Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மார்கழி மத்தாப்புக்கள்

மார்கழி மத்தாப்புக்கள் – 25

மார்கழி – 25

அன்றைய பரபரப்பில் தங்களை இணைத்துக்கொண்டு சேனல்களை மாற்றி மாற்றி பரபரப்பு செய்தியை பார்த்தவண்ணம் இருந்தனர் குடும்பத்தினர். இயலணி சாட்சி சொன்ன வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்.

“சட்டத்தை கடுமையாக்கணும். இந்த துபாய்ல எல்லாம் மரணதண்டனையாமே. அதுமாதிரி இங்க கொண்டுவந்தா தான் இவனுங்களுக்கு பயம் வரும்.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் மாறன்.

அவரை ஒருமுறை பார்த்துவிட்டு தொலைக்காட்சியை பார்த்தாள் இயலணி. எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கேயே ஓரிடத்தில் இருந்தார் மேகலா. முதலில் மறுத்தவள் பின் தன்னிடம் சிரித்து சிரித்து பேசி அத்தானிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்ற பெண் வீடு செல்லும் முன் மகன் மருமகளுடன் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு சென்றதை ஏற்க மறுத்து மகனுக்கு உடனே அழைக்க அவனோ ஒரு மாதத்திற்கு மேலாக அவளுடன் இருப்பதாக சொல்ல தன் பிடி விலகும் உணர்வு. மருமகளின் பிடியில் அவளின் விருப்பத்திற்கு மகனை இழுத்து ஆட்டிவைக்கிறாள் என்று பதிந்து போக முறைப்பு மட்டுமே அவரிடம். கணவனையே முறைத்துக்கொண்டு இருக்க, மாமியார் முறைப்பெல்லாம் எதுவும் செய்யவில்லை இயலணியை.



Advertisement

“என்னமா இப்படி ஆகிட்ட. கல்யாணம் ஆனப்போ அண்ணின்னு கூப்பிட சொல்லிட்டு இப்போ அண்ணின்னு கூப்பிடுறேனு முறைக்குற.” மருத்துவமனை செல்வதற்காக வந்திருந்த தாமரை மேகலாவை கவனித்துவிட்டு கேட்க, அவளையும் முறைத்தார் அவர்.

“அண்ணனும் சரி உமாவும் சரி தெளிவா இருக்காங்க. நீ ஏன் குறுக்க இப்படி ஒரு யோசனையோட இருக்க? அண்ணன் அண்ணியை விடாது நீ மாறிக்கோ. என் மாமியார் மாதிரியெல்லாம் இருக்காத.” தனக்கு தெரிந்தவகையில் சொல்லிப்பார்த்தாள் அவள். பதிலில்லை அவரிடம்.

இத்தனை வருடம் முகம் திருப்பிக்கூட பேசாத மகன் திருமணத்திற்கு பின் தன்னைவிட்டு ஒதுங்கி சென்ற உணர்வு. அதுவும் மகனுக்கு விருப்பம் இல்லாத மருமகள் மேல் இப்போது அவருக்கு விருப்பமில்லை. சொன்னால் வீட்டில் கேட்க ஆளில்லை. மகனே உமாவின் அலைபேசி அழைப்பிற்கு பின் முகம் கொடுத்து பேசுவதில்லை. அதில் சற்று வாடிப்போனாலும் மருமகளை ஏற்க கடினப்பட்டார். தனக்கு வேறு வழியில்லை என்றும் புரிந்து போக, நாட்கள் செல்ல செல்ல உறவுக்குள் சுமூகம் வந்துவிடும் என்றும் எண்ணிக்கொண்டார். ஆனாலும் முறைப்பை நிறுத்தவில்லை.

Advertisement

குற்றவாளிகள் ஐவருக்கும் ஆயுள் தண்டனையும் சில இலட்சங்கள் அபராதமும் விதிக்கப்பட, ஆசுவாச உணர்வு. இந்த தண்டனை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமா என்று தெரியவில்லை என்றாலும் குற்றத்திற்கான தண்டனை என்று ஒன்று கிடைத்ததே அதுவரை நிம்மதி என்று பார்த்தாள். அதனையே மாறன் பகிர்ந்துகொள்ள, இயலணியும் அறிவழகனும் அமைதியாய் இருந்தனர். அவர்கள் மனப்போராட்டம் அவர்களுக்குள்.

Advertisement

“காலையில தாமரையை கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு தீபாவளி சீர் செஞ்சிட்டு வந்துருங்க ரெண்டு பேரும்.” என்று மாறன் மகனையும் மருமகளையும் பார்த்துச் சொல்ல,

“எப்போவும் நீங்களும் அம்மாவும் தான போவீங்க.” என்றான் குழப்பான மகன்.  

“கல்யாணம் முடிஞ்சி எங்கேயும் போகல நீங்க. இப்போதான் எல்லாம் சரியாகிட்டே. போய்ட்டு வாங்க. சீர் எல்லாம் நான் வாங்கிட்டு வந்து வச்சிடுறேன்.” என்றார் இருவரையும் அர்த்தமாய் பார்த்து. 

Advertisement

‘ஊர் ஊரா சுத்திட்டு வீட்டுக்கு தெரியாம குடுத்தனம் பண்ணிட்டு எங்கேயும் போகலையாம்.’ முணுமுணுப்பு மேகலாவிடம்.

“இப்படியே இருந்தீன்னா ரெண்டு பேரும் வேலையை காரணம் காட்டி ஊருக்கே வரமாட்டாங்க பாத்துக்கோ.” தாமரை மிரட்டவே செய்தாள். துவக்கத்தில் அண்ணியானவளிடம் சுணக்கம் இருந்தாலும் இங்கு வந்த இந்த இரு தினத்தில் அவள்தான் மருத்துவமனைக்கு உடன்வந்தாள்.

“எப்போவும் அம்மா துணைக்கு வருவாங்க ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. விரதம் இருந்து சாமிக்கு வேண்டிக்கோ அப்படி இப்படினு. அவங்க நம்பிக்கையை என் நல்லதுக்குன்னு நினைச்சி சொல்றாங்க ஆனா அதை கேக்குற எனக்கு அழுத்தமா இருக்கு. குழந்தை இல்லையேன்னு ஒவ்வொரு நிமிஷம் நியாபகப்படுத்திக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கு. ஒரு பங்ஷனுக்கு நிம்மதியா போய்ட்டு வர முடியல. விஷேஷம் இருக்கானு கேட்டு கேட்டு ஏங்க வச்சிடுறாங்க. இதுலேந்து எப்போ விடுதலை கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு நீங்க எதுவும் கேக்காம இப்படி துணைக்கு வந்ததே ஆறுதலா இருக்கு. நல்ல வேளை கடைசி நேரத்துல விருந்தாளி வந்து அம்மாகிட்டே இருந்து காப்பாத்தி விட்டாங்க. இதெல்லாம் யாருகிட்ட ஷேர் பண்றதுனு கூட புரியாம தவிச்சி போயிருந்தேன்.” இயலணியிடம் புலம்பித் தள்ளியிருந்தாள் தாமரை.

கடைசி நேரத்தில் உறவினர் ஒருவர் வந்து மேகலாவை பிடித்துக்கொள்ள, இயலணி உடன் சென்றாள். சென்றது கூட நல்லதிற்கு தான் என்று தோன்றியது இயலணிக்கு. முந்திய ஒதுக்கங்கள் எதுவுமின்றி அவளுடன் பழக முயன்றாள்.

“எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு வச்சிக்காம எப்போனாலும் நீங்க என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். இவ்ளோ அழுத்தத்துல இருந்தாலே உங்க உடம்பு அபெக்ட் ஆகும்.” என்று உறுதுணையாக இருக்க, இருவருக்குள்ளும் நல்லதொரு நட்பு துவங்கியது.  

“உங்க வீட்லேந்து எப்போ வராங்கமா?” மாறனின் கேள்வி இயலணியைத் தொட அறிவழகனும் அவளைப் பார்த்தான்.

“லேட் நைட் பஸ் ஏறியிருக்காங்க மாமா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.” என்று பதில் கொடுக்க,

“நான் பாத்து அழைச்சிட்டு வந்துறேன்.” என்று அப்போதே கிளம்பிவிட்டான் அறிவழகன்.

இவன் வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவள் வீட்டிலும் சொல்லியாகிவிட்டது. சம்மந்தி வீட்டினரிடம் பேச வேண்டும் என்று மாறனிடம் பேசியவர்கள் தீபாவளி சீரோடு வருவதாய் சொல்ல, அதற்காக தான் ஊருக்கு வைத்திருந்தனர் அறிவழகன் தம்பதியினர்.  

சற்று நேரத்தில் இயலணி பெற்றோரும் வந்துவிட, சங்கடமான சூழல்.

‘இப்படி பெற்றோர், தம்பி இருக்கும் போதே யாருமற்றவள் போல் நடித்து மறைத்துவிட்டாயே.’ என்ற மேகலாவின் குற்றப்பார்வை அவளை பின்தொடர்ந்துகொண்டே இருந்தது.

மாறன் நிலைமையை சீர் செய்ய முனைய, பரந்தாமனின் அணுகுமுறையில் சஞ்சலங்கள் மறைந்து இலகுவாகியது. தலைதீபாவளிக்கு மகள், மருமகனை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வரிசையாக தாலி பிரித்து கோர்த்தல், இருபக்க குலதெய்வ வழிபாடு என்று திருமணம் தொட்டு வரும் சடங்குகள் அனைத்தும் பேசி முடிவு செய்யப்பட்டது. எதற்குமே இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அமைதியாக இருந்துகொண்டனர். 

சீரும் சிறப்புமாக மாமனார் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட, இருவரையும் பார்த்தே இடைவெளியை கண்டுகொண்டார் வேம்பு.

“இன்னும் என்னடி உனக்கு பிரச்சனை? சும்மா முகத்தை தூக்கி வச்சிக்கிட்டே இருக்க? தேடிப்போய் வாங்கிகிட்ட வாழ்க்கையை காப்பாத்திக்கிட்டேனு நினைச்சா இப்படி இருக்க? என்னதான் நினைச்சிட்டு இருக்க?” மகளை தனியே பிடித்துவிட்டார் வேம்பு.

“எதுவும் தெரியாம பேசாதமா. தாலி கட்டிட்டோமேன்னு கடமைக்கு இருக்காரு. இதுல இந்த சீராடல் ஒன்னுதான் குறைச்சல்னு நானே இருக்கேன். இதுல நீ வேற.”

“அவரை பார்த்தா இன்னொரு பொண்ணை மனசுல நினைச்சுகிட்டு உன்கூட இருக்குற மாதிரி இல்லடி. அவர் பார்வை உன்னை தான் சுத்தி சுத்தி வருது.”

“ம்ச் உனக்கு ஒன்னும் தெரியாது.”

“ஆமாடி எனக்கு தெரியாதுதான். நீ மட்டும் புடிச்சு கட்டிக்கிட்டேன்னு சொல்லி அப்புறம் மாத்தி பேசி அவரை வேணாம்னு சொல்லலையா?” என்று அவள் பக்க தவறையும் சுட்டிக்காண்பிக்க, யோசனையானாள். ஆனால் சமாதானம் ஆகவில்லை, அதனை செய்ய வேண்டியவனோ அவளை பார்வையால் தொடர்ந்தானே ஒழிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முக்கிய செய்தி பரிமாற்றங்கள் குறுஞ்செய்தியில்  பகிர்ந்துகொண்டனர். இதோ கொண்டாட்டங்கள் முடிந்து இயல்பு நிலை திரும்பியும் எந்த மாற்றமும் இல்லை. 

‘பிடித்திருந்தால் இப்படி விட்டிருக்க மாட்டான். சமாதானம் செய்திருப்பான்.’ என்று அவளும், ‘எந்த பிரச்சனை என்றாலும் என்னவென்று பொறுமையாக கேட்க தோன்றுவதில்லையே. எப்போதும் நானே வலிந்து சென்றாலும் கண்டுகொள்வதில்லை. அவளுக்கு நம்பிக்கை வந்தபின் பேசட்டும்.’ என்று அவனும் நாட்களை கடத்தினர்.

விடுமுறை நாட்களில் ஆளுக்கு ஒருபுறமாய் அமர்ந்துகொள்வதில் தான் ஏக கடுப்பு. அப்படி என்ன இவளுக்கு என்று பார்த்து வைப்பான் கணவன். செய்வதை செய்துவிட்டு முறைப்பு வேறா என்று இருக்கும் அவள் உடல்மொழி. இருவருக்கிடையில் இந்த காதல் கண்ணாம்பூச்சி ஆடியது.

அன்று அவளது மாதவிடாய் என்று பார்த்ததுமே அவள் சோர்வு காட்டிக்கொடுத்துவிட்டது. அமைதியாக எல்லா வேலையும் செய்து அவளுக்கு ஓய்வு கொடுத்தான். 

“யாரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்.” அன்றிருந்த அசவுகரியத்தில் அவளாகவே எரிந்து விழுந்தாள்.

நிதானித்தவன் அவள் அருகில் அமர்ந்து அழுத்தமாய் பார்க்க, முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“அன்னைக்கு எதுக்கோ கடைக்கு போனப்போ உமாவை பாத்தேன். அவளா தான் விசாரிச்சா. எதுவும் சொல்லாம சின்ன கருத்து வேறுபாடுன்னு தான் சொன்னேன்.” என்று துவங்கியவன் அன்று நடந்தவற்றை பகிர்ந்தான். 

“கல்யாணம் அவ்ளோ ஈஸியா அத்தான். கருத்து வேறுபாடு வந்தா அதை எப்படி சரி செய்யுறதுனு யோசிக்காம இப்படி விலகி இருக்குறது நல்லா இருக்கா?” அதிருப்தியாய் உமா கேட்க, தன் பக்க தவறை பகிர முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான் அறிவழகன். 

“ஊரை கூட்டி ஏத்துக்கிட்ட உறவுக்கு ஒரு மதிப்பிருக்கு. அதுக்கு உண்டான மரியாதை தரவேண்டாமா நீங்க?”

“மரியாதையா?”

“என்னவும் இருக்கட்டும் உங்களை நம்பி வந்தவங்களுக்கான மதிப்பை நீங்க கீழிறங்க விடலாமா சொல்லுங்க.”

“ப்ச்… உனக்கு புரியாது உமா. அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அவளுக்கு முன்னாடி போய் நின்னு, பேசி இன்னும் தொல்லை கொடுக்க விரும்பல. அதை செய்ய மாட்டேனும் அவளுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.”

“வாக்கு கொடுத்துட்டா அந்த உறவுக்காக போராட மாட்டீங்களா? அவ்வளவு தானா அந்த மஞ்ச கயிருக்கு மதிப்பு? அப்படியே விட்டிருவீங்களா? பொண்ணுங்க வேணாம்னு சொல்றதே நீங்க திரும்ப எப்படி ரியாக்ட் பண்றீங்கன்னு பாக்கத்தான்.” என்று கண்சிமிட்டியவளை வேதனையாய் பார்த்தவன், 

“இது எதுவுமே என் விஷயத்துல பொருந்தாது உமா. செய்யக்கூடாத தப்பு பண்ணிட்டேன்.”

“யாரு தான் தப்பு பண்ணல சொல்லுங்க. அதை திருத்தக்க வாய்ப்பு கிடைச்சி எத்தனை பேர் மாறுறாங்க அப்படீங்குறதுல தான் இருக்கு அவங்களோட குணம். அதைவச்சே ஒரு பொண்ணால அவனோட வாழ முடியுமா முடியாதானு தெரிஞ்சிக்க முடியும்.”

“அதுக்காக அவளை போர்ஸ் பண்ண முடியாது.” 

“உங்களை யாரு போர்ஸ் பண்ண சொன்னா? பேச மாட்டேன் பாக்க மாட்டேன்னு தான சொல்லியிருக்கீங்க. நேர்ல போய் நிக்காதீங்க, பேசாதீங்க. தள்ளி இருந்தே அவங்களை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. வாய்ப்பு கிடைக்கும் போது உங்களையும் புரிய வைக்க முயற்சி பண்ணுங்க. அப்படியும் ஒத்து வரலைனா அப்புறம் நீங்களே பேசி முடிவு பண்ணிக்கோங்க. எனக்கு தெரிஞ்சு உங்களை வேண்டாம்னு சொல்றதுக்கு அவங்களுக்கு காரணம் கிடைக்காது. எல்லாம் நல்லா நடக்க என் வாழ்த்துக்கள் அத்தான்.” என்று கண்சிமிட்டி சொன்னவளை பார்த்து மலர்ச்சியாக நன்றி நவிழ்ந்திருந்தான் அறிவழகன்.

“அப்படி பேசிட்டு இருந்ததை தான் அம்மா பாத்துட்டு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. எப்போ உன் கழுத்துல தாலி கட்டுனேனோ அப்போவே உன்னை மனசுல இருத்திக்க முயற்சி பண்ணேன்.” என்று சமாதானமாய் அவன் கூற, 

“அதான், வலுக்கட்டாயமா இருத்திக்க முயற்சி பண்ணியிருக்கீங்க. தானா ஒன்னும் நடக்கலைல.” என்று எரிந்து விழுந்தாள் அவளும்.

“இந்த டைம்ல இதை நினைச்சி நீ ஸ்ட்ரெஸ் ஆகிக்க வேண்டாம்னு தான் இப்போ இதை சொன்னேன். மத்தபடி அர்த்தமில்லாம கற்பனை பண்ணிக்க இல்லை.”

“ஓ… இப்போ தான் முதல் தடவை எனக்கு உடம்பு நோகுது அதனால இப்போ சொல்றீங்கல்ல?” நடுவில் வந்த மாதங்களிலும் இந்த மூன்று நாட்கள் அவதிப்பட்டிருக்கிறாள் அப்போது எல்லாம் இதனை சொல்லாதவன் இப்போது ஏன் சொல்கிறாய் என்று கடுப்புடன் பார்த்தாள். 

“ப்ச்… நீ மட்டும் என்னை விரும்பி கட்டிக்கிட்ட மாதிரி சொல்லாத. கல்யாணமாகி மூணே நாள்ல க்ரேஷ்ன்னு வந்து நிக்கல. அப்போ நீயும் என்னை இருத்திக்க முயற்சி பண்ணிட்டு தான இருக்க?” பேச வேண்டும் என்று பேசவில்லை. கேள்விக்கு பதிலாய் அவன் பேசிவிட, அமைதியாகிவிட்டாள் இயலணி.

அவளைப் பார்த்து பெருமூச்சுவிட்டவன் தேவையற்ற நேரத்தில் இந்த பேச்சினை எடுத்ததை எண்ணி நொந்துகொண்டான்.

‘வாத்திக்கு எப்போ எதை பேசணும்னு தெரிலைனு அப்போவே சொன்னா. நாந்தான் கேக்கல.’ வாய்விட்டு புலம்பிக்கொண்டே நகர, பல நாள் கழித்து இலகுவாக உணர்ந்தாள் இயலணி.

‘இப்போ அவர் காதலிக்காதது தான் பெருசா இருக்குல்ல உனக்கு. முன்னாடியே காதலிச்சு கட்டாயப்படுத்தியிருந்தா ஈஸியா மன்னிச்சிட்டு போயிருப்பியா?’ தன்னைத்தானே கொட்டிக்கொண்டவளுக்கு தெரியவில்லை பல பெண்கள் கொண்டவன் மீதுள்ள அன்பினால் அவர்களின் தவறுகளை ஏற்று மன்னித்து, தங்களுக்கான நியாயத்தை, தங்களின் சுயகவுரவத்தை விட்டுக்கொடுத்துதான் வாழ்கின்றனர் என்று. அதற்காக அது சரியென்று இல்லை பலருக்கு இவள் போல் புரிதலும் அதனை உள்வாங்கி அடுத்தடுத்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட காலஅவகாசம் கிடைப்பதில்லை. இவள் கிடைத்த நாட்களில் பலவாறு யோசித்து அவனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறாள். அதற்கு தகுதியானவன் என்று அவன் நிரூபித்திருந்தாலும் அது போதவில்லை இயலணிக்கு.

மேலும் சில நாட்கள் நகர, மாற்றங்கள் எதுவுமில்லாமல் இருவருமே ஒருவித வெறுமையை அமைதியின்மையை உணரத் தொடங்கினர்.

‘ச்ச… என்னதிது? முன்னாடியெல்லாம் நைட் வேலையை முடிச்சிட்டு அரைமணி நேரமாவது பேசிட்டு தூங்குவோம். அவ்ளோ ஹாப்பியா இருக்கும். இப்போ ஏன்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு. பேசாம அவரோட பேச ஆரம்பிச்சிடலாம். நாமளும் தான் பாடாப்படுத்துறோம்.’ என்று அவளாகவே ஒருநாள் பொறுக்க முடியாது முடிவு செய்துகொண்டு வீட்டிற்கு வர, அன்று என்று பார்த்து அவன் வீட்டிற்கு வர நேரமாகியது.

அவனுக்காக காத்திருந்து உண்டுவிட்டு பார்க்க மணி பத்தானது. அதன் பின் அலைபேசியை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக இருக்க, அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் செல்லவில்லை. பதினொன்றை நெருங்கியது, பயம் பிடித்துக்கொண்டது. இவ்வளவு தாமதமாக அவன் என்றுமே வந்தது இல்லை. அப்படியே தாமதமானாலும் அழைத்து சொல்லிவிடுவான். இன்று அழைப்பும் செல்லவில்லை. பயத்தில் வியர்வை அரும்ப, அலைபேசியை அழுந்த பிடித்து அவனுக்கு அழைப்பு விடுக்க முயற்சித்து கொண்டே இருந்தாள். 

‘என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பண்றீங்க? எனக்கு பயமா இருக்கு.’ இடைவிடாத புலம்பல்களை கேட்க ஆளரவமின்றி வெறிச்சென்று இருந்தது வீடு. 

‘அறிவு வாங்களேன் ப்ளீஸ். இனிமே சண்டை போட மாட்டேன். உங்களுக்கு என்னை புடிக்கலைனாலும் பரவாயில்லை, எனக்கு தான் உங்களை புடிச்சிருக்கே.’ என்று அவள் நெருக்குருகி உடையும் நேரம் அழைப்பு மணியின் ஓசை.

மின்னல் வேகத்தில் எழுந்து சென்று கதவை திறக்க, அவள் விழி நிறைக்க நின்றிருந்தான் அறிவழகன். 

அவனை காணாது தவித்த தவிப்பிலும் இப்போது கண்டுவிட்ட நிம்மதியிலும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் ததும்ப நின்றவள் அவனின் இயல் என்ற அழைப்பில் வெடித்துக் கிளம்பிய கேவலை கொட்டியபடி அவன் நெஞ்சில் சாய்ந்துவிட்டாள்.

“நிறைய அழுது, நிறைய சிரிச்சி, நிறைய பேசி, எப்போ என்கிட்ட பழையபடி இருப்பேன்னு எதிர்பார்த்து என்னை ஏங்க வச்சிட்ட இயல். புடிச்சிருக்கா காதலா கேட்டா எனக்கு தெரியல. இங்க என் நெஞ்சுல பதிஞ்சுட்ட. உனக்கு ஒன்னுனா நாந்தான் பாக்கணும், உன்னை சந்தோசமா வச்சுக்கணும், உன் கண் பார்த்தே உன்னை புரிஞ்சிக்கணும் இப்படி நிறைய நிறைய தோணுது. போக போக நீ எதிர்பாக்குற காதல் வரலாம். அதுக்கு நீ என்கூட இயல்பா இருக்கணும். எதையும் உனக்காக கட்டாயப்படுத்தி வரவச்சிக்க முயற்சி பண்றதில்லை. அது இந்த உறவுக்கும் அழகில்லை. 

இயல் மேல வரப்போற காதல் கூட இயல்பா நடக்கணும் ஆசைப்படுறேன். சந்தோசமா இரு பர்த்டே கேள். இந்த ஜென்மத்துல இந்த புள்ளைக்கு அறிவா நீ இருன்னு சொல்லி எனக்கு கட்டிக்கொடுத்திருக்காங்க.” என்று அவன் பேசியதில் மூக்கை உறிஞ்சியபடி அவனை சரமாரியாக அடித்தாள்.

“இப்படித்தான் பயமுறுத்துவீங்களா… இப்போ யார் கேட்டா உங்க காதலை? இல்லை இதுதான் காதல்னு ஏதாவது டிராப்ட் இருக்கா? ஏதோ ஒரு உந்துதல்ல தான என்னை தேடி வந்து என்னை நல்லா பாத்துக்கணும்னு நினைக்கறீங்க. இந்த பாசம் போதும் எனக்கு.” உணர்ச்சியில் ததும்பியவள் மீண்டும் அவனை அணைத்துக்கொள்ள, காதல் இலக்கணம் கற்றுக்கொள்ள எண்ணி அவளை அப்படியே தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.

“இந்த தூக்கிட்டு போறதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? படத்துல காமிக்குறாங்களே…” வேண்டுமென்றே அவள் முகத்தை அவன் நெஞ்சில் தேய்க்க, 

“தூக்கணுமா உனக்கு? அதுதான் காதலா?”

“அப்படிதான் காமிக்குறாங்க.” என்றவளை தன்னிடமிருந்து பிரித்தவன் பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை ஏந்திக்கொண்டான்.

“போன வருஷம் இதே நாள் இந்த பொண்ணு மூஞ்சியை உம்முனு வச்சிக்கிட்டே தூங்கிடுச்சு. என்னனு கேட்டா மூணு நாள் கழிச்சி என் பிறந்தநாள் முடிஞ்சி போச்சு. யாரும் கூட இல்லைனு அழுவ பாத்துச்சு.”

“இன்னைக்கும் அழுவ தான் வைக்குறீங்க.” என்றாள் அவன் நெஞ்சில் குத்தியபடி.  

“அதுதான் சிரிக்க வைக்கலாம்னு இருக்கேன்.” விஷமமாய் அவன் சொல்ல, 

“எப்படி?” என்று விழித்தாள் அவள்.

இப்படித்தான் என்று அவளிடையில் விரல்கள் கொண்டு கூச்சம் மூட்டியவன் அவளை பின்னிருந்த மஞ்சத்தில் தள்ளி அவளிதழ்களை மென்மைக்கும் வன்மைக்கும் இடையில் கவ்விக்கொள்ள, அவன் கழுத்தை சுற்றி அவள் கரங்கள் பூமாலையாய்.

மார்கழி மாதக் குளிரில் மஞ்சத்தில் ஏறிய வெப்பம் இருவரையும் தகிக்க வைக்க, கொஞ்சல்கள் இடையில் இதுவா காதல் என்று இருவரும் மாறி மாறி கேட்டுக்கொண்டதில் தேகங்கள் சிலிர்த்து சிவந்து தனிப்பொலிவு பெற, பழையன கழிந்து புது நினைவுகள் அழகாய் ஆக்கிரமித்துக்கொண்டது. 

காலையில் மட்டுமல்ல இரவிலும் நாங்கள் சண்டையிடுவோம் என்று வலிய இழுத்து விட்டுக்கொண்ட பூசல்கள் எல்லாம் அந்த குளிருக்கு சவால் விடும் வெப்பங்கள். 

முதல் கூடல் மனதில் கொடுத்த வடுவிற்கு எதிர்பதமாக சற்றும் சளைக்காத வடுவாய் தேகங்களில் பற்களின் அச்சுக்களை வாங்கிக்கொண்டு உருவம் பெற்று வெட்கங்களை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தன. வடுவுக்கு மருந்தாய் முத்தங்களும் தொடர்ந்து இதம் கூட்ட, நான் என்ற கர்வம் பின்சென்று நாமாகினர்.       

ஒருவரை ஒருவர் அனுசரிப்பது எப்படி என்று எளிதாக கற்றுக்கொடுத்த தாம்பத்தியம் இன்னுமே அவர்களை மற்றொருவர் பால் நெருக்கியிருக்க, மார்கழி கோலங்களின் மத்தாப்புக்களாய் அறிவழகனும் இயலணியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!