Skip to content
Post Views: 3,806
மார்கழி – 18
பிடித்தது சனி என்பது போல் பிடித்துக்கொண்டது தலைவலி. தொல்லை செய்ய மாட்டேன் என்று எதற்கு வலிய வந்து சொல்லிட்டு செல்ல வேண்டுமாம்? எதிரே வராமல் இருந்தாலே போதாதா? எதற்கு இப்படி பக்கம் பக்கமாய் பேசி அவன் புறம் கவனத்தை திருப்பி தலைவலி வருவானேன் என்று எரிச்சலாய் பல்லைக் கடித்தாள். தலையை கையில் தாங்கிக்கொண்டவளுக்கு ஒரு காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அந்த இரவு வேளையில் விடுதியின் சமையல்கூடம் மூடப்பட்டிருக்கும். வெளியே செல்லலாம் என்றாலும் இரவின் தனிமையில் தலைவலியோடு செல்லப் பிடிக்கவில்லை.
“தலைவலிச்சா டேப்லெட் போடுறீங்களா அக்கா?” என்று கேட்டுக்கொண்டே மாத்திரை அட்டையை நீட்டினாள் அறைத்தோழி.
“இல்லை வேண்டாம். தூங்குனா சரியாகிடும்.” மறுத்தவள் மறுபக்கம் திரும்பி தலையை அழுந்த பிடித்தபடி உறங்க முயன்றாள். கையசைத்து விடைபெற்ற அவன் முகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
Advertisement
‘ப்ச்… என்ன பண்ணாருன்னு மறந்துட்டு அவர் பின்னாடி போயிட்டு இருக்க.’ மனதை அதட்டி அடக்கப்பார்த்தாள். இது கொஞ்சம் வேலை செய்தது. அவன் நினைவுகள் பின்சென்று தலைவலி பிரதானமாக கண்களை இறுக மூடிக்கொண்டவள் ஒரு கட்டத்தில் உறங்கிப் போனாள்.
மறுநாள் சற்று தாமதமாக எழுந்து பள்ளிக்குச் சென்று திரும்புகையில் பேருந்து நிறுத்தத்தின் ஓரமாய் இருக்கும் அந்த டீக்கடைக்குச் சென்றது கவனம். நேற்று அங்குதானே நின்றான் என்று அழையாமல் வந்தது அவன் நினைவுகள். இவ்ளோ தான் உன் கோவமா? என்ன இது என்று தன்னைக் குறித்தே அதிருப்தியாய் எண்ணிக்கொண்டவள் பேருந்து வரவும் ஏறிக்கொண்டாள். தன்னருகில் இருக்கும் காலி இருக்கைக்கு அன்னைச்சையாய் பார்வை சென்றது.
‘திருந்தமாட்டீல்ல நீ. தாலி கட்டிட்டோம், தப்பு பண்ணிட்டோம்னு இப்படி இருக்காரு. இல்லைனா அவர் முகமே வேற. விருப்பமும் வேற. கோவம் வந்தா அவர் அவராவே இருக்க மாட்டாரு.’ கசப்பாக எண்ணிக்கொண்டது மனம்.
Advertisement
‘திரும்ப அதை பத்தி நினைக்காத. நேத்தி மாதிரி தலைவலில நீதான் கஷ்டப்படணும்.’ முணுமுணுப்புடன் ஒரு பெருமூச்செடுத்தவள் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு அலைபேசியை எடுத்தாள். காலையில் அவசரத்தில் படிக்காமல் தள்ளியிருந்த குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாய் வாசித்தாள். முதலில் குழுக்களில் இருந்த செய்திகளை வேகமாக வாசித்தவள் புது எண்ணிலிருந்து செய்தி வந்திருக்கவும் விளம்பரமாக இருக்கும் என்று அசட்டையாக அதனை திறந்து அழிக்கப்போக, அந்த எண்ணின் முகப்புப்படம் கருத்தில் பதிந்தது. பரிட்சையான புகைப்படமாக தெரிய, அதனை தொட்டு பெரிதுபடுத்திப் பார்த்தாள்.
Advertisement
வேஷ்டி சட்டை மற்றும் புடவையில் மாலையும் கழுத்துமாய் திருமணக்கோலத்தில் நிற்கும் கணவன் மனைவியின் முகம் சற்று உப்பி சிறிய உருவத்தில் கண்களை பறிக்கும் விதமாய் நின்றிருந்தார்கள். மின்னலென வந்து போனது அவளது திருமண நினைவுகள். அவளும் அவனும் தான் கேலிச்சித்திரமாய்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.’ உதடுகள் முணுமுணுக்க அந்த படத்தை இரு விரல்கள் கொண்டு பெரிதுபடுத்தி, சிறிதாக்கி, நகர்த்தி, திருப்பி என்று சில நிமிடங்கள் பார்த்தாள். பின் வந்திருக்கும் குறுஞ்செய்தியைப் படிக்க, வேலையில் சேர்ந்துவிட்டதாகவும் முதல் நாள் கொஞ்சம் பதட்டமாய் இருப்பதாகவும் காலையே செய்தி வந்திருந்தது.
‘இந்த அப்டேட் எல்லாம் யார் கேட்டா இப்போ?’ நொடித்துக்கொண்டவள் அலைபேசியை பையினுள் வைத்துவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க, புதிய செய்தி வந்திருப்பதற்கான சப்தம்.
Advertisement
எடுத்துப்பார்த்தால் மீண்டும் அதே எண்ணிலிருந்து வந்திருந்தது. என்ன வேணும் இவங்களுக்கு கடுப்புடன் உள்ளே நுழைந்தாள்.
கல்லூரி போல் இல்லாமல் இங்கு வேலை முடிய தாமதமாகும் போல. எல்லாமே புதிதாக கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என்று செய்தி அனுப்பியிருந்தான் அறிவழகன்.
‘கஷ்டமா இருந்தா நான் என்ன செய்ய முடியும்?’ கடுகடுத்தவள் எந்த செய்திக்கும் பதில் அனுப்பவில்லை. அலைபேசியின் இணைய இணைப்பை துண்டித்துவிட்டாள்.
இருவாரம் இதுவே தொடர்ந்தது. தன்னுடைய தினசரி நிகழ்வுகளை குறுஞ்செய்தியாக உடனுக்குடன் பகிர ஆரம்பித்தான். பதில் வராது போவதெல்லாம் இரண்டாம்பட்சமாகிப் போக, அவன் எண்ணை அவள் முடக்காது செய்திகளை அனுப்ப விட்டதே அவனுக்கு போதுமென்றிருந்தது.
காலை வணக்கத்தில் துவங்கி இரவு வணக்கம் வரை அவன் பகிரும் செய்திகளுக்கு ஒருவாறு பழகியிருந்தாள் இயலணி. நீ என்னவும் செய் என்னிடமிருந்து பதில் வராது என்ற நிலைப்பாட்டில் இருந்தவளுக்கு சில நாட்கள் அவன் தொடர்ந்து அனுப்பும் செய்திகள் எரிச்சல்படுத்தினாலும் அவனை முடக்க விழையவில்லை. விடுமுறை நாட்களில் கூடுதலாய் என்ன உண்கிறான் என்ன செய்கிறான் என்ற செய்திகளும் வந்தவண்ணம் இருந்தது. என்னவோ செய்துகொள்ளட்டும் எதுவும் என்னை பாதிக்காது என்று தனக்குத்தானே நிரூபிக்க முயன்றவள் போலிருந்தது அவள் செய்கைகள்.
பள்ளிகள் திறக்க சில நாட்களே இருக்க, பள்ளியில் அவளுக்கு ஒதுக்கிய வேலையும் முடியும் தருவாயில் இருந்தது. முடித்துக்கொடுத்துவிட்டு விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் சொல்லியிருக்க, மீண்டும் ஒரு வெறுமை விடுமுறை நாட்களை ஆட்கொண்டது. வீட்டுக்கு போனா நல்லாயிருக்குமோ என்று சிந்தித்தவள் மிகுந்த யோசனைக்குப் பின் அன்றிரவு ஊருக்கு பேருந்து ஏறினாள். வீட்டினரிடம் சொல்லவில்லை. சென்று பார்ப்போம் அங்கேயும் மனது சரியில்லை என்றால் திரும்ப வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் வீட்டை அடைந்தாள். அவளைக் கண்டு இனிமையாய் அதிர்ந்தவர்கள் பதட்டமும் மகிழ்வுமாக மகளை கண்களில் நிரப்பிக்கொண்டனர்.
“என்னப்பா? நான் வந்ததுல எதுவும் பிரச்சனையா?” வீட்டின் இறுக்கம் கண்டு கேட்டாள் இயலணி.
“இந்நேரத்துக்கு நீ வந்தது ராஜேஷுக்கு தெரிஞ்சிருக்கும் வீட்டுக்கு வந்து நிப்பானே.” வேம்புதான் கலக்கத்துடன் மொழிந்தார்.
‘அடுத்து இவனை வேற சமாளிக்கணுமா? எனக்குன்னு ஏன்டா வர்றீங்க.’ என்று தலையில் கை வைத்துவிட்டாள்.
“அதுக்காக பாப்பா வீட்டுக்கே வராம இருக்க முடியுமா?” என்றார் பரந்தாமன் யோசனையாக.
“அமைச்சர் பக்கத்திலேந்து அவனுக்கு ஆதரவு குறைஞ்சிருக்கும் இன்னொரு தடவை கம்பளைண்ட் கொடுத்து பாக்கலாமா?” என்று கேட்ட இயலணி அவன் அழைத்துப் பேசியதை பகிர்ந்தாள்.
“இந்த டைம் நேரா சி.எம் செல்லுக்கு கம்பளைண்ட் பண்ணலாம் பாப்பா. லோக்கல் போலீசை நம்புறதை விட இப்படி டேரக்ட்டா போனா ஆக்ஷன் எடுக்க வாய்ப்பிருக்கு.” என்ற தந்தையின் யோசனையில் முகம் தெளிய, “சரிப்பா.” என்று பிரகாசமாக பார்த்தாள் இயலணி.
“எப்போதும் இப்படியே இருக்கனும்.” மகளின் மலர்ந்த முகத்தை மனதில் சேகரித்தவராய் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றார் பரந்தாமன்.
தந்தையின் பழைய அன்பு திரும்பிவிட்ட மகிழ்ச்சியில் வேம்புவிடம் விடுமுறை தினத்தில் செய்ய வேண்டியவற்றை ஆர்வமாய் பட்டியல் போட, “அதெல்லாம் இருக்கட்டும். மஞ்சள் தேய்ச்சி குளிக்குறது இல்லையா நீ? தாலிக்கயிறு என்ன நிலைமையில இருக்கு பாரு. எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரத்துக்கு தாலி பெருக்கி போட்டிருக்கலாம். எங்க பேச்சை கேக்குற.” என்று புலம்பி அவளை மொத்தமாக முடித்துவிட்டார்.
பியூஸ் போன பல்பாக ஓரிடத்தில் அமர்ந்துவிட்டளவுக்கு உற்சாகம் வடிந்துவிட்டிருந்தது. தினமும் கிளம்பும் நேரம் நிறம் மங்கி வெளிறிப்போன தாலிக்கயிறு தன் இருப்பை காட்டிக்கொண்டே தான் இருக்கும். அது போக உடன் இருப்பவர்களும் கண்டுகொண்டு கணவன் எங்கே என்று விசாரிக்க முயன்ற கதைகளும் இருக்கத்தான் செய்கிறது. சில இடங்களில் அதுவே அரணாய் நிற்பதையும் மறுக்க முடியவில்லை என்றாலும் அதனை ஏற்கவும் சிரமமாய் இருந்தது.
“என்ன சொல்லிட்டேன்னு இப்படி மூஞ்சை தூக்கிட்டு உக்காந்திருக்க. உறவே வேண்டாம்னு சொல்றவளால அதை கழட்டமுடியலை தான. சும்மா வீம்பு புடிக்காம சமரசம் ஆகலாம்ல. வாழ்க்கையை வீணாடிச்சிட்டு இருக்க.” என்று வேம்புவின் புலம்பல் அவளுள் பல யோசனைகளை விதைத்தது.
‘அதான வேண்டாம்னா கழட்ட வேண்டியதுதான. ஏன் இன்னும் அதை சுமந்துட்டு இருக்கணும்?’ தாலிக்கயிறை விரலில் சுருட்டி வைத்து விளையாடிக் கொண்டே யோசித்துக்கொண்டிருந்தவள் எதார்த்தமாய் தாலியை வெளியே எடுக்க,
“சொல்லிட்டேன்னு கழட்ட போறியா நீ?” அந்த பக்கமாக வந்தவர் அவள் கையில் பட்டென்று அடித்தார்.
வலியில் முகம் சுருங்க கையை உதறியவள், “ம்மா… என்ன பிரச்சனை உனக்கு?”
“நீ மொத குளிச்சிட்டு வா.” என்று தள்ளாத குறையாக மகளை எழுப்ப, தன் திருமணம் குறித்த பேச்சை விட்டால் போதுமென்று உள்ளே சென்றுவிட்டாள்.
பின்னோடே சில நொடிகளில் வந்து கதவைத் தட்டிய வேம்பு ஒரு கிண்ணத்தை அவளிடம் நீட்டி, “இந்த மஞ்சளை பூசி குளி. தாலிக்கயிறுல படுற மாதிரி நல்லா தேய்ச்சிவிடு. சீக்கிரம் தாலிக்கொடி மாத்திட்டா இதெல்லாம் செய்ய வேண்டியதில்லை.” என்று அவர்பாட்டிற்கு பேசியபடி செல்ல, பல்லை கடித்துக்கொண்டு நின்றாள் இயலணி.
‘இந்த வீணாப்போன ராஜேஷை கூட சமாளிச்சிடலாம் போலிருக்கு, இந்த அம்மாவை முடியல.’ என்று தலையில் அடித்துக்கொண்டாலும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்தவளை திருப்தியுடன் பார்த்துக்கொண்டார் வேம்பு.
அன்றிரவு வரை ராஜேஷ் தொந்தரவு இல்லையென்றாலும் அவனை நம்ப முடியாது என்று அலைபேசி வழியே புகார் கொடுத்துவிட்டாள். மறுநாளே வந்து கத்திவிட்டு சென்றிருந்தான் அவன். கொடுத்த புகாரை விசாரிக்கும் பொருட்டு ஓரிரு நாட்களில் அவளை தொடர்பு கொண்டு பிரச்சனையை கேட்டு நிவர்த்தி செய்வதாக சொன்னார்கள். அதன்பின் அவனை பார்க்கவில்லை இயலணி குடும்பத்தினர்.
சிற்சில வாக்குவாதங்களுடன் பள்ளி திறக்கும் வரை பிறந்தகத்தில் சீராடிவிட்டு மீண்டும் சென்னை வந்தாள் இயலணி. அன்று காலை நேரமே கிளம்பினாலும் பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பார்த்து சில பேருந்துகளை தவறவிட்டு பின் மணியாகவும் வேறு வழியின்றி கூட்டம் குறைவாக இருந்த பேருந்தில் ஏறினாள். பள்ளி துவங்கும் முதல் நாள் என்பதால் அனைத்து நிறுத்தத்திலும் மக்கள் ஏறினர். பேருந்தில் கூட்டம் கூடியது. நடுவில் இருந்த கம்பியை இறுக பற்றிக்கொண்டு இருக்கையோடு சாய்ந்தாற்போல் நின்றுகொண்டாள் இயலணி. அருகில் அவளைப் போல வேலைக்குச் செல்போரும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் நின்றுகொண்டிருந்தனர்.
வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தவளை பின்னிருந்து தள்ளி நெருக்குவது போலிருக்க, உச்சுக்கொட்டி நகர்ந்து நின்றாள். சில நொடிகளில் மீண்டும் பின்னிருந்து தள்ள, “கொஞ்சம் தள்ளாம இருங்க.” என்றபடி அவள் பின்னால் திரும்பிப் பார்க்க, பள்ளி மாணவி ஒருவள் வேகமாக தலையசைத்தாள்.
“நான் இல்லைக்கா. பின்னாடிலேந்து தள்ளுறாங்க. சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்க.” என்று மிரண்டு விழித்தாள் சீருடையில் இருந்தவள்.
“நீ முன்னாடி வாமா.” அப்பெண்ணை பார்க்கவும் பாவமாக இருக்க, அவளை தனக்கு முன்னே விட்டவள் பின்னே நகர்ந்து நிற்க, மீண்டும் பலமாக ஒரு இடி.
“இப்படி பண்ணா எப்படிங்க நிக்குறது?” என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்க்க, வயதான பெண்மணி ஒருவர் முகம் கசங்க ஒருவித அவஸ்தையில் நின்றிருந்தார்.
“என்னாச்சுங்க அம்மா?” தயங்கினாலும் கேட்டுவிட்டாள்.
யார் கேட்பார் என்று நின்றிருந்தது போல், “பின்னாடிலேந்து தள்ளிட்டே இருக்காங்கமா. நானும் நகர்ந்து நகர்ந்து பாக்குறேன், இடிச்சிட்டே இருக்காங்க. கூட்டமா இருக்குறதுல ஏறவே கூடாது போல. நெரிசல்ல அங்க இங்கனு கைபடுது.” என்று புலம்பலாக சொல்லி முடிக்க, எக்கிக்கொண்டு பின்னால் பார்த்தாள். கண்கள் சிவந்து தலை கலைந்து பார்க்கவே ஏதோபோல் நின்றிருந்த ஒருவன் பேருந்து மேடுபள்ளதில் ஏறி இறங்கி குலுங்கவும் அதன் அதிர்வில் அன்னிச்சையாய் முன்னே வருவது போல் அந்த வயதான பெண்மணி தோள் மீது கைவைத்து மோதி நின்றான்.
இயலணியின் விழிகள் கூர்மையாக, முகத்தை தேய்த்துக்கொண்டவன் கையுயர்த்தி மேல் கம்பியை பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் திரும்பி நின்றுகொண்டான்.
“நீங்க கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்கமா.” என்று இயலணி முன்னே நகர்ந்து அந்த பெண்மணிக்கு இடம் கொடுத்தாள். அப்பாடா என்று அவர் நினைத்து முன்னே நகர்ந்த நொடி மீண்டுமொருமுறை இடித்தான் அவன்.
“ஹேய்…” அவன் சட்டை பிடித்து வெகுண்டுவிட்டாள் இயலணி.
“பஸ்ல பிரேக் போட்டா முன்னாடி தான் வரணும். பின்னாடிலேந்து தள்ளுண்ணா நான் என்ன பண்ண முடியும்? சட்டையில இருந்து கையை எடுங்க முதல்ல.” அவன் குரலே குளறலாய் வர, உடம்பை இங்குமங்குமாய் அசைத்தான். இயலணி அவனை தாண்டிக்கொண்டு பார்க்க, அவளையே அதிர்ந்து பார்த்த வண்ணம் தலையை இடவலமாய் அசைத்து, “நான் இல்லை.” என்றிருந்தான் அறிவழகன்.
இவரு எங்க இங்க என்ற கேள்வி வந்தாலும் எதிரே நின்றவனின் மீதிருந்து வந்த நாற்றம் அவளை யோசிக்க விடவில்லை. குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்றதுமே பஸ்ஸில் எதிர்ப்புக் குரல்கள்.
“போலீஸ்ல புடிச்சி கொடுக்கணும்.” என்ற பேச்சுக்கள் வந்தாலும்,
“ஆபீஸ் போக நேரமாகுது. இப்போ போய் போலீஸ் ஸ்டேஷன் கேஸ்ன்னு போனா லேட்டாகிடும். அவனை இறக்கிவிட்டுட்டு பஸ் எடுங்க.” என்ற குரலே அதிகம் ஒலித்தது.
“தெரியாம இடிச்சிருப்பான். விட்டுருமா. நேரமாகுது.” என்று அந்த பெண்மணியே சொல்ல நொந்து போய் பார்த்தாள் இயலணி.
“அவனோட அத்துமீறல் கூட புரியலையா உங்களுக்கு?” என்று கேட்டவளது குரல் எதிர்குரலில் அடங்கித்தான் போனது. பெரும்பான்மையானோர் காவல் நிலையம் செல்ல எதிர்ப்பு தெரிவிக்க இயலணியை சமாளிக்கப் பார்த்தார் நடத்துனரும்.
“இப்படி விடுறதுனால தான் நிறைய தப்பு நடக்குது.” அதிருப்தியாய் பொருமியவளுக்கு துணையாய் வந்தான் அறிவழகன். மற்றவர்களிடம் பேசி சமாளித்து அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காவலரை அழைத்துப் பேசி என இறுதியாக இயலணியுடன் அறிவழகனும் சேர்ந்து காவல் நிலையம் சென்றனர்.
புகார் வாங்கிக்கொண்டு இவர்களை அனுப்பிவிட, “ஒருத்தன் அத்துமீறுறான்னு கூட புரியாத நிலையில தான் இருக்காங்க நிறைய பேர்.” நொந்து போய் பேசினாள் இயலணி.
“அவங்க வயசானங்க இந்த தொல்லை எல்லாம் வராதுன்னு நினைச்சிருப்பாங்க.” என்ற அறிவழகன் அலுவலுக்கு நேரமானாலும் அவளுடன் பேச கிடைத்திருக்கும் வாய்ப்பை தவறவிட விரும்பாது அவளுடன் இறங்கி சாலையில் நடந்தான்.
“குடிச்சிட்டா குழந்தை, குமரி, கிழவி எல்லாரும் ஒன்னுதான்ல? சதைபிண்டம் தான்ல?” அவளின் ஆதங்கத்திற்கு தான் என்ன பதில் கொடுத்துவிட முடியும் என்று தலை குனிந்தான் அறிவழகன்.
திடுமென அமைதியாகிவிட்டவனை திரும்பிப் பார்த்தவள் ஒரு வேகத்தில், “உங்ககிட்ட போய் கேக்குறேன் பாருங்க.” என்றுவிட, தீயென சுட்டது அவள் வார்த்தைகள்.
தொண்டை அடைக்கும் உணர்வை விழுங்கியவன் வலியுடன் அவளைப் பார்க்க வார்த்தைகள் வர மறுத்தது.
“குடி மட்டுமில்லை கோபமும் கண்ணை மறைச்சிடும்ல. உங்களுக்கு மறைச்ச மாதிரி.”
“ப்ளீஸ் இயல்.” இறைஞ்சலாய் பார்த்தவன் பின்னிருந்து ஒலிக்கும் வண்டி சத்தத்திற்கு இணங்கி உட்புறமாய் அவளை நெருங்கி செல்ல சங்கடப்பட்டு அப்படியே நடக்க, மோதுவது போல் நெருங்கிய வாகனத்தை அன்னிச்சையாக உணர்ந்து அதிர்ந்த இயலணி அவனை தன்னை நோக்கி இழுத்திருந்தாள்.
“என்ன பண்றீங்க நீங்க? ஹாரன் அடிக்குறாங்க, நகர வேண்டியதுதான?”
அவள் தோள் உரச மோதி நின்றவன் பின் மெல்ல விலகி, “முன்னாடியும் ஆளுங்க நடக்குறாங்க, நகர இடமில்லை.” என்று சமாளிக்க, அவளுக்கு புரிந்துபோனது.
நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டவள், “எந்த ஏரியா?”
“ஹான், என்ன இயல்?”
“உங்க ஆபீஸ் எந்த ஏரியா?” என்று அவள் கேட்கவும் பதில் சொன்னவன், “உன் ஸ்கூல் தாண்டிதான். நான் போயிக்குறேன். நீ பாரு.” என்று சொல்ல, யோசனையில் அவள் நெற்றியில் நீளக்கோடுகள்.
“தினம் என்னை பாலோ பண்றீங்களா?”
“இல்… இல்லையே.” அவன் தடுமாற்றமே ஆம் என்றது.
“ஓ…”
“ஆட்டோ போடுறேன். வாயேன் இயல் நேரமாகிடுச்சே.” கடிகாரத்தை பார்த்துக்கொண்டே அவன் அழைக்கவும் நேரமாவதை உணர்ந்து மறுப்பு சொல்லவில்லை இயலணி.
சம்மதம் போல் அவள் நிற்கவும் ஆசுவாசமானவன் வேகமாக ஆட்டோ ஒன்றை புக் செய்து வரவும் அதில் ஏறிவிட, இருவருக்கும் இடையில் அவரவர் பைகள் இடப்பெற்றுக்கொண்டன.
இந்தளவுக்கு அவள் பேசியதே போதும் என்று அவனும் இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்று அவளும் மெளனமாகிவிட, அவள் பள்ளி வந்துவிட்டது. அவள் இறங்க வழி விட்டு இறங்கியவனிடம் மெலிதாக தலையசைத்து அவள் விடைபெற,
“இயல்.” என்று நிறுத்தியிருந்தான் அறிவழகன்.
என்ன என்பது போல் அவள் பார்க்க,
வழவழப்பான கழுத்தில் பளிச்சென்று மின்னி புதுப்பொலிவு பெற்றிருந்த தாலிக்கயிறை பார்த்தபடி, “என் நம்பரை சேவ் பண்ணலாமே இப்போவாச்சும்.” என்ற வேண்டுதலுடன் அளவாய் விரிந்த இதழ்களுக்குப் போட்டியாய் கன்னக்கதுப்புக்கள் பொலிவுற நின்றவனை விழியுயர்த்தி பார்த்தவள் அவனுக்கு பதில் கூறாது திரும்பி நடக்க, பின்னந்தலையை கோதிய வண்ணம் அவளையே நின்று பார்த்தான் அறிவழகன்.
error: Content is protected !!