Skip to content
Post Views: 720
அத்தியாயம்: 3
மதுரை மாநகரின் தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ளது சுருதியின் வீடு. அங்காளி பங்காளிகளாக, அங்கு தான் அவர்களின் குடி.
Advertisement
தடுக்கி விழுந்தால் பக்கத்து வீட்டுக் கூடத்தில் தான் இருப்போம் என்கின்ற அளவிற்கு நெருக்கமான வீடுகளைக் கொண்ட பகுதி அது. சந்து சந்தாக சென்றால், கூகுள் மேப்பால் கூட சரியானப் பாதையைக் கண்டு பிடித்துச் சொல்ல முடியாது. புதிர் போட்டி போல் இருக்கும் இடமும், பாதையும்.
அந்தப் புதருக்குள் தான் சுருதிகாவின் தந்தை சாமிநாதனுக்கெனச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. கீழ் நடுத்தரக் குடும்பம் அவளுடையது. சாமிநாதன் சமையல் மாஸ்டர். விசேச காலங்களில் விதவிதமான உணவுகள் வீட்டில் வரிசை கட்டி நிற்கும்.
Advertisement
Advertisement
இவ்விடம் மனோகரியையும் குறையாக ஒரு சொல் சொல்லிவிட முடியாது. கணவன் சாமிநாதன் விடியற்காலையில் சமையலுக்குச் சென்றால், கரண்டிகளைப் பிடித்துக் கொண்டு அவரும் செல்வார். காய்கறிகள் நறுக்கும் வேலைக்கு என்று தனியாக ஆள் போட்டால் சம்பளம் தரவேண்டி இருக்குமே!
பதி என்ன செய்தாலும் பத்தினியாய் அவரைப் பின்தொடர்ந்தார். பிள்ளைகள் வளர்ப்பு அவர் வசம் இல்லாது போனது.
Advertisement
எப்படியாவது சம்பாதித்து பிள்ளை குட்டிகளைக் கரை ஏற்ற வேண்டி, கணவன் மனைவி இருவருமே உழைத்தனர். ஆனால் பெற்ற மூன்று பிள்ளைகளில் மற்ற இருவரையும் கரை சேர்க்க,
சுருதியைப் பயன்படுத்திக் கொண்டது தான் பிழை.
சமையல் வேலை தவிர, மற்ற நேரங்களில் அவர்கள் கவனித்துக் கொள்ள சிறிய பெட்டிக் கடை ஒன்றும் இருந்தது. அது வீட்டின் பக்கவாட்டிலேயே இருந்தது.
கால மாற்றம் காரணமாக சாமிநாதனின் சமையல் திறமை சமூகத்தில் எடுபடாமல் போக, வந்து கொண்டிருந்த பெரிய வருமானம் நின்று போனது
அந்தப் பெட்டிக் கடை தான் அன்றாட செலவிற்கு படி அளக்கும். படிப்பு, விருந்து, மருந்து போன்ற தேவைகளுக்குச் சுருதியின் சுருக்குப் பையைத்தான் நாடி உள்ளது மொத்தக் குடும்பமுமே.
தன்னை உறிஞ்சிக் குடித்துத் தான் குடும்பம் தளைக்கிறதோ என்று பூதாகரமாக புத்திக்குள் புகுத்தியது ரிதன்யாவின் பேச்சு.
பிறருக்காக பார்த்து பார்த்து தன் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறேன்! என்ற அவளது ஆவேசப் பேச்சு, சிந்திக்க வைத்தது.
கையில் காபி டம்ளருடன் கல்லாவில் அமர்ந்து கொண்டு, சாலையில் போகின்ற வருகின்ற அனைவரையும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
அவளின் பார்வை அவ்வபோது கிழக்குப் பக்கம் சென்று, நேற்று சத்தம் வந்த, மச்சு வீட்டை நோட்டமிட்டது. அது ரிதன்யாவின் வீடு. பழைய வீடு, ரீமாடல் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் அண்ணாமலை சுருதிகாவிற்கு பெரியப்பா முறை. ரிதன்யாவிற்கு தங்கை முறை சுருதிகா.
“உனக்கு அறிவே இல்லடி. எத்தனை பட்டாலும் புத்தி மட்டும் வர மாட்டேங்கிது.” என்று விழிகளை அதட்டி பார்வையைச் சாலையில் பதிய வைத்தாள். ஆனபோதும் பள்ளம் நோக்கி உருளும் கோலிக் குண்டைப் போல் அது உருண்டது.
நேற்றைய சுவடே தெரியாது, வாசல் தொளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள் ரிதன்யா. உடன் பிறக்கவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். சுருதியை விட இரண்டு வருடங்கள் மூத்தவளாக இருந்தாலும், இருவரும் தோழி போல் ஊர் சுற்றியது நினைவு வந்தது.
கூடவே… ரிதன்யாவின் நிலைக்கு நீ தான் காரணம் என்று குற்றச்சாட்டும் உள்ளுக்குள் ஏழ, இமை மூடி அதை விலக்கி வைக்க முயன்றாள்.
வெயில் இல்லாத காலை வேளை என்பதால், சிறுவர்கள் கையில் மட்டையைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கியிருந்தனர். பிள்ளைகளின் கவலையற்ற சந்தோஷத்தில் தன்னை மறந்து போனவளுக்கு நேரம் ஓடியதும் தெரியவில்லை, காபி ஆறியதும் தெரியவில்லை.
“க்கா… அரலிட்டர் பால் பாக்கெட்.” என்று ஒரு சிறுவன் கையில் காசுடன் வந்து நின்றான். டம்ளரில் படிந்திருந்த ஏடை எடுத்து விட்டு, ஒரே மிடறாக காபியை விழுங்கினாள். ஃப்ரிட்ஜ்ஜில் இருந்த பால் பாக்கெட்டை நீட்டினாள். காசை வாங்கி கல்லாவில் போடும் போது,
“முட்ட ரெண்டு குடுத்தா.” என்று வந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
அந்தத் தெருவில் யாரைப் பார்த்தாலும், ‘அவர்கள் எனக்கு…’ என்று ஆரம்பித்து ஏதோ ஓர் உறவு முறை தான் சொல்வர். அந்த வகையில் இவர் மதினி முறை. சசிரேகா என்ற பெயர் சசி மதினியாக மாறியிருந்தது.
இவர் வெறும் மதினி மட்டுமல்ல, ஏரியாவின் வானொலி. ஆல் இந்தியா ரேடியோ என்பது தான் அவரின் செல்லப் பெயர். வம்பு வளர்ப்பதும், ஊமைக் குத்தாய்க் குத்துவதும் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல் அத்தனை இனிப்பாக இருக்கும்.
இவளா! என்று ஒரு நொடி அதிர்ந்து நின்றவள், இரு முட்டைகளைத் தினசரி நாளிதழைக் கிழித்து பொட்டலம் கட்டத் தொடங்கினாள்.
‘போயும் போயும் இந்தப் பொம்பளக் கண்ணுலயா சிக்கணும். போன வர்ஷம் மாதிரி இந்த வர்ஷமும் தப்பிச்சி ஓடிடலாம்ன்னு நினைச்சேன்! முடியாது போல இருக்கே!’ என்று நொந்து கொண்டவளுக்கு உதவியாக, சிலர் சாமன்கள் வாங்க வர, கூட்டத்தில் மதினியைக் கவனிக்காது மற்றவர்களின் பக்கம் திரும்பினாள்.
ஆனால் அவர் இவளைக் கண்டு விட்டார் போலும். அனைவரும் செல்லும் வரை பொறுமையாக இருந்தவர்,
“நீ எப்ப சுருதி ஊர்ல இருந்து வந்த?” என்று பேச்சை எடுத்தார்.
“ஹாங்… விஷேசத்துக்கு வந்தேன் மைனி”
“மஞ்சுளா பிரசவம் வரை இருப்பேல?” என்க, இமை மூடித் திறந்தவள்,
“இல்ல மைனி. இன்னைக்கி நைட் பஸ்ல கிளம்பிடுவேன்.”
“ஏன்? பிறக்கப் போறது மகனா மகளான்னு இருந்து பாத்திட்டு போகலாம்ல. சுடுதண்ணிய கால்ல ஊத்துனாப்ல ஓடணுமாக்கும்!” என்றவருக்குச் சின்னப் புன்னகையைத் தந்தவள்,
“மொத்தம் 12 ரூபா ஆச்சு.” என்று காசை வாங்கி விட்டு அனுப்பி வைக்க முயன்றாள். ஆனால் அவரோ! விடுவேனா நான் என்பது போல் நின்றார்.
சுருதி, சென்னையில் பிரபலமான மருத்துவமனையில், செவிலியராக வேலை செய்கிறாள். ஆண்டிற்கு பத்து நாள்கள் என்று கணக்காக மட்டுமே மதுரையின் பக்கம் தலை காட்டி விட்டுச் செல்லும் அவளை, இப்போது விட்டால் வம்பளக்க அடுத்த ஆண்டு வரை காத்திருக்க நேரிடும் என்ற கவலையில் கடகடவென குத்தத் தொடங்கினார்.
“ஹிம்… உங்கூடப் பிறந்தவ தான மஞ்சுளா… வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப வயித்தத் தள்ளிட்டு வந்து நிக்கிறா! உன்ன விட சின்னப் பொண்ணு!” என்றவரின் பார்வை ‘நீ ஒரு முதிர் கன்னி.’ என்றது.
சுருதிக்கு உள்ளம் கொதித்தது, அவர் வாயால் கூறாது விட்ட வார்த்தையில். அடுத்து அவர் என்ன கேட்கப் போகிறார் என்பது நன்கு தெரியும். ஆனால் அதற்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அவரின் முகம் பார்க்காது, யாருடனோ பேசுகிறார் என்ற ரீதியில் விழிகளால் சாலையை வெறிக்க, அவளின் அதிருப்தியான முகத்தைக் கவனித்தாலும் கவனியாதது போல்,
“உனக்கு அடுத்து பிறந்தது, முந்திப் பிறந்ததுன்னு எல்லாத்துக்கும் கல்யாணம் காட்சி நடக்குது. குழந்த குட்டி பிறக்குது. உனக்கு அந்தச் சமாச்சாரங்கள் எல்லாம் எப்ப நடக்க?” என்ற மதினி, கேள்வியைக் கேட்டு விட்டு, பதிலை அவளிடம் இருந்து பெறாமல்,
“இப்ப உனக்கு வயசு என்ன? முப்பதா? முப்பத்திரெண்டா? இத்தனை வயசுக்கு அப்றம் உனக்கு எதுக்கு கல்யாணம்னு உங்காத்தா நினைச்சிட்டா போல. நீ அப்படி நினைச்சு மனச விட்டுடாதடிம்மா. நான் உனக்குப் பாத்து வைக்கிறேன். உங்கம்மா தான் உனக்கு மாப்ள பாக்குறத விட்டுட்டு, காலேஜ் படிக்கிற உந்தம்பிக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டா… ஆனா நான் எதுக்கு இருக்கேன். பாத்து முடிச்சி வைக்கிறேன்.” என்க, சுருதியின் கண்கள் லேசாகக் கலங்கின.
‘இது தான்… இந்தக் காரணத்தால் தானே இத்தனை நாள் பாசமாக பார்த்த குடும்பம் வில்லனாகத் தெரிகிறது அவளுக்கு.’ என்று நொந்து கொண்டவளுக்கு அவர் சொல்வது போல் வயது முப்பத்தி ரெண்டு அல்ல
இருபத்தி எட்டு தான்.
ஆரம்பத்தில் சில காரணங்களால், கல்யாணம் வேண்டாம் என்க, அவளின் பேச்சுக்கு மதிப்பளித்து மாப்பிள்ளைப் பார்க்கவில்லை சாமிநாதன். அவளை விட மூன்று ஆண்டு சிறிய மஞ்சுளா கல்லூரி முடித்ததும், காதல் என்று வந்து நின்றபோது கூட, காசைத் தந்து எனக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று திருமணத்தை நடத்திக் கொள்ளச் சொன்னாள். இப்பொழுது மஞ்சுளா இரண்டாவது பிரசவத்திற்காகத் தாய் வீடு வந்துள்ளாள்.
திருமணம் என்ற ஒன்றை நினைக்காது இருந்தாள் தான். ஆனால் இந்த கொரோனா காலம் வந்து தன் குடும்பத்தையும், தனகென்று ஒரு குடும்பத்தையும் தேட வைத்தது. அப்போதே அவளுக்கு வயது இருபத்தி ஐந்தைத் தொட்டிருந்தது.
“ப்பா… எனக்கு எதாவது பாத்திங்களா?” என்று வாய் விட்டுக் கேட்டாள்.
கேட்கும் போதெல்லாம் கிடைத்துவிட திருமணம் என்பது தினந்தோறும் பூத்துக் குலுங்கும் மல்லிகைப் பூக்களா! அது குறிஞ்சிப் பூ போன்றது. சமயம் வரும் போது தான் பூக்கும் என்பதற்கு இணங்க, எந்த வரனும் அமையவில்லை. அமையும் வரன்களை ஜாதகம் சரியில்லை என்று மனோகரி மறுத்துக் கொண்டே வந்தார்.
‘இப்போதைக்கு வருமானத்துக்கு இவளை நம்பித்தான் இருக்கோம். இவளையும் கட்டிக் கொடுத்திட்டா! செலவிற்கு என்ன செய்றது?’ என்ற சுயநலம் இருந்தது. மகன் தலையெடுக்கும் வரை தட்டிக் கழித்து, பிறகு கல்யாணம் முடிக்கலாம் என்று ஏதாவது காரணங்களைச் சொல்லி,
“அவங்க நிறைய பவுனு எதிர்பாக்குறாங்கம்மா. நமக்குச் சரி வராது. நாம வேற இடம் பாப்போம்.”
“ஜாதகம் பொருந்தல.”
“பையன் குணம் சரியில்ல.”
“நிறைய தங்கச்சி இருக்கு. பொறுப்பு அதிகம்.” என்றெல்லாம் கூறி தட்டிக் கழிக்கத் தொடங்கினார்.
அவளுக்குள்ளும் திருமண ஆசை அதிகரித்துக் கொண்டே சென்றது. இரு ஆண்டுகளுக்கு முன் தந்தையும் இறந்து போக, மாப்பிள்ளை பார்க்கும் படலம் முற்றிலும் மூடப்பட்டது.
“கூலி வேலை பாக்குறவன் கூட பத்து பவுன் நகையில்லாம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறானாம். இத்தன வர்ஷமா சம்பாதிக்கிற எனக்கு, ஒரு பவுன் கூட நகை கிடையாதுங்கிது இந்தம்மா. இருந்தத எல்லாம் மஞ்சுளா விவரமா வாங்கிட்டு போய்ட்டா. முப்பது சவரன் போட்டாத்தான் அவளக் கல்யாணம் பண்ணிப்பேன்னு காதலிச்ச பரதேசி சொல்ல, வெக்கமே இல்லாம அம்மாட்ட இருந்த பதினஞ்சி சரவன வந்து வாங்கிட்டு போய்ட்டா. மீதி கடனாம்.
நானாவது எனக்குன்னு எதையாது சேத்து வச்சிருக்கலாம். இப்பக் கை வசம் இருக்குறது எல்லாம் கடன் தான். அவளுக்கு மீதி நகை போட்டது, தம்பி படிப்புக்கு வாங்கினதுன்னு, லட்சக்கணக்குல கடன். கடனோட என்னைக் கட்டிக்க எவன் முன்னாடி வந்து நிப்பான்.” என்று அர்ச்சிக்க மட்டும் தான் முடிந்தது அவளால்.
தாய் தான் சுயநலமாக இருக்கிறார் என்று பார்த்தால், உடன் பிறப்புகளும் நெஞ்சில் பசையற்று இருப்பது வருத்தத்தைத் தந்தது.
ஆனால், அதெல்லாம் இந்த ஊருக்குத் தெரியுமா? ஏதோ அவளே கல்யாணத்திற்கு மாட்டேன் என்று சொல்வது போல், ஏன் கல்யாணம் பண்ணிக்கல? என்று கேட்டு கேட்டு குத்தும், இந்த மதினியைப் போல்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!