Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 14.1

மண்வாசம் 14 :

 

செல்லாண்டியம்மன் கோவில் மண்டபம்!

 



Advertisement

சிறு அளவிலான கூட்டத்தினரை மட்டும் தாங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் அரும்பிற்கும் தேவராஜனிற்கும் நடைபெறவுள்ள இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்திற்கு வருகை புரிந்தவர்கள் ஆவர்.

 

ஒரு புறம் ஐயர் கணபதியை வணங்கி பூஜையை துவங்கியிருக்க, மறுபுறம் வந்தவர்களுக்கு எல்லாம் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வெளியே முத்துச்சாமியின் சரோஜினியும் முன்னின்று வருவோரை வரவேற்றிருக்க, உள்ளே சொந்தபந்தங்களின் கேள்விகளுக்கு மரகதம் இரையாகிக் கொண்டிருந்தார்.

Advertisement

 

Advertisement

“என்ன மரகதம்! முத்து அண்ணனும் சரோஜினியும் தான் வந்து விசேசத்துக்கு அழச்சாங்க. நீயும் அவங்க கூட வந்திருக்கலாமில்ல” என்று நங்கையாள்  ஒருவர் கேட்க,

 

“வீட்ல பெரியவங்க இருக்காங்கில்லைங் நங்கை. அவங்களை தனியா விட்டுப்போட்டு நான் வர முடியாதல்லங். அதான் அவங்க மட்டும் வந்தாங்க. தப்பா எடுத்துக்காதீங்” என்றார் மரகதம்.

Advertisement

 

“நீயுங் கூட ஒரு வார்த்தை சொல்லல மரகதம். முத்துச்சாமியும் நேத்து தான் வந்து எங்கூட்டுல சொல்லிப்போட்டு போனான். திருவிழா முடியட்டும்னு இருந்தீங்களா இல்ல திடீர் ஏற்பாடா? இல்ல கடைசியா சொல்லிக்கலாம்னு என்னைய விட்டுட்டீங்களா” என்று சின்ன மாமியார் ஒருவர் கேட்க,

 

“அப்படி எல்லாம் இல்லீங் அத்தை. திடீர் ஏற்பாடு தானுங் இல்லைனா நான் உங்ககிட்ட முன்னாலையே சொல்லி இருப்பனுங்களே” என்றார் அவருக்கு.

 

குடும்பத்தாரை விட்டுக் கொடுக்காது பதில் சொல்வது அவ்வளவு எளிதாய் இல்லை. அதுவும் மனம் நொந்துபோய் இருக்கும் இந்நேரத்தில். அவரை மேலும் நோகடிப்பதுபோல் தான் கூடத்தில் அவர் காதுபட கேள்விகள் எழுந்தது.

 

“அளவா முக்கியமான ஆளுகளை மட்டும் தான் கூப்ட்ருக்கீங்க கலியாணத்தை தடபுடலா பண்ணிக்கலாம்னு விட்டுட்டீங்களா அண்ணி?” என்று கேட்டாள் கொழுந்தியாள் முறை ஒருத்தி.

 

“என்னதேன் அத்தை மவன் மாமன் மவளா இருந்தாலும் ஊரு முன்னாடி வெச்சு உறுதி பேசிடறது நல்லதுதேன். ஆமா உன்ர தம்பி குலசேகரனை எங்க காணோம்? தாய்மாமன் அவந்தானே வந்து முன்ன நிக்கோணும்” என்று கேட்டார் சின்ன மாமனார்.

 

[the_ad id=”6605″]

 

 

“மொற மாமான் வந்து பிரச்சனை பண்ணுவானோனு அவனுக்கு தகவல் கொடுக்காம விட்டுட்டீங்களா மரகதம்? என்ன இருந்தாலும் தாய் மாமன் அவனுக்குத்தேன் உரிமை அதிகம்” என மச்சான்டார் சொல்ல,

 

“அட அவனெப்படிங் வருவான்? அவனுக்கு சொல்லிக்கறாப்ல சொத்து பத்து இல்லைன்னுதேன் முத்து அண்ணன் அவரு தங்கச்சி மவனுக்கே பொண்ண கொடுக்குறாரோட்ருக்குது” என்று முடித்துவைத்தார் கொழுந்தனார்.

 

பேச்சுக்கா பஞ்சம்? அதுவும் இதுபோன்ற விசேஷங்கள் நடைபெறும் இடங்களில் நான்கு பேர் நான்கு விதமாய் மட்டுமா பேசுகிறார்கள். நானூறு விதமாய் அல்லவா பேசுகின்றனர்.

 

எங்கெங்கோ சுற்றி பேச்சு குலசேகரனில் வந்து நிறைவடைய, மரகதத்திற்கு அனைவர் முன்னிலையிலும் பெரிதாய் கத்த வேண்டும் போல் இருந்தது. சொந்தபந்தங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையிலா அவரை வைத்திருக்கிறார் முத்துச்சாமி. எங்கு பேச வாய்திறந்தாலே குரல் உடைந்து தானும் உடைந்து போய்விடுவோமோ என்று தவித்திருக்க,

 

“மரகதம்..” என்று கேட்ட குரலில் நிமிர்ந்து பார்த்தார்.

 

சரோஜினியின் கணவர் ரத்தினசாமி தான் நின்றிருந்தார். அவருக்கும் பெரிதாய் இந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை, தன் மகன் பற்றி அறிந்ததினால். தன் மகனே ஆனாலும் அரும்பிற்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவன் என்று எடுத்துரைக்க, மனைவியே அங்கு மந்திரி ஆதலால் அவர் சொல் சபையேரவில்லை.

 

“அவடத்திக்கு அரும்பு தனியா இருக்கா பாரு. நீ அவ கூட போய் நில்லுமா. இவங்களை நான் கவனிச்சுக்குறேன்” என்று மரகதத்தை அவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட, ரத்தினசாமிக்கு தலையசைத்து அனைவரையும் கடந்து தன் மகளருகே வந்து நின்றுகொண்டார்.

 

அரும்பு தன் தாயைக் கூட உணரவில்லை அந்த தருணத்தில். அமைதியான, அனுமதியில்லாத அழுகை மட்டுமே அவளிடம். அழுகை மட்டுமா அவள் அனுமதி கேட்கவில்லை? அங்கு யாருமே எதுவுமே அவள் அனுமதி கேட்கவில்லையே.

 

“உன்ர மாமன் பக்கத்துல வந்து ஜோடியா இப்படி நில்லு கண்ணு” என்று சரோஜினியோ அரும்பின் கைப்பிடித்து அழைத்து வந்து தேவராஜனின் அருகில் நிற்கவைக்க, உணர்வு பெற்றவளுக்கு உடலும் உள்ளமும் சேர்ந்து எரிச்சலைக் கொட்டியது.

 

பச்சைப் பட்டாடையில் பைங்கிளியாய் இருந்தவள் மீதே தேவராஜனின் பார்வை படிந்திருக்க, பெற்றவரான மரகதத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது. என்னதான் உடன் பிறந்தவளின் மகனானாலும் ஒரு ஒழுக்கமற்றவனுக்கு தன் மகளை எப்படி கொடுக்கத் துணிந்தார் இந்த மனிதர் என முத்துச்சாமியை வேதனையோடு பார்த்திருந்தார். 

 

“பாத்தியாடி உன்ர நங்கையாக்காரிய? மூஞ்சிய மூஞ்சூரோட்டம் தூக்கி வெச்சுக்கிட்டு இருக்குறா. அப்பத்தேன் நாலு பேரு என்னன்னு விசாரிப்பாங்க, விசயத்தை சொல்லி அழுது ஆர்பாட்டம் பண்ணலாம்னு காத்துக்கிட்டு நிக்குறா” என்று வேலாத்தா தன் மகளிடம் சொல்ல,

 

“விடுங்ம்மா. ஆரு எப்படி போனா நமக்கென்னங்? நமக்கு நம்ம காரியம் நடந்தா சரி” என்ற சரோஜினி தன் அன்னையை ஆழமாய் பார்த்தபடி புன்னகைக்க, இருவரும் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயலை எண்ணிப் பார்த்தனர்.

 

அரும்பு தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று தைரியமாக முத்துச்சாமியிடம் தெரிவிக்க, அவர் பதிலின்றி அமைதியாய் வீற்றிருந்தார். அடுத்து அவள் கூறிய விஷயம் தான் அவரை கொந்தளிக்க வைத்தது.

 

“எனக்கு குலசேகரன் மாமாவை தான் பிடிச்சிருக்கு” என்றிருந்தாள்.

 

மரகதத்திற்கே சற்று அதிர்ச்சியாய் இருக்க, மீதியை சரோஜினி கையில் எடுத்துக் கொண்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

“நான் நெனச்சதோட்டந்தேன் நடந்திருக்கு. அந்த வெறும் பய சேகரன் நம்ம சொத்துக்கு ஆசைப்பட்டு அரும்பு மனசையும் கெடுத்துட்டான் பாருங் அண்ணா. என்னங் அண்ணி இதுக்கு நீங்களும் கூட்டா?”

 

“என்ர தம்பிக்கோ எனக்கோ அந்த நெனப்பு துளியும் இருந்ததில்ல” என மரகதம் இடைபுக,

 

“அப்போ என்னங் இதெல்லாம்? ஆரு தகுதிக்கு ஆருவீட்டு பொண்ணு கேக்குது. எங்கண்ணன் மவ என்ர ஊட்டுல மகாராணியோட்டம் வாழவேண்டியவ. அதைய விட்டுப்போட்டு உங்க ஓலக்குடிசையில தள்ளப் பாக்குறீங்களா? எங்கண்ணன் கவுரவம் என்னாகுறது”

 

“இங்க பாருங் அத்தை, நான் என்ர அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன் நீங்க தலையிடாதீங்க” என்றாள் அரும்பு. அதுவரை நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த வேலாத்தாள்,

 

“இது நல்ல கதையா இருக்கு முத்துச்சாமி. உன்ர மவ நம்ம மான மருவாதைய சந்தி சிரிக்க வைக்காம விடமாட்டா போலோட்ருக்குது. அத்தனை பேரு சொல்லியும் அன்னிக்கு அந்த சேகரன் பேச்சை கேட்டுகிட்டு நம்ம வீட்டுப் படிதாண்டி போனவ தானோ. இன்னிக்கு அவனையே புடிச்சிருக்குன்னு வந்து நிக்குறா. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ” என்றவுடன் கொதிப்படைந்த அரும்பு,

 

“பரிச்சை எழுதத்தான போனேங் அப்பத்தா. நான் என்ன ஓடியா போய்ட்டேன்” என்றாள்.

 

“அரும்பு…” என கையை ஓங்கிய முத்துச்சாமி பின் தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு கையை கீழே இறக்க, ஓர் நொடி அதிர்ந்துவிட்டாள் அரும்பு.

 

“அவ என்ன இப்போ தப்பா சொல்லிப்போட்டா? அவ மாமன் கூடத்தேனோ பரிச்சைக்கு போனா. வேற ஆருகோடயோ போனதோட்டம் பேசுனா என்ன அர்த்தம். பொறந்ததுல இருந்து நான் பாத்து வளத்தவன் என்ர தம்பி. அவனை நம்பி என்ர மகள எங்க வேணும்னாலும் அனுப்புவேன்”

 

“போதும் நிறுத்து மரகதம்” என்ற முத்துச்சாமியின் குரலில் தன் பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தார் மரகதம்.

 

“அரும்புக்கு தேவராஜனோடதேன் கண்ணாலம் நடக்கும். இது தான் என்ர முடிவு. ரெண்டு பேரும் இனி கண்ணாலம் முடியுற வரைக்கும் இருக்குற எடம் தெரியாம இருக்கோணும்” என்றார் அரும்பை பார்த்தவாறு. அவள் பரிதவித்துப் போய் பதில் பேசவர,

 

“என்ர முடிவ மீறோனும்னு நெனச்சா தொலச்சுப் போடுவேன் தொலச்சு” என துண்டை உதறி தோளில் போட்டபடி நகர, அவர் மகளிற்கும் மனையாளிற்கும் சொந்த வீடே நரகமானது.  

 

முத்துச்சாமியை பின் தொடர்ந்த சரோஜினி,

 

“இப்போ நம்ம ராஜன் மேல அரும்புக்கு பெருசா விருப்பம் இல்ல தானுங் ண்ணா. அவனும் இப்போ பொறுப்பில்லாம தானங் சுத்திக்கிட்டு கெடக்குறான். நாளப்பின்ன கலியாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும்ங். நீங்க அரும்ப நெனச்சு ஒன்னும் கவலைப்படாதீங். அவளே நாளைக்கு நீங்க எடுத்த முடிவுதேன் சரின்னு புரிஞ்சுக்குவா. நான் எதுக்கு இருக்குறேனுங் ண்ணா? நம்ம பிள்ளைகள நான் நல்லா பாத்துக்குறேனுங்” என்று அவர் முடிவை வலுவாக்க முற்பட்டு அதில் வெற்றியும் கண்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவ்வெற்றியின் ஒரு பகுதியே இந்த நிச்சயதார்த்த ஏற்பாடு.

 

கூட்டுயர்வே நாட்டுயர்வு!

 

கூட்டுறவு சங்கத்தில் இருந்த பதாகையை பார்த்தபடி நின்றிருந்தான் குலசேகரன். அவன் அருகில் செலுத்துச் சீட்டை நிரப்பிக் கொண்டிருந்தான் விக்ரமன்.

 

கால்நடைகள் வாங்கக் கடன், பயிர்களுக்குத் தேவையான உரம் வாங்கக் கடன், பயிர்கள் விளைவிக்கக் கடன் போன்றவற்றை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தன் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் நகைகளை வைத்து கடன் பெற்று தான் விவசாயம் மேற்கொள்கின்றனர் பலர். அதில் வரும் லாபத்தை வைத்து கடனை அடைத்து நிலங்களை திரும்ப மீட்டுக் கொள்கின்றனர்.

 

அப்படித்தான் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி கடன் பெற்று கால்நடைகளைப் பெருக்கினான் விக்ரமன். பயிர்களை விளைவித்து அதிக மகசூல் காண்கிறான் குலசேகரன். இருவரும் சேமிப்பு கணக்குத் துவங்கி விவசாயத்தில் ஈட்டும் வருவாயை அதில் சேமித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இப்போது சேமிப்புக் கணக்கில் தொகையை செலுத்துவதற்காகக் காத்திருக்க,

 

“ஒழவு ஓட்டியாச்சுனா இனி பருத்தி சாகுபடி பண்ணிட வேண்டியது தானே மச்சா. வைகாசில மகசூல் பாக்க சரியா இருக்கும்” என விக்ரமன் சொல்ல,

 

“ஆளுக வர்றாங்க மாப்ள. வேலைய ஆரம்பிச்சாச்சு” என்றான் குலசேகரன்.

 

இருவரும் பேசிக்கொண்டிருக்க, இடையூறாக குலசேகரனின் கைபேசி இசைத்தது. அழைப்பை ஏற்று காதிற்குக் கொடுக்க,

 

“மச்சா எங்க இருக்க?” என்று மறுமுனையில் வந்த மாரிமுத்துவின் குரல் விக்ரமனின் செவிகளைக் கூட சென்றடைந்தது.

 

“மொல்ல பேசு மாப்ள. சொசைட்டில தான் இருக்கேன்” என குலசேகரன் சொல்ல,

 

“மொல்ல பேசுற விசயமா இது. உன்ர அக்கா மகளுக்கு அந்த தேவராஜ பயலோட உன்ர மாமன் நிச்சயம் பண்ணப்போறாரு” என்றதும் குலசேகரனின் முகமே மாறியது.

 

தேவராஜன் அரும்பை உரசியபடி நெருங்கி நிற்க அவளோ விலகி நின்றாள்.

 

“என்னடி வெலகி வெலகி போற? கலியாணம் மட்டும் முடியட்டும் அப்பறம் எங்க போறைன்னு நானும் பாக்குறேன்” என்று சொல்லவும் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியும் போய் அழுகை தான் ஆர்ப்பரித்து வந்தது அரும்பிற்கு. அவள் கட்டுப் படுத்திக்கொண்டு நின்றிருக்க,

 

“பொட்டு வெய்க்குறவங்க வந்து வெய்ங்க” என்று வேலாத்தா சொல்ல, ஒவ்வொருவராய் இருவருக்கும் பொட்டு வைத்து ஆசி வழங்கிச் சென்றவண்ணம் இருந்தனர்.

 

சிறிது நேரத்தில்..

 

“முகூர்த்த பத்திரிக்கையை வாசிச்சுடலாம். தட்டு மாத்திக்க எழுந்துக்கோங்கோ” என்று ஐயர் சொல்லவும் தாம்பூலத் தட்டை கையில் எடுத்துக்கொண்ட முத்துச்சாமி மரகதத்தையும் பிடிக்கும்படி கூற, அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நின்றிருந்தார்.

 

சரோஜினி தன் அண்ணனிடம் அமைதியாக இருக்கும்படி கண்களால் ஜாடை காண்பித்துவிட்டு தாம்பூலத் தட்டை கையில் எடுத்துக் கொண்டு தன் கணவர் ரத்தினசாமியுடன் வந்து நின்றுகொண்டார்.

 

“தெய்வத்திரு இராமசாமி வேலாத்தாள் ஆகியோரது பேத்தியும் முத்துச்சாமி மரகதவள்ளி ஆகியோரின் திருநிறைச் செல்வி அரும்பு வை..” என, முகூர்த்த பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பிக்க அரும்பின் கண்களில் இப்போதா அப்போதா என விழக் காத்திருந்தது விழிநீர்.

 

பார்வை மட்டும் நேரே வாயிலைப் பார்த்திருக்க, குளம் கட்டிய விழிகளில் அவள் மனம் கவர்ந்தவன் பிம்பம் வந்து மங்கலாய் விழ, விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை அழுந்த மூடித் திறந்தாள்.

 

மாயை என்றால் அவன் மறைந்திருக்க வேண்டும். ஆனால் மறையவில்லை!

 

[the_ad id=”6605″]

 

 

வெள்ளை சட்டையில் திண்ணிய தோள்கள் புடைக்க வெள்ளை வேட்டியின் ஒருபுறக் கரையை கையில் பிடித்துக் கொண்டு மறுகையால் மீசையை நீவியபடி அவளைத் தான் கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான் குலசேகர பாண்டியன்.

 

அதுவரை துவண்டு போயிருந்த அரும்பின் மனம் மெல்ல அரும்ப ஆரம்பித்தது.

 

குலசேகரன் அரும்பை பார்த்தபடி நேரே உள்ளே வந்துகொண்டிருக்க,

 

“தெய்வத்திரு இராமசாமி வேலாத்தாள் ஆகியோரது பேத்தியும் முத்துச்சாமி மரகதவள்ளி ஆகியோரின் திருநிறைச் செல்வி அரும்பு வை,தெய்வத்திருவாளர்கள் மயில்சாமி வீரத்தாள் ஆகியோரது பேரனும் ரத்தினசாமி சரோஜினி ஆகியோரது திருநிறைச் செல்வன் தேவராஜனுக்கு மணம் முடித்துவைக்க பெரியோர்களால் இந்நன்னாளில் நிச்சயிக்கப்படுகிறது” என்று வாசித்து முடிக்க, முத்துச்சாமியிடம் இருந்து தட்டை சரோஜினி பெற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்ததை முத்துச்சாமிக்கு அளித்தனர்.

 

அனைத்தும் நொடிகளில் நடந்து முடிந்திருந்தது.

 

சரோஜினி தன் கையிலிருந்த தட்டை கீழே வைத்துவிட்டு நிமிர, குலசேகரன் வருவதைக் கண்டு ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தாலும் மறுநொடி அவனை அலட்சியமாய் பார்க்க, அவனோ எந்தவொரு பாவனையையும் காண்பித்துக் கொள்ளாது முதல் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான்.

 

அரும்பு உடனே அங்கிருந்து கீழே செல்ல நினைக்க அவள் கையை எட்டிப் பிடித்த சரோஜினி,

 

“அதுக்குள்ள எங்க கண்ணு போற? நிச்சயம் முடிஞ்சாலே பாதி கலியாணம் முடிஞ்சதோட்டந்தேன். நீயும் உன்ர ராஜன் மாமனும் ஒட்டுக்கா அப்பத்தா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க” என்று அழுத்திச் சொல்ல,

 

வேறு வழியில்லாது போக, குலசேகரனை ஒரு பார்வை பார்த்தவள்  உணர்வுகளற்ற பொம்மைபோல் தேவராஜனோடு சென்று வேலாத்தாவின் பாதத்தில் விழுந்தாள்.

 

“என்ர பேரனும் பேத்தியும் நல்லா இருக்கோணும். எந்திரி ராஜா. உன்ர அத்தை மாமன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்று சொல்ல அவன் தலையசைத்து நகர்ந்தான்.

 

அரும்பு அவள் தந்தையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அன்னையை வலியோடு பார்க்க, இருவரது கண்களிலும் நீர் சுரக்க, மேற்கொண்டு பார்க்க திராணியற்று பார்வையை திருப்பிக்கொண்டார் மரகதம். அரும்பு அவர் பாதம் தொட குனிந்த வேளையில் மரகதத்தின் பாதத்தில் அவள் விழிநீரில் ஒற்றை துளி சிந்தியது.

 

மகளின் கண்ணீர் பாதம் நனைத்த மறுநொடி கண்கள் சிவக்க முத்துச்சாமியை ஒரு பார்வை பார்த்தார் மரகதம்.

 

தவறுக்கு மன்னிப்பு உண்டு ஆனால் துரோகத்திற்கு?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!