Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 17

*17*

பதினைந்து நாட்களாக விடிந்த அழகிய விடியல் இன்றில்லை. தன் நெஞ்சத்து ஏற்ற இறக்கங்களை தாளமென ஏற்று அதன் இலயத்தில் தன்னை மறந்து உறங்கும் மனைவியின் வெம்மையின்றி மனமும் உடலும் வெறுமையை உணர்ந்தது. அவளது இல்லாமை ஏற்படுத்திய சோர்வை முயன்று விரட்டியவன் எழுந்துகொள்ள சிரமப்பட்டான். கைகள் தன்னால் அலைபேசி எடுத்து அவளிடமிருந்து செய்தி வந்திருக்கிறதா என்று தேடியது. சென்னை சென்று சேர்ந்துவிட்டதாக விடியற்காலையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். உடனே அவளுக்கு அழைப்பு விடுக்க முயன்ற விரல்களை அடக்கியவனாக அவள் உறங்கினால் தொல்லை கொடுக்க வேண்டாம் என காலை வணக்கம் மட்டும் அனுப்பி வைத்தான். செய்தி அவளை சென்று சேரவில்லை என்றதிலேயே அவள் உறங்குகிறாள் என்று புரிந்தது. பெருமூச்சுடன் எழுந்தமர்ந்து அறையை சுற்றிப் பார்த்தான்.

அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாய் கட்டப்பட்டிருந்த கொடிகளில் அவளது உடப்புகள் இல்லை. ஒரு வாரமாகவே வெளியே செல்லும் சமயம் புடவை கட்டுபவள் வீட்டிற்கு வந்ததும் அதனை மடித்து கொடியில் போட்டுவிட்டு சுடிதாருக்கு மாறிவிடுவாள். இரவுக்கு ஏற்றார் போல உறங்கும் வேளைக்கு அவள் எடுப்பதையெல்லாம் அவன் உடுக்க அனுமதித்ததில்லை. சீண்டலில் துவங்கி செயலில் முடித்து சிணுங்கும் அவள் சிருங்காரங்கள் கீதமாய் அவன் செவி நிறைத்தது நினைவு வந்து அவனை ஏங்க வைத்தது. இதற்கு மேல அறையில் இருந்தால் கஷ்டம்டா என்று வெளியேறிவிட்டான் முகிலன்.

“என்ன அதுக்குள்ள எழுந்துட்ட?” மகனை ஆச்சர்யமாக பார்த்தார் மாரியம்மாள்.



Advertisement

“கடைக்கு போகணும்ல.” சுரத்தையின்றி வந்த அவன் பதிலில் இவருக்கு சுறுசுறுவென்று ஏறியது.

“கல்யாணம் ஆன நேரம் வித்து கொடுக்குறதுலேந்து கடை எடுபிடி ஆக்கிட்டாங்களாடா?”`

“என்ன’ம்மா?” சட்டென புரியவில்லை அவனுக்கு.

Advertisement

“பத்து மணிக்கு போக வேண்டிய கடைக்கு ஏழு மணிக்கே போனா கேக்காம என்ன?” என்றதும் தான் அவனுக்கு நேரமே உரைத்தது. விடிந்தாலும் பனி விலகாமல் வீட்டினில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது.

Advertisement

“நேரமே எழுந்துட்டேன். இப்போ என்ன?” என்று அலுத்துக்கொண்டே கொல்லைப்புறம் சென்றான். அவளின் அருகாமைக்கு பழக ஆரம்பித்திருந்தவன் தனித்து உறங்க நேரம் எடுத்திருந்தது. காலையும் இப்படி நேரமே விழிப்பு தட்டும் என்றும் எண்ணியிருக்கவில்லை. குழலி அனுப்பியிருந்த தகவலைப் பார்த்தவன் மணியை பார்க்காது வந்திருக்க, மாரியம்மாள் வயலுக்கு செல்லாமல் காத்திருந்தார். 

முகம் கழுவி வந்தவனுக்கு காபியை நீட்டியவர், முணுமுணுப்புடன்  சமையலில் இறங்கினார்.

‘வேலை தான் முக்கியம்னு இப்படி கல்யாணம் ஆனவுடனேயே கட்டுனவனை விட்டுப்போறது எல்லாம் என்ன பழக்கமோ? என்ன படிச்சி என்ன பிரயோஜனம், எனக்கென்னன்னு போயாச்சு. அட, வீட்டுக்கு அடங்கி கட்டுனவன் கண்ணசைவுக்கு இருக்க வேணாம் வீட்லையாவது அவன் கண்ணெதிரில இருக்கலாம்ல. அப்படியென்ன தன்னோட வேலைதான் முக்கியம்னு போறது. இங்க நான் ஆக்கிக்கிட்டு இருக்கேன்.’ என்று  ஒரு கட்டத்தில் முணுமுணுப்பு சற்று சத்தமாக வெளிவர, முகிலனுக்கு எரிச்சலாக வந்தது. 

Advertisement

“வயலுக்கு போவாம என்னத்துக்கு இப்படி அனத்திட்டு இருக்க?” 

“நான் போனா காலைலைக்கும் மதியத்துக்கும் தட்டுல தானா சோறு பொங்கி வருமாக்கும்? கல்யாணம் பண்ணி வச்சாச்சு இனி உன்னை அவ பாத்துப்பான்னு நினைச்சா அவ பாட்டுக்கு போயிட்டா. நான் போக முடியுமா, பெத்த மனசு கேக்குமா?” என்று எதிர்த்து வந்தார்.

“சும்மான்னு இருக்க மாட்டியா நீ? இங்க இருக்கேனு சொல்லிட்டு இப்போ முடியாதுனு அவ கிளம்பி போன மாதிரி பேசுற? முதல்லயே பேசுனது தானே… நாந்தான் சொன்ன வார்த்தையை காப்பாத்தாம இப்படி அவளை பேச்சு வாங்க விட்டுட்டு இருக்கேன். நீ ஒன்னும் எனக்கு செய்ய வேணாம், உன் வேலையை பாரு. நான் என்னை பாத்துக்குறேன்.” என்று கடுப்படித்தான் முகிலன். மாரியம்மாளின் இப்படியான பேச்சு திருமணத்திற்கு முன்னிருந்தே இருக்கும் ஒன்றுதான் என்றாலும் இன்று ஏனோ மிகுந்த எரிச்சலை கொடுத்தது. அவர் கிளம்பி வயலுக்கு சென்றால்தான் என்ன என்று தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தினான். 

“அவ்வளவுக்கு ஆகிப்போச்சா? என்னமோ இல்லாததை சொல்ற மாதிரி மூஞ்சை காட்டுற.” என்று கோபம் கொண்டவரும் அடுப்பை அணைத்துவிட்டு விறுவிறுவென கொல்லைப்புறம் செல்ல, முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டவனாய் அவர் விட்ட சமையலை தொடர்ந்தான்.

அவன் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவரோ அவனை பிடித்துத் தள்ளி, “கம்முனு போ.” என்று இவர் சமையலைத் தொடர, சில நொடி நின்று பார்த்தவன் அலைபேசி எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான்.

திருமணப்புகைப்படங்களும் வரவேற்புப் படங்களும் அவன் முகப்பை அலங்கரிக்க, அதனை கொஞ்சம் மாற்றியமைத்து வலைதளங்களில் பதிவிட்டான். சிறிது நேரம் அதில் உழன்றவனுக்கு மனைவியிடமிருந்து வந்த செய்தி உயிர்ப்பிப்பதாய். அதனை படித்துப்பார்க்கும் முன் அழைத்துவிட்டான்.

“எழுந்துட்டியா மலர்?”

“இப்போதான்… நீங்க ஏன் இவ்ளோ காலையிலேயே மெசேஜ் போட்டிருக்கீங்க. தூங்கல?” 

“நீ தூங்குனியா?” தன்னைப் போல் அவளுக்கும் உறங்கா இரவாகியிருந்ததா என்ற எதிர்பார்ப்பு.

பதில் சொல்லாமல் துண்டித்தவள் உடனே காணொளி அழைப்பு விடுக்க, முதல் அழைப்பு முடியும் முன்னமே ஏற்றுவிட்டவன் ஆர்வமாக திரையை பார்த்தான். பற்றாக்குறையான உறக்கத்தின் பலனாய் கண்கள் லேசாக தடித்து முகம் சோர்வுற்றிருந்தது.

“மலர்”

“பதில் கிடைச்சிச்சா?” என்று கேட்டவளும் கணவனை ஆராய்ந்தாள். 

“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாம்ல. ஆபீஸ் போகணுமே.” இவன் கவலைப்பட, அதே கவலை கணவனைக் குறித்து பெண்ணவளுக்கும்.

“சரியாகிடும்.” இருவருக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டான்.

“முடிஞ்சா சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க.” என்று அவள் அக்கறையில் சொல்ல,

“அந்த கறையை இங்க இருந்துபடலாம்.” திடுமென கேட்ட மாரியம்மாள் குரலில் இருவரும் திடுக்கிட்டு பார்க்க, முகிலன் பின்னால் நின்றிருந்தவர், “எல்லாம் ரெடியா இருக்கு. மதியத்துக்கு டப்பில போட்டு எடுத்துக்கோ. மார்க்கெட்டுக்கு பூ அனுப்பனும், நான் கிளம்புறேன்.” என்று தன் போக்கில் மகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

கண்முன்னே அழைப்பில் மருமகள் இருக்கிறாள் ஒரு வார்த்தை பத்திரமாக சென்று சேர்ந்துவிட்டாளா என அவளிடம் விசாரித்திருக்கலாம் என்று மகனுக்கு ஆதங்கமாகிவிட்டது. 

அவளுக்கு அந்த எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை போலும், கணவன் முகம் சுருங்குவதை கவனித்தவள், “முகமே சோர்வா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க, நான் கிளம்பிட்டு உங்களை எழுப்பிவிடுறேன்.” 

“தூக்கம் வரும்னு தோணல மலர்.” சோர்வில் இவன் சுணங்க, பிடிவாதமாய் அவனை படுக்கச்சொல்லியவள் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.

அதன்பின் அன்றாட பணிகள் இருவரையும் இழுத்துக்கொண்டது. அலுவலில் கிடைத்த வாழ்த்துக்களை இன்முகமாக ஏற்றுக்கொண்டு துணையின் நினைவு கொடுத்த தித்திப்புடன் இரவு பேச ஆவலாக இருந்தனர் இருவரும். பகல் பொழுதுகளின் இடைவெளியில் தவறாது குறுஞ்செய்திகள் பகிர்ந்துகொண்டனர். இரவு பொறுமை இழந்தவனாய் கடையிலிருந்து கிளம்பும் போதே காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அவளுக்கு அழைத்துவிட்டான்.

வண்டி ஓட்டும் போது போன் பேச வேண்டாம் என்று அவள் மறுக்க, இவன் கொஞ்சி சரிக்கட்டி காதல் மொழி பேசினான். அதில் இன்னும் இன்னும் அவனுக்கான தேடல் அதிகமாகியது பெண்ணுக்கு. 

“ட்ரான்ஸ்பர் கேட்டிங்களா?” என்று அவள் கேட்க, சட்டென நின்றது அவன் வண்டி. 

“…”

“ஏங்க?”

“…” 

பதில் வராமல் போகவும் அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் அழைப்பு இணைப்பில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு அகன் என்று அழைக்க அப்போதுதான் உணர்வு வரப்பெற்றவனாய், “என்ன கேட்ட மலர்?” என்று கேட்டுவிட்டு, “வீட்டுக்கு வந்துட்டேன். அப்புறம் பேசுறேன்.” என்று வைத்துவிட்டவன் பார்வை மொத்தமும் எதிரே வண்டியில் தன் அப்பாவுடன் வந்த வள்ளியிடம் தான். இவனை பார்த்ததும் வள்ளியின் அப்பா வண்டியின் வேகத்தை கூட்டினார்.

இவனை கடந்து செல்கையில் நிமிர்ந்து பார்த்த வள்ளியின் விழிகளில் தெரிந்த வெறுமை இவனை மொத்தமாய் சாய்த்தது. சிறிது நாட்களாக பின்னுக்கு சென்றிருந்த அவள் வாழ்க்கை குறித்த கவலை முன்னே வந்து இவன் வாழ்க்கைக்கு போக்கு காட்டியது. எத்தனை நேரம் நின்றானோ எங்கோ ஒலித்த வண்டியின் சத்தத்தில் சுயம் பெற்று வீடு வந்தான்.

எப்போதும் போல் மாரியம்மாள் முழித்திருக்க, கந்தசாமி கூடத்தின் ஒரு ஓரத்தில் படுத்திருந்தார். ஒன்றும் சொல்லாமல் உடை மாற்றி உண்ண அமர, அவன் சோர்வை கண்டு முணுமுணுப்புடன்தான் பரிமாறினார். அப்படியாவது மகன் மருமகளை அடக்கி இங்கு அழைத்து வந்துவிடமாட்டானா என்ற எண்ணம் அவருக்கு. அது அவன் மண்டையில் எங்கு ஏறியது. முழுக்க வள்ளி நினைவு தான். 

அமைதியாக படுத்துவிட்டவன் மனைவிக்கு அழைக்க வேண்டும் என்பதையே மறந்தவனாய் இருக்க, அங்கு அவளோ இவனது அழைப்புக்கு காத்திருந்து சோர்ந்தவளாய் தானே அழைத்துவிட்டாள். 

“கண்ணெல்லாம் எரியுதுங்க. நான் தூங்கவா? நாளைக்கு பேசலாமா?” என்று எடுத்ததும் இவன் அனுமதி வேண்டுவது போல் கேட்க, கண்களை அழுத்திக்கொண்டவனோ, “சாரி மலர். சாப்பிட்டு அப்படியே படுத்துட்டேன். நீ தூங்கு.” மனைவியிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனுள் முதல் முறையாய் குற்றவுணர்ச்சி.

‘உனக்காக காத்திருப்பவளை தவிக்க விட்டுவிட்டு அப்படி என்ன யோசனை வேண்டிக்கிடக்கு?’ என்று மனசாட்சி கேள்வி எழுப்ப, அறிவோ,

‘உன்னை மறக்க முடியலன்னு சொல்லிட்டு நிம்மதியை தொலைச்சிட்டு நிக்குறா ஒருத்தி. அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டு எப்படி உன் வாழ்க்கையை மட்டும் பாக்க முடியும்?’ என்று வெதும்பி, ‘ஏதோவொரு கட்டத்துல அவளுக்கு நம்பிக்கை கொடுத்த தான நீ. அதை காப்பாத்த முடியல அட்லீஸ்ட் அவ வாழ்க்கையை சரிசெய்யலாம்ல.’ என்று வந்து நின்றது.

‘ஆனா எப்படி?’ என்று யோசித்தவனுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அன்றைய உறக்கமும் தொந்தரவு மிகுந்ததாக இருக்க, காலை கண்களை  திறக்கமுடியவில்லை. 

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை செய்தி அனுப்பிவிட்டு இவன் பதிலுக்காக காத்திருந்தாள் குழலி. அது தெரியாமல் இவன் உறங்க, பொறுத்துப்பார்த்தவள் அலுவலகம் கிளம்பியபின் அழைத்துவிட்டாள். தூக்க கலக்கத்தில் அவன் எடுக்கவும், “நல்ல தூக்கமா?” என்று உற்சாகமாக வந்த மனைவியின் குரல் அவனது உறக்கத்தை விரட்டியடித்தது. 

ஊருக்கு சென்ற களைப்பு நீங்கி இயல்பு திரும்பியிருந்தது அவளிடம். இவன் சோர்வோ பன்மடங்காகி இருந்தது. 

“கடைக்கு போக வேண்டாமா எழுந்துருங்க.”

“ப்ச்… போகவே புடிக்கல, கடுப்பா இருக்கு.” மனதின் குழப்பம் அவனை அப்படி பேச வைக்க, தன் பிரிவு கணவனை வாட்டுகிறது என்று எண்ணிவிட்டாள் மனைவி. 

“அச்சோ என்ன இது? இப்போதான லாங் லீவ் எடுத்தீங்க, போகாம எப்படி இருக்கிறதாம்? நான் லைன்ல உங்க கூடவே இருப்பேனாம் நீங்க கிளம்புவீங்களாம்…” குழலி கொஞ்சி பேச, முகிலனிடம் மாற்றம். வள்ளியை ஒதுக்கி வைத்து மனைவியிடம் சிந்தையை திருப்பினான். எழுந்து பாய் மடித்ததிலிருந்து பல் துவக்கி, மாரியம்மாள் வீட்டில் இல்லாததை பகிர்ந்து, காபி கலந்து அருந்துவது என்று ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லியபடி வந்தவன் குளிக்கப்போவதாக அழைப்பை துண்டிக்கப்போக, விடவில்லை அவள்.

“போன் தண்ணில விழுந்தா போயிடும் மலர்.”

“மேல ஒரு செல்ப் இருக்குல்ல அதுல வச்சா தண்ணி கூட தெளிக்காது.” என்றவளுக்கு அவனுடன் பேசும் தருணங்கள் பிரிதுயரை போக்குவதாய். நேற்று ஹெட்ஸட் போட்டுக்கொண்டு அலைபேசியில் பேச வேண்டாம் என்று மறுத்தவள் இன்று அதே வேலை செய்தாள். அவன் குரல் தித்திப்பாய் இறங்கி அவளுடனே பயணிப்பது போன்ற பிரம்மையைக் கொடுக்க, அழைப்பை துண்டித்து இடைவெளி வரவழைத்துக்கொள்ள விரும்பவில்லை அவள். 

“குளிக்கும் போது கூடவா?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவன் மனநிலை மொத்தமாய் மனைவியின் தயவில் புத்துணர்வாகி இருந்தது.

“ஏன் கூடாதுங்குறேன்? வீடியோ கால் கூட இல்லை வாய்ஸ் கால் தான?”

“வீடியோ காலும் வரலாமே, யார் தடுப்பா உன்னை. நீ பாக்காததா…” என்று பேச்சு மெல்ல இருவருக்குண்டான நெருக்கமான தருணங்களை முன்னிறுத்தி செல்ல, வெட்கத்தை மீறி அவனுக்கு பதில் கொடுத்து பதில் வாங்கி என இருவரின் மனநிலையும் காதலில் சிக்குண்டு அக்காலையை இனிமையாக்கியது. 

அலுவலகம் வந்துவிட்டதாக சொல்லி மனமே இன்றி அழைப்பை துண்டித்தவள் அன்றைய தினம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள். முதலில் அழைப்பு தான் விடுப்பாள், வாடிக்கையாளர் உடன் இருந்தால் அவனுக்கு சங்கடமாக இருக்கிறது என்று சொல்லவும் வேலை நேரத்தில் எழுத்துச் செய்திகள் மூலமாகவே அவர்களின் பரிமாற்றம் நடைபெறும். ராஷ்மி அவளை ஓட்டி தள்ளிவிட்டாள். இரவு எப்போதுடா வரும் என்று காத்திருந்து பேசும் தருணங்கள் எல்லாம் அவர்கள் உறவை பலப்படுவதாய் ஒரு எண்ணம் அவளுக்கு. 

“இப்படி தள்ளி இருந்து உங்க குரலுக்கு ஏங்கி, உங்களோட மெசேஜ் எப்போ வரும்னு நொடிக்கொருமுறை எதிர்பார்த்து, நைட் எப்போ வீடியோ கால் வரலாம்னு வெய்ட் பண்றதெல்லாம் கூட ஒருமாதிரி நல்லாதான் இருக்கு.” என்று அதனை பகிரவும் செய்தாள் அவள். இவன் மெல்ல சிரித்துக்கொண்டான். மனைவியால் தேடப்படுவது அளவில்லா சுகத்தை கொடுத்தது. எல்லாம், “உங்களுக்கு எப்படி?” என்று அவள் கேட்கும் வரைதான்.

அவளை தேடாமல் எல்லாம் இல்லை, அதனை மீறிக்கொண்டு மனதை உறுத்தும் கவலை அவனை முழுமனதாக எதிலும் ஒன்றவிடுவதில்லை. மனைவியிடம் தன் குழப்பத்தை சொல்லிவிடலாமா என்று யோசித்தாலும் இப்படி இருவரும் பிரிந்திருக்கும் சமயம் தன் மனதை சரியாக அலைபேசியில் கடத்த முடியுமா என்று சந்தேகம் கொண்டு முடிவை கைவிட்டான். தந்தையிடம் சொல்லலாம் என்றால் வள்ளிக்கு திருமணமான பின் அவளை நினைப்பது தவறு என்று அவனுக்கு சொல்லியவரிடம் இப்போது மணமான தன்னை மறக்கமுடியாமல் அவள் அவதிப்படுகிறாள் என்று எப்படி சொல்வது என்ற தயக்கம். அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே போட்டுக்கொண்டான். 

“அடுத்து எப்போ பாப்போம்னு இருக்கு.” என்று குழலி ஏக்கம் மேலோங்க விளிக்க, இவனுக்கு என்னவோ போலானது. மனது உறுத்தியது. தான் அவளுக்கு நியாயம் செய்யவில்லை என்று மனம் குத்த, “சீக்கிரமே பாக்கலாம்.” என்றவன் அந்த வாரம் அவனுக்கிருந்த ஒற்றை நாள் விடுமுறையில் அவளை தேடிக்கொண்டு சென்றுவிட்டான்.

மாரியம்மாள் முகம் தூக்கினார், வசவினார்தான். எதையும் காதில் வாங்காமல் கடையிலிருந்தபடியே சென்னைக்கு பேருந்து ஏறிவிட்டான். புத்தாண்டு அன்றைக்கு சென்றது போல் அதிகாலை அவள் வீட்டு வாயிலில் நின்றுகொண்டு அலைபேசியில் அழைக்க, பாய்ந்து வந்து அவனை கட்டிக்கொண்டாள் குழலி.

சற்று கனமாக தன் மேல் விழுந்த பூங்கொற்றாய் அவளை தாங்கியவன் அவள் வேகத்தில் ஓரடி பின்சென்று தன்னை நிலைப்படுத்தினான். ஆசை தீர அவன் அணைப்பில் இருந்தவள் மெல்ல விலக, இருகரம் கொண்டு அவள் முகத்தை தாங்கியவன், “ரொம்ப தேடுனியா?”

களிப்பில் கலங்கிய கண்ணீரை மறைக்க முயலாதவளாய் துடிக்கும் இதழ்களை பல்லைக் கடித்து அடக்கி, ஆம் என்பதாய் மேலும் கீழும் தலையசைத்தாள்.

லேசாக எக்கி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நிற்க, மூச்சுக்காற்றுகள் ஒன்றோடு ஒன்று மோதி வெம்மையை அதிகரிக்க, இதழ்கள் நான்கும் தன்னால் தன் துணை தேடியது. 

“உள்ள போலாம் மலர்.” அவன் சுதாரித்து நகர, நாணத்துடன் நெற்றியில் அடித்துக்கொண்டு கதவை பூட்டினாள். உள்ளே சென்றவனோ எந்த அறைக்கு செல்வது என்று யோசித்து பையை கீழே வைத்து கூடத்தில் நிற்க, அன்றைக்கு தங்கிய அறையை காண்பித்தாள்.

“அம்மா இன்னொரு ரூம்ல தூங்குறாங்க. நான் தனியா தான்…” அவளை முடிக்கவிடாது பட்டென்று கைகளில் ஏந்திக்கொண்டவனோ அறைக்குள் சென்று கதவடைக்க, இவள் விழிகளும் கணவனின் நெருக்கத்தில் அடைத்துக்கொண்டது. உன்னது பெரியதா என்னது பெரியதா என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் இணையிடம் காதல் பேசி, மோகம் கொட்டி பிரிதுயரை தீர்த்துக்கொண்டனர். ஒரு வாரம் கடந்து கிடைத்த நேரம் இனிமையாக கழிய உறக்கம் கண்களை சுழற்றினாலும் அதனை விரட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். 

தன் வீட்டினில் தயக்கம் விடுத்து கணவன் இயல்பாகிவிட்டான் என்று அவள் அகமகிழ, தன்னைக் கண்டதும் மனைவி முகத்தில் தெரிந்த மகிழ்வில் வேறு எதுவும் அவன் நினைவில் இல்லை. முழுமனதாக காதலில் கரைந்து அவளை கரைத்து நெருங்கியவன் அவளை தன் கையணைப்பிலிருந்து விலக விடவேயில்லை.

“இன்னைக்கு ஆபீஸ் லீவ் போட முடியாது.” சுணங்கிய மனதுடன் கலங்கிய மனைவியை இழுத்துப் பிடித்து இறுக்கி அணைத்தான். தெரிந்துதானே அவன் வந்தது. சுழற்சி முறையில் அவனுக்கு ஏற்றது போல் வார நாட்களில் ஒரு நாள் விடுமுறை, அவளுக்கு வார இறுதி விடுமுறை. இருவருக்கும் விடுமுறை கிடைக்கும் சமயம் சந்தித்துக்கொள்வது என்பது கடினமான காரியம்.

“சீக்கிரம் முடிச்சிட்டு வர ட்ரை பண்றேன்.” என்றவளை ஆதுரமாக வருடினான்.

“அதுவரைக்கும் வீட்ல ரெஸ்ட் எடுங்க.”

“நான் கொண்டுவந்து விடுறேன். இப்போ கொஞ்ச நேரம் தூங்கு.” என்று அவன் தட்டிக்கொடுக்க, இருவருமே ஒருகட்டத்தில் உறங்கிப் போனார்கள். அசதியில் சற்று அதிக நேரம் உறங்கிவிட பிரபா அலைபேசி அழைப்பு விடுத்து எழுப்பிவிட்டார். அரக்க பறக்க அவள் குளித்து வர,

“சாப்பாடு ரெடி. மாப்பிள்ளையும் வர சொல்லு. மாப்பிள்ளை பேக் கீழ இருந்துச்சு சோபால வச்சிருக்கேன்.” என்கவுமே ஏனோ வெட்கம் வந்து தொலைத்தது. அவர் முகத்தை பாராமல் அறைக்குச் சென்று அவனை எழுப்பி கூட்டி வந்தாள். பிரபா இயல்பாய் விசாரிக்க, பதில் சொல்லியவன் காலை உணவு முடித்துக்கொண்டு அவளை அலுவலகத்தில் விட்டு வந்தான். பிரபா அவனை ஓய்வெடுக்க சொல்ல, சங்கடப்பட்டு குளித்து வெளியே கிளம்பிவிட்டான்.

“மதியம் வீட்டுல சாப்பிடலாம், வந்துருங்க மாப்பிள்ளை.” என்று சொல்லியே அனுப்பி வைத்தார் பிரபா. 

எங்கு செல்வது என்ன செய்வது என்று தெரியாது கொஞ்ச நேரம் சுற்றியவன் பின் தான் வேலை செய்யும் கடையின் முக்கிய கிளைக்கு சென்று வேலை குறித்து விசாரித்து வந்தான். மேலும் எங்கெங்கு கிளைகள் இருக்கிறது என்று அலைபேசியில் பார்த்துவிட்டு சில இடங்களுக்கு சென்று வந்து மதியம் உண்டு உறங்கிவிட்டான். மாலை அவள் அலுவல் முடியும் முன்னமே அவள் அலுவலகம் சுற்றியுள்ள கடைகளை பார்த்துவிட்டு நிற்க, ஓட்டமும் நடையுமாக அவனிடம் வந்தாள் குழலி.

“ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?”

“இல்லை இப்போதான்… பக்கத்துல எங்க கடை இருக்குனு பாத்துட்டு வந்தேன். ட்ரான்ஸ்பர் கேக்க வசதியா இருக்கும்.” என்று அவன் சொல்லவும் மலர்ந்துவிட்டது இவள் முகம். அவன் கையை பிடித்துக்கொண்டவள் எங்காவது வெளியே செல்லலாம் என்று சொல்ல, கடற்கரைக்கு சென்று நேரம் செலவிட்டனர். 

வள்ளியை பற்றி சொல்லலாமா என்று யோசித்த சமயம் பூரிப்பும் பொலிவுமாய் இருந்தவளை பார்த்தவன் தலை கோதிக்கொண்டான். நல்ல மனநிலையை கெடுக்க வேண்டுமா? இதுதான் விஷயமென சொல்லிவிட்டு உடனே கிளம்ப வேண்டும், அவள் என்ன நினைக்கிறாள் அடுத்து என்ன செய்ய என்று எதுவும் தெரியாமலேயே போய்விடுமே என்று நிற்க,

“ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?” என்று அவன் முகம் சுருங்கியதை பார்த்துக் கேட்டாள். 

“சொல்லணும்தான். இப்போ வேண்டாம்.” என்று தள்ளிப்போட்டான். அதீத மகிழ்வில் இருந்தவள் வேறு எதுவும் கேட்டுக்கொள்ளாது தோள் குலுக்கி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். இருள் பரவவும் வீடு வந்து சேர, பிரிவின் துயர் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. கலக்கத்துடன் விடை கொடுக்க, அவனும் மனமே இன்றி கிளம்பிச் சென்றான். அலைபேசியில் நாட்கள் செல்ல பதினைந்து நாட்கள் கழித்து வந்த அந்த வாரயிறுதி விடுமுறையில் சனிக்கிழமை காலை அவனிடம் வந்துவிட்டாள் குழலி. அவள் வரவை எதிர்பாராதவன் கொண்டாடிவிட்டான். 

“இன்னைக்கு லீவ் போட முடியாது.” அவளைப் போலவே இன்று இவன் முகம் தூக்கினான்.

“ரெண்டு நாள் இங்கதான் இருப்பேன்.” தாஜா செய்து அவனை அனுப்பிவைத்தான்.

மருமகளை பார்த்த மாரியம்மாளுக்கு ஆசுவாசம் பிறக்க, வீட்டு வேலை மொத்தமாய் அவளிடம் கொடுத்துவிட்டு வயலுக்கே சென்றுவிட்டார். கந்தசாமிக்கு இவள் வருகை தெரியவில்லை. தானே ஆட்டோ பிடித்து வந்துவிட்டாள். யாருமற்று அவனுமில்லாத வீட்டில் பொழுது போவதே சிரமமாய் இருக்க, அவளே இழுத்துப் போட்டு வீட்டை ஒதுங்க வைத்தாள். முடிந்தளவு சீக்கிரம் வேலை முடித்துக்கொண்டு வந்தவனும் மனைவியை தாங்கினான். ஞாற்றுக்கிழமையும் அவன் கடைக்கு செல்லவும்தான் இவளுக்கு சோர்வாகியது. இரவு கிளம்ப வேண்டும் அடுத்து எப்போது அவனை பார்ப்போமா என்று முகம் தொங்க வலம் வந்தாள். அவனும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. இழுத்து வைத்து அவளை இறுக அணைத்துச் சென்றான். 

“ஊருல இல்லாத கூத்தால்ல இருக்கு. அவன் ஒருநாள் போய் குடும்பம் பண்றதும் இவ ரெண்டு நாள் இங்க வர்றதும்… ஒன்னும் சரியா இல்லை.” மாலையே ஊருக்கு செல்ல பையில் அனைத்தையும் எடுத்து வைத்தவளை பார்த்து அங்கலாய்த்தார் மாரியம்மாள். அவர் பேச்சு சுருக்கென்றாலும் கொடுத்தாலும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை குழலி. 

“இப்படி அலைஞ்சிட்டு இருந்தா வயித்துல எப்படி தங்குங்குறேன்? வயசு திரும்புதுன்னு நினைப்பா ரெண்டு பேருக்கும்?” என்று சொல்லவும் வந்துவிட்டாள் குழலி,

“அவர் ட்ரான்ஸ்பர் வாங்குறேன்னு சொல்லிட்டாரு. கொஞ்ச நாள்தான் இப்படி.” என்று பொறுமையாகவே சொன்னாள். 

“அப்போவும் நீ வரமாட்ட? என்னவோ இங்க இடம் வாங்கி வீடு கட்டனுன்னான் இப்போ என்னன்னா ஊர விட்டே போறானாம்…”

“சீக்கிரம் கட்டிடலாம் அத்தை. வேலை தேடி வெளியூர் போற எல்லாரும் மொத்தமா போயிட்டதா அர்த்தம் இல்லை. என்னைக்கு இருந்தாலும் இங்கதான் இடம் வாங்கணும்னு இருக்காரு. இதுதான் அவர் ஊரு.” என்று அவர் வாயை அடைக்கும் பொருட்டு அழுத்தமாகவே சொன்னாள் குழலி. அவளைப் பொறுத்தவரை சொந்த ஊரில் அவன் விருப்பப்படி வீடு கட்டிக்கொண்டு முக்கிய விழாக்களின் போது இங்கு வந்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணம்தான். ஆனால் அவன் குடும்பத்தினருக்கோ வீடுகட்டினால் மகன் இங்கேயே இருப்பான் என்ற எண்ணம், முகிலனுக்கே அந்த எண்ணம் தான். 

“பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. அது மனசுல பதிஞ்சா சரி.” என்றவரை அதற்கு மேல் பேசவிடாமல் செய்துவிட்டது கந்தசாமியின் வரவு. 

“கிளம்பியாச்சா மா?”

“எடுத்து வச்சிட்டேன் மாமா. அவர் வந்ததும் சாப்பிட்டு ஸ்டேஷன் போக வேண்டியதுதான்.” என்று மாமனாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள் கணவன் வரவும் அவன் பின்னோடு சென்றாள்.  

“ட்ரான்ஸ்பர் கேட்டீங்களா? எவ்ளோ நாள் ஆகுமாம்?” 

பதில் சொல்லாது அவன் உடை மாற்ற,

“உங்களை தான்.”

“ஹான் விசாரிச்சிட்டேன் மலர்.” என்று அவள் கண்ணை சந்திக்காது அவன் சொன்ன தினுசே அவளை சந்தேகத்தில் தள்ளியது. நெருங்கி அவன் தாடை பிடித்து முகத்தை நிமிர்த்தியவள், “விசாரிச்சீங்களே என்ன சொன்னாங்க?” 

அவள் கையை மெதுவாக விலக்கிவிட்டவன், “வேகன்சி வந்தா மாத்திவிடுறேனு சொன்னாங்க. போதுமா?” என்று சொல்ல, என்னவோ ஒரு உறுத்தல் அவளுக்கு. ஆனால் என்னவென்று புடிபடவில்லை, அவனை சந்தேகம் கொள்ளவும் முடியவில்லை. 

அரைமனதாக தலையாட்டி நகர்ந்தவள் அவனுக்கு இரவுணவு எடுக்கப் போக,

‘இவ இப்படி வேலை வேலைனு ஓட தான் கல்யாணம் கட்டி வச்சீங்களா? இந்த வயசுல வாழாம எப்போ வாழ? இதுக்கு அந்த வள்ளியை புடிச்சி கட்டி வச்சிருப்பேனே. முகிலை சுத்தி சுத்தி வந்திருப்பா.’ கந்தசாமியிடம் புலம்பிய மாரியின் குரல் இவளை எட்ட, உணவை எடுத்த கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

‘யாரிந்த வள்ளி?’ என்று மனம் வேகமாக யோசிக்க, பதில் உரியவனிடமிருந்து கிடைத்தது. எதிர்பாராத திருப்பத்தில் மனம் காயப்பட்டவளாக அழுகையுடன் அங்கிருந்து புறப்பட்டாள்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!