Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 21.1

 

மண்வாசம் 21 :

 

சேத்துமடை பண்ணை வீடு!



Advertisement

 

எந்நேரமும் தூறல் போடும் வானம். அந்த சிலுசிலு காற்றுக்கு கானம்பாடும் குயில்களும் வண்ணத் தோகை விரித்தாடும் மயில்களும் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ், பசுமை படர்ந்த சிறு குடிலில் வசிப்பதும் பேரின்பமே.

 

Advertisement

இனி அருந்தமிழ் தேவிக்கும் நன்மாறனிற்கும் வாசஸ்தலம் இதுவே.

Advertisement

 

சூழ்நிலை சரியில்லாது போக, சூழல் அவர்களது கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை. அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி அவ்வோட்டு வீட்டின் முன்பு நின்றிருந்தனர்.

 

Advertisement

உறவுகளை இணைத்து வைக்கவேண்டிய திருமணமோ உறவுகளை பிரித்து வைத்திருந்தது அவர்கள் விசயத்தில்.

 

ஆம்! பிறந்த வீட்டின் உறவே முற்றிலும் அறுந்துபோயிருந்தது அருந்தமிழுக்கு. அதை அறுத்தெறிந்தார் ஆறுச்சாமி. அது போதாதென்று புகுந்த வீட்டில் அவள் புகும் முன்னரே புறக்கனித்திருந்தார் கந்தசாமி.

 

தன் இளைய மகள் திருமணம் நடைபெறும் வரை அமைதி காத்த ஆறுச்சாமி அத்திருமணம் முடிந்ததும் வரவேற்பு நிகழ்வு வேண்டாமென்று தெரிவித்துவிட்டார். தன் உறவுகள் அனைத்தும் செல்லும் வரை காத்திருந்தவர் அடுத்து செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாய் இருந்தது.

 

“இருக்குற சொத்துக்களை உனக்கும் உன்ர தங்கச்சிக்கும் பிரிச்சு எப்போவோ உயில் எழுதி வெச்சுட்டேன். இந்தா உன்ர பங்கு” என அருந்தமிழுக்கென வைத்திருந்த சொத்துப் பத்திரங்களை எடுத்துவந்து அவளிடம் கொடுத்திருந்தார்.

 

“எதுக்குங் ப்பா இப்போ இது” என அருந்தமிழ் புரியாது பார்க்க,

 

“என்ர கடமையை நான் செஞ்சுட்டேன். நாளைக்கு உனக்கு ஒன்னும் செய்யலைன்னு பேச்சு வந்துடக் கூடாது பாரு அதுக்குத்தேன்” என்றார்.

 

“அப்பா!!” தந்தையின் வார்த்தைகள் அவளை அதிர்ச்சியில் தள்ளியிருந்தன.

 

“அப்படி கூப்புடாத. இனி நான் உனக்கு அப்பனும் இல்ல, நீ என்ர மவளுமில்ல” என ஆவேசமாய் வார்த்தைகளை உதிர்க்க, பேச்சற்றுப் பார்த்திருந்தாள்.

 

“என்ர மவ தேவிக்கு எனக்கு பெருமைய தேடித்தர மட்டுந்தேன் தெரியும். நான் தலை குனியுறதோட்டம் எந்த ஒரு காரியத்தையும் பண்ண மாட்டா அவ. நீ என்ர மகளா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு அவமானத்த தேடி தந்து என்ர குடும்ப கௌரவத்த குழிதோண்டி பொதச்சிருக்க மாட்ட” என வலியோடு சொன்னவர் வேகமாய் உள்ளே சென்று ஒரு குடம் தண்ணீரை எடுத்து வந்து தலையில் ஊற்றி தமிழை மொத்தமாய் தலைமுழுகிவிட்டார்.

 

“ஆறுச்சாமி என்ன பண்ணுற” என நாயகி பதறிக்கொண்டு வர,

 

“இனி இவளோட ஆரு ஒட்டு ஒறவு வெச்சுகிட்டாலும் அவங்களையும் நான் ஒதுக்கி வெச்சிருவேன்” என, நாயகி அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.

 

“என்னங் அண்ணா இப்படி சொல்லிப்போட்டீங்” என சாரதா சொல்ல,

 

“கூட்டிட்டு போங்க உங்க மருமகளை. இனி அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்றுவிட்டார் முடிவாய். தமிழ் தாளாத வலியோடு தந்தையைப் பார்க்க, அந்தப் பத்திரங்களை கையில் எடுத்த மாறன்

 

“நாங்க உறவுகளை தான் மதிக்குறோம்ங் மாமா. உயிலை இல்லைங். இது எங்களுக்கு வேண்டாங். உங்க ஆசிர்வாதம் ஒன்னு போதும்ங்” என அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,

 

“இருந்தாலும் நீங்க தமிழுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டாங். சீக்கிரமே எங்களை புரிஞ்சுகிட்டு ஏத்துக்குவீங்கன்னு நம்புறோம். நாங்க வர்றோம்ங் மாமா” என்றுவிட்டு அருந்தமிழை அங்கிருந்து அழைத்துக் கொண்டு தனதில்லம் வந்திருந்தான்.

 

மணமக்களை வாசலில் நிறுத்திவிட்டு அவர்களுக்கு ஆரத்தி கரைத்து எடுத்து வர சாரதா செல்வதற்குள் அவரைத் தடுத்த கந்தசாமியோ,

 

“என்னிக்கு ஆறுச்சாமி இவங்களை முழு மனசோட ஏத்துக்குறாரோ அன்னிக்குத்தேன் இவங்க இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கோணும். அதுவரைக்கும் இவங்களுக்கு இங்க இடம் இல்லை. அப்படி இடம் கொடுத்தா உன்ர மகன் பண்ணுன தப்புக்கு நாமளும் உடந்தயானதோட்டம் ஆகிப்போடும்” என்றுவிட்டார்.

 

தந்தை சொன்னதை ஏற்றுக் கொள்ளமுடியாது,  

 

“எதைய தப்புங்குறீங் ப்பா? உங்க மேல நம்பிக்கை வெச்ச அம்மாவை நீங்க கைவிடாதப்போ என்ர மேல நம்பிக்கை வெச்ச தமிழை நான் கைப்பிடிச்சது தப்புங்களா?” எனக்  கேட்டான் மாறன்.

 

கந்தசாமி உடனே சாரதாவை பார்க்க,

 

“நம்மளும் ஏத்துக்கலைனா கல்யாணம் ஆனா கையோட வேற எங்கதான் போவாங்க” என அவர் வருத்தத்தோடு கேட்க,

 

“சுந்தரம்” என்று குரல் கொடுத்தார் கந்தசாமி. அழைத்த வேகத்தில் சுந்தரம் ஒரு சாவியை எடுத்துவர,

 

“இது பண்ணை வீட்டு சாவி. உன்ர மகனை வாங்கிக்கச் சொல்லு. எல்லா பிரச்சனையும் சரியாகுற வரைக்கும் அங்கயே தங்கிக்கட்டும். இங்க நின்னு வீணா விதண்டாவாதம் பேசமா கெளம்பச் சொல்லு” என சாவியை வாங்கி சாரதாவிடம் கொடுத்தார்.

 

தன் தந்தையையே பார்த்திருந்த மாறன்,

 

“அப்படியே நம்ம மட்ட மில்லு சாவியையும் கொடுங்க” என்றான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“வாழ்க்கைல சுயமா முடிவெடுக்குறவன் எதுக்கு அப்பன் சொத்தை கேக்குறானாமா? சொந்தக்காலுலயே நிக்குறது” என்றார் கந்தசாமியும் மீசையை முறுக்கிக் கொண்டு. மாறன் அவரிடம் எதையும் கலந்தாலோசிக்காது முடிவெடுத்ததில் அவன் மீது கோபம் இருந்தது பெற்றவருக்கு.

 

“மட்டை மில் நான் லோன் வாங்கி கட்டுனதுங். அதுல வர்ற லாபத்தை வெச்சு அந்த லோனையும் நான் தான் அடச்சேன்ங். அது உங்க சொத்துலையோ நம்ம பரம்பரை சொத்துலையோ வராதுங் ப்பா”

 

“மில்லு வேணும்னா நீ கட்டுனதா இருக்கலாம். ஆனா அது இருக்குற எடம் ஆருது?”

 

“அதுக்காக எல்லாம் என்ர மில்லை வேற ஆரு பொறுப்புலையும் விடமுடியாதுங். அந்த எடத்துக்கு மாச வாடைகை எவ்வளவுன்னு சொல்லுங்க இனி மாசம் மாசம் கொடுத்துர்றேன். அப்படியே பண்ணை வீட்டுக்கும் சேர்த்து சொல்லுங்க” என்றான் வைராக்யமாய்.

 

இருவருக்கும் வாக்குவாதம் முற்றுவதற்குள், உள்ளிருந்து மட்டை மில் சாவியை தூக்கி எறிந்தார் சாரதா. மாறன் கேட்ச் பிடிக்க,

 

“அதான் அப்பா சொல்லிட்டாரல்லோ மருமகளை கூட்டிட்டு அப்படியே உன்ர ஜீப்பை எடுத்துட்டு கெளம்பு டா” என்றார். எங்கு கணவர் தன் மகனிடமிருந்து ஜீப்பை வாங்கி வைத்துவிடுவாரோ என்ற பதற்றம் அத்தாய்க்கு.

 

மாறன் தன் தாயை தெய்வமாய் பார்க்க, அருந்தமிழ் அவரை பாவமாய் பார்க்க, அங்கிருந்தபடியே கைகளை உயர்த்தி ஆசிர்வதித்து போங்க போங்க என கைகாட்டினார்.

 

கந்தசாமி மனையாளை முறைத்தவாறு,

 

“நான் அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் ஆறுச்சாமிக்கு தலைகுனிவ ஏற்படுத்திட்டான் உன்ர மவன். இது அவன் மட்டுமே போட்ட திட்டமா இல்ல உன்ர வேலைத்தனமும் இதுல இருக்கா” என்று கேட்க,

 

“அவன் தான் போட்டு இருப்பானோட்டங். என்னைய கேட்டிருந்தா இத விட நல்ல திட்டமா போட்டுக் கொடுத்திருப்பேன்” என்று இயல்பாய் சொல்லிவிட,

 

“என்ன சொன்ன?” என்று கர்ஜணையாய் வந்த கணவரின் குரலில்,

 

“அதுங்க.. கடைசி நேரத்துல தான் இந்தப்பய நம்மள கெளம்பி ஆறுச்சாமி அண்ணன் ஊட்டுக்கு வரச் சொன்னான். உங்ககூட அங்க போனப்பறந்தேன் எனக்கே விஷயம் தெரியும்ங். இந்தப் பய திடுதிப்புன்னு இப்படி பண்ணிபோட்டானே என்ர அங்கமெல்லாம் பதறுது” எனப் புலம்ப,

 

“திடு..திப்புன்னு?”

 

“ஆமாங்க திடுதிப்புனுதேன். கடைசி வரைக்கும் எனக்கு ஒன்னுமே தெரியாது”

 

“ஒன்னுமே தெரியாமத்தேன் தாலிய கையோட கொண்டாந்தையாக்கும்” என, திருதிருத்தார் சாரதா.

 

‘உன் நடிப்பு என்னிடம் செல்லுபடி ஆகாது’ என்பதாய் கந்தசாமி சாரதாவையே பார்க்க,

 

“வீட்டுக்கு வந்த மருமக கையாள ஒரு விளக்கு கூட ஏத்த முடியலை” என துக்கம் தொண்டையை அடைப்பதுபோல் கூறி முந்தானையை வாயால் மூடியபடி உள்ளே சென்றுகொண்டார்.

 

ஜீப்பை கிளப்பி இருந்தான் மாறன். அவர்கள் தலை மறையும் வரை கந்தசாமி உள்ளே செல்லாது அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருப்பதை கவனித்து தான் இருந்தான்.

 

சில நிமிடங்களில் பண்ணை வீட்டை அடைய, அங்கு அவர்களுக்கு முன்னரே சில வேலை ஆட்கள் வந்து வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதுவும் சாரதாவின் ஏற்பாடு தான்.

 

“தம்பி! வீட்டை சுத்தம் பண்ணியாச்சுங். இனி நீங்களும் அம்மணியும் உள்ளார போங்க. எதுனாச்சும் வேணும்னா என்னைய கூப்பிடுங்க” என்றுவிட்டு அவர்கள் செல்ல, தத்தம் நினைவுகளில் இருந்து வெளிவந்தனர் மாறனும் தமிழும்.

 

“வாங்க தமிழ்” என அருந்தமிழை அழைத்து வந்த மாறன்

 

“வலது கால் எடுத்து வெச்சு உள்ளார போங்க” என்றுவிட்டு அவள் பின்னால் நின்றான்.

 

“நீங்களும் வாங்க சேர்ந்தே போலாம்” என அவனை அருகில் அழைக்க, புன்னகையுடன் அவளருகே வந்தவன் அவள் கையோடு கைகோர்த்து சரிபாதியாய் அவ்வில்லத்தில் அடியெடுத்து வைத்தான்.

 

ஓட்டு வீடானாலும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமே வாழும் அளவிலான வீடு அது. பெரிய பெரிய அறைகளும் அதை இணைத்தபடி நடுவில் நடுமுற்றமுமாய் அமைக்கப் பட்டிருந்தது.

 

இன்றைய நாளை ஓட்டுவதற்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வீட்டிலேயே இருந்தது. சிலதை சாரதாவும் அனுப்பி வைத்திருந்தார். வேறு தேவைகள் இல்லாது போக, மாறனுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. இருந்தும் அருந்தமிழை இப்படி சிரமத்திற்கு உள்ளாக்குகிறோமே என்ற எண்ணம் வர, அவளைப் பார்த்தான்.

 

தூணில் சாய்ந்து சோகம் இழையோட அமர்ந்திருந்தாள்.

 

அவளருகே வந்தமர்ந்தவன் அவள் தோளை மென்மையாய் பற்ற, நிமிர்ந்து பார்த்தவள் விழிகளின் வழியே வடிந்து கன்னம் தொட்டது விழிநீர்.

 

“எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாதுங்க தமிழ். கூடிய சீக்கிரமே மாமா உங்களை புரிஞ்சுப்பார்” என்றான் நம்பிக்கையாய்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அருந்தமிழ் அவன் தோளில் சாய்ந்துகொள்ள, அவள் தோளை வளைத்து கைபோட்டு தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான் மாறன்.

 

நேற்று வரை காதலர்களாய் இருந்த இருவரது மனதிலும் கவலைகள் சூழ்ந்திருந்தது, இன்றோ அதன் எண்ணிக்கை பெருகி இருந்தாலும் கணவன் மனைவி என்று ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதால் எதையும் கடந்து வரும் துணிவையும் நம்பிக்கையும் பெற்றிருந்தனர்.

 

செந்தூர பந்தம் விலகிச் சென்ற சொந்த பந்தங்களை பிணைக்குமா?

 

மாறனின் கைபேசி இசைக்க, அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் சாரதாவோ,

 

“மருமக என்ன பண்ணுறா” என்றார் எடுத்த எடுப்பில்.

 

“என்ர தோள்மேல சாஞ்சு உக்காந்திருக்காங்க” என மாறன் சிறு சிரிப்போடு சொல்ல, சட்டென விலகினாள் அருந்தமிழ்.

 

“அட பொறவு சாஞ்சுக்கலாம் மொதல்ல வெளக்கேத்த சொல்லுடா. ஆசாரத்து செல்ப்ல சாமி படமெல்லாம் இருக்கும் பாரு. சாமி கும்புடுங்க ரெண்டு பேரும். பாலு பழமெல்லாம் கொடுத்து விட்டுருக்கேன் மாத்தி மாத்தி நீங்க கொடுத்துக்கோங்க. இந்த சடங்கெல்லாம் நான் கூட இருந்து பண்ணோனும். உங்கப்பா வேற இன்னிக்குனு பாத்து ரொம்ப முறுக்கிக்கிட்டு திரியுறாரு” என்று புலம்ப,

 

“நீங்க வருத்தப்படாதீங் ம்மா. நான் பாத்துக்குறேன்” என்றான்.

 

“நீ பாக்குற அழகுதேன் எனக்கு தெரியுமே. இத்தனை வருசமா, தூரமா நின்னே மருமகள பாத்ததோட்டம் பாக்காம இனியாச்சு பக்கத்துல வெச்சு பாருடா” என, அருந்தமிழ் மாறனை ஆச்சர்யமாய் பார்த்தாள். அவனோ,

 

“அப்பா உங்களை பாத்துக்கறதை விட, ஒரு படி மேலையே போய் நான் தமிழை பாத்துக்குறேன். போதுமாங் ம்மா” என்றான் சின்ன சிரிப்புடன்.

 

உடன் சேர்ந்து சிரித்த சாரதா பின் பொறுப்பாய் அவனுக்கு அறிவுரைகள் வழங்கலானார்.

 

“தமிழு உன்னைய நம்பி வந்தவ கண்ணு. இனி நீதேன் கவனமா பாத்துக்கோணும். என்ர வளர்ப்பு எப்படின்னு அவ சந்தோசமா வாழுறதை பொறுத்துதேன் இருக்குது மாறா” என,

 

தமிழை ஏறிட்ட மாறன்,

 

“வார்த்தையால கூட அவங்களை மரியாதை குறைவா என்ரனால நடத்த முடியாதுங் ம்மா. உங்களை மாற அவங்களுக்கும் சரிசமமான ஒரு இடத்தை கொடுத்திருக்கேன்” என்று சொல்லி தாயின் மனதையும் தாரத்தின் மனதையும் குளிர்வித்தான். அவனது ஒற்றை வார்த்தை கூறியது அவன் தமிழை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்று.

 

முன்பொருநாள் தன்னை ஒருமையில் அழைக்குமாறு மாறனிடம் கேட்டபோது,

 

“நெருக்கமானவங்களை கூப்பிடுறதோட்டம் எல்லாரையும் கூப்பிட முடியாதில்லைங்க” என்று அவன் கூறிய வார்த்தைகள் நினைவு வர, அந்த நெருக்கம் என்னவென்று இப்போது புரிய, தமிழின் அகம் நிறைந்து போனது.

 

“அப்பறம் நம்ம குடும்ப ஜோசியரை கேட்டுட்டேன், இன்னிக்கே நாள் நல்லா இருக்காமா. நேரம் குறிச்சு கொடுத்திருக்காரு. எண்ணி பத்தே மாசத்துல எனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ கொடுத்துறோனும்” என்று சாரதா கூற, தமிழ் சங்கோஜமாய் அமர்ந்திருப்பது கண்டு

 

[the_ad id=”6605″]

 

 

 

“அம்மா நான் அப்பறம் பேசுறேன்ங்” என அழைப்பை துண்டித்துக் கொண்டான் மாறன். தமிழ் அப்போதும் அவ்வாறே அமர்ந்திருக்க,

 

“தமிழ்!”

 

“ஹ்ம்ம்”

 

“வந்து விளக்கேத்துங்க” என, தலையசைத்து எழுந்து வந்தாள்.

 

இருவரும் தெய்வத்தின் முன்பு கண்மூடி நின்று வேண்டிக்கொள்ள,

 

‘சீக்கிரமே எல்லாம் சரியாகிடனும். எங்களை ரெண்டு குடும்பத்தினரும் மனதார ஏத்துக்கணும். மாறன் என்னிக்கும் சந்தோசமா இருக்கணும்’ என தமிழ் வேண்டிக்கொள்ள,

 

‘தமிழ் என்னிக்கும் சந்தோசமா இருக்கணும். ரெண்டு குடும்பத்தினரும் சீக்கிரமே எங்களை ஏத்துக்கணும்’ என அதையே வேண்டினான் மாறன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!