கண்முன்னால் பெரியகோயில் மிக நேர்த்தியாக மிக அழகாகப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பதைப் பார்த்த அனைவரும் கண்களும் வியப்பில் விரிந்தன.
கடந்த சில நாள்களில் இது போன்ற மந்திர சாலங்களைப் பார்த்துப் பழகியிருந்த தேவி, அருண் போன்றவர்களுக்கே இது பெரும் வியப்பாக இருந்தபோது, இதற்கு முன் இப்படி ஒன்று சாத்தியம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திராத மற்றவர்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?
திக்ரசூதன் கூட அந்தக் காட்சியின் ஈர்ப்பில் சில நொடிகள் அசையாமல் வியந்து நின்றான்.
வராகமிகிரர் தன் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகை மங்காமல் வேதாளப் பட்டனை நோக்கி ஏதோ சமிஞ்சை செய்தார்.
வேதாளப் பட்டன் சட்டெனச் செயல்பட்டான்.
பிரிந்து அந்தரத்தில் நின்ற கோயிலுக்கு அடியில் விக்ரமாதித்யரின் இந்திர சிம்மாசனம் ஒரு சிறிய தங்கக் குன்றைப் போல பொன்னிறமாய்த் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தது.
வராகமிகிரரின் சமிஞ்சையைத் தொடர்ந்து வேதாளப் பட்டன் அதை நோக்கி நகர்வதைக் கவனித்தபோதுதான் மற்றவரின் கவனம் அந்தச் சிம்மாசனத்தின் மீது சென்றது, ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் வேதாளப் பட்டன் அந்தச் சிம்மாசனத்தோடு அங்கிருந்து மறைந்தான்.
நடந்தது என்ன என்று மற்றவர் அறியும் முன் கோயில் தன் பழைய நிலைக்குத் திரும்பி இருந்தது!
சில நொடிகளுக்கு முன் அது ஒவ்வொரு கல்லாகப் பிரிந்து அந்தரத்தில் நின்றது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள், அங்கிருந்து அதை நேரில் தம் கண்களால் பார்த்தவர்களைத் தவிர!
சட்டென அங்கு மீண்டும் புலர்காலைப் பொழுதின் மெல்லிய இருள் சூழ்ந்து கொண்டது.
வராகமிகிரர் தன் புன்னகை மாறாமல் அவர்களை ஒரு பெருமிதப் பார்வையோடு பார்த்தபடி நின்றார்.
”கலெக்டர் சார், இனிமே கோயில் மேல கை வெக்க வேண்டிய அவசியமே இல்ல… உங்க நண்பர் எதுக்காக தன் அரசியல் செல்வாக்கைலாம் பயன்படுத்தி இந்த ரெனவேஷன் வொர்க்க பண்ண நெனச்சாரோ அதுக்கான தேவை இப்ப இல்ல!”
விக்ரம் திக்ரசூதனைக் காட்டியபடி ஏளனத்துடன் சொன்னான்.
[the_ad id=”6605″]
மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாய் இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.
“மிஸ்டர் விக்ரம், என்ன நடக்குது இங்க? உங்க ரெண்டு பேர் தனிப்பட்ட விஷயத்துக்காக ஒரு பொது சொத்தோட விளையாடுறீங்கனு நினைக்குறேன்… இது சரியில்ல!”
ஆட்சியர் சற்றே கோவமாகக் கூறினார்.
“சார், இது தனிப்பட்ட விளையாட்டுலாம் இல்ல, இதுல ஏதோ ஒரு வகைல எல்லோருமே சம்பந்தபட்டிருக்கீங்க… எங்களோட போர் எங்களை மட்டும் பாதிக்கப் போற விஷயமில்ல… இந்த-”
விக்ரம் முடிக்கும் முன்பே திக்ரசூதன் நீட்டிய வாளுடன் அவன் மீது பாய்ந்தான்.
நொடியில் அங்கே இருந்த அதிகாலையின் அமைதி கலைந்தது!
திக்ரசூதன் தாக்குவான் என்பதை எதிர்பார்த்திருந்தவனைப் போல விக்ரம் மன்யாக்னியால் அவனது வாள் வீச்சைத் தடுத்தான்.
சட்டென எல்லாத் திசையிலிருந்தும் சகர் படையினர் சூழத் தொடங்கினர்.
தேவியும், அருணும், சத்தீசும் ஓடிச்சென்று காவலர்களிடமிருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தாக்கத் தயாரானார்கள்.
தேவி கையிலிருந்த வாளைச் சுழற்றியபடியே காவல் கண்காணிப்பாளருக்கு சக வீரர்களைச் சுட்டிக் காட்டினாள், அவரும் புரிந்துகொண்டு முன்பு இவர்களுக்கு உதவியாகப் போரிட்ட காவல் வீரர்களை மீண்டும் இவர்களுக்கு உதவியாகப் போரிடக் கட்டளையிட்டார்.
ஒரு சில காவல் வீரர்களின் பாதுகாப்பு வளையத்திற்குள், அருணின் உதவியோடு ஆட்சியரும் கண்காணிப்பாளரும் கோயிலைவிட்டு வெளியேறினார்கள்.
தேவி, அருண், சத்தீசு, காவல் வீரர்கள் ஆகியோர் சகர் படையோடு மோத, விக்ரமும் திக்ரசூதனும் துவந்த யுத்தம் செய்தார்கள்.
திக்ரசூதன் ஆத்திரத்தோடு முரட்டுத்தனமாகப் போரிட்டான்.
விக்ரம் அதற்கு நேர்மாறாக அமைதியாக நிதானமாகத் தன் மன்யாகினியை வீசினான்.
ஏற்கனவே ஒரு முறை விக்ரமின் ஒளிக்கவசத்தையும் மன்யாக்னியையும் மீறி தான் அவனைக் காயப்படுத்திவிட்ட இறுமாப்பில் திக்ரசூதன் எந்த அச்சமுமின்றிப் போரிட்டான்.
அவனது தாக்குதல் ஒவ்வொன்றும் விக்ரமின் தலையையோ மார்பையோ குறிவைப்பதாகவே இருந்தன.
ஒரே வீச்சில் விக்ரமை வெட்டி வீழ்த்திவிட்டு ஒட்டுமொத்தமாய் இந்தப் போரை முடித்துவிட வேண்டும் என்று எண்ணியவனைப் போல திக்ரசூதன் வேகத்துடன் வாள் வீசினான்.
ஆனால், விக்ரம் எப்போதுமில்லாத ஒரு நிதானத்தோடு போரிட்டான்.
நின்ற இடத்திலிருந்து அதிகம் நகராமல், இடது கையை முதுகில் வைத்தபடி, வலது கையால் மட்டும் வாளை வீசினான்.
தேர்ந்த ஓவியன் தூரிகையை வீசுவதைப் போல மன்யாக்னியை இலாவகத்துடன் வீசினான் விக்ரம்!
அவனது வீச்சுகள் திக்ரசூதனின் வீச்சைத் தடுப்பனவாக மட்டுமே இருந்தன. எதிர்த்துத் தாக்கும் வீச்சு ஒன்றைக் கூட விக்ரம் கையாளவில்லை.
சகர்களோடு போரிட்டுக் கொண்டிருந்த தேவிக்குச் சட்டென விக்ரம் திக்ரசூதனோடு தனியாகப் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பது நினைவிற்கு வந்தது.
முந்தைய சண்டையில் விக்ரம் கையிலிருந்த மன்யாக்னி திக்ரசூதனை ஒன்றும் செய்யாததும், திக்ரசூதன் விக்ரமின் அக்னி கவசத்தை மீறி விக்ரமைக் காயப்படுத்தியதும் அவளுக்குச் சட்டென நினைவிற்கு வந்தன.
தன் சண்டையின் ஊடே அவள் விக்ரமின் பக்கம் ஓரப்பார்வை வீச, ஆக்ரோஷமாய்த் தாக்கும் திக்ரசூதனையும் அவனை அமைதியாக எதிர்கொள்ளும் விக்ரமையும் கண்டாள்.
[the_ad id=”6605″]
திக்ரசூதனைத் தன்னால் தாக்க இயலாது என்பதால்தான் விக்ரம் தற்காப்பு முறையில் மட்டும் போரிடுகிறான் என்று தேவி எண்ணிக்கொண்டாள்.
தான் உடனே அவன் பக்கம் செல்ல வேண்டும் என்று எண்ணியவளாய் தன்னைத் தாக்க வந்த சகர்களை வெட்டி வீழ்த்தியபடி விக்ரமை நெருங்கினாள் தேவி.
விக்ரமின் அமைதியான தற்காப்புப் போரால் திக்ரசூதனின் ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அவனது ஒவ்வொரு வீச்சும் முந்தைய வீச்சைவிட உக்கிரமானதாய் இருந்தது. திக்ரசூதனின் வாளை மன்யாக்னி தடுக்கும் போதெல்லாம் இரு வாள்களுக்கிடையிலும் தீப்பொறி சிதறின!
“விக்ரம்ம்ம்… மன்யாக்னிய என்கிட்ட கொடு… இவனை நான் பார்த்துக்குறேன்…”
தேவி விக்ரமை நெருங்கினாள்.
”இவன நானே பார்த்துக்குறேன், தேவி…”
விக்ரம் திக்ரசூதனின் இன்னொரு வீச்சைச் சமாளித்தபடியே நிதானமாகச் சொன்னான்.
“விக்ரம்… அடம்பிடிக்காத… மன்யாக்னிய என்கிட்ட கொ-”
திக்ரசூதனின் அடுத்த வீச்சு தேவியை நோக்கி வந்தது.
அதைச் சற்றும் எதிர்பார்த்திராத தேவி ஒரு நொடி செய்வதறியாது நின்றாள், ஆனால், விக்ரம் அவளுக்கு முன் வந்து அந்த வீச்சைத் தடுத்தான்.
சட்டென இடம்மாறியதில் விக்ரமின் சமநிலை சற்றே குலைய, திக்ரசூதனின் வாள் மன்யாக்னியைத் தாண்டி விக்ரமின் தோளில் இறங்கியது…
“விக்க்க்ரம்ம்…”
தேவி இப்போது சுதாரித்துக்கொண்டவளாய் தன் வாளால் திக்ரசூதனைத் தாக்கினாள்.
எதிர்பாராத அந்தத் தாக்குதலால் திக்ரசூதன் இரண்டடி பின்னால் நகர், இவர்களுக்கு ஒரு சிறு இடைவெளி கிடைத்தது.
தேவி விக்ரமின் தோளைப் பார்த்தாள், பெரிய வெட்டுக்காயத்தை எதிர்பார்த்தவளுக்கு இன்ப ஏமாற்றம் காத்திருந்தது!
விக்ரம் தன்மேல் ஒரு சிறு கீறல் கூட படாமல் மீண்டும் வாள் வீசத் தயாராய் நின்றான்.
திக்ரசூதன் கூட இதனால் திகைத்தவனாய் ஆத்திரம் பொங்க தன் வாளை விக்ரமின் மார்பிற்கு நேராக நீட்டியபடி கோவத்துடன் ஓடிவந்து தாக்கினான்.
விக்ரம் புன்னகையுடன் கடைசி நொடியில் விலகிக் கொண்டு, தன் வாளின் கைப்பிடியால் தன்னைத் தாண்டிச் செல்லும் திக்ரசூதனின் முதுகில் தாக்கினான்.
தன் தாக்குதல் தவறியதால் ஒரு சில அடிகள் நிலையிழந்து தள்ளாடிய திக்ரசூதன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு, திரும்பி விக்ரமை நோக்கி வாளை வீச, விக்ரம் அவனது வாளைத் தடுத்த வீச்சிலேயே சுழற்றித் தன் தற்காப்பு வீச்சையே ஒரு தாக்குதல் வீச்சாக நீட்டிக்க, திக்ரசூதனின் வாள் அவன் கையைவிட்டுப் பறந்து போய் விழுந்தது.
விக்ரம் புன்னகை மாறாமல் மன்யாக்னியைத் தன் வழக்கமான முத்திரை வீச்சில் சுழற்றத் தொடங்கினான்-
வலது புறமாகவும் இடது புறமாகவும் மன்யாக்னியைத் தன் பக்கவாட்டில் சுழற்றித் தலைக்கு மேல் கொண்டு சென்று முதுகுப்புறத்திலிருந்து அம்பை எடுப்பவனைப் போல வாளை உருவி ஒரே வீச்சாக வீசினான்…
மன்யாக்னியின் பொன்னிற ஒளிப்படலம் நீர்த்திவலையைப் போல ஒரு சக்கரவட்டமாக விக்ரமைச் சுற்றிப் படர்ந்தது…
அங்கிருந்த அனைத்து சகர்களும் அந்த வீச்சில் வெட்டப்பட்டு வீழ்ந்து, காற்றில் கரும்புகையாய்க் கரைந்து மறைந்தனர்… திக்ரசூதனைத் தவிர!
நடந்ததை நம்ப முடியாமல் கண்களில் குழப்பமும் கோவமும் ஆத்திரமும் கலந்தவனாய் அவன் விக்ரமை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
தான் வெட்டுப்படாதது விக்ரம் அல்லது மன்யாக்னியின் ஆற்றல் குறைவினால் அல்ல, விக்ரம் மன்யாக்னியை வீசிய போதே தன்னைக் கொல்லும் நோக்குடன் வீசவில்லை என்பதை உணர்ந்துகொண்ட போது திக்ரசூதனின் குழப்பமும் கோவமும் மேலும் அதிகரித்தன.
தேவியும் அதை உணர்ந்துகொண்டவளாய் விக்ரமை வியப்போடு பார்த்தாள்.
அவர்களுக்குப் பதில் சொல்பவரைப் போல வராகமிகிரர் அருகில் வந்தார்,
“திக்ரசூதா… உன் ஆட்டம் முடிந்தது… பேரரசர் விக்ரமாதித்யரின் பெருங்கருனையால் நீ உயிர் தப்பினாய், விக்ரமரின் சிம்மாசனம் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிட்டது, இன்னும் ஒரே ஒரு செயல்தான் மீதம் இருக்கிறது, அதையும் நிறைவேற்ற இன்றே நாங்கள் நாள் குறித்திருக்கிறோம்… இனி உனக்கு இக்கலியுகத்தில் வேலை இல்லை…”
ஒரு சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது.
அனைவரின் பார்வையும் திக்ரசூதன் மீதே இருந்தன.
அவன் விக்ரமையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்.
விக்ரம் திக்ரசூதனை நோக்கி மெள்ள நகர்ந்தான்.
[the_ad id=”6605″]
மன்யாக்னியை உறையில் போட்டபடி அவனை நெருங்கியவன், ஒரு நண்பனைப் போல அவன் தோளில் கைவைத்தான்,
“வராகமிகிரர் சொன்னதைப் போல ஒரே ஒரு செயல்தான் மீதம்… அதனை நீயே உன் கண்ணால் பார், என் விருந்தாளியாக என்னோடு வா, திக்ரசூதா…”
சொல்லிவிட்டு விக்ரம் வராகமிகிரரை நோக்க, அவர் ‘சரி’ என்று தலையசைத்தபடி தன் கைகளை உயர்த்திச் சுழற்றினார்.
அவர்களைச் சுற்றி இருந்த இடம் அலையலையாய் மறையத் தொடங்கியது…
தொடரும்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.