Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் 18.2

 

ஆறுச்சாமியின் கண் முன்னரே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார் வேலுச்சாமி. கைகளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைய ஒரு கார் வசதி கூட இல்லை. பேருந்தும் அந்நேரத்திற்கு இல்லை. உடனே விக்ரமனிற்கு அழைத்து விரைந்து வீடு வருமாறு சொல்ல,

 

“எனக்கு ஏதாவது ஆனா விக்ரமனை விட்டுடாத டா. அவன் உன்ர பொறுப்பு ஆறுச்சாமி” என நண்பனின் கையை பிடித்துக்கொண்டு கேட்க, கண்களில் நீர் பெருகியது ஆறுச்சாமிக்கு.



Advertisement

 

“என்னடா ஏதேதோ பேசுற? உனக்கு ஒன்னும் ஆகாது. ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்” என ஆருயிர் நண்பனை மடியில் போட்டுக் கொண்டு பதற,

 

Advertisement

“போற எதையும் நம்ம தடுக்க முடியாது. அதுக்கான நேரம் வந்தா எல்லாம் போய் தான் ஆகோணும். எனக்கும் நேரம் வந்திருச்சு. என்ன என்ர மகனை இப்படி பாதில விட்டுட்டு போகப் போறேன்னு தான் கவலையா இருக்குது. ஆனா நீ இருக்கைல எனக்கு அந்த கவலையும் இல்லடா” தான் இறுதி நொடிகளில் இருப்பதை உணர்ந்திருந்தார்.

Advertisement

 

“நான் இருக்கேன் விக்ரமனுக்கு. அவன் என்ர மருமகன் டா. பேச்சுக்கு சொல்லலை. என்ர பொண்ணுக்கு அவன் தான்டா மாப்பிள்ளை. இதெல்லாம் நீ என்ர கூட இருந்து பாக்கோணும். இப்படி எல்லாம் பேசாதடா” என்று அவர் கரத்தை பற்றிக்கொண்டு வாக்கு கொடுத்தார்.

 

Advertisement

“ரொம்ப சந்தோசம் டா. இது போதும் எனக்கு” என புன்னகைத்தார் வேலுச்சாமி. அந்த வாக்கில் அவர் மனம் நிறைந்து போயிருக்க வாழ்க்கை பயணமும் நிறைவு பெற்றது. அப்படியே தன் நண்பனின் மடியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

 

“வேலுச்சாமிஈஈ…” என்று நண்பனை அணைத்துக்கொண்டு கதறியதில் இன்றுமே உடல் தூக்கி வாரிப்போட்டது ஆறுச்சாமிக்கு.

 

பயத்தில் சுற்றும் முற்றும் பார்க்க, தன் அறையில் நின்றிருப்பது புரிய கைகளில் இருந்த புகைப்படத்தை பார்த்தார்.

 

கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளி ஒன்று புகைப்படத்தில் இருந்த வேலுச்சாமியின் முகத்தின் மீது பட்டுத் தெறித்தது. அதை தன் கைக்கொண்டு துடைத்தவரால் எத்தனை முயன்றும் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

 

தன் தந்தையின் நினைவிடத்தில் நின்றிருந்த விக்ரமனின் மனமும் தந்தையின் இறுதி நிமிடங்களைத் தான் எண்ணிப் பார்த்திருந்தது.

 

நடந்த இழப்பை கடந்து வரத்தான் முயற்சித்தனர் அனைவரும். ஆனால்  வேலுச்சாமியின் மனம் வேதனையின் அளவை கூட்டிக்கொண்டே சென்றதே தவிர சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை.

 

 

 

காளைகள் சாகும் தருவாயில் கூட அவரையே பார்த்துக்கொண்டு வலியில் கத்தியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? பிரியமாய் வளர்த்து அதை காப்பாற்ற முடியாது கண் முன்னே பறிகொடுப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

 

“வீடே நெறஞ்சிருக்கும், இனி எப்போ இப்படி பாக்கப் போறோம் விக்ரமா” என அதே சிந்தனையில் அவன் தந்தை இருக்க,

 

“மனசை விட்டுறாதீங் ப்பா. ஏதோ கெட்ட நேரம்ங் அதான் மொத்தமா நம்மள விட்டு போயிடுச்சு. மிச்சம் இருக்கறதை வெச்சு பழையபடிக்கு நான் கொண்டு வர்றேன்ங் ப்பா” என விக்ரமன் ஆறுதலளிக்க, கசந்த முறுவல் அவரிடம்.

 

ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என விலை போகும் காளைகள் அல்லவா அவை. அத்தனை செல்வங்களும் ஒரு நொடியில் சூறையாடப் பட்டதுபோல் இருந்தது.

 

“நம்ம சொத்துபத்தே இதுக தானோ! உன்னைய இந்த நெலமைக்கு கொண்டு வந்து நிறுத்துவேன்னு நான் நெனைச்சும் பாக்கல விக்ரமா” என வருந்த,

 

“நீங்க என்ர கூட இருக்குறது தான் எனக்கு மிகப்பெரிய சொத்துங் ப்பா” என்று அவர் கையை அழுந்தப் பற்றினான். விரைவில் தன் தந்தையை முன்பு போல் கம்பீரமாய் பார்க்கவேண்டும் என்ற தீவிரம் அவனுக்கு.

 

“நம்ம தோப்பு வரைக்கும் போய்ட்டு வந்திர்றேனுங் ப்பா” என, அவன் தலையை வாஞ்சையாய் வருடிவிட்டார். அது தான் தந்தையிடம் இருந்து கிடைத்த கடைசி வருடல் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு கைபேசி அழைப்பு வர, அடுத்த ஐந்தாம் நிமிடம் வீட்டில் இருந்தான். ஆனால் வேலுச்சாமி அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே விடைபெற்று விட்டிருந்தார்.

 

விக்ரமன் கதறிய கதறல்களும், கண்ணீர் தடமே அதுவரை பார்த்திடாத அவன் கண்கள் கொட்டிய வெள்ளத்தையும் அனைவராலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அவன் தந்தையை மீட்டுக் கொடுக்கும் சக்தி யாவருக்கும் இல்லாது போக அவனோடு சேர்ந்து வருந்தத்தான் முடிந்தது மற்றவர்களால்.

 

அடுத்தடுத்த பேரிழப்புகள், அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் போராடி கால்நடை மருத்துவரைக் கொண்டு மீதம் இருந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து ஒன்றிரண்டு கன்றுகளை மட்டும் காப்பற்றி இருந்தான். அதில் உயிர் பிழைத்தவை தான் அவனது வேலனும் வீரனும்.

 

இன்று அவையும் தீவனம் உட்கொள்ளாது துவண்டு கிடக்க, எங்கு தன்னை விட்டுப் பிரிந்து விடுமோ என்ற கலக்கம் பிறக்க, நிலை குலைந்துபோய் நின்றிருந்தான் தந்தையின் நினைவிடத்தில்.

 

எத்தனை நேரம் நகர்ந்ததோ அவனைத் தேடிக்கொண்டு அவ்விடம் வந்தான் குலசேகர பாண்டியன். வேலுச்சாமியின் நினைவிடத்தை வணங்க, அவன் கண்களும் தானாய் பனித்தது.

 

வேலுச்சாமி என்பவர் குலசேகரனைப் பொறுத்தவரையில் மிஸ்டர். பெர்ஃபெக்ட். ஒரு மகனாய், கணவனாய், நண்பனாய், தந்தையாய் என எந்த உறவை எடுத்துக் கொண்டாலும் அதில் நூறு சதவீதம் பொருந்திப்போகக் கூடியவர். அவர் ஒரு தந்தை என்பதை விட விக்ரமனுக்கு ஒரு நல்ல நண்பனாய்த் தான் இருந்து வந்தார். அதைப் பார்க்கும் போதெல்லம் இப்படி ஒரு தந்தை தனக்கு இல்லையே என்று ஏங்கி இருக்கிறான் குலசேகரன்.

 

குலசேகரன் அவன் மாமன் குடும்பத்தாரிடம் இருந்து பிரிந்து தனித்து நின்ற வேளையில் விக்ரமனோடு சேர்த்து அவனையும் தன் மகனாகவே பாவித்து அன்பொழுக பார்த்துக் கொண்டார் வேலுச்சாமி. அவனுக்கு தன் நிலத்தைக் கொடுத்து அவனை மேலே உயர்த்தி விட்டார். அவனும் தன் தந்தையின் ஸ்தானத்தில் தான் அவரைக் கண்டு வந்தான். அவர் இழப்பில் அவனுமே உடைந்து போயிருந்தான்.

 

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாய் பசும் பால் அளிப்பது, ஏழை விவசாயிகளுக்கு தன் மாட்டின் கன்றுகளை இலவசமாய் அளிப்பது என அவரது இந்த இளகிய குணத்தாலேயே ஊரார் மத்தியில் உயர்ந்து நின்றார் வேலுச்சாமி. இறுதியில் அந்த இளகிய மனமே அவர் உயிர் பிரியவும் காரணமாய் அமைந்துவிட்டது.

 

அதை எல்லாம் எண்ணிப் பார்த்து நீண்டதொரு பெருமூச்சை எடுத்துக் கொண்டு,

 

 

 

 

“மாப்ள உன்னைய எங்கெல்லாம் தேடுறது? அங்க டாக்டர் வந்து நம்ம வேலனையும் வீரனையும் பாத்துட்டு இருக்காங்க. அம்மா உன்னைய கையோட கூட்டியாரச் சொன்னாங்க” என விக்ரமனிடம் சொல்ல,

 

“டாக்டரா! அவரு தான் லீவுல இருக்கறதா சொன்னாங்க” என சந்தேகமாய் வினவ,

 

“இது வேற டாக்டர் மாப்ள. நீயே வந்து பாரு” என்றான் லேசான புன்னகையுடன். (Alprazolam)

 

குலசேகரனோடு விக்ரமன் தன் வீட்டை நெருங்கியதும், ஆறுச்சாமியும் சரியாக அவன் இல்லத்திற்கு வருகை புரிய, அடுத்து மூவரும் மாட்டுத் தொழுவத்தை நோக்கி நகர்ந்தனர்.

 

அங்கு வேலையாட்கள் ஒரு ஓரமாய் நின்றிருக்க, கைகளுக்கு க்ளவ்சை மாட்டிக்கொண்டு எந்த ஒரு அருவருப்பும் இன்றி மருத்துவ தர்மத்தின்படி அவ்வுயிர்களை காப்பது மட்டுமே தன் கடமையாய் எண்ணி வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த கால்நடை மருத்துவர்.

 

“டாக்டர்..!” என்று விக்ரமன் அழைக்க,

 

கையில் வைத்திருந்த ஊசியோடு அவன் புறம் திரும்பியவளைக் கண்டு பெரிதாய் அதிர்ந்தான்.

 

வேங்கையரசி!

 

விக்ரமன் ஆறுச்சாமியைக் காண,

 

“நீ எதுக்கு இங்க வந்த?” என அவர் ஒன்றும் புரியாது தன் மகளிடமே வினவ,

 

“உங்க மகளா ஒன்னும் வரலை” என்றவள் தன் தந்தையின் பார்வையை அறிந்து தன் மருத்துவ உரிமத்தை எடுத்து விக்ரமனிடம் காண்பித்தாள்.

 

அப்போது தான் அவள் தேர்ந்தெடுத்த மருத்துவத்துறை என்னவென்று அனைவருக்கும் புரிந்தது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையை தேர்ந்தெடுத்து, கால்நடை மருத்துவராய் அவர்கள் முன்பு நின்றிருந்தாள்.

 

“இப்போ என்ர வேலையை பாக்க விடுறீங்களா?” என்றுவிட்டு தன் பணியைத் தொடர்ந்தாள்.

 

முன்னர் ஒருமுறை மாட்டிற்கு ஏற்பட்ட கால் சத்துக் குறைபாடும் அதற்கான மருந்து பற்றியெல்லாம் சரியாக விக்ரமனிடம் அவள் விவாதித்தது எல்லாம் அவன் நினைவில் வந்து போனது.

 

கொஞ்சம் அதிர்ச்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியும் கொண்டிருந்தது விக்ரமனின் பார்வை.

 

“சொல்லுங்க, காளை மாட்டுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

 

“வேலனும் வீரனும் தீவனம் சரியா சாப்பிடுறது இல்ல. கண்ணுலை மூக்குல எல்லாம் நீர் வடிஞ்சுட்டே இருக்கு” என குரலில் கவலை தொனிக்க கூற,

 

“தடுப்பூசி போடலையா நீங்க? எப்படி கவனிக்காம விட்டீங்க” என்றாள் கண்டிக்கும் குரலில்.

 

“அடுத்த மாசம் போடலாம்னு இருந்தோம்” என,

 

“கறவை மாடா இருந்தா கன்னு போட்ட ஆறு மாசத்துல முதல் ஊசி போடணும். அப்பறம் மூணு வருசத்துக்கு ஒருமுறை போடணும். இப்போ இவங்களுக்கு நான் போட்டுடறேன்” என்றுவிட்டு ஊசி மருந்தை இரண்டு காளைகளுக்கும் செலுத்தியவள்,

 

 

 

“மத்த காளைகளோட ஒட்டுக்கா கட்ட வேண்டாம். இவங்களை தனியாவே கட்டுங்க. இந்த மருந்தை தண்ணீலையோ புண்ணாக்குலையோ கலந்து கொடுங்க” என்று சிலதை வழங்கினாள்.

 

கண்கொட்டாது தன் மகளையே பார்த்திருந்தார் ஆறுச்சாமி. முத்துலட்சுமிக்கோ ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தன் கணவருக்கு நடந்தது நினைவு வர, விழியோரம் நீர் சுரந்தது. அந்நிலை இன்று தன் மகனுக்கும் நடக்காது இருக்க அவர் தான் வேங்கையை சரியான நேரத்தில் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்தார்.

 

“கறவை மாட்டுக்கு…” என்று விக்ரமன் ஏதோ சொல்ல வர,

 

“பசு அம்மை நோய் தாக்கி இருக்கு” என்றாள் அரசி.

 

அவன் பார்வை அறிந்து,

 

“ஆரம்ப கட்டம் தான். இருந்தாலும் இது மத்த மாடுகளுக்கும் பரவும். மடியில இருக்குற புண்ணை பொட்டாசியம் பர்மாங்கநேட் கலந்த தண்ணியில கழுவி, ஃபெரிக் ஏசிட்டை தேங்காய் எண்ணையோட கலந்து காம்புல பூசி விடுங்க. இந்த மாட்டு பாலை மட்டும் நல்லா காய்ச்சி தான் உபயோகப் படுத்தனும்” என்று தெளிவாக எடுத்துரைத்து மருந்தைக் கொடுத்தாள்.

 

“நம்ம பிரச்சனைக்கெல்லாம் அரசி மூலமா நெரந்தர தீர்வு கெடச்சிடுச்சுங் அண்ணா. இந்நேரம் அவரு மட்டும் இருந்திருந்தா அவரு மருமகளை தலையில தூக்கி வெச்சு கொண்டாடியிருப்பாரு” என்று முத்துலட்சுமி ஆறுச்சாமியிடம் சொல்லி பூரித்துப் போனார்.

 

ஆறுச்சாமி தன் மகளையே கண்கொட்டாது பார்த்திருந்தார்.

 

அனைத்து கால்நடைகளையும் பொறுமையாய் பரிசோதித்து மருத்துகளை வழங்கிவிட்டு அவள் கிளம்பச் சென்ற வேளையில்,

 

“ஒன்னும் பிரச்சனை இல்லையே அரசி?” எனக் கேட்டான் குலசேகரன். அதில் ஓர் நொடி நின்றவள் விக்ரமனை பார்த்தபடி,

 

“இனி இங்க எந்தப் பிரச்சனையும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அழுத்தமாய் கூறிவிட்டு நகர்ந்தாள்.

 

வேங்கை போல் நடைபோட்டுச் செல்லும் வேங்கையரசியையே பார்த்திருந்தான் விக்ரம பாண்டியன்.

 

 

வாசம் வீசும்..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!