Skip to content
Post Views: 2,508
“விடுங்க என்னை. நான் கோவமா இருக்கேன்.” விலகி இருந்தபோது அவன் தன்னை நெருங்க காத்திருந்தவள் அவன் நெருங்கவும் விலகும் வேலையை செய்தாள்.
அவன் பதிலே பேசவில்லை திமிரும் மனைவியை தன் பலம் கொண்டு அடக்கி அவள் தலையோடு தலை முட்டி உறங்க முயன்றான். இவள் பலம் திரட்டி அவனை தள்ள, இவன் அவளை முடக்க என போராட்டம் நீண்டது. ஒருகட்டத்தில் அவன் திடத்திற்கு எதிராய் போராட முடியாமல் அவன் கையணைப்பில் அமைதியாகிவிட்டாள் குழலி.
“என்கூட பேசாம இருப்பியா நீ?” அவள் அடங்கியதும் மெல்ல வாய் திறந்தான் முகிலன்.
“ஏன் நீங்க இல்லை?” கொஞ்சம் முறுக்கிக்கொண்டாள் குழலி.
Advertisement
“எவ்ளோ ஆசையா உன்கிட்ட வந்தா முகம் திருப்புற?”
“வர்றதுக்கு முன்னாடியே முகம் தூக்குனது யாரு?”
“நீ அப்படி பேசுனா எனக்கு கோவம் வராதா.”
Advertisement
“எனக்கு தோன்றதை சொல்லக்கூடாதா நான்?”
Advertisement
“சொல்லு நான் சொல்றதையும் கொஞ்சம் கேளு.”
“என்ன கேக்கல? வண்டில கொண்டுவந்து விடுறேனு சொல்றேன் கேக்காம ரேப்பிடோ போட்டு போறீங்க?”
“ஆசையாவா கூப்பிட்ட?”
Advertisement
“கூப்பிடுறாங்க ஆசையா… போனா போகுதுனு என் கோவத்தை விட்டு வந்தா இவர் யார்கூடேயோ போவாராம்…”
“எங்க போனாலும் கடைசில உங்கிட்ட தான் வரேன்.”
இப்படி இருவரும் வினாடி வினா விளையாட ஒருகட்டத்தில் இயல்பான பேச்சுவார்த்தை வந்துவிட்டது. ஊடலுக்கு பின்னான புரிதல் சற்று கூடியது போலத்தான் தெரிந்தது. கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவைத்து மெல்ல நெருங்கியவர்கள் ஊடலின் முடிவாய் கூடிக்களித்து இயல்புக்கு வந்தார்கள்.
“உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். வீடு பாக்கும் போதே ரெண்டு போர்ஷனா பாப்போம். மேல, கீழ அந்த மாதிரி இல்லை பக்கத்து பக்கத்து வீடு… ஒரு வீட்ல அத்தை இருக்கட்டும் இன்னொன்னுல நாம இருக்கலாம். ஊர்லேந்து அம்மா அப்பா வந்தாலும் சங்கடம் இல்லை.” ஒருவாரமாய் மூளையை கசக்கிப் பிழிந்து யோசித்த தீர்வை அவன் வெளிப்படுத்த, சோர்வை மீறி சோபையான புன்னகை உதயமானது குழலியிடத்தில்.
“இதை நான் யோசிக்கவே இல்லை…” என்று பாய்ந்து அவனை கட்டிக்கொண்டவள் முத்தத்தால் அவன் முகத்தை குளுப்பாட்டினாள். குளுமையாய் அதனை அனுபவித்தவன் அவளை கீழே புரட்டி கொஞ்சித் தீர்த்தான்.
“ஆனா என் பட்ஜெட் பாத்து பண்ணுமா… நாப்பது கையில வரும்னு நினைக்கிறன் அதுக்குள்ள எவ்ளோ வாடகை கொடுக்க முடியுமோ அதுக்கேத்த மாதிரி பாக்கணும்.” அவளை விட குறைவான ஊதியம் என்ற எண்ணத்தை அவள் அன்போடு ஒப்பிட்டு எளிதாக விரட்டியடித்தவன் கேலி போல் தன் நிதிநிலையை சொன்னான்.
“பாத்துடலாமே…” என்றவளுக்கும் யோசனைதான். இதுவரை தங்களின் ஊதியம், சேமிப்பு, நிதிநிலை பற்றியெல்லாம் விளக்கமாக பேசியதில்லை. மேலோட்டமாக இவ்வளவு வருமானம், இவ்வளவு சேமிப்பு என்று பேசியிருக்கிறார்கள். இனி அதை பற்றியும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
“நீ ஃபினான்ஸ் டீம்ல தான இருக்க? யூஜி முடிச்சாலும் இவ்ளோ பேக்கேஜ் கிடைக்குமா?” இத்தனை நாள் மனதின் ஓரத்தில் இருந்த கேள்வியை சமயம் பார்த்து கேட்டான்.
“வெறும் யூஜி முடிச்சா கிடைக்காது, மேல நிறைய படிக்கணும். மூணு பேர் படிப்பு, கல்யாணம் அதுக்கப்புறம் வர்ற செலவுனு எனக்கு கமிட்மெண்ட்ஸ் நிறைய. ரெகுலர்ல பி.ஜி பண்ண முடியாத சூழல், கரஸ்ல படிச்சேன். நிறைய செர்டிபிகேட் கோர்ஸ் பண்ணேன். கேப் விடாம என்னை நானே அப்டேட் பண்ணி இந்த பொஷிஷனுக்கு வந்திருக்கேன்.” என்றவள் குரலில் படிப்பை மூலதனமாக கொண்டு முன்னேறி வந்ததற்கான கர்வம் மிளிர்ந்தது. தொடர்ந்து என்னென்னெ படித்திருக்கிறாள் என்று மேலோட்டமாக பகிர்ந்துகொண்டாள். கேட்டவனுக்கு தலை சுற்றியது.
“நான்லாம் நாலு வருஷம் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி வேலை கிடைக்காம அலைஞ்சி ஏதோ கிடைச்ச வேலையை பாத்துகிட்டு இது சரிப்படாதுடானு இந்த ஊரை காலிபண்ணிட்டு போனேன். நீ உன் தகுதியை வளர்த்துக்கிட்டு நல்லா வளந்திருக்க, கிரேட்டி நீ…” விகற்பம் இல்லாது மனைவியின் வளர்ச்சியை எண்ணி பெருமைகொண்டான்.
“கிரேட்லாம் இல்லை. எனக்கு தேவை இருந்துச்சு. சந்தியாவுக்கு டீச்சிங்ல ஆர்வம்னு அந்த சைட் போய்ட்டா, வந்தனா கவர்மெண்ட் வேலைக்கு போகணும்னு காலேஜ் படிக்குறப்போலேந்து எக்ஸாம் ப்ரீப்பர் பண்ணி படிச்சி முடிச்சதும் வேலை வாங்கிட்டா. சந்தியா கல்யாணத்துக்கு தான் நகை வாங்க கொஞ்சம் சிரமப்பட்டோம். அப்புறம் மூணு பேருமே நகை சீட்டு போடுறது, ஆர்.டி, எப்.டி, மியூட்சுவல் ஃபண்டுனு சேவ் பண்ணி தான் இப்போ கையை கடிக்காம போய்ட்டு இருக்கு. முதல்ல அம்மா ஹெல்ப்பரா இருந்தாங்க. வந்தனா வேலைக்கு போனதுக்கு அப்புறம்தான் இனிமே வெளில வேலைக்கு போகக்கூடாதுனு சொல்லி நிறுத்தினோம். சும்மா இருக்க முடியாம இப்படி வீட்லேந்தே கைவினை பொருள் செஞ்சு விக்க ஆரம்பிச்சாங்க. நல்லா பொழுது போகுது, அவங்களுக்குனு வருமானமும் கொஞ்சம் வருது.” என்று கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டவள் திருமணத்திற்கு முன் மூவரும் சேர்ந்து அம்மாவை பார்த்துக்கொள்ளலாம் என்று ரிஷி சொன்னதை பகிர்ந்துகொண்டாள்.
“நம்மளே பாத்துக்கலாம் மலர். ஒன்னும் பிரச்சனை இல்லை.”
“இப்போ இப்படி சொல்லிட்டு நாளைக்கு முகம் தூக்க கூடாது. இன்னும் வந்தனாவுக்கு குழந்தை பேறு பாக்கணும், பேர் வைக்கிறது, காது குத்துன்னு எல்லாமே இருக்கு. அவளே பாத்துக்குற நிலைமைல இருந்தாலும் பொறந்த வீட்டு சீராட்டல்ல எந்த குறையும் வந்துறக்கூடாது. எங்க மூணு பேருக்குமே அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கணும்னு தான் கல்யாணத்தை இவ்ளோ தள்ளி போட்டேன். என்னை புரியுதுல உங்களுக்கு?” தன் எதிர்கால திட்டங்களை பகிர்ந்தவள் தவிப்புடன் அவனை ஏறிட்டாள்.
“புரியுது மலர்.”
“அப்போ வந்து செய்ய கூடாதுனு எல்லாம் சொல்லக்கூடாது.”
“எனக்கும் சேர்த்து நீதான் செய்யுற மாதிரி இருக்கும். எதுக்கும் இன்னும் கொஞ்சம் படிச்சிக்கோ.” லேசாக அவள் மூக்கை நிமிண்டி சிரிப்புடன் சொல்ல, அவன் கையை தட்டிவிட்டவள்,
“ஏன் சார் படிக்க மாட்டீங்களோ? ஏற்கனவே படிச்ச படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தம் இல்லை.”
“சம்பந்தப்பட்டது கிடைக்கலைன்னுதான் கிடைச்சதுல இருந்துட்டேன். இதுல தான் இனிமே எப்படினு பாக்கணும். அதுவரைக்கும் படிக்குறேன் தெரிஞ்சிக்குறேன்…” இறுதியில் விஷமமாக முடித்தவன் மனைவியை படிக்கும் வேலையில் இறங்கினான்.
ஆரம்பத்தில் சென்னை நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி மீண்டும் தலைநகருடன் ஒட்டிக்கொள்ள சிரமப்பட்டான் முகிலன். பயண நேரம் அதிகரிக்க, வேலை பளுவும் அதிகமிருந்தது. சில நேரம் அதனை வீட்டிலும் காண்பிக்க, குழலியும் முகம் தூக்குவாள். பின் யாரேனும் ஒருவர் இறங்கி வந்து சமாதானமாகிவிடுவார்கள்.
முழுதாக மூன்று மாதங்கள் கழித்து இரு வீடுகள் கிடைத்தது. கீழ் வீட்டை பிரபாவும் மேலே இவர்களும் எடுத்துக்கொண்டனர்.
“அவ வசதிக்கு என் புள்ளையை இழுத்துகிட்டா…” என்று மாரியம்மாள் பேசவே செய்தார்.
“நீ சொன்ன மாதிரி நாங்க தனியா தான் இருக்கோம். தனித்தனி சமையல், தனித்தனி வாடகை.”
“யார் வாடகை கொடுக்குறா?”
“மேல நான் கொடுக்கிறேன், கீழ அவ கொடுக்குறா.”
“நல்லா இருக்கே கதை. கட்டிக்கொடுத்ததுக்கு அப்புறமும் பொண்ணு சம்பாத்தியத்துல இருக்காங்களா அவ அம்மா?” ஏதாவது சொல்லியே பழக்கப்பட்டுவிட்டவர் போல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்தார். தேவையில்லாததை உதறித்தள்ள பழக்கிக்கொண்டான் முகிலன்.
ஊரிலிருந்து அவன் பெற்றோர், சென்னையில் இருக்கும் அவள் தங்கைகள் என அனைவரையும் அழைத்து பால் காய்ச்சி குடியேறினர். பழைய வீட்டில் இருந்த அனைத்தும் பிரபா வீட்டில் இறக்கிவிட்டார்கள். இவர்கள் பகுதிக்கு இனிதான் எல்லாம் வாங்க வேண்டும்.
“என் கடையில எம்பிளாயீ ஆஃபர் கிடைக்கும் அப்போ தேவையானது எல்லாம் வாங்கிக்கலாம். இப்போ வீண் செலவு வேண்டாம்.”
பிரபா ஏற்கனவே சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி இவளுக்கென சேகரித்து வைத்திருந்தார். அதை உபயோகப்படுத்திக்கொண்டனர். அம்மா வீடாக மாறிய கீழ் வீட்டினில் அனைத்தும் இருக்கையில் மேலே தானும் எல்லாம் வாங்கிப் போட வேண்டுமா, இனி எல்லாம் தனித்தனியா என்று வருத்தம் மேலிட்டது.
“கல்யாணம் ஆனா இதெல்லாம் நார்மல் அக்கா. அட்லீஸ்ட் நீ அம்மா பக்கத்துலேயே இருக்க.” என்று தங்கைகள் சமாதானம் செய்தனர்.
எங்கேயோ எட்ட இருப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று குழலியும் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். ஏதோ இந்த மட்டும் முகிலன் இறங்கி வந்து அவன் வீட்டினரையும் சமாளித்துவிட்டானே என்று ஆசுவாசம் கொண்டாள்.
இரு நாட்கள் இருந்துவிட்டு அவன் பெற்றோர் ஊருக்கு கிளம்பிவிட, வார இறுதியில் வெற்றிடமாக இருந்த வீடு ஏதோ போல இருந்தது குழலிக்கு. முகிலனும் வேலை முடித்து வர இன்னும் நேரமிருப்பதால் வீட்டை பூட்டிக்கொண்டு கீழே சென்றுவிட்டாள். அம்மாவுடன் பேசிக்கொண்டே நேரம் கடத்த, முகிலன் வந்ததும் மேலே வந்தனர். பிரபாவே இரவு உணவு செய்து கொடுத்துவிட பேசிக்கொண்டே உண்டு ஒதுங்க வைத்தனர்.
“உனக்கு வசதியா போச்சுடி மலர்… பொண்ணுக்கு சிரமம்னு அத்தையே காலைல மதியத்துக்கு சமைச்சி கொடுத்துடுறாங்க. சில நேரம் நைட்டும் அங்கிருந்தே எடுத்துட்டு வந்துர்ற. உன் காட்டுல மழை தான்.” கிண்டலாய் அவன் சொல்ல, எதுவும் குத்திக்காட்டுகிறானோ என்று பார்த்தாள்.
“என்ன பார்வை?”
“இல்லை அத்தை போகும்போதே சொல்லிட்டு போனாங்க… கீழ அம்மா இருக்காங்கனு கொஞ்ச கொஞ்சமா சமையலை கீழ மாத்தி அப்படியே மொத்தமா கீழ போய்டாதீங்க, தினம் சமைச்சி சாப்பிடுங்கனு. அதுதான் உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா?”
“மனசு கேக்காம ஏதாச்சும் சொல்லுவாங்க. சொல்லப்போனா இது எனக்கு லாபம்தான்…” அவள் புரியாமல் பார்க்க,
“காய்கறி, மளிகை சாமான் வாங்குற செலவு மிச்சம் பாரு எனக்கு. எல்லாமே கீழேந்து வந்துடுது…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, செல்லமாய் அடிகள் வைத்து அவன் மீதே சாய்ந்துகொண்டாள்.
“இப்போல்லாம் தினம் அத்தை பேசுறாங்க. முன்னாடியெல்லாம் என் நம்பர் கூட அவங்ககிட்ட இருக்காதுன்னு நினைச்சிருக்கேன்.”
“மாமியார் ரோல்ல ஃபிட் ஆகிட்டாங்க.” என்று இலகுவாக அப்பேச்சை முடிக்கப் பார்த்தான்.
“ஆடி மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல… உங்க கூட இருக்கேனா அம்மா கூட கீழே இருக்கேன்னானு கேட்டாங்க…”
“என்ன சொன்ன?”
“அவங்க பேசுனப்போ கீழ தான் இருந்தேன், அதை சொன்னேன்.”
“என்கிட்டேயும் சொன்னாங்க. நீ கீழ இருக்கேனு நானும் சொல்லி வச்சிருக்கேன். அப்படியே சமாளிச்சிக்கோ.” சில விஷயங்கள் பெற்றவர்கள் காதை எட்டாமல் இருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்றால் அதனை சொல்லாமல் இருந்துகொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டவன் இப்போதெல்லாம் ஓரளவு மாரியம்மாளை சமாளிக்க கற்றிருந்தான். அவர் தொலைவில் இருப்பதும் அவனுக்கு வசதியாக போய்விட, குடும்பத்தில் சலசலப்பு குறைந்திருந்தது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்கு சென்று விடுகிறார்கள்.
“அடுத்த வாரம் ஊர் கோவில்ல திருவிழா வருதாம், உங்களுக்கு லீவ் இல்லைனா என்னை மட்டும் வர சொல்றாங்க. என்ன பண்ணட்டும்?” இப்போது புதியதாய் மகனை விடுத்து மருமகளை ஊருக்கு அழைக்க ஆரம்பித்திருந்தார் மாரி. மகனுக்கு வாரத்திற்கு ஒருநாள்தான் விடுமுறை அதில் அவன் ஓய்வெடுக்கட்டும் இவளுக்கு இருநாள் இருக்கிறதே வரட்டும் என்று மருமகளை ஊருடன் பிணைத்து வைக்க முயல்கிறார்.
“ஆடி மாசம் மட்டுந்தான் இந்த விழா நடக்கும். நீ முதல்ல போ, பின்னாடியே லீவ் கிடைச்சா நானும் வரேன்.” என்று சொல்லி மனைவியை அனுப்பி வைத்தான்.
கணவனை விடுத்து தனித்து ஊருக்கு செல்வது அவளுக்கு ஒருமாதிரி சங்கடம் கொடுக்க, புரிந்துகொண்ட கணவன்,
“உன் இடத்துல இங்க நான் முன்னாடி நிக்குற மாதிரி, நீயும் என் சார்பா அங்க நிக்கணும் மலர். இதெல்லாம் அவாய்ட் பண்ண முடியாது.” என்று சொல்ல, அதிலிருக்கும் உண்மை புரிந்து விழாவில் கலந்துகொண்டாள்.
அதுவே ஒவ்வொரு பண்டிகைக்கும் தொடர்கதையாகியது. ஒவ்வொரு முறையும் அம்மாவை தனித்து விட்டு செல்ல சங்கடப்படுவாள்.
“சிலது எல்லாம் மாத்த முடியாது மலர். நம்ம வீடு கட்டுனதும் அத்தையும் ஊருக்கு கூட்டிட்டு போலாம்.” என்று அவள் சங்கடங்களுக்கு எல்லாம் தீர்வு கண்டு துணையாக நின்றான் முகிலன். பண்டிகைக்கால சீர் வரிசை செய்முறைகளுக்கு அவள் தங்கை வீடுகளுக்கு அவளுடன் சென்று முறை செய்தான். இவர்களுக்கு பிரபா செய்தார்.
“இதைத்தான் சொன்னேன். அவ குடும்பத்தையும் சேர்த்து நீதான் பாக்கணும்னு.” மாரியம்மாள் எப்போதும் போல் மல்லுக்கு நின்றார்.
“நான் ஒன்னும் செய்யல, அவ தான் எல்லாம் செய்யுறா. அவளுக்கு துணையா கூட இருக்கேன் அவ்ளோதான்.” என்றுவிடுவான் இவன். உண்மையிலேயே எல்லாம் அவள் செலவுதான். இவர்கள் வீட்டு செலவு போக மற்றது எல்லாம் அவனது சேமிப்புக்கு சென்றுவிடும். குழலி பிடிவாதமாக இவன் வருமானத்தை தன் சார்ந்தவர்களுக்கு தேவையின்றி உபயோகப்படுத்திவிடமாட்டாள். அதிலெல்லாம் மிகத்தெளிவாக திட்டமிட்டு சீராக கொண்டு சென்றாள் குழலி. அவளுக்கு சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் பொருட்டு அவனால் முடிந்த அளவு சுமூகமாகவே சென்றான் முகிலனும்.
“வந்தனா ப்ரெக்னென்ட்’ங்க…” மகிழ்வும் அழுகையுமாய் அவள் விஷயத்தை பகிர்ந்துகொள்ள புருவம் உயர்த்தி மலர்ந்த சிரிப்புடன் மகிழ்வை பகிர்ந்துகொண்டான் முகிலன்.
“நீ ப்ரெக்னென்ட் ஆனா கூட இவ்ளோ ரியாக்ஷன் வராது போலடி மலர்…” செல்லமாக அவள் தலையை பிடித்து ஆட்ட, வந்தனா கடந்து வந்த பாதைகளை பகிர்ந்துகொண்டவளுக்கு நெஞ்சம் நிறைந்தது.
“எல்லாமே… எல்லாமே செட்டில் ஆன மாதிரி இருக்கு… நீங்க என் லக்கி சார்ம்…” உணர்ச்சி மிகுதியில் கணவனை கட்டிக்கொண்டு அவள் விம்ம, மனைவியை ஆரத்தழுவினான் முகிலன்.
error: Content is protected !!