Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 17.2

 

குலசேகரன் அமைதியாய் இருக்க அரும்பிற்குள் பல சூறாவளிகள் சுழன்று கொண்டிருந்தன.

 

“நான் ஒன்னும் என்ர சுயநலத்துக்காக உன்னைய கட்டாயப் படுத்தல மாமா. உனக்கு என்னைய எந்த அளவுக்கு பிடிக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆத்துல விழுந்தப்போ நீ துடிச்சதெல்லாம் பாத்துட்டு தானே இருந்தேன்” என்றதும்



Advertisement

 

“எதைய எதோட முடிச்சு போடற” நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

Advertisement

“நான் முடிச்சு போடல. உன்னைய உரிமையா வந்து என்ர கழுத்துல முடிச்சு போடத்தேன் சொல்லுறேன். கண்ண மூடிகிட்டா காதல் இல்லைன்னு ஆகிடாது மாமா. நீ தகுதி தராதரம்னு உயிரில்லாததுக்கு எல்லாம் உயிர் கொடுத்து உயிருள்ள என்ரகிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுத்துக்கிட்டு இருக்க” என தாளாத வேதனையோடு பேச,

Advertisement

 

“நீ மகாராணியோட்டம் வாழ வேண்டியவ டி. உன்னைய கொண்டு வந்து அந்த ஓட்டு வீட்டுல தள்ள என்ரனால முடியாது. நீ என்னிக்கும் சந்தோசமா இருக்கோணும் அரும்பு. நீயும் என்ரகூட சேந்து கஷ்டப்பட கூடாதுன்னு தானே விலகிப்போறேன் அது ஏன் புரிய மாட்டிங்குது உனக்கு” என அவள் வேதனை சிறிதும் குறையாது சமமாய் அவனிடமும் வெளிப்பட்டது.

 

Advertisement

“பணங்காசு இருந்தா மட்டும் நல்லா வாழ்ந்துற முடியுமா மாமா? என்னைய பொறுத்த வரை பிடிச்சவங்களோட வாழுறதுக்கு பேரு தான் வாழ்க்கை. மத்தது எல்லாம் வியாபாரம். சரோஜினி அத்தை அந்த வியாபாரத்தை என்னைய வெச்சு பண்ணுறாங்க. நீ தான் என்ர சந்தோசம்னு நான் சொல்லுறேன் நீ உன்னைய தராம என்ர சந்தோசத்தை வெளிய தேடுனா அது கெடைச்சிடுமா? எனக்கு உன்னைய மட்டும் தான் பிடிக்கும் மாமா. எப்படி பட்ட சூழ்நிலைனாலும் உன்ரகூட இருக்கும்போது சந்தோசத்துக்கு என்னைக்கும் கொறை இருக்காது” என்றாள் அகத்தின் அடியாழத்தில் இருந்து.

 

அவன் ஏதோ பேச வர கை நீட்டி மறுத்தவள்,

 

“முடிவா கேக்குறேன் உன்னால என்னைய கல்யாணம் பண்ணிக்க முடியுமா முடியாதா? அதை மட்டும் சொல்லு மாமா” என்றாள்.

 

அவன் கண்களை அழுந்த மூடித் திறக்க,

 

“முடியாதுன்னு சொல்லறதா இருந்தா அதுக்கு முன்னால என்ர முடிவையும் தெரிஞ்சுட்டு சொல்லு” என, அவன் அவள் நயனங்களை காண,

 

“என்ர கழுத்துல உன்னைய தவர வேற யாரு கையால தாலி ஏறுனாலும் அது எனக்கா இருக்காது என்ர பொணத்துக்கா தான் இருக்கும்” என்றாள் கண்கள் சிவக்க.

 

அவளது வார்த்தைகளால் மொத்தமாய் தளர்ந்துபோய் அப்படியே அவள்முன் மண்டியிட்டான் குலசேகரன்.

 

அவனருகில் வந்தவள் அவன் முகத்தை தன் கைகொண்டு பற்றி நிமிர்த்த, அவன் விழிகளில் துளிர்த்த நீர் அவள் வார்த்தையின் தாக்கத்தை எடுத்துரைத்தது.

 

அதோட நிறுத்தவில்லை அரும்பு,

 

“நீ என்னைய கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல கடைசியா எனக்கு காரியம் பண்ணுற கடமையையும் நீயே செஞ்சுடு மாமா. நான் வர்றேன்” என்று வலிக்க வலிக்க கூறிவிட்டுத் திரும்ப, அவள் கையை எட்டிப் பிடித்திருந்தான் குலசேகரன்.

 

கண்களில் வழியும் நீரோடு அரும்பு அப்படியே திரும்பாது நின்றிருக்க, எழுந்து அவள் முன் வந்தவன்

 

“உன்னைய எமனுக்கு தூக்கிக் கொடுக்கவாடி பாத்து பாத்து எங்கக்கா வளத்துச்சு. நீ இல்லாம என்ரனால இருக்க முடியுமா இல்ல எங்கக்கானால தான் இருக்க முடியுமா. ஏன் தான் என்னைய இப்படி உயிரோட கொல்லுற” என, அவள் பார்வையை தளர்த்தியபடி விசும்ப மறுநொடியே அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தான்.

 

“இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ, உன்ர கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது என்ர கையாள தான்” என்றான் உறுதியான நெஞ்சோடு.

 

ஆனந்தத்தில் அவள் அழுகை கூட, அவளை தன்னிடம் இருந்து மெல்ல விலக்கியவன்,

 

“இனி அழுகக் கூடாது அரும்பு” என அவள் கண்ணீரைத் தன் கரம் கொண்டு துடைக்க,

 

“சத்தியம் பண்ணு” என வலக் கையை அவன் முன் நீட்டினாள்.

 

“உன்ர மேல சத்தியம்” என அவன் சொல்ல

 

“என்ர மேல இல்ல மாமா உங்கக்கா மேல சத்தியம் பண்ணு” என, அவளை முறைத்துவிட்டு அப்படியே செய்தான். அதன் பின்னரே அவள் முகத்தில் புன்னகை அரும்பத் துவங்கியது.

 

“இப்ப சந்தோசமா?” என,

 

“நாட்டுல அவனவன் மொறை பொண்ணு இல்லையேன்னு ஏங்கிட்டு இருக்குறான். ஏன் கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணு கிடைக்குமான்னு தவமா தவமிருக்குறாங்க. ஒரு பொண்ணுக்கு அத்தனை டிமேண்ட் இருக்குற காலத்துல கட்டுனா உன்னைய தான் கட்டுவேன்னு ஒத்தக் காலுல நிக்குறேன் நீ என்னடான்னா ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க” என முகத்தை திருப்பினாள்.

 

“அன்னிக்கே எவளையாவது கட்டி இவளுக்கு அத்தை ஆக்கிருக்கோணும். இப்படி கன்னிப் பையனாவே இருந்து காலத்தை கழிச்சு இப்போ இவளையே கட்டிக்குறேனு உங்கக்கா மேல சத்தியம் பண்ணிப்புட்டயே டா குலசேகரா” எனப் புலம்புவதுபோல் காட்டிக்க, வேகமாய் அவன் புறம் திரும்பியவள்,

 

“என்னைய விட்டுட்டு வேற எவளையாவது கட்டணும்னு நெனச்சா கூட கறிக்கொழம்புல அரளி வெதைய அரச்சு ஊத்தி உனக்கும் வெள்ளையனுக்கும் சேர்த்து கொடுத்திருவேன்” என்றாள். அதில் சற்று அதிர்ந்தவன்,

 

“உனக்கு மாமனா பொறந்தது நான் பண்ணுன பாவம். அழகா பொறந்ததை தவிர வெள்ளையன் என்னடி பாவம் பண்ணுனான்” என்று கேட்க,

 

“உன்னயோட்டம் அவனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா. அவனை தனியா விட்டுட்டு போக மனசில்ல” என்றாள்.

 

‘எங்கக்கா மக அம்பிக்குள்ள இப்படி ஒரு அந்நியனா’ என நினைத்து,

 

“அரும்பு! உன்ர அப்பத்தாளோட சேர்ந்து சீரியல் பாக்காதைன்னு சொன்னா கேக்குறியா இப்போ பாரு நாலு பேரை வாழவெச்சு பாக்கோணும்ன்ற எண்ணம் போய் சொந்தக் காரனுக்கே சோத்துல வெசத்தை வைக்குற எண்ணம் வருது” என்றான்.

 

“அதெல்லாம் சும்மா வாய் பேச்சுக்கு சொல்லுறது தான் மாமா. அப்படி வைக்கோணும்ங்கற எண்ணம் இருந்தா இந்நேரம் எங்க அப்பத்தா உசுரோடையா இருந்திருக்கும்?” என்று சொல்ல இருவருக்குமே சிரிப்பு வந்தது. இறுக்கம் விலகி இதழ்கள் மலர்ந்த வேளையில்,

 

“இந்த தேவராஜன் ஒரு மானங்கெட்டவன்னு ஊருக்கே தெரியும் ஆனா எங்கப்பாவுக்கு தெரியலையே மாமா” என்றாள்.

 

“தெரியலைனா இனி தெரியப் படுத்திருவோம்” என, அரும்பு புரியாது பார்க்க,

 

“நீ ஒன்னும் கவலப்படாத இனி நான் பாத்துக்குறேன்” என உறுதியான குரலில் கூறிய குலசேகரன் அரும்பின் கையை அழுந்தப் பற்ற, தன் கரம் பற்றிய அவன் கரத்தைப் பார்த்தவள்,

 

“இப்போ பிடிச்ச கைய விட்டுற மாட்டியே” என கேட்க,

 

“இனி நீயே நெனச்சா கூட என்ரனால விடமுடியாது” என்றதும் அவளோ சட்டென எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, உடனே அவள் கையை விட்டவன் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான்.

 

“என்ன அதுக்குள்ள விட்டுட்ட” என கண்ணடித்துவிட்டு அரசியை தேடி அங்கிருந்து நகர, அதிர்ச்சி குறையாது அவள் பின்னால் வந்தான் குலசேகரன்.

 

வேங்கையிடம் சீற ஆரம்பித்த விக்ரம பாண்டியன் இன்னும் நிறுத்தியிருக்கவில்லை.

 

“யாரு யாரை ஒதுக்குனா? எல்லாரையும் ஒதுக்கிட்டு அஞ்சு வருசமா எங்கையோ ஒரு மூலைல இருந்தது யாரு? நீ இல்லாம நா…” என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்த அரசி உடனே அவனை நிமிர்ந்து பார்க்க,

 

“நீ இல்லமா நாயகி ஆத்தா ஆறுச்சாமி மாமா எல்லாம் எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா உனக்கு? இந்த ஒரு விசயம் நீ இல்லாம நடந்திருச்சுன்னு இந்த குதி குதிக்குறையே நீ இல்லாம இந்த அஞ்சு வருசமா அவங்க எந்த ஒரு விசேசத்தையுமே கொண்டாடுனதில்லை அது தெரியுமா உனக்கு? இதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது உனக்கு என்னிக்கும் உன்ர சுயநலம் தானே பெருசு” என அடிபட்டது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

 

என்ன சொல்லிவிட்டான்! ஒரே வார்த்தையில் அவள் ஆற்றிய அரும்பெரும் காரியங்களை எல்லாம் சுயநலம் என்று அடையாளப் படுத்திவிட்டானே. வலிக்க வலிக்க பார்த்திருந்தாள். அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ,

 

“எல்லார்த்தையும் சொல்லித்தான் புரிஞ்சுக்கணும்னு இல்லை. சிலதை உணர்ந்தாவே போதும். அதே மாற எல்லார்த்தையும் சொல்லிட்டும் இருக்க முடியாது. அதுக்கான நேரம் வரும்போது சிலது தானா வெளிப்படும்” என்றான்.

 

இவர்களது வாக்கு வாதத்தை தலையும் புரியாது வாலும் புரியாது பார்த்திருந்தனர் அங்குவந்த குலசேகரனும் அரும்பும்.

 

“என்ன நடக்குது இங்க?” என குலசேகரன் அரும்பிடம் கேட்க,

 

“அதான் எனக்கும் புரியலை மாமா நம்மள சமாதானப்படுத்த வந்துட்டு இவங்க ஏன் சண்டை போட்டுட்டு இருக்காங்க” எனப் பார்த்திருந்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

விக்ரமன் கூறிய வார்த்தைகளின் பொருள் எல்லாம் அரசியின் அறிவை எட்டவில்லை. என்றும் கோபம் யோசிக்கும் திறனுக்கு தடை போட்டுவிடும். அவனது சுயநலம் என்ற வார்த்தைப் பிரயோகம் பெரிதாய் வாட்டியது அவளை. இருந்தும் அவனுக்கான பதிலை அளித்தாள்.

 

“சரியான நேரத்துல சொல்லப்படாத எதுக்கும் இங்க மதிப்பு இல்லை. காலம் கடந்து அது வெளிப்படுறதால வேதனை தான் மிஞ்சும் அதுனால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றுவிட்டு வேகமாய் அங்கிருந்து சென்றாள்.

 

குலசேகரனிடமும் விக்ரமனிடமும் அவசரமாய் விடைபெற்று அரசியை தொடர்ந்தாள் அரும்பு.

 

செல்லும் அரசியையே பார்த்திருந்த விக்ரமனின் அருகில் வந்து அவனது தோளை அழுந்தப் பற்றினான் குலசேகரன்.

 

விக்ரமன் தன் பக்கவாட்டின் புறம் திரும்ப,

 

“அதுக்கான நேரம் வரும்போது சிலது தானா வெளிப்படும்னு சொன்னயே மாப்ள, அது அரசிக்கு மட்டுமா இல்ல எங்களுக்குமா” என்ற கேள்வியில் விக்ரமன் அவனை நோக்க, பதில் வேண்டும் என்பதாய் நின்றான் குலசேகரன்.

 

 

வாசம் வீசும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!