Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 16.1

மண்வாசம் 16 :

 

தென்றலாய் வருடிக் கொண்டிருந்த காற்று இப்போது தன் வேகத்தைக் கூட்ட அதன் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாது தன் மென் பூக்களை மண் நோக்கி உதிர்த்தது சரக்கொன்றை மரம்.

 



Advertisement

மண்ணில் உதிர்ந்த மலர்களெல்லாம் மாறனின் பாதத்தை தொட்டபடி கடந்து செல்ல அவன் மனமும் கடந்த நாட்களை எண்ணிப் பார்த்தது.

 

காதல் அவனுள்ளே வந்த நேரம் அவன் என்னதாய் உணர்ந்தானோ அதனினும் அதிகமாய் அவன் அகம் நிறைந்து போயிருந்தது தமிழின் காதல் உணர்ந்த நேரம். உணர்ந்த உண்மையில் அதன் உவகையில் அதன் உச்சத்தில் இவனிருக்க, வலிக்க வலிக்க அவனை அங்கிருந்து கீழே தள்ளி வேடிக்கை பார்க்கின்றது காலம் இப்பொழுது.

Advertisement

 

Advertisement

முன்பு அவனது காத்திருப்பிற்கு கனிந்து அவன் தேவியை அவனிடம் கொண்டு வந்து சேர்த்த அதே காலம் தான் இப்போது இருவருக்கிடையிலும் காதலை மையமாய் வைத்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது.

 

ஒருவாரம்!

Advertisement

 

ஒரே வாரம் தான், அவன் உலகத்தை தலை கீழாய் புரட்டிப் போட்டிருந்தது. புதிதாய் ஒரு குடோன் திறக்கும் விசயமாக அவன் தந்தையால் வெளியூர் அனுப்பப்பட்டு அங்கிருந்து வேலைகளை முடித்துவிட்டு ஊர் திரும்பியவனுக்கு அப்போதுதான் எட்டியது அச்செய்தி.

 

அருந்தமிழுக்கு விக்ரமனோடு உறுதி பேசப்பட்ட செய்தி. 

 

இதயத்தில் இடியை இறக்கியது போல் இருந்தது.

 

அன்றைய பொழுதே அவனவளை பள்ளியில் சந்திக்க, அவள் மொழிந்த மொழிகளெல்லாம் அத்தனை உவப்பானதாய் இல்லை. மனதில் கனமேற்றி வைத்திருந்தது.

 

“தமிழ்…!”

 

அவன் அழைப்பில் துள்ளும் மீனாய் அவள் விழிகள் விரிந்து நிமிருமே இன்று ஏனோ நிமிரவுமில்லை. அவனை நோக்கவுமில்லை.

 

“நிச்சயம் உண்மைங்களா?”

 

அவளிடம் பதிலேதும் இல்லை.

 

“சொல்லுங்க தமிழ்” என இப்போது குரலில் கொஞ்சம் காரத்தன்மை கூட, விழிநீர் விழியை விட்டு வெளியே வந்துவிடக் கூடாதென்ற கவனத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

 

கலங்கிய விழிகளைக் கண்டதும் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான் நன்மாறன்.

 

அவன் அடுத்து  பேசும் முன்னரே அவள் செய்கை அவனுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

 

“இது எனக்கு சொந்தமான பொருள் இல்லைங்க இனியும் என்ர கிட்ட இருக்கக் கூடாது” என்றவள் தன் கையில் இருந்த சாரதாவின் வளையல்களை கழற்றி அவனிடம் கொடுத்துவிட்டு நகரச் செல்ல,

 

“கொஞ்சம் பொறுங்க தமிழ்” என்ற அவனது குரல் அவளை நகரவிடாது தடுத்து நிறுத்தியது.

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அங்க வாங்க” என்றுவிட்டு அங்கிருந்த ஆலமரத்தின் அருகில் செல்ல அவனை பின்தொடர்ந்தாள் அருந்தமிழ். தலையை தாழ்த்திக் கொண்டு குற்றவாளிபோல் நின்றிருக்கும் அவளையே பார்த்தவன்,

 

“முதல்ல என்னாச்சுனு பொறுமையா சொல்லுங்க” என்றான்.

 

“எங்கப்பா என்னைய ரொம்ப நம்புறாருங்க. அவரோட நம்பிக்கையை என்ரனால உடைக்க முடியாது” என்றாள் ஒரே வார்த்தையில் அனைத்தையும் உள்ளடக்கி.

 

அவளையே கூர்ந்து பார்த்திருந்தவன்,

 

“அதான் என்ர நம்பிக்கையை உடச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா” என்றதும் வலியோடு அவனை நிமிர்ந்து பார்க்க,

 

“சொல்லுங்க” என்றான் அவளை மீறிய வலியில்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ப்ளீஸ் மாறன் என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அப்பா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குன்னு சத்தியமா தெரியலைங்க தெரிஞ்சிருந்தா நான் இப்படி.. இப்படி” என்று முடிக்க முடியாது தவிக்க

 

“தெரிஞ்சிருந்தா எனக்கு உங்க மனசுல இடம் கொடுத்திருக்க மாட்டீங்க அப்படித்தான?” என்றான்.

 

அவள் அமைதியாய் இருக்க,

 

“சரிங்க தமிழ். உங்களால முழு மனசோட விக்ரமனை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்குறீங்களா?”

 

“….”

 

“அப்பாவுக்காக உங்க முடிவை வேணும்னா மாத்திக்கலாம் ஆனா உங்க மனசை மாத்திக்க முடியுமா?”

 

“…..”

 

“ஒரு விசயம் ஆழமா பதிஞ்சிருந்தா அதை ஆழத்துல இருந்து தோண்டி எடுத்து தூக்கி போடாம புது விசயத்தை அங்க நுழைக்க முடியாதுங்க தமிழ். என்னை தூக்கி போட்டுட்டீங்களா இல்ல இனிமேல் தான் தூக்கி போடப் போறீங்களா? இல்ல நான் உங்க மனசுல அந்த ஆழத்துக்கு போகவே இல்லையா?”

 

மென்மையாய் அவன் உச்சரித்தாலும் அவற்றை எல்லாம் அவள் மீது வீசப்படும் சொல்லம்புகளாகவே தோன்றியது. அதன் வலி கூடிக்கொண்டே போக போதும் என்னைக் கொல்லாதே என வேதனையோடான பார்வையை அவனுக்கு கொடுக்க,

 

“அப்போ உங்க அப்பாவுக்காக தான் இதுக்கு சம்மதிச்சிருக்கீங்க. உங்களுக்கு விருப்பம் இல்லை. அப்படி தானே” என்றான் முடிவாய்.

 

“அப்பாவோட விருப்பம் தான் என்ர விருப்பமும்” என்றாள் அவளும் முடிவாய்.

 

‘என் அப்பாவின் விருப்பமாய் நீ இருந்திருக்கக் கூடாதா’ என்ற எண்ணம் எழாமல் இல்லை மனதில்.

 

“சரிங்க தமிழ். இனி நான் உங்களை தேடி வரமாட்டேன். உங்களை தொந்தரவும் செய்ய மாட்டேன். நீங்களே நல்லா யோசிச்சு முடிவெடுங்க. நீங்களே என்னை தேடி வருவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான் உறுதியாய்.

 

‘என் மீது நம்பிக்கை வைக்காதே’ என்று கண்கள் செய்தி கூற,

 

“இல்லங்க நான் வரமாட்டேன்” என்றாள்.

 

“வருவீங்க” என்றான் அழுத்தமாய்.

 

“மாட்டேன்” என்றாள் அவளும் அழுத்தமாய் அவனுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

 

“நிச்சயம் வருவீங்க” என்றான் லேசான புன்னகையுடன்.

 

[the_ad id=”6605″]

 

 

அவன் கோபிக்கவும் இல்லை மாறாக எத்தனை நம்பிக்கை எத்தனை பொறுமை. புன்னகைக்க வேறு செய்கிறான். குற்றமுள்ள நெஞ்சமதில் அவனது புன்னகை கூட குத்திக் கிழிக்க,

 

“மாட்டேன்.. மாட்டேன்.. மாட்டேன்.. இனி நான் வரவும் முடியாது. புரிஞ்சுக்கோங்க மாறன். உங்களுக்கானவ நான் இல்ல. எனக்கு அந்த அளவுக்கு கொடுத்தும் வைக்கல” என்று விழிநீர் வழிந்தோட சொல்லிக்கொண்டு செல்லும் அருந்தமிழையே வேதனையோடு பார்த்திருந்தான்.

 

அவள் அழுகையில் இவன் வலி உணர்கிறான், இப்போதும். ஆனால் அவள் எதையும் உணர மறுக்கிறாளோ?

 

“ண்ணா வெரசலா வந்து கட்டவண்டியை எடு” என்ற கவினின் குரல் அவன் செவிகளைச் சென்றடையவில்லை.

 

“என்னாச்சு அண்ணனுக்கு, இப்படி கடப்பாறையை முழுங்குன மாதிரி உக்காந்திருக்காரு?” என அகிலன் கவினின் காதைக் கடிக்க,

 

“ண்ணோவ் ஸ்கூல்ல தமிழ் டீச்சர் கிட்ட எங்களுக்கு ரொம்ப நல்ல பேரு இருக்கு அதைய கெடுத்துறாத” என்று சத்தமாய் குரல் கொடுத்தான் கலையரசன்.

 

‘தமிழ்’ என்ற பெயரில் சிந்தனை கலைந்த மாறன், அவர்கள் மூவரையும் பார்க்க, தொலைவில் இருந்தபடி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் சாரதா.

 

“இன்னிக்கு ஒருநாள் மட்டும் பஸ்சுலயே போய்க்கோங்க கண்ணுகளா” என்று சாரதா சொல்ல,

 

“சரிங்க ம்மா” என்று அவரிடம் விடைபெற்றுவிட்டு சிறார்கள் மூவரும் பள்ளி கிளம்பினர்.

 

அவர்கள் கிளம்பியதும் மாறனும் வீட்டினுள் வந்து சோபாவில் சாய்ந்து கண்மூடிக்கொள்ள அவன் பின்னால் வந்த சாரதாவோ அவன் தலையை ஆதுரமாய் வருடியபடி,

 

“மாறா! ஏன்டா இப்படி இருக்க. நான் வேணும்னா அப்பாவை விட்டு பேச சொல்லட்டுமா? உனக்குள்ளையே வெச்சிட்டு இருந்தா எப்படி டா” என்று இதோடு நூறாவது முறையாக கேட்டுவிட்டார். மெல்லக் கண்திறந்தவன்,

 

“வேண்டாங் ம்மா” என்று இப்போதும் மறுத்துவிட்டான்.

 

இன்னும் சாரதாவிற்கு அருந்தமிழின் மனம் தெரியாது. மாறன் அதை தெரிவிக்க வந்த சமயம் தான் கந்தசாமி அவனை வெளியூருக்கு அனுப்பியது. வந்தபின் அன்னையிடம் தெரிவித்துக் கொள்வோம் என்றிருக்க, அதற்குள் இங்கான நிலையோ வேறு.

 

“இதுக்கு தான் நான் அப்போவே தலைப்பாடா அடிச்சுகிட்டேன், திருவிழா முடிஞ்சதும் அப்பாவை தமிழ் வீட்ல பேச சொல்லலாம்னு. இப்போ பாரு என்னாச்சுன்னு. தமிழ் விருப்பம் இல்லாமையா நிச்சயம் பண்ணிருப்பாங்க? அவளுக்கும் அந்த பையனை பிடிச்சு தான் இருக்கும்” என வேதனையோடு சொல்ல,

 

“இல்லங் ம்மா” என ஏதோ சொல்லவந்த மாறன் தன் தந்தை வருவது கண்டு அமைதியானான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்ன அம்மாளும் மகனும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க” என்று அவர்களை கூர்ந்து நோக்கியவாறு வந்தார் கந்தசாமி.

 

“அது ஒண்ணுமிலீங்க” என சாரதா தயங்க,

 

“ஒண்ணுமில்லைனா போய் வேலையை பாக்க வேண்டியது தானோ” என்றவர்

 

“மாறா!” என்று மகனை நோக்கி குரல் கொடுக்க..

 

“சொல்லுங் ப்பா” என்று சோபாவிலிருந்து எழுந்தான்.

 

“மட்டை மில்லுக்கு லோடு வந்தாச்சான்னு பாரு” என்றார். அவன் தலையசைக்க,

 

“அப்பறம் நம்ம தோப்புல தேங்காய் போட ஆளுக வர்றதா சொன்னாங்க என்னன்னு ஒரெட்டு போய் பாரு” என்றார் அடுத்து. அப்படியே அடுத்தடுத்து பல வேலைகளைக் கூறிவிட்டு, 

 

“நீ முன்னால போ நான் என்ர அலுவலை முடிச்சிட்டு பின்னால வர்றேன்” என, தலையசைத்து மாறன் வெளியே சென்றான்.

 

மாறனால் நகரக் கூட முடியாத அளவிற்கு ஏன் வேலைகளை வரிசையாய் வைக்கிறார் என்று கணவரை புரியாது பார்த்திருந்தார் சாரதா. மனையாளின் கைகளில் இருந்த வளையல்களைப் பார்த்த கந்தசாமி,

 

“தொலஞ்சது திரும்ப கெடச்சிருச்சு போல” என்றதும் சாரதா திருதிருத்தார்.

 

“உன்ர எண்ணமோ உன்ர மகனோட எண்ணமோ இனி நெறவேறாது சாரதா. இந்த பேச்சை இதோட விடு” என்றார். அப்படிச் சொல்லியதிலேயே மாறனின் விசயத்தை அவர் அறிந்திருக்கிறார் என்று சாரதாவிற்கு புரிந்தது. இருந்தும் ஏன் நிறைவேறாது என்று கேள்வியாய் கணவரை நோக்க,

 

“திருவிழா முடிஞ்சதுமே அருந்தமிழை நம்ம மாறனுக்கு பேச ஆறுச்சாமி வீட்டுக்கு போயிருந்தேன்” என்றதில் ஆச்சர்யமாய் விழி விரித்துப் பார்த்தார் சாரதா.

 

“அவரு சிநேகிதன் சாகும் போது அவரு மகனுக்கு தன் பொண்ணை தர்றதா ஆறுச்சாமி வாக்கு கொடுத்துட்டாராமா” என்றதில் அதிர்ந்து போய் பார்த்தார் சாரதா.

 

“இருந்தாலும் நம்மட குடும்பத்துக்கும் நமக்கும் மதிப்பு கொடுத்து, மூத்த மகளை தரமுடியாட்டி என்ன கொஞ்ச நாள் போய் நம்ம மாறனுக்கு தன் இளைய மகள உறுதி பேசிக்கலாம்னு சொல்லுறாரு அந்த பெரிய மனுஷன். எனக்கு அதுக்குமேல என்ன பேசுறதுன்னு தெரியல சாரதா”

 

“இப்போ என்னங்க பண்ணுறது?”

 

“வேலுச்சாமி இப்போ உயிரோட இருந்தா கூட நம்ம அவருகிட்ட பேசி பாத்திருக்கலாம். அவரு உயிரோட இல்லைங்கறதுக்காக அவருக்கு கொடுத்த வாக்கை மீறுறது தப்பு. இனி ஆறுச்சாமியை வற்புருத்துறதும் தப்பு. மாறன் அந்த பொண்ண மறந்திடறது தான் அவனுக்கு நல்லது” என்றார் முடிவாய்.

 

“அவ்வளவு லேசுல தமிழை அவன் மறப்பான்னு தோனலைங்க” என வேதனையாய் சொல்ல,

 

“கொஞ்ச நாள் போனா தன்னால மாறிருவான். சும்மா இருந்தா தானோ எதயோன்ன நெனைக்க தோணும். அதுக்குத்தேன் அத்தனை வேலை கொடுக்குறேன். இனி மாறனை நான் பாத்துக்குறேன். நீ ஒன்ன நல்லா மனசுல நிறுத்திக்கோ, நம்ம குடும்பத்துனால ஆறுச்சாமிக்கு ஏதாவது தலைகுனிவு வந்தா அப்பறம் நடக்குறதே வேற” என்று அழுத்தமாய் கூறிவிட்டு மட்டை மில்லை நோக்கி நடைபோட்டார்.

 

மாறனை எண்ணி கவலையோடு நின்றிருந்தார் சாரதா.

 

ன்றும்போல் இன்றும் மாறனின் வருகையை எதிர்நோக்கி அருந்தமிழின் கண்கள் நோடிக்கொரு முறை தானாய் வாயிலைத் தழுவியது.

 

கலையரசன், கவின் மற்றும் அகிலன் பேருந்தில் வந்திறங்கினர். அவளுக்கு புரிந்து போனது இனி மாறன் அவர்களைக் கூட்டி வந்தாலுமே தன்முன் வரப் போவதில்லை என்று.

 

இதை தானே விரும்பினாய் என்று மனம் குற்றம் சொல்ல, ‘இல்லை இதை விரும்பவில்லை. நான் விரும்பியதை நானே தொலைத்தும் விட்டேன். விரும்பியது நிறைவேறாது போகவும் தானே விரும்பாததை எல்லாம் விரும்ப வைக்கிறாய் நீ’ என்று மனதை குற்றம் சாட்டினாள் அவள்.

 

நிச்சயம் முடிந்த மறுநாளே மாறனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்கு அவனை சந்திக்கவே முடியவில்லை. தங்களை சந்திக்க விடாது செய்தது யார் செயல்! தன் விசயத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகளை மின்னல் வேகத்தில் கொண்டுவந்தது யார் செயல்! விதியை தவிரை யாரைச் சொல்வது.

 

எண்ணி ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவாகி அதற்கான வேலைகளை பார்க்கத் துவங்கி இருந்தார் ஆறுச்சாமி. சிறு பொறியை சட்டென்று அணைக்கலாம் ஆனால் பெரும் நெருப்பை! அணைக்க முடியாது அதன் போக்கில் விட்டுவிட்டாள் அருந்தமிழ்.

 

“ஊருக்குள்ள எல்லாரும் மூக்குமேல விரலை வைக்குறமாறி நம்ம தமிழ் கலியாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தோணும். என்ர கனவே நம்ம தமிழ் கலியாணம் தான்” என்ற தந்தையின் நினைவு தான் வந்து போனது அவளுக்கு.

 

எத்தனை கனவுகள் எத்தனை ஆசைகள் அதைவிட எத்தனை நம்பிக்கை அவருக்கு தன்னிடம். அதை தானே உடைப்பதா என்று எண்ணித்தானே அவள் எழுப்பிய காதல் கோட்டையை எழுப்பிய வேகத்தில் அவளே அதை உடைத்தும் கொண்டாள்.

 

யார் மீது குற்றம் சுமத்துவது?

 

மாறனின் தந்தை தன் தந்தையை சந்திக்க எதற்காக வந்தார் என்றே தெரிந்து கொள்ளாது தானாக ஒன்றை கற்பனை செய்து கொண்டமைக்கு தன் மீதா?

 

இல்லை உன் தந்தையிடம் வந்து பேசுகிறேன் என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டுச் சென்றவன் எங்கு சென்றான் என்றே தெரியாது காணாமல் போய்விட்டானே அவன் மீதா?

 

இல்லை தன் மீதுள்ள நம்பிக்கையில் தனக்கு வரப்போகிறவன் யாரென எப்போதோ தேர்ந்தெடுத்து வைத்த தன் தந்தையின் மீதா?

 

காலம் அவர்களை எல்லாம் புள்ளியால் இணைத்து ஒரு கோலத்தை வரைந்திருந்தது. அலங்கோலமாய் இருக்கும் அதை அழகாய் மாற்றுவது அருந்தமிழின் கைகளில் இருந்தும் அவளோ கைவிரித்து நின்றாள்.

 

சில நேரங்களில் ஒருவரின் நம்பிக்கையைப் பெற மற்றொருவரின் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும். தந்தையின் நம்பிக்கையை காக்க வேண்டி அவள் மாறனின் நம்பிக்கையை இழக்க நினைத்தாள். அவனோ இன்னும் ஆழமாய் அவளை நம்ப, தன் மீதே நம்பிக்கை இழந்து நிற்கிறாள்.

 

“டீச்சர் அட்டெண்டன்ஸ்” என்ற குரலில் சிந்தனை கலைந்தவள் மாணவர்களை அமர்த்தி வருகைப் பதிவேட்டை விரித்து வருகை பதிவைத் துவங்கினாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!