Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 18

*18*

“வள்ளி யாரு?” உணவு முடித்து அறைக்குள் நுழைந்தவுடன் கேட்ட மனைவியை அதிர்வுடன் பார்த்தான் முகிலன். 

அவன் எதிர்வினை அவளை ஐயமூட்ட, “ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?” 



Advertisement

“இல்லை ஒன்னுமில்லை.” அவளைப் பாராமல் தலை கோதியவன் ஊருக்கு எடுத்துப்போக அவள் வைத்திருந்த பையை பிரித்துப்பார்த்தான். அவன் பின்னே வந்து நின்றவள் அவனை முழங்கை பிடித்துத் திருப்பி,

“வள்ளி யாருனு கேட்டேங்க.” பதில் கூறாமல் இதென்ன என்று அவள் அழுத்தமாக கேட்க, இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது என்று புரிந்துபோனது முகிலனுக்கு. தயக்கத்துடன் நிமிர்ந்தவன் ஒற்றைக்கையால் அவள் கன்னம் தாங்கி, 

“நீ என்னை சரியா புரிஞ்சுக்கணும்னுதான் இவ்ளோ நாள் சொல்லாம இருந்தேன் மலர். வள்ளி என்னோட சின்னத்தை பொண்ணு.” 

Advertisement

குழலியின் முகம் சட்டென மாறிவிட்டது. வெறுமென அவள் தன்னுடைய அத்தை மகள் என்று அவன் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது. பீடிகை வைத்து அவன் ஆரம்பித்தது மட்டுமின்றி மாரியம்மாளின் வார்த்தை கொடுத்த தாக்கம் அதனை எளிதாக எடுக்கவிடவில்லை. நெற்றி சுருக்கி அவன் சொல்லப்போவதை ஏற்க தயாரானது போல் பார்த்து நின்றாள். அதான் சொல்லிட்டேனே என்று எதிர்ப்பார்வை பார்த்தவன் அவளிடம் தொனித்த கேள்வியில் பார்வையை விலக்கிக்கொண்டான். 

Advertisement

“திடீர்னு கிளம்புற நேரத்துல உனக்கு ஏன் இந்த கேள்வி வந்துச்சுனு புரியல, இன்னொரு நாள் ஃபிரீயா பேசலாமே.” என்று அவன் சொல்ல, ஆரம்பித்துவிட்டு இதென்ன பாதியில் விடுவது என்று மனம் படபடத்தது குழலிக்கு. தலையை இடவலமாக அசைத்தவள் இப்போதே சொல்லவேண்டும் என்பது போல் நிற்க, 

“ட்ரையுனுக்கு லேட் ஆகுது மலர்.” என்று கைக்கடிகாரத்தை பார்த்துச் சொன்னான்.

“லேட்டானாலும் பரவாயில்லை, பஸ்ல போயிப்பேன்.” 

Advertisement

“இதென்ன பிடிவாதம்.”

“அந்த பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உங்க காலையே சுத்தி சுத்தி வந்திருக்கும்னு சொல்றாங்க அத்தை, நீங்க என்னென்னா அந்த பொண்ணை பத்தி சொல்றதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க. அப்படியே விட்டுட்டு கிளம்பணுமா நான்?” நெஞ்சை நிமிர்த்தி கண்டனமாய் அவள் பார்த்து நிற்க, நெற்றியை தேய்த்துக்கொண்டு ஓரடி பின்னெடுத்து அறைக்குள்ளேயே அங்குமிங்கும் அலைந்தவன்,

“ப்ச், மலர் மலர்… எப்படி சொல்றது. உன்கூட பழகி வாழ ஆரம்பிச்ச இந்த கொஞ்ச நாள்லதான் காதல்னா என்னனு முழுசா உணர்ந்திருக்கேன். அதுக்கு முன்னாடி வயசுல வந்த ஈர்ப்பு மாதிரி அது. ஆசையா அவ பார்த்தது பிடிச்சிருந்தது. உரிமையெடுத்து எனக்காகன்னு அவ மெனக்கெட்டு பண்ண விஷயங்கள் எல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு தோணுச்சி. அவளோட நல்லா இருப்பேன்னு நினைச்சேன் ஆனா நாங்க நல்லாயிருப்போம்னு அவ வீட்ல யாருக்கும் தோணல.” என்றவன் தொடர்ந்து நடந்ததை விளக்கினான். 

வள்ளி படித்து முடித்ததும் அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கந்தசாமி வந்து சொல்ல, இனியும் எவ்வளவு நாள் யோசித்துக்கொண்டே இருப்பது என்று முடிவிற்கு வந்தவனாய் வள்ளியை பெண் கேட்க சொல்லிவிட்டான். மாரியம்மாள் ஒத்துக்கொள்ள மாட்டார் முதலில் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று கந்தசாமி சொல்லிச் சென்றுவந்தவர் முகம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. என்னவென்று விசாரித்தவனிடம் அவர்களின் மறுப்பை கூற, இவன் நேரே சென்றுவிட்டான். 

“அத்தை, அவசரப்படாம யோசிச்சி முடிவெடுக்கலாமே.”

“யோசிக்க ஒன்னும் இல்லை முகிலு.” என்று அவர் முகத்தை திருப்ப, அவன் பார்வை அங்கிருந்தவர்கள் மீது படிந்தது. அந்நேரம் தங்கை வீட்டிற்கு வந்திருந்த பெரியத்தையை புருவம் சுருக்கிப் பார்த்தான். இங்கு வருவதை அவர் சொல்லவும் இல்லை அவன் வீட்டிற்கு வரவுமில்லை.

“உனக்கும் வள்ளிக்கும் பதினோரு வயசு வித்தியாசம் வருது முகிலு. சரியா வராதுன்னு அவ நினைக்குறா.” என்று அவன் பெரியத்தைதான் ஆரம்பித்தார்.

“மனசு ஒத்ததுக்கு அப்புறம் இந்த வித்தியாசம் எதுக்கு?”

“அவ சின்ன பொண்ணு கண்ணுலபடுறது எல்லாம் பச்சைனு நினைச்சிட்டு இருக்கா. நாங்களும் அப்படியே இருக்க முடியுமா?”

“என்ன சொல்றீங்க?” நெற்றிக்கண் திறக்காத குறையாக நின்றான் முகிலன். தன் அன்னையிடமிருந்துதான் எதிர்ப்பு வரும் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்க, இப்படி அத்தைகளிடமிருந்தும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை அவன்.

“அண்ணன் ஒரு பத்து பவுன் சங்கிலி என் அக்காவுக்கு கொடுத்ததுக்கும் என் வீட்டுக்காரர் கஷ்டப்பட்டப்போ ரெண்டு மூணு தடவை தேவைக்குனு பணம் வாங்குனத்துக்கு அப்புறம் உன் அம்மா மொத்தமா மாறிட்டாங்க. என்னமோ நாங்க என் அண்ணன் குடும்பத்தை சொரண்ட நேரம் பாத்துட்டு இருந்த மாதிரி. எப்போ பாத்தாலும் சாடையா பேசுறதுனு குத்திட்டு இருக்காங்க. உலக நடப்பு தெரியாத சின்ன பொண்ணு வள்ளி, அவளால உன் அம்மா கூடவெல்லாம் குடும்பம் பண்ண முடியாது. அவங்களோட உருட்டலுக்கு எல்லாம் இவ பணிஞ்சி போகணும்னு எதிர்பாப்பாங்க, அப்படி குனிஞ்சி மருகிப்போகவா சீராட்டி வளர்த்து வச்சிருக்கேன். முன்னமே உங்களை தள்ளி வச்சிருந்தகனும், நாந்தான் தப்பு பண்ணிட்டேன்.” என்று மல்லுக்கு நின்ற வள்ளியின் அம்மா இறங்கவே இல்லை.

அம்மா ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான். வேண்டுமென்றால் அவரையே கூட்டி வந்து பேச வைக்கிறேன் என்றும் சொல்லிப்பார்த்தான் மசியவில்லை வள்ளி வீட்டினில்.

“அன்னைக்கு என் பயிரெல்லாம் செத்து கையில காசில்லாம இருந்தப்போ என் அண்ணன் இருக்காருன்னு இவ உன் அப்பாட்ட காசு வாங்கிட்டு வந்துட்டா. அதை திருப்பி கொடுக்க வந்தா தெனாவெட்டா பாக்குது உன் அம்மா. அன்னைக்கே உங்க சொந்தத்துல கை நனைக்ககூடாதுனு முடிவு பண்ணிட்டேன். உன் சித்தப்பா பசங்களுக்கு கூட என் பொண்ணை கொடுக்க மாட்டேன் உனக்கு எப்படி?” என்று வள்ளியின் அப்பாவும் நிற்க, அவர்களை வெல்ல முடியாமல் திரும்பிவிட்டான் முகிலன்.

“நீ எதுக்கு ப்பா அம்மாவை கலக்காம அவங்களுக்கு பணத்தை தூக்கி கொடுத்த? அதான் அம்மாவும் கடுப்புல இவங்களை பேசிட்டு இருக்கு. இதுதான் சாக்குன்னு இவங்களும் இப்போ மறுக்குறாங்க.” என்று தந்தையை கடிந்துகொண்டான் முகிலன். 

“ரெண்டு பேரும் கண்ணை கசக்கிட்டு இருக்குறப்போ என்னடா பண்றது? உன் அம்மாகிட்ட சொல்லிட்டுதான் செஞ்சேன்.” 

“அப்புறம் ஏன் அம்மா அப்படி பேசுது?”

“ஏற்கனவே அவங்களுக்கு நிறைய செஞ்சாச்சு. இனி எல்லாம் உனக்குத்தான்னு சொன்னா… வீட்ல பொறந்த பொண்ணுங்க கண்ணீர் சிந்தும் போது பாத்துட்டு இருக்க முடியுமான்னு சத்தம் போட்டுட்டு கொடுத்தேன். அந்த கோவம் அவளுக்கு.” என்று நொந்து பேசினார் கந்தசாமி. அவருக்கும் புரிந்துபோனது தான் இன்னும் கொஞ்சம் சுதாரிப்பாய் சுமூகமாக செய்திருந்தால் இன்று மகனின் ஆசைக்கு முட்டுக்கட்டை விழுந்திருக்காதோ என்று. 

பின் மாரியம்மாளிடம் பேசிப்பார்த்தனர். அவர் கொஞ்சம் தணிந்து சென்றால் தங்கை ஒத்துக்கொள்வாள் என்று கந்தசாமி நம்ப, மாரியும் பிடிவாதமாய் நின்றார்.

“பொறந்த வீடுன்னு அப்போவே அப்படி சிலுப்புவா இப்போ பொண்ணையும் கொடுத்துட்டா கேக்கவே வேண்டாம்.” என்று ஒரேடியாய் மறுக்க, இவனும் அத்தை, சித்தப்பா என்று எல்லார் வீட்டை வாசலையும் ஏறிவிட்டான் யாருக்குமே இறங்கி வந்து இவன் சார்பாய் நிற்கும் எண்ணம் இல்லை. 

“இப்படி எல்லாரோடைய எதிர்ப்பையும் மீறி நாம சேர்ந்தா நல்லா இருப்போம்னு தோணல வள்ளி.” என்று வள்ளி வந்து கேட்ட சமயம் இவனும் சோர்ந்தவனாய்  பின்வாங்கிவிட்டான்.

“அத்தான்…” கண்ணீருடன் வள்ளி அன்று ஏறிட்டது பலநாள் அவன் உறக்கத்தை தொலைத்திருக்கிறது.

“அப்படி ஒன்னும் நாம பழகிடலையே வள்ளி. கடந்துடலாம்.” என்று அவளிடம் எளிதாக சொல்லிவிட்டான். காலம் தாழ்த்தாமல் விரைவிலேயே அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டிக்கொடுத்துவிட்டார்கள். திருமணத்திற்கு சென்று வந்தவன் அன்றையோடு அவளை மறக்க உறுதி பூண்டு வெற்றியும் கண்டுவிட்டான். ஆனாலும் சிறு துளியாய் இன்னும் அவள் நினைவு இருக்கவே செய்கிறதே. 

“ஆனா அன்னைக்கு நான் சொன்ன மாதிரி அவளால கடக்க முடியல. பழகலைனு நான் நினைச்சேன், ஆனா அவ…” தடதடக்கும் மனதின் பூகம்பத்தை மறைத்தபடி மனைவியிடம் அனைத்தையும் அவன் சொல்லி முடிக்க, வெறுமையாக பார்த்தவள் கண்களில் நீர்கட்டியது. 

“மலர்…” தவிப்பாய் அவள் கை பற்றப்போக, மறுப்புடன் பின்னகர்ந்தாள் குழலி. 

“மலர் நான்…”

“என்கூட வாழ ஆரம்பிச்ச அப்புறம் காதல்னா என்னனு புரிஞ்சிகிட்டேனு சொன்னீங்களே. நமக்குள்ள இருக்குறது காதலா?” சந்தேகமாய் அவள் கேட்க, முகிலனின் உயிர் துடித்தடங்கியது.

“என்னடி இப்படி சொல்ற? நீதான் எனக்கு எல்லாமே.” 

கன்னம் தொட்ட கண்ணீரை புறங்கையால் துடைத்தவள் துடிக்கும் இதழ்களை அடக்கி, “நாந்தான் எல்லாமேன்னா எப்போவோ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருப்பீங்க.”

பதறித் தவித்தவன், “இன்னமும் பழசையே நினைச்சிட்டு இருக்கான்னு எனக்கே நம்ம கல்யாணத்துக்கு மறுநாள்தான் தெரியும்.” என்று தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப்பார்த்தான்.

“ஓ! அதான் இந்த ஊரை விட்டு வர அவ்ளோ யோசிச்சீங்களா? உங்க அத்தைங்க குடும்ப வந்தப்போல்லாம் சார் முகம் ஏன் சோர்ந்து போச்சுன்னு இப்போ புரியுது.” என்று அவள் வெறுத்து பேச பேச, மனைவி தன்னை தவறாய் புரிந்துகொள்கிறாள் என்று படபடத்தது முகிலனுக்கு.

“கூடவே வளர்ந்த பாசமோ என்னவோ கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன்தான் ஆனா சத்தியமா என் மனசுல உன்னைத்தவிர யாருமில்லைடி.”

“யாரும் இருக்காங்க இல்லை, அது உங்களை பாதிக்கும் போது என்கிட்ட வந்து சொல்லி இருக்கணும் நீங்க.” அவன் மறைத்ததை ஏற்க முடியாமல் நின்றவளுக்கு அவள் மறைத்த விஷயமும் நினைவு வர, கண்ணைத் துடைத்தவள் கணேஷ் பற்றி சொல்லிவிட்டாள்.

“அந்த உறவுல எதிர்பார்ப்பு இருந்துச்சே ஒழிய எந்த அன்பும் இல்லை. இப்போ என் மனசுலையும் அந்த நினைவுகள் இல்லை. ஆனா உங்களுக்கு அப்படி இல்லைல…” என்று தேம்பியவளை நெருங்க முடியாமல் நின்றான் முகிலன்.

“முன்னால் காதலி கண்ணீர் சிந்துறப்போ நாம மட்டும் எப்படி பொண்டாட்டியோட இருக்குறதுனு நினைச்சி இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்களோ?” என்று அச்சு பிசாகாமல் அவன் எண்ணத்தை கண்டுபிடித்தவள் கண்ணீர் நிற்கவே இல்லை.

“மலர் அழாதடி… கஷ்டமா இருக்கு நீ இப்படி அழறது…”

“எனக்கும்தான் கஷ்டமா இருக்கு. எனக்கே எனக்கான உறவா உங்களை ஏத்துக்கிட்டு, உங்களை பிரிய முடியாம கஷ்டப்பட்டு, உங்களை தேடிகிட்டு வந்தா நீங்க எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சிருக்கீங்க. என்கிட்ட சொல்லணும்னு தோணலைல உங்களுக்கு. நான் யாரு அப்போ?” என்ற கேள்வியே அவளை உணர்ச்சிகளின் பிடிக்குள் தள்ள, அவளால் நிற்க முடியவில்லை. 

தள்ளாடியவளை ஓடி வந்து தாங்கிப்பிடித்தவன் அவள் கன்னம் பற்ற, அவன் கண்களும் கலங்குவது போல் இருந்தது, “இப்படியெல்லாம் பேசாத. அது பழசு, சொல்லி இருக்கனும்தான். உன்னை கஷ்டப்படுத்த வேணாம்னுதான் விட்டுட்டேன்னே ஒழிய உன்கிட்ட மறைக்கணும்னு இல்லைடி. நீ எனக்கு எவ்ளோ முக்கியம் நாம பிரிஞ்சி இருந்த நாள்ல புரிஞ்சிக்கிட்டேன்…”

“பொய் பொய் பொய்…” என ஆவேசமாய் அவனை தள்ளிவிட்டாள்.

“வேலைக்கு போக ஆரம்பிச்ச நாள்லேந்து உங்களை பிரிஞ்சி இருக்க முடியாம நான்தான் எப்போ அங்க வர்றீங்கன்னு கேட்டுட்டே இருந்தேன். நீங்க சந்தோஷமா இங்கேயே தான இருந்தீங்க.”

“அவ அப்படி அழுதுட்டு போகவும் என்னால வேற யோசிக்க முடியல மலர்.”

“என்கிட்டேயே என்னை பத்தி யோசிக்க முடியலைன்னு சொல்ற அளவுல தான் உங்க காதல் இருக்கு.” என்றவளுக்கு தாளவே முடியவில்லை. அவனின் நியாயங்கள் தனக்கு அநியாயம் செய்துவிட்டது என்று நினைக்க நினைக்க நெஞ்சம் எகிறித் துடித்தது. 

அழுகையை மட்டுப்படுத்த அங்குமிங்கும் நடந்தவள் சில நிமிடங்களில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு கண்களை அழுந்தத் துடைத்தாள். ஊருக்கு எடுத்து வைத்திருந்த பையை எடுக்கவென அவள் கை நீள, அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் அதை சட்டென தன்வசப்படுத்தி,

“இப்போ போக வேண்டாம் நீ.” என தடுத்தான்.

அவன் சொன்னதை காதில் வாங்காதவளாய் பையை அவனிடமிருந்து பிடுங்கும் நோக்கில் இருந்தாள்.

“நான் போகணும். என்னால இங்கிருக்க முடியாது.”

“போகலாம் ஆனா இப்படி வேண்டாம். ஒருநாள் லீவ் போடு, நாளைக்கு போலாம்.” என்னவும் இருக்கட்டும் மனம் கசந்து அழுகையுடன் அவள் செல்ல வேண்டாம் என்பது அவன் எண்ணமாய் இருந்தது. 

“எல்லாமே உங்க இஷ்டத்துக்கு முடியாது மிஸ்டர். இப்போ கொடுக்க முடியுமா முடியாதா? முடியாதுனாலும் பிரச்சனை இல்லை, அங்கேயே என் திங்ஸ் எல்லாம் இருக்கு, மேனேஜ் பண்ணிப்பேன்.” என்று கோபமாய் பையை விட்டுவிட்டு அவள் புறப்பட, தோல்வி தழுவியவனாய் அவள் கைப்பிடித்து,

“நானே கொண்டுவந்து விடுறேன்.” என்றதும் அறை வாயிலில் அப்படியே நின்றாள். அவளுக்கும் பெரியவர்கள் முன் தங்களின் மோதலை வெளிக்காட்ட விருப்பமில்லை.

நேரமாகிவிட்டது என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பிவிட, மனைவியை பிடித்துக்கொண்டார் கந்தசாமி.

“மருமவளை என்னமாச்சும் சொன்னியா நீ?”

“எனக்கென்ன வேற வேலை இல்லையா?” காரணமே இல்லாமல் தன்னை எதற்கு சீண்டுகிறார் என்று ஏந்துகொண்டு வந்தார் மாரியம்மாள்.

“நீ ஒன்னும் சொல்லாமையா அழுத மாதிரி குழலி முகமே சிவந்து போய் கிடக்கு. உன் புள்ளையும் சமாதானம் பண்ணாம அப்படியே கூட்டிட்டு போறான்.”

“போவாதேனு முகிலு சொல்லியிருப்பான் இவ கேக்காம போகவும் டோஸ் விட்டிருப்பான் இதுல என் தலையை ஏன் உருட்டுறீங்க.” என்று இவர் தனி கதை கட்டினார்.

மனைவியை சந்தேகமாய் பார்த்தாலும் உறுதியாக காரணம் தெரியாததால் பின்னர் மகனிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். 

மூக்கை உறிஞ்சிக்கொண்டு வரும் மனைவியிடம் இவன் என்ன முயன்றும் பேசமுடியவில்லை, அவள் பேசவிடவில்லை. இரயில் நிலையம் வந்தவுடன் பையை எடுத்துக்கொண்டு அவனை கண்டுகொள்ளாது விறுவிறுவென இவள் உள்ள செல்ல, வண்டியை அவசரமாக நிறுத்திவிட்டு ஓடிச்சென்றான் முகிலன். கோவத்தில் வேக நடையிட்டு இவள் முன்னேற, ஓடி வந்து அவளிடமிருந்து பையை வாங்க முயன்றவனை தள்ளிவிட்டு பையை தன்னுடம் இழுத்து பிடித்துக்கொண்டாள்.

“என்னால முடியும். யாரும் என்னை தாங்கணும்னு இல்லை, யாரும் எனக்காக வரவேணாம்.” பேசக்கூடாது என்று நினைத்தாலும் தன்னை மீறி பேசிவிட்டவளை ஆயாசமாக பார்த்தான் முகிலன்.

“இப்படில்லாம் பேசாத மலர்.”

உன்னிடம் எனக்கென பேச்சு என்று அவள் நின்றுகொள்ள, இரயில் சரியாக வந்துசேர்ந்தது. இவனிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் ஏற, பின்னோடு ஏறப்பார்த்தவனை நகர்த்தியது சிறிய கூட்டம். நெற்றியை தேய்த்துக்கொண்டு ஜன்னலின் வழியே மனைவியை தேடிக்கொண்டு நடந்தான். வேண்டுமென்றே படுக்கவென உயர்த்தி போடப்பட்டிருந்த நடு இருக்கையில் உடனே ஏறி படுத்துவிட்டாள் குழலி. இவன் அவளை தேடிப் பிடிப்பதற்குள் இரயில் நகர்ந்துவிட, நெற்றியில் அடித்துக்கொண்டு ஓய்ந்துபோய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். 

வள்ளி பற்றி அறிந்தபின் தவறான புரிதலோடு பிரிவினை வந்திடக்கூடாது என்றுதான் இத்தனை நாள் அவன் காலம் தாழ்த்தியது. இன்று அதுவே நடந்துவிட அழுகையுடன் செல்லும் மனைவியை தொடர்ந்து சென்று சமாதானம் செய்ய முடியாத தன் கையாலாகாதனத்தை எண்ணி நொந்துகொண்டான். சென்ற முறை ஊர் செல்லும் முன் எத்தனை காதலும் கனிவும் தவிப்புமாக காதலை சுமந்து அதன் பிரிவை எண்ணி கலங்கிய முகத்தோடு கிளம்பினாள் இன்றோ உணர்ச்சிக்கொதிப்பில் உள்ளம் வெதும்பி கிளம்பிச் சென்றிருக்கிறாள். அவளின் கசங்கிய முகம் அவனுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 

சில நேரம் அங்கேயே இருந்தவனை கொசுக்கள் மொய்த்து வீட்டுக்கு அனுப்பிவிட, கந்தசாமி இவனுக்காக காத்திருந்தார். அதிசயமாக மாரியம்மாள் உறக்கத்தில். இவன் விசாரிக்க, அவர் இவனை விசாரித்தார். தங்களுக்குள் சின்ன மனக்கசப்பு, சரியாகிவிடும் என்று சமாளித்து வந்து படுத்தவனுக்கு உறக்கம் தூர சென்றது. என்றைக்கும் படுத்தவுடன் உறங்கிவிடுபவன் இன்று உடல் சோர்ந்து உறக்கத்திற்கு கெஞ்சும் வரை விழித்தே கிடந்தான். இடையிடையே மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவே இல்லை. எதுவும் பார்க்கப்படவில்லை. 

நிறைய யோசனைகள், சுயஅலசல்கள். மலரின் வார்த்தைகளை கிரகித்து அவள் கோவம் எதனால் என்பதை புரிந்துகொள்ள முயன்றான்.  

இரண்டு நாள் வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. வாடிக்கையாளரை திருப்திப்படுத்தி வாங்கவைக்கவில்லை என்று வேலையில் மேலிடத்திலிருந்து வரும் வசவுகள் எண்ணிக்கை அதிகரித்தது. வீட்டினில் யாரிடமும் முகம் கொடுக்கவில்லை. மாரியின் பேச்சுக்கு பயந்து நேரத்திற்கு உணவு மட்டும் உள்செல்கிறது. மனைவி அலைபேசி அழைப்பை ஏற்பதில்லை. குறுஞ்செய்திகளை பார்ப்பதில்லை. முற்றிலுமாக அவனை தவிர்க்க, தவித்துப்போனான் முகிலன். இடையே வள்ளியை பார்க்க நேர்ந்த சமயம் கூட எண்ணமெல்லாம் மனைவியிடம்தான். அத்தை மகள் கருத்தில் பதியவே இல்லை. மூன்றாம் நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவனது வாராந்திர விடுமுறையை இன்னொருவனிடம் பேசி சரிக்கட்டி மாற்றிக்கொண்டு முன்னரே சென்னைக்கு புறப்பட்டுவிட்டான்.

கடந்த இருமுறை விடியற்காலையில் சென்று நின்றபோது மனைவி  காட்டிய உணர்ச்சிகள் இன்று முற்றிலும் துடைக்கப்பட்டு, கடமைக்கு கதவை திறந்துவிட்டாள். அதுவே மனதை இரணப்படுத்த ஒன்றும் சொல்லாமல் அவள் அறைக்குச் சென்றவன் அவளுக்காக காத்திருக்க, கதவை சாற்றிக்கொண்டு வந்தவள் அப்படி ஒருவன் அறையில் இருப்பதை கண்டுகொள்ளாது அவள்பாட்டிற்கு விளக்கணைத்து படுத்துவிட்டாள்.

மனைவியின் விலகல் அவனை தடுமாறச் செய்ய, தவிப்புடன் அவள் தோள் தொட்டான்.

“மலர் இப்படி பேசாம இருக்காத…”

“மலர் ப்ளீஸ்… எனக்கு கஷ்டமா இருக்கு.”

“மூணு நாளா நான் நானாவே இல்லை. என் மண்டைக்குள்ள உக்காந்து குடையுற நீ.” என்று அவன் பேச பேச, விருட்டென திரும்பியவள்,

“அப்போ தூக்கி வெளில போட வேண்டியதுதான.” என்றாள் பட்டென்று. 

அதிர்ந்தவன் யோசியாமல் அவள் இதழில் லேசாக அடிவைத்து, “என்னடி பேசுற. உன்னை ஒரு ரெண்டு மூணு மாசமா எனக்குத் தெரியுமா அதுக்குள்ள என் மூளை முடுக்கெல்லாம் போய் ஒட்டிகிட்ட. இனி நானே நினைச்சாலும் உன்னை விலக்க முடியாது. இதுல நீ சொல்றேன்னு நான் தூக்கிபோடணுமா? குத்தலா குடைச்சலோ என்னோடது.” என்று அவளை இழுத்து அழுத்தமாக கட்டிக்கொள்ள, அவளிடமிருந்து விலகலையும் அடிகளையும் எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளது உடல் இளக்கம் இனிய அதிர்வாய். கணவன் வாயிலிருந்து உரிமையாய் வார்த்தை வந்து விழுந்த சமயம் மனதின் காயமெல்லாம் பின்சென்று ஆசுவாசம் பிறந்தது குழலியிடம். அது உடலிலும் பிரதிபலிக்க கணவனின் கையணைப்பில் தளர்ந்து அமைதியாய் இருந்தாள். 

மெல்ல விலகியவன் அவள் முகத்தை கையில் ஏந்தி, “சாரி மலர். எல்லாமே என் தப்புதான். ஆரம்பத்துலேந்து நீ வெளிப்படையா இருந்த, நாந்தான் மனசுல ஒரு படம் வரைஞ்சி வச்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி உன்னை வலைச்சிடலாம்னு இருந்துட்டேன். அது எவ்ளோ பெரிய தப்புனு அன்னைக்கு நீ உன்னோட சின்ன வயசு கதை சொன்னியே அப்போவே புரிஞ்சிடுச்சு. இந்த மூணு நாள்ல பழசை நான் சொல்லாம விட்டது எவ்ளோ பெரிய தப்புனு உணர்ந்துட்டேன். இனி நீ சொல்றதுதான். நான் என்ன பண்ணட்டும்?” என்று அவளிடமே பணிந்துவிட, அவனைவிட்டு விலகியவள் விட்டத்தை பார்த்தவண்ணம் மல்லாக்க படுத்தாள்.

“மலர்…”

“கல்யாணத்துக்கு பேசும் போது உங்க வேலை, சம்பளம் எதுவும் என் கருத்துல பதியல. என் குடும்பத்தோட செட் ஆவீங்களானுதான் யோசிச்சேன். நீங்களும் இங்க வந்துடுவீங்கன்னு சொல்லித்தான் சொன்னாங்க. அதுக்கு அப்புறம் எத்தனையோ முறை நான் அதை கேட்டு க்ளியர் பண்ண முயற்சி பண்ணப்போ எல்லாம் தட்டிகழிச்சிருக்கீங்க. அதுக்கு உங்ககிட்ட ஒரு காரணம் இருக்குல்ல அதை என்கிட்ட சொல்லியிருக்கணும், அதுதான் காதலோட அடித்தளம்.” 

“புரிஞ்சிட்டு மலர். இனி இப்படி ஆகாது.” என்று வாக்கு கொடுத்தவன் அவளை தவிப்புடன் பார்த்தான்.

“அந்த கணேஷ் சொன்னேன்ல அவன் உண்மையை சொல்லாம விட்டதுதான் என்னை ரொம்ப கோபப்படுத்தி வெறுக்க வச்சிடுச்சு. இன்னைக்கு அதே மாதிரி ஒரு வேலையை நீங்களும் செஞ்சிருக்கீங்க, ஆனா உங்களை வெறுக்க முடியல. கோபம் மட்டும்தான் வருது.” என்றவள் எதையோ யோசிக்க, நெருங்கி சென்று அவள் கைப்பிடித்தான்.

“எதிர்பாக்காத நேரத்துல எதிர்பாக்காத விஷயங்கள் செஞ்சு உன்னை சந்தோசப்படுத்துறது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் நம்பிக்கையும் ஒளிவுமறைவில்லாத உறவுன்னும் உணர்ந்துட்டேன். சின்ன சின்ன சங்கடமா இருக்கட்டும் இல்லை பெரிய பிரச்சனையாவே இருக்கட்டும் அதை கடந்து வர ஒருத்தர் ஒருத்தர் மனசு விட்டு பேசி உறுதுணையா நின்னு கைகொடுக்கிறதுதான் காதலை உயிர்ப்போட வச்சிக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன் மலர். 

என்ன இதுவரைக்கும் எல்லாத்தையும் பேசுன நாம முக்கியமான விஷயங்களை கோட்ட விட்டுட்டோம்…” என்றவனை அவள் முறைக்க, தன்னைத்தானே நெஞ்சில் அடிப்பது போல் செய்தவன், “நாந்தான், நானேதான் கோட்டை விட்டுட்டேன். முன்னாடியே சொல்லியிருந்தா நீயும் உன் முன்னாடிய சொல்லியிருப்ப…” என்று கணேஷை குறிப்பிட்டவன் முகமே ஏதோபோல் மாறியது.

“என்னாச்சு?” இவள் நெற்றி சுருக்க,

“அவன் பேஸ்புக் பாத்தேன், அதான் அந்த கணேஷ்.” என்றவனிடம் லேசாக பொறாமையின் சாயலும் அசூயையும். அவள் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. கணேஷ் அத்தனை முக்கியமில்லை என்று நினைக்க,

“அவனை பத்தி சொல்லும்போது கூட ஒன்னும் தெரியல. மூணு நாளா உன்னை பத்தியே யோசிச்சதுல அவனும் நியாபகம் வந்து தொலைச்சான். எனக்கு புடிக்கல அவனை…” என்றான் முகம் சுருக்கி. 

“ஆனா வள்ளியை உங்களுக்கு புடிச்சிதே…” என்று அவள் சொல்ல, அவன் உடல் இறுகி தளர்ந்தது.

“அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு இருந்தா ஊர்ல ஓட்டி தள்ளிடுவாங்க. அப்படித்தான் என் பார்வை வள்ளி பக்கம் போயிருக்கும்.” என்றவனுக்குள்ளும் அப்படித்தான் என்ற எண்ணம். 

“எப்படியோ போட்டும்னு விடமுடியல. எல்லார் வீட்டுக்கும் அலைஞ்சி திரிஞ்சது எல்லாம் நியாபகம் வந்துடுது. அவளை பாக்கும் போதெல்லாம் அன்னைக்கு ரொம்ப சுலபமா மறந்துடலாம்னு சொலிட்டேனோன்னு ஒரு குற்றவுணர்ச்சி. அவ மறைக்கலைனு சொல்லவும் அப்படியே விட்டுட்டு வர மனசு ஒப்பல, சரிபண்ணதும் உன்கிட்ட வரலாம்னு இருந்தேன்.” என்று அவனும் மல்லாக்க படுக்க, அவன் புறம் திரும்பி அவன் நெஞ்சை நீவிவிட்டாள் குழலி.

“பழசை தூசிதட்டுனா மூளைக்குள்ள ஏறி குடைஞ்சி எப்படியாவது வெளிய வந்து கஷ்டப்படுத்தும். அதை விட்டு அடுத்து என்னனு பாக்கலாம்.” என்று சொல்ல, சட்டென ஒளிர்ந்தது அவன் முகம்.

“நீ ஓகேதான இப்போ? இனிமே இப்படி பேசாம எல்லாம் இருக்காத என்னோட… அழுத்துட்டும் போவக்கூடாது.” என்று செல்லக்கட்டளைகள் இட்டான்.

“நீங்களும் இனி எதையும் மறைக்க கூடாது. சின்னதோ பெருசா, புடிச்சதோ புடிக்காததோ எதுனாலும் என்கிட்ட சொல்லணும். நான் கோவப்படுவேன், சங்கடப்படுவேன்னு ஒரு விஷயத்தை மறைச்சிட்டு பின்னாடி அது தெரியவரப்போ மனசு விட்டுப்போயிடும். எனக்கு அது வேண்டாம். அதே மாதிரி மனசுக்குள்ளேயே போட்டு வச்சிக்கிட்டு என்னையும் வாட்டக்கூடாது.” என்று சத்தியம் வாங்காத குறையாக தெளிவுபடுத்திக்கொண்டாள் குழலி.

“மலர் சொல்லே மந்திரம்.”

“இன்னைக்கு லீவ் போட முடியாது.”

“அடடா என் மாமியார் கையால சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்குறேன்மா. மூணு நாளா தூக்கமே இல்லை.” என்றவனை செல்லமாக அவள் அடிக்க, அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன்,

“இனிமே நம்ம லைஃப்ல நோ டார்க்னெஸ் எல்லாம் இனிமே வெட்ட வெளிச்சம் தான்…”

“யூ மீன் நோ பி.எம் ஒன்லி ஏ.எம்(a.m)?”

“எஸ் எஸ்… அகன், மலர் தான் இனி…” என்றவன் அவளை அணைத்துக்கொண்டு சுகமான உறக்கத்திற்கு சென்றான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!