மிளகாய் : 7
காலை கதிரவன் தன் சூரியகதிர்களை உமாவின் முகத்தில் பரப்பிவிட தன் கையை வைத்து முகத்தை மறைத்தவள், ‘ம்ச்ச்’ என்ற சலிப்புடன் ஒரு பக்கமாக திரும்பி படுத்தார். இப்பொழுது கதிரவனின் தாக்கம் சற்று குறைந்திருக்க உமாவிற்கு தூக்க கலக்கம் மிகுந்தது. ஆனால் வெகு நேரம் நீடிக்கவில்லை.
‘விடுவேனா?’ என சூரிய கதிர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து உமாவின் மீது மீண்டும் விழ, மீண்டும் அதே ‘ம்ச்ச் ‘ என்ற சலிப்பு. சரி இனிமேல் தூங்க முடியாது விழித்தவரின் கண்கள் கடிகாரத்தைத் தான் முதலில் தேடியது. அங்கும் இங்கும் கருவிழி சுழன்று கண்டுபிடித்த போது மணி எட்டு முப்பதை நெருங்கி கொண்டிருந்தது. இது பொய்யாக இருக்க வேண்டும் என பதற்றதுடன் கண்களை கசக்கி பார்த்தவருக்கு கடிகாரத்தில் இருந்த முட்கள் அதே நேரத்தை காட்டவே வேக வேகமாக எழுந்தார்,
“ஐயையோ, ஸ்கூல் வேன் இன்னும் அரை மணி நேரத்துல வந்துருமே, அதுக்குள்ள என்ன சமைக்க முடியும், போச்சு அவர்கிட்ட திட்டு தான் வாங்க போறேன் ” என புலம்பி கொண்டே தன் மீதிருந்த பெட்ஷீட்டை உதறி தள்ளினார் உமா. பெட்டை விட்டு வேகமாக இறங்கி இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார், அவர் கண் முன்னே சிறு வயதில் எடுத்த பேமிலி போட்டோ தென்படவே தான் அம்மா வீட்டில் இருப்பதையும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதையும் உணர்ந்தார். அப்பொழுது தான் மனதிற்கு ஏனோ நிம்மதியாக இருந்தது. இனி பத்து நாளைக்கு ஜாலியா இருக்கலாம் என்ற எண்ணம் அவரை புல்லரிக்க செய்தது.
இந்த படபடப்புக்கு உமாவையும் குற்றம் சொல்ல முடியாது. தினமும் காலைல நேரமா எந்திரிச்சு, சமையல் செஞ்சு வெச்சு, ஹஸ்பண்ட் ஆபீஸ் அனுப்பி, குழந்தைங்களா ஸ்கூல்க்கு அனுப்பி, வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சு டயர்ட் ஆ நமக்கா நெவெர் அப்டின்னு சொல்றதுக்கு நம்ம ஒன்னும் லயன் டேட்ஸ் விளம்பரத்துல வர அம்மிணி இல்லங்கோ, நம்மளும் மனுஷங்க தான, வெளில போய் வேலை செஞ்சா தான் வேலையா, வீட்டுல வேலை செஞ்சாலும் வேலை வேலை தான், நம்ம உடல் உழைச்சு உழைச்சு ஒரு கட்டத்துல உடல் ஒத்துழைக்கனாலும் நம்ம மனமே ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்ய வெச்சுறது. என்ன வேலை செய்யரோம்னே தெரியாம ரோபோட் மாதிரி யாரோ டியூன் பண்ணி வெச்ச மாதிரி தானா நம்ம உடலே வேலை செய்யுது, தானா வெங்காயம் வெட்டி, காய்கறி நறுக்கி, குழம்பு, பொரியல் எல்லாம் தாளிச்சு, வீட்ட கூட்டி வீட்டை கழுவி, துணிய துவைச்சு, காயவெச்சு, எல்லாம் வேலையும் முடிச்சுட்டு வந்து உக்காந்தா தான் முழங்கால் தன்னோட வேலைய ஆரம்பிக்கும், அப்படியே அந்த இடுப்பு வலியும் கூடவே வந்துரும். ஆனா இதுக்காக எல்லாம் அடுத்த நாள் அரை மணி நேரம் சேத்தி தூங்க முடியாது, மறுபடியும் இதே ரோபோடிக்ஸ் வாழ்க்கை தான், இதே முழங்கால் வலியும், இடுப்பு வலியும் தான். இதுல இருந்து உமாக்கும் மட்டும் என்ன விலக்கா?. அதான் பாவம் உமாவும் எங்க குழந்தைங்க ஸ்கூல் பஸ்ச மிஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்துட்டாங்க.
Advertisement
உமாவிற்கு ஏதோ மனம் நிம்மதியைக் கொடுக்க மெல்ல எழுந்து ரூமை விட்டு வெளியே சென்றார். அம்மா ரூமில் சமைத்து கொண்டிருப்பதை பார்த்தவர், ஓடிச்சென்று பின்னால் இருந்து கட்டிப்பிடித்து கொண்டார். திடுகிட்ட ருக்மணி,
“உமா, நீயா சாமி?”
Advertisement
“நானே தான் மா, ஏன் உங்க வூட்டுக்காருன்னு நினைச்சீங்களா?”
Advertisement
“ஏய் உமா, ஆரம்பிட்டியா?”
கண் சிமிட்டியவர், “அம்மா வயிறு பசிக்கிம்மா, பசிக்கி ”
“இதோ அரை மணி நேரம், தயார் ஆகிடும், அது வரைக்கும் இந்தா இந்த காபிய குடிச்சிட்டு இரு ” எனக் காபியை கைகளில் நீட்ட,
Advertisement
“நீயும் வாம்மா, சேந்து குடிக்கலாம் ”
“அம்மாக்கு இங்க வேலை இருக்குடாம்மா ”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல குழம்பு தான கொதிக்குது, அது கொதிக்கட்டும் நீ வாம்மா நான் பத்து நாள் தான் மா இருப்பேன் அதுக்கப்புறம் ஊருக்கு கிளம்பிருவேன் ”
“சரி சரி அதை நியாபக படுத்தாத, போ நான் வரேன் ”
உமா கையில் காபியை ஏந்திக்கொண்டு சிட்அவுட் ஏரியாவில் சென்று அமர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து ருக்மணியும் வந்து அமர்ந்து கொண்டார்.
“இப்படிப்பட்ட உமாவைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?”
“எப்படிப்பட்ட உமாவை, இப்படி காபி குடிக்கற உமாவையா?”
“இல்ல, இப்படி நக்கல் பண்ற உமாவை”
“ஓஹோ சரி சரி சரி ”
“என்ன திடீர்னு மேடம் இன்னிக்கு ஒரே குஷியா இருக்கீங்க போல”
“ஆமா ஆமா அவரை விட்டுட்டு வந்துட்டேன் ல அதான் இனிமே ஒரே குஷி தான் எனக்கு ”
“என்ன சொல்ற அப்போ அவர் உன்னை சந்தோசமா வெச்சுக்கலயா?”
“ஐயோ அப்படி சொல்லலம்மா, பத்து நாளைக்கு சாப்பாடு செய்ய வேண்டிய டென்ஷன் இல்ல, நேரமா எந்திரிக்க தேவ இல்ல, இத்தன வருஷத்துல இந்த பத்து நாள் தான் ரொம்ப சந்தோசமா இருக்க போறேன் அதான் அப்படி சொன்னேன் ”
“இப்படி அம்மா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கறது தான் சந்தோசம்ன்னா நீ வருஷம் வருஷம் வந்துருக்கலாமே உமா, ஏன் இப்போ மட்டும் வந்துருக்க?’
” என்னம்மா இது இப்போ ஏன் வந்தேன்னு கேட்டுட்டு இருக்க? ”
“இப்போ ஏன் வந்தன்னு கேக்கல, இத்தன வருஷம் வராம ஏன் இருந்தின்னு தான் கேக்கறேன் ”
“இத்தன வருஷம் ஏன் வரலைன்னு எங்கிட்ட கேக்காதீங்க, இத்தன வருஷம் ஏன் விடலைன்னு உன் மருமகன் கிட்ட கேளு சரியா?”
“ஏன் உமா உன்னை எங்கள பாக்க விட மாட்டேங்குறாரு?”
“தெரிலயே, ஒரு வேளை என் மேல அவருக்கு அவ்ளோ பாசம் இருக்குமோ”
“அவ்ளோ பாசம் வெச்சுருக்காருன்னு சொல்ற, அப்றம் ஏன் உன் சந்தோஷத்துக்கு வழி வகுக்க மாட்டேங்குறாரு ”
“அம்மா நானே இங்க இருக்கற வரைக்கும் சந்தோசமா இருந்துட்டு போலாமேன்னு பாத்தா நீ என்னடான்னா திருப்பி திருப்பி மாப்பிள்ளை உன்னை சந்தோசமா வெச்சுருக்காரா நீ சந்தோசமா இருக்கியான்னு கேட்டுட்டே இருக்க, நான் சந்தோசமா தான் மா இருக்கேன் நீ ஒன்னும் பயப்படாத சரியா?”
“இந்த மாதிரி சொன்னா தான் பெத்த மனசு சந்தோசமா இருக்கு, அத விட்டுட்டு அவர் இல்லாம தான் சந்தோசமா தான் இருக்கேன்னு சொன்ன பயமா இருக்குமா இல்லையா ”
“அட அம்மா அது அப்படி இல்ல, டெய்லியும் காலைல அறக்க பறக்க சமைச்சு குடுத்து குடுத்து டயர்டா இருக்கும், ஆனா இப்போ இங்க அந்த டென்ஷன் இல்லல அத தான் அப்படி சொன்னேன், மத்தபடி அவர் என்னை ரொம்ப ஹாப்பியா வெச்சுருக்காரு சரியா?”
“சரி சரி ” என இருவரும் பேசிக்கொண்டே காபியைக் குடித்து முடிக்க ஹரி, ஆராதனாவும் எழுந்து வந்தனர்.
“அம்மா..” என ஆராதனா ஓடி வந்து உமாவை கட்டிப்பிடித்து கொண்டாள். ஹரியும் வந்து உமாவின் அருகில் அமர,
“ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரி டல் ஆ இருக்கீங்க?”
“அப்பாவை பாக்கணும் போல இருக்கும்மா ” என ஆராதனா கூற ஹரியும் அதற்கு தலையசைத்து,
“ஆமாம்மா, நைட் அப்பான்னு நினச்சு மாமா மேல கால் கை எல்லாம் போட்டு தூங்கிட்டேன் ”
“ஆமாம்மா நானும் தான், அப்பான்னு நினச்சு மாமா கைலயே தூங்கிட்டேன் ”
“ஹான் ஹான், நீங்க ரெண்டு பேரும் தூங்கினத நானும் பாத்தேன் ”
“எப்போம்மா?”
“நைட் அம்மா தூங்க லேட் ஆகிருச்சு”
“ஏன் மா தூக்கம் வரலையா?”
“ஆமா அப்டியே நைட் என் போன்ல ரொம்ப நேரம் அப்பாவோட…” என சொல்லி முடிப்பதற்குள் ஹரி குறுக்கிட்டான்,
“அப்பாவோட போன்ல பேசினீங்களாம்மா?”
ஓரக்கண்ணில் ருக்மணியைப் பார்த்தவர், ‘ ஐயையோ இப்போ போன்ல பேசலைன்னு சொன்னா ஏன்? எதுனால பேசலைன்னு கேப்பாங்களே’ என நினைத்துக்கொண்டு,
“ஹான் ஆமா ஹரி அப்பா கூட தான் பேசிட்டு இருந்தேன் ”
“எங்களையும் கூப்டுருந்தா நாங்களும் பேசி இருப்போம்ல ”
“நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டிங்களா அதான் கூப்பிடல ”
“சரிம்மா, இப்போ போன் போடுங்க, எனக்கு பேசணும் போல இருக்கு ”
“இப்போவா? வேணாம் வேணாம் நீங்க போய் பிரஷ் பண்ணி டிபன் சாப்பிடுங்க அப்றம் பேசிக்கலாம் ”
“இல்ல இல்ல இப்போவே பேசணும் ”
“உமா பிள்ளைங்க தான் இவ்ளோ ஆசையா கேக்குதுங்கள போன் பண்ணி குடு அப்றம் டிபன் சாப்பிடட்டும் ”
“சரி சரி கம்முன்னு இருங்க ரெண்டு பேரும் போன் பண்றேன் ” என போனை எடுத்து மாமா என்று சேமித்து வைத்திருந்த நம்பரை அழுத்தினார் உமா. ரயில்வே ஸ்டேஷனில் சண்டை போட்ட பிறகு இனி அவர் பேசாமல் பேசவே கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தார் உமா, விதி வலியது.
தான் சாப்பிட்ட தட்டை கழுவி கொண்டிருந்தார் சங்கர். போன் ரிங்க்டோன் சத்தம் கேட்டதும் கண்டுபிடித்துவிட்டார் அது உமா தான் என்று. உமாவிற்கு என்று தனி பாடல் வைத்திருந்தார். சங்கரின் போன்,
“அன்று காதல் பண்ணியது,
உந்தன் கன்னம் கிள்ளியது
அட இப்போதும் நிறம் மாறாமல்
என் நெஞ்சில் நிற்கிறது ” என ஒலிக்கவே ஓடி வந்து போனை எடுத்தார்.
போனை அட்டென்ட் செய்யும் முன் தன்னை வில்லனாக காட்டிக்கொள்ள முடிவு எடுத்தவர் , தொண்டையைக் கணைத்துவிட்டு அட்டென்ட் செய்தார்,
“ஹான் சொல்லு, எதுக்கு இப்போ போன் பண்ண?”
“……..”
“போன் பண்ணிட்டு பதில் பேசாம இருந்தா என்ன டி அர்த்தம், வாய தொறந்து பேசு ”
“அப்பா, நான் ஆராதனா பேசறேன் ”
“சொல்லு தங்கம், நான் அம்மான்னு நினைச்சேன், என்னாச்சு?”
“ஒன்னும் இல்லப்பா, எனக்கும் அண்ணாக்கும் உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சு அதான் போன் பண்ணினோம் ”
“சாரி டா தங்கம் அம்மான்னு நினச்சு உன்ன திட்டிட்டேன், என்கிட்ட பேசணும் போல இருந்துச்சா”
“ஆமாப்பா, எனக்கு ரொம்ப நேரமா தூக்கமே வரல, அப்றம் மாமாவை தான் நீங்க நினைச்சுகிட்டு அவர் பக்கத்துல படுத்து தூங்கினேன் ”
“ஏய் எனக்கும் போன் குடு ” என ஆராதனாவிடம் இருந்து போனை பிடிங்கியவன்,
“அப்பா, ஐ மிஸ் யூ அப்பா ”
“மிஸ் யூ டூ ஹரி ”
“நீங்களும் ஊருக்கு வாங்கப்பா ஜாலியா இருக்கலாம் ”
“அப்பாக்கு ஆபீஸ் இருக்கு ஹரி லீவ் கிடைக்காது ”
“ம்ச்ச்.. சரி அப்போ அப்போ வீடியோ கால் போடுங்க சரியா?”
“சரி சரி” என்றவர் உமாவிடம் பேச துடித்து கொண்டு இருக்க, “நீங்களாவேவா போன் பண்ணீங்க?”
“இல்லப்பா, அம்மாகிட்ட தான் சொல்லி போன் பண்ண சொன்னோம்”
“ஓஹோ, அம்மா எங்க?”
“இங்க பக்கத்துல தான் பா இருக்காங்க ”
“அப்படியா, சரி அம்மாகிட்ட போன் குடு”
“சரி, அம்மா இந்தாங்க அப்பா பேசறாரு ” என போனை குடுத்தவனிடம் இருந்து போனை வாங்க ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து கொண்டிருந்தார்.
“உமா, மாப்பிளை வெயிட் பண்ணிட்டு இருக்காரு வாங்கி பேசு ”
வேறு வழி இல்லை என போனை வாங்கியவர்,
“ஹலோ ”
சற்று தடித்த குரலில்,
“ஹான், ஹலோ எல்லாம் இருக்கட்டும், உங்க அம்மா அங்க பக்கத்துல தான இருக்காங்க, இப்போ குரல் கேட்டுச்சு ”
“ம்ம், ஆமா ”
“சரி போனை லவுட் ஸ்பீக்கர்ல போடு ”
“எதுக்கு?”
“நான் சொன்ன நீ செய்யணும், இந்த ஏன் எதுக்குன்னு கேள்வி எல்லாம் நீ கேக்க கூடாது, நான் சொல்றத மட்டும் செய், போனை லவுட் ஸ்பீக்கர்ல போடு”
வேறு வழியில்லை என லவுட் ஸ்பீக்கரில் போட்டார் உமா.
