திருந்தவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது போலிருந்தது.
இவன் அமைதியாய் இருக்கவும் இயலணி அலைபேசியை காதிலிருந்து எடுத்து பார்த்துவிட்டு விசாரித்தாள், “ஹலோ யாரு?” வேந்தன் எண் மனப்பாடமாய் தெரியுமளவுக்கு அறிவழகன் அலைபேசி எண் தெரியவில்லை. ஏதோ புது எண் ஏற்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் ஏற்றாள்.
இவள் கேள்விக்கு இணைப்பில் அமைதியே பதிலாய் கிடைக்க, பரபரப்பு தொற்றிக்கொண்டது இயலணிக்கு.
‘இப்போ தான் வேந்தன் சார் பேசுனாரு. உடனே புது நம்பர்லேந்து கால் வருதுன்னா அவராத்தான் இருக்கும்.’ கண்டுகொண்டாள் இயலணி.
“எதுக்கு கால் பண்ணீங்க?” கண நேரத்தில் அவள் குரலில் கண்டனம் புகுந்து அதிருப்தி வெளிப்பட்டது.
‘கண்டுபுடிச்சிட்டா.’ அதிர்ந்தவன் பதில் சொல்லவில்லை. அழைப்பை துண்டித்தான்.
‘என்னை பாக்கவோ என்கூட பேசவோ புடிக்காம தான அங்க போயிருக்க. உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் இயல். நீ பத்திரமா இரு. உனக்கா எப்போ என்னை மன்னிச்சி என்கூட பேசணும்னு தோணுதோ அப்போ பேசு.’ தனக்குள் சொல்லிக்கொண்டவன் அலைபேசியை பாக்கெட்டில் வைக்கும் நேரம் அவள் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
இனிய பரபரப்புடன் இவன் ஏற்று ஹலோ என்றிட, “எனக்கு இனிமே கால் பண்ணாதீங்க.” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
‘இதை சொல்லவா மீண்டும் அழைத்தாள்?’ புரியாது நின்றவன் அலைபேசியை நெஞ்சோடு பிடித்துக்கொண்டான்.
‘நானா இனி உனக்கு கால் பண்ண மாட்டேன், பேச மாட்டேன். இதையே எனக்கான தண்டனையா ஏத்துக்கிட்டு உனக்காக காத்திருப்பேன் இயல்.’ என்று சொல்லிக்கொண்டு உணவகம் நோக்கி நடை போட்டான். அவளின் நலன் அறிந்த பின்தான் பசியே தெரிந்தது.
அங்கு அவளுக்கோ பசி உணர்வு வந்தும் உண்ணப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள். மீண்டும் அலைஅலையாய் அவன் நினைவுகள். அவனுடன் இருந்த அந்த மூன்று மாதங்களில் பேசி, முகிழ்த்து, களிப்புற்று இருந்த நாட்களை ஒற்றை கை விரல்களில் எண்ணிவிடலாம். தினசரி உணவு குறித்த பேச்சுகளுக்கு பின் அன்றைய நாளின் ஓட்டங்கள் குறித்து ஓரிரு வார்த்தை பேசுவர். தொடர்ந்து காபி போடவா, டீ வேண்டுமா, உடல் முடியவில்லையா என்ற பேச்சுக்கள் மட்டும்தான். அதுவும் மாதத்தின் மூன்று நாட்கள் எதற்கும் அவளை தொந்தரவு செய்ய மாட்டான். முகத்தை பார்த்தே அவள் சங்கடம் கொள்ளக்கூடாது என்று அந்த நாட்களை கடப்பதற்கு தேவையானவற்றை முன்னரே சேர்ந்தார் போல் வாங்கி வந்து கொடுத்துவிடுவான். அதில் எல்லாம் குறையே சொல்ல முடியாது. ஆனால் அத்தனை நல்லதும் அவனது ஒற்றை செயலில் அடிபட்டு போய்விட்டதே. ஏற்கமுடியவில்லை அவளால்.
அவன் கேட்டுக்கொண்டது போல் அவனை காவலர்களிடம் பிடித்துக்கொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தினால் அவள் வலி குறையுமோ? தெரியவில்லை. ஆனால் அவனை காவல் நிலையத்தில் அமரவைக்கும் அளவுக்கு யோசனை போகவில்லை. இதுதான் கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிறின் மந்திரமோ? கைகள் தன்னால் தாலிக்கயிற்றை வெளியே பிடித்திழுத்தது. தானும் சராசரி பெண் தானா. கணவன் வரைமுறை தவறினால் அவனுக்கான தண்டனை வாங்கிக்கொடுக்காது அதை உலகிற்கு முன் மறைத்து வைக்க முயல்கிறதே இந்த தறிகெட்ட மனம்.
யாரோ ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கிக்கொடுக்க போராடிய மனது தனக்கு என்று வருகையில் போராட மறுக்கிறதே ஏன்? தண்டனை வாங்கிக்கொடுத்த கயவர்களுக்கு பாவம் பார்க்காத அவள் மனது இவனுக்குப் பார்க்கிறதா? ஏன்? ஏன்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தான் சென்னையில் வந்திறங்கி ஒரு வாரத்தை கடத்தியிருந்தாள்.
error: Content is protected !!