Skip to content
Post Views: 3,853
மார்கழி – 9
அடர் இருள் சூனியமாய் வாழ்க்கையை சூழ்ந்ததோ, எதிரிலிருந்த வெற்றுச் சுவரை வெறித்திருந்தவள் வெறுமையாய் அருகில் இருந்தவனை திரும்பிப் பார்த்தாள். தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்தவன் இவள் பார்வை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
வெட்டும் மின்னலைத் தாங்கித் தாக்கிய அவளது விழிகளை சந்திக்க முடியாமல் திணறியவன் சிரம் வெட்கித் தொங்கியது. இப்போது பேசு என்பது போல் சில நொடிகள் அழுத்தமாய் அற்பமாய் பார்த்தவள் எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தாள். அவள் வரவுக்காக காத்திருந்தவன் தயக்கத்துடன் அவள் கை பிடித்து அவள் விழிகளை நேராய் பார்க்க திராணியற்று சிரம் தாழ்த்தி, “சாரி.” என்று ஒற்றை வார்த்தையை உதிர்க்க, வேகமாக தன் கையை உருவிக்கொண்டவள் காளி அவதாரம் எடுத்திருந்தாள்.
“சாரின்னு நான் சொன்னதுக்கு என்ன சொன்ன, உன் சாரி போன என் வாழ்க்கையை சரி செய்யுமானு கேட்டீல்ல. இப்போ உன் சாரி எதை சரி செய்ய போகுது.” இதழொற்றலின் இடையே மீண்டும் அவள் யாசித்த மன்னிப்பிற்கு அவன் தந்த பதில் இப்போது அவனுக்கு எதிராய் திரும்பி குற்றம் சுமத்தியது.
Advertisement
“எனக்கு என்னாச்சுன்னு தெரியல. நான் ஏன் இப்படி பண்ணேன். பண்ணி இருக்ககூடாது.” முகத்தை அழுந்தத் தேய்த்து கம்மிப்போன குரலில் விளித்தவன் முகம் அத்தனை அவமானம் தாங்கி இருந்தது.
“பண்ணிட்டீங்களே அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” அவனின் வார்த்தைகளை கொண்டே அவனை தாக்கியவள் நாசியில் நீர் சுரப்பு.
மூன்று நாட்களாக அவனது கேள்விகளுக்கு அவள் எப்படி பதிலின்றி நின்றாளோ அதே நிலையில் இன்று நின்றான் அறிவழகன். செய்துவிட்ட அநியாயத்திற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை அவனிடம். பேச்சற்று அவளை நிமிர்ந்து பார்க்கும் சக்தியின்றி தொய்ந்து நின்றான். அவன் எதுவும் சொல்லப்போவதில்லை என்பதே அவளை குமுறச் செய்தது.
Advertisement
“சார் மேல காதல் இல்லைனு சொல்லவும் அப்படி பொத்துக்கிட்டு வருது. ஆமா நாந்தான் தப்பா புரிஞ்சிட்டு இத்தனை தூரம் கொண்டு வந்தேன். அதை புரிஞ்சிகிட்டு விலகிடலாம்னு சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா? அதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா? நீங்க பெரிய காதல் மன்னருன்னு நிரூபிக்க அத்தை பொண்ணை மனசுல வச்சிக்கிட்டு புடிக்காத பொண்டாட்டியை தொட்டு அவளுக்கு தண்டனை குடுத்தீங்களோ.” சொல்லும் போதே அவள் குரல் கலங்கிப்போனது.
Advertisement
பதறியவனாய் அவள் இருகைகளையும் தனக்குள் பொதித்துக்கொண்டவன், “மனசுல இருக்குறவ நினைப்போட உன்னை… உன்கிட்ட வரல இயல். அந்தளவு கீழானவன் இல்லை நான். ஏதோ நீ போறேன்னதும் கோவத்துல…” தன் செய்ததில் தவறில்லை என்று மாறிதட்டிக்கொள்ள முடியாது தடுமாறினான் ஆடவன்.
“ஓ… இதுக்கு இப்போ சந்தோஷப்படணுமா நான்?” எள்ளலாக எதிர்வினை புரிந்தவளின் உடல் உணர்ச்சிகளின் பிடியில் நடுங்கத் துவங்கியது.
அவள் நடுக்கத்தை தன் கைகளினுள் உணர்ந்தவன் விரல்களை மூடி அவளை அழுந்தப்பற்ற, அதனை விலக்கிக்கொண்டு பின்னகர்ந்தவள் ஆற்றாமையாய் பார்த்தாள்.
Advertisement
“நான் ஏன் இப்படி ஒளிஞ்சி மறைஞ்சி இருக்கேன் தெரியுமா? அஞ்சு பேர் சேர்ந்து ஒரு பொண்ணை சிதைச்சி போட்டுட்டானுங்க. அந்த அஞ்சு பேரை கண்ணால பாத்தா ஒரே சாட்சி நாந்தான். அவனுங்களுக்கு எதிரா சாட்சி சொல்லக் கூடாதுனு என்னை, என் குடும்பத்தை மிரட்டி முடக்கப்பார்த்தாங்க. என்னைக்கு இருந்தாலும் அந்த பொண்ணுக்கு நியாயம் செஞ்சு அவனுங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு சொந்த ஊரை விட்டு தப்பிச்சி இங்க வந்தா அவனுங்களுக்கு சலைச்சவன் இல்லை நான்னு காமிக்குறியா நீ.”
“என்னடி பேசுற நீ.”
“இப்போ எனக்கு யாரு நியாயம் வாங்கிக்கொடுப்பா. தாலி கட்டிடதுனால யார் கேட்பான்னு நினைச்சியா? இந்த நாலு சுவரு தான் எல்லாத்துக்கும் சாட்சினாலும் மனசுக்கு தெரியுமே நீ என்ன பண்ணேன்னு.” வலியை விழுங்க முயன்று வேதனை தன்னை முடக்காதிருக்க பிரயத்தனப்பட்டாள் இயலணி.
“இயல் நான் தப்பு தான்… அதுக்காக அவனுங்க கூட என்னை நீ…” வாய் திக்கி அவன் தவிப்புடன் மறுப்பாய் பார்க்க,
“உனக்கும் அவனுங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.” அவன் சொல்ல முடியாது தடுமாறியதை சாட்டையடியாய் இவள் சொல்லிவிட, சுமத்தப்பட்ட பழியில் துடித்துப்போனான் அறிவழகன். வளர்ந்து கெட்ட ஆடவனின் கண்கள் கலங்குவேன் என்று காத்து நின்றது. உடலில் சுருக்கென்று ஒரு நடுக்கம். முதல்முறையாய் இதயம் தாறுமாறாய் துடித்து வேலை நிறுத்தம் செய்ய முனைந்தது போல் சில நொடிகள் தாளம் தப்பியது. அவளுக்கு எதிர்வினைப் புரிய வார்த்தைகள் வரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்து சித்தம் கலங்கி நின்றது. வியர்வை ஊற்றுக்கள் உடலின் அங்கங்களில் பொங்கி வழிந்தது.
“காதல் இல்லைனாலும் சின்னதா ஒரு ஈர்ப்பு இருந்துச்சி உன் மேல. அதை நீயே குழி தோண்டி புதைச்சிட்ட.” அவனுக்குக் குறையாத நடுக்கம் அவளிடமும். முதல்முறையாய் ஒருவன் மேல் சலனம் தோன்றி அவன் பொய்த்துப்போனதின் வலி அவளை வெகுவாய் தாக்கியது. நடந்துவிட்டதை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது தத்தளித்தவள் எடுத்த முடிவில் அவன் தள்ளாடிப் போனான்.
வழிந்த கண்ணீரை நடுங்கும் கரம் கொண்டு துடைத்துக்கொண்டவள் திரை மேலிட்ட விழிகளோடு அவனை ஏறிட்டு, “நீ பண்ணதுக்கு மன்னிப்புனு ஒன்னு கிடையவே கிடையாது. சாரியை தூக்கிகிட்டு பின்னாடி வந்துறாத. குட்பை.” என்று அழுத்தமாக, சீற்றமாக உரைத்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டாள் இயலணி.
அவன் உச்சி மண்டையில் அவள் உரைத்துச் சென்ற நிதர்சனத்தில் சுள்ளென்று ஒரு வலி. கறையுடைக்கக் காத்திருந்த கண்கள் கண்ணீரை காட்டாற்று வெள்ளமென கொட்ட, தொய்ந்து தோல்வியுற்றவனாய் மடங்கி அமர்ந்தவன் முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டான். முதுகு அழுகையில் குலுங்க, திருத்தம் செய்ய முடியாத பிழையை சுட்டிக்காட்டி மனசாட்சியே குத்திக் குதறியது. அப்படியென்ன கோவம் உனக்கு என்று தன்னைத் தானே குட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் அமர்ந்திருந்தவன் மனம் வேகம் கொண்டு துடித்து சமன்பட மறுத்தது.
விரும்பிய பெண்ணை கூட நெருங்கிப் பேசிடாதவன் கண்ணியம் இன்று ஏளனமாய் கைக்கொட்டி சிரிப்பது போலொரு பிரம்மை. செய்த செயலின் வீரியம் பாரமாய் ஏறி உடல் கனத்தது. முயன்று தன்னுடலை அசைத்தவன் கண்களை துடைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். இருள் படர்ந்த அரவமற்ற வீட்டில் இயலணியின் இல்லாமை மெல்ல கருத்தில் பதிந்தது.
“இயல்…” பதறி எழுந்தவன் கூடத்திற்கு விரைந்தான்.
அந்த இருட்டிலும் வாயில் கதவு திறந்திருப்பது கருத்தில்பட நெஞ்சம் அடித்துக்கொண்டது. வீடு முழுதும் அவளை தேடிப் பார்த்தான். அவள் இருக்கும் தடம் ஒன்றுகூட இல்லை. எங்கே சென்றாள் இந்த நேரத்தில் என்று தலையை பிடித்து நின்றுவிட்டவன் அவள் கடைசியாய் பேசிச் சென்ற வார்த்தைகளை நினைவு கூற முயன்றான். தன்னுலகிலே மருகிப் போயிருந்தவனுக்கு சட்டென்று அவள் பேசியது கோர்வையாய் நினைவில் இல்லை. யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி கீழிறங்க, கும்மிருட்டும் நடுநிசியின் பூச்சுக்களின் சத்தமும் கிலியூட்டியது.
வண்டியை கிளப்பிக்கொண்டே அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாது கடவுளே என்று மனம் அவசர பிராத்தனை வைக்க, உன்னுடன் இருந்தால் பாதுகாப்பில்லை என்றுதான் தப்பிவிட்டாள் என்று எடுத்துக்கொடுத்து அவனை மேலும் அமிழ்த்தியது. மனதின் குற்றச்சாட்டுகளை முயன்று ஒதுக்கியவன் வண்டியை நிதானமாக ஓட்டிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்வையை விரட்டி அவள் தென்படுகிறாளா என்று நோட்டம் விட்டான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவளில்லை. நடமாட்டமில்லாத இந்த இரவு நேரத்தில் எங்கு சென்றிருப்பாள் என்ற பயம் அவனை நிலைகுலையச் செய்ய, புறநகர் சாலைக்கு வந்திருந்தான். நான்கு சாலைகளின் சந்திப்பில் பேருந்து நிறுத்தம் ஒன்று இருக்கும். ஒருவேளை அங்கிருப்பாளோ என்று வண்டியை அங்கு விட, அவ்விடம் காலியாய் இருந்தது. கண்கள் அவள் எங்கும் ஒளிந்திருக்கிறாளோ என்ற யோசனையில் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தது.
‘இயல் எங்க இருந்தாலும் பத்திரமா இரு… என் மேல கோவம்னா கூட இருந்தே சண்டை போடு, அடி. என்ன தண்டனை வேணும்னாலும் குடு. இப்படி என்னை பயமுறுத்தாத.’ யாருமற்ற அந்த சாலையில் வாய்விட்டே புலம்பி நின்றான். எங்கோ கேட்ட ஒரு நாயின் ஓலமும், அவனை வேகமாக கடந்து சென்ற பேருந்தும் பிதற்றல்களிலிருந்து அவனை வெளியே கொண்டு வர, பேருந்தை தொடர்ந்து கொண்டு பேருந்து நிலையம் வரை சென்று தேடினான். எங்கும் அகப்படவில்லை அவள்.
இருள் விலகி ஒளி வந்தபின்னும் அவன் உள்ளம் இருட்டடித்துக் கிடந்தது. பேருந்து நிலையம் முழுக்க ஒரு இடம் விடாமல் தேடியாகிற்று. கடைகளில் கூட விசாரித்துப் பார்த்துவிட்டான். ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் அப்பெரிய இடத்தினில் அவளை கண்டுகொண்டு நினைவு வைத்திருப்பவர்கள் யாருமில்லை. குறைந்தபட்சம் அவள் ஊர் எது, அவள் எங்கு படித்தாள், அவள் எங்கெல்லாம் சென்றிருக்க கூடும் என்ற யூகம் கூட இல்லாது கண்ணை கட்டி காட்டில் விட்ட குறையாய் தவித்து நின்றான்.
‘தாலி கட்டின பொண்டாட்டி பத்தி ஒரு மண்ணும் தெரியல. நீயெல்லாம் எந்த உரிமையில புருஷன்னு அவ மேல பாய்ஞ்சிருக்க?’ அவன் மனமே காரித்துப்பியது. அலைபேசி எடுத்து நேரத்தை பார்த்தான், விடிந்து ஏழைத் தொட இருந்தது. இதற்கு மேல் தாமதித்தால் அவளுக்கு ஏதும் ஆபத்து நேரலாம் என்ற ஐயத்தில் வேந்தனுக்கு அழைத்தான். இயலணியைப் பற்றி அறிந்த ஒரே ஜீவன் அவன்தான், கண்டிப்பாக அவன் கண்டுபிடித்துவிடுவான் என்று அத்தனை நம்பிக்கை நண்பன் மீது.
“என்னடா காலையிலேயே கூப்பிட்டிருக்க?” தூக்கக் கலக்கத்தில் ஒலித்தது வேந்தன் குரல்.
“இயலை காணும்டா.” பதட்டமாய் ஒலித்த அறிவழகனின் குரலில் வேந்தனின் தூக்கம் அப்பால் சென்றது.
“என்னடா சொல்ற? நேத்து சாயந்திரம் கூட பேசுனேனே. எங்க போனா?”
“நைட்லேந்து காணோம்டா.” அறிவழகனின் பதிலில் அதிர்ந்துவிட்டான் வேந்தன்.
“நைட்லேந்து காணும்னா இப்போ வந்து சொல்ற. பத்திரமா பாத்துக்க சொல்லி உன்கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே. எப்படிடா காணாம போனா? எங்கேயாவது வெளில கூட்டிட்டு போனியா? யாராவது தூக்கிட்டு போனானுங்களா?” என்று விசாரணைத் தொனியில் கேட்ட நண்பனிடம் உண்மையை சொல்ல முடியாது மென்று விழுங்கினான் அறிவு.
“இல்லை… என் மேல உள்ள கோவத்துல கோச்சிக்கிட்டு கிளம்பிட்டா. நைட் நேரம் ரொம்ப தூரம் எங்கேயும் போயிருக்க முடியாதுனு இங்க ஃபுல்லா தேடினேன். காணும்டா.” அறிவழகனின் குரல் உடைந்து விழவும் வேந்தனால் கடியவும் முடியவில்லை.
“மூணு மாசம் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்த உங்களால புருஷன் பொண்டாட்டி ஆனப்புறம் மூணு நாள் கூட தாக்கு புடிக்க முடியலையா? முதல்ல என்ன சண்டைனு சொல்லு, ரிஸ்க் எடுத்து இயல் வெளில போயிருக்க வாய்ப்பு கம்மி.” என்று கேட்ட நண்பனிடம் தன் இழி செயலை சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது அறிவழகனுக்கு.
“டேய் உன்னைத்தான் கேக்குறேன். என்ன சண்டை?”
“இயல் ஊரு எதுடா? அவ பிரெண்ட்ஸ் யாரும் இங்க பக்கத்துல இருக்காங்களா? அவளைப் பத்தி சொல்லேன்.” வேந்தனின் கேள்விக்கு பதில் கூற முடியாது தயக்கத்துடனே எதிர்கேள்வி கேட்டான் அறிவழகன்.
“ம்ச்… இந்த புருஷன் பொண்டாட்டினாலே இம்சைதான் போல. தேவையானதை பேசிக்காம தேவையில்லாததை பேசி சண்டை போட்டுட்டு கிடக்குதுங்க.” நிலவரம் புரியாமல் சலித்துக்கொண்ட வேந்தன், “இயல் இங்க கோயம்பத்தூர் பக்கம் பொள்ளாச்சிடா. அமைச்சர் மகனுக்கு எதிரான ஒரு முக்கிய கேஸ்ல இயல் தான் சாட்சி. இதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கோனு சொன்னேன்ல. அதை விட்டுட்டு சண்டை போட்டு வச்சிருக்க.” நடுநடுவே நண்பனை திட்டினாலும் காக்கிசட்டையில் அவளைத் தேட ஆயத்தமானான்.
“அவ்ளோ தூரத்துலேந்து இங்க கூட்டிட்டு வந்தியா. அவ அட்ரெஸ் குடு நான் போய் பாக்குறேன்.” என்று அவசரப்பட்டவனை தடுத்தான் வேந்தன்.
“நான் விசாரிச்சிட்டு சொல்றேன். இங்க இல்லைனா உங்க ஊர் பக்கம் இருக்க வாய்ப்பிருக்கு. அங்கதான் அவங்க பூர்வீகம், இப்போ கொஞ்ச வருஷமாதான் கொங்குல இருக்காங்க.”
“அவ காணும்னு சொல்றேன். நீ நிதானமா பேசிட்டு இருக்க. முக்கிய சாட்சினு வேற சொல்ற. அவ உயிருக்கு எதுவும்?” கேட்கும் போதே அறிவழகனின் நெஞ்சம் பதறியது.
“உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனா…” யோசனையுடன் அவன் இழுக்க, இங்கு அறிவழகனின் நெஞ்சம் வெளியே விழுந்துவிடுமளவுக்கு எகிறியது.
வேந்தனின் இழுவையில் அறிவழகனின் பதட்டம் அதிகமாக, குரல் உயர்ந்தது, “சொல்லித்தொலைடா தடிமாடு.”
வேந்தன் அடுத்து சொல்லியதில் அவள் பாதுகாப்பு குறித்த ஐயம் மீண்டும் வந்தமர்ந்துகொண்டது.
error: Content is protected !!