Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 12

*12*

பெரிதுமல்லாத சிறிதுமல்லாத அந்த திருமண மண்டபம் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. காலை நேர முகூர்த்தம் என்பதால் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். ஐயர் சொல்பவற்றை கவனம் சிதறாது செய்துகொண்டிருந்தான் முகிலன். 

‘பொண்ணு வீட்ல பெருசா ஜனக்கட்டை காணுமே?’ என்ற முணுமுணுப்பு அவனைச் சுற்றிக் கேட்டது. 

மணவறையில் முகிலன் அத்தைகளும் அவனது சித்தப்பாக்களும் நிற்க, மணமகள் புறம் ரிஷியும் அமுதனும் நின்றனர். பிரபாவும் கவிதாவும் சற்று தள்ளி மேடையிலேயே ஓரமாக அமர்ந்திருக்க, அமுதன் பெற்றோர் முதல் வரிசையை எடுத்துக்கொண்டனர்.



Advertisement

‘பொண்ணுக்கு அப்பா இல்லை. அம்மா தான் வளத்திருக்காங்க.’ என்று தொடங்கி அவள் வயது, அவள் தங்கைகள் திருமணம், அவள் குடும்பத்தை தனித்து வழிநடத்திய பாங்கு என்று எல்லாம் அலசப்பட்டது.

‘ஏன் அண்ணி யாருமில்லாத வீட்ல பொண்ணு எடுத்திருக்கீங்க? நம்ம முகிலுக்கு நீ, நான்னு அங்காளி பங்காளினு சனக்கட்டோட இருக்கிற இடத்திலேந்து போட்டி போட்டு பொண்ணு குடுக்க தயாரா இருப்பாங்களே.’ என்று வம்பு பேசவென தூரத்து உறவினர்கள் மாரியம்மாளிடம் வந்தார்கள். 

திருமண பரபரப்பிலும், ‘அப்படி யாரையும் இந்த அஞ்சு வருஷத்துல நீ கூட்டிட்டு வரலையே.’ என்று கந்தசாமி காலை வாரவும் தவறவில்லை என்றாலும் மாரியம்மாள் மனதில் அப்பேச்சுக்கள் அச்சாய் ஏறியது. 

Advertisement

‘மூணும் பொம்பளை பிள்ளையா போனாலும் மிச்ச ரெண்டு பொண்ணையும் குடும்பமா ஆக்குனவங்க ஏன் மூத்த பொண்ணை மட்டும் இவ்வளவு நாள் கூடவே வச்சிருந்தாங்களாம்? நல்லா சம்பாரிக்குற பொண்ணு இதுதானோ? கைக்கொள்ளா காசு பாத்த பொண்ணு கைக்குள்ள நிக்காது. பார்த்து சூதானமா இருந்துக்க மாரி.’ என்று வேண்டாத அறிவுரைகள் வேறு போகிற போக்கில். போதாததற்கு அரசல் புரசல் பேச்சுக்களில் அனைத்தையும் தேடித்தேடி செவி வழி ஏற்றிக்கொண்டார் மாரியம்மாள்.   

Advertisement

திருமண உடை கொடுத்து முகிலனை வேந்தனுடன் அனுப்பிவைத்த சில நொடிகளில் மணமகன் அறைக்கு வந்தார் மாரியம்மாள்.

“இந்தாடா எல்லாம் தான் இஷ்டத்துக்கு இருக்கணும்னு நின்னா. ஏதோ சின்ன பொண்ணுன்னு நானும் விட்டுட்டேன். அதுக்காக எல்லாத்துலையும் சாதிச்சிக்கலாம்னு நினைச்சா நல்லாவா இருக்கு? நம்ம சனங்க முன்னாடி மானம் மரியாதை என்ன ஆகுறது?” என்று குதித்தவரை புரியாது பார்த்தான் முகிலன். என்னவாகிற்று என்று கேட்கும் சமயம் உள்ளே வந்தார் கந்தசாமி.

“மணமேடையில் அப்பா அம்மா ஸ்தானத்துல உள்ளவங்களை நிக்க சொல்லுங்கன்னு சொன்னதுக்கு யாருமில்லைன்னுட்டாங்க. சரி நம்ம ஆளுங்க யாரையும் நிக்க வைக்கலாம்னு பாத்தா அவ அம்மா தான் நிக்கனும்னு சொல்றா.” என்று மாரி விஷயத்தை சொல்ல முகிலன் தந்தையைப் பார்த்தான்.

Advertisement

“நானும் அம்மாவும் உனக்கு நிக்கும் போது அந்த பக்கமும் தம்பதி சகிதமா இருந்தாதான நல்லாயிருக்கும். ஒரு நல்லது தொடங்கும் போது ஒத்தையில இருக்குறவங்களை நிப்பாட்டுனா எப்படி? நீ சொல்லு முகிலு.” என்றார் கந்தசாமியும்.

ஓரளவு விஷயம் புரிந்ததும் அலைபேசியில் அழைத்தான். அவள் எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ, “அத்தை மாமா சொல்றது புரியுது அதுக்காக பழக்கமே இல்லாத ஒருத்தவங்களை எப்படி என்னோட பெத்தவங்களா பாக்க முடியும்? தன்னோட ரத்தத்தையும் சதையும் கொடுத்து என்னை வளத்த அம்மாவுக்கு அது அநியாயம் செய்யுற மாதிரி ஆகிடாதாங்க?” அவள் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் குரலில் இல்லை. அது கலங்கி தவித்திருந்தது.

“அப்பான்னு ஒருத்தர் இருந்தாரு அவரே எங்களை கடமையா தான் நினைச்சாரு அவர் கூடப்பிறந்தவங்கனு யாரும் இல்லை. அம்மாவுக்கு அண்ணன் இருக்காங்க, தாய்மாமா நின்னா முறையா இருக்காதுன்னு சொல்லிட்டாங்க. அம்மாவோட தூரத்து சொந்தத்துல அக்கா ஒருத்தவங்க இருக்காங்க அவங்க எல்லாம் அவ்ளோ பழக்கம் கூட இல்லை, கல்யாணத்துக்கு வரல. இப்போ அந்த இடத்துல நான் வேற யாரை கொண்டுவந்து நிப்பாட்டுவேன்? யாரை நிப்பாட்டுனாலும் அது அம்மாவுக்கு ஈடாகுமா? அம்மா நான் ஒதுங்கிக்கிறேன்னு சொல்றாங்க. அப்படி ஒதுங்க அவங்க யாரோவா?” மூக்குறிந்து கொண்டே அவள் பேசியதிலேயே அழுகையை அடக்கிக்கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது. மனம் பிசைய திரும்பி தன் பெற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் இவனைத் தான் கவனித்துக்கொண்டிருந்தனர். 

தொண்டையை செறுமியவன், “உன் தங்கச்சி கல்யாணத்துல என்ன பண்ணீங்க?”

“சந்தியாவுக்கும் மாமியார் மட்டும்தானே அவங்க எதுவும் சொல்லல. அம்மாவும் அவங்களுமே எல்லாம் செஞ்சாங்க. வந்தனா வீட்ல இப்படினு சொன்னோம் ஒத்துக்கிட்டாங்க, நம்ம கல்யாணத்துலேயும் அப்படியே இருக்கும்னு நினைச்சிட்டேன். இப்போ இப்படி சொல்றாங்க.” என்றவள் இன்னும் மூக்கை உறிஞ்சினாள்.

அவள் அழுவதை சகிக்க முடியாமல், “நான் பேசுறேன். அழாம இரு.” என்று அவளிடம் பேசமுடியாமல் பெற்றவர்களிடமே சரணடைந்தான்.

“அவ தங்கச்சிகளுக்கும் அவங்க அம்மா தான் நின்னாங்களாம். நிக்கட்டுமே அவங்களே.” 

“அவ தங்கச்சி வீட்டாளுக ஒத்துக்கிட்டாங்கனு நாங்களும் ஒத்துக்கணுமா? இது நல்லா இருக்கே கதை.” என்ற மாரி, “அவ அம்மா நின்னதுனாலதான் கடைசி பொண்ணு இப்படி குழந்தை தங்காம நிக்குதா இருக்கும்.” என்றும் பேச, அந்த பேச்சு ஒப்பவில்லை முகிலனுக்கு.

“ஏதாவது சொல்லணும்னு சொல்லாதமா. கவிதா அத்தை பையனை கட்டியிருக்குற அவ தங்கச்சி நல்லா இல்லையா இப்போ.” 

“முறைனு ஒன்னு இருக்குல்ல. இது சரியா வரும்னு தோணல முகிலு. நீ பேசி சமாதானப்படுத்து.” கந்தசாமியும் மாரியை ஒத்துதான் பேசினார்.

“என்னப்பா நீயும்… அவ பெத்தவங்க நிக்க வேண்டிய இடத்துல சும்மா முறைக்குனு நம்ம சொந்தக்காரங்களை நிறுத்துனா எப்படி சரியா இருக்கும்? இதெல்லாம் நீ முன்னாடியே சொல்லியிருந்தா என்ன ஏதுனு பேசி இருந்திருக்கலாம். இப்படி கடைசி நேரத்துல கழுத்தை புடிக்குற மாதிரி… அவளையும் அழ வச்சி.. ப்ச்… வேற என்ன பண்ணலாம்னு சொல்லு.”

“ரோட்டுல போறவங்களை கொண்டுவந்து மணமேடையில நிறுத்தப்போற மாதிரி பேசுற? உன் பெரியத்தை மாமாவை தான் பெத்தவங்க ஸ்தானத்துல நிக்க வைக்கலாம்னு சொன்னேன். அவங்களை யாரோன்னு சொல்லுதா மருமக பொண்ணு?” என்றார் கந்தசாமி. 

“என்னது அத்தையையா?” என்று கேட்டவனுக்குமே முறை வைத்து அத்தையின் மகளாய் மலரை உருவகிக்கும் முன் சடுதியில் வள்ளி நினைவு வந்து போனது. பலமாக தலையை உலுக்கிக்கொண்டான், 

“ப்ச்… எனக்கே இது ஒப்பல.” என்று சொல்ல, வேந்தன் முகம் சுருக்கினான். 

“நம்ம வீட்டு பொண்ணை விட்டுட்டு வேற யாரையும் மூணாவது ஆளை நிக்க வைக்க முடியுமா?” என்று கந்தசாமி சொல்ல, “எனக்கொரு அண்ணனோ தம்பியோ இருந்தா நிக்க வச்சிருப்பேன். கூடப்பிறந்தவ தங்கச்சியா போய்ட்டாளே. இப்போ அவளும் இல்லை.” மாரியம்மாளுக்கு அவர் கவலை. 

“உங்களுக்கே நம்ம குடும்பத்தை தாண்டி வேற யாரையும் நிறுத்த விருப்பம் இல்லாதப்போ மலரால எப்படி முடியும் ப்பா?” முகிலன் வாதாட எங்கு கணவர் சம்மதித்து விடுவாரோ என்று பயந்த மாரியம்மாள்,

“அவங்க அம்மா வந்து நின்னா நான் கீழ இறங்கிடுவேன்.” என்றார் முறுக்கிக்கொண்டு. புடவை, நகை, வேலை என்று அனைத்திலும் அவள் விருப்பத்திற்கு நடத்திக்கொள்ள, இதிலாவது தன் அதிகாரத்தை நிலைநாட்டியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு. 

தலையை பிடித்துவிட்டான் முகிலன். மகிழ்வாக இருக்க வேண்டிய நேரத்தில் என்னதிது?

“அவங்க தங்கச்சியை நிக்க சொல்லலாமா? கவிதா பெரியம்மா பையன் இருக்காங்களே…அவங்கதான முன்ன நின்னு எல்லாம் பண்றாங்க.” என்று வேந்தன் யோசனை கொடுத்தான்.

“முறை மாறிடுமே.” என்றார் கந்தசாமி யோசனையாய். 

முகிலன் அம்மாவை பார்க்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. வேந்தன் சென்று திறக்க, நேரமாகிறது என்று அவன் அம்மா வந்து நின்றார். நிலைமை அறிந்து பின்னோடே வந்தார் கவிதா.

“நான் ரெண்டு பக்கத்துக்கும் சொந்தம். பொதுவா இருக்கேன். என் சார்புல என் பையனும் மருமகனும் நிக்கலாம்ல அண்ணா. அண்ணி உங்களுக்கு எதுவும் சங்கடம் இல்லையே?” என்று வேந்தன் சொன்ன யோசனையை முன்மொழிந்தார் அவரும்.

“இல்லை அதெப்படி சரியா வரும்?”

“இப்போ சந்தியா என் வீட்டு பொண்ணு, குழலி தங்கச்சியா பாக்காதீங்க. நானும் ஒருவகையில் முகிலுக்கு அத்தை தானே அப்போ நான் செய்யலாம்ல? என்னால முடியாததால என் பையனை நிறுத்துறேன். குழலிக்கும் அவ தங்கச்சி நின்னா கசக்கவா போகுது? ரெண்டு பக்கமும் சங்கடம் இல்லாம முடிஞ்சிடும். நிச்சயத்துலேயும் எல்லாம் சேர்ந்துதான தட்டு மாத்திக்கிட்டோம்.” என்றதை வேறு வழியின்றி அரைமனதாக ஏற்றுக்கொண்டனர் முகிலன் வீட்டினில். 

‘வரன் கொண்டு வரவும் நேத்தி வந்த கவிதா முக்கியமா போயிட்டால்ல உங்களுக்கு?’ என்று கந்தசாமியின் தங்கைகள் கொஞ்சம் முறுக்கினார்கள், சமாதானப்படுத்த நேரமில்லை அவருக்கு. மணவறையில் இவர்களை போலவே சந்தியாவுக்கு ரிஷிக்கும் மாலையைப் போட்டு முறையாய் அமர்த்திவிட்டார்கள். 

எல்லாம் சரியென்றதும் ஆசுவாச மூச்சு விட்டவன் அவளுக்கு அழைத்து பேசலாம் என்று நினைக்கும் பொழுதே அவனை மேடைக்கு அழைத்துவிட்டார்கள். முகத்தையும் சிகையையும் சீர் செய்துகொண்டு வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் மணவறை சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் குழலி வந்தமர்வது தெரிந்து திரும்பிப் பார்க்க, கண்ணெல்லாம் சிவந்து ஒப்பனை கொஞ்சம் கலைந்து முகம் சோர்வடைந்திருந்தது.

“எல்லாம் ஓகே ஆகிடுச்சுல கொஞ்சம் சிரிக்கலாமே?” லேசாக அவள் புறம் சரிந்து பிறர் கவனத்தை ஈர்க்காத வண்ணம் குழலியிடம் பேச, சின்ன சிரிப்புடன் தலையசைத்தாள் அவள்.

அவள் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை என்று புரிந்து, “மலர்.” என்று அழைத்து என்ன பேசியிருப்பானோ அவனை பேசவிடாமல் அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் வரிசை கட்டி நின்றது. 

சுபவேளையில் அவன் கையில் மங்களநாண் கொடுக்கப்பட, அதை அழுந்தப்பற்றியபடி பக்கவாட்டில் இருந்தவளைப் பார்த்தான். கண்ணில் ஏறியிருந்த சிவப்பு குறைந்து ஒளிர்வு வந்திருந்தது. மணப்பெண்ணிற்கே உரித்தான பொலிவும் மகிழ்வும் அவள் முகத்தை நிறைக்க, நிறைந்த மனதுடன் மூன்று முடிச்சிட்டு தன்னை அவளின் சரிபாதியாக்கிக் கொண்டான். குங்குமம் நீட்டப்பட கொஞ்சமாய் தன் மோதிர விரலில் எடுத்தவன் தாலியில் இட்டு பின் லேசாக சரிந்து அவள் கழுத்தை சுற்ற, நெற்றிச்சுட்டியை விலக்க வந்த வந்தனாவை தடுத்து தானே வகுட்டிலிருந்ததை நகர்த்தி அழுத்தமாக வைத்துவிட்டான். அவன் கொடுத்த அழுத்தத்தில் லேசாக நிமிர்ந்து பார்த்தவள் அவன் தோளில் சாய்ந்திருப்பது போன்ற தோற்றம் கொடுக்க, அழகான புகைப்படமாகியது. 

“வாழ்த்துக்கள் மிஸர்ஸ். அகன்.” அவன் வாழ்த்த, உரியவனின் அகம் சேர்ந்துவிட்ட திருப்தியில் நாணி மின்னியது அவள் முகம். பலவர்ண பூக்களுக்கு இடையே அட்சதை அவர்களை நிறைக்க, உள்ளத்தின் உந்தலுதலில் அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான். 

“பப்ளிக் பப்ளிக்.” என்று வந்தனா குனிந்து கிண்டலடிக்கவும் சட்டென்று அவளிலிருந்து கையை எடுத்து நேராக அமர்ந்து கொண்டான். இதழ் கொள்ளா புன்னகையுடன் குழலியும் நிமிர்ந்து அமர்ந்தாள். அவர்களை அப்படி பார்க்கவும் அவள் வீட்டினருக்கு நெகிழ்ந்துவிட்டது. நடக்கவே நடக்காதோ என்று ஐயம் கொண்டிருந்த ஒன்று இன்று நிறைவாய் நடந்துவிட, அவர்கள் முகமும் பூரித்துக் கிடந்தது. தங்கள் குடும்பம் நிறைவாகிவிட்ட திருப்தியில் குழலியைப் போலவே உணர்ச்சிவசப்பட்டனர். 

தன் மகனின் மகிழ்வை கண்கூட கண்ட மாரியம்மாளின் பார்வை கூட மருமகளை கள்ள கபடமின்றி நிறைவாய் வாழ்த்தியது. அடுத்தடுத்து நடக்கவேண்டிய சம்பிரதாயங்களும் இடையூறின்றி நடந்தேறியது.

அக்னியை வலம் வந்து, அருந்ததி பார்த்து, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து என எங்கும் கோர்த்த கையை விடவில்லை அவன். அவனுக்கு சளைக்காதவளாய் விரல்களோடு விரல் பிணைத்துக்கொண்டாள் குழலியும். மெட்டி அணிவிக்கும் சமயம் புடவை மறைத்த அவள் காலை அம்மியில் தூக்கி வைக்கையில் தன் பெருவிரல் கொண்டு லேசாக கோடிழுத்து நிமிண்டிவிட்டான். அதிர்ந்தவள் படபடப்பில் துள்ளிக்குதிக்கா வண்ணம் அழுத்தமாக அவள் கால் பற்றி அம்மியில் வைத்து வலிக்காது மெட்டியை விரலில் நுழைத்தான் முகிலன். ஒருகாலில் போட்டுவிட்டு மறுகாலை அவன் தூக்குகையில் மூச்சை பிடித்து நின்றாள் குழலி. எங்கு மீண்டும் அவன் சீண்டிவிட்டால் தான் பதறி காட்டிக்கொடுத்துவிடுவோமோ என்ற ஐயம் அவளை விறைப்பாக்க, சமத்துப் பையனாக மெட்டி அணிவித்து நிமிர்ந்து அவளைப்பார்த்து கண்சிமிட்டினான்.

“பயந்தே போயிட்டேன்.” அவன் தன்னருகில் நிற்கவும் ஆசுவாசமாக மூச்சுவிட்டுக்கொண்டாள் குழலி. அதற்கு மேல் அவளிடம் பேசவோ அவளை சீண்டவோ நேரமின்றி விருந்தினர்கள் பரிசு கொடுக்க மேடை ஏறிவிட்டனர். ஒவ்வொருவராய் பரிசு கொடுத்து புகைப்படம் எடுக்க என நேரம் இறக்கை கட்டி பறந்தது. புகைப்படங்களுக்கு புன்னகைத்து புன்னகைத்து இதழ்கள் வலிக்கும் போலானது. இடையிடையே மணமக்கள் வயிறை வாடவிடாமல் குளிர்பானம் கொடுத்து பார்த்துக்கொண்டாள் வந்தனா. சந்தியா மகள் ஆத்யா குறுக்கும் நெடுக்கும் சுற்ற, அவளை பிடித்திழுத்து தூக்கிக்கொண்டான் முகிலன். பதினைந்து தினங்களுக்கு முன் அவனிடம் செல்லத் தயங்கியது போலல்லாமல் அவன் கையில் ஒய்யாரமாய் அமர்ந்துகொண்டு குழலி மாலையில் இருந்த பூவை பிய்க்க முயன்று கொண்டிருந்தாள். இருவரும் அவளை தடுக்க, அவள் பிடிவாதம் பிடிக்க என்று நொடிகள் கழிய மேடையேறியவளை கவனிக்கவில்லை இருவரும். 

“குளிலி இந்த பூ தான் வேணும். நானும் இதுமாதிரி போடணும்.” என்று அவள் மாலையை இழுக்க சிரிப்பு வந்தது முகிலனுக்கு. 

“உன் பெரியம்மா பேரை அழகா சொல்றியே. என் பேர் தெரியுமா உனக்கு?” 

“ஹான் பெரியப்பா.” என்ற ஆத்யாவின் கவனம் மொத்தமும் இப்போது அவன் மாலைக்கு இடம்பெயர்ந்தது.

“அதான் பெரியப்பா பேர் என்ன?” 

“பெரியப்பா தான் உங்க பேருனு நினைச்சிட்டு இருக்கா.” என்று சொல்லி சிரித்தாள் குழலி. போலியாக அவளை முறைத்தவன், “நீ ஒழுங்கா என் பேர் சொல்லிக்கொடுக்காம இருந்திருக்க அதான் அவளுக்கு தெரியல. குட்டி அகன் சொல்லுங்க.” மனைவியிடம் துவங்கி பிள்ளையிடம் முடிக்க, அவன் கையை லேசாக கிள்ளிவைத்து முறைத்தாள் குழலி.

அவன் புரியாமல் பார்க்க, “பேரை ஒழுங்கா சொல்லிக்குடுங்க.”  

“சரியாதான சொல்றேன். அவ பெரியம்மாவுக்கு நான் அகன் தான?” அவன் குறும்பாக கண்சிமிட்ட, நாணம் சிந்தி மிளிர்ந்தது அவள் வதனம்.

“மலர்.”

“ச்சு சும்மான்னு இருக்கணும்.” தன்னை மீறிக்கொண்டு வரும் வெட்கச்சிரிப்பையும் மினுமினுப்பையும் கட்டுப்படுத்தவென திரும்பியவள் தங்கள் அருகில் நிற்பவளைப் பார்த்து அறிமுகப்புன்னகை சிந்தினாள். முகிலன் சொந்தமாய் இருக்கும் என்று அவன் கையை பிடித்து அவன் கவனத்தை தன்புறம் திருப்ப, அங்கு நின்றவளை பார்த்து அவன் முகம் உறைந்து இறுகியது. 

“வாழ்த்துக்கள் அத்தான்.” என்று அதே போன்று இறுக்கமான வாழ்த்தை கொடுத்து குழலி அருகில் புகைப்படத்திற்கு நின்றாள் வள்ளி. அப்போதுதான் அவளை கவனித்து வேகமாக மேடையேறினான் வேந்தன். 

“முகத்தை சாதாரணமா வை அத்தான்.” முகிலன் முதுகில் லேசான அழுத்தம் கொடுத்து தங்கையிடம் சென்றவன் குழலிக்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“என் தங்கச்சி. பக்கத்து ஊர்ல கட்டிக்கொடுத்திருக்கோம். வேலை இருக்குனு காலையிலேயே வந்துட்டு போயிட்டாரு அவ ஹஸ்பண்ட்.” 

முகிலனுக்கு கண்காட்டி தங்கை அருகில் நின்றுகொண்டவன் புகைப்படம் எடுத்ததும் வள்ளியை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான். ஆத்யா இருக்க மாட்டேன் என்று கீழிறங்கி ஓடிவிட, கூட்டம் குறைந்து இவர்கள் அமர நேரம் கிடைத்தது.

“ஏன் திடீர்னு டல்லாகிட்டீங்க?” நன்றாக பேசி சிரித்துக்கொண்டிருந்தவன் திடுமென அமைதியாகிவிட, அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை.  

“அப்படியெல்லாம் இல்லை.” என்று அவன் மறுத்தாலும் அவன் முகமாறுதல் அவளுள் யோசனையை விதைத்தது. 

“பசிக்குதா?” என்ற கேள்விக்கு இல்லையென்ற தலையசைப்பு மட்டுமே.

“வேறெதுவும்?”

“ஒண்ணுமில்லை மலர்.” என்று அவன் சமாளிக்கும் நேரம் கந்தசாமி வந்து உணவுண்ண அழைத்துச் சென்றார். 

அங்கு ஒருவருக்கு ஒருவர் ஊட்டச்சொல்லி புகைப்படம் எடுத்து கேலி பேசவும் அவன் இயல்புக்கு திரும்பியது போலிருக்க, பசி களைப்பு என்று நினைத்துக்கொண்டாள் குழலி.

நல்ல நேரத்தில் மண்டபத்திலிருந்து கிளம்பி முகிலன் வீட்டிற்கு வந்தனர். வீடு சிறியதென்பதால் வெளியே இருந்த இடத்தில் பந்தல் போட்டு நாற்காலிகள் அடுக்கியிருந்தனர். மணமக்களுடன் குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் மட்டும் உள்ளே செல்ல மீதமானோர் வெளியே அமர்ந்துகொண்டனர்.

விளக்கேற்றி பால் பழம் உண்டு ஆசீர்வாதம் வாங்குவது என்று சாங்கியங்கள் முடிய, அவளை ஓய்வெடுக்க அறைக்கு அனுப்பினர். சந்தியா மட்டும் குழந்தையுடன் துணைக்கு இருந்தாள். சென்னைக்கு அவன் மாற்றலாகி வந்ததும் மெத்தை, பீரோ தேவையான இதர சாமான்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று கந்தசாமி சொல்லிவிட சீர்வரிசை என்று எதுவும் இறங்கவில்லை. ஆனால் குழலியின் நகைகளை தட்டில் அடுக்கி சீராய் அவன் பெற்றோரிடம் கொடுத்தனர். 

பிரபா நகை பெட்டிகளைப் பிரித்து மாரியம்மாளிடம் காண்பிக்க, “பவுனு போடுறது இருக்கட்டும் பொண்ணை இங்கேயே கொண்டார்ற வழியைப் பாருங்க.” என்றுவிட்டார் அவர். குழலி அதிர்ந்து பார்க்க,

“எங்க போனாலும் கடைசியில இங்கதான வரப்போறாங்க அண்ணி. இதுதான அவங்க வீடு.” என்று முடித்துக்கொண்டார் பிரபா. மகள் தான் அதிருப்தியாய் பார்த்தாள். முகிலன் சமாதானமாய் கண்மூடித் திறக்க, முகத்தை மாற்றிக்கொண்டாள் குழலி. 

“ஒரு மாதிரி இருக்கு. இதுவரைக்கும் கூடவே இருந்துட்டா அக்கா.” வெளியே இருந்த அமுதனிடம் கண்ணில் நீர் கட்ட வருந்திக் கொண்டிருந்தாள் வந்தனா. உள்ளே சந்தியாவும் அதே நிலையில் இருந்தாள், என்ன காட்டிக்கொள்ளவில்லை. மாலை போல அவர்கள் ஊருக்கு கிளம்பும் போது என்ன முயன்றும் கண்ணீரை அடக்க முடியாமல் சகோதரிகள் கட்டிக்கொண்டு அழுதுவிட்டனர். பிரபா தைரியமாக காட்டிக்கொண்டார். மற்றவர்களை விட அவருக்குத்தான் கையொடிந்தது போல் தவித்துப்போனார். இரவு தங்கச் சொன்னார்கள் தான் ஊரில் வரவேற்புக்கான வேலைகள் மிச்சமிருக்க, மறுவீட்டுக்கு அழைப்பு விடுத்து கிளம்பினர்.

“மூணு நாள்ல அங்க போறோம்ல. அழாம வழியனுப்பி வை அவங்களை.” என்ற முகிலனின் பேச்சிற்கு செவி சாய்த்து கண்ணீரை கட்டுப்படுத்தினாலும் துவண்ட மனது தெளியவில்லை.

இரவு உணவு முடித்து அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் அனுப்பிவைத்தார்கள். புதுமணக்கலையுடன் உள்ளே நுழைந்த முகிலன் ஆசையும் ஆவலுமாய் மனைவியை நெருங்கி அவள் கன்னம் பற்றி நிமிர்த்த, கண்ணெல்லாம் சிவந்து கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

பெருவிரல் கொண்டு அவள் கண்ணோரம் துடைத்தவன் வார்த்தைக்கு வலித்துவிடுமோ என்று மென்மையை தத்தெடுத்தான், “என்ன மலர்?”

“ஒரு மாதிரி தொண்டையை அடைக்குது.” என்று சொல்லும் போதே அவளிடம் வார்த்தை திக்கியது.

“ஸ்ஸ்… என்னாச்சு?” ஆறுதலாய் அவளை தன் மீது சாய்த்துக்கொள்ள,

“இதுவரைக்கும் அம்மாவை விட்டு இருந்ததே இல்லை.” மூக்குறிந்து கண்ணீரை உள்ளிழுக்கும் போதே அது வெளிவந்து அவன் சட்டையை நனைத்தது.

“மூணு நாள்ல எல்லாரையும் பாக்க போற. கண் மூடி கண் திறக்குறதுக்குள்ள ஓடிடும். இப்படி அழுதுட்டு இருந்தா அவங்களுக்கு மட்டும் நிம்மதியா இருக்குமா என்ன?”

“சந்தியா, வந்தனா கல்யாணம் ஆகி போனப்போ கூட இப்படியெல்லாம் இல்லை.” என்று இன்னும் தேம்பினாள்.

“இட்ஸ் ஓகே மலர்.” 

“எல்லாம் புரியுது. தைரியமா இருக்கணும்னு தான் நினைக்குறேன். ஆனா என்னை தனியா விட்டுட்டு எல்லாரும் போயிட்ட மாதிரி இருக்கு.” அவள் முதிர்ச்சி எங்கோ சென்று ஒளிந்துகொள்ள, தாயை பிரிந்த சேயாய் சிறுபிள்ளையானாள்.

“நான் இருக்கேன்ல.”

“கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் வீட்டோட மாப்பிள்ளையை தான் பண்ணிப்பேன்னு சொல்லிட்டே இருப்பேன். அம்மாவை விட்டு எங்க போயிட போறோம்னு கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். இந்த மாதிரி சிட்ஷுவேஷன் வரும்னு எதிர்பாக்கல நான். ஐ அம் நாட் ப்ரீபர்ட்.” என்றவளை அதிர்ந்து தன்னிலிருந்து பிரித்தான் முகிலன்.

“வீட்டோட மாப்பிள்ளையா?”

கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு அவனை பார்த்தவள், “ம்ம்… முன்னாடி அப்படித்தான் பாத்துட்டு இருந்தோம். வர்ற எல்லாரும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அதனாலதான் நீங்க கிடைச்சிருக்கீங்க.” என்றதில் அவன் மனம் கொஞ்சம் சமன்பட்டது. 

ஆனால் வேலை, ஊர்மாற்றல் என்ற நிதர்சனம் மீண்டும் பொட்டில் அறைய, ஆசையும் காதலும் பின்னுக்கு சென்றுவிட்டது. முடிவெடுக்காமல் தள்ளிப்போட்ட விஷயமே இன்று அவனை முன்னேற விடாமல் முரண்டியது. சட்டென மனதின் வானிலை மாறிவிட, விலகல் தொனித்தது அவனிடத்தில்.

“தூங்கலாமா?” மனம் சஞ்சலம் கொண்டுவிட்ட பின் எங்கனம் காதல் செய்ய…

இப்போது அதிர்வது அவள் முறை. காலையிலிருந்து இன்முகமாய் அவளை சீண்டி, நெருங்கி, உரிமையாய் கைப்பற்றியவன் இப்படி தள்ளி நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. தான் அழுது அவனையும் குழப்பிவிட்டோமோ என்ற சஞ்சலத்துடன் அமைதியாக சென்று விரித்திருந்த பாயில் படுத்துவிட்டாள். விளக்கணைத்து வந்தவனும் சற்று இடைவெளி விட்டு படுக்க, அவன் எதுவும் பேசுவானா என்று காத்திருந்தாள். ம்கூம் நேரம் சென்றதே ஒழிய அவனிடமிருந்து எதிர்வினை எதுவும் வராமல் போக, தனக்குள்ளேயே பலவாறு யோசித்து போராடி அவன் புறம் திரும்பினாள். இவளின் அசைவில் அவனும் நெருங்கி வந்தவன் அவள் நெற்றியில் பட்டும்படாமல் இதழொற்றி, “டிஸ்டர்பா இருக்குறப்போ எதுவும் வேணாம். தூங்கு.” 

“இல்லை… நான்…”

“ஷ், காலைலேந்து நிறைய பாத்தாச்சு. டயர்டா இருப்ப தூங்கலாம்.” என்று அவன் கண்களை மூடவும் அதற்கு மேல் என்ன சொல்ல என்று அவளும் கண்களை மூடினாள். உள்ளுக்குள் ஒரு ஓரமாய் ஏமாற்றம் வந்து ஒளிந்துகொள்ள, உறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது மூளை. 

திரும்பிப் படுத்தவள், ‘உனக்காக தான் தள்ளி இருக்காரு. உனக்காக தான் வேலையை மாத்திக்கிட்டு உன்கூட வரப்போறாரு. அவர் மேலேயே அதிருப்தியாவியா நீ?’ என்று தன்னைத்தானே கடித்துக்கொண்டு உணர்வுகளை அடக்க முயன்றாள். 

‘என்ன எனக்காக? ஒழுங்கா ஒரு முத்தம் கூட கொடுக்கல.’ என்று ஒரு மனம் சிணுங்கி வாதிட, தன் எண்ணம் செல்லும் திக்கை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள். 

‘கெட்ட பொண்ணாகிட்ட நீ.’ என்று தன்னைக் குறித்து வெட்கம் வேறு. 

‘அவருக்கும் இப்படியெல்லாம் தோணுமா?’ இப்படியான சந்தேகமும் சேர்ந்துகொள்ள, ‘என்கிட்ட இருந்தும் இதெல்லாம் அவர் எதிர்பார்ப்பாருல. நான் வேற அவர் வந்ததும் அழுது ஆப் பண்ணிட்டேன்.’ என்று சுயஅலசலும் நடந்தது. முடிவில் அவன் புறம் திரும்பியவள் மிகுந்த தயக்கத்திற்கு பின் கையுயர்த்தி அவன் சிகை கோதினாள். அழுத்தமாக மூடியிருக்கும் இமைகளுக்குள் கருமணிகள் நகர்கிறதா என்று பார்க்க ஆவல்கொண்டாலும் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சற்று நெருங்கி அவன் தோளில் லேசாக தலைசாய்த்துப் படுத்தாள். அவளை உணர்ந்திருப்பான் போல அவளுக்கு வாகாக உடலை தளர்த்தி அவள் கையை எடுத்து தன் நெஞ்சோடு பிடித்துக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். பெண்ணவளுக்கோ அவனின் இந்த பிடிப்பே வாழ்வின் ஒட்டுமொத்த பிணைப்பையும் கொடுத்தது போல் போதுமானதாக இருக்க, தன் கைக்கு கீழ் எறி இறங்கும் நெஞ்சை உணர்ந்துகொண்டே மெல்ல உறக்கத்திற்கு சென்றாள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!