Skip to content
Post Views: 3,524
“என்னடா புதுமாப்பிள்ளை இப்போவே முகம் பளபளன்னு பேஷியல் பண்ண மாதிரி இருக்கு?” தள்ளிச் சென்று பேசிய நண்பன் அலைபேசியை வைக்கவும் அவனை தேடிக்கொண்டு வந்து கிண்டல் பேசினான் மகேஷ்.
லேசான சிரிப்புடன் மகேஷை எதிர்கொண்ட முகிலன், “கிளம்பலாமா?”
“ப்ப்பா ஒரு வார்த்தை உன் வாயிலேந்து வாங்க முடியுதா? அழுத்தம்டா. சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு மேனேஜர் கிட்ட கேட்டியாம்? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல.”
“டேய் நான் சும்மா விசாரிச்சேன்டா. இன்னும் அங்க போற ஐடியா வரல. யோசனையாவே இருக்கு.” கையிலிருந்த அலைபேசி அவன் மனதின் குழப்பத்திற்கு ஏற்ப இங்குமங்குமாய் ஆடியது.
Advertisement
“போன வருஷம் மீட்டிங்க்கு போய்ட்டு வந்து நீதான சொன்ன அங்க நல்ல வாய்ப்பு இருக்குன்னு.”
“சொன்னேன்தான். அப்போ போலாம்னு கூட தோணுச்சு… ப்ச் அதுக்குள்ள அத்தை வீட்ல பிரச்சனையாகி அப்படியே இருந்துட்டேன். ஆனாலும் இங்க விட்டுட்டு வெளில போக ஒருமாதிரி கடுப்பா இருக்குடா. இங்க இருக்குற நிதானமான வாழ்க்கை அங்க கிடைக்காதுல்ல…” என்றவனை முறைத்தான் மகேஷ்.
“எது… இங்க இப்போ நாம வாழ்றது நிதானமான வாழ்க்கையா? ஆறு நாள் பத்து பதினொரு மணி நேரம் வேலை பாத்துட்டு இன்க்ரிமென்ட், இன்சென்டிவ்னு அதே பொழைப்பு தான் பொழைக்குறோம். ஏதாவது சொல்லாத. இந்த வானமே எல்லைங்குறதை தாண்டி போய் ராக்கெட் விட்டுட்டு இருக்காங்க. இப்போ வந்து ஊர் தான் முக்கியங்குற. முன்னேறணும்னா சிலதை விட்டு கடந்து போகத்தான் வேணும்.”
Advertisement
“இவ்ளோ பேசுற நீ போக வேண்டியதுதான?” என்று வாயடித்துக்கொண்டே அன்றைக்கான கணக்கை கணினியில் ஏற்றிக்கொண்டிருந்தான் முகிலன்.
Advertisement
“வாய்ப்பு வந்தா போக மாட்டேன்னா சொல்றேன்? பையனை ஸ்கூல் சேத்துட்டேன் இப்போ போனேன்னா வரவை விட செலவுதான் எனக்கு. உனக்கு அப்டியா… வீட்டம்மா சென்னையில வேலை பாக்குதுனு சொல்ற நீயும் அங்க போனா ரெண்டு பேருமா சமாளிச்சிடலாம்ல.”
“ம்ம்க்கும்… இன்னும் எதையெல்லாம் சமாளிக்கணுமோ தெரியல.” என்றவனுள் அதற்குள்ளேயே யோசனை.
“நல்லவனே இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள சலிப்பா. கொஞ்ச நேரம் முன்னாடி போன் பேசிட்டு சிரிச்சிட்டு நின்னியே அந்த சில நிமிஷத்துக்காக எதையும் சமாளிக்கலாம்னு நினைச்சிக்கோ எதுவுமே ஒன்னை போட்டு அழுத்தாது.” என்று இலவச அறிவுரை வழங்கிவிட்டு அவனை துரிதப்படுத்தி கிளப்பிச் சென்றான்.
Advertisement
வீட்டிற்கு சென்றால் இவனுக்காகவே காத்திருந்தார் கந்தசாமி. ஆச்சர்யமாய் பார்த்தவன், “இன்னும் தூங்கலையா நீ?”
“நான் என்னமோ இல்லாததையும் பொல்லாததையும் உன்கிட்ட சொல்லி கொடுத்துடுவேன்னு ஆந்த கணக்கா உக்காந்திருக்காரு.” பதில் நொடிப்பாக மாரியம்மாளிடம் இருந்து வந்தது.
மனைவியை முறைத்தவர், “உன்கிட்ட பேசிடலாம்னு உக்காந்திருக்கேன். நீ சாப்பிடு பேசுவோம்.” என்று அவர் கூற, நேரம் கடத்தாமல் உண்ண அமர்ந்தான். மனதிற்குள் திருமணம் குறித்த விஷயமாக இருக்கும் என்ற யோசனை உதித்தாலும் என்னவாக இருக்கும் என்ற குறுகுறுப்புடன் உணவு முடித்து அவரிடம் அமர்ந்தான்.
“கவிதாவும் பொண்ணோட அம்மாவும் பேசுனாங்க முகிலு. உனக்கு மூணு பவுன்ல ஒரு செயினும் பொண்ணுக்கு பதினஞ்சி பவுனும் போட முடியுமாம். நடுபொண்ணுக்கு இவங்க தான் கல்யாணம் பண்ணாங்களாம், நம்ம வழக்கம் என்னனு சொன்னா அதுமாதிரியே பண்ணிடலாம்னு சொல்றாங்க.” என்று கந்தசாமி சொன்ன தகவலை முகிலன் தலையில் ஏற்றி பதில் கூறும் முன் வரிந்துகட்டிக்கொண்டு வந்தார் மாரியம்மாள்.
“பதினஞ்சி பவுன் எந்த மூலைக்கு காணும்? இவனுக்கு செயின் மட்டும் போதுமா? அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளையா போகப்போறான் கூட சேர்த்து கைச்செயினு மோதிரம் எல்லாம் போட வக்கிலையாக்கும். இப்போல்ல புரியுது ஏன் தூங்காம கோழி அடைகாத்துகிட்டு கிடக்குனு. என்கிட்ட கல்யாணம் யார் பண்றதுனு கேக்குறாங்கன்னு மட்டும் சொல்லிப்புட்டு இப்போ பவுனு பவுசு எல்லாம் வெளிய வருது.”
மாரியம்மாளை வைத்துக்கொண்டு இதனை பேசிய தன் மடத்தனத்தை எண்ணி நெற்றியில் தட்டிக்கொண்டார்.
“ஏற்கனவே சுணக்கமா இருக்க, இதை சொன்னா இதோ இப்போ வர்றமாதிரி ஏந்துகிட்டு வந்துற மாட்ட, அதுதான் பொறுமையா சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன். அதுதான் இப்போ சொல்லிட்டேன்ல.”
“நல்லா சொன்னீங்க. உங்க சொந்தங்கவும் பேச்செல்லாம் கமுக்கமா முடிச்சிட்டு அதுக்கேத்த மாதிரி இவன் மண்டையை கழுவப் பாக்குறீங்க. எங்கேயாச்சு இப்படி பெத்தவரே பையனுக்கு கிடைக்கவேண்டியதுல சமரசம் பண்ணிப்பாரா… எல்லாம் இங்கதான் நடக்குது. அங்கிருந்து பொண்ணு எடுக்குறதுக்கு முன்னமே இப்படி, அவ இங்க வந்துட்டா என்னாகுமோ. நான் ஒருத்தி அவ எங்க இங்க வரப்போறா. என் மவராசனைல பொட்டப்புள்ளை மாதிரி கட்டிக்கொடுத்து அவகிட்ட அனுப்பப்போறேன்.” என்ற ஒப்பாரி வைத்த மாரியின் கடைசி வரிகளில் பகீரென்றது கந்தசாமிக்கு. அப்போது தான் அவருக்கே சென்ற வருடமே வந்த அவள் தகவல் படிவத்தில் வீட்டோடு மாப்பிள்ளை கேட்டது நினைவுவர, யோசனையானார். கவிதாவிடம் பேசியதை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து தெளிவுபடுத்திக்கொண்டவர்,
“ஏய் மாரி. நல்ல விஷயம் பேசும் போது இப்படி பேசுறியே கூறு இருக்கா உனக்கு? நல்லாத்தானே இருந்த எந்த பேய் புடிச்சி ஆட்டுது உன்னை.”
“ம்மாவ் இந்த கல்யானம் நடக்கலைனாலும் என்னைக்காவது ஒருநாள் அங்க போயிருப்பேன். நானே யோசிச்சிட்டு தான் இருந்தேன். என்ன இன்னும் கொஞ்சம் லேட்டா போயிருப்பேன். இப்போ கொஞ்சம் சீக்கிரம் போறேன். அங்க போனா சம்பளம் கூடும் சீக்கிரம் இடம் வாங்கி நம்ம வீடு கட்டவும் இங்கேயே வந்துடப் போறேன்.” என்று முகிலன் தன் பங்கிற்கு சமாதானம் கூறினான்.
“நீயும் நல்லா சால்ரா அடிக்க கத்துகிட்டடா. முதல் எல்லாம் இந்த ஊரு மண்ணு கொடுக்குற நிம்மதி வேற எங்கேயும் வருமா? இங்க இருக்குற காவிரி ஆத்து தண்ணிக்கு ஈடு இணை இருக்கா? சுத்தமான காத்து இங்கதான் கிடைக்குது, நீயும் இங்கதான் இருக்க. உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேனு சொன்ன வாய் இன்னைக்கு அப்படியே மாத்திப் பேசுது. இதுக்குத்தான் கல்யாணமானா இந்த பசங்களை நம்பவே கூடாதுனு சொல்லுறாங்க போல. நாந்தான் என் புள்ளை நான் கிழிச்ச கோட்டை தாண்டமாட்டான்னு நினைச்சுகிட்டு இருந்திருக்கேன்.” என்று ஒருபாடு அழுதார்.
“கொஞ்ச நாள் அப்படிதான் இருப்பா, அப்புறம் சரியாகிடுவா. நீ ரொம்ப கொஞ்சிகிட்டு இருக்காத.” என்று மகனிடம் முணுமுணுத்த கந்தசாமி,
“இப்படி சலம்பிட்டு இருந்தீன்னா பொண்ணு வீட்ல உன்னை எப்படி மதிப்பாங்க. விளங்காத ஆத்தா கைப்பட்ட குத்தம் கால் பட்டா குத்தம் குறைனு ஒதுங்கித்தான் போவாங்க. நாளைக்கே மருமவ பொண்ணு ஒதுங்கிப்போனா இவன் எப்படி இங்க ஒட்டமுடியும். நல்லா யோசிச்சிக்கோ எல்லாம் உன் கையில தான் இருக்கு.”
“எதையாச்சும் சொல்லி என் வாய் அடைக்கணும் அதுதானே… என்னமோ பண்ணுங்க.” முனகிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டார் மாரியம்மாள்.
“நிச்சயம் அவங்களை பண்ண சொல்லிட்டு கல்யாணம் நம்ம வழக்கப்படி இங்க பண்ணிடலாம்னு நினைக்குறேன். நீ சொல்லு முகிலு.” என்று மகனைப் பார்த்தார்.
“எதுக்கு நிச்சயம் கல்யாணம்னு பிரிச்சிகிட்டு. ரெண்டையும் நம்ம பழக்கப்படி சேர்த்து இங்கேயே பண்ணிடலாம். அப்புறம் வேணும்னா அவங்க ரிசப்ஷன் வச்சிக்கட்டும்.” என்று முகிலன் யோசனை சொல்ல, இன்னும் சில விஷயங்களை பேசி கலந்தாலோசித்தனர்.
இடையே முக்கிய விஷயங்களுக்கு மாரியம்மாள் முகம் தூக்கினாலும் அவர் கருத்தையும் கேட்டு இவர்கள் அளவில் தெளிவாகிக்கொண்டனர். கந்தசாமி அனைத்தையும் கவிதா மூலமே பிரபாவை தொடர்புகொண்டு பேசினார். தன் சொந்தங்களுக்கும் தகவல் கொடுத்தார். முன்னரே சொல்லவில்லை என்று வருத்தம் கொண்டனர் உடன்பிறந்தவர்கள். கண்டுகொள்ளவில்லை கந்தசாமி.
இரண்டு நாள் சென்று தயக்கம், வெட்கமெல்லாம் குறைந்தபின் மீண்டும் அவனுக்கு அழைத்தாள் குழலி.
“ஹார்ட் கேட்டதுக்கு ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டீங்களே மேடம்.” என்றுதான் இவனும் பேச்சை துவங்கினான்.
“ஸ்ஸ்… இதென்ன ஹலோ சொல்லாம இப்படி… என்னை பேச விடுங்களேன்.” கண்களை மூடி உதட்டைக் கடித்தவள் இன்று பேசிவிட வேண்டும் என்று தீர்மானமாய் தெளிவாய் அழைத்திருந்தாள்.
“உங்களை யாரு பேச வேண்டாம்னு சொன்னது? தூக்கம் வருதுன்னு அன்னைக்கு போனவங்க கும்பகர்ணி மாதிரி ரெண்டு நாள் தூங்கிட்டு இன்னைக்கு வந்தா அதை கேட்கவும் கூடாதா?”
“அச்சோ ப்ளீஸ்ங்க. கொஞ்சம் டைவர்ட் பண்ணாமையாவது இருங்களேன். எனக்கு முக்கியமா பேசணும்.” என்று அழுத்தம் கூட்டவும் தன் இலகுத்தன்மையை கைவிட்டவனாய் தீவிரமானான்.
“என்ன விஷயம்?”
“அன்னைக்கு சொன்னேனே என் வேலை இங்க சென்னைல இருக்குனு”
“அதான் அன்னைக்கே சொல்லியாச்சே…” என்றவனுக்கு அவளது தவிப்பும் குழப்பமும் புரிபட துவங்கியது. அவனுமே இந்த விஷயத்தில் இருமனதாய் தானே இருக்கிறான்.
“நீங்க இங்க வந்துடுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்க பிளான் என்னனு தெரிஞ்சா…”
“தெரிஞ்சா?”
“நான் அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிப்பேன்.”
“ஓ… நீ என்ன பிளான் வச்சிருக்க?” என்று அவள் யோசனையை தெரிந்துகொள்ள கேட்டான். ஒருவேலை தன் குழப்பத்திற்கான விடை அவளிடம் இருக்கலாமே என்ற எண்ணம்.
“அன்னைக்கு சொன்னேனே. என் வேலை இங்கதான். வேற மாத்திக்கணும்னாலும் இங்க மாதிரி சிட்டில தான் நல்ல செலரி கிடைக்கும். அம்மாவை பாக்கணும். தங்கச்சிங்க இங்கதான் இருக்காங்க.” என்று இழுத்தாள் குழலி.
“ம்ம்… வயல், வீடு, அப்பா அம்மா எல்லாம் இங்க தான் இருக்காங்க.” என்றான் இவனும் சின்னக்குரலில். என் குடும்பமும் ஆதாரமும் இங்கிருக்கிறது என்று அவளைப் போல் சொல்ல ஆசைதான் ஆனால் குரல் நலிந்துதான் வந்தது. அதிலேயே அவனது எதிர்பார்ப்பு புரிவது போலிருக்க சுணக்கம் அவளிடம். காட்டிக்கொள்ளாமல்,
“அவங்களையும் இங்க நம்மளோட வச்சிக்கலாம்.” என்றாள் சாதுர்யமாய்.
“அவங்களுக்கு அங்க ஒத்து வராது.” எனக்கே அங்கு ஒத்துவராது என்று நாவரை எழுந்த வார்த்தையை அடக்கி பெற்றோர் என்று மாற்றினான் முகிலன்.
வாழ்வின் முக்கிய முடிவே இப்படி முரணாய் இருக்கிறதே. எப்படி ஒத்துமையாய் வாழ்வை கொண்டுபோகப் போகிறோம் என்ற ஐயம் இருவரிடமும். அமைதியாய் அவரவர் சிந்தனைகளுள் உழல, அவ்வமைதியை உடைத்தாள் குழலி.
“நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான். பெருசா வேற எங்கேயும் போனது கூட இல்லை. நிலையான வாழ்க்கையை நோக்கி ஓட ஆரம்பிச்சி இப்போ அதை அடஞ்சிட்டோம்னு நினைக்கும் போது இப்படி மறுபடி ஒரு குழப்பம்.”
இப்படி சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தாலும் அவனும் ஒத்துவரும் என்று தோன்றவில்லை என்று முதல் சந்திப்பில் எடுத்தவுடன் சொன்னது அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அவனும் தன்னைபோலத்தானோ… எப்படியிருப்பினும் இந்த பந்தத்தில் இணையும் முன் தனக்கிருக்கும் தடுமாற்றத்தை உரியவனுக்கு தெரியப்படுத்திவிடுவது பிரச்சனைகளை சரிசெய்துவிடும் என்ற நோக்கத்தில் அவள் பகிர்ந்தாள்.
முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டவன் பெருமூச்சோடு, “யாராவது ஒருத்தர் கொஞ்சம் இறங்கி வரமாதிரி இருக்கும். இப்போவே அது யாருனு முடிவு பண்றது நல்லதுன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரியாது. புரிதல் இல்லை. இப்போ எடுக்குற முடிவு சரியா இருக்குமான்னு தெரியல. இதை இப்படியே விட்டுட்டு இந்த டைமை என்ஜாய் பண்ணுவோமே.” என்று அவன் குழப்பத்தை தள்ளிப்போட பார்க்க, அதெப்படி தெளிவு கிடைக்காமல் முழுமனதாக ஏற்கமுடியும் என்று முரண்டியது அவள் மனம்.
“இப்படி குழப்பத்திலேயே இருந்தா என்னால கான்செண்ட்ரேட் பண்ண முடியும்னு தோணல. தூங்கி எழுந்தா உங்க முகத்துக்கு முன்னாடி இதுதான் நியாபகம் வருது.”
“அப்போ என் பர்பாமென்ஸ் பத்தலைன்னு சொல்ற. இன்னும் பயிற்சி வேணுமோ எனக்கு.” தனக்கு சாதகமாக பேச்சை மாற்றியவன் அவர்களின் வேலை குறித்த குழப்பத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தான்.
அவன் இப்படி பேச்சை மாற்றும் போது தான் மட்டும் எப்படி அதையே பிடித்து தொங்குவது? எப்படியும் இவன்தான் என்று முடிவாகிவிட்டது அவன் போக்கிற்கு செல்வோம். சந்தியா சொன்னது போல் திருமணத்திற்கு பின் தான் அழைத்தால் வராமல் இருந்துவிடுவானா என்ன? என நொடிப்பொழுதினில் முடிவெடுத்தவள் சற்று இலகுவாகி,
“ஹான்… என்னை கும்பகர்ணினு சொன்ன கும்பகர்ணன் என்ன பண்ணாராம் ரெண்டு நாளா? நானே உங்க அக்கவுண்ட்டை கண்டுபுடிச்சி, ரெக்வஸ்ட் கொடுத்து, என் போன் நம்பரையும் ஷேர் பண்ணி, இப்போ நானே கூப்ட்டிருக்கேன். சார் என்ன பண்ணீங்களாம்?”
“என்ன பண்ணனும்னு சொல்லுங்க சுபமா பண்ணிடுறேன்.”
“இது நல்லாயிருக்கே. எல்லாம் நாங்களே சொல்லனுமா?”
“நானே கண்டுபுடிக்கணுங்குற?”
“…”
“மலர்…”
ஏனோ அவன் மலர் என்று அழைக்கும் சமயம் உள்ளுக்குள் உற்சாக ஊற்று ஆர்ப்பரித்து கிளம்புகிறது. இதுவரை கிடைக்கப்பெறாத தனக்கான பிரத்யேக அன்பாக அதனை உள்வாங்கியவள் அதில் உருகிக் கரைய காத்திருந்தாள்.
“மலர் இருக்கியா லைன்ல?”
“ம்ம்…”
“மலர்…” மயிலிறகென அவன் குரல் அவள் செவி வருடிச் செல்ல, முதல் முறையாய் மயிர்க்கால் சிலிர்ப்பை உணர்ந்தாள் குழலி. இதென்ன புதிதாய் என்று வியந்தவளின் பிரதிபலிப்பு அவள் குரலில் வழிய, கொஞ்சலாய் சிணுங்கலாய் வந்த அவளது ‘ம்’ கூட அவனுள் போதையாய் இறங்கியது. கண்களை மூடி அவள் முகம் தற்சமயம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றவன் இதழ்கள் தன்னால்,
“மை மலர்…” என்று முணுமுணுத்தது.
“என்னவும் சொன்னீங்களா?” சரியாக கேட்ககாதது போல் அவள் விளையாட,
“உன் பேரை சொன்னேன்… மைம்மலர்க்குழலி.” என்றான் இவனும் பதிலுக்கு.
“முதல்லயே கேட்டுச்சு.” மெலிதாக சிரித்தவள் குரலில் இருந்த வெட்கமும் இரகசியமும் இருவர் மனதிலும் திருமணக் கனவுகளை விதைத்தது.
error: Content is protected !!