Skip to content
Post Views: 738
“டேய் மச்சான் அங்க பாருடா கலர் கலரா இருக்கு வாடா போலாம்” என்று தனது பக்கத்தில் நின்ற பாலாவை பிடித்து இழுத்தான் சுரேஷ்.
“ஆமாண்டா சூப்பரா இருக்கு லைட்டிங் எல்லாம். அங்க பாருடா அந்த டவர் எவ்வளவு அழகா இருக்கு” என்ற பாலாவை திரும்பி கேவலமாக பார்த்த சுரேஷ்
“அப்பப்ப 90ஸ் கிட்ஸ்னு நிரூபிக்காத டா”என்றான்.
“ஏண்டா நீ இந்த லைட்டிங் பத்தி தான சொன்ன” என்றான் புரியாமல் பாலா.
Advertisement
“நான் சின்ன புள்ள பாரு இந்த லைட்டிங் சீரியல் பல்ப் எல்லாத்தையும் பார்த்து வியக்க. அங்க பாருடா கலர் கலரா தாவணியில மல்லிப் பூவோட எவ்வளவு அழகா தெரியுறாங்க பாரு. அத பாக்காம போயும் போயும் இந்த சீரியல் பல்ப பாத்துட்டு இருக்க உன்ன நான் என்ன பண்ண” என்று பல்லை கடித்தான்.
“ஓ நீ அத சொன்னியா. பட் நான் ஆஞ்சநேயர் பக்தன் டா அதனால பொண்ணுங்கள பார்க்க மாட்டேன்” என்றான் அடக்கமாக பாலா.
“யாரு நீ ஆஞ்சநேயர் பக்தனா அங்க பாருடா உன் தேனு போகுது” என்றான் பாலாவின் ஆளைப் பார்த்து
Advertisement
“எங்கடா போறா” என்று கூட்டத்தில் அவளை தேடியவனை பார்த்து, “ நீ ஆஞ்சநேயர் பக்தன் த்தூ…” என்றும் அவன் முகத்துக்கு நேராக துப்பினான் சுரேஷ்.
Advertisement
அவன் துப்பியதை துடைப்பது போல செய்தவன், “எங்க போறடா என் தேனு அத சொல்லுடா அதை விட்டுட்டு தேவையில்லாத பேசாத”
“டேய் யாருடா அந்த தேனு” என்றான் அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்ற கார்த்திக்.
“டேய் மாப்ள உனக்கு தெரியாதா. அதாண்டா இவன் பாக்குற அந்த ரைஸ் மில்லில் கருப்பா கொடூரமா ஒருத்தி வேலைக்கு வருவாளே அவதான் தேன்… தேன்…மொழி..”
Advertisement
“டேய் அந்த வாயாடியா சொல்ற” என்றான் சந்தேகமாக கார்த்திக்.
“அவளை தாண்டா மச்சான்”
“டேய் கண்ணு தெரியாதவனே அவள விட அவ பக்கத்துல இன்னொருத்தி இருப்பாடா ஒரு குள்ளச்சி அவ கூட நல்லா இருப்பா” என்றான் கார்த்திக்.
“ சரியா சொன்னடா மாப்ள” என்று இருவரும் ஹைபை அடித்துக் கொண்டு சிரிக்க
“டேய் என்னடா ஓவரா கலாய்க்கிறீங்க. அவ ஒன்னும் கருப்பு கிடையாது மாநிறம் ஓகேயா. என் கண்ணுக்கு அவ நல்லா இருக்கா உங்களுக்கு எப்படி இருந்தா எனக்கு என்னடா போங்கடா. நானே என் தேனை கண்டுபிடிச்சிக்கிறேன்” என்று கூட்டத்தில் தனியாக செல்ல போனவனின் கையை பிடித்த சரண்
“டேய் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அங்க அம்மா உங்களை தேடுறாங்க வாங்கடா கோயிலுக்கு போவோம்” என்று அவர்களை இழுத்துக் கொண்டு கோவில் உள்ளே சென்றான்.
அங்கே, “என்னங்க இந்த பையன் என்னதான் பண்றான் இன்னும் வராம. இதுல அம்மனுக்கு சாத்த வேண்டிய மாங்கல்யம் வேற அவன் கையில தான் இருக்கு. இந்த பையனோட எப்பவுமே எனக்கு டென்ஷன் தான். இவன் என்னைக்கு அந்த போலீஸ் யூனிபார்ம் போட்டனோ அப்ப இருந்து நான் சொல்ற பேச்சை கேட்கிறதே இல்லை” என்று தனது மூத்த மகன் இன்னும் வராத டென்ஷனில் அவனை திட்டிக்கொண்டு இருந்தார் புஷ்பா.
அப்போது அங்கே வந்த நால்வரையும் பார்த்து கோபமாக, “நீங்க எங்கடா போய் தொலைஞ்சீங்க அவன் தான் வராம என்ன டென்ஷன் பண்றானா நீங்களும் வந்து என்ன டென்ஷன் பண்றீங்களா” என்றார்.
“பிளவர் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற இப்ப என்ன உன் பையன் எங்க இருக்கான்னு உனக்கு தெரியனும் அவ்வளவுதான இரு அவனுக்கு நான் போன் பண்றேன்” என்று தனது செல்லை எடுத்து திருவுக்கு போன் செய்தான் சரண்.
அவனது செல்லுக்கு அழைப்பு செல்லாமல் சுவிட்ச் ஆஃப் என்று வர, “என்னடா உன் அண்ணன் போன் சுவிட்ச் ஆப்னு வருதா” என்றார் நக்கலாக விநாயகம்.
ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட, “இவ்வளவு நேரம் நாங்க போன் பண்ணாம இருந்திருப்போம் நீ நினைக்கிறியா” என்றார் கிண்டலாக
“அதான் முன்னாடியே நீங்க பல்பு வாங்கிட்டிங்க தான அப்ப நான் பண்ணும் போது சொல்லி இருக்கலாம்ல” என்றான் கெத்தாக.
“அது எப்படி முடியும் நான் பட்ட மாதிரி நீயும் பட வேண்டாமா” என்றார் சிரிப்புடன் விநாயகம்.
அவர் சொன்னதை கேட்டு அவன் பின்னே நின்ற மூவரும் சிரிக்க
அவர்களைப் பார்த்து முறைத்த புஷ்பா, “ஏங்க உங்களுக்கு காமெடி பண்ண நேரம் காலமே இல்லையா நானே கடுப்புல இருக்கேன்” என்று கணவனை மிரட்டியவர், “உங்களுக்கு என்னடா” என்று நால்வரையும் பார்த்து முறைத்தார். அதில் சிரிப்பதை நிறுத்திய மூவரும் சற்று தள்ளி நிற்க அவர்களை முறைத்து பார்த்துக்கொண்டு சரணும் அவர்களோடு நின்றான்.
அப்போது அங்கே வந்த வேதாச்சலம், “மை சன் என்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்த எப்ப என்னோட பேத்தியை நீ கண்ணுல காட்ட போற” என்றார் விநாயகத்தை பார்த்து
“ஐயோ அப்பா நீங்க பாக்கலையா இருங்க இப்ப காட்டுறேன்” என்று சுற்றியும் தேடியவர்
தங்களுக்கு எதிரே உள்ள தூண் பக்கத்தில் நின்ற இந்திராவை காட்டி, “அப்பா அது யாருன்னு தெரியுதா” என்றார்.
“யாருடா அது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா யாருன்னு விளங்கலையே” என்றார் வேதாச்சலம்.
“அதான் பா உங்க பெரியப்பா பையன் ராஜேந்திரன் சித்தப்பா இருக்காருலா”
“ஆமா ராஜேந்திரன் அவன் இருக்கான் அவன் பொண்ணு வசுந்தராவா ஆனா அவ இப்படி இருக்க மாட்டாளே அதோட அவளுக்கு ஒரு பையன் மட்டும் தான”
“இல்லப்பா இது இரண்டாவது பொண்ணு இந்திரா”
“ஓ ஆமா ஞாபகம் இருக்கு அவ கூட படிக்கிற பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொன்னாங்களே அந்த பொண்ணா”
“ஆமாப்பா அவதான்”
“சரி அவளுக்கு என்ன”
“அவளுக்கு பின்னாடி ப்ளூ கலர் சேலை கட்டிட்டு ஒரு பொண்ணு இருக்குது பாருங்க அந்த பொண்ணு தான்”
“டேய் பொண்ணு நல்லா அம்சமா தான் இருக்குது. அந்த பொண்ணு இந்திராவோட பொண்ணா டா”
“ஆமாப்பா அவளோட புருஷன் இறந்து ஒரு வருஷம் ஆகுது. இப்ப இங்க தான் இருக்காங்க. இந்த பொண்ண நான் அவ காலேஜ் போகும் போது ஒருநாள் பார்த்தேன். பார்த்ததும் தோணுச்சி பா திருவுக்கு இந்த பொண்ணு கரெக்டா இருப்பானு. நீங்க என்ன சொல்றீங்க” என்றார் எதிர்பார்ப்புடன் விநாயகம்
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல டா. திருவுக்கும் அந்த பொண்ணுக்கும் பிடிச்சிருந்தா எல்லாரும் பேசி கல்யாணத்தை முடிக்கலாம்” என்று தனது சம்மதத்தை சொன்னார் வேதாச்சலம்.
“ஆனா அப்பா இப்ப கொஞ்சம் கஷ்டத்துல இருக்கா இந்திரா அதனால பொண்ண கட்டித்தர யோசிப்பா. அதோட ராஜேந்திரன் சித்தப்பாவும் கொஞ்சம் கலாட்டா பண்ணுவாங்க நினைக்கிறேன்” என்றார் யோசனையுடன் விநாயகம்.
“டேய் பணம் எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா நானே முன்ன நின்னு நடத்தி குடுக்குறேன்டா. நான் முன்னே நிக்கிறேன் தெரிஞ்சாலே அவன் எதுவும் பண்ண மாட்டான். இப்போ வா அவக்கிட்ட பேசுவோம்” என்றவர் ஏதோ யோசனை உடன் தனது மருமகளை பார்த்து, “பையனோட அம்மா உன்ன கேக்கலைன்னு தப்பா நினைக்காதமா. உன்னோட பையனுக்கு அந்த பொண்ணு சரியா வருவாளா இல்ல வேற யாரையும் பார்க்கணுமா” என்றார்.
சிரிப்புடன் தனது தந்தையை பார்த்த விநாயகம், “அப்பா இந்த பொண்ண எனக்கு காட்டி தந்ததே உங்க மருமக தான்” என்றார் தனது மனைவியை பார்த்து விட்டு தந்தையிடம்
“ஆமாம் மாமா இந்த பொண்ண பார்த்த உடனே நம்ம திருவுக்கு கரெக்டா இருப்பான்னு எனக்கு தோணுச்சு அதனாலதான் உங்க பையன் கிட்ட சொன்னேன். எனக்கு முழு சம்மதம் மாமா நீங்க போய் பேசுங்க அவங்க கிட்ட” என்றார் புஷ்பா மாமனாரிடம்
“சரிமா” என்று சிரிப்புடன் தலையை ஆடியவர் தனது மகன் மற்றும் மருமகளை அழைத்துக் கொண்டு இந்திராவின் குடும்பத்தை நோக்கி சென்றார்.
@@@@@@@@@@@@@@
“அம்மா அம்மா ப்ளீஸ்மா அந்த ராட்டினம் ஆட என்ன கூட்டிட்டு போம்மா” என்று திருவிழாவிற்கு வந்த ராட்டினத்தை பார்த்து தனது தாயிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.
“திவி நீ என்ன சின்ன பொண்ணா ராட்டினம் ஆடனும்னு சொல்ற. அதுவும் சேலை கட்டிட்டு கை கால வெச்சிட்டு சும்மா நில்லு. கொஞ்சமாவது சேலை கட்டி இருக்க நினைப்பு இருக்கா உனக்கு” என்று அவளை திட்டிக் கொண்டு இருந்தார் இந்திரா.
“என்னமா நீ அந்த தடிமாட மட்டும் எல்லாம் பண்ண விடுற. அவன பாரு வந்த உடனே உன் பிரண்ட்ஸ் கூட சுத்த போய்ட்டான். என்ன மட்டும் எப்ப பாரு திட்டிட்டு இருக்க. போமா உனக்கு உன் பையன் தான் ஒசுத்தி” என கோபித்துக் கொண்டவளை பார்த்து இந்திரா முறைக்க
“அப்படி பார்த்தா நான் சொன்னது உண்மை இல்லைன்னு ஆயிடுமா நீ இப்படித்தான் ஓரவஞ்சன பண்ணுற” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தார்கள் சுதா மற்றும் அவளின் மகள் கீதா.
“என்ன இந்திரா ஏன் திவ்யா இப்படி முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்கா”என்றாள் சுதா.
“அத ஏன்க்கா கேட்கிற அவ சின்ன பிள்ளை மாதிரி அந்த ராட்டினத்துல ஆடணுமா” என்றாள் தனது மகளை முறைத்துக் கொண்டு
“அதுக்கு ஏன் திட்டுற திருவிழா வந்தா வயசு பிள்ளைங்க அப்படி தான் இருப்பாங்க. இந்தா இவளும் அதுக்கு தான் கேட்டுட்டு இருக்கா. அதான் ரெண்டு பேரையும் சேர்த்து ஆட வைப்போம் வா”என்றாள் சுதா.
“அப்படி சொல்லுங்க அத்தை. அம்மா வாமா ப்ளீஸ்” என்று அவரின் கையை பிடித்து இழுத்தாள் திவ்யபாரதி.
“ஏய் விடுடி. சுதாக்கா பேசாம நீங்களே இவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போங்க நான் வரல க்கா” என்றவரின் முகம் வாடி இருப்பதை கவனித்த சுதா
“அவங்க என்ன சின்ன பாப்பாவா அவங்களே போவாங்க. ஏய் இதுல காசு இருக்குடி நீங்க ரெண்டு பேருமே போயி ஆடுங்க” என்று இருவரின் கையில் காசு கொடுத்து அனுப்பி வைத்தவர், “நீ வா இப்படி வந்து உட்காரு. என்ன ஆச்சு ஏன் உன் முகம் இவ்வளவு சோர்வா இருக்கு”என்றாள் சுதா.
“அது ஒன்னும் இல்லக்கா இந்த கோவிலுக்கு நான் கல்யாணம் முடிஞ்ச பிறகு முதல் தடவை வரேன். ஆனா பாருங்க என்னோட நிலைமையை அவர் இல்லாமல் கழுத்துல கையில காதுல ஒன்னு இல்லாம என் ஒரு சின்ன துண்டு பூ கூட தலையில இல்லாமல் வெள்ளை புடவை கட்டிக்கிட்டு வந்திருக்கேன். இந்த சாமி என்னை இப்படி ஒரு கோலத்துல பாக்கத்தான் இவ்வளவு நாள் காத்துட்டு இருந்துச்சா என்ன” என்றார் கலங்கிய கண்ணுடன் துக்கத்தை விலுங்கிக் கொண்டு இந்திரா.
“இப்படி எல்லாம் பேசாதே இந்திரா. நீ இப்ப கூட இந்த சாமியை பார்க்க வந்ததற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் பாரு. இந்த சாமிய பாத்துட்ட இல்ல இனிமே உனக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும் நீ ஒன்னும் கவலைப்படாத. உன்னோட புருஷன் உன் கூட எப்பவும் துணையாக இருப்பாரு. கோவிலுக்கு வந்துட்டு இப்படி கண் கலங்கி இருக்கக் கூடாது இந்திரா. முதல்ல கண்ண தொட. இந்த அம்மனை பார்த்துட இல்ல கண்டிப்பா ஒரு நல்ல செய்தி உன் வீடு தேடி வரும் பாரு” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போது அவர்களின் அருகே வந்தனர் வேதாச்சலம் குடும்பத்தினர்.
error: Content is protected !!